Thursday, December 23, 2010

தி ஃபைட்டர் (2010)

Gladitorial Games எனப்படும் வீர விளையாட்டுகளுக்கு மவுசு, மனிதன் வேட்டையாடும் காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அந்த விளையாட்டுகளுக்கான மனிதனின் வேட்கை தான் ஜல்லிகட்டு தொடங்கி பாக்ஸிங் வரை பல விளையாட்டுகளாக பரிணமத்துள்ளது. பொதுவாக விளையாட்டுகள் தொடர்பான ட்ராமா வகை திரைப்படங்கள் அளவுக்கதிமாக ரொமான்டிஸைஸ் செய்யப்படும். மிகச் சிறந்த உதாரணம் ஸ்டலோனின் 'ராக்கி. முதல் பாகத்தில் உணர்வுகள் நிரம்பிய படைப்பாக இருந்து, அடுத்தடுத்த பாகங்களில் மொத்தமாக நீர்த்து போனது. இருப்பினும் இறுதி பாகமான 'ராக்கி பல்போவா' முதல் பாகத்திற்கு ஈடாக இருந்ததில் சந்தேகமில்லை. 'ரிமம்பர் தி டைட்டன்ஸ்', 'எனி கிவன் சண்டே', 'தி கராத்தே கிட்' (பழசு, புதுசு இரண்டும்), 'தி ப்ளைன்ட் ஸைட்', 'சின்ட்ரெல்லா மேன்' போன்ற படங்கள் சர்க்கரை தடவப்பட்ட ஃபீல் குட் வகை திரைப்படங்கள். அதே சமயம், 'தி ரேஜிங் புல்', 'மில்லியன் டாலர் பேபி', 'தி ரெஸ்ட்லர்' போன்ற படங்கள் அதே விளையாட்டுகளின் உண்மை நிலையை, சுத்திகரிக்காமல் அப்படியே கச்சாவாக காட்டின. இந்த இரண்டு வகை திரைப்படங்களையும் ஒன்று கலந்து பார்வையாளனுக்கு திகட்டாது வழங்கபட்ட படைப்பு தான் 'The Fighter'.

கிறிஸ்டியன் பேல், மார்க் வால்பெர்க் இரண்டு பேரும் பாக்ஸர் அண்ணன் தம்பிகளாக போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மார்க் வால்பெர்க் நடித்திருக்கிறார் என்ற காரணத்திற்காக 'தி ஹாப்பனிங்', 'மேக்ஸ் பெய்ன்' போன்ற மேக்ஸிமம் பெய்ன் தந்த மொக்கை திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். காரணம் - வால்பெர்க்கின் அற்புதமான திரை ஆளுமை. ராப் பாடகராக இருந்து திரைப்பட நடிகர் ஆனவர் வால்பெர்க். கிறிஸ்டியன் பேல் - சொல்லவே வேண்டாம். 13 வயதில் ஸ்பீல்பெர்க்கின் 'தி எம்பயர்  ஆஃப் தி சன்' இல் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து, 'அமெரிக்கன் சைக்கோ', 'தி மெசினிஸ்ட்', 'ரெஸ்க்யூ டான்', 'தி ப்ரஸ்டீஜ்' மற்றும் '3:10 டூ யூமா' வரை எனக்கு மிகவும் பிடித்த அத்தனை படங்களின் நாயகன். ஆஸ்கார் என்ற கனவு கிறிஸ்டியன் பேலுக்கு இந்த முறை கண்டிப்பாக நனவாகிப் போகும் போலிருக்கிறது. 

டிக்கி எக்லன்ட் (கிறிஸ்டியன் பேல்) தனது பாக்ஸிங் திறனால், மசாச்சூஸட் மாநிலத்தின் லோவல் நகரின் பெருமிதமாக திகழ்ந்து கொண்டிருந்தான். முக்கியமான ஆட்டம் ஒன்றில் டிக்கி தோற்க, அதன் பின் போதை மருந்துக்கு அடிமையாகிறான். டிக்கியின் தம்பியான மிக்கி வார்ட் (மார்க் வால்பெர்க்) தனது அண்ணனை போல் தானும் பாக்ஸர் ஆக வேண்டும் என நினைக்க, தன் அண்ணனையே ட்ரெய்னராக கொண்டு தனது பாக்ஸிங் கரியரை தொடங்க, டிக்கியோ அவனது போதை மருந்து பழக்கத்தால் மிக்கிக்கு வில்லனாகிறான். டிக்கி பயிற்சிக்கு நேரத்துக்கு வராததாலும், மானேஜரான அவர்களின் தாய் எடுக்கும் தவறான முடிவுகளாலும், மிக்கியின் பாக்ஸிங் வாழ்க்கையே சுக்குநூறாகிறது.  பார் ஒன்றில் வேலை பார்க்கும் சார்லீனை (ஏமி ஆடம்ஸ்) சந்திக்கும் மிக்கியின் வாழ்வு கொஞ்சம் பிரகாசம் அடைகிறது. அவளின் அறிவுரைப்படி டிக்கியிடமும், அவனது தாயிடம் இருந்தும் மிக்கி விலகி இருக்க அவனது பாக்ஸிங் வாழ்க்கை கொஞ்சம் புத்துணர்வு பெறுகிறது.

இதற்கிடையில் போலீஸ்காரர்களை அடித்ததால் சிறைக்கு சென்ற மிக்கி, வெளியாகி வர தனது தம்பிக்கு திரும்பவும் பயிற்சி கொடுக்க நினைக்கிறான். தோற்க இருந்த போட்டி ஒன்றில், டிக்கியின் டெக்னிக் ஒன்றை உபயோகித்ததால் மிக்கி ஜெயிக்கிறான். தனது குடும்பம், தனது காதலி இருவரும் தனது பாக்ஸிங் வாழ்க்கை சிறக்க தேவை என இருதலைக்கொல்லி எறும்பாக தவிக்கும் மிக்கி, இறுதியில் உலக பாக்ஸிங் டைட்டில் ஒன்றை வென்றானா என்பது தான் மீதிக் கதை. இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த போது 'இன்னொரு பாக்ஸிங் திரைப்படமா' என்று தான் தோன்றியது. இருப்பினும் திரைக்கதயிலும், பாத்திர படைப்பிலும் அசத்தி விட்டார்கள். மிக்கி, டிக்கி, அவர்களுடைய தாய், இரு தந்தைகள், எட்டு சகோதர சகோதரிகள், மிக்கியின் முன்னாள் மனைவி, மிக்கியின் மகள் என்று பல கதாப்பாத்திரங்களை ஸ்க்ரிப்டுக்குள் கொண்டு வந்ததற்காகவே திரைக்கதாசிரியரை பாராட்ட வேண்டும்.

திரைப்படத்தின் இறுதியில் நிஜ வாழ்க்கை டிக்கி எக்லன்டையும், மிக்கியையும் காட்டுவார்கள். நிஜ வாழ்வு டிக்கியின் உடல் மொழியை அப்படியே மாறாமல் கொண்டு வந்ததை பார்த்த போது ஆச்சர்யபட்டேன். மெத்தட் ஆக்டிங் என்ற முறையை எழுபதுகளில் உயிரூட்டிய பெருமை ராபர் டி நிரோ, அல் பேசினோ, டஸ்டின் ஹாஃப்மென்னை சாரும். பேசாமல் இவர்களின் வாரிசாக கிறிஸ்டின் பேலை அறிவித்து விடலாம். மார்க் வால்பெர்க்கை காட்டிலும் வயதில் இளையவர் கிறிஸ்டின் பேல். ஆனால்,  வால்பெர்க்கை  காட்டிலும் வயது கூடியவராக  காட்டியிருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்காக 20 கிலோ எடையை இழந்திருக்கிறார் கிறிஸ்டின் பேல். இனி பேட்மேன் வரிசையின் அடுத்த படமான, 'தி டார்க் நைட் ரிட்டன்ஸீ'க்கு திரும்ப எடை ஏற்ற வேண்டும். மனிதர் எப்படித் தான் சமாளிக்கிறாரோ.

இந்த முறை ஆஸ்காருக்கு கடுமையான போட்டி. பெரும்பாலும் கோல்டன் க்ளோப்பை முன் வைத்தே ஆஸ்கார் நாமினேஷன்கள் முடிவு செய்யப்படும். இந்த படம் 6 கோல்டன் க்ளோப் நாமினேஷன்களை பெற்றிருக்கிறது. எது எப்படியோ, கிறிஸ்டியன் பேலுக்கு சிறந்து துணை நடிகருக்கான ஆஸ்கார் உறுதி. பாக்ஸிங் அதிகமில்லாமல், எல்லோருக்கும் அறிந்த டெம்ப்ளேட்டில், ஒரு பாக்ஸிங் திரைப்படத்தை தந்த திரைக்கதாசிரியர்கள் Scott Silver, Paul Tamasy, Eric Johnsonக்கும், இயக்குநர்  David O' Russelக்கும் ஒரு சபாஷ்...

Tuesday, December 7, 2010

கார்பன் - சிறுகதை



         கூடுவாஞ்சேரி நிறைய மாறிப் போய் இருந்தது. நான் சிறு வயதாக இருக்கும் போது சென்னை வந்திருந்த சமயத்தில் ஒரு நெடுஞ்சாலையோர கிராமமாக இருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையின் எல்லையை விரிவுபடுத்தியதால், கூடுவாஞ்சேரியும் சென்னையின் ஒரு பகுதியாகி விட்டிருந்தது. பிரபல செல்ஃபோன் விற்கும் கடை ஒன்று புதிதாய் அங்கு கிளை திறந்து இருக்க, வாங்குகிறார்களோ இல்லையோ, பார்ப்பவர்களின் கூட்டம் அங்கு அலைமோதிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டு இருக்க, ஏதேனும் சாப்பிடு என்று என் வயிறு கத்திக் கொண்டு இருந்தது. மணி மதியம் 3:30 ஆகியிருந்தது. இரண்டும்கெட்டான் நேரம் என்று தெரிந்தும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தேன். “சாப்பாடு இல்லை சார், தோசை தான் இருக்கு” என்று எதிர்பார்த்த பதில் வந்தது. 

         முகத்தை கழுவிய போது என் முகத்தை என்னாலே பார்க்க சகிக்கவில்லை. பயண களைப்பு என் முகத்தில் சுவடு விடாமல் அப்பி இருந்தது. இனிமேல் பேருந்து பயணம் கூடவே கூடாது என்று மனதிற்குள் ஒரு சபதம் எடுத்து கொண்டேன். ஓரத்தில் தீய்ந்து, எண்ணையில் மிதந்து கொண்டிருந்த தோசையை, தேங்காய் பிண்ணாக்கு சட்டினியுடன், கடலைமாவு சாம்பாருடன் தோய்த்து நாக்கில் படாமல் விழுங்கி கொண்டிருந்தேன். சென்னையில் யாரை பார்க்க செல்வது என்ற யோசனை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. குலோத்துங்கன் நினைவு வந்தது. சாப்பிட்டு விட்டு கே.கே நகர் பஸ் ஏறலாம் என்று முடிவெடுத்தேன்.

. கோயம்பேடு செல்லும் ஒரு வண்டி கூட பத்து நிமிடமாய் நிற்கவில்லை. கடைசியாக வடபழனி செல்லும் ஒரு டீலக்ஸ் பஸ்ஸில் ஏறினேன். முன்னால் இருந்த படிக்கட்டுக்கு நேராக, ஒரே ஒரு சீட் மட்டும் காலியாக இருந்தது. ஆனால் சீட்டுக்கடியில் மணல் கொட்டி இருந்தார்கள். யாரேனும் வாந்தியெடுத்திருக்க வேண்டும். நல்ல வேளை, வாடை எதும் அடிக்கவில்லை. அப்படியே அடித்திருந்தால் தான் என்ன, உட்கார்வது தானே முக்கியம்.

ஊரப்பாக்கம் வந்து விட்டிருந்தது. அங்கு ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர், என் பக்கத்தில் இருந்தவரிடம் “என்னப்பா கிடைச்சுதா?” என்றார். அப்போது தான் அருகில் அமர்ந்திருந்தவரை கவனித்தேன். ஓடிசலான தேகம், ஊதா நிற கட்டம் போட்ட சட்டை, ஒரு வித காக்கி கலர் கால்சராய் என்று என்னை போன்றதொரு பரிதாபகரமான தோற்றம். அதற்கு என் அருகில் இருந்தவர், “இல்லைண்ணே. கூடுவாஞ்சேரியில இருக்குன்ற நம்பிக்கையில வந்தேன். இங்கயும் இல்லன்னுட்டாங்க”. ஏறியவர் “மானேஜரான்ட கேட்டீயா” என்றார். அதற்கு என் அருகில் அமர்ந்து இருந்தவர், ”ஆப்பரேட்டர் இருக்குன்றார், ஆனா மானேஜர் உங்ககிட்ட எதுனாச்சும் இருந்தா கொடுங்கனு என்னான்டயே கேக்குறாரு” என்றார். ”பொட்டியோடயே, இராடும் வந்திருக்கனும். போயும் போயும் கார்பன் இராடு இல்லாம ஷோ நின்னுச்சுன்னா வெளிய சிரிப்பாங்க குமாரு. சரி, நான் தாம்பரத்துல கேக்குறேன்” என்று சொன்ன நின்று கொண்டிருந்தவர், எனக்குப் பின்னால் ஒரு இருக்கை காலியாகவும் அங்கு சென்று அமர்ந்தார்.

அவர்கள் எது பற்றி பேசுகிறார்கள் என்று ஓர் அளவுக்கு விளங்கியது. பிலிம் புரஜ்கடரில் வெளிச்சம் கார்பன் ஆர்கிலிருந்து வரும். அந்த வெளிச்சத்தில் தான் படம் ஓட்ட முடியும். அந்த ஆர்க்கிற்கு கார்பன் இராடு தேவை. பதினொன்னாவது படிக்கையில் இயற்பியல் வாத்தியார் இது பற்றி சொல்லி இருக்கிறார். ”த்யேட்டர்ல் எப்பனாச்சும் படம் மங்கி சவுண்ட் மட்டும் வரும். உடனே நீங்க ‘ஏய் படத்தப் போடு’னு விசலடிச்சி கத்துவீங்கள்ல. அப்ப இந்த கார்பன் இராடு ஒன்னு லூசாகி இருக்கனும், இல்லனா சூடான இராடை கழத்திட்டு வேற இராடு போடுவாங்க” என்றிருக்கிறார். அவர் அப்போது சொன்ன தொணியை நினைத்து மனதில் சிரித்துக் கொண்டேன்.

நான் மெதுவாக என் அருகில் அமர்ந்தவரிடம் கேட்டேன், “எந்த தியேட்டரு?” அதற்கு அவர், “இங்க பக்கத்துல தான், கண்டிகை” என்று சொன்னார். அப்போது பின்னால் அமர்ந்திருந்தவர் ஃபோனில், “இந்தா பக்கத்துல தான் ஆப்பரேட்டர் குமாரு இருக்கான் பேசுங்க” என்றபடியே என் அருகில் இருந்தவரிடம், “தாம்பரம் எம்.ஆர் தியேட்டர் ஆப்பரேட்டர் பேசுறாரு.” வாங்கிய குமார், “நான் குமாரு பேசுறேன் அண்ணே. உங்ககிட்ட ஒரு அம்பது கார்பன் இராடு கிடைக்குமாண்ணே? இல்லையா? கூடுவாஞ்சேரியில கேட்டேண்ணே. அந்த மானேஜர் என்னாண்டயே கேக்குறாரு. இங்க சுமாராப் போகுதுண்ணே. எவ்வளவு சம்பளமா? வார நாள்ல நூத்தி இருப்பதஞ்சு, சனி ஞாயிறு நூத்தம்பது. நீங்க இராடு மவுண்ட் ரோடுல தான வாங்குறீங்க? ஓ. சரிண்ணே. குரோம்பேட்டை வெற்றி, இராகேஷ் அங்க எதுனாச்சும் இருக்குமா? எங்க கேக்க? பல்லாவரம் லட்சுமியிலயா? கேக்குறண்ணே. கேட்டுட்டு உங்களுக்கு ஒரு கால் அடிக்கிறேன்” என்று கூறி ஃபோனை வைத்தார் என் அருகில் இருந்த குமார்.

நான் மெளனமாக கவனித்துக் கொண்டிருந்தேன். ஃபோனை வாங்கிய என் பின்னால் இருந்தவர், “இராடுக்கு பெரிய டிமாண்ட் ஆகிப் போச்சு குமாரு. மவுண்ட் ரோடுல இருக்குற த்யேட்டர், அப்புறம் பெரிய பெரிய த்யேட்டர் எல்லாம் டிஜிட்டல்ல படம் ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. இப்பல்லாம் சேட்டிலைட்ல, இந்த குட்டி டிஷ் வைச்சு படம் ஓட்டுறானுங்களாமே. இன்னா இன்னாமோ வந்துக்குது. இதனால பாரு, லோல் படறது என்னமோ நாம தான்” என்று சலித்துக் கொண்டார்.

