Saturday, April 10, 2010

ஃபெட்னா 2010

நான் யு.எஸ்ஸிற்கு வந்து இறங்கிய இரண்டாம் நாள் சுதந்திர தினம். அந்த வார இறுதியில் எங்களுக்கு அருகில் இருந்த பெருநகரான டல்லாஸில் (Dallas) சுதந்திர தின பெருவிழா கொண்டாடபட்டது. அந்த பெருவிழாவிற்கு நாங்கள் வாலண்டியர்களாக சென்றதால் எங்களுக்கு நுழைவு கட்டணம் எதுவும் இருந்திருக்கவில்லை. அப்போது தான் அங்கு இருந்த தமிழ் சங்கங்களை பற்றி அறிந்து கொண்டேன். ஆனால் அதில் மெம்பர் ஆவதற்கு கிட்டத்தட்ட 50 டாலர் வரை கட்ட வேண்டிய சூழல். ஒரு மாணவன் என்ற முறையில் அது மிகவும் அதிகம். நான் மாதச் சம்பளம் வாங்குபவனாக இருந்தால், 200 டாலர் கூட கொடுத்து இணைந்திருப்பேன். பின்னர் ஃபெட்னா (FeTNA - Federation of Tamil  sangams of North America) என்ற அமைப்பு வட அமெரிக்காவில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒன்றினைக்கிறது என்றும், அவர்கள் வருடம் ஒரு முறை பெருவிழா ஒன்றையும் நடத்துகிறார்கள் என்று அறிந்து கொண்டேன்.

கடந்த ஆண்டு ஃபெட்னா பெருவிழா நடத்தபட்ட போது பதிவர் பழமைபேசி, அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டு வந்தார்.  அதை படிக்க, படிக்க மேலும் ஏக்கம் தான் உண்டானது. சரி இந்த வருடம் எப்படியாவது போவதற்கு காசு தேத்த வேண்டும் என்று பார்த்தேன். அப்படி ஒரு வேளை சென்றால் இந்த முறை தொடர் பதிவு போடும் பெறுப்பை நாம் எடுத்து கொள்ளலாம் என நினைத்தேன். தமிழ்மணம் இந்த வருடம் பதிவர்களுக்கான பட்டறை வேறு நடத்துகிறார்களாம். அதற்கும் எதுனாச்சும் நம்மால் முடிந்த பங்களிப்பை தரலாம் என்று நினைத்திருந்தேன். மேலும் சென்றால் ஏதேனும் வாலண்டியர்  பொறுப்பை எடுத்து கொள்ளலாம் என்றும் இருந்தேன். ஊஹீம் வேலைக்கே ஆகலை. விழா நடப்பது  அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி வரும் வார விடுமுறையில் வருகிறது. அதனால் இங்கு டல்லாஸில் இருந்து விழா நடக்கும் கனெக்டிகட்டிற்கு விமான டிக்கெட்டை பார்த்தால் எனக்கு மயக்கம் தான் வந்தது. கிட்டத்தட்ட 500 டாலர். அதில்லாமல் தங்கும் செலவு வேறு. நண்பர்களிடம் கடன் கேட்கலாம் என்று பார்த்தால் அவர்களுக்கும் என் நிலையே. பொதுவாக இந்த நீண்ட வார இறுதியில் எங்காவது நண்பர்களுடன் செல்ல முடிவு செய்வோம். அவனவனுக்கு இருக்கும் பணமுடையில் ஒரு வருடமாக எங்குமே போகவில்லை.

பகுதி நேர வேலையே கிடைக்கும் திண்டாட்டமான வேளையில், 500 டாலரை வைத்து இரண்டு மாதம் ஓட்ட வேண்டிய நிலை. அதிலும் எனக்கு வரும் ஆராய்ச்சி உதவி தொகை  வேறு நின்று ஒராண்டு ஆகிவிட்டது. ஹ்ம்ம்ம்... அதனால்  இந்த வருடம் போக வாய்ப்பே இல்லை. இன்னொரு வருடம் போகலாம்...

பின்னர் இணைத்தது: நான் இந்த பதிவை போட வந்த காரணத்தையே முழுதாக மறந்து விட்டேன். சென்ற முறை நடந்த பெருவிழாவில், நன்றாக புலம் பெயர்ந்த தமிழர்களின் காசில் இங்கு வந்து, விழாவையே கொச்சை படுத்தும் நோக்கில் தமிழ் பத்திரிக்கைகள் எழுதின. அதிலும் ஜெயமோகன், அட்வைஸ் மழை பொழிகிறேன் பேர்வழி என்று சரியாக உளறி கொட்டி இருந்தார். இதை தடுக்க தேவை, ஃபெட்னாவிற்கு ஒரு அஃபிஷியல் ப்ளாக்கர் (அ) ப்ளாக்கர்கள். இதன் மூலம் உண்மையான தகவல்களை கொண்டு செல்ல முடியும். அந்த ப்ளாக்கர்களின் முகவரியை ஃபெட்னாவின் தளத்திலேயே இணைக்கலாம். அதன் மூலம் உண்மை தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்கலாம். இதை படிப்பவர்கள் யாராவது ஃபெட்னாவின் உயர் பொறுப்பில் இருப்பர், அவர்கள் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

Friday, April 9, 2010

ஸ்வாமியும், நண்பர்களும் - ஒரு நாடக முயற்சி

ஆர்.கே.லக்‌ஷ்மணின் கைவண்னத்தில் ஆர்.கே.நாராயன்
அக்டோபர் 10, 2009. நண்பனுடன் சங்கம் திரையரங்கில் ‘ஈரம்’ பார்த்துவிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை கிளம்பிய மற்றொரு நண்பனை வழியனுப்ப உட்கார்ந்து இருக்கும் வேளையில் லைட்டாக ஹிந்துவை மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.  அது மெட்ராஸ் ப்ளேயர்ஸ் வழங்கும் "Swami and Friends" நாடகத்தின் விளம்பரம்.  உடனே அவனிடம் கேட்டேன் “இன்னைக்கு சாயங்காலம் என்ன புடுங்கப் போற”. உடனே அவன் “ஒரு ஆணியும் புடுங்கறதா இல்லை” என்றான். “அப்ப சரி. ஒரு நாடகம் பார்க்கப் போகலாம” என்று கேட்டேன். “அதான் டெய்லி டி.வியில போடறாங்களே” என்றான். ”இல்லை மச்சி! இது மேடை நாடகம்டா” என்றேன். “ஆமாம் மச்சி!! நானும் இந்த எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் நாடகம் எல்லாம் பார்க்கனும்” என்றானே பார்க்கலாம். அப்போது தான் கொஞ்சம், லைட்டா மெர்சில் ஆனேன். உள்மனது சொல்லியது, ‘இத அப்பிடியே மைண்டெய்ன் பண்ணு,  ஏன்னா இவனைத்தேன் மொளகாய் அரைக்கனும்’ என்று. “இதுவும் காமெடி நாடகம் தான் மச்சி, ஆனால் இங்கிலீஷ்ல” என்றேன். அவன் முகம் நான் கடைசியாய் சொல்லிய வார்த்தையை, சொல்லி இருக்கக் கூடாது என்று சொல்லாமல் சொன்னது (எப்பா டேய் எத்தனை தடவை சொல்லுவ!!) ஒரு வழியாக அவனை தாக்காட்டி, சரவண பவனில் சாப்பாடு வாங்கி கொடுத்து, மயிலாப்பூர் சிவகாமி பெத்தாட்சி ஆடிட்டோரியத்திற்கு அழைத்து சென்றேன். இந்த பெத்தாட்சி ஆடிட்டோரியத்தை கண்டுபிடிப்பது, வைக்கோலில் கோணி ஊசியை கண்டுபிடிப்பது போல இருந்தது. ஒரு ஆட்டோகாரருக்கும் தெரியவில்லை. ஒரு கார் ட்ரைவரிடம் கேட்டுக் கொண்டு போனேன். ஆடிட்டோரியத்தை அடைந்த பின் தான் தெரிந்தது, ஏன் என்று நாங்கள் மட்டும் தான் அனேகமாக நடந்து வந்திருப்போம் என்று நினைக்கிறேன். மிச்சம் அத்தனையும் கார்கள். பார்க்கிங் நிரம்பி வழிந்தது.

