Sunday, August 16, 2015

விலகும் திரை

2000த்தின் முற்பகுதியில் டி.டி.எஸ் இல்லையென்றால் திரையரங்கிற்கு ஆட்கள் வருவதில்லை என்று புரிந்து கொண்ட திரையரங்கு அதிபர்கள், சில பல இலட்சங்களை செலவு செய்து தங்களது ஆடியோ சிஸ்டங்களை புதுப்பித்தனர். இதனால் இரண்டாவது எடிட்டரான திரையரங்கு ஆப்பரேட்டர்களுக்கு கொஞ்சம் வேலை குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை ஏதேனும் பிண்ணனி இசை வரும் போது, இரண்டு பக்கம் இருக்கும் ஸ்பீக்கர்களை இரைய விட வேண்டிய அவசியமில்லை. ஃபிலிம் சுருளோடு இருந்த டி.டி.எஸ் கோடிங், அதற்கு சரியான ஸ்பீக்கர்களை தானாக இயங்கும் வசதியை கொண்டு வந்து விட்டது.

டி.டி.எஸ் வந்த புதிதில் ‘டி.டி.எஸ் டிஜிட்டலில் திரையிடப்படுகிறது’ என்று ஒரு துண்டு வாசகம் போஸ்ட்டரோடு ஒட்டப்படும். அந்த வாசகத்தினால் சில மொக்கை படங்களுக்கும் கூட்டம் அள்ளியது. ஒரு மதிய வேளையில் மாடியில் உலாத்தி கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு கட்டிட வேலை செய்து கொண்டிருந்த இருவர் பேச கேட்டது: “அந்த ஸ்க்ரீன் எந்திருக்கும் போது ஒரு பாட்டு போட்டான் பாரு, தம் தம்னு ஸவுண்டு அடிக்க, அதுலயே காது போச்சுப்பா.”


அந்த இசை என்னவென்று நன்றாக நினைவு இருக்கிறது. ஸ்வீடிஷ் குழுவான ‘Safri Duo’வின் ’Played-A-Live’. அந்த பாங்கோவும், எலக்ட்ரானிக் இசை கலந்த பாடல், ஒவ்வொரு முறை தேனி நேஷனல் திரையரங்கில் திரைச்சீலை எழும் போது ஒலிக்கும். அது மட்டுமல்லாமல், ’Europe’இன் ‘The Final Countdown’ பாடல் வெகு பிரபலம். அப்பாடலின் ‘Synth Guitar’ தொடக்கம், பல திரையரங்குகளில் உபயோகிக்க பட்டதோடு அல்லாமல் திருவிழா காலங்களில் நடக்கும் ‘Musical Chair’க்கும் உபயோகப்பட்டது.இவை மட்டுமல்லாமல், ‘Lipss Inc’இன் ‘Funky Town’, ‘Venga Boys’இன் ‘We Like to Party’, ‘Aqua’வின் ‘Lollipop’, ‘Doctor Jones’, 'Boney M'இன் 'Sunny', 'Queen'இன் ‘We Will Rock you' போன்ற பாடல்கள் திரைச்சீலை எழும் போது ஒலித்தன. இன்று வெகு சில திரையரங்குகளிலே அந்த திரைச்சீலைகள் இருக்கின்றன. அழுக்கு படிந்த அந்த வெல்வெட் சீலைகளை துவைக்கும் வசதியில்லை என்பதோடு மட்டுமல்லாமல், திரைச்சீலைகளை எழுப்ப உதவும் மோட்டார்கள் பழுதடைந்து விடுவதால் - இதற்கு எதற்கு மேலும், மேலும் காசை கொட்ட வேண்டும் என்று மொத்தமாக எடுத்து விட்டனர். டிஜிட்டல் திரையிடலுக்காக ஸ்க்ரீன்கள் ரெட்ரோஃபிட் செய்யப்படுவதும், இந்த திரைச்சீலைகள் காணாமல் போவதற்கு காரணம்.

