Monday, March 15, 2010

ட்ரான் லெகசி (Tron Legacy) 2010

         
அவதார் கிட்டத்தட்ட 237 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால் இது வரை அது உலகளவில் வசூலித்த தொகை கிட்டத்தட்ட 2600 மில்லியன் டாலருக்கும் மேல்.இன்னமும் அமெரிக்காவில்  பாக்ஸ் ஆபீசில் வசூலித்து கொண்டு இருக்கிறது.அவதாரை 20thசெஞ்சுரி பாக்ஸ் ஸ்டுடியோ வெளியிட்டது. கடந்த வாரம் அலிஸ் இன் வொண்டேர்லான்ட் வந்ததால் மேலும் வர வேண்டிய வசூல் வராமல் 'வடை போச்சே' என்று கவலைப் படுகிறதாம் பாக்ஸ் நிறுவனம்.கிட்டத்தட்ட அத்தனை ஹாலிவுட் ஸ்டுடியோக்களும்,பாக்ஸ் ஸ்டுடியோவைப் பார்த்து வயித்தெரிச்சலில் உள்ளன.பின்னே போட்ட காசைக் காட்டிலும் பத்து மடங்கு வருமானம் வசூலித்து விட்டதே.அதிலும் வால்ட் டிஸ்னி நிறுவனம் எப்படியாவது இவனுங்களை முந்தி காட்டனும் என்று முழு மூச்சில் இறங்கி உள்ளது. அதனால் தான் அவதாரைக் காட்டிலும் அதிக பொருட்செலவில், அதாவது கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் செலவில் ட்ரான் லெகசி (Tron Legacy) என்னும் திரைப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படம் 1982ஆம் ஆண்டு வெளியான ட்ரான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கிய ஜெப் பிரிட்ஜஸ் (Jeff Bridges) தான் இந்த முதல் பாகத்தின் கதாநாயகன். தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிப்பொறி கனவான்கள் மற்றும் தோழிகள் கொஞ்சம் கவனிக்க. நீங்கள் எழுதும் ப்ரோக்ராம்கள் விர்சுவல் உலகில் உயிர் பெற்று எழுந்தால் எப்படி இருக்கும். அது தான் ட்ரான் திரைப்படத்தின் மூலக் கரு. உண்மையை சொல்லப் போனால் இந்த படத்தின் இயக்குனர் Steven Lisberger ரெம்பவே அட்வான்சாக சிந்தித்து விட்டார். அதனால் தான் படம் பாக்ஸ் ஆபிசிலும், விமர்சகர்களிடமும் வெளியான போது மரண அடி வாங்கியது.  

கெவின் பிளின் (Jeff Bridges) என்ற ப்ரோக்ராமர் என்காம் (ENCOM) என்ற ஆர்கேட் (Arcade) கேம் தயாரிக்கும் நிறுவனத்தில் ப்ரோக்ராமாரக பணி புரியும் போது, அவன் எழுதிய ஸ்பேஸ் பேரநாய்ட்ஸ் (Space Paranoids) என்ற கேமுக்கு எழுதிய ப்ரோக்ராம்கள் உட்பட சில ப்ரோக்ராம்களை அவனுடைய சக ஊழியனான எட் டெலின்ஜார்  திருடி விடுகிறான். திருடியது மட்டும் இல்லாமல் கெவினை என்காமிலிருந்து அவனை டிஸ்மிஸ் செய்கிறான். கெவினிடம் வேறு ஆதாரம் இல்லாததால் அவனும் வெளியேற வேண்டிய நிலை.தனக்கு சொந்தமான ஒரு ஆர்கேட் நிலையத்தை (Flynn Arcade) நடத்தி வரும் கெவின், எப்படியாவது இந்த குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதற்காக டெலின்ஜார் உருவாக்கிய மாஸ்டர் கன்ட்ரோல் ப்ரோக்ராம்மை (M.C.P) ஹாக் செய்ய முயல்கிறான் கெவின்.இதை கண்டுபிடிக்கும் எட் டெலின்ஜார் கெவினை M.C.P க்குள் நுழைய முடியாமல் பல தடைகளைப் போடுகிறான்.