தாம்பரம் வந்து விட்டிருந்தது. வண்டி பெருமளவில் காலியாகி விட்டிருந்தது. என்னருகில் அமர்ந்த குமார், இறங்கப் போனான். அதற்கு பின்னால் அமர்ந்தவர், “ஏய் என்னப்பா, பல்லாவரம் போகனும்ல. உக்காரு” என்றார். “ஆமாண்ணே. மறந்துட்டேன் ஏதோ நெனைப்புல” என்று பெண்கள் இருக்கையில் இடம் காலியாகவும் அங்கு ஜன்னலோரம் சென்று அமர்ந்தான். என் பின்னால் இருந்தவர் அவன் அருகில் சென்று அமர்ந்தார்.

தொடர்ந்து ஃபோன் பேசிக் கொண்டு இருந்தனர், “ஆமாண்ணே. நம்ம ஆப்பரேட்டர் குமாரு வருவான். அவன் கிட்ட பேசுறீங்களா? வேணாமா. என்னண்ணே, நீங்களே இப்டி சொன்னா நாங்க எங்க போவோம். சரிண்ணே. வரோம். பார்த்து செய்ங்க.” அவர்கள் கூறியது விட்டு விட்டு கேட்டது. கொஞ்சம் திரும்பி அவர்களை கவனித்தேன். இறுகிப் போய் தான் அமர்ந்து இருந்தார்கள். ஏதோதோ பேசிக் கொண்டு இருந்தனர். பேருந்து இரைச்சலில் ஒன்றும் கேட்கவில்லை.

அந்த இரைச்சலிலும் எனக்கு எப்படி தூக்கம் வந்தது என்று தெரியவில்லை. எழுந்த பார்த்த போது கட்டவுட்களால் மறைக்க பட்ட காசி த்யேட்டர் தான் கண்ணுக்கு பட்டது. அவர்கள் இருவரும் ஏதோவொரு நிறுத்தத்தில் இறங்கி விட்டிருந்தனர். உதயம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது 'டிஜிட்டலில் திரையிடப்படுகிறது' என்ற துண்டு சுவரொட்டி என்னை பார்த்து சிரித்தது. 

Monday, November 29, 2010

’தி செவன்த் சீல்’ - மரணத்துடன் ஆடும் சதுரங்கம்

புதுமைபித்தனின் ஒரு கதை உண்டு - ‘காலனும் கிழவியும்’. தன் பேரனுடன் வசிக்கும் கிழவி ஒருத்தியின் காலம் முடிய, காலன் அவள் உயிரை எடுக்க வருகிறான். வந்தவன் தன் பேரன் என நினைத்து, காலனை வேலை வாங்குவாள் கிழவி. ஒரு கட்டத்தில் வந்தவன் காலன் தான் என கிழவிக்கு புரிய, “நான் ஒன்கூட வரணுமாக்கும்! என்னெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்குத் தெறமை யிருக்கா? ஒனக்குப் பாதி வேலேகூட சரியாச் செய்யத் தெரியாதே. என்னெக் கட்டோ டெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்கு முடியுமா?" என்று காலனை பகடி செய்வாள் கிழவி. 

மேலும், “உன்னாலெ என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும்? இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா? யோசிச்சுப் பாரு. ஒண்ணெ வேறயா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா! அடியோட இல்லாமே ஆக்க முடியாதே! அப்புறமில்ல உனக்கு? பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரேன்னா நெனச்சே?" என்று காலனை மேலும் வெறுப்பேற்றுவாள் கிழவி. வெறுப்பின் உச்சிக்கு செல்லும் காலன், கிழவியிடம் வாதம் செய்ய முடியாமல் அவள் உயிரை எடுக்காமல் சென்று விடுவான். காலன் வந்த கதையை கிழவி பேரனிடம் சொல்ல, கிழவிக்கு மறை கழண்டு விட்டது என்று தன் வேலையை பார்க்க சென்று விடுவான் பேரன்.

மரணத்தை நினைத்து யாருக்குத் தான் பயம் இல்லாமலில்லை. மரணம் தன்னை நோக்கி வருவதைக் கண்டாலே எப்பேர்பட்ட தீய செயல் செய்தவனும் நல்லவனாக மாறி விடுகிறான், அல்லது குறைந்த பட்சம் முயல்கிறான். பல வகை தத்துவவியல் வாதங்கள் மரணத்தை பற்றிய பயத்தை போக்க முயன்றாலும், மனிதன் உடும்பு பிடி போல் மனத்தின் அடி ஆழத்தில் அந்த பயத்தை புதைத்து கொண்டு தான் இருக்கிறான். இங்மார் பெர்க்மென் இயக்கிய ‘தி செவன்த் சீல்’ திரைப்படம் மனிதனின் மரணத்தைப் பற்றிய பயத்தையே பேசுகிறது. 

சிலுவைப் போரை முடித்து கொண்டு, தன் உதவியாளனுடன் வீடு திரும்புகிறான் வீரன் ஒருவன். அப்போது கருப்பு உடை அணிந்த மரணம் அவன் காலம் முடிந்ததாக தெரிவிக்கிறது. அப்போது சதுரங்கம் ஆடி கொண்டிருக்கும் வீரன், மரணத்தை தன்னுடன் சதுரங்கம் ஆட அழைக்கிறான். அவன் அழைப்பை ஏற்று கொள்ளும் மரணம், தன்னால் தொடர்ச்சியாக சதுரங்கம் ஆட இயலாது என்று தெரிவிக்கிறது.


வீரனும், ‘அதுவும் சரிதான். அது வரை என் உயிர் இருக்கும் அல்லவா’ என்று புன்னகையுடன் தெரிவிக்கிறான். தன் வீட்டிற்கு பயணிக்கும் வீரனை பின் தொடர்ந்து கொள்ளை நோய் எனும் ப்ளேக்கு பரவி கொண்டிருக்கிறது. அதனால் மரணம்  தன் வேலையில் தீவிரமாக இருக்கிறது.  இடையிடையே  வீரனுடன் தன் சதுரங்கத்தையும் தொடர்கிறது. இறுதியில் மரணம் வென்றதா, அல்லது வீரன் வென்றானா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.


மிகச் சாதாரணமாக தோன்றும் கதை என்றாலும், அதை 90 நிமிடங்களில் ஆகச் சிறந்த திரைப்படமாக்கியிருக்கும் பெருமை பெர்க்மேனையே சாரும். அதே சமயம் ப்ளாக் ஹ்யூமர் என்ற வகையறாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் பெர்க்மேன். உதாரணத்திற்கு, ஒரு கழை கூத்தாடியுடன், வீரனின் உதவியாளன் பெண்களை பற்றி நிகழ்த்தும் உரையாடல். காதலியுடனோ, மனைவியுடனோ அமர்ந்து இந்த காட்சியை பார்க்கும் போது, சத்தம் போட்டு சிரித்து விடாதீர்கள. உதை விழலாம்.

குரசேவா, ஹிட்சாக் போன்ற திரைமேதைகள் தங்கள் திரைப்படத்தின் இறுதி காட்சியின் இறுதி ஃப்ரேமில், அந்த திரைப்படத்தின் சாராம்சத்தை உங்கள் கண் முன் நிறுத்துவார்கள். அதை உள்வாங்கும் போது, அந்த திரைப்படத்தின் பிரம்மாண்டம் நம் கண்முன் விரியும். அந்த ரசவாதம், பெர்க்மேன்னின் இப்படத்திலும் நிகழ்கிறது. இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது, முதலில் நினைவுக்கு வந்தது புதுமைபித்தனின் ‘காலனும், கிழவியும்’ கதை தான். அதனால் தான் அக்கதையின் சாராம்சத்தை முதலில் எழுதியிருந்தேன்.

’தி செவன்த் சீல்’ - சினிமா காதலர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கருப்பு வெள்ளை கவிதை.

Thursday, October 28, 2010

தி சோசியல் நெட்வொர்க்

ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது கொஞ்சம் சுலபமானது என்று தான் சொல்வேன். கட் செய்தால் ஆக்ஷன் ப்ளாக் என்ற வகையில் திரைக்கதையாளரின் பணி முடிந்துவிடும். அதற்கு பிறகு ஸ்டன்ட் இயக்குநர், இயக்குநர், ஓளிப்பதிவாளர் பாடு. அதே சமயம் ஒரு ட்ராமா வகை திரைக்கதை எழுதுவது கடினம். அதிலும் அதை சுவாரஸ்யமாக எழுதுவது அதனினும் கடினம். சோஷியல் நெட்வொர்க் திரைக்கதையாளர் Aaron Sarkin அதை திறம்பட செய்துள்ளார் என்று சொல்வது மிகச் சாதாரணமான புகழாரம். இந்த திரைக்கதைக்கு ஆஸ்கார் நாமினேஷன் கிடைக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யபடுவேன். இருப்பினும் கிட்டத்தட்ட 166 பக்க திரைக்கதையை இரண்டு மணி நேரத்தில் சொல்லிய திறமை இயக்குநர் David Fincher யே  சாரும். 166 பக்க திரைக்கதையை வேகமாக்க, கதாபாத்திரங்களை மிக வேகமாக டயலாக்குகளை பேச வைத்தாராம். அப்படி வேகமாக பேசினாலும் அத்தனை உறுத்தலில்லாமல் காட்சிகள் நகர்ந்தது தான் ஆச்சர்யம். உதாரணமாக  ஃபேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg ஆக நடத்திருக்கும் Jesse Aisenberg அந்த டயலாக்குகளை வேகமாக பேசுவது, அந்த கதாப்பாத்திரத்தின் தன்மையாக மாற்றி விட்டிருந்தார் Fincher.  


தினமும் ஐந்தாறு தடவையாவது ஃபேஸ்புக் என்னும் முகநூலை நோண்டி பார்க்கவில்லையென்றால் எனக்கு தூக்கம் வராது. அந்த ஃபேஸ்புக் பிறந்த கதையை அறிந்து கொள்ள யாருக்கு தான் ஆர்வமிருக்காது. இத்தனைக்கும் இந்த படத்தின் திரைக்கதை 'The Accidental Billionaires' என்ற நான் ஃபிக்ஷ்ன் வகையறா புத்தகத்தின் அடிப்படையில் பின்னபட்டது. அது தான் ஆச்சர்யத்தின் உச்சகட்டம். முதலில் இந்த திரைப்படத்தின் திரைக்கதை மார்க்கெட்டில் உலாவிய போது தேறாத கேஸ் என்று சொல்லபட்டாலும், முதல் வாரத்திலேயே அமெரிக்க டொமஸ்டிக் மார்க்கெட்டில் போட்ட முதலான 50 மில்லியனை அள்ளி விட்டது இந்த படம். இன்னும் பெரும்பாலான நாடுகளில் வேறு ரிலீஸ் ஆகவில்லை. 


நிற்க. கதையை சொல்லி உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை. பொதுவாக ட்ராமா வகை திரைப்படங்களை டி.வி.டியில் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு தள்ளிவிடுவேன். ஆனால், இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த போது ஒரு வினாடி கூட சலிப்படையவில்லை. Adventureland, Zombieland, The Solitary Man ஆகிய திரைப்படங்களில் நடித்த Jesse Aisenberg இந்த திரைப்படத்தில் தனது வழக்கமான நடிப்பை வெளிபடுத்தினாலும், ஒரு கூச்ச சுபாவமுள்ள சராசரி அமெரிக்க கல்லூரி மாணவனை நம் கண் முன்னால் நிறுத்துகிறார்.  முதன் முதலில் MP3 பகிர்தலுக்கு உருவான Napster தளத்தை உருவாக்கிய Sean Parker ஆக பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக். திரைப்படத்தின்  பிற்பாதியில் வந்தாலும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார். இதுவரை மொக்கை படங்களாக நடித்து கொண்டிருந்த டிம்பர்லேக்கிற்கு ஒரு இமேஜ் மேக் ஓவரை இந்த படம் கொடுக்கும் என நினைக்கிறேன். ஆனால் என்னமோ இந்த படத்தின் இறுதியில் 'Pirates of the Silicon Valley' படம் தான் நினைவுக்கு வந்தது. 


கொசுறு படம்: சென்ற வாரம் பார்த்த 'ரெட்'. ப்ரூஸ் வில்லிஸ், மார்கன் ஃப்ரீமேன், ஜான் மால்கோவிச், ஹெலன் மிர்ரம் நடித்த ஆக்ஷன் திரைப்படம்.  ரிடையர்ட் ஆகி வீட்டில் உட்கார்ந்து இருக்கும் எப்.பி.ஐ  ஏஜென்டுகளை தேடிபிடித்து கொலை  செய்கிறது ஒரு கும்பல். அதன் பிண்ணனியில் எப்.பி.ஐயே  இருப்பது திருப்பத்தில்ம் திருப்பம். அதே பேரில் வெளிவந்த ஒரு காமிக் வரிசையின் அடிப்படையில் உருவாகி இருந்தாலும், படம் ட்ராமா திரைப்படமா அல்லது ஆக்ஷன் படமா என்று நடுவில் கொஞ்சம் குழப்பம். இருந்தாலும் ஜான் மால்கோவிச்சிற்காகவும், ப்ரூஸ் வில்லிஸிற்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம். அதிலும் ஜான் மால்கோவிச் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு அமெரிக்க தியேட்டர்களில் விசில் பறந்தது தான் ஆச்சர்யம்.  கண்டிப்பாக ஒரு தடவை மட்டும் பார்க்கலாம். 


பி.கு: சத்தியமாக இந்த படத்திற்கும், தல அஜீத் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தல ரசிகர்கள் காப்பிரைட் சண்டைக்கு வராதீங்கப்பு...

Wednesday, October 27, 2010

தொலைந்த வினாடிகள்

சிறு வயதில் தூர்தர்ஷன் பார்க்கும் போது இரண்டு, மூன்று வினாடி வினா நிகழ்ச்சிகள் இருந்ததாக நினைவு.  ஒரு கட்டத்தில் போர் அடித்தாலும், என் தந்தை என்னை அந்த நிகழ்ச்சிகளை கட்டாயபடுத்தி பார்க்க வைத்தார். அதன் விளைவு, ஆறாம் வகுப்பில் சாவகாசமாக கலந்து கொண்ட பள்ளி வினாடி, வினாடி வினா நிகழ்ச்சி ஒன்றில் நானும் என் நண்பனும் முதல் பரிசு வென்றோம். அதன் பின் ஆர்வத்துடன் ஒவ்வொரு வினாடி வினா  நிகழ்ச்சியையும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். அதில் மிக முக்கியமானது சித்தார்த்த பாசு பி.பி.சியில் நடத்திய 'மாஸ்டர்மைன்ட் இந்தியா'. 'ஹார்ட் டாக்', 'க்ளிக் ஆன்லைன் (எ) க்ளிக்', 'டாப் கியர்' போன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் பி.பி.சியில் வந்து கொண்டிருந்தன. இருப்பினும் 'மாஸ்டர்மைன்ட் இந்தியா' கொஞ்சம் ஸ்பெஷல். 

'மாஸ்டர்மைன்ட் இந்தியா'வில் இரண்டு சுற்றுகள். ஒன்று பங்கேற்பாளர்களின் விருப்ப பாடமாக கொண்டுள்ள பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது சுற்று பொது சுற்று - இதில் எந்த துறையிலும் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். விருப்ப பாடப் பிரிவில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, நடிகை கஸ்தூரி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் தேர்ந்தெடுத்தது - 'ஏ.ஆர்.ரஹ்மானின் இசை'. 1997இல் நடந்தது இது. ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தெரியாத பல தகவல்கள் கேள்விகளாக சித்தார்த்த பாசு கேட்க, எனக்கு ஆச்சர்யம். அந்த 'மாஸ்டர்மைன்ட் இந்தியா' சீஸனில் கஸ்தூரி அரைஇறுதி வரை வந்தார்.சன் டி.வியில் கூட ஜேம்ஸ் வசந்தன் ஒரு முறை பள்ளி மாணவர்களுக்கான வினாடி, வினா நிகழ்ச்சி நடத்தியதாக நினைவு. 

நிற்க. இன்று தொலைகாட்சிகளில் பார்த்தால் இது போன்ற வினாடி, வினா நிகழ்ச்சிகள் நடப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. மக்களின் பொது அறிவை 'தில்லாலங்கடியில் ஜெயம் ரவியின் ஜோடி யார்' என்ற நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன தொலைக்காட்சிகள். 'தி ஹிந்து' நாளிதழ் 'யங் வேர்ல்ட்' வினாடி வினாவை பள்ளிகளுக்கு இடையில் நடத்தி வந்தாலும்,  அதில் பெரும்பாலும் மெட்ரிக் மற்றும் ஆங்கில பள்ளிகள் தான் கலந்து கொள்கின்றன. அப்படியானால் அரசு பள்ளிகள்?

என்னுடைய உறவினர் ஒருவர், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்று தற்சமயம் ஐ.பி.எஸ் இறுதிக்கட்ட பயிற்சியில் உள்ளார். அவரிடம் பேசிய போது அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத இது போன்ற வினாடி வினா  நிகழ்ச்சிகள் தான் உந்துகோலாக இருந்ததாக தெரிவித்தார். சிறிது காலத்திற்கு முன் 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்த போது பொது அறிவு புத்தகங்களின் விற்பனை கொஞ்சம் அதிகரித்தது. அந்த நிகழ்ச்சி ஓய, மக்களின் பொது அறிவு பசியும் அடங்கி விட்டது.  

இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. இதற்கு மூல காரணம் மிகப் பெரும் மீடியா உந்துகோல்கள் இல்லாதது தான். இந்த வினாடி, வினா நிகழ்ச்சிகள் தான் மிகப்பெரும் உந்துகோலாக இருந்தன. இன்றைய நிலையில் நம் குழந்தைகள் 'டீலா, நோ டீலா' தான் விளையாடி கொண்டிருக்கின்றன. இதற்காக பொது அறிவு புத்தகங்கள் வாங்கி படிக்க கொடுத்து, ஓவர் நைட்டில் பள்ளி பாடங்களை போல் மனப்பாடம் செய்ய சொல்லக் கூடாது. அவ்வாறில்லாமல் ஆங்கில செய்தித்தாள்கள், கொஞ்சம் சிறுவர்  காமிக்குகள், ஆங்கில க்ளாசிக் புத்தகங்கள் போன்றவற்றை படிக்க கொடுக்கலாம். இதை படித்தால், உனக்கு இதை  வாங்கி தருகிறேன் என்று கொஞ்சம் லஞ்சம் கொடுத்து பாருங்களேன். இந்த விஷயத்தில் லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். 

Thursday, October 14, 2010

சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்!!

என் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்தாலும் அவ்வப்போது எதாவது ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தேன். அப்பாவின் பழைய கணையாழி இதழ்களை தூசி தட்டி எடுத்து படித்து கொண்டிருந்த போது தான் கிடைத்தது 'ஜே.ஜே சில குறிப்புகள்'. ஆதிமூலம் அவர்களின் ஸ்ப்ரே பெயின்டிங் வகை ஓவிய அட்டை படத்துடன், க்ரியா வெளியீடாக வந்த முதல் பதிப்பு அது. இந்தியா டுடே இலக்கிய மலரை வருடம் தவறாது என் தந்தை வாங்கி கொண்டிருந்தார். அதில் வந்த ஒரு உரையாடல் ஒன்றில் தமிழில் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்று 'ஜே.ஜே சில குறிப்புகள்' என்று குறிப்பிடபட்டு இருந்தது, கொஞ்சம் ஆவலை கிளப்பி விட்டது.

ஒரு மாலை நேரத்தில் 'ஜே.ஜே'வை வாசிக்க ஆரம்பித்தேன். அது படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தான் என் தந்தையின் நான்கு வருட கல்லூரி டைரிகளை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். கட்டமைப்பு படி பார்த்தால் ஜே.ஜே சில குறிப்புகளும், என் தந்தையின் டைரி குறிப்புகளும் ஒன்றாக இருந்தது (என் தந்தையின் டைரி குறிப்புகள் மிக சுவாரசியமாக இருந்தது இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டது). எதையும் படித்து செரிக்கும் மனநிலையில் இருந்ததால் ஜே.ஜே சில குறிப்புகள் அத்தனை கடினமாயில்லை. கல்லூரி வந்த பின் சில இலக்கிய சிற்றிதழ்களில் ஜே.ஜே பற்றிய விவாதங்களை படிக்க நேர்ந்தது. அதிலும் முக்கியமாக 'வனம்' சிற்றிதழில் ஜீ.முருகனின் ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய கட்டுரை. முதல் பதிப்பு வெளியான போது அதை அவர் வாங்கி படித்ததையும், அந்த நாவல் தன் இலக்கிய வாசிப்பை எவ்வாறு மாற்றி அமைத்தது என்பதை குறிப்பிட்டு இருந்தார். அந்த கட்டுரை என்னை 'ஜே.ஜே'வின் மறு வாசிப்பிற்கு அழைத்து சென்றது. பல விடயங்கள் பிடிபட்டன. 

ஆர்வமாகி வாடகை புத்தக நிலையத்திலிருந்து 'ஒரு புளியமரத்தின் கதை'யை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். திருச்சியிலிருந்து, தேனிக்கு போகும் பேருந்து பயணத்தில் படித்து முடிக்கக் கூடிய எளிய நடையில் இருந்தது. ஜே.ஜே சில குறிப்புகளை காட்டிலும் மிக சுவாரசியமான நடையில் இருந்தாலும், பல கிசுகிசுக்களின் தொகுப்பாக இருந்ததைப் போன்ற ஒரு உணர்வு. அதை முடித்ததும் எங்கள் பல்கலையில் எம்.ஏ தமிழ் மாணவர்கள் கூட தீண்டாமல் புத்தம் பொலிவுடன் இருந்தது 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'. உண்மையிலேயே சிறந்த நாவல். என் பொறியியல் புத்தகங்கள் கூட கொடுக்காத ஒரு உன்னத தூக்கத்தை 'குழந்தைகள், பெண்கள், ஆண்களின்' இரு பக்கங்கள் தந்தன. (இன்னொரு ஸ்லீப்பிங் டோஸ்: விஷ்ணுபுரம் - அது பற்றி அப்புறம்)

இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்தவர் சு.ரா என்ற சிறுகதை எழுத்தாளர் தான். (சத்தியமாக பகடி இல்லை) 1997 தினமணி பொங்கல் மலரில் வந்த 'நாடார் சார்' கதை தான் எனக்கு மிகவும் பிடித்த அவரின் கதை. அப்போதைய எனது பள்ளி சூழலும், எங்கள் பள்ளியில் இருந்து விலகிச் சென்ற ஒரு பி.டி மாஸ்டரையும் அந்த கதை எனக்கு நினைவூட்டியது. இன்னொரு பிடித்த கதை 'மேல்பார்வை'. முன்ன கதை கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டதென்றால், பின்ன கதை பெண்கள் ஆடும் கூடைபந்தாட்டத்தை பற்றியது. தனி கதைகளாக வாசித்த பின் மொத்த தொகுப்பாக அவரின் கதைகளை வாசித்த போது ஒரே பேட்டர்னுக்குள் தன் கதைகளை அடைக்கிறாரோ என்று தோன்றியது.

அவரின் சிறந்த கதைகளாக கருதப்படும் 'ரத்னாபாயின் ஆங்கிலம்', 'பல்லக்கு தூக்கிகள்', 'ஆத்மராம், சோயித்ராம்' மற்றும் 'பள்ளம்' ஆகிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது பின்னமிரண்டு கதைகள். 'பல்லக்கு தூக்கிகள்' கதையின் கதைசொல்லி தான் இருக்கும் இடத்தை ஒரு அசூயையுடன் விவரிப்பதாக இருந்தது. அதே போல் எரிச்சலூட்டிய மற்றொரு கதை 'மீறல்'. பேருந்தில் அட்ஜஸ்ட் செய்ய தெரியாத ஒரு மேல்தட்டு பெரியவராகத் தான் கதைசொல்லியை உருவகப்படுத்த முடிந்தது. 'பிரசாதம்' கதையை படித்த போது ஏற்பட்ட ஒரு பரவசத்தை காட்டிலும், பாலு மகேந்திராவின் 'கதை நேரத்தில்' அது படமாக்க பட்ட போது அந்த கதைக்கு மேலும் மெருகூட்டியது போல இருந்தது.

பசவய்யா  என்ற அவர் கவிமுகத்தை நான் காணவில்லை. நண்பன் ஒருவன் படிக்கக் கொடுத்த அவரின் கவிதைகளை ஒரு வருடம் கழித்து அப்படியே பாதுகாப்பாக கொடுத்தேன். கவிதைகளின் மேல் ஆர்வமில்லாத காரணத்தை தான் சாட்சி கூண்டில் ஏற்ற வேண்டும். நான் அவரின் சிறுகதை தொகுப்பை வாசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் அவரின் 'பிள்ளை கெடுத்தான் விளை' கதை வெளியானது. அதன் விளைவாக எழுந்த விவாதங்கள் இன்றும் என் மண்டையை காய வைக்கும். அதிலும் சாரு 'தீராநதி'யில் அந்த கதையை அக்குவேர், ஆணிவேராக பிரித்து எழுதியதை படித்த போது இன்னும் அதிகமாக மண்டை காய்ந்தது. ஆனாலும், அந்த விவாதங்களை அப்படியே தொகுத்து புத்தகமாக வெளியிட்டது காலச்சுவடு. தமிழில் முதன் முதலாக ஒரு இலக்கிய சர்ச்சையையை புத்தகமாக வெளியிட்டு மார்க்கெட்டிங் செய்த பெருமை காலச்சுவட்டையே சாரும்.

சரியாக ஒரு வருடம் கழித்து சு.ரா பூவலகம் நீத்தார். என்ன தான் அவரை பற்றிய விவாதங்கள் எழுந்தாலும் தமிழ் இலக்கிய சூழலில் மறுக்க முடியாத ஆளுமை  சு.ரா. அவரின் மறைவுக்கு பின் ஜெ.மோ உயிர்மையில் எழுதிய 'சு.ரா' பற்றிய ஒரு நீண்ட குறுநாவலை  படிக்க நேர்ந்த போது தான், சு.ராவின் ஆளுமை புலப்பட்டது. இருப்பினும் அதில் உள்ள உண்மைகள் விவாதத்திற்கு உட்பட்டவை. காரணம் - ஜெ.மோ எழுதி இருந்த அந்த கட்டுரைஐஐஐ  சு.ராவிற்கு பின்னான அவரின் இலக்கிய இடத்தை ஸ்தாபிப்பதாகவே இருந்தது. வஞ்ச புகழ்ச்சி அணியை ஒரு கட்டுரை முழுவதும் உருவகப் படுத்திய பெருமை ஜெ.மோவையே சாரும்.

நிற்க. சு.ராவை பற்றிய பல அவதூறுகள் வந்தாலும், மனிதர் தன்னை ஒரு நிறுவனமாக ஸ்தாபித்து கொண்டதை போன்று தமிழில் வேறு எந்த எழுத்தாளரும் செய்ததாக தெரியவில்லை. அந்த வகையில் அவரை பாராட்டியே ஆகவேண்டும்.  அவரின் நினைவு நாளான இன்று, அவரை பற்றி ஒரு நேர்மையான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற நினைப்பில் தான் எழுந்தன மேலிருக்கும் என்னுடைய குறிப்புகள்...



















































Sunday, September 26, 2010

மரபணு தீண்டாமை

"இம்ப்ரஸிவ் ஸ்கில் செட்" - என்னுடைய ரெஸ்யுமேயை பார்த்ததும் அந்த ஹயரிங் மானேஜரிடம் இருந்து வந்த வார்த்தைகள் கொஞ்சம் தெம்பளித்தன. "பின்ன ஏன் உங்களுக்கு இன்னும் வேலை இல்லை?" என்று அடுத்து என்னிடமே கேட்டார். என்னுடைய எட்டாவது க்ரோமோசோமில் ரத்த புற்று நோய் வருவதற்கான மரபணுக்கள் உள்ளதையும், அதனால் தான் இளங்கலை முடித்து 8 வருடங்களாக வேலை கிடைக்காததையும் நான் எப்படி சொல்வது? "உங்களுடைய தோல் செல்களின் சாம்பிள் கொடுத்து விட்டு செல்லுங்கள்" என்றார் அவர். ஜீன் ப்ரொபைலிங் எனும் என்னுடைய ஜீனோமை ஆராய்வதற்காக அந்த தோல் செல்களின் சாம்பிள். ஐந்து நிமிடத்தில் என்னுடைய ஜீன் ஜாதகத்தை அக்குவேர், ஆணி வேராக பிரித்து மேய்ந்து இன்ன வயதில் இன்ன வியாதி வரும் என்று ஜீன் ப்ரொபைலர் சொல்லி விடும். நான் அதன் முடிவுகளுக்காக காத்திருக்கவில்லை. கம்பெனியை விட்டு வெளியே வந்ததும் "திரு.குலோத்துங்கன்!! நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர் அல்ல" என்ற குறுந்தகவல் வந்தது.

இப்படித் தான் ஆரம்பித்தது நான் எழுதிய "மரபணு சாதி" எனும் முதல் சிறுகதை. 2002இன் இறுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு சிறுகதை போட்டிக்காக நான் இந்த கதையை எழுதினேன். இந்த கதைக்கான கருவை "கலைக்கதிர்" அறிவியல் இதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து எடுத்து கொண்டேன். 2000ஆம் ஆண்டு மனித ஜீனோம் தரவுகள் வெளியானதில் இருந்து ஏகப்பட்ட ஆச்சர்யங்கள், கேள்விகள். அந்த கேள்விகளில் ஒன்று தான் மரபணு தீண்டாமை. மனித ஜீனோம்களின் தொகுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு, இன்ன மரபணு தான் இன்ன வியாதிக்கு காரணம் என்று துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதில் ஒரு குறிப்பிட்ட வியாதி வரலாம் என்றும், ஒருவரின் மரணம் எப்போது சம்பவிக்கும் என்பதையும் கணக்கிடலாம். இதனால் ஒருவர் மரபணு அளவில் ஆரோக்கியமானவர் அல்லது ஆரோக்கியமற்றவர் என்று பிரிக்க படுவர். மரபணு அளவில் ஆரோக்கியமானவர்கள் மட்டும் சமூகத்தில் உயர்ந்தவர்களாக இருப்பர். திருமணம், வேலை, ரேசன் போன்றவை கூட ஆரோக்கியமான மரபணு உடையவர்களுக்கு (Genetically Competent) தான் சாதகமாக இருக்கும். ஆரோக்கியமற்ற மரபணு உடையவர்கள் (Genetically Incompetent) சமூகத்தில் இருக்க தகுதியற்றவர்களாக கருதப்பட்டு ஒரு புதிய தீண்டாமை உருவாகும்.

என்னுடைய 'நல்ல நேரம்'. நான் எழுதிய அந்த கதை வெளியாகவில்லை. பின்னர் இளங்கலையில் உயிரிதொழில்நுட்ப பொறியியலை விருப்ப பாடமாக எடுத்து பயின்றேன். செமஸ்டர் விடுமுறைக்காக ஒரு முறை  வீட்டிற்கு வந்த போது,  பின்னரவொன்றில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றில் "GATTACA" என்ற திரைப்படம் திரையிட்டார்கள். நான் எனது சிறுகதையில் என்ன எழுதியிருந்தேனோ, அதில் எண்பது சதவிகிதம் அந்த படத்தில் இருந்தது. மரபணு தீண்டாமை தான் அந்த திரைப்படத்தின் மூலக்கரு. நான் மேலே எழுதியிருக்கும் முதல் பத்தி கூட அப்படியே காட்சியாகி இருந்தது. ஆன்ட்ரு நிக்கோல் என்ற நியுசிலாந்து அறிவாளி, 1997லிலேயே மரபணு தீண்டமையை மையப்படுத்தி அந்த அருமையான திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்.

மரபணுவியல் கணிப்பு (Genetic Prediction) படி தகுதியற்றவனாக கருதப்படும்  கதையின் நாயகன் ஜெரோம் மாரோ (எ) வின்சென்ட் தன்னுடைய கனவான விண்வெளி பயணத்தை எவ்வாறு மேற்கொள்கிறான் என்பதே  அந்த திரைப்படத்தின் கதை. அதற்காக ஆரோக்கியமான மரபணு உடைய ஒருவனின் தோல், ரத்தம், சிறுநீர் சாம்பிள்கள் கொண்டு எவ்வாறு ஆள் மாறாட்டம் செய்கிறான் என்பதையும் தெளிவுபட விளக்கப்பட்டிருந்தது அந்த திரைப்படத்தில். ஒருவனின்  தலைவிதி மரபணுப்படி நிர்ணயிக்கப்படும் அத்தகையதொரு சமூகத்தில், தந்தையின் விந்தணுவும், தாயின் கருவும் சோதனைச் சாலையில் இணைக்கப்பட்டு, பின்னர் மரபணு பொறியியல் (Genetic Engineering) முறைகள் படி தேவையான குணங்கள் மாற்றியமைக்கபட்டும், செப்பனிடப்பட்டும் குழந்தைகள் உருவாக்கப் படுகின்றன. 

பொதுவாக சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் எதிர்காலத்தை பற்றிய ஒரு பயம் இழையோடும். தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தால், இது போன்ற கதைகளுக்கு ஊற்றுகண்ணே அந்த பயம் தான். GATTACA வெளிப்படுத்தும் உலகமும் அந்த பயத்தால் தான் இயங்குகிறது. தொழில்நுட்பவியல் மாற்றங்கள் என்ன தான் நிகழ்ந்தாலும், எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனிதனின் ஆழ் மனதில் புதைந்து போய் தான் இருக்கிறது. இதனால் தான் கண்மூடித்தனமான ஆராய்ச்சிகள் (Rogue Research) செய்வதற்கு தயங்குகிறது மனித மனம். ஆனால், அதே சமயம் 'என்ன நடக்கிறது என்று பார்ப்போமே' என்ற குறுகுறுப்பு அந்த தயக்கத்தை பல சமயங்களில் வென்று விடுகிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சனி கோளின் சந்திரன்களில் ஒன்றான டைட்டனுக்கு பயணம் மேற்கொள்ள போவதாக காட்டப்பட்டது. சனி கோளிற்கு ஒரு விண்வெளி ஓடம் அனுப்ப ஏற்கனவே நாஸா (NASA) ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. சனி கிரகத்திலோ அல்லது அதன் துணைக்கோளான டைட்டனிலோ வாழ்வியலுக்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவென்றாலும், மற்றுமொரு 100 ஆண்டுகளில் எதுவும் சாத்தியமாகக் கூடும். ஆனால், மரபணுவியல் கணிப்பு நம் வாழ்நாளிலேயே சாத்தியப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம். முடுக்கிவிடப் படும் ஆராய்ச்சிகள் அதைத் தான் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பார்க்கும் போது, GATTACA முன்னிறுத்தும் மரபணுவியல் பாகுபாடு கொண்ட சமூகம் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு தான்.