நிற்க. நான் ஏன் இந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்று சென்றேன்? ஒரு சுருக்கமான கொசுவர்த்திச் சுருள். ஆறாவது படிக்கையில் எல்லோருடைய வகுப்பில் இருந்தும், பள்ளியில் நடக்கும் கலாச்சார விழாவிற்காக நாடகம் போட வேண்டும் என்று கட்டளை. என் நண்பன் தான் க்ளாஸ் லீடர்.  ஒரு மொக்கை நாடகமாக “மாடர்ன் திருவிளையாடல்” என்று ஒரு ’ஸ்கிரிப்ட்’ (நோட் பண்ணுங்கப்பா) பேசப்பட்டது.  லீடர் நண்பன் தான் டைரக்டர். எனக்கு பூதகணம் வேடம் (நண்பனாடா நீ!! நற நற....). ஒரு வழியாக ரிகர்சல் முடித்து எங்கள் க்ளாஸ் டீச்சரிடம் நடித்துக் காட்ட, அவர் அமைதியாக சிரித்துக் கொண்டே இதையா போடப் போறீங்க என்று கேட்டார். ‘ஏற்கனவே நம்ம க்ளாஸூக்கு இன்ஸ்பெக்‌ஷன்ல கெட்ட பேரு, இதை போட்டு மானத்தை வாங்காதீங்க. எப்பிடியும் நீங்க சொதப்புவீங்கன்னு தெரியும், அதனால நானும் ஒரு நாடகம் ரெடியா வைச்சிருக்கேன்’ என்றார்.

 அது தான் ஆர்.கே நாராயணனின் ‘Swami Wants to be Beaten'. அந்த கதை ஒரு வித ஸ்பின் ஆஃப் தான். மூலப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, ஒரு புதிய சமகாலக் கதை உருவாக்கப்பட்டது. இது எனக்கு ஆர்.கே. நாராயணின் படைப்புகளை பல காலத்திற்கு பிறகு படித்த போது தான் தெரிந்தது. அதிலும் எனக்கு ரெண்டு டயலாக் பேசும் ஸ்வாமியின் க்ளாஸ்மேட் வேடம். ஸ்வாமியாக எனது வகுப்பு தோழி ஒருத்தி நடித்தாள். ரிகர்ஸல் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் நாடகம். அப்போது அவள் சொந்தகாரர் ஒருவருக்கு கல்யாணம், அன்று வர முடியாது என்றதால் வேறு யாராவது ஸ்வாமியாக நடிக்க வேண்டிய நிலை. எல்லாரிடமும், அவள் கேட்க அம்புட்டு பயலும் ஜகா வாங்கி விட்டனர். அவள் அகஸ்மாத்தாக என்னிடம் கேட்க, நானும் சரி என்று விட்டேன். ஏன்னா அந்த பொண்ணு மேல எனக்கு ஒரு கண்னு (பிஞ்சிலயே பழுத்தது). அதற்கு பின் தான் தெரிந்தது, எல்லாரும் ஜகா வாங்கிய காரணம். 20 நிமிட நாடகத்தில் எனக்கு மட்டும் நாலரை பக்க ஆங்கில  டயலாக் (வைசாங்களா ஆப்பு). இதில் முகத்தில் எக்ஸ்பிரஷன் வேறு காட்ட வேண்டும். எனக்கு வந்ததெல்லாம் ‘பே’ என்ற அரண்ட எக்ஸ்பிரஷன் தான். ஒவ்வோரு முறை ரிகர்சல் செய்யும் போதும், நான் எக்ஸ்பிரஸ்ன் காட்ட எனக்கு அம்மாவாக நடித்த வகுப்பு தோழி சிரித்து சிரித்து அவளுக்கு வயிறு புண்ணானது தான் மிச்சம். ஒரு வழியாக எங்கள் ‘மாடர்ன் மால்குடி டேஸ்’ அரங்கேற்றம் ஆனது. உண்மையை சொன்னால் என்னுடைய அரண்ட முகம், ஸ்வாமியின் ஒரிஜினல் எக்ஸ்பிரஷனுடன் ஒத்து போனதாக என்னுடைய வகுப்பாசிரியை தெரிவித்தார். அதை பின்னர் “மால்குடி டேஸ்” மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட போது தெரிந்து கொண்டேன். எங்கள் நாடகத்திற்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் எங்கள் ’நல்ல நேரம்’ , முதல் பரிசு வாங்கிய ’பிரம்மாண்ட’ தயாரிப்பான ‘அசோக சக்ரவர்த்தி’ தமிழ் நாடகத்தில் நிறைய பேர் நடித்ததால், இரண்டாம் பரிசையே தூக்கி விட்டார்கள். சோ, எனக்கு பிடித்த கதை கதை நாடகமாக்க பட்டதால் தான் பார்த்தே ஆக வேண்டும் என்று ஆவல் உண்டானது. இதை ஒரு வரியில சொல்லித் தொலைச்சிருக்கலாமே. அதுக்கு இத்தனை அனாத்தா.

சரி. பேக் டு த ஒரிஜினல் ஸ்டோரி. அந்த கூட்டத்தில் சத்தியமாக நானும், என் நண்பனும் தனித்து தெரிந்தோம். அத்தனையும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் கூட்டம். நண்பன் காதருகில் வந்து, “நீ எல்லாம் அமெரிக்க ரிட்டர்ன்னு வெளிய சொல்லிக்காத” என்றான். அதற்கு காரணம் என் ஆடை, ஒரு அழுக்கு ஜீன்ஸ், கப்படிக்கும் இரண்டு பாக்கெட் வைத்த காட்டன் சட்டை. கப்புக்கு காரணம் சத்தியமாக அக்டோபரில் அடித்த சென்னை வெயில். டியோ ஸ்ப்ரேயையும் தாண்டி அடித்தது. என்னால் சகித்து கொள்ள முடியாதது எதுவென்றால், ஒன்னுக்கும் ஆகாத ‘ஸப்வே’ வெஜிடபள் சாண்ட்விச்சை 120 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கே கொஞ்சம் குளறுபடி ஆகிக் கொண்டிருந்தது அங்கு. நாங்களோ ஆன் த ஸ்பாட்டில் வாங்கலாம் என்று வந்திருந்தோம். கிடைக்காது என்றே தோன்றியது. என் நண்பன் வெயிட்டாக ஒரு பிட்டை போட்டான், “சார்!! நாங்க எல்லாம் ஸ்டுடெண்ட்ஸ். காட்டாங்குளத்தூர்ல இருந்து இந்த ட்ராமாவை பாக்குறதுக்காக வந்தோம். இல்லைன்னா எப்படி சார்”. ஒரு முறை அந்த டிக்கெட் கொடுப்பவர் என்னையும், என் நண்பனையும் உற்று பார்த்தார். அவர் தான் அமைப்பாளர்களில் ஒருவர் போலும். “இருங்க தம்பி!! உங்களுக்கு கண்டிப்பாக தர்றேன்” என்றார். ஞாநி ஒருமுறை பேசிய போது ”இங்கிலீஷ் ட்ராமானா 500 ரூவா கொடுக்கக் கூட ரெடியா இருக்காங்க. அதே ஆளுங்க தமிழ் ட்ராமானா 50 ரூவா கூட தர மாட்டேன்றாங்க” என்றார். அது உண்மை தான் 1000 ரூபாய் டிக்கெட்கள் மிகச் சாதாரணமாக விற்று தீர்ந்திருந்தன. 100 ரூபாய்க்கு பின்னால் சீட்டில் தான் இடம் கிடைக்கும்.