இது போன்ற ‘Showmanship' காணாமல் போவது தான், திருட்டு வீடியோ பெருகுவதற்கு காரணமோ? 

Wednesday, June 18, 2014

ரீங்காரம்


ஒரு பாடலை காலையில் கேட்டு விட்டு அது இரவு தூங்கப் போகும் வரை உங்கள் மண்டையில் ரீங்காரம் இட்டு கொண்டிருக்கிறதா? You are not alone. இந்த வகையில் நான் மிகவும் மோசம். ஒரு பாடல் பிடித்து விட்டால் அது ரீப்பிட் மோடில் பல முறை ஓடும். அப்படி சமீபத்தில் என் மனதில் + ரீப்பிட்டில் ஓடிக் கொண்டிருக்கும் மூன்று பாடல்களை இங்கு எழுதுகிறேன்.

Kurt Hugo Schneider, Kevin Olusula - "Little Talks"

"Little Talks" பாடலை எழுதி இசையமைத்தது "Of Monsters and Men" என்ற ஐஸ்லாந்து இசைக்குழு. ஆரம்பத்தில் நன்றாக இருந்த பாடல், இங்கிருக்கும் அல்டெர்னேடிவ் எஃப்.எம் ஸ்டேஷன்களின் உபயத்தால் சலித்து போனது.  பல சமயங்களில் இது போன்ற பிரபலமான பாடல்களை மற்ற பேண்டுகள் கவர் செய்யும் போது, அவை ஒரிஜினலை விட சிறப்பாக இருக்கும். மிகச் சிறந்த உதாரணம் Paul McCartney-இன் 'Live and Let die' பாடலை 'Guns N' Roses' கவர் செய்தனர். எனக்கென்னவோ, மெக்கார்டினியின் ஒரிஜினலை விட கன்ஸ் அன் ரோசஸ் வெர்ஷன் தான் மிகவும் பிடித்திருந்தது. அதே போல் தான் இந்த பாடலும். ஒரிஜினலை விட மிகவும் அட்டகாசமாக இருப்பதற்கு காரணம் Kevin Olusula-வின் செல்லோவும், பீட் பாக்ஸ் திறமையும் தான். சமீபத்தில் கோகோ கோலா செய்த உருப்படியான வேலை இதுவாகத்தான் இருக்கும். 
Arctic Monkeys - "Do I wanna know?"

கேமரூன் க்ரோவ் இயக்கிய "Almost Famous" என்றொரு திரைப்படம் இருக்கிறது. அதில் கேமரூன் தான் 'ரோலிங்க் ஸ்டோன்ஸ்' இசை இதழின் நிருபராக இருந்த அனுபவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து எடுத்திருப்பார். ஒவ்வொரு க்ளாசிக் ராக் இசை ரசிகரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அதில் பாப் இசையை பற்றி ஒரு அருமையான வசனம் வரும். 

"Most of the time, the best stuff is the popular stuff. It's much safer to say popularity sucks, because that allows you to forgive yourself if you suck."

இதே போல் தான் ஆர்டிக் மன்க்கீஸ் என்றொரு பேண்ட் இருந்தது என்று எனக்கு தெரியும். அவர்களும் ஆறு வருடமாக பாடல்கள் வெளியிட்டு கொண்டிருந்தாலும், அவர்களின் சமீபத்திய ஆல்பமான 'AM' தான் முதன் முதலில் Billboard Hot 100-க்குள் வந்தது. ராக் ரசிகர்கள் 'Arctic Monkeys become a sellout" என்று கத்தினாலும் என்னை பொறுத்த மட்டில் அவர்களின் மிகச் சிறந்த ஆல்பம் இது. அதிலும் 'Do I wanna know' என்னுடைய ரீப்பிட் லிஸ்டில் சேர்ந்து விட்டது. பாடல் வரிகள் - Getting over your ex. Kongos - "Come with me now"

