Sunday, February 15, 2009

கி.இரா என்னும் கதைசொல்லி


எனக்கும் கி.இராவின் எழுத்துகளுக்குமான அறிமுகம் பதின் பருவத்தில் தான் ஆரம்பித்தது. பள்ளியில் படிக்கும் போது, வருட ஆரம்பத்திலே, தமிழ் புத்தகங்களில் வரும் கதைகள் அனைத்தையும் படித்து விடுவது வழக்கம். அப்படி தான் மேல்நிலை இரண்டாம் ஆண்டு புத்தகத்தில் படித்த கதை தான் 'கதவு'. கி.இரா எனப்படும் கி. இராஜநாரயனின் முதல் கதை மாதிரி அது தெரியவில்லை. அது தான் புத்தகத்தில் இருந்த முதல் கதை. அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. இப்படி தான் ஆரம்பித்தது எனக்கும் அவர் எழுத்களுக்குமான தொடர்பு.

அதன் பிறகு அவ்வப்போது குமுதத்திலும், ஆனந்த விகடனிலும், அப்பா எப்பொழுதோ வாங்கின இந்தியா டுடே இலக்கிய மலர், தினமணி பொங்கல் மலர், போன்றவற்றில் வந்த அவர் கட்டுரைகளையும் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் இணைந்த பிறகு ஒரு நாள் தற்செயலாக எனது பல்கலைக்கழக நூலகத்தில் தூழாவிய போது கிடைத்தன பொக்கிஷங்கள். ஆம். கி.இராவின் அனைத்து புத்தகங்களும் ஒரு சேர கிடைத்தன. முக்கியமானவை அவரின் முழு சிறுகதை தொகுப்பும், கட்டுரை தொகுப்புகளும் தான்.

இடைச்செவலில் ஒரு சம்சாரி குடும்பத்தில் பிறந்த கி.இரா தான் எழுத ஆரம்பித்தது ஒரு விபத்து என்றே கூறுகிறார். 'கரிசல் தாத்தா' என்று அன்போடு அழைக்க படும் அவர் பிறந்த அதே ஊரில் தான் கு.அழகிரிசாமியும் பிறந்து உள்ளார். இருவரும் பால்ய நண்பர்கள். தமிழ் கடித இலக்கியங்களில் இன்றளவும் ஒரு சிறந்த படைப்பாக கருதப்படுவது கி.இராவும், அழகிரிசாமியும் எழுதி கொண்ட கடிதங்கள்.

சிறு வயது முதல் நோயாளியாகவே இருந்த அவர் காச நோயில் இருந்து மீண்ட பிறகு தன் இலக்கிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். இன்றளவும் கரிசல் இலக்கியங்களில் முன்னடியோக கருதப் படுவது கி.இராவின் படைப்புகளே. அதன் காரணம் அவர் தன் படிப்புகளில் பதிய வைத்திருக்கும் சம்சாரியின் (விவசாயியின்) வாழ்க்கை.

எனக்கு மிகவும் பிடித்த அவரின் சிறுகதை 'மின்னல்'. ஒரு நகர பேருந்தில் தன் தாயுடன் ஏறும் ஒரு சிறு கைக் குழந்தை, அங்கு சோம்பி போயிருக்கும் சூழலை மாற்றி அந்தப் பேருந்தில் உள்ளவர்களை எப்படி மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறதே கதை. வெறும் இரு பக்கங்கள் மட்டுமே நீழும் கதை. இது போன்று தமிழ் சிறுகதையில் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் சிறுகதையை நான் இது வரை படித்து இல்லை.

கி.இராவின் கட்டுரைகள் பெரும்பாலும் சம்சாரியின் வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் மகிழ்ச்சியும், பிரச்சனைகளையும் நமக்கு காட்சி படுத்தும். சிறிது நையாண்டியோடு சம்சாரியின் வாழ்க்கையை அணுகி இருப்பார். அவரும் இரசிகமணி தி.க.சி'யும் பால்ய நண்பர்கள். தி.க.சியை பற்றிய கட்டுரைகள் அவர்கள் இருவரின் நட்பை பற்றி மட்டும் அல்லாது, அப்போதைய தமிழகத்தின் சமகால அரசியலைப் பற்றியும் நமக்கு தெரிவிக்கிறது.

கி.இராவின் 'கிடை' குறுநாவலை அம்ஷன் குமார், 'ஒருத்தி' எனும் பெயரில் குறும் படமாக எடுத்தார். நாவலை ஒட்டி அமைந்து இருந்தது அவரின் திரைக்கதை. கி.இராவின் முக்கியமான படைப்புகள் 'பிஞ்சுகள்', 'கோபல்லபுரம்', 'கோபல்லபுரத்து மக்கள்'. துரதிஷ்டவசமாக இவை மூன்றையும் இது வரை நான் படிக்கவில்லை. சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்ற போது இவை மூன்றையும் வாங்க நினைத்த போது, கையில் பணம் இல்லாமல் கனத்த மனதோடு அறை திரும்பினேன். புத்தகங்களுக்கும், பசப்போடு சுண்டி இழுக்கும் விபச்சாரிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று அப்போது தான் உணர்ந்தேன்.

கி.இராவை படிக்கும் போது எழும் கரிசல் நெடி இன்று அவர் வாழ்ந்த பூமியில் இல்லை. அதனால் தன் என்னவோ, பாண்டிச்சேரியில் குடியமர்ந்து விட்டார். இன்று பாண்டிச்சேரி பல்கலைக்கழக கவுரவ பேராசிரியராக இருக்கிறார். அவரின் சில அரசியல் தொடர்புகள் சஞ்சலம் ஏற்படுத்தினாலும் தமிழ் இலக்கிய உலகின் விண்மீன் கி.இரா என்பது மறுக்க இயலாத உண்மை.

Share