இதனால் அங்கு பணிபுரியும் சக நண்பர்களான ஆலன் பிராட்லீயையும் (Bruce Boxleitner), லோராவையும்  (Cindy Morgan) உதவிக்கு நாடுகிறான். ஆலன், ட்ரான் என்ற  செக்யூரிட்டி ப்ரோக்ராம்மை உருவாக்க, லெவல் 7 எனும் செக்யூரிட்டி கேட்வேயை தற்காலிகமாக தடை செய்கிறான் டெலின்ஜார். லோரி தன்னால் லெவல் 6 செக்யூரிட்டி மூலம் M.C.P க்கு ஆக்சஸ் தர முடியும் என்று கூறுகிறாள். என்காமுக்குள் மூவரும் நுழைய லோராவின் வொர்க் ஸ்டேஷனில் இருந்து ஹாக் செய்ய முயல்கிறான் கெவின். அந்த வொர்க் ஸ்டேஷனுக்கு அருகில் தான்  டிஜிடைசர் என்னும் பரிசோதனை முறை  சாதனம் உள்ளது.  அந்த M.C.P ஆனது தனக்கு என்று ஒரு செயற்கை அறிவை (Artificial Intelligence) உருவாக்கி கொண்டு இருக்கிறது. இதனால் கெவினை தன்னை  ஹாக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறது M.C.P.  அதைப் பொருட்படுத்தாத கெவினை டிஜிடைசர் மூலம் தன்னுடைய விர்சுவல் உலகத்திற்கு இழுத்து கொள்கிறது M.C.P. 

விர்சுவல் உலகத்திற்கு வரும் கெவின் அங்கு பல ப்ரோக்ராம்கள் தங்கள் யூசரைப் போன்றே தோற்றம் அளிப்பதைக் காண்கிறான். உதாரணமாக ஆலனின் ட்ரான் ப்ரோக்ராம் ஆலனைப் போன்றே தோற்றம் அளிக்கிறது. அங்கு இருக்கும் சார்க் என்ற கன்ட்ரோல் ப்ரோக்ராம் டெலின்ஜார் போன்றே தோற்றம் அளிக்கிறது. மேலும் இது போன்ற தவறும் ப்ரோக்ராம்கள், அல்லது டீபக் செய்யப் படாத ப்ரோக்ராம்கள் அங்கு சிறைப் பிடிக்கப் பட்டு ஆர்கேட் கேம்கள் விளையாடுவதற்கு உபயோகப் படுத்த படுகின்றன (Cloud Computing?). அந்த விர்சுவல் உலகில் இருப்பவை அத்தனையும் ப்ரோக்ராம்கள், கெவின் என்னும் யூசரைத் தவிர. அந்த விளையாட்டுகளில் தோற்கும் ப்ரோக்ராம்கள் டீ'ரெஸ்(De resolution) அதாவது டெலீட் செய்யப் படுகின்றன. சார்க்கின் முக்கிய நோக்கம் கெவினை டீ'ரெஸ் செய்வது தான்.

கெவின் இயல்பாகவே சிறப்பான கேமராக இருப்பதால் தான் பங்கு பெறும் விளையாட்டுகளில் சுலபமாக வெற்றி பெறுகிறான்.  அதிலும் முக்கியமாக ட்ரான் மற்றும் ரேம் எனும் சக ப்ரோக்ராம்களுடன் இணைந்து, லைட் சைக்கிள் (Light Cycle) என்னும் விளையாட்டில் வெற்றி பெற்று அந்த விர்சுவல் உலகில் உள்ள ஓட்டை மூலமாக மூவரும் தப்பிக்கிறார்கள். கெவின் அந்த விர்சுவல் உலகில் தனக்கென்று சில சக்திகள் இருப்பதை உணர்கிறான். உதாரணமாக உடைந்த வாகனங்களை அவனால் சரி பார்க்க முடிகிறது. ட்ரான் ப்ரோக்ராம் எப்படியாவது தனது யூசருடன் தொடர்பு கொள்ள முயல்கிறது. அதற்கு லோராவின் விர்சுவல் வடிவான யோரியின் உதவியை நாடுகிறது. இந்த மூவரும் இணைந்து இன்புட், அவுட்புட் டவரை ஒரு விர்சுவல் ஷிப் மூலமாக அணுகுகின்றனர். ட்ரான் தன் யூசருடன் தொடர்பு கொண்டதா, சார்க்கும் M.C.P யும் என்ன ஆனார்கள் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதன் முதல் பாகத்தின் டிரெயிலர் இதோ: 

 