அக்கார்டியன் இந்திய சினிமா பாடல்களில் 60களிலும், 70களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. அதிலிருந்து வரும் ஒரு வகையான mellow-வான இசைக்காக ஆர்.டி.பர்மனிலிருந்து, எம்.எஸ்.வி வரை எல்லோரும் உபயோகித்தனர். அக்கார்டியனை நன்றாக உபயோகித்த பாடல், 'ஆராதனா'வில் வரும் 'மேரே சப்னோ கி ராணி'. ரோலிங்க் ஸ்டோன்ஸின் 'Backstreet Girl', ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீனின் '4th of July' போன்ற பாடல்கள் அக்கார்டியனின் இசையால் தான் ஹிட்டானது. இன்று வழக்கொழிந்து போன அதன் இசை, சமீபத்தில் 'ராஜா, ராணி' படத்தில் வந்த 'சில்லென ஒரு மழைத்துளி' பாடலின் ஆரம்பத்தில் எட்டி பார்த்தது.  இன்றைய பாப், அல்டெர்னேட்டிவ் எதிலுமே நீங்கள் அக்கார்டியனை கேட்பது கடினம்.

ஆனால், இன்றோ வட அமெரிக்காவில் உள்ள இசைக்கருவி கடைகளில் அக்கார்டியன் விற்பனை கொடிகட்டி பறப்பதற்கு காரணம்  'காங்கோஸி'ன் 'Come with me now' பாடல். ஜானி, ஜெஸ்ஸி, டைலன் மற்றும் டேனியல் காங்கோஸ் என்ற நான்கு தென் ஆப்ரிக்க சகோதரர்கள் சேர்ந்தமைத்தது தான் இந்த இசைக்குழு. இதை எழுதும் போதும் ரீப்பிட்டில் இந்த பாடல் பிண்ணனியில் ஒலித்து கொண்டிருக்கிறது. பாடல் வரிகள் - ராக் பாடல்களுக்கான க்ளிஷேவான சாத்தானுடன் செய்யும் ஒப்பந்தம் பற்றியே பேசுகிறது.  அந்த வித்தியாசமான கீபோர்டு சேர்ந்திசை, நான்கு சகோதரர்களின் எனர்ஜடிக் குரல் எல்லாமும் சேர்ந்து ஒலிக்கையில் அதற்குள் பாடல் முடிந்துவிட்டதா என்றே தோன்றும்.  ஒரு 10 தடவை இந்த பாடலை ரீப்பிட்டில் ஓட விட்டதால், பூரிக்கட்டையில் இருந்து சற்றே, மிகவும் சற்றே என் தலை தப்பியது. 


Wednesday, October 30, 2013

சோஜூ - சிறுகதை


"நீ சோஜூ குடித்திருக்கிறாயா" என்று கேட்டான் அறை+அலுவலக நண்பன். "இல்லை. என்ன அது?" என்றேன். "அது ஒரு கொரிய சரக்கு. அரிசியிலும், பார்லியிலும் செய்தது" என்றான். "எல்லா சரக்கும் அதில் தானே செய்கிறார்கள்" என்று கேட்டேன். "உண்மை தான். ஆனால் இதன் சுவையில் நிறைய வித்தியாசம் உண்டு. தண்ணீர் கலக்காமல், ஐஸ் போடாமல் அப்படியே குடிக்க வேண்டும். கிட்டத்தட்ட டக்கீலா போல. கொஞ்சம் சாகே(Sake) போல இருக்கும்" என்றான். சோஜூ இப்பொழுது தான் வட அமெரிக்காவில் பிரபலமாகிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

அன்றைய நாளில் அலுவலகத்தில் அத்தனை வேலை இல்லை. ஒரு மீட்டிங் முடிந்த பிற்பாடு, தொக்கி இருந்த நேரத்தில் நானும், அவனும் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒன்றும் மொடா குடிகாரன் அல்ல. எப்போதேனும் நண்பர்கள் குடிக்கும் போது குடித்தால் தான் உண்டு. நண்பனைப் போல் எனக்கு சுவை எல்லாம் பெரிதாக தெரியாது. ஏதோ ஒரு ஆங்கில தொலைக்காட்சி சிரீயலில் வந்த வசனம் -"யாரும் சுவைக்கு குடிப்பதில்லை". அதே போல் தான் நானும். 

