Saturday, February 27, 2010

பாஸ்கர் சக்தியின் ‘சாதனமும்’, க.சீ.சிவக்குமாரின் ‘காற்றாடையும்’
என்னுடைய எட்டாவது வயதில், பொழுதே போகாத கோடை விடுமுறை மாலை ஒன்றில், என் தாத்தா ‘இந்தா இதைப் படி’ என்று என் கையில் ஒரு புத்தகத்தை திணித்தார். அது கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’. ஏதோ ஒரு வேகத்தில் அந்த புத்தகத்தை படித்து முடிக்க தொடர்ந்து ’பட்டினத்தார் கதை’,’வள்ளலார் வரலாறு’ என்று அனைத்தையும் ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். என் வேகத்திற்கு தீனி போட முடியாத தாத்தா (ரெம்ப ஓவரான சுயபுராணமா இருக்கே. அடக்கி வாசி) போடிநாயக்கனூர் போன போது அங்கு இருந்த புத்தகக் கடை ஒன்றில் விகடன் வெளியீடான ‘ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ சிறுகதை தொகுப்பை வாங்கி வந்தார். அதில் எக்காலத்திலும் என்னால் மறக்க முடியாத கதைகளாக, ‘ராமய்யர் ஹோட்டல்’, ‘டிசம்பரும் மார்கழியும்’, ‘சந்தனக் கூடு’ ஆகியன இருந்தன. இதை எழுதிய எழுத்தாளர் பெயர்கள் நினைவில் இல்லை. அந்த புத்தகத்தையும் காணவில்லை.


மேலும் சுஜாதாவின் ‘பிள்ளையார் பேசுகிறார்’ (இதுவும் சரியான தலைப்பா என்று நினைவில் இல்லை) என்ற கதையையும் அதில் தான் படித்தேன் என்று நினைவு. அந்த கதை ‘செல்லமே’ திரைப்படத்தில் விஷால், கிரீஷ் கார்னட் வீட்டிற்கு ரெய்டு செல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும். ஆக, இப்படித் தான் ஆரம்பித்தது என் சிறுகதை வாசிப்பு. நான்கு வயதில் சிறுவர் மலரும், ஒன்பது வயதில் க்ரைம், பாக்கெட் நாவல் படிக்க தொடங்கியது தனிக் கதை. ( நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல)

அப்பா அவ்வப்போது ‘கணையாழி’ புத்தகம் வாங்கி வருவார். அதில் வரும் கதைகள் புரிந்ததோ இல்லையோ வாசித்தேன். அம்மா நான் அதை படிக்கும் போது மிக பெருமையுடன் பார்ப்பாள் (இந்த பையனுக்குள்ளயும் ஏதோ ஒளிஞ்சுகிட்டிருக்கு பாரேன்). 1995 ஆம் ஆண்டு அதாவது நான் ஆறாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எங்கள் வீட்டிற்கு ’இந்தியா டுடே’ செய்தித்தாள்களோடு சேர்ந்து வரும். அப்போது எழுத்தாளர் வாசந்தி அவர்கள் தான் அதன் எடிட்டராக இருந்தார் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

அப்போது பளபளப்பான அட்டை படத்துடன் ஒரு புத்தகம் ஒரு நாள் வந்திருந்தது. விலை அப்போதே 100 ரூபாய். ஆனால் அந்த அட்டையில் போடப்பட்டிருந்த டிஸைனுக்கே 100 ரூபாய் தரலாம். அழகாக எம்பாஸ் செய்யப்பட்ட நவீன ஓவியத்துடன் இருந்த அட்டைப்படம் (கடைசியாக 2008ல் இந்தியா சென்ற போது அந்த அட்டையைக் காணவில்லை). அந்த புத்தகத்தை எடுத்து பார்த்த போது நிறைய சிறுகதைகள், கவிதை, குறுநாவல்கள் (சி.சு.செல்லப்பாவின் ’வாடிவாசல்’ மறுவெளியீடு செய்யப்பட்டது) ஆகியன இருந்தன. அதன் வகை, தொகைகள் அப்போது தெரிந்திருக்கவில்லை. வழக்கமாக ஏதோ கதை புத்தகத்தை படிப்பது போல் படித்து முடித்தேன்.

அதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ‘சாதனம்’ என்னும் கதை. சாதாரணமாக ஒரு மில் வேலைக்கு கிராமத்தில் இருந்து செல்லும் ஒருவன் வேலைக்கு செல்லும் பேருந்தை தவற விட, அங்கே திரியும் இளவட்டங்களுடன் இணைந்து பஞ்சாயத்து தொலைக்காட்சியில் அன்று நடக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்சை பார்க்கிறான். மிகச் சாதாரணமான கதையாக இருந்தாலும், மிகவும் அழகான வர்ணனையுடன் ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் புரியும் வகையில் எழுதியிருந்தார். பஞ்சாயத்து டி.வியின் கதவு பற்றி அவர் அளித்த வர்ணனையும் அதனைத் தொடரும் நிகழ்வுகளும் எனது அப்போதைய கிரிக்கெட் நிகழ்வுகளை பிரதிபலித்தன. இருந்த அத்தனை கதைகளில் அது தான் அப்போது பிடித்த கதையாக இருந்தது.

மேற்கூறிய சிறுகதை அறிமுக எழுத்தாளருக்கான இரண்டாம் பரிசு பெற்ற கதையாக இருந்தது. முதல் பரிசு பெற்ற கதை என்னவென்று பார்த்தால் ‘காற்றாடை’ என்ற கதை இருந்தது. நண்பனுடன் திரைப்படத்திற்கு செல்லும் ஒருவன், வழியில் ஆடையில்லாமல் நிர்வானமாய் அலையும் ஒரு புத்தி சுவாதீனமற்ற (??) ஒருவனை பார்க்கிறான். அந்த நிர்வாண மனிதனுக்கு கதை நாயகன் வேட்டி வாங்கி கொடுக்க அதை ஒரு வித ஏளனப் புன்னகையுடன் அவன் பெற்று கொள்கிறான். மறுநாள் நம் நாயகர் பார்க்க திரும்பவும் அதே நிர்வானத்துடன் அலைகிறான். முதலில் படித்த போது இந்த கதை பிடித்திருக்கவில்லை.

நான்கு வருடங்கள் கழித்து பத்தாம் வகுப்பு விடுமுறையில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திரும்பவும் அந்த புத்தகம் கண்ணில் பட்டது. அப்போது வாசித்த போது தான் முந்தைய கதையை எழுதியது ‘பாஸ்கர் சக்தி’ என்றும், பின்னவர் ‘க.சீ.சிவக்குமார்’ என்று தெரிந்தது. மற்ற கதைகளை எல்லாம் படித்த பார்த்த பின் தான் தெரிந்தது, எழுத்துலக ஜாம்பவான்கள் அனைவரும் அதில் எழுதியிருக்கின்றனர் என்று.

இதை ஏன் இப்போது எழுதுகிறேன் என்றால், ஒரு முறை பாஸ்கர் சக்தி அவர்களை சந்தித்த போது அவருடைய ‘சாதனம்’ சிறுகதையைப் பற்றி கூறினேன். அப்போதும் கதையின் தலைப்பு எனக்கு மறந்து விட்டிருந்தது. வீட்டிற்கு வந்த போது அதை மறு வாசிப்பு செய்தேன். ஏனோ தெரியவில்லை அதைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதி விட்டேன். பாஸ்கர் சக்தி சார்!! இந்தியா டுடே உங்களுடைய கதையின் கட்டமைப்பில் ஒரு சொதப்பல் செய்து இருந்தனர். அதையும் இப்போது தான் பார்த்தேன். அது என்னவென்று தெரிந்ததா?

