Wednesday, March 17, 2010

3 டி படமா? பைசா வசூல்...

2 டியில் இருந்து 3 டிக்கு
ஹாலிவுட்டில் இப்போது போட்ட காசை எடுக்க வேண்டுமா? 3டி படம் எடுத்தால் போதும். போட்ட காசு கண்டிப்பா உஷார் ஆகும். அதற்கு தெளிவான ஒரு உதாரணம் அவதார். அவதார் வசூலைக் குவிக்கவும், ஹாலிவூடின் ஒவ்வொரு ஸ்டுடியோவும் ஆளுக்கு நான்கைந்து 3டி படங்களை எடுக்கத் தொடங்கி விட்டனர். சாதரணமாக ஒரு திரைப்படத்திற்கு 10 டாலர் டிக்கட் என்றால், 3 டி படம் என்றால் கூடுதல் கட்டணமாக 3 டாலர் வசூலிக்கின்றனர் தியேட்டர்காரர்கள் . இதில் ஐமேக்ஸ் 3டி என்றால் 5 டாலர் எக்ஸ்ட்ரா. ஆக மொத்தம் ஒரு ஐமேக்ஸ் 3 டி படத்திற்கு 15 டாலர் தண்டம் அழுக வேண்டிய கட்டாயம். 10 டாலரில் முடிய வேண்டிய படம் 15 டாலர் செலவில் வந்து முடிகிறது.

'வடை போச்சே' - 3 டியில் வந்து இருக்க வேண்டிய படம்
என்னைப் போன்ற மாணவர்களுக்கு சில சலுகைகள் உண்டு, ஒரு சில திரையரங்குகளில் 3 டாலருக்கு டிக்கட் கிடைக்கும். தியடரும், சத்யம் அளவிற்கு நன்றாக இருக்கும்.  அந்த திரையரங்குகளில் கூட 3டி படத்திற்கு எக்ஸ்ட்ரா தண்டம் அழுக வேண்டும். ஆனால் நீங்கள் நினைப்பது போல் 3டி திரையரங்குகளை நிறுவுவது அத்தனை சுலபம் அல்ல. தியேட்டர் காரர்களுக்கு செலவு பின்னி எடுத்து விடும். நான் வசிக்கும் பெருநகரில் 30 திரையரங்கம் கொண்ட மல்டிப்லேக்சில் ஒரு ஐமேக்ஸ் திரையரங்கம், மற்றும் இரண்டு 3டி திரையரங்குகள் தான் உள்ளன. 

3டி தொழில்நுட்பம் ஒரு காலத்தில் சீந்துவார் இல்லாமல் இருந்தது. காரணம் நிறைய செலவு பிடிக்கும் சமாசாரம். 3டி காமிராவிற்கு வாடகை கொடுத்தே ஸ்டுடியோக்களுக்கு கட்டுப்படி ஆகாது. அதை விலை கொடுத்து வாங்கினாலும், அந்த படம் முடிந்தவுடன் அது மூலைக்கு போய் விடும். அடுத்த 3டி படம் ஆரம்பிக்கும் வரை அதற்கு பராமரிப்பு செலவு வேறு செய்ய வேண்டும்.

இப்போது அந்த காமிராக்கள் எல்லாம் சல்லிசாகவே கிடைக்கின்றன. பத்தாதிற்கு 2 டியில் படம் எடுத்து விட்டு அதை 3 டிக்கு மாற்றி விடும் தொழில்நுட்பங்களும் இப்போது வந்துவிட்டன. எந்திரன் திரைப்படத்தைக் கூட அப்படி தான் மாற்ற வேண்டும் என்று சங்கர் நினைத்தாராம். ஆனால் அந்த மாற்றும் செலவு இன்னொரு எந்திரன் படம் எடுக்கும் அளவிற்கு இருந்ததாம். ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு இதெல்லாம் சும்மா ஜுஜுபி. படம் டொமெஸ்டிக் மார்கெட்டில் (யு.எஸ்) சரிவர போகவில்லை என்றாலும் சர்வதேச மார்கெட்டில் காசு அள்ளி விடுவர். ஆனாலும், இந்த 2 டியில் இருந்து 3 டியாக மாற்றினால் அது ஒரிஜினல் 3டி அளவிற்கு விசுவல் அனுபவத்தைத் தராது.

"Shrek" நான்காம் பாகமும் 3 டியில் வருகிறது
ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஆளுக்கு நான்கைந்து 3 டி படங்கள் எடுக்கிறார்கள் என்று சொன்னேன் இல்லையா. இதனால் சரிவர 3டி தியேட்டர்கள் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர் ஸ்டுடியோக்காரர்கள். அப்படியே படம் ரீலிஸ் ஆனாலும் நன்றாக ஓடிக் கொண்டு இருக்கும் போதே அடுத்த படத்தைப் போட வேண்டிய நிலை. அப்படியும் மேலும் மேலும் படத்தை எடுத்து தள்ளிக் கொண்டே இருகிறார்கள். இந்த வருடம் மட்டும் இன்னும் 35 முப்பரிமான படங்கள் வரப் போகுதாம். இதில் 2டியில் எடுத்து 3டிக்கு மாற்றப் பட்ட படங்கள் கணக்கில் இல்லை.