இன்பார்மேஷன் சூப்பர்ஹைவே, சைபர் ஸ்பேஸ் பற்றி தெரியாத கூமுட்டை விமர்சகர்களால் இந்த படத்தைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை. மேலும் அப்போது கணினி பற்றிய அத்தனை அறிவு இல்லாததால், மக்களாலும் இதில் உபயோகிக்கப் பெற்ற டெக்னிக்கல் பதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. 'ஸ்டார் வார்ஸ்' எப்படி முதன் முறையாக கம்ப்யுட்டர் கிராபிக்ஸை உபயோகித்ததோ, அதே போல் முதன் முறையாக இந்த படத்தில் தான் கம்ப்யுட்டர் அனிமேஷனை வால்ட் டிஸ்னி உபயோகித்தது. இதனால் அங்கு இருந்த ரெகுலர் அனிமேஷன் ஆர்டிஸ்டுகள் இந்த படத்திற்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் இந்த கம்ப்யுட்டர் அனிமேஷன், தங்களது கன்வென்ஷனல் அனிமேஷனை அழித்து விடும் என்று பயந்தனர். அவர்கள் நினைத்ததைப் போலவே இந்த படம் வெளியாகி 22 வருடங்கள் கழித்து வால்ட் டிஸ்னி தனது கன்வென்ஷனல் அனிமேஷன் ஸ்டுடியோவை  மூடியது.

சரி இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி பேசுவோம். 27 வருடங்கள் கழித்து என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது வால்ட் டிஸ்னி எடுக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். 2000 ஆம் ஆண்டிற்கு பின் இந்த படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பல முறை, பல பேரிடம் ஸ்க்ரிப்ட் கேட்டு சோர்ந்து போயிருந்தது டிஸ்னி நிறுவனம். ஒரு வழியாக, 2008 இல் Brian Klugman  எழுதிய கதைக்கு  Adam Horowitz, Richard Jefferies, Edward Kitsis மூவரும் திரைக்கதை எழுத, Joseph Kosinskiயை இயக்குனராகப் போட்டு படத்தை ஆரம்பித்தது டிஸ்னி நிறுவனம். 

காமிக் கான் (ComicConvention) என்னும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட்டில் நடக்கும். அந்த நிகழ்வில் காட்சியாளர்கள் தங்களது படைப்பை பற்றி தகவல்களை, ட்ரைலர் போன்றவற்றை வெளியிடுவர். அதில் சென்ற காமிக் கானில் ட்ரான் லெகசியின் டெஸ்ட் புட்டேஜை வெளியிட்டது. டெஸ்ட் புட்டேஜே படு மிரட்டலாக இருந்தது. அதில் முதல் பாகத்தில் சொல்லப் பட்ட லைட் சைக்கிள் சீகுவன்சை வெகுச் சிறப்பாக செம்மைப் படுத்தி இருந்தனர்.

அந்த டெஸ்ட் புட்டேஜ் உங்கள் பார்வைக்கு:
   
 
இந்த ட்ரைலர் ஒரு வகையில் எனக்கு "The Real adventures of Johnny Quest" கார்டூனை நினைவுப் படுத்தியது. இந்த ட்ரைலரைப் பார்த்து கூட நான் அதனைக் கவரப் படவில்லை. மேலும் இந்த புட்டேஜ் படத்தில் உபயோகிக்கப் படாது என்றும் இதன் படைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இதன் இரண்டாம் ட்ரைலர் தான் படு மிரட்டலாக இருக்கிறது. அலிஸ் இன் வொண்டர்லேன்ட் திரைப்படம் பார்த்த போது ஐ மேக்ஸ் 3 டியில் இதன் ட்ரைலரை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். 300 மில்லியன் டாலர் செலவு செய்வதற்கு அர்த்தமாக அத்தனை அட்சர சுத்தமான விஷுவல்கள். இதோ உங்கள் பார்வைக்கு: 


உண்மையில் இது அடுத்த அவதார் என்றே சொல்லலாம். கண்டிப்பாக அவதார் அளவிற்கு இல்லை என்றாலும் போட்ட காசை வசூலித்து விடும்  என்றே நம்பலாம்.ஆனால் டிஸ்னி மார்க்கெட் செய்வதில் தான் எல்லாமும் உள்ளது. இதன் முதல் படியாக,இந்த படத்தின் முதல் பாகத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும்.முதல் பாகம் நான் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்தது. டாரண்டுகளில் தேடிய போது நல்ல ப்ரிண்டே கிடைக்கவில்லை. கடைசியாக இந்த படம் எனது பல்கலையில் படிக்கும் அனிமேஷன் துறை மாணவர்களுக்கு பாடமாக இருப்பது தெரிந்து இந்த படத்தின் டி.வி.டி யை பல்கலை நூலகத்தில் இரவல் வாங்கி பார்த்தேன்.சில காட்சிகள் கொஞ்சம் அமெச்சூர் தனமாக இருந்தாலும்,அப்போதைய தொழில்நுட்பத்தை பிரமாதமாக பயன்படுத்தி இருந்தனர். 