Friday, February 26, 2010

சுஜாதா - என்னை உருவாக்கிய பேராளுமை


ஒரு எட்டு வயது இருக்கும் போது தான் முதன் முதலில் சுஜாதாவின் சிறுகதையை படித்தாக நினைவு. விகடன் வெளியீடாக ‘ட்விங்கிள்,ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்ற சிறுகதை தொகுப்பில் இருந்த ‘பிள்ளையார் பேசுகிறார்’ (கதையின் தலைப்பு சரியா என்று நினைவில்லை) என்ற கதையை தான் முதன் முதலில் படித்தேன். பிள்ளையாரே அந்த கதை சொல்வதாக அமைந்து இருக்கும். அந்த சிறுகதை பின்னர் ‘செல்லமே’ படத்தில் விஷால், கிரீஷ் கார்னட் வீட்டிற்கு ரெய்டு செல்வது போல் அமைக்கப் பட்டிருக்கும். தங்கத்திற்கு பாதரசம் பூசினால் வெள்ளி போல் தோற்றமளிக்கும் என்ற இரசாயண பாடத்தை அந்த கதை மூலம் தான் கற்றுக் கொண்டேன். முதலில் அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்தேன். பின்னர் அப்பா ‘கணையாழியின் கடைசி பக்கங்களில்’ வந்த அவருடைய புகைப்படம் ஒன்றை காட்டினார்.

இப்படித் தான் ஆரம்பித்தது எனது சுஜாதா வாசிப்புப் படலம். அவ்வப்போது குமுதம், விகடனில் வந்த கட்டுரைகள் மூலம் எனது வாசிப்பு பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. 10 ஆம் வகுப்பு விடுமுறையில் திரும்ப தீவிரமான வாசிப்பை தொடர்ந்தேன். 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் மனித மரபணுக்களின் தொகுப்பான ‘ஹியூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்’ தொடங்கப் பட்டது. இது ஒரு வகையில் எனக்கு பயோடெக்னாலஜியின் மீதான ஆர்வத்தை அதிகப் படுத்தியது. ஆயினும் அது என்ன, ஏதென்று அவ்வப்போது ஹிந்துவில் வெளிவந்த சில கட்டுரைகள் மற்றும் மனோரமா இயர்புக் போன்றவை விளக்கினாலும் அது பற்றிய எளிமையான விளக்கம் இல்லாத்தால் அவ்வளவாக எனக்கு புரியவில்லை.

அப்போது தான் சுஜாதா ‘ஜீனோம்’ என்ற தொடரை குமுதத்தில் எழுத, பின்னர் விசா பப்ளிஷர்ஸ் வெளியீடாக புத்தகமாக வந்தது. அது வாங்கி வாசித்த பின்னர் தான் ஜீனோம் என்றால் என்ன, அதனால் என்ன பயன், அது உருவாக்கும் ஆராய்ச்சி வாய்ப்புகள் என்ன என்பது தெளிந்த நீரோடை போல் புரிந்தது. அந்த புத்தகம் தான் என்னை இளங்கலை பொறியியல் படிப்பில் பயோடெக்னாலஜி எனும் உயிரி தொழில்நுட்பத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்ய வைத்தது.

ஒரு வகையில் என் வாழ்வை மாற்றிய ஆளுமை என்றே சுஜாதாவை சொல்லாம். அதனால் தான் இந்த தலைப்பை தந்து உள்ளேன். இளங்கலை படிப்பில் சேர்ந்த பின் என்னுடைய பல்கலை நூலகத்தில் உள்ள சுஜாதாவின் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்தேன். அவரின் மிச்ச், சொச்ச புத்தகங்கள் அனைத்தையும் திருச்சி கார்முகில் வாடகை நூலகத்தில் வாசித்து முடித்தேன். ஒரு கட்டத்தில் அவரின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிக்க ஆரம்பித்தால், இரண்டு பக்கம் போன பின் தான் தெரியும் அதை ஏற்கனவே படித்து விட்டேன் என்பது.

2006ஆம் ஆண்டில், இளங்கலை நான்காம் ஆண்டு படித்து கொண்டு இருந்த போது ‘பேசும் பொம்மைகள்’ நாவலை ஒரு பேருந்து பயணத்தில் வாசித்து கொண்டு இருந்தேன். 1991இல் வெளிவந்த அந்த நாவலில் ‘சைக்ளோஸ்போரின்’ (Cyclosporin) என்ற மருந்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்த மருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது உபயோகப் படுத்தப் படும். ஆனால் அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும். அதைப் பற்றி இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் என்னுடைய இறுதி ஆண்டு ப்ராஜெக்ட், உயிரி தகவலியில் (Bio Informatics) முறைகள் படி சைக்ளோஸ்போரினுக்கு மாற்று மருந்து கண்டு பிடிப்பது. ஒரு நிமிடம் புத்தகத்தை மூடி வைத்து விட்டு ‘இந்த ஆள் எழுதாதது என்று எதுவுமே இல்லையா’ என்று ஆச்சரியப் பட்டு கொண்டேன்.