"Tron Legacy" கொக்கா மக்கா 3 டி மிரட்டல் 
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தன்னுடைய "Clash of the Titans" ரீமேக் திரைப்படத்தை 2டியில் தான் எடுத்தது. அவதாரைப் பார்த்து குத எரிச்சல் அதிகமாகி , தற்போது இதை 3டி க்கு மாற்றி காசு பார்க்க முயல்கின்றனர். ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாக வேண்டும், ஆனால் முன்கூட்டியே இந்த மாதமே திரையடுகின்றனர். மொக்கை வேம்பயர் படங்களான Twilight சீரியசின் இறுதி பாகத்தையும் முப்பரிமாணத்தில் வெளியிடப் போகின்றனராம். 3டியா... உவ்வே என்ற மைக்கேல் பே, டிரான்ஸ்பார்மர் மூன்றாம் பாகத்தை, ஸ்டுடியோவின் கட்டாயத்தின் பேரில் முப்பரிமாணத்தில் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இதில் முழித்து கொண்டவர் மசாலா திரைப்படங்களை தயாரிக்கும் மன்னனான Jerry Bruckheimer தான். தன்னுடைய Prince of Persia படத்தை 3டியில் எடுக்க எண்ணியது போது அந்த ஆளுடைய  இன்னொரு தயாரிப்பான  G Force பயங்கரமாக ஊத்திக் கொண்டதால் ரெண்டு பரிமாணமே போது மூணு பரிமாண ஆணியெல்லாம் புடுங்க வேணாம் என்று இந்த படத்தின் விநியோகஸ்தர்களான டிஸ்னி கூறி விட்டதாம்.

"Tron Legacy  " - ஒபெநிங் எல்லாம் நல்லா தான் இருக்கு
இதெல்லாம் சரி. உண்மையிலேயே 3டி படம் பார்க்கும் போது நமக்கு அருமையான காட்சி அனுபவம் தான். ஆனால் அதனால் விளையும் தீங்குகளையும் பார்க்க வேண்டாமா. முப்பரிமானம் என்றால் அது உண்மையிலேயே முப்பரிமானம் கிடையாது. இரண்டு  காமிராக்கள் ஒரே காட்சியை இரு வேறு பரிணாமங்களில் படம் பிடிக்க, அதை இரு ப்ரோஜெக்டர்கள் ஒரே நேரத்தில் திரையிடும். அதனால் தான் நீங்கள் 3டி கண்ணாடியை எடுத்து விட்டு பார்த்தீர்கள் என்றால் தெளிவான காட்சி இருக்காது. இந்த இரண்டு இமேஜ்களையும் நாம் அணிந்திருக்கும் 3டி கண்ணாடி ஒன்றாக தொகுக்கும் போது நமது மூளை அதை முப்பரிமான படமாக புரிந்து கொள்ளும். இதனால் கண்கள் வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும். முப்பரிமாணக் காட்சிகளை புரிந்து கொள்ளும் மூளை விரைவிலேயே சோர்வு அடையும். அது மட்டுமல்லாது, இந்த திரையரங்கில் கொடுக்கப் பெறும் கண்ணாடிகள் சரியான முறையில் மறு சுழற்சி அல்லது சுத்திகரிக்கப் படுகின்றனவா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி. இங்க அமெரிக்காவில் செய்தாலும், நம்ம ஊரு சத்யம் தியட்டரில் கூட இதை செய்கிறார்களா என்றால் அதுவும் டவுட்டு தேன்.
 
"Up" 3 டியில் மிகப்பெரும் ஹிட்டானதைத் தொடர்ந்து "Toy Story" யும் 3 டியில்
இதெல்லாம் காட்டிலும் இன்னுமொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அவதார் வசூலை அள்ளி குவித்ததற்கு அதன் கதையம்சம் ஒரு மிகப் பெரிய காரணம். அதைக் கண்டுகொள்ளாமல் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாய்  அதே போல் எடுக்கிறேன் பேர்வழி, என்று மொக்கைகள் தான் சில சமயம் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

