Monday, July 19, 2010

’மன்னாரு’ மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்

வட அமெரிக்காவிற்கு படிப்பிற்காக வந்திறங்கிய சில நாட்களில் ஒன்றை புரிந்து கொண்டேன். சகோதர பாசத்துடன் பழகும் இந்தியர்களைக் கண்டால் தூர விலகி நிற்க வேண்டும் என்பது தான் அது. அதிலும் முக்கியமாக 'மோடி' மாநிலத்தவரிடமிருந்து. நைச்சியமாக பேசி அவர்கள் கடைசியில் அவர்கள் வந்து நிற்பது, எம்.எல்.எம் எனும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றி தான் (தமிழர்களும் விதிவிலக்கல்ல). அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, அவர்கள் பேசும் போது விவாதிக்கவே கூடாது. சொல்லுவதற்கெல்லாம் 'ம்' கொட்டி கொண்டு, ஃபோன் நம்பரை மாற்றி கொடுத்து விட்டு வர வேண்டியது தான். இந்த எம்.எல்.எம் மாஃபியாக்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு 'கல்யாண பரிசு' தங்கவேலுவின் மன்னார் அன் கம்பெனி தான் நினைவுக்கு வரும். 

'குமுதம்', 'ஆனந்த விகடனி'ல் வரும் ஒரு பக்க கதைகள் பெரும்பாலானவை, மிக சுவாரசியமாக இருக்கும். எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் போது இரண்டு நாளுக்கு ஒரு முறை நூலகத்திற்கு செல்லும் வழக்கம் உண்டு. அப்போது வாரப்பத்திரிக்கை வாசிக்கும் போது, முதலில் படித்து முடிப்பது இது போன்ற ஒரு பக்க கதைகளும், சிறுகதைகளும் தான். சத்யராஜ்குமாரும் அப்படிபட்ட ஒரு சுவாரசியமான எழுத்தாளர் தான். தமிழ் இலக்கிய சூழலில், இவரைப் போன்ற எழுத்தாளர்கள் கண்டுகொள்ளப்படாதது மிகவும் வருத்ததிற்குரியது. சத்யராஜ்குமாரின் 'மோப்பக் குழையும்' கதையில், மேலே கூறப்பட்டது போல் சர்க்கரை தடவபட்டது போல் பேசும் தேசிகள், எம்.எல்.எம் வலைக்குள் எப்படி இழுத்து செல்கிறார்கள் என்பதை தெளிவுபட நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். கதையை படிக்க இங்கு செல்லவும்.

நான் எட்டாவது படிக்கும் போது 'குமுதத்தில்' 'ப்ளஸ் 1' என்ற சாப்ட் போர்ன் வகை கதை ஒன்று வந்தது. கிருஷ்ணா டாவின்ஸி எழுதியது என்று நினைக்கிறேன். நூலகம் சென்றதும் முதலில் அந்த தொடரை தான் படித்து முடிப்பது. மேலும் அதில் சில குஜால்டி ஓவியங்களும் இருக்கும் (பிஞ்சிலயே பழுத்தது. என்ன செய்றது!!) சத்யராஜ்குமாரின் 'சாமீய்' கதை அந்த சமயத்தில் தான் வந்தது போலும். அந்த கதை என்னால் மறக்கமுடியாதது. காரணம் கதையின் கன்டென்ட் அப்படி (ஹிஹி).

கிட்டத்தட்ட இருபது வருடமாக நாளிதழ்களில் எழுதியும், மிக சமீபத்தில் தான் சிறுகதை தொகுப்பான 'ஒரு வினாடியும், ஒரு யுகமும்', திருமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது. தற்போது வட அமெரிக்காவில் வசித்து வரும் சத்யராஜ்குமார், தன்னுடைய தளத்தில் 'துகள்கள்' என்னும் சிறுகதை தொடரை எழுதி வருகிறார். பெரும்பாலான  கதைகள் நமது இந்தியர்கள் அமெரிக்காவில் அடிக்கும் கொட்டங்களின் பகடியாகத்தான் இருக்கிறது. 'கல்கி' இதழ் நடத்திய பல சிறுகதை போட்டிகளில் வென்றுள்ளார். மேலும் 'சாவி' இதழ் வெளி வந்தவரை, அதில் தொடர்ச்சியாகவும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவரின் எழுத்து நடை சுஜாதாவை நகல் எடுப்பது போல் தோன்றினாலும், சுஜாதாவின் பாதிப்பு இல்லாது தமிழில் எழுதுவோர் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை. கதைகளில் அமெரிக்க பெண்களை  வர்ணிக்கும் போது, பல சமயங்களில் ரம்பா தொடைகள் வருகின்றன. இது அவரின் வயதை காட்டி கொடுக்கிறது. தன்னை யூத்தாக காட்டிகொள்ள விரும்பவேண்டும் என்றால், அனுஷ்கானந்தமாயியை வர்ணிப்பது பற்றி அவர் யோசிக்க வேண்டும்.