ஒரு வழியாக அந்த நல்ல மனிதர், 200 ரூபாய்க்கு 2 டிக்கெட் கொடுக்க, இருப்பதிலேயே கடைசி இருக்கையில் அமர்ந்தோம்.  எங்கள் பக்கத்தில் ஒரு காதல் ஜோடி. பெண் புறா என் அருகில் அமர்ந்திருந்தது. சரி அது மேட்டர் அல்ல. கதைக்கு வருவோம். ஆர்.கே.நாராயணன் தான் உருவாக்கிய கற்பனை நகரான “மால்குடி”யின் முதல் படைப்பாக வெளிவந்த புத்தகம் தான் "Swami and Friends" (ஸ்வாமியும் நண்பர்களும்). 10 வயது ஸ்வாமியும், அவன் நண்பர்கள் எப்போதும் டீக்காக ஆடை உடுத்தும் ராஜம், மற்றும் கையில் கதை போன்ற ஒரு கம்பை வைத்து கொண்டு சுற்றும் மணி, ஆகியோரை வைத்து கற்பனையான சரயு நதியின் பிண்ணனியில் பிண்ணப்பட்ட கதை. ஸ்வாமி படிக்கும் ஆல்பர்ட் மிஷன் ஹை ஸ்கூல், மால்குடி ரயில் நிலையம், ஆனந்த பவன் ஹோட்டல் போன்ற விடயம் நிறைந்த கதை பிண்ணனிகள், ஸ்வாமியின் தந்தை, பாட்டி, ஸ்வாமியின் பள்ளி ஆசிரியர்கள் போன்ற சுவாரசியம் நிறைந்த கதை மாந்தர்கள், இவையெல்லாம் இணைந்து எழுத்தில் நிகழ்த்தபட்ட ரசவாதம் தான் “ஸ்வாமியும், நண்பர்களும்”. ஏற்கனவே தூர்தர்ஷனில் ஆர்.கே.லக்‌ஷ்மனின் அழகான மால்குடி கார்ட்டூன்களைத் தாங்கி வரும் டைட்டில்களுடன் ஒளிபரப்பான “மால்குடி டேஸ்”, அந்த ரசவாதத்தை என்னுள்ளும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நாடகம் எப்படி இருக்கிறது என்று அறிய ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். உண்மையைச் சொன்னால் எதிர்பார்த்தை விட மிக அருமையான நாடகமாக இருந்தது.

தூர்தரஷனில் ஒரு 15 எபிசோட்கள் வந்த “ஸ்வாமியும், நண்பர்களும்” நாடகத்தை வெறும் 90 நிமிடங்களில் நிகழ்த்தி காட்டி அசத்தி விட்டனர். மானஸி சுப்ரமணியம் எழுதிய நாடகமாக்கத்தை, அருணா கணேஷ் ராம் இயக்கி இருந்தார். ஸ்வாமியாக உஜ்வல் நாயர்,  ராஜமாக அஜய்குமார் ராமச்சந்திரன், மணியாக நடித்தவர் ஸ்யாம் சுந்தர். ஸ்யாம் சுந்தரின் உடல் மொழி அபாரம். எனக்கு பிடித்த ஆசிரியர் ஸாமுவேல் கதாபாத்திரத்தில் ஷங்கர் சுந்தரம் (’ஆய்த எழுத்தில்’ சித்தார்த்தின் தந்தையாக வருவாரே. அவர் தான்), பி.சி.ராமகிருஷ்ணா, முகமது யூசுப் போன்றவர்கள் மற்ற ஆசிரியர்களாக நடித்து இருந்தனர். நன்றாக போய்க் கொண்டிருந்த நாடகத்தின் ஒரு காட்சியில், மால்குடி வழியாக நடக்கும் சுதந்திர போராட்ட ஊர்வலக் காட்சியில், தேவையில்லாமல் பாரதியின் ‘வந்தேமாதரம்’ கவியை உள்நுழைத்து இருந்தனர். பாரதியின் கவிதையைப் பற்றி அல்ல பிரச்சனை. ஆனால் அது உபயோகப் படுத்தப்பட்ட இடம் நெருடலாகவே இருந்தது. அந்த கவிதையை அவர்கள் பாடிய போது தான் என்னருகில் இருந்து மெதுவாக குறட்டை சத்தம் வந்தது. நண்பன் நன்றாக தூங்கி விட்டிருந்தான்.

நாடகத்தில் இருந்து ஒரு காட்சி. நன்றி: தி ஹிந்து
மற்றபடி மூலப் பிரதியான புத்தகத்தில் இருந்து காட்சிகள் திறமையாக எடுத்தாளப் பட்டு, சரியான முறையில் சுருக்கப்பட்டு தந்து இருந்தனர். வெறும் கஞ்சிரா இசை தான் பிண்ணனி. இசை அமைத்தவர் சுந்தர் குமார். நாடகம் முடிந்த பின் அமைப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா சொல்லிய போது தான் தெரிந்தது, அன்று ஆர்.கே.நாராயணனின் 104வது பிறந்த தினம் என்று. உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாக கழிந்த மாலைப்பொழுதில் நண்பன் சோர்வைடந்து தூங்கி விட்டானே என்று தான் வருத்தம். நாடகம் முடிந்து வெளியில் வந்து கொண்டிருந்த போது, என் பக்கத்தில் இருந்த பெண் புறா, ஆண் புறாவிடம் என்னைப்  பற்றி “That guy stinks like fish" என்று என் காதுபடக் கூறினாள். அதற்கு அவன், "Ya actually he did me a favor. Or else you would have never leaned on me so close" என்றான். அவள் அவனை செல்லமாக குத்தினாள். ஏதோ என்னால முடிஞ்சது என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டு நண்பனுடன் நகர்ந்தேன்...

Tuesday, April 6, 2010

கி.ராவுடன் 'கேணி’யில் நடந்த சந்திப்பு

அது ஆச்சு ஆறு மாசம். ஆனாலும் என்னைக் கவர்ந்த, நான் ஆதர்சித்த எழுத்தாளுமையைப் சந்தித்ததை  பதிவாகப் போடவில்லையென்றால் எப்படி என்று உள் மனம் உறுத்திக் கொண்டே இருந்தது. அதனாலேயே எழுதுகிறேன். 'கேணி' பற்றி நான் யு.எஸ்ஸில் இருந்த போது பதிவுலகம் வாயிலாகத் தான் தெரிந்து கொண்டேன்.அங்கு செல்ல முடியவில்லையே என்று கவலைபட்டுக் கொண்டு இருந்தேன். செப்டம்பரில் இந்தியா வர வேண்டிய சூழல் இருந்ததால், என் சொந்த ஊரான தேனிக்கு சென்று விட்டு ஒரு வாரம் நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை வந்தேன்.  கே. கே நகரில் இருக்கும் எனது நண்பரும், தேசிய விருது பெற்ற குறும்படமான 'கர்ண மோட்சத்தை' இயக்கியவருமான முரளி மனோகரை சந்திக்க சென்ற போது அடுத்த 'கேணி' சந்திப்பில் கி.ரா பேசுவதாக தெரிவித்தார். ஒரு நாள் முன்னதாகவே சென்னையில் இருந்த கிளம்ப வேண்டிய திட்டத்தை இதற்காக தள்ளி போட்டேன்.