Monday, March 15, 2010

ட்ரான் லெகசி (Tron Legacy) 2010

         
அவதார் கிட்டத்தட்ட 237 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால் இது வரை அது உலகளவில் வசூலித்த தொகை கிட்டத்தட்ட 2600 மில்லியன் டாலருக்கும் மேல்.இன்னமும் அமெரிக்காவில்  பாக்ஸ் ஆபீசில் வசூலித்து கொண்டு இருக்கிறது.அவதாரை 20thசெஞ்சுரி பாக்ஸ் ஸ்டுடியோ வெளியிட்டது. கடந்த வாரம் அலிஸ் இன் வொண்டேர்லான்ட் வந்ததால் மேலும் வர வேண்டிய வசூல் வராமல் 'வடை போச்சே' என்று கவலைப் படுகிறதாம் பாக்ஸ் நிறுவனம்.கிட்டத்தட்ட அத்தனை ஹாலிவுட் ஸ்டுடியோக்களும்,பாக்ஸ் ஸ்டுடியோவைப் பார்த்து வயித்தெரிச்சலில் உள்ளன.பின்னே போட்ட காசைக் காட்டிலும் பத்து மடங்கு வருமானம் வசூலித்து விட்டதே.அதிலும் வால்ட் டிஸ்னி நிறுவனம் எப்படியாவது இவனுங்களை முந்தி காட்டனும் என்று முழு மூச்சில் இறங்கி உள்ளது. அதனால் தான் அவதாரைக் காட்டிலும் அதிக பொருட்செலவில், அதாவது கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் செலவில் ட்ரான் லெகசி (Tron Legacy) என்னும் திரைப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படம் 1982ஆம் ஆண்டு வெளியான ட்ரான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கிய ஜெப் பிரிட்ஜஸ் (Jeff Bridges) தான் இந்த முதல் பாகத்தின் கதாநாயகன். தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிப்பொறி கனவான்கள் மற்றும் தோழிகள் கொஞ்சம் கவனிக்க. நீங்கள் எழுதும் ப்ரோக்ராம்கள் விர்சுவல் உலகில் உயிர் பெற்று எழுந்தால் எப்படி இருக்கும். அது தான் ட்ரான் திரைப்படத்தின் மூலக் கரு. உண்மையை சொல்லப் போனால் இந்த படத்தின் இயக்குனர் Steven Lisberger ரெம்பவே அட்வான்சாக சிந்தித்து விட்டார். அதனால் தான் படம் பாக்ஸ் ஆபிசிலும், விமர்சகர்களிடமும் வெளியான போது மரண அடி வாங்கியது.  

கெவின் பிளின் (Jeff Bridges) என்ற ப்ரோக்ராமர் என்காம் (ENCOM) என்ற ஆர்கேட் (Arcade) கேம் தயாரிக்கும் நிறுவனத்தில் ப்ரோக்ராமாரக பணி புரியும் போது, அவன் எழுதிய ஸ்பேஸ் பேரநாய்ட்ஸ் (Space Paranoids) என்ற கேமுக்கு எழுதிய ப்ரோக்ராம்கள் உட்பட சில ப்ரோக்ராம்களை அவனுடைய சக ஊழியனான எட் டெலின்ஜார்  திருடி விடுகிறான். திருடியது மட்டும் இல்லாமல் கெவினை என்காமிலிருந்து அவனை டிஸ்மிஸ் செய்கிறான். கெவினிடம் வேறு ஆதாரம் இல்லாததால் அவனும் வெளியேற வேண்டிய நிலை.தனக்கு சொந்தமான ஒரு ஆர்கேட் நிலையத்தை (Flynn Arcade) நடத்தி வரும் கெவின், எப்படியாவது இந்த குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதற்காக டெலின்ஜார் உருவாக்கிய மாஸ்டர் கன்ட்ரோல் ப்ரோக்ராம்மை (M.C.P) ஹாக் செய்ய முயல்கிறான் கெவின்.இதை கண்டுபிடிக்கும் எட் டெலின்ஜார் கெவினை M.C.P க்குள் நுழைய முடியாமல் பல தடைகளைப் போடுகிறான்.

இதனால் அங்கு பணிபுரியும் சக நண்பர்களான ஆலன் பிராட்லீயையும் (Bruce Boxleitner), லோராவையும்  (Cindy Morgan) உதவிக்கு நாடுகிறான். ஆலன், ட்ரான் என்ற  செக்யூரிட்டி ப்ரோக்ராம்மை உருவாக்க, லெவல் 7 எனும் செக்யூரிட்டி கேட்வேயை தற்காலிகமாக தடை செய்கிறான் டெலின்ஜார். லோரி தன்னால் லெவல் 6 செக்யூரிட்டி மூலம் M.C.P க்கு ஆக்சஸ் தர முடியும் என்று கூறுகிறாள். என்காமுக்குள் மூவரும் நுழைய லோராவின் வொர்க் ஸ்டேஷனில் இருந்து ஹாக் செய்ய முயல்கிறான் கெவின். அந்த வொர்க் ஸ்டேஷனுக்கு அருகில் தான்  டிஜிடைசர் என்னும் பரிசோதனை முறை  சாதனம் உள்ளது.  அந்த M.C.P ஆனது தனக்கு என்று ஒரு செயற்கை அறிவை (Artificial Intelligence) உருவாக்கி கொண்டு இருக்கிறது. இதனால் கெவினை தன்னை  ஹாக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறது M.C.P.  அதைப் பொருட்படுத்தாத கெவினை டிஜிடைசர் மூலம் தன்னுடைய விர்சுவல் உலகத்திற்கு இழுத்து கொள்கிறது M.C.P. 

