இளங்கலை படிக்கையில், பல்கலைகழக நூலகத்தை ஒரு நாள் மேய்ந்து கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்டது 'சுபமங்களா இதழ் தொகுப்பு'. நாடக உலக மேதை 'கோமல் சுவாமிநாதன்' நடத்திய தமிழ் இலக்கிய இதழ்களில் நீங்காது இடம் பிடித்த இதழ். ஒரு மிகப்பெரும் கலை பொக்கிஷம் கிடைத்தது போல் சுற்றுபுறம் மறந்து படிக்கையில் கண்ணில் பட்டது தான் சா. கந்தசாமியின் 'தக்கையின் மீது நான்கு கண்கள்'.
சா. கந்தசாமி. சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர். சிறந்த ஆவணப் பட இயக்குனரும் கூட. 'விசாரணை கமிஷன்' இவரின் மிகச் சிறந்த நாவல். நான் படித்த அவரின் முதல் கதை 'தக்கையின் மீது நான்கு கண்கள்'.
ஒரு தாத்தாவிற்கும், அவருடைய 10 வயது பேரனுக்கும் இடையில் நடக்கும் கவுரவ பிரச்சனை தான் கதை. மீனவரான தாத்தா பேரனை தன்னுடன் மீன் பிடிப்பதற்காக அழைத்து செல்கிறார். தன்னிடம் இருக்கும் தாயத்தினால் தான், தன் தூண்டிலில் மீன்கள் மாட்டுகின்றன என்று பேரனிடம் பெருமை அடித்து கொள்கிறார். பேரன் அந்த தாயத்தை தருமாறு தாத்தாவிடம் கேட்கிறான். மறுக்கும் தாத்தாவிடம் கோவித்து கொண்டு தனது தூண்டிலை எடுத்து மீன் பிடிக்கிறான் பேரன். அன்றைய நாள் தாத்தாவிற்கு ஒரு மீன் கூட சிக்குவது இல்லை. மாறாக பேரன் நிறைய மீன்கள் பிடித்து வருகிறான்.
தன் பேரன் பிடித்து வந்த மீன் மிகவும் ருசியாக இருக்கிறது என்று கூறும் பாட்டியிடம் கோவித்து கொள்ளும் தாத்தா, உணவு உண்ணாமல் படுக்கைக்கு செல்கிறார். வெள்ளத்தின் காரணமாக கடலில் இருந்து வரும் 'விலாங்கு மீன்' தாத்தாவும் பேரனும் எப்போதும் மீன் பிடிக்கும் குளத்தில் நிறைந்து இருக்கின்றன. தாத்தா தன் பேரனிடம் அந்த மீனை உன்னால் பிடிக்க முடியுமா என்று சவால் விடுகிறார்.
சவாலை ஏற்று கொள்ளும் பேரன், தாத்தாவிற்கு முன்னரே மீனை பிடித்து காட்டுகிறான். மறு நாள் காலையில் விழிக்கும் பேரனின் தலைமாட்டில் தாத்தாவின் ராசியான தாயத்து இருக்கிறது.
தலைமுறை இடைவெளி இன்றளவும் நம் குடும்பங்களிலும், சமூகத்திலும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. நம்முடைய ஊடகங்களும் பற்றாக்குறைக்கு அந்த இடைவெளியை திரைப்படங்கள் மூலம் ஊதி பெரிதாக்குகின்றன. அந்த இடைவெளியை மிக நுன்னியமகவும், நாசுக்காகவும் விளக்கியிருக்கிறார் சா. கந்தசாமி.
இந்த கதையை திரைப்பட இயக்குனர் வசந்த் (கேளடி கண்மணி, ஆசை) ஆவணப்படமாக எடுத்துள்ளார். நான் இந்தியா சென்ற போது 'பொதிகை' தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். வீராசாமி அய்யா ('எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்' - முதல் மரியாதையில் வருவாரே, அவர்தான்) தாத்தாவாக நடித்து இருந்தார். ஒரு சிறுகதையையோ, நாவலையோ படமாக்கும் போது, பெரும்பாலும் இயக்குனர் அந்த படைப்பை எவ்வாறு தன் மனதில் காட்சி படுத்தினாரோ, அதைத் தான் பெரும்பாலும் நாம் காட்சிப் படங்களாகப் பார்போம்.
படைப்பை படிக்கும் வாசகர்களின் காட்சி படுத்தலும், இயக்குனரின் காட்சி படுத்தலும் ஒத்துப் போகும் நூழிலையில் தான் நிகழ்கிறது பார்வையாளனின் பரவசம். அத்தகைய உணர்வு தான் வசந்தின் இந்த ஆவணப் படத்தை பார்த்த போது எனக்கு நேர்ந்தது. வசந்தின் பெரும்பாலான திரைப்படங்கள், திரையரங்கில் எனக்கு தூக்கத்தை தான் வரவழைத்துள்ளன. ஆனால் ஒரு சிறந்த இயக்குனர் என்ற மதிப்பை இந்த ஆவணப் படம் எனக்கு ஏற்படுத்தியது.
இதை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இந்த ஆவணப் படம் எங்கேனும் கிடைக்கும் எனில் டி.வி.டி கிடைக்கும் முகவரியை எனக்கு தெரிவிக்கவும். அல்லது youtube லிங்குகள் இருப்பின் இங்கு பதியவும்.
No comments:
Post a Comment