கூடுவாஞ்சேரியில் இருந்த நண்பன் வீட்டில் இருந்து கிளம்பிய அந்த மாலையில், தனது தாத்தாவை காணச் செல்லும் சிறுவனின் குதூகலத்துடன் இருந்தேன். கே. கே நகரில் இருந்த முரளியின் அறையில் இருந்து நான், அவர் மற்றும் அவரின் நண்பரும் படத்தொகுப்பாளருமான நெடுநாயகத்துடன், முரளியின் வண்டியில் ட்ரிப்லஸ் அடித்தோம். அந்த ரம்மியமான சூழல் அந்த மாலை நேர சந்திப்புக்கு ஏதுவாகவே இருந்தது. ஞாநியுடன் பட்டு வேட்டி, அங்கவஸ்திரம் சரசரக்க, தனது துணைவியார் கணவதியுடன் வந்து இருக்கையில் அமர்ந்தார் கி.ரா என்ற கி. ராஜநாராயணன். கி. ராவைப் பற்றிய சம்பிரதாயமான அறிமுகம் ஒன்றை ஞாநி தந்துவிட்டு, கி. ராவை பேச அழைத்தார். அவர் பேச அழைத்தது நாட்டுப்புற கலைகள் பற்றி என்று தான் நினைக்கிறேன் (செலக்டிவ் அம்னீஷியா... வேற யாருக்கு எனக்குத்தேன்). ஆனால் கி. ரா அதோடு ஓட்டினார் போல் வேறு வேறு தலைப்புகளைப் பற்றியும் பேசினார். அவர் பெரும்பாலும் பேசிய தலைப்புகளையும், கருத்துகளையும், அவருடைய 'கி.ரா கட்டுரைகள்' தொகுப்பில் படித்து விட்டதால் தான் என்னவோ அவர் பேசியது நினைவில் இல்லை. இதுக்கு தான் முதலியே சொன்னேன், (என்னைச் சொன்னேன்) நிறைகுடமாகப் போகாதே என்று. அவர் பேசியனவை பெரும்பாலும் தாயாதிச் சண்டைகள், நாட்டுப்புற கதைகள் உருவாகும் விதம், அவரும் கழனியூரனும் தொகுத்த 'மறைவாய்ச் சொன்ன கதைகள்' மற்றும் முக்கியமாக அவர் 'கதவு' கதைப் பற்றியும் பேசினார்.
  
ஆனால் முக்கியமான பகுதி கேள்வி, பதில் பகுதி தான். நிறைய அன்பர்கள் கேள்வி கேட்க ஆர்வ மிகுதியால் முந்தினர். இது போன்ற பொது நிகழ்வுகளில் கேள்விகள் கேட்கும் போது குறைந்த பட்சம் ஒரு முன்னேற்பாடுடன் வந்து இருக்கலாம்.  ஒரு பெண் அன்பர், தன்னை சிறு வயதில் சொல்லப்பட்ட பேய் கதைகள் மிகவும் பாதித்து விட்டதாகவும் அதனால் கதை சொல்லுதலில் பேய் கதைகள் இருக்கக் கூடாது எனவும் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக வாதிட்டார். கி. ரா அவர்கள் அது கதை சொல்லலின் ஒரு பகுதி தான் என்றும், 'இல்லையின்னா இந்த பொண்டு பொடுசுகளை எப்பிடித் தான் சமாளிக்கிறது' என்றும் கூறினார். இந்த பதிலால் சமாதானம் ஆகாத பெண் அன்பர், திரும்ப திரும்ப தான் சொல்லியதையேக் கூறி வாதிட்டுக் கொண்டிருந்தார். நானும், முரளியும் காண்டாகி 'யக்கா உக்காருக்கா' என்று சவுண்டு விடவும் அருகில் இருந்த அன்பர்கள் சிரிக்க அந்த பெண் அன்பர் ஒரு முறை திரும்பி முறைத்து விட்டு, 'ஆத்து, ஆத்து' என ஆத்திக் கொண்டு இருந்தார். கடைசியில் ஞாநியும், பாஸ்கர் சக்தியும் அந்த பெண்ணை உட்கார சொல்லி கூறியதும் தான் உட்கார்ந்தார். 

நானும் பலமுறை கேள்வி கேட்க எழுந்தும் எனக்கு முன்னாடி இருந்து யாரேனும் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு ஐந்து முறை கடந்த பின், சரி இனி என்ன கேட்பது என நான் உட்கார்ந்து இருக்க, ஞாநி 'பிரசன்னா (ஆர்குட் பழக்கம்) நீங்க கேளுங்க' என்றார். நான் கேட்ட முதல் கேள்வி, "உங்களின் 'கிடை' நாவலை திரு. அம்ஷன் குமார் 'ஒருத்தி' என்ற திரைப்படமாக எடுத்தார். பல படைப்பாளிகள் தங்களது படைப்பை திரை வடிவமாக பார்க்கும் போது ஏமாற்றங்களையே சந்திக்கின்றனர். நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்". அதற்கு ஒரு முதிர்ந்த படைப்பாளி என்ற முறையில், "அது ஏற்கனவே அச்சுல வந்துருச்சு. அச்சுல எனக்கு திருப்தியா இருந்துச்சு. அதை அவர் எப்பிடி வேணுமினா உபயோகப் படுத்திக்கட்டும். ஏன்னா அந்த படம் அவரோட படைப்பு"  என்று நச்சென்று ஒரு பதிலைத் தந்தார். சந்தர்பத்தைப் பயன் படுத்திக் கொள்ள நினைத்த நான் உடனே மற்றொரு கேள்வியைக் கேட்டேன், "உங்களின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் சம்சாரிகள் தான். இன்றைய நிலையில் விவசாயம் பார்க்க ஆள் இல்லை, காட்டன் டவல் கம்பெனிகளும், ஏலக்காய் எஸ்டேட்களும்  விவசாய கூலி ஆட்களை கொத்திக் கொண்டு போகின்றன (தேனி மாவட்டத்தில் இப்படித் தான்). இப்படி நிலையிருக்க இன்றைய சம்சாரிகளின் நிலையை எப்படி பார்கிறீர்கள்" என்று கேட்டேன்.  அதற்கும் இரத்தின சுருக்கமாக, "இதற்க்கு ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது, ஒரு நாள் முழுவதும் பேச வேண்டிய தலைப்பு" என்று பதில் கூறினார்.

ஞாநி நான் கேட்ட கேள்வியை முன் வைத்து மேலும் ஒரு கேள்வியை கேட்டார். அந்த சந்திப்பில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், கி.ரா சொல்லிய கதை தான். நம்மிடையே எத்தனையோ கதைகள் இருக்க, ஹாரி பாட்டரை நம் குழந்தைகள் படித்து கொண்டு இருக்கின்றனவே என்ற கேள்விக்கு அவர் கூறிய கதை தான், பெருவிரல் குள்ளன் கதை. பெருவிரல் குள்ளன்  என்ற ஒருவன் இருந்தானாம். ஒரு முறை காட்டிற்கு புல்லறுக்க சென்ற ஒரு பாட்டியிடம், "ஏய் பாட்டி, என்னை வீட்டுக்கு கூட்டி போயேன்" என்றானாம். யாரடா கூப்பிடுகிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்த பாட்டியிடம், "இந்தா கீழ இருக்கேன் பாரு" என்றானாம். "பாட்டி எனக்கு பசிக்குது, வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் கொஞ்சம் சாப்பாடு போடேன்" என்றானாம்.  பெருவிரல் தண்டி தானே இருக்கான் இவன் என்ன சாப்பிட போறான் என்று நினைத்தாளாம் பாட்டி. பார்த்தால் அவன் சாப்பிடுகிறானாம் பத்து படி அரிசியை . சரின்னு பார்த்த பாட்டி இவனுக்கு சாப்பாடு போட வயல் வேலைக்கு போச்சாம். ஒரு நாள் மேலுக்கு முடியாத பாட்டியால வேலைக்கு போக முடியல. பார்த்த குள்ளன் "நான் வேலைக்கு போறேன் பாட்டி"ன்னு அத்தசோடு கதிர் அருவாளை தூக்கிட்டு போனானாம்.