விர்சுவல் உலகத்திற்கு வரும் கெவின் அங்கு பல ப்ரோக்ராம்கள் தங்கள் யூசரைப் போன்றே தோற்றம் அளிப்பதைக் காண்கிறான். உதாரணமாக ஆலனின் ட்ரான் ப்ரோக்ராம் ஆலனைப் போன்றே தோற்றம் அளிக்கிறது. அங்கு இருக்கும் சார்க் என்ற கன்ட்ரோல் ப்ரோக்ராம் டெலின்ஜார் போன்றே தோற்றம் அளிக்கிறது. மேலும் இது போன்ற தவறும் ப்ரோக்ராம்கள், அல்லது டீபக் செய்யப் படாத ப்ரோக்ராம்கள் அங்கு சிறைப் பிடிக்கப் பட்டு ஆர்கேட் கேம்கள் விளையாடுவதற்கு உபயோகப் படுத்த படுகின்றன (Cloud Computing?). அந்த விர்சுவல் உலகில் இருப்பவை அத்தனையும் ப்ரோக்ராம்கள், கெவின் என்னும் யூசரைத் தவிர. அந்த விளையாட்டுகளில் தோற்கும் ப்ரோக்ராம்கள் டீ'ரெஸ்(De resolution) அதாவது டெலீட் செய்யப் படுகின்றன. சார்க்கின் முக்கிய நோக்கம் கெவினை டீ'ரெஸ் செய்வது தான்.

கெவின் இயல்பாகவே சிறப்பான கேமராக இருப்பதால் தான் பங்கு பெறும் விளையாட்டுகளில் சுலபமாக வெற்றி பெறுகிறான்.  அதிலும் முக்கியமாக ட்ரான் மற்றும் ரேம் எனும் சக ப்ரோக்ராம்களுடன் இணைந்து, லைட் சைக்கிள் (Light Cycle) என்னும் விளையாட்டில் வெற்றி பெற்று அந்த விர்சுவல் உலகில் உள்ள ஓட்டை மூலமாக மூவரும் தப்பிக்கிறார்கள். கெவின் அந்த விர்சுவல் உலகில் தனக்கென்று சில சக்திகள் இருப்பதை உணர்கிறான். உதாரணமாக உடைந்த வாகனங்களை அவனால் சரி பார்க்க முடிகிறது. ட்ரான் ப்ரோக்ராம் எப்படியாவது தனது யூசருடன் தொடர்பு கொள்ள முயல்கிறது. அதற்கு லோராவின் விர்சுவல் வடிவான யோரியின் உதவியை நாடுகிறது. இந்த மூவரும் இணைந்து இன்புட், அவுட்புட் டவரை ஒரு விர்சுவல் ஷிப் மூலமாக அணுகுகின்றனர். ட்ரான் தன் யூசருடன் தொடர்பு கொண்டதா, சார்க்கும் M.C.P யும் என்ன ஆனார்கள் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதன் முதல் பாகத்தின் டிரெயிலர் இதோ: 

 

இன்பார்மேஷன் சூப்பர்ஹைவே, சைபர் ஸ்பேஸ் பற்றி தெரியாத கூமுட்டை விமர்சகர்களால் இந்த படத்தைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை. மேலும் அப்போது கணினி பற்றிய அத்தனை அறிவு இல்லாததால், மக்களாலும் இதில் உபயோகிக்கப் பெற்ற டெக்னிக்கல் பதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. 'ஸ்டார் வார்ஸ்' எப்படி முதன் முறையாக கம்ப்யுட்டர் கிராபிக்ஸை உபயோகித்ததோ, அதே போல் முதன் முறையாக இந்த படத்தில் தான் கம்ப்யுட்டர் அனிமேஷனை வால்ட் டிஸ்னி உபயோகித்தது. இதனால் அங்கு இருந்த ரெகுலர் அனிமேஷன் ஆர்டிஸ்டுகள் இந்த படத்திற்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் இந்த கம்ப்யுட்டர் அனிமேஷன், தங்களது கன்வென்ஷனல் அனிமேஷனை அழித்து விடும் என்று பயந்தனர். அவர்கள் நினைத்ததைப் போலவே இந்த படம் வெளியாகி 22 வருடங்கள் கழித்து வால்ட் டிஸ்னி தனது கன்வென்ஷனல் அனிமேஷன் ஸ்டுடியோவை  மூடியது.

சரி இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி பேசுவோம். 27 வருடங்கள் கழித்து என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது வால்ட் டிஸ்னி எடுக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். 2000 ஆம் ஆண்டிற்கு பின் இந்த படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பல முறை, பல பேரிடம் ஸ்க்ரிப்ட் கேட்டு சோர்ந்து போயிருந்தது டிஸ்னி நிறுவனம். ஒரு வழியாக, 2008 இல் Brian Klugman  எழுதிய கதைக்கு  Adam Horowitz, Richard Jefferies, Edward Kitsis மூவரும் திரைக்கதை எழுத, Joseph Kosinskiயை இயக்குனராகப் போட்டு படத்தை ஆரம்பித்தது டிஸ்னி நிறுவனம். 