எனக்கு தெரிந்த ஆதி காலத்தில் படித்த சி ப்ரோக்ராம்,தரவுத்தள (டேட்டாபேஸ்) அறிவை வைத்து இந்த படத்தின் கதையை உங்களுக்கு விளக்கி உள்ளேன். இந்த படத்தின் டெக்னாலஜி பற்றி ப்ளோரிடாவில் வெட்டியாக பொட்டி தட்டிக் கொண்டு இருக்கும் ஹாலி பாலி உங்களுக்கு விளக்குவார். இந்த படத்தின் டைட்டில் எலெக்ட்ரான் என்ற பதத்தில் உருவாக்கப் பெற்றது.  இருப்பினும் 'TRON' என்ற கமான்ட், பழங்கால 'BASIC' ப்ரோக்ராம்மிங்கில் உபயோகிக்கப்பட்டது. அது என்னவன்றும் அதன் செயல்பாடு பற்றியும் சொல்பவருக்கும் ஹாலி பாலி ஒரு 100 டாலர் கிப்ட் கார்ட் பரிசளிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எப்புடி? 

டிஸ்கி: நீங்கள் எழுதும் பின்னூட்டங்களும், போடும் ஓட்டுகளும் தான் என்னை மேலும் எழுத உற்சாகபடுத்தும்.

8 comments:

ஹாலிவுட் பாலா said...

வாக்குறுதிதானே...??!!!

அள்ளி விடுவோம்!!! :)

நானும் இதோட ட்ரெய்லரை பார்த்தேன். அப்ப டீசர்தான் வந்திருந்தது. இந்தப் படத்தைப் பத்தி பிக்ஸார் ஸ்டோரி எழுதும் போது சொல்லியிருக்கேன்.

இதில்தான் முதன் முதலில், Ray Tracing முறையை உபயோகிச்சாங்களாம்.

படத்தை ஏன் அப்படித் தேடினீங்க? நெட்ஃப்ளிக்ஸில் ரிலே இருக்கே?

பிரசன்னா இராசன் said...

யாருமே அதுக்கு பதில் சொல்லலைங்க பாலா. அதனால தப்பிச்சீங்க. :P நெட்ப்ளிக்ஸ் அக்கௌன்ட் சப்ஸ்க்ரைப் பண்றதுக்கு கொஞ்சம் பண முடை. அதில்லாம எங்க பல்கலை நூலகத்திலேயே பெரிய மூவி லைப்ரரி இருக்கு. எல்லா க்ளாசிக்ஸ் மற்றும் ஐ.எம்.டி.பி டாப் படங்கள் அங்க இருக்கு. அப்படி இருக்க ஏன் காசு செலவு பண்ணனும் அப்பிடின்னு தான். கிராஜுவேட் ஸ்டுடென்ட் வாழ்க்கை பத்தி உங்களுக்கு தெரியுமே.

நேத்திலிருந்து கிட்டத்தட்ட 400 பேர் படிச்சு இருக்காங்க. நீங்க போட்டது தான் முதல் பின்னூட்டம். என்ன கொடுமை சார் இது?

ஹாலிவுட் பாலா said...

ஒருவேளை..., டெக்னிகல் மேட்டரையெல்லாம் பார்த்து டர்ஜ் ஆய்ட்டாங்களா??

பிரசன்னா இராசன் said...

ஹ்ம்ம் இருக்கலாம்... இதுக்கு தான் ரெம்ப தெளிவா பதிவு போடக் கூடாதுன்றது. ஒரு வேளை வீடியோவைப் பார்த்துட்டு என்னை மாதிரியே வாயடைச்சு போய் இருக்காங்களோ என்னவோ? :(

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

பல சுவையான தகவல்கள் கொண்ட தொகுப்பு,இதைத்தேடும் யாருக்காவது நிச்சயம் பலனளிக்கும்.
ஃபார்மாலிட்டிஸ் டன்

பிரசன்னா இராசன் said...

மிக்க நன்றி கார்த்திகேயன்...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

நல்லதொரு அறிமுகம். சிறப்பான பதிவு.

ரியோ said...

நேற்றுதான் இந்த படத்தைப் பார்த்தேன். இது போல மோசமான படத்தை இது வரை பார்த்ததேயில்லை. #$@#$#@
very bad watching experience...

Share