அன்னைக்கு வயல்ல அறுப்பு. அங்க இருந்த பண்ணையார் இந்த பெருவிரல் தண்டி குள்ளன் என்னடா வேலை பாக்க போறாருன்னு நெனைச்சாராம். ஆனா அவன் பாக்கானாம் பத்து ஆளு வேலையை. வேலை முடிஞ்சவுடனே உனக்கு என்ன கூலி வேனுமிண்டு குள்ளன் கிட்ட கேட்டாராம் பண்ணையார். எனக்கு என்னோட ரெண்டு மூக்கு துவாரம் அளவுக்கு நெல் குடுத்தா போதும்னானாம். சரின்னு ஒரு ரெண்டு நெல்லை தூக்கி அந்த துவாரத்தில வச்சாராம் பண்ணையார். ஆனா அது குபுக்குன்னு உள்ள போயிருச்சாம். கொஞ்சம் கொஞ்சமா நெல்லை தூக்கி போட்டு பார்க்குறாரு. வேலைக்கு ஆகலை. அம்பாரி அம்பாரியா நெல்லை கொட்டுறாரு, ஒரு மூக்கு தான் நெறைஞ்சு இருக்கு. வாக்கு தவறாத நம்ம பண்ணையார் "அடுத்த மூக்குக்கு உள்ள நெல்லை அடுத்த போகத்துல தரேன்னு சொன்னாராம்". ஆனா மனசாட்சியுள்ள நம்ம குள்ளன் பண்ணையாருக்கு கொஞ்ச நெல்லை மூக்கை சீந்தி கொடுத்து, மிச்ச நெல்லை வூட்டுக்கு எடுத்துகிட்டு போனானாம். பாட்டியும், குள்ளனும் கொஞ்ச காலத்துக்கு நெல்லுச் சோறு பொங்கி சாப்பிட்டாங்க. 

நம்ம குள்ளனுக்கு ரொம்பவே சலிப்பு வந்திருச்சு, அதே சமயம் கல்யாண ஆசையும் வந்துரிச்சு. பாட்டிகிட்ட சொன்னானாம், "பாட்டி, நான் ராசாவோட பொண்ணை கட்டிக்கலாம்னு இருக்கேன்"னானாம். கொஞ்சம் மிரண்ட பாட்டி, "உன் இஷ்டப்படி செய் ராசா"ன்னு சொல்லி கட்டு சொத்தை கொடுத்து அனுப்புனாளாம். குள்ளன் போற வழியில ஒரு ஏரி இருந்துச்சாம். அம்பாரி நெல்லை உறிஞ்ச அதே மூக்குல ஏரியை மூக்குல உறிஞ்சுகிட்டனாம். போற வழியில, குள்ளன் ராசகுமாரிய கட்டிக்கப் போறத தெரிஞ்ச நரி கூட்டம் "நாங்களும் வரோம்"ன்னு சொல்ல குள்ளன் அதுங்கள அவன் எடது காதுல ஏத்திகிட்டானாம். அதே மாதிரி வரோம்னு சொன்ன எறும்பு கூட்டத்தை வலது காதுல ஏத்திகிட்டானாம். 

அரண்மனைக்கு வந்த குள்ளன் ராசாகிட்ட தான் வந்த விஷயத்தை சொல்ல ராசா கடுப்பாகிட்டாராம். "யாருடா அங்க. இந்த குள்ளனை சேவலை விட்டு கொத்த விடுங்கன்னராம்" ராசா. உடனே குள்ளன் எடது காதுல இருந்த நரி கூட்டத்தை எறக்கி விட்டானாம். அதுங்க இருந்த சேவலை எல்லாம் தொம்சம் பண்ணி சாப்பிட்டுருச்சு. கோவம் தலைக்கு ஏறுன ராசா "யானையை விட்டு இவனை மிதிக்க விடுங்கடே"ன்னாராம். குள்ளன் எறும்புங்க எல்லாத்தையும் எறக்கி விட, அதுங்க யானைங்களோட காதுல ஏறவும், யானைங்களுக்கு மதம் பிடிக்க அதுங்க அரண்மனையை தொம்சம் பண்ணிருச்சுங்க. "ஈட்டியை வைச்சு இவன கூறு போடுங்கடே"ன்னாராம் ராசா. உடனே குள்ளன் மூக்கை சீந்த, அவன் மூக்குல இருந்த ஏறி அரண்மனையை நெரப்பிடுச்சாம். யாருடா இவன் பெரிய ஜகதலப்ரதாபனா இருப்பான் போல இருக்கேன்னு பயந்த ராசா, தான் மகளை குள்ளனுக்கு கட்டி கொடுக்க சரின்னாராம். உடனே குள்ளன் ஒரு அழகான ராசகுமரானா மாறி, ராசகுமாரியை கல்யாணங் கட்டிகிட்டு, தனக்கு சோறு போட்ட பாட்டியையும், அரண்மனையில கூட்டி வைச்சு ராச்சியத்தை ஆண்டானாம்.

இப்படி தான் முடித்தார் எனதருமை 'கதைசொல்லி'. லஞ்சத்தை பற்றியும் ஒரு கதை சொன்னார். அதெல்லாம் எழுதுனா பதிவு எழவத்திரெண்டு மொழத்துக்கு போயிரும். இது போன்ற நிகழ்வுகள் நடப்பது தான் படைப்பாளிகளை வாசகனுக்கு அருகில் கொண்டு வரச் செய்கிறது. அதே சமயம், இந்த நிகழ்வை நடத்தும் ஞாநிக்கும், பாஸ்கர் சக்திக்கும் ஒரு வேண்டுகோள். இந்த நிகழ்வுகள் சரியான முறையில் ஆவணப் படுத்த வேண்டும். வீடியோ அல்லது ஆடியோ பதிவுகள் ஆக்கப் பெற வேண்டும். அதற்கு முயற்சி எடுப்பார்கள் என்று நம்புகிறேன். 

நிகழ்வு முடிந்ததும் அங்கு விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த தன்னுடைய புத்தகங்களில் கையெழுத்து இட்டு தந்தார் கரிசல் தாத்தா. நான் "கோபல்ல கிராமம்","கோபல்லபுரத்து மக்கள்" இரண்டு புத்தகங்களையும் வாங்கினேன். ஒன்றில் வெறும் கி. ரா என்று கையெழுத்து இட்டு கொடுக்க, "உங்கள் முழு பெயரையும் எழுதுங்களேன்" என்று கேட்டேன். முழு பேரா இதோ என்று அவர் எழுதிய அவரின் முழு பெயர் "ராயங்கல ஸ்ரீ கிருஷன ராஜ நாராயண பெருமாள் ராமனுஜம்". என்னுடன் இப்போதும் இருக்கும் பொக்கிஷம் அந்த கையெழுத்து... 