நான் எழுதி வெளியாகாமல் போன 'மரபணு சாதி' கதைக்கு வருகிறேன். குலோத்துங்கன் தன்னை ஒதுக்கும் சமூகத்தை உருவாக்கிய விஞ்ஞானி பைரவை எவ்வாறு பழி வாங்க  முயல்கிறான் என்பது தான் மீதிக் கதை. கணிணி அறிவியிலாளான தன் நண்பன் வர்மனுடன் (அவனும் ஒதுக்கப்பட்டவன் தான்) இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த முனைகிறான். வர்மன் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம், விர்ச்சுவல் உலகத்தில்  உலாவும் மற்றொருவருடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதை கண்டறிகிறான். நிகழ் உலகில் சஞ்சரிப்பதை போல் விர்ச்சுவல் உலகில் பல செயல்பாடுகளை செயல்படுத்த முடியும் என்பதையும் அறிகிறான். எப்போதும் விர்ச்சுவல் உலகில் செயல்பட்டு கொண்டிருக்கும் பைரவை அதன் மூலம் கொல்ல முடிவெடுக்கின்றனர் இருவரும். விர்ச்சுவல் ரியாலிட்டியில் இணையும் போது மனித நரம்புகள் ஒரு கணிணியின் பிராசசரில் உள்ள சர்க்கியூட்களை  போல் செயல்படும். நம் நரம்பு மண்டலமே சூடாகும். பைரவை விர்ச்சுவல் ரியாலிட்டியில் கொல்ல எத்தனிப்பதால், சூடாகும் நரம்பு மண்டலம் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களைக் கூட வெடிக்க செய்யும் என எச்சரிக்கிறான் வர்மன். பைரவை கொல்வதால் எந்த பலனும் இல்லை, மாறாக அனைவரின் மரபணு தரவுகள் தொகுக்கப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரை தகர்க்கலாம் என ஆலோசனை வழங்குகிறான் வர்மன்.

குலோத்துங்கன் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அந்த சூப்பர் கம்ப்யூட்டரை தகர்க்க எத்தனிக்கையில், பைரவ் அதே கம்ப்யூட்டரில் இணைவு பெற்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். குலோத்துங்கனுக்கும், பைரவிற்கும் ஒரு விர்ச்சுவல் போர் மூள்கிறது. வெற்றிகரமாக குலோத்துங்கன் அந்த கணிணியில் உள்ள மரபணு தரவுகளை அழித்தாலும், இருவருக்கும் ஏற்படும் விர்ச்சுவல் சண்டையால் குலோத்துங்கனும், பைரவும் மூளை நரம்புகள் வெடித்து நிகழ் உலகில் இறக்கின்றனர். என்ன தான் குலோத்துங்கன் தரவுகளை அழித்தாலும், பைரவ் வேறொரு அரசாங்க காப்பக கணிணியில் அந்த தகவல்களை பேக்கப் எடுத்து வைத்திருக்கிறான். அதை தரவேற்றி செயல்படுத்த மற்றொரு சூப்பர் கணிணி மட்டுமே தேவை. மரபணு தீண்டாமையால் பாதிக்கபட்ட சமூகத்தினர் ஒரு தற்காலிக சுதந்திரத்தை அனுபவிக்க, வர்மன் கைது செய்யப்படுகிறான்.

இந்த கதையை திரும்ப எழுதி ஏதேனும் ஒரு பத்திரிக்கைக்கு அனுப்ப நினைத்தாலும், ஒரு மோசமான காப்பியடிக்கப்பட்ட கதையாக கருதப்பட்டு விடுமோ என்று எனக்குள் ஒரு தயக்கம். மேலும் அந்த விர்ச்சுவல் ரியாலிட்டி செயல்பாடு ஏற்கனவே மேட்ரிக்ஸிலும், தி ரியல் அட்வென்சர்ஸ் ஆப் ஜானி க்வெஸ்ட்டிலும் விவாதிக்கப்பட்டு விட்டது. இப்போது திரும்ப எழுதினால் அதன் தழுவல் என்று கூறப்பட்டு விடுமோ என்ற பயமும் காரணம். நான் எழுதிய கதையும், GATTACAவின் கதையும் ஒன்றாக இருந்தது தற்செயலாக கருத முடியவில்லை. ஏனெனில் நான் அந்த அறிவியல் இதழில் படித்த அந்த கட்டுரையின் ஆசிரியர் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பார்த்திருக்கக் கூடும். 

எது எப்படியோ, மரபணுவியல் கணிப்பு செயல்படுத்தப் படுவதற்கு இன்னும் பல ஆண்டுகள்  ஆகலாம். அப்படியே செயல்படுத்த பட்டாலும் சுஜாதா எழுதியது போல், 'சாகிற நாள் தெரிஞ்சு போச்சுன்னா, வாழ்ற நாள் நரகமாயிடும். சந்தோஷம் தாங்க முக்கியம்.' GATTACA திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம். 'There is no gene for fate' (விதி மரபணுக்களில் எழுதப்படவில்லை). ஆனால் என்னை பொறுத்த மட்டில், மனிதனின் தன்னம்பிக்கை மரபணுக்களில் எழுதப்படவில்லை. 

Friday, September 24, 2010

ZZ Top - நீள்தாடி ராக் தேவர்கள்

முன் குறிப்பு: ராக் இசை என்றால் காட்டு கத்தல் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த கட்டுரை (அ) கட்டுரை  தொடர் (??!!) உங்களுக்கானது அல்ல. இன்னொரு விஷயம் - ராக் இசை பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.


வட அமெரிக்காவில் வந்து இறங்கிய முதல் நாளில், டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து எங்கள் பல்கலை செல்வதற்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது விமான நிலைய லாபியில், இன்னும் சிறிது நாட்களில் நடக்கப் போகும் ஒரு ராக் கான்செர்டிற்கான போஸ்டர்கள் நிரம்பி இருந்தன. இரண்டு தாடி வைத்த ஆட்கள், கட்டையாய் செம்பட்டை மீசை வைத்த மற்றொருவர் - இவர்கள் தான் குழு அங்கத்தினர்கள். பெயரும் வித்தியாசமாய் இருந்தது - ZZ (Zee Zee) Top.

அதன் பின்னர் படிப்பு, ஆராய்ச்சி என்று ஒரு வருடம் போனது தெரியவில்லை. இங்கே பல்கலைக்கழகங்களில் கோடையிலும் ஒரு செமஸ்டர் உண்டு. ஆனால் அந்த கோடை செமஸ்டரில், சர்வதேச மாணவர்கள் வகுப்புகளில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அதனால் ஒரு வாரத்திற்கு 40 மணி நேரங்கள் வேலை  பார்த்து கொண்டிருந்தேன். வேலை இல்லாத நேரத்தில் சிறிது நேரம் நண்பர்களுடன் ப்ளே ஸ்டேஷன் வீடியோ கேம் ஆடிக் கொண்டிருக்கையில் அறிமுகம் ஆனது 'கிடார் ஹீரோ'. சாதாரண கிடாரை காட்டிலும் சற்றே அளவில் சிறிய ப்லாஸ்டிக் கிடார். அதைக் கொண்டு திரையில் வரும் குறிப்புகளுக்கு ஏற்ப, கிடாரில் சரியான விசைகளை சரியான நேரத்தில் வாசிக்க வேண்டும்.

சில அருமையான ராக் பேண்டுகளின் அறிமுகம் கிடைத்தாலும், ஏற்கனவே கேள்விப்பட்ட ஒரு ராக் பேண்டும் இருந்தது. அது தான் ZZ Top. அந்த கேம் தொகுப்பில் இருந்த அவர்களின் பாடல் கேட்ட மாத்திரத்தில் பிடித்து போனது. லா க்ரான்ஜே (La Grange) என்ற அந்த பாடல்,அதே பெயரில் டெக்ஸாஸில் இருக்கும் ஒரு  ஊரைப் பற்றியது. அங்கு ஒரு காலத்தில் இருந்த வேசையர் விடுதிகளை  நக்கல் தொனியில் சித்தரித்தது அந்த பாடல்.  குறைவான, அதே சமயம் எளிமையான பாடல் வரிகள். அந்த பாடலின் சிறப்பம்சம் - மிக நீண்ட கிடார் ரிஃப் (Riff). எலக்ட்ரிக் ரிதம் கிடாரும், பேஸ் கிடாரும் இணைந்து நிகழ்த்தும் மாயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.

பில்லி கிப்பன்ஸ் (பாடகர், லீட் கிடார்), டஸ்டி ஹில் (பாடகர், பேஸ் கிடார் மற்றும் கீ போர்ட்) மற்றும் ப்ரான்க் பியர்ட் (ட்ரம்ஸ் மற்றும் பெர்குஷன் வாத்தியங்கள்) மூவரும் இணைந்தது தான் ZZ Top. லா க்ரான்ஜே பாடலில், நீண்ட கிடார் ரிஃப் தவிர்த்து மற்றொரு சிறப்பம்சம், பில்லி கிப்பன்ஸின் குரல். அடித்தொண்டையில் அதிக கூச்சலில்லாமல் அதிரும் அவரின் குரல் ZZ Top இன் வெற்றிக்கு முக்கிய காரணம். தலைப்பில் கூறியது போல் பில்லி கிப்பன்ஸ் மற்றும் டஸ்டி ஹில் இருவரின் நீண்ட தாடி, இந்த குழுவின் ஒரு சிக்னேச்சராக மாறிப் போனது. மாறாக ப்ரான்க் பியர்ட் தன் பெயரில் இருந்து மாறுபட்டு மழுங்க ஷேவ் செய்து தடிமனான மீசையுடன் இருப்பார். ஒரு முறை, கில்லட் நிறுவனம் தங்களின் விளம்பரம் ஒன்றிற்காக கிப்பன்ஸையும், ஹில்லையும் அனுகியது. அவர்கள் விடுத்த வேண்டுகோள் - இருவரும் அவர்கள் தாடியையை எடுக்க வேண்டும் என்பது தான். ஆனால், அதற்கு கில்லட் நிறுவனம் கொடுக்க சம்மதித்த தொகை - ஒரு மில்லியன் டாலர்கள். 'தங்களின் நீண்ட தாடி தான் தங்களுக்கு அடையாளம். அதை எடுத்துவிட்டால் அத்தனை செக்ஸியாக இருக்க மாட்டோம்' என்று கிப்பன்ஸீம், ஹில்லும் தங்கள் பாணியில் அதற்கு மறுத்து விட்டனர்.

ப்ரான்க் பியர்ட், பில்லி கிப்பன்ஸ் மற்றும் டஸ்ட்டி ஹில்

1969 ஆம் ஆண்டு டெக்ஸாஸில் உள்ள ஹ்யூஸ்டன் நகரில் பில்லி கிப்பன்ஸ் தான் வசித்து கொண்டு இருந்த 'மூவிங் சைட்வாக்ஸ்' என்ற இசைக்குழு கலைக்கபட்டதால் என்ன செய்யவென்று யோசித்து கொண்டிருக்க, அப்போது அவர்களின் போட்டி குழுவான 'அமெரிக்கன் ப்ளூஸூ'ம் கலைக்கபட்டது. அமெரிக்கன் ப்ளூஸ் குழுவில் இருந்த டஸ்டி ஹில்லும், ப்ரான்க் பியர்டும், கிப்பன்ஸூடன் இணைய உருவானது ZZ Top. அப்போது பிரபலமாக இருந்த சிகரெட் ரோலிங் பேப்பர் ப்ராண்ட்களான Zip-Zap மற்றும் Top ஆகியவற்றிலிருந்து தங்களின் குழுவின் பெயரை வரித்து கொண்டதாக முதலில் கூறினாலும், பில்லி கிப்பன்ஸ் தன்னுடைய சுயசரிதையான 'ராக் + ரோல் கியர்ஹெட்'டில் - ப்ளூஸ் கிடார் மேதையான பி.பி. கிங்கின் பெயரில் இருந்த தங்கள் பேண்ட் பெயரை நிர்ணயித்து கொண்டதாக எழுதியுள்ளார்.

'லண்டன் ரெக்கார்ட்ஸ்' என்ற ரெக்கார்ட் லேபிளின் கீழ் தங்கள் முதல் ஐந்து ஆல்பங்களை வெளியிட்டனர். 'La Grange' பாடல் தான் முதன் முதலில் தேசிய அளவில் ZZ Top என்ற பேண்ட் இருக்கிறார்கள் என்பதை அடையாளபடுத்தியது. இவர்களின் முதல் ஹிட் பாடலும் அது தான். அதன் பின்னர் இவர்களின் 'Jesus just left to Chicago', 'Waitin for the bus' மற்றும் 'Just got paid'  போன்ற பாடல்கள், அமெரிக்க ராக் ரேடியோக்களுக்கு தீனி இட்டன. 70களின் இறுதியில் ஒரு மிகப் பெரிய சுற்றுபயணத்தை மேற்கொண்ட இவர்கள், 79ஆம் ஆண்டு எந்தவொரு ஆல்பமும் வெளியிடவில்லை. 1980ல் 'லண்டன் ரெக்கார்ட்ஸி'ல் இருந்து 'வார்னர் ப்ரதர்ஸ்' ரெக்கார்டஸை தங்கள் லேபிளாக எடுத்து கொண்ட ZZ Top ஒரு புதுவித சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

தங்களை ஒரு ப்ளூஸ் ராக் குழுவாக அடையாள படுத்தி கொண்ட ZZ Top, மற்ற ராக் குழுக்களைப் போல் தங்கள் இசை வகையை காலப்போக்கில் மாற்றி கொள்ளவில்லை. அதனால் பரிசோதனை முயற்சிகளில் இறங்காத ராக் குழு என்று இசை விமர்சகர்கள் இவர்களை குறை கூறுவது உண்டு. 70களில் தோன்றிய எல்லா ராக் குழுக்களைப் போல் எல்விஸை தங்கள் முன்னோடியாக கொண்ட ZZ Top - எல்விஸின் 'ஜெயில்ஹவுஸ் ராக்' பாடலை தங்கள் பாணியில் இசையமைத்து, எல்விஸிற்கு மரியாதை செலுத்தினர். 80களில் ZZ Top எதிர்கொண்ட பெரும் சவால் எம்.டி.வி மூலமாக வந்தது. ம்யூசிக் வீடியோக்கள் பிரபலமாகத் தொடங்கின. ம்யூசிக் வீடியோக்கள் வெளியிடவில்லையெனில் பேண்டுகளின் நிலையே கேள்விக்குறியாகிவிடும் நிலைமை. ZZ Top தாங்களும் சளைத்தவர்கள் இல்லையென்று, தங்களின் 'எலிமினேட்டர்' ஆல்பத்துடன் மூன்று ம்யூசிக் வீடியோக்களை வெளியிட்டனர். மேலும் 'எலிமினேட்டர்' ZZ Top பிற்கு முதல் ப்ளாட்டினம் ஆல்பம் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.


மற்றொரு விடயத்திற்கும் ZZ Top ராக் ரசிகர்களிடையே பிரபலம் - அவர்களின் டிசைனர் கார்கள் மற்றும் கிடார்கள். 'எலிமினேட்டர்' ஆல்பத்தின் மூன்று வீடியோக்களிலும் 1933ஆம் ஆண்டு 'ஹாட் ராட்' ரெட் ஃபோர்ட் கார் ஒன்று உபயோகிக்கபட்டிருக்கும். அதற்கு 'எலிமினேட்டர்' என்று பெயரிட்ட இவர்கள், அதையே தங்கள் ஆல்பத்தின் பெயராகவும் சூட்டினர். கான்செர்ட்டுகளின் போது 'White Fuzzie' என்றைழக்கபடும் மிருகத் தோல் போன்ற கவரினால் செய்யப்பட கிடார்களை உபயோகித்தனர். இவர்களின் மற்றொரு சிறப்பம்சம், 'Fliipin' the guitar' - அவர்களின் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் கிடாரை அனாயசமாக சுழற்றுவார்கள். இது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். தங்களின் 'White Fuzzie' கிடாரை டல்லாஸில் இருக்கும் ஹார்ட் ராக் கஃபேக்கு சமீபத்தில் அன்பளிப்பாக ZZ Top தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குழுவில் உள்ள மூவரும் 60 வயதைக் கடந்து இருந்தாலும், தளராமல் இன்றளவிலும் கான்செர்ட்டுகளை  நிகழ்த்தி கொண்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு அவர்களின் மற்றொரு புதிய ஆல்பத்தை வெளியிட எத்தனித்து உள்ளனர். பொதுவாக ராக் குழுக்களின் உறுப்பினர்களிடையே ஈகோ இருக்கும். இதனால் எப்போதும் எதாவது பிரச்சனை புகைந்து கொண்டு இருக்கும். ஆனால், 40 வருடத்திற்கும் மேலாக இன்றளவிலும் ஒற்றுமையாக தங்கள் ஆல்பங்களை வெளியிட்டு கொண்டு இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு புகழ் பெற்ற 'ராக் அன்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம்'மில் ZZ Top கவுரவிக்கபட்டனர்.  மேலும் இவர்களை கவுரவிக்கும் பொருட்டு, மே 15 - 1997ஐ ZZ Top தினமாக அப்போதைய டெக்ஸாஸ் கவர்னர் புஷ் அறிவித்தார். 