ஜெயமோகன் கூட, தொடக்கத்தில் 'குமுதத்தில்' ஒரு பக்க கதைகள் தான் எழுதி கொண்டிருந்தாராம். அதன் பின்னர் தான் தீவிர இலக்கியத்திற்கு மாறினாராம். ஆனால், அவரைப் போன்று மாறாது, தொடர்ந்து தன் பாணியில் எழுதி வரும் சத்யராஜ்குமாரை பாராட்டி தான் ஆக வேண்டும். சில இலக்கிய பிராந்துகள், இவரைப் போன்றவர்களின் எழுத்துக்களை படிப்பதை தீட்டு என நினைத்து வருகின்றனர். எல்லாவற்றையும் படித்து, நல்லனவற்றை உறிந்து கொள்வதில் தான் வாசகனின் திறமை இருக்கிறது. அந்த வகையில் சத்யராஜ்குமார் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை.

10 comments:

கோவி.கண்ணன் said...

//இந்த எம்.எல்.எம் மாஃபியாக்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு 'கல்யாண பரிசு' தங்கவேலுவின் மன்னார் அன் கம்பெனி தான் நினைவுக்கு வரும்.//

உண்மை !
:)

Prakash said...

யோவ் , நீ பிரபல பதிவர்ன்னா சத்யாராஜ்குமாருக்கே அறிமுகம் கொடுப்பியா?

( அப்பாடி,சோத்துல செங்கலை வெச்சது எவண்டான்னு சண்டைக்கு வாங்கப்பா)

Prakash said...

மத்தபடி , சீரியஸ் கமெண்ட்.

சத்யா , உங்கள் அனைத்து கதைகளையும் படித்துமுடித்து விட்டேன்.ஒருமுறை எனது ஃபேஸ்புக்கில் உங்கள் வலைதளத்தின் சுட்டியை பகிர்ந்தேன் , பொதுவாக வாசிப்பு பழக்கம் இல்லாதவர் கூட உங்கள் கதைகள் அதி சுவாரசியம் என்றார்கள்.

ஒரு சில கதைகள் உண்மையில் பிடிக்கவில்லை.சத்யாராஜ் குமார் என்றால் கடைசி லைனில் டுவிஸ்ட்டு இருக்கும் என்னும் அளவுக்கு ஒரே பாணி.பொதுவாகவே குடும்ப சூழல் , தான் தங்கியிருக்கும் நிலம் சார்ந்த கதைகளை எழுத்தாளர்கள் தந்து நான் படித்திருக்கிறேன்.

ஒரே மாதிரியான அமேரிக்க சூழல் ,சாஃப்ட்வேர் வேலை , கடைசி பத்தியில் திருப்பம் இத்தனையும் இருந்தும் உங்கள் கதைகள் திரும்ப வாசிக்கும் அளவுக்கு சுவையாக இருக்கின்றன.இன்னும் நிறைய எழுதவேண்டும் நீங்கள்.

Prasanna Rajan said...

@ கோவி கண்ணன்

நன்றி

@ ப்ரகாஷ்

ஒன் வில்லத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? யார் சொன்னது நான் பிரபல பதிவர்னு...

Cable Sankar said...

சத்யராஜ் குமார் ஒரு இண்ட்ரஸ்டிங்கான எழுத்தாளர் தான்.

கே.ஆர்.பி.செந்தில் said...

எம்.எல் .எம் ஆட்கள் வந்தாலே நான் பின்கால் பிடரியில்பட ஒரே ஓட்டம்தான்...

Prasanna Rajan said...

@ கேபிள் சங்கர்

உண்மை தான் கேபிளாரே. அவரின் மற்ற கதைகளும் சுவாரசியமானவை தான்

@ கே.ஆர்.பி.செந்தில்

எப்படியாவது சீக்கிரமாக பணக்காரன் ஆகவேண்டும் என்ற ஆசை தான், நம் ஆட்களை எம்.எல்.எம், ஃபைனான்ஸ் கம்பெனி என்று அலைய வைக்கிறது. ஆனாலும் இந்த எம்.எல்.எம் ஆட்கள் மூளைச்சலவை செய்வது, ஒரு உளவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தலைப்பு

@ ப்ரகாஷ்

கதையின் கடைசியில் ட்விஸ்டு வைப்பதை பற்றியும், அதற்கான காரணத்தையும் அவரின் இணையதளத்தில் உள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பா இதே அனுபவத்தை கோபிநாத் அட்லாண்டாவும் பதிவிட்டு குமுறினார்,அங்கிட்டும் அப்படித்தானா?உஷார்!!!!!!!!!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

சத்யராஜ்குமார் பற்றி எழுதி மீண்டும் நினைவூட்ட்யமைக்கு நன்றி,மறந்தே போய்விட்டேன் இவரை

சத்யராஜ்குமார் said...

அன்புள்ள ப்ரசன்னா,

என் கதைகள் குறித்த அறிமுகத்துக்கும் அவை பற்றிய உங்கள் மற்றும் நண்பர்களின் பார்வைக்கும் மிக்க நன்றி.

- சத்யராஜ்குமார்.

Share