காமிக் கான் (ComicConvention) என்னும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட்டில் நடக்கும். அந்த நிகழ்வில் காட்சியாளர்கள் தங்களது படைப்பை பற்றி தகவல்களை, ட்ரைலர் போன்றவற்றை வெளியிடுவர். அதில் சென்ற காமிக் கானில் ட்ரான் லெகசியின் டெஸ்ட் புட்டேஜை வெளியிட்டது. டெஸ்ட் புட்டேஜே படு மிரட்டலாக இருந்தது. அதில் முதல் பாகத்தில் சொல்லப் பட்ட லைட் சைக்கிள் சீகுவன்சை வெகுச் சிறப்பாக செம்மைப் படுத்தி இருந்தனர்.

அந்த டெஸ்ட் புட்டேஜ் உங்கள் பார்வைக்கு:
   
 
இந்த ட்ரைலர் ஒரு வகையில் எனக்கு "The Real adventures of Johnny Quest" கார்டூனை நினைவுப் படுத்தியது. இந்த ட்ரைலரைப் பார்த்து கூட நான் அதனைக் கவரப் படவில்லை. மேலும் இந்த புட்டேஜ் படத்தில் உபயோகிக்கப் படாது என்றும் இதன் படைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இதன் இரண்டாம் ட்ரைலர் தான் படு மிரட்டலாக இருக்கிறது. அலிஸ் இன் வொண்டர்லேன்ட் திரைப்படம் பார்த்த போது ஐ மேக்ஸ் 3 டியில் இதன் ட்ரைலரை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். 300 மில்லியன் டாலர் செலவு செய்வதற்கு அர்த்தமாக அத்தனை அட்சர சுத்தமான விஷுவல்கள். இதோ உங்கள் பார்வைக்கு: 


உண்மையில் இது அடுத்த அவதார் என்றே சொல்லலாம். கண்டிப்பாக அவதார் அளவிற்கு இல்லை என்றாலும் போட்ட காசை வசூலித்து விடும்  என்றே நம்பலாம்.ஆனால் டிஸ்னி மார்க்கெட் செய்வதில் தான் எல்லாமும் உள்ளது. இதன் முதல் படியாக,இந்த படத்தின் முதல் பாகத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும்.முதல் பாகம் நான் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்தது. டாரண்டுகளில் தேடிய போது நல்ல ப்ரிண்டே கிடைக்கவில்லை. கடைசியாக இந்த படம் எனது பல்கலையில் படிக்கும் அனிமேஷன் துறை மாணவர்களுக்கு பாடமாக இருப்பது தெரிந்து இந்த படத்தின் டி.வி.டி யை பல்கலை நூலகத்தில் இரவல் வாங்கி பார்த்தேன்.சில காட்சிகள் கொஞ்சம் அமெச்சூர் தனமாக இருந்தாலும்,அப்போதைய தொழில்நுட்பத்தை பிரமாதமாக பயன்படுத்தி இருந்தனர். 

எனக்கு தெரிந்த ஆதி காலத்தில் படித்த சி ப்ரோக்ராம்,தரவுத்தள (டேட்டாபேஸ்) அறிவை வைத்து இந்த படத்தின் கதையை உங்களுக்கு விளக்கி உள்ளேன். இந்த படத்தின் டெக்னாலஜி பற்றி ப்ளோரிடாவில் வெட்டியாக பொட்டி தட்டிக் கொண்டு இருக்கும் ஹாலி பாலி உங்களுக்கு விளக்குவார். இந்த படத்தின் டைட்டில் எலெக்ட்ரான் என்ற பதத்தில் உருவாக்கப் பெற்றது.  இருப்பினும் 'TRON' என்ற கமான்ட், பழங்கால 'BASIC' ப்ரோக்ராம்மிங்கில் உபயோகிக்கப்பட்டது. அது என்னவன்றும் அதன் செயல்பாடு பற்றியும் சொல்பவருக்கும் ஹாலி பாலி ஒரு 100 டாலர் கிப்ட் கார்ட் பரிசளிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எப்புடி? 

டிஸ்கி: நீங்கள் எழுதும் பின்னூட்டங்களும், போடும் ஓட்டுகளும் தான் என்னை மேலும் எழுத உற்சாகபடுத்தும்.

Friday, March 12, 2010

Joaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்!!?? - பாகம் 2


சரியாக ஒரு வருடம் கழித்து இரண்டாம் பாகமான இந்த பதிவை எழுதுகிறேன். முதல் பதிவை படிக்க இங்கு செல்லுங்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் - திரும்பவும் நமது 'தலைவர்' செய்திகளில் இடம் பெறுகிறார். பாப்லோ எஸ்கோபார் எப்படி போர்ப்ஸ் பத்திரிக்கையின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்தாரோ, அதே போல், Joaquin Guzman இந்த வருட பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளான். அதாவது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் கச்மேனிடம் உள்ளன. மெக்சிகோவின் கரன்சி இருக்கும் இலட்சனத்திலும், நம்ம ஆளு பலே கில்லாடியாக சொத்து சேர்த்தது DEA என்றழைக்கப் படும் அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு கழகத்திற்கு தற்போது குத எரிச்சலை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.

ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆளின் தலைக்கு, போயும் போயும் வெறும் ஐந்து மில்லியன் டாலர் மட்டுமே பரிசுத் தொகையாக அறிவித்து உள்ளது அமெரிக்க அரசு. ஜோக்வின் மெக்சிகோவின் ஜாலிச்கோ சிறையில் அடைக்கப் பட்டு இருந்ததைப் பற்றி முந்தைய பாகத்தில் கூறினேன். 1993இல் பிடிபட்ட ஜோக்வின் சிறையில் இருந்து தான் தன் போதைப் பொருள் ராஜ்யத்தை தொடங்கினான். அவனுக்கு அளிக்கப் பட்ட 20 வருட கடுங்காவல் தண்டனை சும்மா பேருக்கு என்றே தான் மெக்சிகோ மீடியாக்கள் சாடின. கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா தளமாகவே ஜாலிச்கோ சிறையை மாற்றி விட்டிருக்கிறான் ஜோக்வின்.

சிறை அவனுக்கு மிகவும் வசதியாகப் போய் விடுவதற்கு இன்னொரு காரணம் எல்லோருக்கும் தெரிந்தது போல் சிறை அதிகாரிகள். அவர்களுக்கு 'சம்பள' பட்டுவாடா செய்வதற்கு என்றே சிறையில் இருந்த சக கைதிகளை நியமித்தானாம். ஒரு முறை ஜோக்வின் தனது நண்பர்களிடம், தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஐந்து மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்து கொண்டு இருக்கிறேன் என்று பெருமையாக சலித்து கொண்டானாம். ஆனால், அதற்க்கு ஆப்பு வைப்பது போல் அமெரிக்காவில் இருந்து வந்தது ஒரு ஓலை. சரக்குகள் என்னவோ, கொலம்பியாவிலும் மெக்சிகோவிலும் தயாரிக்கப் பட்டாலும், வாடிக்கையாளர்கள் 'சாம் மாமாவின்' ( வட அமெரிககா) ஊரில் தானே இருக்கிறார்கள். ஜோக்வின் மேல் தொடுக்கப் பட்ட வழக்குகளை காரணம் காட்டி அவனை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று மெக்சிகோ அரசிடம் 'வேண்டுகோள்??!!' விடுத்தது அமெரிக்க அரசு.

வருமானம் கொட்டி கொடுக்கும் மேல்நாட்டுகாரரை பகைத்துக் கொள்ள முடியாத மெக்சிகோ அரசு அவனை அங்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்ய முனைந்தது. இதற்கு மேல் சிறையில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த ஜோக்வின், சிறையில் இருந்து தப்புவதற்கு ஆயதங்கள் செய்ய ஆரம்பித்தான். சிறையின் மூத்த அதிகாரி வரை 'கொடுக்க' வேண்டியதை கொடுத்து, கிட்டத்தட்ட அதிகாரிகள், கைதிகள் உட்பட ஒரு 71 பேரை தன் தப்பிக்கும் படலத்திற்கு உபயோகப் படுத்தினான். ஜனவரி 21, 2001 இல் சிறைக்கு வழக்கமாக வரும் லாண்டரி வேனில், அழுக்கு மூட்டையோடு அழுக்கு மூட்டையாய் தப்பித்து வெளியேறினான்.

சிறையில் இருந்து வெளியேறிய பின் வழக்கம் போல் தன் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை தொடங்கினான். கடத்தலையும் ஒரு கலை போல் செய்தவன் நம் ஜோக்வின். தீயணைப்பு கருவிகளில் இருக்கும் ட்ரை பௌடருக்கு பதிலாக கொகைனையும், கிறிஸ்டல் மெத் எனப்படும் Methamphetamine ஐயும் கடத்தினான். 'சில்லி பெப்பெர்ஸ்' என்று உறையிடப்பட்ட கேன்களிலும் போதை பொருட்கள் அமெரிக்காவிற்கு பறந்தன. 'அயன்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் கொகைனால் செய்யப்பட்ட இயேசு சிலையைப் பற்றி ஒரு காட்சியில் சூரியா சொல்வார். அந்த கைங்கரியத்தை செய்தது சாட்சாத் ஜோக்வின் தான். டெக்சாசில் இருக்கும் டல்லஸ் (Dallas) நகரில் உள்ள "தி ஸ்பைடர்" எனப்படும் சில்லறை விற்பனையாளனுக்கு தான் மேற்கூறிய இயேசு சிலை கடத்தப்பட்டது .

2007 இல் எம்மா என்ற 18 வயது பெண்ணை அவளுடைய 18 வது பிறந்தநாள் அன்று திருமணம் செய்தான். குஷியாக சென்று கொண்டிருந்த ஜோக்வினின் வாழ்வில் 2008 ஆம் ஆண்டு ஒரு பெருந்துயரம் நிகழ்ந்தது. அது என்னவென்று அடுத்த பாகத்தில் சொல்கிறேன்...