நண்பன் அப்படி அல்ல. அவனுக்கு பிரபலமாக இருக்கும் பீர் ஆகாது. க்ராஃப்ட் பீர் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பான்.ஒரு முறை நான் ஒரு டொமஸ்டிக் பீர் ஒன்றை குடித்து கொண்டிருந்த போது, "எப்படித்தான் அதை குடிக்கிறாயோ? குரங்கு மூத்திரம் போல் இருக்குமே" என்றான். 'நீ குரங்கு மூத்திரத்தை குடித்திருக்கிறாயா' என்று நான்  எதிர் கேள்வி கேட்கவில்லை . "ப்ளூ வெல்வெட்" படத்தில் ஒரு பார் சண்டை காட்சி வரும். அதில் டென்னிஸ் ஹாப்பர் "Heineken is for Pussies. Drink Pabst*" என்பார். நண்பன் ஒவ்வொரு முறை க்ராஃப்ட் பீர் வியாக்கியானத்தை ஆரம்பிக்கும் போதும், இந்த வசனம் தான் என் நினைவுக்கு வரும்.

அவன் குடிக்கும் க்ராஃப்ட் பீர், ஒவ்வொரு பாட்டிலும் கிட்டத்தட்ட எட்டிலிருந்து பத்து டாலர் வரை இருக்கும். அவனைப் போல் என்னால் குடிக்கு அத்தனை செலவு செய்ய விருப்பமில்லை. "நம் இந்தியர்களுக்கு மதுவின் சுவை புரிவதில்லை. அதனால் தான் மீனைப் போல் குடித்துவிட்டு, ரோட்டில் கிடக்கிறார்கள்" என்று நண்பன் அரற்றுவான். நண்பன் ஒரு வகையில் மிகப் பெரிய ரசிகன். சமைக்கும் உணவிலிருந்து, அணியும் உடை வரை அவனின் உயர் ரக ரசனை தெரியும். 

வைன் டேஸ்டிங் ஒன்றுக்கு என்னை ஒரு முறை இழுத்து சென்றான். எழுபது டாலர் நுழைவு கட்டணம். அது வரை நான் வைன் குடித்ததில்லை. எல்லோரும் வைனை குடித்து விட்டு, கொஞ்சம் நேரம் வாயில் கொப்பளித்து விட்டு, ஒரு குவளையில் துப்பிக் கொண்டிருந்தனர். 'காசு கொடுத்து குடிக்கும் வைனை எதுக்கு துப்ப வேண்டும்' என்று நினைத்துக் கொண்டு, ஒரே மடக்கில் பல வைன் கோப்பைகளை ஏற்றி கொண்டிருந்தேன். எனது வாய் வறுத்த கடலையையோ, முந்திரியோ தேடிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு வெறும் சீஸ் தான் சைட் டிஷ்ஷாக வைத்திருந்தனர். அன்றைய தினத்திற்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது, வைன் எனக்கு ஆகாதென்று. ஒரு வகை வாயுத் தொல்லையை அது கிளப்பி விட்டிருந்தது. பத்தாதற்கு எனக்கு 'Lactose Intolerance' வேறு இருக்கிறதென்று டாக்டர் சொன்னார். பால் சம்பந்தப்பட்ட எந்த பொருளும், என் வயிற்றில் பர மண்டல வாயுவை கிளப்பி விடுமாம். "சொல்லப் போனால், உங்கள் வயிறு இருக்கும் நிலைக்கு, நீங்கள் எந்த வகை ஆல்கஹாலையும் அருந்தக் கூடாது" என்று ஒரு மிகப் பெரிய குண்டை போட்டார் அந்த டாக்டர்.

ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு வந்த போது, நண்பன் ஒரு கையில் பீரும், மற்றொரு கையில் சீஸ் துண்டும் வைத்து கொண்டிருந்தான். "இந்த சாக்லெட் ஸ்டவுட்டும், மன்ச்சகோ சீஸூம் என்னவாக இருக்கிறது தெரியுமா" என்று வெறியேற்றினான். அந்த பீர் பாட்டிலை பிடுங்கி அவன் தலையில் அடிக்கத் தோன்றவில்லை. மாறாக ஃப்ரிஜ்ஜில் இருக்கும் அத்தனை பீரையும் டாய்லட்டில் ஊற்றி விடத் தோன்றியது. ஏதொவொரு மன உறுதியில் ஆறு மாசம் என் நாக்கில் எந்த வகை ஆல்கஹாலும் படாமல் ஓட்டி விட்டேன். அப்பொழுது தான் சோஜூவை பற்றிய பேச்சை எடுத்தான் நண்பன்.

நாங்கள் வசிக்கும் பென்ஸில்வேனியாவும், தமிழ்நாடும் ஒன்று. மாநில அரசு கடைகளுக்கு மட்டும் தான் சாராயம் விற்க அனுமதி உண்டு. வித்தியாசம் என்னவென்றால் அட்டாச்டு பார் கிடையாது. புதிய வகை சரக்கு எதுவும் அவ்வளவு சீக்கிரம் கடைக்கு வந்து விடாது. ஏதாவது புதிதாக முயற்சிக்க வேண்டுமென்றால், ஒரு மணி நேரம் பயணம் செய்து பக்கத்து மாகாணமான நியூ ஜெர்சிக்கு போக வேண்டும். அங்கு கணக்கிலடங்காத சாராய பொட்டிக்குகள் (Boutique) உண்டு. ஆம்! பொட்டிக்குகள். நேர்த்தியாக, வகைவாறாக அடுக்கப்பட்ட பாட்டில்கள். கடையின் நான்கு ஓரங்களிலும், பீர், வைன் அல்லது ஏதேனும் ஒரு டேஸ்டிங் நடந்து கொண்டிருக்கும். ட்ரேப்பிஸ்ட் மத குருக்களால் வடிக்கப்படும் ஒரு வகை பெல்ஜிய பீர், இங்குள்ள கடைகளில் மட்டுமே கிடைக்கும். வந்தவுடன் விற்று தீர்ந்து விடும். கொஞ்சம் க்ளீஷேவாக இருந்தாலும், அந்த கடைகளுக்குள் நுழைவது சொர்க்கலோகத்திற்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

ஒரு சனிக்கிழமையில் நானும், நண்பனும் நியூ ஜெர்சிக்கு பயணம் செய்ய ஆயத்தமானோம். ப்ரிஜ்வாட்டர் கோவிலுக்கு போய் தோசை, பொங்கல் சாப்பிட்டு விட்டு 'பொட்டிக்'குக்கு போவதாக முடிவு. நண்பன் முழு மப்பேற்ற முடிவு செய்திருப்பதால் நான் 'டெஸிக்னேட்டட் டிரைவராக' மாறி போனேன். சரக்கடித்து வண்டி ஓட்டி மாட்டிக் கொண்டால், லைசென்ஸ் சஸ்பெண்ட் மட்டுமல்லாது, ஆறு மாசத்திலிருந்து ஒரு வருஷம் வரை ஜெயிலில் 'சாசேஜ்' சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், விசா கேன்சலானதால் நாடு கடத்தி விடுவார்கள்.