ஒரு நீண்ட சாலை பயணத்தின் போது, இவர்களின் பாடலை கேட்டு பாருங்கள். போரடிக்கும் பயணமும் சுவாரசியமாக மாறக்கூடும்.

மொத்தத்தில் ZZ Top - டெக்ஸாஸ் ராக் தேவர்கள்...

எனக்கு பிடித்த இவர்களின் பாடல்களின் பட்டியல் இங்கே:

  1. La Grange
  2. Tush
  3. Legs
  4. Sharp Dressed Man
  5. Velcro Fly
  6. Gimme all your Lovin'
  7. I'm Bad and I am Nationwide
  8. Viva Las Vegas
  9. Got me under pressure
  10. Sleeping Bag
  11. Cheap Sunglasses
  12. Jesus just left to chicago
  13. Doubleback
  14. Just Got Paid
  15. Chevrolet

    கொசுறாக எனக்கு மிகவும் பிடித்த 'லா க்ரான்ஜே' பாடல் இதோ:

Wednesday, September 22, 2010

தி டவுன் (The Town) - 2010

'டீம் அமெரிக்கா: வேர்ல்டு போலீஸ்' என்றொரு க்ரூட் ஹ்யூமர்' வகையறா திரைப்படம். முழுக்க, முழுக்க பொம்மலாட்டம் நடத்த பயன்படும் பொம்மைகளை கதாப்பாத்திரங்களாக கொண்டு எடுக்கப்பட்டது. ' சகட்டு மேனிக்கு உலக அரசியலை கலாய்த்திருப்பார்கள். அந்த திரைப்படத்தில்உள்ள ஒரு பாடலில் ஒரு வரி வரும் "F*** Michael Bay Movies and Ben Affleck needs acting lessons". அதை பல சமயங்களில் பென் அஃப்லெக் நிருபித்ததுண்டு. மிகச் சரியான உதாரணங்கள் - பேர்ல் ஹார்பர், ஆர்மகெட்டான். ஆனால், அதே சமயம் பென் அஃப்லெக்கிற்கு திரைக்கதையாளர், இயக்குநர் என்ற இரண்டு சிறந்த பரிணாமங்களும் உண்டு. மேட் டேமன், பென் அஃப்லெக் இருவரும் இணைந்து எழுதிய Good Will Hunting திரைக்கதைக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அதற்கு பிறகு அஃப்லெக் இயக்கிய 'Gone Baby Gone'ம் ஒரு மிகச் சிறந்த திரைப்படம். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை பென் அஃப்லெக் திரும்ப நிரூபித்திருக்கும் படம் தான் 'The Town'.

அமெரிக்காவின் வரலாற்று சிறப்பு மிக்க பாஸ்டன் நகருக்கு, மற்றொரு பக்கமும் உண்டு. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 300க்கும் மேற்பட்ட வங்கிக் கொள்ளைகள் இந்த நகரில் மட்டும் நடப்பது உண்டு. பொதுவாக அமெரிக்க நகரங்கள் இரு பிரிவாக பிரிந்து கிடக்கும் - அப்டவுன் (Up Town) மற்றும் கெட்டோ (Ghetto). இதில் பாஸ்டனில் உள்ள சார்ல்ஸ்டவுன் இரண்டாம் பிரிவில் சேர்த்தி. அதனால் தான் இவ்விடம் வங்கி கொள்ளையர்களின் புகலிடமாகவும் இருக்கிறது. 'தி டவுனின்' கதை அங்கு இருக்கும் ஒரு வங்கிக் கொள்ளை கும்பலை சுற்றி நிகழ்கிறது.

மெக் க்ரே (Ben Affleck), ஜேம்ஸ் (Jereme Renner) இருவரும் தேர்ந்த வங்கி கொள்ளையர்கள். ஒரு வங்கிக் கொள்ளையின் போது வழக்கத்திற்கு மாறாக அந்த வங்கி மேலாளர் க்ளேரை (Rebecca Hall) உடன் கடத்தி செல்கின்றனர். அவளை விடுவித்தாலும், இறுதியில் கொள்ளையர்கள் வாழும் அதே பகுதியில் க்ளேரும் வசிக்கிறாள். மெக் க்ரே அவளை பின் தொடர்வது போல் சென்றாலும், இறுதியில் க்ளேரிடம் காதல் வயப்படுகிறான். இதற்கிடையில் இவர்களை எப்படியாவது பிடித்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் எப்.பி.ஐ அதிகாரி (Jon Hamm). மெக் க்ரேவின் காதல் என்னவானது, அவர்கள் எப்.பி.ஐயிடம் பிடிபட்டார்களா என்பது தான் மீதிக் கதை.

பொதுவாக வங்கிக் கொள்ளை திரைப்படங்கள் கொஞ்சம் ஆக்ஷன் வகையில் தொகையுறும். இருப்பினும், Heat போன்ற திரைப்படங்கள் சிறிது ட்ராமா கலந்த ஆக்ஷனில் சுவாரசியமூட்டும். தி டவுன் இரண்டாம் வகை. எனக்கு தெரிந்தவரை 'Heat' திரைப்படத்தை பிடிக்காதவர்கள் கூறிய காரணம், திரைப்படத்தின் நீளம். அந்த வகையில் 'டவுன்' 120 நிமிடங்களே ஓடுகிறது. சொல்லப் போனால் 'Heat' திரைப்படத்திற்கு அடுத்து எனக்கு பிடித்த வங்கி கொள்ளை படங்களில் 'டவுனு'ம் ஒன்று.

'தி ஹர்ட் லாக்கர்' படத்தில் நடித்த Jereme Renner திரும்பவும் இந்த படத்தில் தனது மெத்தட் ஆக்டிங்கை அருமையாக வெளிபடுத்தியுள்ளார். மனிதருக்கு இந்த வருடம் ஆஸ்கர் நாமினேசன் கிடைக்கவில்லையென்றால் தான் ஆச்சர்யப்படுவேன். திரைப்படத்தின் இறுதியில் சிறிது வழக்கமான ஃபார்முலா வகையை தூவியது போல் ஒரு தோற்றம்.

இருப்பினும் தி டவுன் - Worth Visiting...

Monday, July 19, 2010

’மன்னாரு’ மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்

வட அமெரிக்காவிற்கு படிப்பிற்காக வந்திறங்கிய சில நாட்களில் ஒன்றை புரிந்து கொண்டேன். சகோதர பாசத்துடன் பழகும் இந்தியர்களைக் கண்டால் தூர விலகி நிற்க வேண்டும் என்பது தான் அது. அதிலும் முக்கியமாக 'மோடி' மாநிலத்தவரிடமிருந்து. நைச்சியமாக பேசி அவர்கள் கடைசியில் அவர்கள் வந்து நிற்பது, எம்.எல்.எம் எனும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றி தான் (தமிழர்களும் விதிவிலக்கல்ல). அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, அவர்கள் பேசும் போது விவாதிக்கவே கூடாது. சொல்லுவதற்கெல்லாம் 'ம்' கொட்டி கொண்டு, ஃபோன் நம்பரை மாற்றி கொடுத்து விட்டு வர வேண்டியது தான். இந்த எம்.எல்.எம் மாஃபியாக்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு 'கல்யாண பரிசு' தங்கவேலுவின் மன்னார் அன் கம்பெனி தான் நினைவுக்கு வரும். 

'குமுதம்', 'ஆனந்த விகடனி'ல் வரும் ஒரு பக்க கதைகள் பெரும்பாலானவை, மிக சுவாரசியமாக இருக்கும். எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் போது இரண்டு நாளுக்கு ஒரு முறை நூலகத்திற்கு செல்லும் வழக்கம் உண்டு. அப்போது வாரப்பத்திரிக்கை வாசிக்கும் போது, முதலில் படித்து முடிப்பது இது போன்ற ஒரு பக்க கதைகளும், சிறுகதைகளும் தான். சத்யராஜ்குமாரும் அப்படிபட்ட ஒரு சுவாரசியமான எழுத்தாளர் தான். தமிழ் இலக்கிய சூழலில், இவரைப் போன்ற எழுத்தாளர்கள் கண்டுகொள்ளப்படாதது மிகவும் வருத்ததிற்குரியது. சத்யராஜ்குமாரின் 'மோப்பக் குழையும்' கதையில், மேலே கூறப்பட்டது போல் சர்க்கரை தடவபட்டது போல் பேசும் தேசிகள், எம்.எல்.எம் வலைக்குள் எப்படி இழுத்து செல்கிறார்கள் என்பதை தெளிவுபட நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். கதையை படிக்க இங்கு செல்லவும்.

நான் எட்டாவது படிக்கும் போது 'குமுதத்தில்' 'ப்ளஸ் 1' என்ற சாப்ட் போர்ன் வகை கதை ஒன்று வந்தது. கிருஷ்ணா டாவின்ஸி எழுதியது என்று நினைக்கிறேன். நூலகம் சென்றதும் முதலில் அந்த தொடரை தான் படித்து முடிப்பது. மேலும் அதில் சில குஜால்டி ஓவியங்களும் இருக்கும் (பிஞ்சிலயே பழுத்தது. என்ன செய்றது!!) சத்யராஜ்குமாரின் 'சாமீய்' கதை அந்த சமயத்தில் தான் வந்தது போலும். அந்த கதை என்னால் மறக்கமுடியாதது. காரணம் கதையின் கன்டென்ட் அப்படி (ஹிஹி).

கிட்டத்தட்ட இருபது வருடமாக நாளிதழ்களில் எழுதியும், மிக சமீபத்தில் தான் சிறுகதை தொகுப்பான 'ஒரு வினாடியும், ஒரு யுகமும்', திருமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது. தற்போது வட அமெரிக்காவில் வசித்து வரும் சத்யராஜ்குமார், தன்னுடைய தளத்தில் 'துகள்கள்' என்னும் சிறுகதை தொடரை எழுதி வருகிறார். பெரும்பாலான  கதைகள் நமது இந்தியர்கள் அமெரிக்காவில் அடிக்கும் கொட்டங்களின் பகடியாகத்தான் இருக்கிறது. 'கல்கி' இதழ் நடத்திய பல சிறுகதை போட்டிகளில் வென்றுள்ளார். மேலும் 'சாவி' இதழ் வெளி வந்தவரை, அதில் தொடர்ச்சியாகவும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவரின் எழுத்து நடை சுஜாதாவை நகல் எடுப்பது போல் தோன்றினாலும், சுஜாதாவின் பாதிப்பு இல்லாது தமிழில் எழுதுவோர் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை. கதைகளில் அமெரிக்க பெண்களை  வர்ணிக்கும் போது, பல சமயங்களில் ரம்பா தொடைகள் வருகின்றன. இது அவரின் வயதை காட்டி கொடுக்கிறது. தன்னை யூத்தாக காட்டிகொள்ள விரும்பவேண்டும் என்றால், அனுஷ்கானந்தமாயியை வர்ணிப்பது பற்றி அவர் யோசிக்க வேண்டும்.

ஜெயமோகன் கூட, தொடக்கத்தில் 'குமுதத்தில்' ஒரு பக்க கதைகள் தான் எழுதி கொண்டிருந்தாராம். அதன் பின்னர் தான் தீவிர இலக்கியத்திற்கு மாறினாராம். ஆனால், அவரைப் போன்று மாறாது, தொடர்ந்து தன் பாணியில் எழுதி வரும் சத்யராஜ்குமாரை பாராட்டி தான் ஆக வேண்டும். சில இலக்கிய பிராந்துகள், இவரைப் போன்றவர்களின் எழுத்துக்களை படிப்பதை தீட்டு என நினைத்து வருகின்றனர். எல்லாவற்றையும் படித்து, நல்லனவற்றை உறிந்து கொள்வதில் தான் வாசகனின் திறமை இருக்கிறது. அந்த வகையில் சத்யராஜ்குமார் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை.

Thursday, July 15, 2010

டாய் ஸ்டோரி 3


1996 ஆம் வருடம். வீட்டில் கேபிள் டிவி கிடையாது. காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளில் எப்போதேனும் அப்பா என் நச்சரிப்பு தாங்காமல் வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து வருவார். பெரும்பாலும் தியேட்டரில் பார்க்காமல் விட்ட படங்கள் அதில் திரையேறும். அப்படி ஒரு காலாண்டு விடுமுறையின் போது, நானும் அப்பாவும் வீடியோ டெக் வாடகைக்கு எடுக்க சென்றோம். அந்த வீடியோ கடையில் அப்போது இருந்த படங்கள் பெரும்பாலும் பார்த்து விட்டிருந்தோம்.  அப்போது அங்கு கடையில் இருந்தவர் “என்ன தம்பி ‘டாய் ஸ்டோரி’ பார்த்துட்டீயா” என்று கேட்டார்.  நான் இல்லையென்று தலையாட்டியதற்கு ”எடுத்துட்டு போய் பாருங்க. நல்ல படம்” என்றார். கொஞ்சம் நம்பிக்கையில்லாமல் தான் எடுத்து வந்தோம். ஆனால் வாடகைக்கு எடுத்து வந்த இரண்டு நாளில் அந்த படத்தை மூன்று முறை பார்த்து விட்டிருந்தேன்.

சிறு ப்ராயத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் “இணைந்த கைகள்”. அதற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்து நிறைய முறை பார்த்த படம் என்றால் அது டாய் ஸ்டோரி தான். வுட்டியும், பஸ் லைட் இயரும் ராக்கெட்டில் பயணிக்கும் அந்த இறுதி கட்ட காட்சி எனக்கு மிகவும் பிடித்த ஆக்‌ஷன் காட்சிகளில் ஒன்று. டாய் ஸ்டோரியை நினைக்க, நினைக்க பல இனிமையான குழந்தை பருவ நினைவுகள் தான் எழுகின்றன. அனிமேஷன் படங்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமே என்று இருந்ததை மாற்றிய பெருமை டாய் ஸ்டோரியையே சாரும். 1999 இல் டாய் ஸ்டோரி இரண்டாம் பாகம் வந்து இருந்தாலும், 2003 இல் கல்லூரி வந்த போது தான் அதை பார்த்தேன். பொதுவாக sequel திரைப்படங்கள், முதல் பாகத்தை விட கொஞ்சம் காரம் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் டாய் ஸ்டோரியும், ஜேசன் போர்ன் திரைப்படங்களும் விதிவிலக்கு.

பொதுவாக இங்கு சம்மருக்கு வெளியாகும் படங்கள் கொஞ்சமாவது உருப்படியான படங்களாக இருக்கும். ஆனால் இந்த கோடையில் நம்மூரு மாதிரியே வரிசையாக சொதப்பல் படங்கள் தான் வந்து  இருந்தன. ஒரு வழியாக டாய் ஸ்டோரி 3 அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. கொடுத்த காசுக்கு உருப்படியான படம்.  முதல் பாகத்தில் சிறுவன் ஆண்டியின் பொம்மைகளான வுட்டியும், பஸ் லைட் இயரும் சண்டை  போட்டு பின்னர் ராசியாகினர். பின்னர் இரண்டாம் பாகத்தில் ஒரு பொம்மை சேகரிப்பாளனிடம் சிக்கிய வுட்டியை -  பஸ் லைட்டும், ஆண்டியின் மற்ற பொம்மைகளும் காப்பாற்றினர். முதல் பாகம் முடிந்து சரியாக 11 வருடம் கழித்து ஆரம்பிக்கிறது மூன்றாம் பாகத்தின் கதை.
 17 வயதான Andy கல்லூரிக்கு செல்ல தயாராகும் வேளையில், அவன் அம்மா அவன் அறையில் தேவை இல்லாத பொருள்களை எல்லாம் அப்புறபடுத்த சொல்கிறாள்.அவன் கல்லூரிக்கு செல்கையில் தனக்கு மிகவும் பிடித்த பொம்மையான வுட்டியை மட்டும் எடுத்துச் செல்ல நினைக்கிறான். மீதம் இருக்கும் பொம்மைகள் அனைத்தையும் பரணில் போட்டு வைக்க நினைக்கையில், தவறுதலாக அவை குப்பைக்கு போகின்றன. குப்பைக்கு போவதில் இருந்து தப்பிக்கும் பொம்மைகள், ஒரு 'Day Care Center'க்கு செல்லும் பெட்டியில் தஞ்சம் அடைகின்றன. ஆண்டி தங்களை குப்பையில் தள்ளியதாக நினைக்கின்றன பொம்மைகள். ஆனால் அவர்களை காப்பாற்ற வரும் வுட்டி, Andy அவர்களை தூக்கி போட நினைக்கவில்லையென விளக்கம் கூறியும் பிடிவாதமாக டே கேர் செல்லும் காரில் பயணிக்கின்றன மற்ற பொம்மைகள்.

டே கேரில் ஆரம்பத்தில் தாங்கள் நன்றாக விளையாடப் படுவோம் என நினைக்கும் ஆண்டியின் பொம்மைகளுக்கு, பின்னர் தான் அங்கு நடக்கும் சதி புலப்படுகிறது. ஒரு கரடி பொம்மையின் தலைமையில் இயங்கும் ஒரு மாபியா குழு(??!!) இவர்களை ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகள் விளையாடும் பகுதியில் தள்ளி விடுகின்றன. ஆண்டியின் அருமையை பின்னர் அறியும் பொம்மைகள் எவ்வாறு அந்த டே கேரில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே மீதிக் கதை.