Tuesday, March 9, 2010

107 வருடங்களுக்கு முன் வெளி வந்த திரைப்படம் உங்கள் பார்வைக்கு

"ஆலிஸின் அற்புத உலகம்" திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. லூயி கரோலின் அந்த புத்தகத்தை வைத்து பல திரைப்படங்கள் வந்து உள்ளன. இருப்பினும் 107 வருடங்களுக்கு முன் வந்த ஒரு திரைப்படம், தற்சமயம் பிரித்தானிய திரைப்பட கழகத்தினால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப் பட்டு உள்ளது.

முதன் முதலாக விஷுவல் எபக்டுகள் இந்த படத்தில் கையாளப் பட்டு உள்ளன. ஆலிஸ் சிறியவளாக இருந்து பெரியவள் ஆவது போன்றவை உண்மையிலயே பிரமிப்பு ஊட்டுகின்றன. இப்போது இவற்றை செய்வது மிகவும் சுலபம் தான். ஆனால் மிகவும் குறுகிய நுட்பங்களை கொண்டே திரையில் அப்போதே ஆச்சர்யத்தை நிகழ்த்தி இருக்கின்றனர்.

அந்த படம் உங்கள் பார்வைக்கு :

Saturday, March 6, 2010

ஆலிஸின் அற்புத உலகம் (2010)


ஒருவரை பார்க்கும் போதோ அல்லது ஒரு சம்பவம் நடக்கும் போதோ, அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது அல்லது இது எங்கோ நடந்தது போல இருக்கும் உணர்வை 'Deja Vu" என்று கூறுவர். அதன் பின்னணியை ஆய்ந்தால் அவரை அல்லது அந்த சம்பவத்தை நீங்கள் ஒரு வேலை உங்கள் கனவில் கண்டு இருக்கலாம் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கனவுகளில் நடைபெறும் சம்பவங்கள் இன்று வரை உளவியலாளர்களுக்கு பெரும் சவாலாகவும், புதிரானதகவும் இருக்கின்றது. நம் ஆழ்நிலை மனதில் தோன்றும் காட்சிகள், ஒரு வகையில் பார்த்தால் நம் புற உலகில் தோன்றும் காட்சிகளின் உருவகமே. லூயி கரோல் (Louie Carol) என்னும் சார்லஸ் லுட்விஜ் டாட்க்சன் (Charles Lutwidge Dodgson) எழுதிய ஆலிஸின் அற்புத உலகமும் ஒரு வகையில் புற உலகின் உருவகபடுத்தபட்ட கனவுதான்.

லூயி கரோல் தன் நண்பரின் மகளான ஆலிசுக்கு கற்பனை கலந்து சொன்னது தான் ஆலிஸின் அற்புத உலகம். அதை எழுதித் தருமாறு ஆலிஸ் கேட்க 1865 ஆம் ஆண்டு அதை ஒரு கையெழுத்து பிரதியாக எழுதினார். பின்னர் 1866 இல் அந்த பிரதி புத்தகமாக வெளி வந்தது. மிகச் சிறப்பாக விற்ற அந்த புத்தகத்தின் தொடர்ச்சியாக Through the looking glass என்ற நூலை எழுதினர். இந்த இரு நூல்களும் குழந்தைகள் மட்டுமல்லாது, பெரியவர்களையும் ஈர்த்தது. அதை படித்தவர்கள் தங்களது கனவுகளில் ஆலிஸின் அற்புத உலகத்தை கண்டனர். வெளிவந்து 145 வருடங்களாகியும் இன்றும் பல வாசகர்களை ஈர்த்து கொண்டே இருக்கிறது. ஒரு வகையில் ஹாரி பாட்டர் கூட ஆலிசினால் கவரப்பட்டு தான் எழுதப் பட்டது என்று அதன் படைப்பாளர் ஜே.கே.ராவ்லிங் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆலிசின் அற்புத உலகம் பலரால் பல முறை திரைப்படமாக எடுக்கப் பட்டுள்ளது. அவை அனைத்தும் மூலக்கதையின் சாரத்தை ஒட்டியே படமாக்கப் பட்டவை. இயக்குநர் டிம் பர்டன் (Tim Burton) எட் வுட், ஸ்வீனி டாட், பிக் ஃபிஷ், ஸ்லீப்பி ஹாலோ போன்ற சிறந்த படங்களைத் தந்தவர். அவரின் படங்கள் பெரும்பாலும்
ஃபேண்டஸி மற்றும் இருண்ட கனவுலகம் பற்றிய கதைகளாகத் தான் இருக்கின்றன. ஆலிசின் அற்புத உலகம் திரைப்படமும் அதே போல் தான் அவருடைய இயக்கும் திறமைக்கு சான்றாக இருக்கின்றது. இருப்பினும் இரு மூல நாவல்களின் கதைக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை. இரு நாவல்களின் கதையில் உள்ள கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு புது திரைக்கதையை இந்த படத்திற்காக உருவாக்கி உள்ளனர்.