Sunday, April 4, 2010

தமிழ்மணம் நட்சத்திர வாரம்


இந்த வாரம்... நட்சத்திர வாரம்னு பெரிய பீடிகையோடு ஆரம்பிக்க ஆசை தான். ஆனாலும் அடக்கி வாசி என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்கிறது. இருந்தாலும் ரெம்பவே அடக்கமா இருந்துட்டேன். அதனால தான் பாருங்க, இந்த நட்சத்திர வாரத்தில் அறிமுகம் போட்டவுடனே, 'யார்ரா அது, இவனையெல்லாம் நட்சத்திரமா போட்டது. எங்கிட்டு இருந்து புடிச்சாயங்க இவனை' என்று  பல குரல்கள் எழுந்து இருக்கும்.

பதிவு ஆரம்பித்த புதிதில் நீண்ட காலம் எழுதும் பதிவர்கள், பிரபல பதிவர்கள் எழுதும் பதிவுகளை பார்க்கும் போது மிரட்சி தான் மிஞ்சும். சரி நாமும் எதாவது எழுதுவோமே, என்று எழுதினால் ஒருவரும் வந்து எட்டி பார்க்க மாட்டார்கள். ஓட்டு எல்லாம் பல பதிவுகளுக்கு சுத்தமாக விழுந்ததே கிடையாது. ஒரு சிலர் எல்லாம் அவர்களின் பதிவிற்கு 40 , 50 என ஓட்டுகள் வாங்கிக் கொண்டு இருக்க, என்னுடைய பதிவுகள் 15 வோட்டு வாங்குவதே ஒரு பெரிய ரெகார்ட் (15 வோட்டுகள் - பாலு மகேந்திரா கதை நேரம்). என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமையான வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வாரை பற்றி எழுதிய போது ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை.


இந்த வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஓடி விட்டது. என் அறிமுகத்தில் கூறியது போல் சென்ற வருடம் ஒரு 25 பதிவுகள் தான் எழுதி இருப்பேன். அதில் எனக்கு பிடித்த பதிவுகள் என்றால் ஒரு மூன்று பதிவுகள் மட்டுமே தேறும். கி.ராவைப் பற்றி நான் எழுதிய பதிவு, தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படம் பற்றிய பதிவு மற்றும் 'ஏன் தமிழ் சினிமா இன்னும் உலக ரசிகர்களை சென்றடையவில்லை' என்ற பதிவு. மற்றவை அவ்வப்போது போகிற போக்கில் எழுதியவை என்றாலும் என் அளவில் சிறப்பானவை தான். அதிக வரவேற்பில்லாததற்கு காரணம், மற்ற பதிவர்கள் பதிவுகளை பிரபலமாக்க கூறப்பட்ட வழிமுறைகளை நான் கிஞ்சித்தும் மேற்கொள்ளவில்லை. 

சொந்த பிரச்சனைகள், என்னுடைய ஆராய்ச்சி சார்ந்த கடுப்புகள், வேலை கிடைக்குமா என்ற கேள்விக்குறிகள் இவையெல்லாம் சேர்ந்து அழுத்தும் நிலையில் வந்து உள்ளது இந்த நட்சத்திர வார அழைப்பு. பத்தாதிற்கு சமீபத்தில் ஏற்பட்ட பணமுடை காரணமாக கையில் இருந்த லேப்டாப்பை நண்பன் ஒருவன் நல்ல விலைக்கு கேட்க விற்று விட்டேன். நானோ என் எழுத்தோ இன்னும் முதிர்ச்சி அடையாத ஒரு நிலையில், என்னை விட பிரபல பதிவர்கள் மற்றும் அதிகமாக படிக்கப் பெறும் பதிவர்கள் இருக்க எந்த அடிப்படையில் நான் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப் பட்டேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமே என்ற நப்பாசை வேறு. ரெம்ப காலமாக ஆள் இல்லாத கடைக்கு டீ ஆற்றி கொண்டிருக்கிறாயே என்று வேறு நண்பன் ஒருவன் கேட்டு விட்டான்.

பின்னூட்டங்களுக்கும், ஒட்டுகளுக்கும் ஏங்க ஆரம்பித்தால் ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று எனக்கு கை வந்தவற்றை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன். நட்சத்திர அறிமுகத்தில் என்னுடைய  வாழ்வின் முக்கியமான ஒரு நான்கு ஆண்டுகளை பற்றி குறிப்பிட மறந்து விட்டேன். சிறு வயதில் இருந்து வாசிப்பு பழக்கம் இருந்தாலும், ஏதோ இந்த வலைப்பதிவை எழுதும் அளவு சிறிதளவு மொழியறிவு ஏற்பட்டது பொறியியல் படித்த அந்த நான்கு ஆண்டுகள் தான். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இருந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியில் (தற்சமயம் அண்னா பல்கலைகழகம், திருச்சி) தான் 2002-2006 வரை இளங்கலை உயிரிதொழில்நுட்பவியல் (Biotechnology) படித்தேன். பல்கலைகழக நூலகம் தான் பல நேரங்களில் எனக்கான வாசஸ்தலமாக இருந்தது. பெரும்பாலும் தமிழ்த்துறை மாணவர்கள் அதிகம் உபயோகிக்காத புத்தம் புதிய புத்தகங்கள் அங்கு இருக்கும்.  அந்த புத்தகங்கள் தான் அப்போதைய இலக்கிய பசியை தீர்த்தன.

பாடத்தை படித்தேனோ இல்லையோ, (ஆனா அரியர் வைக்காத அரை மனிதன் நான்) புத்தகங்கள் தான் நானே விரும்பி ஏற்படுத்தி கொண்ட தனிமையை விலக்கின. என்னடா நெம்ப ஓவரா இலக்கியவாதி மாதிரி பேசுறானேன்னு கடுப்பாவாதீங்க. மைக் கிடைச்சிருக்கு இல்ல, பேசி தானே ஆவனும். இந்த சமயத்தில் நான் எழுத ஆரம்பித்த புதிதில் என்னை ’ஊக்கு’வித்து  பின்னூட்டம் போட்டு, ஓட்டு போட்ட சக வலைப்பதிவாளர்கள் கார்த்திகேயன், திருவாளர் ஹாலிவுட் பாலா, நண்பன் ப்ரகாஷ், கேபிளார், சென்ஷி, கனவுகளின் காதலன்  மற்றும் பதிவுகளை படித்த, பின்னூட்டமிட்ட அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்ள கடமைபட்டுள்ளேன்.

சிக்கிருச்சு சிறுத்தை. மக்கா ஒரு கை பாத்திருவோம்... (நல்லாத் தானடா இருந்த??!!)

Saturday, April 3, 2010

அடையாளம் அற்ற நிலை


நம்மில் பல பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. நம்முடைய சொந்த அடையாளங்கள் வாழ்வில் பல சமயங்களில் திரித்து புரிந்து கொள்ளப் படுகிறது. அதிலும் என்னுடைய அடையாளம் அநியாயத்திற்கு நார் நாராக பல சமயங்களில் கிழி பட்டிருக்கிறது.