விஞ்ஞான கட்டுரைகளை ஒரு பள்ளி மாணவனும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு எழுதிய பேராளுமை அவர். விஜய் டி.வியில் மூன்று வருடங்களுக்கு முன் ஓளிபரப்பான ‘சிகரம் தொட்ட மனிதர்கள்’ நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டி ஒன்றை சமீபத்தில் தான் பார்த்தேன். அதிலும் மனிதர் அறிவியல் கட்டுரைகளையும் அதன் அவசியத்தையும் கூறிக் கொண்டு, போகிற போக்கில் ‘நானோடெக்னாலஜி’ பற்றி கூறினார். இப்போது முதுகலை படிப்பில் நானோடெக்னாலஜி முறைப்படி ப்ராஸ்டேட் கான்சருக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இதையும் இவர் விட்டு வைக்கவில்லையா என்று மனதிற்குள் சிரித்து கொண்டேன்.

நினைத்து பார்க்கும் போது என் வாழ்வின் முக்கியமான தருணத்தை தீர்மானிப்பதில் சுஜாதா பெரும் பங்கு வகித்திருக்கிறார். அவரைப் பற்றி இதற்கு மேல் என்ன எழுதுவது என்று யோசிக்கும் போது இவர் இல்லாத வெறுமை ஒன்று தான் என்னை சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் சுஜாதாவை பற்றி நினைக்கும் போது எல்லாம் நண்பர்களுடன் பேசி சிரித்த ‘மெக்ஸிகோ சலவைக்காரி’ ஜோக் நினைவுக்கு வந்து என் முகத்தில் புன்முறுவல் ஏற்படுத்த தவறுவதில்லை...

Thursday, February 11, 2010

பாலு மகேந்திராவின் கதை நேரம்
வீட்டில் அப்போது கேபிள் இணைப்பு இல்லை. அதற்க்கு சொல்லப்பட்ட காரணம் , எனது படிப்பின் லட்சணம். எல்லாவற்றுக்கும் சுதந்திரம் கொடுத்த அப்பா ஏனோ இதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்து விட்டார். ஒரு அளவை மீறி கார்ட்டூன் நெட்வொர்க் பார்த்ததால் வந்த விளைவு. வீட்டில் குவிந்து கிடந்த புத்தகங்களால் தொலைக்காட்சியைக் கிட்டத்தட்ட மறந்திருந்த நேரம். அப்போது வந்த வார இதழ் ஒன்றில் பாலு மகேந்திரா தொலைக்காட்சியில் நாடகம் இயக்கப் போகிறார் என்று செய்தி இருந்தது. அய்யோ பாலு மகேந்திராவின் நிலை இப்படியா ஆக வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. அதன் பின்னர் தான் தெரிந்தது தமிழ் எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த சிற்கதைகளை குறும்படங்களாக இயக்கப் போகிறார் என்று.

ஒரு மாலை நேரச் சூழலில் அம்மா போட்டுக் கொடுத்த தேநீருடன் பாலு மகேந்திராவின் படம் பார்க்கும் அனுபவமே அலாதி. ஏனோ அப்பாவிற்கு பாலு மகேந்திராவை சுத்தமாகப் பிடிக்காது. காரணம் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகை ஷோபா. ’மூன்றாம் பிறைபார்த்து விட்டு நான் அழுத அழுகையில் இனிமேல் அந்த படத்தை நான் பார்க்கவே மாட்டேன் என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால்சந்தியா ராகம்’,’வீடு’,’சதிலீலாவதி’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலித்திருக்கவில்லை.

எப்படியாவது இந்த தொடரைப் பார்க்க வேண்டும் என்று அம்மாவிடம் கேபிள் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கொக்கி போட்டு பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை. ஒரு முறை நண்பனின் வீட்டிற்கு சென்ற போது, அசோகமித்திரனின் ஒரு சிறுகதை படமாக்கப் பட்டு ஓடிக் கொண்டிருந்தது. அதன் தலைப்பு கூட நினைவில்லை. ஒரு பிராமணருக்கும், அவர் வீட்டின் எதிரில் தள்ளுவண்டியில் மீன் வறுத்து விற்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும் கதை. அதற்கு பின் ஒரு எபிஸோட் கூட பார்க்கவில்லை.