இந்த இடத்தில் தான் படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் - எல்லோரும் இந்த இரு மூல நாவல்களையும் படித்திருக்க மாட்டர். முக்கியமாக ஒரு ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகள். இந்த திரைப்படம் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தாலும், குறைந்த பட்சம் இரு நாவல்களின் கதையைத் தெரிந்தால் தான் உங்களால் இந்த திரைப்படத்தை முழுமையாக ரசிக்க இயலும். இதனால் தான் இப்படம் விமர்சகர்களிடம் செமத்தியாக அடி வாங்கி கொண்டு இருக்கிறது.

கதை: சுருக்கமாகவே சொல்லிட முடியாத கதை. பதின்ம வயதைத் தாண்டி திருமண வயதை அடைந்த ஆலிசிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தனது நிச்சயதார்த்த தினத்தில் அந்த ஏற்பாடுகள் பிடிக்காமல், ஒரு விசித்திரமான முயலை பின் தொடரும் ஆலிஸ் ஒரு முயல் வளைக்குள் விழுகிறாள். அவள் வந்து விழுவது அற்புத உலகில். அற்புத உலகை சிவப்பு அரசி தன் வசம் எடுத்துக் கொண்டதை அறிகிறாள். அதை எப்படி வெள்ளை அரசிக்கு, பைத்தியக்கார தொப்பிக்காரன் (Mad Hatter) உதவியுடன் மீட்டுத் தருகிறாள் என்பது தான் மூலக் கதை. இதன் நடுவில் மூல புத்தகங்களில் குறிப்பிடப் படும் சம்பவங்களான மேட் டீ பார்ட்டி, ஆலிஸ் சிறியவள் ஆதல் போன்றவை அப்படியே இதன் திரைக்கதையில் உள்வாங்கப் பட்டுள்ளன.

மூலக் கதையில் உள்ள கதாப்பாத்திரங்கள் மாறாமல் அப்படியே எடுத்தாளப் பட்டுள்ளன. மேட் ஹாட்டராக ஜானி டெப் (பர்டனுடன் இவருக்கு 7வது படம்), சிவப்பு அரசியாக ஹெலினா போன்ஆம் கார்டர் (பர்டனுடன் இவருக்கு 6வது படம்) ஆகியோர் மிகச் சிறப்பாக அந்த பாத்திரங்களில் பொருந்தி போகின்றனர். ஆலிசாக
Mia Wasikowska, வெள்ளை அரசியாக Anne Hathway, நீல கூட்டுப்புழுவின் குரலாக Alan Rickman போன்ற பெரிய நடிகர்களின் திறமைகள் படத்தில் உபயோகப் படுத்தபட்டுள்ளன. லூயி கரோலின் கதாப்பாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது செஷாயர் பூனை. அந்த பாத்திரம் இந்த படத்தில் மிகச் சிறப்பாக எடுத்தாளப் பட்டுள்ளது. அதற்கு குரல் கொடுத்திருப்பவர் பிரபல ப்ரிட்டிஷ் நடிகர் Stephen Fry.

விமர்சகர்களின் வாணலியில் இந்த படம் தாளிக்க படுவதற்கு முக்கிய காரணம், அழுத்தமில்லாத ஆழமில்லாத கதாபாத்திர அமைப்புகள், சிறு மற்றும் ஒன்றிரண்டு பெரிய ஓட்டைகளைக் கொண்ட திரைக்கதை. திரைக்கதை ஆசிரியர் லூயி கரோலை கரைத்து குடித்திருக்க வேண்டும். அதனால் தான் என்னவோ படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கரோலின் இரு நாவல்களையும் வாசித்தவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்.

அதை விடுத்து பார்த்தால் இந்த திரைப்படம் ஒரு மிகச் சிறப்பான ஒரு காட்சி விருந்து. ஆலிசின் அற்புத உலகம் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நம் கண் முன் கொண்டு வந்திருந்தனர். ஐமேக்ஸ் 3டியில் இந்த படத்தை பார்த்த போது பல நேரங்களில் என்னையறியாமல் வாயைப் பிளந்து ஆலிசின் அற்புத உலகத்தில் தொலைந்து விட்டிருந்தேன். ’அவதார்’ அளவிற்கு படத்தின் விஷுவல் அத்தனை அழகாக அமைக்கப் பட்டிருந்தது.

அவதார் ஒரு வகையில் மசாலா படம் தான் என்றாலும், காட்சி அமைப்புகளின் துல்லியமும், திரைக்கதையும் தான் அதன் வெற்றிக்கு ஆதாரமாய் இருந்தது. இந்த படத்தில் காட்சி அமைப்புகளின் துல்லியம் இருந்தாலும், திரைக்கதை ஒன்றிரண்டு கணங்களில் அயர்ச்சியைத் தான் ஏற்படுத்துகிறது. ஃபேண்டஸி திரைப்பட ஆர்வலர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள், முக்கியமாக 3டியில்...

Share