வுட்டியாக டாம் ஹேங்க்ஸ், பஸ்ஸாக டிம் அல்லன் என்று வழக்கமான குரல்களுடன் ,கென்னாக பேட்மேன் புகழ் மைகேல் கீடன்  குரல் கொடுத்து உள்ளார். கதையை கேட்கும் போது கொஞ்சம் குழந்தைத்தனமாக தோன்றினாலும், அது திரைக்கதை ஆக்கப் பெற்ற விதமே டாய் ஸ்டோரி திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம். சில காட்சிகளில் உங்களை அறியாமல் கண்ணில் ஓரம் நீர் கோர்த்தால் அதற்காக வெட்கப் பட வேண்டாம். அதே சமயம் பிக்ஸார் படைப்பாளிகளுக்கே உள்ள டார்க் ஹியுமர் வகையறாக்களும் படத்தில் நிரம்பி உள்ளன. முக்கியமாக பஸ்  லைட் இயர் பழுதாகி, அதை திரும்ப சரி செய்த பின் "¡Buzz Lightyear al rescate!" என்று ஸ்பானிஷில் பேசுவது, கென் பொம்மைக்கும் பார்பிக்கும் நடக்கும் காதல் ஊடல்கள் போன்று ஏராளமான காட்சிகள். டெக்னிகலாக பார்க்கும் போது முப்பரிமான காட்சிகள் ஒன்றும் படத்தில் அவ்வளவாக இல்லை. அதனால் 3 டிக்கு செலவு செய்ய வேண்டிய எக்ஸ்ட்ரா காசு கொஞ்சம் மிச்சம்.

படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வரும் போது, இந்த கதாபாத்திரங்களை திரும்ப பார்க்க மாட்டோம் என்று நினைப்பு தான் வருத்தம் தந்தது. ஹாலிவூட் ஆச்சே, எப்படியும் ஸ்பின் ஆப், ஒரு கதப்பதிரத்தை மட்டும் இன்னொரு முழு நீளப் படம் இப்புடி எதாவது ஒன்னு எடுக்காமலா போவாங்க...


Toy Story 3 - It gets better and better

Thursday, June 17, 2010

பிரபஞ்சனின் ”மீனும்”, நாஞ்சில்நாடனின் ”எருமைமாடுகளும், சாரைப்பாம்பும்”

மீன் - பிரபஞ்சன்

ஒரு தடவை என்னை பார்த்து என்னுடைய நண்பன் ஒருவன், “நீ எல்லாம் எப்புடி தான் கறிகஞ்சி திங்காம கிடக்கியோ” என்று கேட்டான். அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது. சுற்றம் அனைத்தும் கிடா வெட்டி குழம்பு வைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, நான் மட்டும் ஒரு ஓரமாக ரசமோ, மோர் சாதமோ அப்பளத்தை கடித்து கொண்டு தின்று கொண்டிருப்பேன். சில சமயங்களில் ரசத்தில் ஆட்டுச்சாறு ஊற்றி விட்டால் வெறும் மோர் சாதம் தான். ஐந்து வயதில் இருந்தே பிடிவாதமாக கறி சாப்பிடாமல் இருந்து விட்டேன். ஏன் என்று எனக்கும் புரிந்ததில்லை.

சரி. விசயத்திற்கு வருகிறேன். கல்லூரி விடுமுறைக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்த போது, பொதிகையில் சிறுகதை நேரம் என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பாலு மகேந்திரா கதை நேரத்திற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தான் நினைக்கிறேன். அதில் பிரபஞ்சனின் ‘மீன்’ கதை ஒளிபரப்பானது. குறும்படம் தொடங்குவதற்கு முன் பிரபஞ்சன் அவர்கள் பேசியதில், இந்த கதை அவர் நண்பர் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்று தெரிந்தது.

கதை:  ஒரு கடலோர ஊரில் கதை நடப்பதாக அமைக்கப் பட்டிருக்கிறது. கடலோரத்தில் இருப்பதால் மீன் தான் எல்லாருக்கும் பிடித்த உணவு. ஆனால் நம் கதை நாயகனுக்கு மீன் என்றால் அலர்ஜி. அதற்கு முக்கிய காரணம் மூன்று வேளை சாப்பாட்டிலும் எதாவது ஒரு வகையில் மீன் அவனுடைய இலையில் இடம் பிடித்து விடுகிறது. “என்னமா இப்பவும் மீனா” என்று தன் தாயை சலித்து கொண்டே, மீன் சாப்பிடுவதை விட்டு விடலாமா என்று யோசிக்கிறான். அந்த சமயத்தில் அவனுடைய கல்யாண பேச்சு எழுகிறது. வரப்போகும் பெண்ணை பற்றிய அவனின் ஒரே எதிர்பார்ப்பு, “என்னோட வருங்கால பொண்டாட்டி, மீன் சாப்பிடக் கூடாது, மீன் சமைக்கக் கூடாது” என்பதாகும். சரி என்று ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க, அவன் மனைவியும் அவனுக்கு பிடித்தார் போல் தினமும் சைவ உணவு சமைத்து தருகிறாள். இல்லறம் நல்லறமாக சென்று கொண்டிருக்க, ஒரு நாள் நம் கதை நாயகன் அலுவலகத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக வர, தனக்கு சுத்தமாக ஒவ்வாத வாசம் வருகிறதே என்று யோசிக்கிறான். உள்ளே வந்து பார்த்தால் அவனுடைய மனைவி, மீன் குழம்பு, மீன் வறுவல் கடித்து கொள்ள கருவாடு என்று ஒரு முழு மீன் விருந்து உண்டு கொண்டிருக்கிறாள். இப்படியாக முடிகிறது கதை.

இந்த குறும்படத்தை பார்த்து விட்டு அம்மா, “உனக்கு வரப் போற பொண்டாட்டியும் இப்பிடித் தான் இருக்கப் போறா” என்று நக்கல் அடித்தாள்.  அது என்னவோ உண்மை ஆகிவிடும் போல் இருக்கிறது. மூக்கை பிடித்து கொண்டு வாழ்க்கையை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

”எருமைமாடுகளும், சாரைப்பாம்பும்” - நாஞ்சில் நாடன்

நான் என்ன தான் கறி திங்க மாட்டேன் என அடம் பிடித்தாலும், அம்மா எனக்கு ஐந்து வயது வரை கறியை தினித்து, தினித்து ஊட்டி கொண்டிருந்தாள். கொஞ்சம் விவரம் வந்ததும் நான் வெஜ் ஐட்டங்களை கண்ணில் கண்டால், ஒரு கி.மீ ஓடி விடுவேன். பையன் ரெம்ப ஒல்லியா இருக்கானே என்று அம்மாவுக்கு வேறு கவலை. அதனால் வெஜ் கட்லட் என்ற பெயரில் மட்டனை நன்றாக வேக வைத்து மாவு போல் அரைத்து, வினயமாக கட்லட்டுடன் கலந்து விடுவாள். சில காலம் நானும் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.  எப்போதும் சமையலறை பக்கம் எட்டி பார்க்காத நான், ஒரு முறை அம்மா கட்லட் செய்யும் போது பார்க்க, கையும் களவுமாக மாட்டிக் கொண்டாள் அம்மா. அதன் பிறகு கல்லூரி வந்த பிறகு தான் முட்டை என்ற கவுச்சி சாப்பிட ஆரம்பித்தேன். அது தவிர்த்து ஊர்வன, பறப்பனவற்றைக் கண்டால் இன்றளவும் அலர்ஜி தான்.

நாஞ்சில் நாடன் அவர்களின் இந்த கதை, ஒரு சைவ சாப்பாட்டுகாரனின் அல்லல்களை பற்றியது. ஒரு வகையில் இந்த கதை என்னுடைய வாழ்வியலுடன் ஒத்து போகின்றது. இந்தியா டுடே இலக்கிய மலரில் வெளி வந்தது. சிறுவயதில் படித்ததால் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. 

கதைப்போங்கை விட, நாஞ்சில்நாடன் அவர்களின் வர்ணனை மூலம் உருவாக்கும் காட்சிபிம்பம் தரும் இன்பம் அலாதியானது. கதை இதுதான். திருநெல்வேலி சைவப் பிள்ளை ஒருவர், வாய்க்கு வஞ்சனை தராத ஒரு நல்ல சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். அவரை சுற்றி இருக்கும் பல பேர், அசைவ பட்சிணிகளாக இருந்தாலும் அவர் சைவத்தை உடும்பு பிடி போல் பிடித்து கொண்டிருக்கிறார். கடைக்கு வரும் பலர், “ரெண்டு முட்டையை வாங்கி ஆம்லெட்டாவது போடுவே” என்கின்றனர். நம்மாளுக்கு ஏறிய பாடில்லை. ஊரில் இருக்கும் பெரிய மனிதர் ஒருவர் சாராயம் குடிப்பதற்கு சைட் டிஷ்சாக, சாரைப்பாம்பை வாட்டி தின்பதை பார்த்து விட்டு, “எப்பிடித்தான் அதை திங்காங்களோ” என்று புலம்புகிறார். 

மகளை பார்ப்பதற்காக மதுரை வரும் நம் நாயகர், தன்னுடைய மருமான் சைவக்குடியில் பிறந்து இருந்தாலும் மட்டன் சாப்பிடுவதை காண்கிறார். என்ன செய்யவென்று புலம்பிக் கொண்டு இருக்கையில், “அது பேருதான் மட்டன், ஆனா அது மாட்டுக்கறிப்பா” என்று மகள் எதார்த்தமாக சொல்ல, சாப்பிட்ட கட்டி பருப்பு சாத்தை நம் நாயகரின் வயிற்றில் இருந்து வாய் வழியாக வெளியேறி விடுகிறது. இப்படித்தான் கதை முடிந்தது என்று நினைக்கிறேன். நான் முன்னே கூறியதைப் போல் நாஞ்சில்நாடனின் வர்ணனைகள் மிகவும் சிறப்பானவை. நாயகரின் கிளப்பு கடை மெனுவைப் பற்றி அவர் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. 

இந்த கதை பலவகையில் எனக்கு ஒத்து போவதுண்டு. சிறுவயதில் மட்டனோ சிக்கனோ, வாசத்தை முகர்ந்தாலே குடல் சுத்தமாகி விடும் சூழல் இருந்தது. இப்போது பரவாயில்லை. அம்மாவும், அப்பாவும் மனவளக்கலை பயிற்சிகள் எடுத்த பிறகு அவர்களும் சைவப் பட்சிணிகளாக மாறிவிட்டனர். எப்போதாவது அசைவம் சாப்பிடும் தம்பியும் இப்போது சாப்பிடுவதில்லை. ஒரு காலத்தில் கோழிச்சாறு இல்லாமல் ஞாயிற்றுகிழமையை நகர்த்தாத அப்பாவிடம் எப்படி விட்டு விட்டீர்கள் என்று கேட்ட போது, “அது அப்படித்தான்” என்று பூடகமாக சிரித்துக் கொண்டு பதில் அளித்தார்.

Sunday, June 13, 2010

பாலு மகேந்திராவின் கதை நேரம் - 2


கீழ்க்காணும் பதிவு இந்த பதிவின் தொடர்ச்சி...

’ஒரு முக்கோண காதல் கதை’ - திலகவதி

அலுவலகத்தில் ஏற்படும் காதல்களை பற்றி ஒரு பெரிய நாவலே எழுதலாம். அதிலும் பக்கத்து சீட்டில் இருக்கும் நண்பன், நாம சும்மா இருந்தாலும், விடலை பருவத்துக்காரன் போல், “மச்சி!! அவ உன்னையே பாக்குறா பாத்தியா” என்று ஏற்றி விடுவான். மனதும் கொஞ்சம் சிறகடிக்கும், அவள் கல்யாண பத்திரிக்கை தரும் வரை. மறுநாள் ‘கல்யாணி’ அல்லது ‘ஓல்ட் மங்க்” ஏற்படுத்திய சிவந்த கண்களுடன் “இவ போனா இன்னொரு பொண்ணு, வாழ்க்கை ஒரு வட்டம் மச்சி!!” என்று தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் அடுத்த காதலில் இறங்குவார்கள். 

திலகவதியின் இந்த கதையிலும் தன் அலுவலகத்தில் தன்னுடன் சாதாரணமாக பழகும் பெண் ஊழியை, தன்னிடம் காதல் கொண்டதாக எண்ணுகிறான் கதையின் ஒரு நாயகன். ஆனால், அந்த பெண்ணோ யதார்த்தமாக வாழ்க்கையை நடத்தும், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியரை காதலிக்கிறாள். அவரும் அந்த பெண்ணிடம், தன் காதலை நாசூக்காக தெரிவித்து அவள் அன்பை பெறுகிறார். முன்னவரும் ஒரு தனியான தருணத்தில் அவளிடம் காதலை தெரிவிக்க, அவள் ஏன் அவரை காதலிக்க முடியாது எனக் கூறும் விளக்கம் தான் கதையின் இறுதி. 20 நிமிடத்தில் வழக்கம் போல் தன்னுடைய அருமையான கதை சொல்லல் பாணியில் இந்த குறும்படத்தை காட்சி படுத்தியிருக்கிறார் பாலு மகேந்திரா.

பொதுவாக அலுவலகங்களில் இது போன்று எதிர்பாலிடம் ஏற்படும் இனக்கவர்ச்சி (காதல் இல்லை), பல சமயங்களில் இது போன்ற மன அழுத்தங்களில் தான் கொண்டு சேர்க்கும். அதுவும் பெரும்பாலான இந்திய ஆண்கள், வீட்டில் பார்த்து கல்யாணம் செய்து வைக்கும் வரை ஒரு வித நீண்ட விடலை பருவத்தை (Extended Adolescence) தான் அனுபவிக்கிறார்கள். அவர்களின் உளவியல் சிக்கல்களை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த கதை. காதலில் நிராகரிக்கபட்டவராக நடிகர் பாலா, பெண் ஊழியையாக மெளனிகா மற்றும் யதார்த்த ஊழியராக வேணு அர்விந்த் வெகு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருந்தனர். மிகச் சாதாரணமான கதையாய் தோன்றினாலும் எனக்கு மிகவும் பிடித்த கதை.

”காத்திருப்பு” - சு.சமுத்திரம்

சு.சமுத்திரத்தின் கதைகள், பெரும்பாலும் வாழ்வியலை ஓட்டியவை. நான் படித்த அவரின் ஒன்றிரண்டு சிறுகதைகளை நினைவிடுக்கில் தேடி கொண்டிருக்கிறேன். அலுவலகங்களில், முக்கியமாக அரசு அலுவலகங்களில் படிநிலையினால் (Hierarchy) நிகழ்த்தபடும் ஏமாற்று வேலைகள் அளவில் அடங்கா. மேல் மட்டத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களை ஏமாற்றியே பல காரியங்களை சாதித்து கொள்வார்கள்.

அப்படிபட்ட ஒரு ஏமாற்றை பற்றிய கதை தான் இந்த சிறுகதையும். அலுவலகத்தில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியனான ப்யூனை, அந்த அலுவலகத்தின் மேலதிகாரி தன் சொந்த காரியங்களுக்கு, குறிப்பாக தன் வீட்டு வேலைகளை செய்வதற்கு உபயோகபடுத்துகிறார். அந்த ப்யூனும், தன் மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக விடுப்பு வேண்டி, தன் மேலதிகாரி காலால் இட்ட வேலையை தலையால் செய்கிறான்.  ஆனாலும், மேலதிகாரிக்கோ அந்த ப்யூனுக்கு விடுப்பு கொடுக்க மனசில்லை. தன் மகளின் திருமணத்தை நடத்துவதற்கு எடுபிடி வேலை செய்ய உபயோகப்படுவான் என்று கணக்கு போடுகிறார். அங்கு ஊரில், ப்யூனுடைய மனைவி காசநோயினால் இறக்கும் தருவாயில் இருக்கிறாள். இறுதியில், அவன் மனைவி ஊரில் இறந்தது கூட தெரியாமல் தன் மேலதிகாரியின் வீட்டில் அந்த பியூன் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்பதாக முடிகிறது கதை.

மேலதிகாரிகள் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி நம் தமிழ் சினிமாக்கள் சொல்லி, சொல்லி மாய்ந்து விட்டன. இருப்பினும், அதிலிருந்து சற்றே வேறுபட்ட கதை இது.

”காயம்” - ஜெயந்தன்

இந்த குறும்பட தொகுப்பிலேயே என்னை மிகவும் பிடித்த, பாதித்த கதை என்றால் இதுவாகத் தான் இருக்கும். அந்த கதை ஏற்படுத்திய தாக்கமா, அல்லது பாலுமகேந்திராவின் திரை மொழி ஏற்படுத்திய தாக்கமா என்று புரியவில்லை. இந்த குறும்படத்தை அம்மா, அப்பா மற்றும் தம்பியுடன் அமர்ந்து தான் பார்த்தேன். பார்த்து முடித்ததும் கொஞ்ச நேரம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. நான் தான் அந்த மெளனத்தை கலைக்க வேண்டி இருந்தது.

குற்ற உணர்வை மையப்படுத்தும் கதைகளை எஸ்.ரா நிறைய எழுதி இருந்தாலும், இத்தனை தாக்கத்தை ஏற்படுத்திய கதையை நான் பார்த்தில்லை.  ஒரே காம்பவுண்டில் வசிக்கும் இரு குடும்பங்களை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மட்டும். இன்னொன்றில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயது மகள். அந்த சிறுமியால் ஒரு சிறு சங்கடம் நேருகிறது. அதன் பின் என்னவாகிறது என்பதே கதை.