 சமீபத்தில் இந்தியா சென்ற போது, பொழுது போகாத (எல்லா நாளும் பொழுது போகலை. வெட்டி பில்டப்பு) ஒரு சண்டேயில் அம்மா சந்தைக்கு போய் வர சொன்னார்கள். வீட்டில் என்னைப் போலவே வெட்டியாக இருக்கும் என் தம்பியையும் அழைத்துக் கொண்டு போனேன். தேனி வாரசந்தையைப் பற்றி இந்த இடத்தில சொல்லியாக வேண்டும். பொள்ளாச்சிக்கு அடுத்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய வாரச் சந்தை இது தான். நானும் தம்பியும் காய்கறிகள் எல்லாம் வாங்கி முடித்து கடைசியாக பழம் வாங்கலாம் என்று நடந்து வந்து கொண்டிருந்தோம். "சார். ஒரு கிலோ சப்போட்டா 15 ரூவா சார்" என்று குரல் கேட்டது. நானும் தம்பியும் கண்டுகொள்ளாமல் நடந்து கொண்டிருந்தோம். "சாப். ஏக் கிலோ சப்போட்டா பந்த்ராஹ் ருப்யா" என்று அதே குரல் ஹிந்தியில் கேட்டது. திரும்பி பார்த்தவுடன் அந்த கடைக்காரன் "ஆவோஜி, இதர் ஆவோ, ஏக் கிலோ சிர்ப் பந்த்ராஹ் ரூபாய் மே" (இங்க வாங்க. ஒரு கிலோ சப்போட்டா வெறும் 15 ரூவா தான்) என்றான். எனக்கு என்றால் செம கடுப்பாகி விட்டது. பத்தாதிற்கு என் தம்பி வேறு சிரிக்க ஆரம்பித்து விட்டான். நான் அவனிடம் போய் "யோவ், எதுக்குயா என்ன பார்த்து ஹிந்தியில சொன்ன. நான் இந்த ஊர்க்காரன் தான்" என்றேன். "ஆளைப் பார்த்தா நம்ம ஊருக்கு புதுசா நகைக்கடை போட வந்த சேட்டுங்க மாதிரி இருந்தீங்களா. அது தான் சார் ஹிந்தியில பேசுனேன்" என்றான். சரியென்று வேறு வழியில்லாது அவனிடம் சப்போட்டா வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். வீடு வரும் வரை என் தம்பி முகத்தில் ஒரு நக்கலான புன்முறுவல் தவழ்ந்து கொண்டே இருந்தது. வீடு வந்ததும் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்லி வெடிச் சிரிப்பு சிரித்தான். எனக்கு அவனை முறைத்து கொண்டே சிரிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 


இப்படித் தான் சொந்த ஊரிலேயே அந்த ஊர்காரனாக  ஏற்று கொள்ளாத கொடுமை நடந்தது. இது மட்டுமல்ல பல அடையாள மறுப்பு சம்பவங்கள் எனக்கு நடந்து உள்ளன. பிளஸ் 2  முடிக்கும் வரை தேனியிலேயே குப்பை கொட்டி விட்டதால் ஒன்றும் அத்தனை பெரிய சம்பவங்கள் நடந்து விடவில்லை. ஆளாளுக்கு 'செவத்த பையன்' என்று அழைத்ததைத் தவிர வேறு ஒன்றும் வித்தியாசங்கள் நடைபெறவில்லை. கல்லூரி சேர்ந்த முதல் வாரத்திலேயே இந்த அடையாள பிரச்சனை ஆரம்பித்து விட்டது. வழக்கமான ரேகிங் விசாரிப்புகளுடன் தொடங்கிய முதல் வாரத்தில் என் சீனியர் ஒருவர் "டேய் இவனைப் பார்க்க ஜப்பான்காரன் மாதிரி இல்லை" என்று சக சீனியரிடம் கூற, 'ஜப்பான்' என்ற பெயர் நிலைத்தது. ஒரு வாரத்திலேயே அந்த பெயர் எல்லா முதல் ஆண்டு மாணவ, மாணவிகளிடம் பரவி விட்டது. ஆங்கில வகுப்புக்கு வந்த பேராசிரியர், அறிமுக வகுப்பின் போது எல்லா மாணவர்களிடம் அறிமுகப் படுத்த சொல்லி கேட்டு கொண்டு இருக்கும் போது என் முறை வர, நான் எழுந்திருக்கும் முன்னமே 'ஜப்பான்' என்ற கோஷம் வகுப்பறை முழுவதும் நிறைந்து இருந்தது. சிரித்துக் கொண்டே என் ஆங்கில பேராசிரியர் " அட ஏம்பா, அவனை 'ஜப்பான்'னு சொல்றீங்க. பையனை பார்த்த மேகலாயா, அஸ்ஸாம்ல இருந்து வந்தவன் மாதிரி இருக்கான்" என்று சொல்ல வகுப்பறை முழுவதும் திரும்ப சிரிப்பில் அதிர்ந்தது.

இது அதோடு முடியவில்லை. பல சீனியர்களும் என் நண்பர்களும் நான் வட இந்தியன் என்றே நினைத்தனர். என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் அசைவம் வெட்டிக் கொண்டு இருக்க, சிறு வயதில் இருந்தே சைவ பட்சினி ஆகி விட்டதால் 'ஐயரே' என்றும் ஸ்நானப் ப்ராப்தி பெற்றேன். நான்காம் ஆண்டு வரை என் பெயரை சொன்னால் பல பேருக்குத் தெரியாது. 'ஜப்பான்' என்றால் தான் என் சக ஆண்டு மாணவர்களுக்கு தெரியும். கல்லூரி முடிந்ததும் 'அப்பாடி, இந்த பிரச்சனை இனிமேல் கிடையாது' என்று நினைத்து கொண்டேன். சென்னையில் அடுத்த ஒரு வருடம் நல்லாத் தான் போச்சு. எம்.எஸ் செய்ய ஆசைப்பட்டு அதற்காக மெனக்கெட்டு பல பிரம்ம பிரயத்தனங்கள் செய்து ஒரு வழியாக விசா இன்டர்வியு வரை வந்து க்யூவில் நின்று கொண்டு இருந்தேன். (கீழே கூறப்படும் சம்பவத்திற்கும் ஆய்த எழுத்து திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்ள கடமைபட்டுள்ளேன்) எனக்கு பின்னல் நின்று இருந்த ஒரு பிகர் "Are you from Andhra?" என்று கேட்க, நான் அசடு வழிந்து கொண்டே "No I am from Tamilnadu" என்று கூறினேன். அதுக்குப்புறம் அவ என்கூட பேசவே இல்லை :( . அந்த பிகருக்கு பதில் சொல்லி விட்ட திரும்பியவுடன் "நீம் எவூருப்பா" என்று சுந்தர தெலுகில் முன்னாடி நின்றிருந்த நடுத்தர வயது அம்மாள் கேட்க, எனக்கு தெலுகு தெரியாது என்று புரிய வைப்பதிற்குள் போதும், போதும் என்று ஆகிவிட்டது.

ஒரு வழியாக ஸ்டுடென்ட் விசா கிடைத்த பிற்பாடு யு. எஸ்சில் நெவார்க் விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கு என்னுடைய ஆவணங்களை பரிசோதித்த குடிமை பணியேற்ற அதிகாரி, " Dude!! you look like you are from Middle East" என்று கூற, நானோ 'ஙே' என்று முழிக்க, சிரித்துக் கொண்டே " I was just kidding man" என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஆரம்பமே அசத்தலாக இருக்கிறதே என்று நான் நினைத்துக் கொண்டே இருக்கையில், பிற்பாடு எனக்கு ஒரு மிகப் பெறும் அடையாள பிரச்சனை இருப்பது அப்போது எனக்கு தெரியவில்லை. யு. எஸ் வந்ததும் பகுதி நேர வேலையாக என்னுடைய பல்கலைகழக புத்தகக் கடையில் வேலை கிடைக்க, வண்டி எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. பொதுவாக சனிக் கிழமைகளில் எனது புத்தகக் கடையில் கூட்டம் இருக்காது. நான் வெட்டியாக புத்தகக் கடையில் உலாத்திக் கொண்டு இருந்த போது ஒரு குடும்பம் சும்மா புத்தகக் கடையை சுத்திப் பார்க்க வந்தது. அதில் இருந்த ஒரு தாத்தா என்னிடம் உரிமையோடு வந்து ஏதோ ஒரு புரியாத பாஷையில் கேட்க, நானோ "Say What" என்று புரியாமல் திரும்ப திரும்ப கேட்க அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனார். என்னுடன் ஷிப்டில் இருந்த பெண் நல்ல வேலையாக அவரிடம் அதே பாஷையில் பேசி சமாளித்தாள். அதற்கு பின் தான் அவர்கள் பேசியது ஸ்பானிஷ் என்று தெரிந்தது. அவரிடம் பேசி முடித்து வந்த அந்த தோழி "உன்னைப் பார்க்க மெக்சிகன் பையன் போல் இருக்கிறதால் தான் உன்னிடம் ஸ்பானிஷ் பேசினாராம்" என்று சொன்னாள். ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...


