
சரியாக ஒரு வருடம் கழித்து இரண்டாம் பாகமான இந்த பதிவை எழுதுகிறேன். முதல் பதிவை படிக்க இங்கு செல்லுங்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் - திரும்பவும் நமது 'தலைவர்' செய்திகளில் இடம் பெறுகிறார். பாப்லோ எஸ்கோபார் எப்படி போர்ப்ஸ் பத்திரிக்கையின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்தாரோ, அதே போல், Joaquin Guzman இந்த வருட பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளான். அதாவது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் கச்மேனிடம் உள்ளன. மெக்சிகோவின் கரன்சி இருக்கும் இலட்சனத்திலும், நம்ம ஆளு பலே கில்லாடியாக சொத்து சேர்த்தது DEA என்றழைக்கப் படும் அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு கழகத்திற்கு தற்போது குத எரிச்சலை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.
ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆளின் தலைக்கு, போயும் போயும் வெறும் ஐந்து மில்லியன் டாலர் மட்டுமே பரிசுத் தொகையாக அறிவித்து உள்ளது அமெரிக்க அரசு. ஜோக்வின் மெக்சிகோவின் ஜாலிச்கோ சிறையில் அடைக்கப் பட்டு இருந்ததைப் பற்றி முந்தைய பாகத்தில் கூறினேன். 1993இல் பிடிபட்ட ஜோக்வின் சிறையில் இருந்து தான் தன் போதைப் பொருள் ராஜ்யத்தை தொடங்கினான். அவனுக்கு அளிக்கப் பட்ட 20 வருட கடுங்காவல் தண்டனை சும்மா பேருக்கு என்றே தான் மெக்சிகோ மீடியாக்கள் சாடின. கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா தளமாகவே ஜாலிச்கோ சிறையை மாற்றி விட்டிருக்கிறான் ஜோக்வின்.

சிறை அவனுக்கு மிகவும் வசதியாகப் போய் விடுவதற்கு இன்னொரு காரணம் எல்லோருக்கும் தெரிந்தது போல் சிறை அதிகாரிகள். அவர்களுக்கு 'சம்பள' பட்டுவாடா செய்வதற்கு என்றே சிறையில் இருந்த சக கைதிகளை நியமித்தானாம். ஒரு முறை ஜோக்வின் தனது நண்பர்களிடம், தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஐந்து மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்து கொண்டு இருக்கிறேன் என்று பெருமையாக சலித்து கொண்டானாம். ஆனால், அதற்க்கு ஆப்பு வைப்பது போல் அமெரிக்காவில் இருந்து வந்தது ஒரு ஓலை. சரக்குகள் என்னவோ, கொலம்பியாவிலும் மெக்சிகோவிலும் தயாரிக்கப் பட்டாலும், வாடிக்கையாளர்கள் 'சாம் மாமாவின்' ( வட அமெரிககா) ஊரில் தானே இருக்கிறார்கள். ஜோக்வின் மேல் தொடுக்கப் பட்ட வழக்குகளை காரணம் காட்டி அவனை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று மெக்சிகோ அரசிடம் 'வேண்டுகோள்??!!' விடுத்தது அமெரிக்க அரசு.
வருமானம் கொட்டி கொடுக்கும் மேல்நாட்டுகாரரை பகைத்துக் கொள்ள முடியாத மெக்சிகோ அரசு அவனை அங்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்ய முனைந்தது. இதற்கு மேல் சிறையில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த ஜோக்வின், சிறையில் இருந்து தப்புவதற்கு ஆயதங்கள் செய்ய ஆரம்பித்தான். சிறையின் மூத்த அதிகாரி வரை 'கொடுக்க' வேண்டியதை கொடுத்து, கிட்டத்தட்ட அதிகாரிகள், கைதிகள் உட்பட ஒரு 71 பேரை தன் தப்பிக்கும் படலத்திற்கு உபயோகப் படுத்தினான். ஜனவரி 21, 2001 இல் சிறைக்கு வழக்கமாக வரும் லாண்டரி வேனில், அழுக்கு மூட்டையோடு அழுக்கு மூட்டையாய் தப்பித்து வெளியேறினான்.
சிறையில் இருந்து வெளியேறிய பின் வழக்கம் போல் தன் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை தொடங்கினான். கடத்தலையும் ஒரு கலை போல் செய்தவன் நம் ஜோக்வின். தீயணைப்பு கருவிகளில் இருக்கும் ட்ரை பௌடருக்கு பதிலாக கொகைனையும், கிறிஸ்டல் மெத் எனப்படும் Methamphetamine ஐயும் கடத்தினான். 'சில்லி பெப்பெர்ஸ்' என்று உறையிடப்பட்ட கேன்களிலும் போதை பொருட்கள் அமெரிக்காவிற்கு பறந்தன. 'அயன்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் கொகைனால் செய்யப்பட்ட இயேசு சிலையைப் பற்றி ஒரு காட்சியில் சூரியா சொல்வார். அந்த கைங்கரியத்தை செய்தது சாட்சாத் ஜோக்வின் தான். டெக்சாசில் இருக்கும் டல்லஸ் (Dallas) நகரில் உள்ள "தி ஸ்பைடர்" எனப்படும் சில்லறை விற்பனையாளனுக்கு தான் மேற்கூறிய இயேசு சிலை கடத்தப்பட்டது .
2007 இல் எம்மா என்ற 18 வயது பெண்ணை அவளுடைய 18 வது பிறந்தநாள் அன்று திருமணம் செய்தான். குஷியாக சென்று கொண்டிருந்த ஜோக்வினின் வாழ்வில் 2008 ஆம் ஆண்டு ஒரு பெருந்துயரம் நிகழ்ந்தது. அது என்னவென்று அடுத்த பாகத்தில் சொல்கிறேன்...
2 comments:
நல்ல தகவல் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி சசிகுமார். ஆனால் இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே...
Post a Comment