ஒன்றரை மணி நேரம் பயணித்து, கோவிலுக்கு போய் சாமிக்கு வணக்கம் வைத்து விட்டு, வயிற்றை ரொப்பிய பிற்பாடு, ஒரு பொட்டிக்கில் காரை நிறுத்தினோம். நண்பன் நேராக டேஸ்டிங் நடந்த இடத்திற்கு, ஒரு ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக் கொண்டு ஓடினான். ஒரு நாலைந்து பீர்களை சுவைத்து விட்டு, அதில் இரண்டை வாங்கினான். சோஜூ இருந்த வரிசைக்கு போனோம். துடைத்து வைத்தது போல் காலியாகியிருந்தது. என்னவென்று கடை சிப்பந்தியை கேட்டதற்கு, அறிமுக ஆஃபராக சோஜூவை பாதி விலைக்கு கொடுத்ததால், காலையிலேயே விற்று தீர்ந்து விட்டதாய் சொன்னான். "நீங்கள் ஆர்டர் கொடுத்துவிட்டு செல்லுங்கள். இரண்டொரு வாரத்தில் ஸ்டாக் வந்துவிடும்" என்றான். நண்பனுக்கோ நாக்கரித்து கொண்டிருப்பதால், "நாங்கள் வேறொரு கடைக்கு போகிறோம்" என்று சொன்னான். கடை சிப்பந்தி நக்கலாக ஒரு புன்னகை செய்தான். அப்பொழுதே தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்த இரண்டு கடைகளிலும் ஸ்டாக் காலி. நான்காவது கடையில் எங்கள் கண் முன்னால் கடைசி பாட்டிலை, ஒரு ஹிஸ்பானிய பெண் வாங்கிச் சென்றாள். ஐந்தாவது கடைக்கு போன போது, எங்களுக்கு முன்னால் ஒரு கொரிய பெரியவர் காலி ஷெல்ஃப்பை வெறித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் கிம்ச்சி எனப்படும், முட்டைகோஸ் ஊறுகாய் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன. அவை தான் சோஜூவுக்கு சரியான் சைட் டிஷ் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, அவரும் பல கடைகளுக்கு சென்று இங்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம். "இப்போது வரும் சோஜூ ஸ்ட்ராங்காகவே இருப்பதில்லை. என்ன கருமத்துக்கு சர்க்கரை வள்ளி கிழங்கில் இருந்தெல்லாம் வடிக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று புலம்பினார் பெரிசு. அடுத்த இரண்டு கடைகளிலும் இதே நிலை. நான் எரிச்சலடைய ஆரம்பித்திருந்தேன். ஒரு வழியாக ஏழாவது கடையில் இரண்டு பாட்டில்களுக்கு ஆர்டர் கொடுத்தான் நண்பன். ஒரு வாரத்தில் வந்து விடுமாம்.

வீட்டிற்கு திரும்ப வரும் போது கடும் மழை. ஒரு பாரில் வண்டியை நிறுத்தினோம். ஆனியன் ரிங் எனும் வெங்காய பஜ்ஜியுடன், ஒரு சோடா ஆர்டர் கொடுத்தேன். நண்பன் "ட்ராஃப்ட்டில் என்ன பீர் இருக்கிறது" என்று பார் டெண்டரிடம் கேட்டான். "பட்வைஸர், மில்லர், மில்லர் லைட், கூர்ஸ், கூர்ஸ் லைட்" என்று வரிசையாக டொமஸ்டிக் பீர்களின் பெயர்களை அடுக்கினான் பார் டெண்டர். "மைக்ரோ ப்ரூ, க்ராஃப்ட் எதுவுமில்லையா?" என்று கேட்டான் நண்பன். பார் டெண்டரோ 'இது தான் இருக்கிறது. குடித்தால் குடி' என்று மெளனமாக நண்பனை பார்த்தான். "சரி! ஒரு மில்லர் லைட் கொடுங்கள்" என்றான். பீர் வந்தது. வெகு நேரமாக க்ளாஸை வெறித்து கொண்டிருந்தான் நண்பன். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, மெதுவாக க்ளாஸை வாயருகே கொண்டு சென்றான். முதல் மடக்கை வாய் கொப்பளிப்பது போல் உள்ளிறுத்தினான். அவனுடைய வாய், கண், மூக்கு அத்தனையும் அஷ்ட கோணலானது. ஆலகால விஷத்தை விழுங்குவது போல் அந்த முதல் மிடறை விழுங்கினான். அன்றைய நாளின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு, என் கண் முன்னே நடக்க ஆரம்பித்திருந்தது. 

Share