இதெல்லாம பரவாயில்லைங்க... என்னைப் பார்த்து, அதுவும் என் ஊரில “ஏக் கிலோ சப்போட்டா, சிர்ப் பந்த்ரஹ் ருப்யா”னு சொன்னவனை என்ன பண்ணலாம் சொல்லுங்க...

தியடோர் பாஸ்கரன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை

ஓவியம் - ஓவியர் வே.ஜீவானந்தம் அவர்கள்
சினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்று நான் நினைத்ததை எல்லாம் தவிடு பொடியாக்கின இவரது நூல்கள். மாறாக சினிமா ஒரு அறிவியல் என்றும் அதை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின அவரது கட்டுரைகள். தியடோர் பாஸ்கரன் - சமகால இலக்கியத்தை வாசிபவர்களுக்கு, உயிர்மை மாத பத்திரிக்கையை படிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு பெயர். முதன் முதலில் திருச்சி கார்முகில் வாடகை புத்தக நிலையத்தில் உறுப்பினராக சேர்ந்த போது ஒரே ஒரு புத்தகத்தை எடுத்து படித்தேன். அது தியடோர் பாஸ்கரன் அவர்களின் "சித்திரம் பேசுதடி". திரைப்பட வரலாறுகளைப் பற்றி படிப்பது அத்தனை சுவையாக இருக்கும் என்பது அந்த புத்தகத்தில் இருந்த கட்டுரைகளைப் படித்த பின் தான் எனக்கு தெரிந்தது. தொடர்ந்தர்ப் போல் அவரின் "எம் தமிழர் செய்த படம்" நூலைப் படித்து முடித்தேன்.


நாடகம் எவ்வாறு சினிமாவாக பரிணமித்தது என்பதை அவரின் மேற்கூறிய புத்தகங்களின் மூலம் தான் நான் அறிந்து கொண்டேன். வெறும் மக்னீசிய விளக்கொளியில் கட்டப்பட்ட சினிமாவில் இருந்து தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் உருவான எலெக்ட்ரிக் தியேட்டர் போன்ற அரிய தகவல்கள் அவரின் புத்தகத்தில் நிறைந்து இருந்தன. நடராஜ முதலியார் எப்படி தமிழின் முதன் முதல் திரைப்படம் ஆன "கீசகவதம்" உட்பட ஏழு திரைப்படங்களை எப்படி தயாரித்தார் என்ற முக்கியமான வரலாற்று பதிவை அந்த கட்டுரைகளின் மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன். வெறும் வெகுஜன ஊடகம் தானே சினிமா, அதை ஆய்வு செய்து என்ன ஆகப் போகிறது என்ற மனப்பான்மை நம்மிடம் உண்டு. ஆனால் சினிமா வரலாறு என்பது அந்த திரைப்படங்கள் வெளியான சூழல், அப்போதிருந்த மக்களின் ரசனை, அப்படைப்புகளின் அழகியல், அந்த காலத்திய திரைப்பட அரசியல் மட்டுமல்லாமல் சமகால வரலாற்றையும் எடுத்து உரைக்கும் என்ற உண்மை அவரின் கட்டுரைகளின் மூலமாகத் தான் எனக்கு புரிந்தது.



"உயிர்மை" மாத இதழைப் படிக்க ஆரம்பித்த பொழுதில் அவரின் கானுயிர், சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளைப் படித்த பொழுதில் தான் தெரிந்தது இவரின் பன்முக ஆளுமை. 1981 இல் வெளியான "The Message Bearers: The nationalist politics and the entertainment media in South India" தான் அவரின் முதல் புத்தகம். தற்போது பெங்களுரூவில் வசிக்கும் பாஸ்கரன் அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகங்களின் பட்டியல்,
  1. The Eye of the Serpent: An introduction to Tamil cinema, Chennai: East West Books (1996), 
  2. The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist, Oxford University Press (1999), 
  3. History through the Lens - Perspectives on South Indian Cinema, Chennai: Orient Longman (2009), 
  4. Sivaji Ganesan: Profile of an Icon, Wisdom Tree (2009) . 
அவர் எழுதிய தமிழ் புத்தகங்கள், 
  1. மழைக்காலமும், குயிலோசையும், காலச்சுவடு (2003)
  2. எம் தமிழர் செய்த படம், உயிர்மை (2004)
  3. தமிழ் சினிமாவின் முகங்கள், கண்மனி வெளியீடு (2004)
  4. சித்திரம் பேசுதடி, உயிர்மை (2004)
  5. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)
  6. தாமரை பூத்த தடாகம், உயிர்மை (2005)
  7. கானுறை வேங்கை, (மொழிபெயர்ப்பு: The way of the Tiger by K. Ullas Karanth), காலச்சுவடு (2006) 
(பட்டியல் விபரம்: நன்றி - விக்கிபீடியா


 அஞ்சல் துறையில் பணியாற்றிய திரு.பாஸ்கரன் அவர்கள், தனது அலுவல்களுக்கும் இடையில் தனது திரைப்படம், காணுயிர் குறித்த ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தமிழக அஞ்சல் துறையின் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக இருந்து ஒய்வு பெற்றார். அவரைப் பற்றிய மேலதிக தகவல்களை அவரின் விக்கிபீடியா பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். தியடோர் பாஸ்கரன் அவர்கள் காலச்சுவடுக்கு அளித்த செவ்வி. ’தில்லுமுல்லு’ திரைப்படத்தில் ரஜினி, “மீசை எவ்வளவு பெரிசா இருக்கோ, அந்த அளவு மனசும் சுத்தமா இருக்கும்” என்று சொல்வார். அது என்னவோ இவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், இவரின் மீசையைப் பற்றி எழுதிய கட்டுரை இங்கே.
 
 அவரின் பன்முக ஆளுமைக்கு சான்றாக, சமீபத்தில் “அவள் பெயர் தமிழரசி” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.1940ல் பிறந்த தியடோர் பாஸ்கரன் சமீபத்தில் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பதிவு ஒரு வகையில் அவருக்கு என் சார்பான பிறந்தநாள் வாழ்த்து. அவரின் படைப்புகளை வாசித்த பின் தான் திரைப்பட ஆராய்ச்சி என்ற ஒரு  புதிய பாதை எனக்கு தென்பட்டது. என்ன தான் உயிரி மருத்துவ பொறியியல் படித்தாலும், பாதி நேரம் இலக்கியம், சினிமா என்று தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சினிமாவைப் பற்றி நண்பர்களிடம் விவாதிக்கும் போது, என் கருத்துக்களை உரக்கவும், ஆணித்தரமாகவும் கூறும் போது, “நீ ஏன் சினிமா பற்றி படிக்கக் கூடாது” என்றார்கள். உண்மை தான். ஆனால் என் குடும்ப சூழல் மற்றும் இன்ன பிற சிக்கல்களை தீர்த்த பிற்பாடு, நிச்சயம் Film Studies பிரிவில் முனைவர்  பட்ட ஆராய்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன். முயற்சி திருவினையாக்கும் என்றே நம்புகிறேன். என்னுள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தியடோர் பாஸ்கரன், என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை ஆனதில் எந்தவோரு ஆச்சரியமுமில்லை....

Share