இந்த குறும்படத்தை பார்த்த பின் தான் ஜெயந்தன் மறைந்துவிட்டார் எனும் செய்தி தெரிந்தது. அவரை பற்றி படித்த போது, வெகுஜன இதழ்களில் பணியாற்றிய தீவிர இலக்கியவாதி என்றும் அறிந்தேன். தமிழ் இலக்கிய உலகில், பல படைப்பாளிகள் இல்லாத போது தான், அவர்களின் வெற்றிடம் தெரிகிறது. இந்த பொது விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

Sunday, May 23, 2010

ஏன் மணிரத்னம் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு மோசமான முன் உதாரணம்?

© மாமல்லன் கார்த்தி

உங்கள் கவனத்திற்கு (அ) எச்சரிக்கை: இந்த கட்டுரையில் பல முரண்கள் உங்களுக்குத் தோன்றலாம். 

பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது தான் ‘அலைபாயுதே’ வந்தது. எங்க ஊர்ல மணிரத்னம் படத்திற்கு அத்தனை பெரிய ஓபனிங் இல்லாததால ‘அப்பு’னு ஒரு மகா,மெகா காவியம் பொட்டிய கட்டுனதுக்கப்புறம் செகண்ட் ரீலிசா வந்தது. இதற்கு காரணம் இதற்கு முன் வெளியான ‘இருவர்’ மற்றும் ‘உயிரே’. எங்கள் ஊரில் முதல் நாள் முதல் ஷோவிற்கு மொத்தம் 10 பேர் தான் இருந்தார்களாம். அதனால ரிஸ்க் எடுக்க விரும்பாத தியேட்டர்காரர்கள் அதற்கப்புறம் மணிரத்னம் படம் என்றால் செகண்ட் ரிலீஸ் தான் செய்தார்கள். ‘ஆய்த எழுத்து’ வரை அது தொடர்ந்தது. ’குரு’ தப்பிதமாய் முதல் ரிலீஸ் செய்யபட்டு சுமாராக ஓடியது. உண்மையை சொல்லப் போனால் ’அலைபாயுதே’ அப்போது எனக்கு மிகவும் பிடித்த படமாகிப் போனது. படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து நண்பன் ஒருவன் ஒரிஜினல் வி.சி.டி கொடுக்க, அது தேயும் அளவு திரும்ப திரும்ப பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில்லை. 

இப்படி இருக்க மணிரத்னத்தின் அனைத்து படங்களையும் கல்லூரி வந்த பின் பார்க்க ஆரம்பித்தேன். அவருடைய படைப்புகளில் கூறப்படுவனவை உண்மையை போல் தோற்றம் அளித்தாலும், ஒரு வித குறுகிய மனப்போங்குடன் படைக்க பட்ட படைப்புகளாகவே தோன்றியது. முக்கியமாய் அவருடைய படங்கள் நெடுகிலும் ஒரு வெறுமை தோன்றியது. அந்த வெறுமை ஓட்டைகள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பிண்ணனி இசை ஆகியவற்றால் பூசி மொழுகப் படுவதும் தெளிவுறக் கண்டேன். இதனால் தான் மணிரத்னம் தன் படங்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்துகிறார் என்பதையும் புரிந்து கொண்டேன்.

இன்ஸ்பிரேஷன் - இந்த ஒரு வார்த்தையை வைத்து நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பிதாமகர் மணிரத்னம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 1996 இந்தியா டுடே இலக்கிய மலரில், கமலிடம் ‘நாயகனில்’ உள்ள ‘பாதிப்புகள்’ பற்றி வாசந்தி அவர்கள் கேட்ட போது “அது Mario Puzo வை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சி” என்றார். பின்னர் ஏன் மார்லன் பிராண்டோவின் உடல்மொழி அப்படியே பயன்படுத்தபட்டது? 

இன்ஸ்பிரேஷனுக்கும், ப்ளேகரிசத்திற்கும் (Plagiarism - அப்பட்டமாய் காப்பி அடிப்பது) இடையே ஒரு சிறிய, மிகச் சிறிய இடைவெளி உள்ளது. மணிரத்னம் இன்ஸ்பிரேஷன் என்ற இடைவெளியை தாண்டி, ப்ளேகரிச வெளிக்குள் நுழைந்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. இதை நான் வெளிப்படையாக கூறினால் என்னை சுற்றும் விமர்சன கணைகள் கூராக பாய்கிறது. ‘நாயகன்’ காட்ஃபாதரின் வெளிப்படையான பாதிப்பு என்று சாதாரணமாக ஆங்கில படம் பார்ப்பவர் கூட சொல்லி விடுவர். அதில் இடம்பெறும் ‘Once upon a time in America' காட்சிகள் பட்டியலில் வராது. இருப்பினும், இந்த படம் ‘டைம்’ இதழின் சென்ற நூற்றாண்டின் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பிடித்ததால் விதிவிலக்கு. மேலும் ‘காட்ஃபாதரால்’ பாதிக்கபட்டு எடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் கணக்கில் அடங்கா. ஏன் ‘சர்க்கார்’ கூட காட்ஃபாதரின் தழுவல் தானே? ஆனால் அதை தழுவல் என்று வெளிப்படையாக டைட்டில் கார்டில் போடுமளவிற்கு ராம் கோபால் வர்மாவிற்கு தைரியம் இருந்தது. மணிரத்னத்திற்கு?? காட்ஃபாதர் ஹேங் ஓவர் ‘அக்னி நட்சத்திரத்திலும்’ தொடர்ந்தது.

’மெளன ராகமும்’ அதற்கு முந்தைய மணிரத்னம் திரைப்படங்களும் ஒரு வித அழகியல் தன்மையோடு தோன்றின. ஆனால் ‘இதயகோயில்’ எண்பதுகளின் மத்தியில் வந்த ட்ராஜெடி ‘காவியங்கள்’ வரிசையில் இருப்பதால் எனக்கு பிடிக்காமல் போனது. முக்கியமாய் அவரின் முதல் படமான ‘பல்லவி அனு பல்லவி’யை பார்த்த போது சற்று பிரமிப்பாகத் தான் இருந்தது. ஒரு வேளை அதற்கு காரணம் பாலுமகேந்திராவின் ஓளிப்பதிவா? பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் இது வரை தன்னை கதை சொல்லி அசத்தியவர்களில் ஒருவர் மணிரத்னம், மற்றொருவர் ‘கற்றது தமிழ்’ ராம் என்று தெரிவித்து உள்ளார். அத்தகையதொரு படைப்பாளி ‘தேசிய கவனம்’ பெறுவதற்காக சோடை போனாரோ என்றும் தோன்றுகிறது. 

மணிரத்னம் ’தளபதி’யில் புராண கதை ஃபார்முலா எடுபட்டவுடன், தேசிய அளவில் எடுத்துச் செல்ல சத்யவான், சாவித்ரி கதையை ‘ரோஜா’ என்று படைத்தார். இந்த படத்தின் அரசியலை, தமிழ் இலக்கிய விமர்சகர்கள் ஏற்கனவே கிழித்து தொங்க விட்டு விட்டதால் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. 'பம்பாய்’ ஒரு வித மொன்னையான படைப்பு என்றே கூற வேண்டும். காரணம் அந்த படம் என்ன சொல்ல வந்ததோ அது மிக வெளிப்படையாக சொல்லப்படவில்லை. அன்றைய அரசியல் சுழலும் காரணமாக இருந்திருக்கலாம். அந்த மொன்னைத்தனம் ’இருவரி’லும் தொடர்ந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான பங்கு வகிக்கும் இருவரை நேரடியாக திரைபாத்திரங்களாக படைத்தால் ட்ரவுசர் கிழிந்து விடுமே. அது தான் நடந்தது. பொதுவாக மணிரத்னம் திரைப்படங்கள் ‘ஏ’ செண்டர் ஆடியன்ஸ் எனும் பெருநகர மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று ஒரு வித மொக்கையான மேம்போக்கு நிலவி வருகிறது. அது ‘இருவரி’ல் பொய்த்தது என்றே கூற வேண்டும். என் சினீயர் ஒருவர் தெரிவித்த வரையில் இந்த படம் ஓடுவதற்கு ‘ஹிந்து’வில் மாய்ந்து, மாய்ந்து இந்த படத்தை பற்றி தலையங்கம் எழுதினார்களாம். அப்படியும் படம் சென்னையிலேயே, ஊஹீம்...

ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டிய சூழலில் வெளியான ’அலைபாயுதே’, ஆர்.செல்வராஜின் கதையிலும், சுஜாதாவின் வசனத்திலும் தப்பி பிழைத்தது என்றே சொல்ல வேண்டும். ‘மெளன ராகம்’ மணி திரும்பி விட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் ’அரசியல் சினிமா’ ஆசை  அவரை விடவில்லை போலும். ஈழப்பிரச்சனையை வைத்து ‘கன்னத்தில் முத்தமிட்டாலை’ எடுத்தார். நாடகத்தனமான ஈழத்தமிழில் பேசிய கதாபாத்திரங்கள் ஒன்று கூட ஈழத்து மனிதர்களாக தோன்றவில்லை. இதை பல ஈழ எழுத்தாளர்களும், நண்பர்களும் எழுதி தள்ளி விட்டனர்.

‘ஆய்த எழுத்து’ மணிரத்னத்தின் அரசியல் சினிமாக்களின் உச்சம் என்று கூறலாம். இந்த படம் திருச்சியில் போட்ட போது முதல் காட்சிக்கு  50  பேர் கூட தேறலை. (நானும் முதல் ஷோவிற்கு போயிருந்தேங்க... :D) உலகெங்கிலும் உள்ள திரைப்பட கல்லூரிகளில் ‘ரோஷாமான் ஸ்கிரீன்ப்ளே எஃபக்ட்’ என்று பாடமாகவே வைக்கபட்டுள்ளது. அந்த எஃபக்ட் மணிரத்னத்தை பாதித்தது. இருப்பினும் அது கூட ஏற்று கொள்ளக்கூடிய ஒன்று. அதோடு நிறுத்தியிருக்கலாம். ‘Amorres Perros' படத்தில் இடம்பெறும் காட்சிகள் அப்படியே காமிரா கோணம் மாறாது கையாளப் பட்டன. படத்தின் காட்சிகள் துண்டு, துண்டாக இருக்கும் போது ரசிக்கக் கூடியதாய் இருந்தாலும், மொத்தமாக காணும் போது பார்வையாளன் குழப்ப நிலைக்கு ஆளானது தான் படத்தின் தோல்விக்கு காரணம்.

‘குரு’ - ’ஏவியேட்டரின்’ சர்க்கரை தடவி எடுக்கப்பட்ட (அ) ‘ஏவியேட்டரின்’ ரீமேக் ரைட்ஸ் வாங்கப்படாத இந்திய படைப்பு. இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. சரி, விஷயத்திற்கு வருவோம். இப்புடியே இன்ஸ்பையர் ஆகிட்டே போனீங்கன்னா உங்களோட ஒரிஜினல் படைப்பு எப்ப வரும்ங்க. இன்னொரு கருத்தும் இருக்குது: இன்ஸ்பையர் ஆகுறது தப்பு இல்லை, அப்பிடி இன்ஸ்பையர் ஆனாலும் அந்த இறுதி படைப்பு படைப்பாளியோட பாணியில் இருந்தால் தப்பில்லையாம். நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதும் போது, அதன் மூலத்தை குறிப்பிடாமல் எழுதினால் என் மென்னியை திருகிவிடுவார்கள் அறிவியலாளர்கள். ‘பூ’ திரைப்பட டைட்டில் கார்டில் ‘நன்றி: ஷாங்க் ஈமு’ என்று வரும். காரணம்: ‘பூ’ படத்தின் பெரும்பாலான கூறுகள் ஷாங்க் ஈமுவின் ‘தி ரோட் ஹோம்’ கதையை தழுவியது. இது போன்ற குறைந்தபட்ச நேர்மையாவது மணிரத்னத்திடம் உள்ளதா?

இந்த இடத்தில் தான் மணிரத்னம் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு மோசமான முன் உதாரணமாகிறார். ஃபிலிம் இன்ஸ்டியூட்டிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் ஒரு ஒலகப்பட டி.வி.டியை சுட்டு ஒரு திரைக்கதை தயாரித்து ஒரு படமும் எடுத்து விடுவான். யாரேனும் ‘இது அந்த படத்தின் காப்பி தானே’ என்று கேட்டால் ‘மணிரத்னம் அடிக்கிறாரு, நான் அடிச்சா மட்டும் தப்பா’ என்று எதிர் கேள்வி தொடுப்பான். நம்முடைய பெரும்பாலான வெகுஜன அறிவுஜீவி விமர்சகர்கள், மணிரத்னத்தின் திரைப்படம் தழுவல் எனத் தெரிந்தாலும் ‘ஆஹா, ஒஹோவென’ புகழ்வார்கள். அதே வேறொருவர் காப்பி அடித்தால் போட்டு தாளித்தெடுப்பார்கள். 

நல்ல வேளை. மணிரத்ன தலைமுறை அவரோடு நின்றுவிட்டது. அவரின் மாணவர்கள் அழகம்பெருமாள், சுசி.கணேசன், ப்ரியா.வி ஏதோ ரெண்டு படங்கள் செய்து இருந்தாலும் ஒன்றும் பெரிசாக பெயர் சொல்லிக் கொள்ளும் படியாக சாதிக்கவில்லை. இருந்தாலும் இந்த கவுதம் மேனன், செல்வராகவன் வகையறாக்கள் மணிரத்ன வாரிசு என்ற பட்டத்திற்கு அடியை போடுவது தான் மேலும் கடுப்பேற்றுகிறது.

Sunday, May 16, 2010

Iron Man 2

படம் ஆரம்பிச்ச 10வது நிமஷத்தில வுட ஆரம்பிச்ச கொட்டாவி. கடைசி வரைக்கும் மூச்சு கூட விட வுடாம கொட்டாவி விட வைச்ச 'Iron Man 2' இயக்குநர் John Favreau’க்கு வாழ்த்துக்கள். (வக்காலி நீ மட்டும் கையில சிக்குன!!) எத்தனையோ பேரு சொல்லியும் கேக்காம போன என்னையும் ஜோட்டால அடிக்கனும். கதையெல்லாம் கேட்டீங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும். ‘சுறா’ படத்துக்கு கதை கேட்டீங்களா. அது மாதிரி தான் இதுவும். ஹாலிவுட்ல ஒரு ஃபிளாஸஃபி வைச்சுருக்காங்க, ஒரு படம் ஹிட்டாச்சுன்னா ‘இவன் எத்தனை பார்ட் எடுத்தாலும் பார்க்குறாண்டா.இவன் ரெம்ப நல்லவன்’னு தொடர்ந்து Sequel'ஆ எடுத்து தள்ள வேண்டியது.

டிபிக்கல் வில்லன் இண்ட்ரோ, ஹீரோ இண்ட்ரோ சாங்க், குட்டிங்க போடும் சக்கை ஆட்டம் போன்ற மசாலா படங்களுக்கு உரிய ஐட்டங்களோடு ஆரம்பிச்ச படம், அப்பால பப்படமா போச்சு. இதுக்கு மேல இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி நான் பட்ட வேதனையை உங்களுக்கு சொல்ல விரும்பலை. இருந்தாலும் ஒரே மன ஆறுதல் என்னன்னா, நல்ல வேளை  நான் ‘சுறா’ பார்க்கலை. இவண் - ‘சுறா பார்த்து நொந்தோர்க்கு ஆறுதல் சொல்வோர் சங்கம்’.

பி.கு: படத்துல ஒரே, ஒரே ஒரு ஆறுதல் - Scarlett Johansson


Sunday, May 9, 2010

இரா.முருகனின் ‘சேது’, என்.ஸ்ரீராமின் ‘முனி’

இளங்கலை பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம். புத்தகம் படிக்க பேய் போல் சுற்றி கொண்டிருந்தேன்.புத்தகம் படிக்கவில்லையென்றால் தூக்கம் வராது. எனக்கு சரியாக தீனி போட்டது என் பல்கலை நூலகம். முதுகலை தமிழ் மாணவர்களுக்கு என்று வாங்கபட்ட புத்தகங்கள் தூங்கி கொண்டிருக்கும் அங்கே.  ஜெயகாந்தன், கி.ரா, புதுமைபித்தன், தி,ஜா, கு.பா.ரா, லா.சா.ரா, மெளனி, ப்ரமிள், சு.ரா, எஸ்.ரா, சாரு, ஜெ.மோ உள்ளிட்ட அனைவரும் எனக்கு அங்கு தான் அறிமுகமானார்கள். அப்போது தான் இரா.முருகன் அவர்களின் “இரண்டாம் ஆட்டம்” சிறுகதை தொகுப்பை அங்கு கண்டேன். ஏற்கனவே ‘ராயர் காப்பி கிளப்’ யாஹீ குழுமம் மூலம் அவரை பற்றி தெரிந்தாலும், அவரின் படைப்புகள் ஒன்றை கூட படித்ததில்லை. அதில் இருந்த ‘பூச்சி’ கதையை ஏற்கனவே ’தினமணி’ 1997 பொங்கல் மலரில் படித்த நினைவு. 

அந்த தொகுப்பில் ‘சேது’ எத்தனையாவது கதை என்று தெரியவில்லை. அந்த கதையை படித்த பிற்பாடு, அதற்கு மேல் எனக்கு வேறு ஒன்றும் படிக்க தோன்றவில்லை. இரண்டு நாட்கள் வேறு எந்த புத்தகத்தையும் படிக்க தோன்றவேயில்லை. மந்திரித்து விட்ட கோழி போன்று சுற்றி கொண்டிருந்தேன். பலவற்றை மறுவாசிப்பு செய்யும் பழக்கம் இருந்தாலும், அந்த கதையை நான் அதற்கு பிறகு வாசிக்கவே இல்லை. ஒரு வேளை என்னுடைய வயது (அப்போது எனக்கு 19 வயது) அந்த சிறுகதை தந்த சிறு அதிர்ச்சியை, ஊதி பெரிதாக்கி விட்டதா என்று புரியவில்லை. சில விஷயங்கள் புரியாமல், அதனால் கிடைக்கும் இன்பம் அலாதியானது. 

கதை என்னவென்றே நான் சொல்லவில்லையே. ராமேஸ்வரத்தில் இருக்கும் நாழிக் கிணறுகளை வாளியோடு தீர்த்த யாத்திரை அழைத்து செல்லும் கைடு ஒருவனுடன், அங்கு தீர்த்த யாத்திரை வரும் பயணி ஒருவன் புலம்பும் புலம்பல் தான் கதை. கதையின் இறுதியில் ஒரு அதிர்ச்சிகரமான முடிவு. அது தான் என்னை மிகவும் பாதித்தது. 

ஹாஸ்டலில் கிடைக்கும் ஓ.சி ஆனந்த விகடனுக்கு நாயாய் அலைந்தது ஒரு காலம். எஸ்.ராவின் ‘துணையெழுத்து’ வேறு அப்போது அதில் வந்து கொண்டிருந்தது. ஆனந்த விகடனை காசு போட்டு வாங்க வக்கத்து திரிந்து கொண்டிருந்தேன். அப்போது நண்பன் தென்னரசு தான் பெரும்பாலும் ஆனந்த விகடன் வாங்குவான். சில முதுகலை மாணவர்களும் வாங்குவர். ஓ.சி வாங்கி படித்த ஒரு இதழில் அந்த கதை வந்து இருந்தது. அது என்.ஸ்ரீராமின் ‘முனி’. வெறும் வார்த்தைகள் மூலம் வாசிப்பவர்களின் மனத்தில் பெரும் ரசவாத மாற்றம் நிகழ்த்தலாம் என்பதை அந்த கதை மூலம் புரிந்து கொண்டேன். 

கதை: முனி கோயில் பூசாரி சாமியாடிய படி இரவில் நகர் முழுவதும் சுற்றி வருவார். முனி வேடம் கலைத்து காலையில் தன் மகனை கொஞ்ச வரும் பூசாரியை பார்த்து “யெம்மா முனி!!” என்று பயந்து அம்மாவின் பின்னால் ஒளிவான் மகன். அந்த சிறுவன் தன் தாயின் பின்னால் ஒளிந்து கொள்வதை ஒரு முறை காட்சி படுத்தி பார்த்த போது அதிர்ச்சியுற்றது என் மனம்.

இந்த கதையையும் அதற்கு பிற்பாடு நான் வாசிக்கவில்லை. என்,ஸ்ரீராமின் “வெளி வாங்கும் காலம்” சிறுகதை தொகுப்பை அதற்கு பிற்பாடு தான் வாசித்தேன். இருந்தும் இந்த கதையை திரும்ப வாசிக்க தோன்றவேயில்லை. முதல் வாசிப்பின் போது ஏற்பட்ட அந்த அதிர்வு அப்படியே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

இந்த இரு சிறுகதைகளும் ஒரே வகையான சட்டகத்தின் கீழ் வடிவமைக்கபட்டவை. அதாவது கதையின் இறுதியில் வாசகனுக்கு அதிர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதே இந்த கதைகளின் ஆதாரம். அந்த முயற்சியில் இரு எழுத்தாளர்களும் வென்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பல சமயங்களில் இந்த இரு கதைகளும் எனக்கு ஒன்று போல் தோற்றமளித்தன. இந்த கதைகளை பற்றிய என்னுடைய பார்வையும், ஓப்பீடும் உங்களுக்கு மிகையாகத் தோன்றினாலும், இவற்றை வாசித்த போது நான் கண்டறிந்த உண்மைகள் தான் மேற் கூறியவை.

இந்த பதிவிற்கே சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி உங்களிடம்: நீங்கள் கடைசியாக எப்போது உங்கள் பெற்றோருக்கு, நண்பர்களுக்கு (அ) காதலி/காதலனுக்கு கடிதம் எழுதி அஞ்சல் (மின்னஞ்சல் அல்ல) செய்தீர்கள்?

Thursday, May 6, 2010

’அழியாத கோலங்களும்’, அழியாத நினைவுகளும்...

நானும் அப்பாவும் இணைந்து கழித்த பொழுதுகள் ஏராளம். அம்மாவிடம் சொல்லாமல் நானும், அப்பாவும் பைக்கில் ஒரு குட்டி பிக்னிக் போய் விட்டு, பின்னர் இருவரும் அம்மாவிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் அனுபவம் அலாதியானது. எனக்கு ஒன்பது வருடம் கழித்து பிறந்த என் தம்பி, கொஞ்ச காலம் என் இடத்தை பிடித்து கொண்டான். பெரும்பாலும் நானும், அப்பாவும் இணைந்து ஆங்கில படங்களுக்கு செல்வோம். ஆனால், என்னவோ அப்பாவுடன் பார்த்ததில் மிகவும் பிடித்த படம் “மகாநதி”. அப்பா எந்தளவிற்கு என்னை கட்டற்று வளர்க்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஒரு உதாரணம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை சென்னை வந்திருந்தோம். அப்போது கலைவாணர் அரங்கில் “மோக முள்” திரைப்படம் பகல் காட்சியாக ஓடியது. அந்த படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். பிற்காலத்தில் கொஞ்சம் விபரம் அறிந்து அந்த படத்தை பார்த்த போது, அப்பா எப்படி என்னை இத்தனை மெச்சூர் கண்டெண்ட் நிறைந்த படத்திற்கு என்னை அழைத்து சென்றார் என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது.

கேபிள் கனெக்‌ஷன் இல்லாத வீடு எங்களுடையது. யாராவது எங்கள் வீட்டை அடையாளம் காட்ட வேண்டுமெனில், “அதோ தெரியுது பாருங்க ஆண்டனா வைச்ச வீடு. அது தான்” என்பார்கள்.  அப்போதெல்லாம் ஞாயிறு மதிய பொழுதுகளில் தூர்தர்ஷனில் மாநில மொழி திரைப்படம் திரையிடுவார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் (1999) போது ஒரு முறை, பாலு மகேந்திராவின் “அழியாத கோலங்கள்” படத்தை திரையிட்டார்கள். நானும் ஆர்வத்துடன், அப்பா அருகில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். எங்கிருந்தோ வந்த அம்மா, “இந்த படத்தையெல்லாம் எதுக்கு சின்ன பையனை பார்க்க விடுறீங்க” என்று டி.வியை அணைத்தார். எனக்கோ செம கடுப்பு, “ஏம்மா பார்க்கக் கூடாது" என்று  சற்றே கோபமாக கத்தி விட்டேன். அதற்கு அப்பா,”ஏன் பாத்தா என்ன. எப்படினாலும் அவன்  அடலஸண்ட் ஸ்டேஜில் தானே இருக்கான். இதுவும் அந்த ஸ்டேஜில் இருக்கிற பசங்களை பத்தின படம் தானே. பார்த்தா என்ன” என்றார். ”அதெல்லாம் பார்க்க கூடாது” என்று அம்மா அவள்  வேலையை பார்க்க சென்றுவிட்டாள். இதுக்கு மேல டி.வி போட்டா ஒரு வேளை என் முதுகில் புகை வரலாம் என்பதால் நானும் அடக்கி வாசித்தேன்.

பின்னர் கல்லூரி வந்த பின் ஒரு முறை குமுதம் ‘தீராநதி’யில் பாலுமகேந்திராவின் பேட்டியை படித்தேன். அதில் ‘அழியாத கோலங்கள்’ தன்னுடைய பதின்ம பருவத்தின் பிரதபலிப்பு என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த படத்தை பற்றி அவர் கூறியது எனக்கு அந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தை கூட்டியது.  ஆனால், கடந்த மாதம் வரை இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த மாதம் யூடியுபில் மேய்ந்து, ஆய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த படம். “கண்டேன்  பொக்கிஷத்தை” (சேரன் படம் இல்லீங்கோ) என்று குதித்தது மனம்.  ஒரே சிட்டிங்கில் முழு படத்தை பார்த்த போது எனது பதின் பருவ நினைவுகளில் மூழ்கி போனேன்.

”அமெரிக்கன் பைய்” படத்தை தழுவி வெந்தும் வேகாமல், “பாய்ஸ்” என்றும், “துள்ளுவதோ இளமை” என்று ரெண்டு படம் எடுத்தார்கள். அந்த படங்களை எல்லாம் ஏன் பார்த்தேன் என்று நினைக்க வைத்து விட்டது இந்த படம். விடலை பருவத்தில் செய்யப்படும் சேட்டைகளும், அந்த பருவத்திற்கு உரிய ஆசைகளும் நாசூக்காக எடுத்து சொல்லப்பட்ட திரைப்படம் இதுவாகத் தான் இருக்கும். மூன்று விடலைப் பருவ நண்பர்கள், அவர்களின் ஆசிரியை, நடுத்தர வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் போஸ்ட் மாஸ்டர், ஊர் பொதுவில் நடனமாடும் கனிகை, போன்ற சுவாரசியமான பாத்திர படைப்புகள்.

ரயில்வே க்ராஸிங்க் கேட்டில் உட்கார்ந்து ரயிலுக்கு டாட்டா சொல்வது, அத்தை மகளிடம் தயங்கி தயங்கி ராத்திரி நேரத்தில் பேசுவது, நடன கனிகையிடம் உடலுறவு கொள்ள ஆணுறையை எடுத்து கொண்டு அவளிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் முழிப்பது, அவளிடம் தண்ணி வாங்கி குடித்து விட்டு ஆணுறையை பலூன் போல் ஊதி எதையோ சாதித்து விட்டது போல் ஆடி வருவது, போஸ்ட் மாஸ்டரும் நடன கனிகையும் உடலுறவு கொள்வதை மறைந்திருந்து பார்ப்பது, தனது வகுப்பாசிரியையை டாவடிப்பது, அவள் காலால் இட்ட பணியை தலையால் செய்வது போன்ற விடலை பருவத்திற்குரிய சேட்டைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகளை தமிழில் எந்தவொரு திரைப்படமும் ஆவணபடுத்தியதாக எனக்கு நினைவில்லை.

சலீல் செளத்ரி
இசை - சலீல் செளத்ரி. இந்தி திரைப்பட உலகின் இசை மேதையாக கருதப்படும் திரு.செளத்ரியை எப்படி இந்த படத்திற்கு இசையமைக்க பாலு மகேந்திரா சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. அவர்களின் நண்பன் இருந்த பொழுதில் பிண்ணனி இசையற்ற அந்த நிசப்தம், சலீல் செளத்ரியின் இசை திறமையை தான் வெளிபடுத்துகிறது. இன்றைய இசையமைப்பாளர்கள் இதை பார்த்து தெரிந்து கொண்டால் பரவாயில்லை. தேவையற்ற நேரங்களில் எலக்ட்ரிக் கிடார் அலறுகிறது (”ஆயிரத்தில் ஒருவன்” - ஜி.வி.ப்ரகாஷ், தி கிங் அரைவ்ஸ், “விண்ணைத் தாண்டி வருவாயா” - ஏ.ஆர்.ரஹ்மான், அநேக தருணங்கள்)

அப்பாவிடம் இந்த படம் பார்த்ததை பற்றி தொலைபேசியில் பேச்சு வாக்கில் சொல்ல, மெதுவாக சிரித்தார். ஒரு அப்பாவின் ஆதங்கத்தோடு “படத்தை பாரு, அதே சமயம் படிச்சு வேலை வாங்குற வழியையும் பாரு” என்றார்.

Saturday, April 10, 2010

ஃபெட்னா 2010

நான் யு.எஸ்ஸிற்கு வந்து இறங்கிய இரண்டாம் நாள் சுதந்திர தினம். அந்த வார இறுதியில் எங்களுக்கு அருகில் இருந்த பெருநகரான டல்லாஸில் (Dallas) சுதந்திர தின பெருவிழா கொண்டாடபட்டது. அந்த பெருவிழாவிற்கு நாங்கள் வாலண்டியர்களாக சென்றதால் எங்களுக்கு நுழைவு கட்டணம் எதுவும் இருந்திருக்கவில்லை. அப்போது தான் அங்கு இருந்த தமிழ் சங்கங்களை பற்றி அறிந்து கொண்டேன். ஆனால் அதில் மெம்பர் ஆவதற்கு கிட்டத்தட்ட 50 டாலர் வரை கட்ட வேண்டிய சூழல். ஒரு மாணவன் என்ற முறையில் அது மிகவும் அதிகம். நான் மாதச் சம்பளம் வாங்குபவனாக இருந்தால், 200 டாலர் கூட கொடுத்து இணைந்திருப்பேன். பின்னர் ஃபெட்னா (FeTNA - Federation of Tamil  sangams of North America) என்ற அமைப்பு வட அமெரிக்காவில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒன்றினைக்கிறது என்றும், அவர்கள் வருடம் ஒரு முறை பெருவிழா ஒன்றையும் நடத்துகிறார்கள் என்று அறிந்து கொண்டேன்.

கடந்த ஆண்டு ஃபெட்னா பெருவிழா நடத்தபட்ட போது பதிவர் பழமைபேசி, அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டு வந்தார்.  அதை படிக்க, படிக்க மேலும் ஏக்கம் தான் உண்டானது. சரி இந்த வருடம் எப்படியாவது போவதற்கு காசு தேத்த வேண்டும் என்று பார்த்தேன். அப்படி ஒரு வேளை சென்றால் இந்த முறை தொடர் பதிவு போடும் பெறுப்பை நாம் எடுத்து கொள்ளலாம் என நினைத்தேன். தமிழ்மணம் இந்த வருடம் பதிவர்களுக்கான பட்டறை வேறு நடத்துகிறார்களாம். அதற்கும் எதுனாச்சும் நம்மால் முடிந்த பங்களிப்பை தரலாம் என்று நினைத்திருந்தேன். மேலும் சென்றால் ஏதேனும் வாலண்டியர்  பொறுப்பை எடுத்து கொள்ளலாம் என்றும் இருந்தேன். ஊஹீம் வேலைக்கே ஆகலை. விழா நடப்பது  அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி வரும் வார விடுமுறையில் வருகிறது. அதனால் இங்கு டல்லாஸில் இருந்து விழா நடக்கும் கனெக்டிகட்டிற்கு விமான டிக்கெட்டை பார்த்தால் எனக்கு மயக்கம் தான் வந்தது. கிட்டத்தட்ட 500 டாலர். அதில்லாமல் தங்கும் செலவு வேறு. நண்பர்களிடம் கடன் கேட்கலாம் என்று பார்த்தால் அவர்களுக்கும் என் நிலையே. பொதுவாக இந்த நீண்ட வார இறுதியில் எங்காவது நண்பர்களுடன் செல்ல முடிவு செய்வோம். அவனவனுக்கு இருக்கும் பணமுடையில் ஒரு வருடமாக எங்குமே போகவில்லை.

பகுதி நேர வேலையே கிடைக்கும் திண்டாட்டமான வேளையில், 500 டாலரை வைத்து இரண்டு மாதம் ஓட்ட வேண்டிய நிலை. அதிலும் எனக்கு வரும் ஆராய்ச்சி உதவி தொகை  வேறு நின்று ஒராண்டு ஆகிவிட்டது. ஹ்ம்ம்ம்... அதனால்  இந்த வருடம் போக வாய்ப்பே இல்லை. இன்னொரு வருடம் போகலாம்...

பின்னர் இணைத்தது: நான் இந்த பதிவை போட வந்த காரணத்தையே முழுதாக மறந்து விட்டேன். சென்ற முறை நடந்த பெருவிழாவில், நன்றாக புலம் பெயர்ந்த தமிழர்களின் காசில் இங்கு வந்து, விழாவையே கொச்சை படுத்தும் நோக்கில் தமிழ் பத்திரிக்கைகள் எழுதின. அதிலும் ஜெயமோகன், அட்வைஸ் மழை பொழிகிறேன் பேர்வழி என்று சரியாக உளறி கொட்டி இருந்தார். இதை தடுக்க தேவை, ஃபெட்னாவிற்கு ஒரு அஃபிஷியல் ப்ளாக்கர் (அ) ப்ளாக்கர்கள். இதன் மூலம் உண்மையான தகவல்களை கொண்டு செல்ல முடியும். அந்த ப்ளாக்கர்களின் முகவரியை ஃபெட்னாவின் தளத்திலேயே இணைக்கலாம். அதன் மூலம் உண்மை தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்கலாம். இதை படிப்பவர்கள் யாராவது ஃபெட்னாவின் உயர் பொறுப்பில் இருப்பர், அவர்கள் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

Share