வெகு நாட்கள் கழித்து நானும் நண்பர் முரளியும் உரையாடிக் கொண்டிருந்த போது இதைப் பற்றி கூறினேன். அதற்கு அவர் சமீபத்தில்
பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற போது கதை நேரம் டி.வி.டியைக் காட்டியதாகவும், அது பவா செல்லத்துரை அவர்களின் வம்சி பப்ளிசர்ஸ் வாயிலாக வெளி வரப் போவதாகவும் கூறினார். ஒரு வேளை இப்போது வந்து இருக்கலாம், எதற்கும் டி.நகர் நியூ புக் லேண்டில் பார்க்கலாம் என்று கூறினார். கி.ராவுடன் ஞாநியின்கேணியில் நடந்த சந்திப்பிற்கு மறுநாள் நானும் அவரும் அங்கு சென்றோம். நாங்கள் நினைத்தது போலவே அங்கு டி.வி.டி இருந்தது.

கதை நேரத்தில் மொத்தமாக 52 குறும்படங்கள். டி.வி.டியின் முதல் பாகமான இதில் ஆறு குறும்படங்கள் இருக்கின்றன. சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்', சுஜாதாவின் 'நிலம்', பிரபஞ்சனின்’ஒரு மனுஷி', திலகவதியின் ‘ஒரு முக்கோண காதல் கதை’, சு.சமுத்திரத்தின் ‘காத்திருப்பு’ மற்றும் ஜெயந்தனின் காயம்’ ஆகிய சிறுகதைகளை இந்த முதல் பாகத்தில் தொகுத்து உள்ளனர்.

சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்'
சு. ராவின் 'பள்ளம்' என்னை மிகவும் பாதித்த கதை. ஆனால் அதை படமாக்குவது முடியாது. என்னைப் பொறுத்த மட்டில் அவரின் படமாக்கக் கூடிய கதைநாடார் சார்’. 1997 ‘தினமணிபொங்கல் மலரில் வெளியானது. நான் எட்டாம் வகுப்பு படித்த போது வெளிவந்த அந்த கதையில் இருந்த சூழலும், என் பள்ளி சூழலும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது. அந்த கதையை நான் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் எனது மனதில் அது ஒரு குறும்படமாகவே ஓடும்.

’பிரசாதம்’ கதையை இது வரை வாசித்தில்லை. பாலு மகேந்திராவின் திரை மொழியில் மிகவும் எளிமையான கதையாக காட்சி அமைக்கப் பட்டிருந்தது. ஒரு அதிகாலையில் கோவிலில் பூஜை செய்யும் பூசாரி ஒருவருக்கு, பக்தர் ஒருவர் நூறு ரூபாயை காணிக்கையாக இடுகிறார். அடுத்த காட்சி கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி, தங்களின் குழந்தைக்கு காது குத்துவதற்காக தன் கணவரிடம் ஒரு நூறு ரூபாய கேட்பதாக அமைகிறது. இதற்கு பிறகு நீங்களே கதையை ஊகித்து இருப்பீர்கள்.

மிகவும் சிக்கலான விடயங்களை, ஒரு வித எள்ளல்தன்மையோடு அனுகும் பாலு மகேந்திராவின் பாணி, இந்த குறும்படம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. கான்ஸ்டபிளாக ஜீனியர் பாலையா, அவரின் மனைவியாக மெளனிகா நடித்து உள்ளனர். அந்த பூசாரியாக நடித்தவர் திரைக்கு புதியவர் என்றே நினைக்கிறேன். ஆயினும் அவரின் நடிப்பு ஒரு தேர்ந்த நடிகரின் முதிர்ச்சியை வெளிபடுத்தியது. குறும்படம் முழுவதும் நீங்கள் சிரித்து கொண்டிருந்தாலும், அந்த இறுதி காட்சி எல்லோரின் கண்களில் சிறு நெகிழ்ச்சியையாவது ஏற்படுத்தும்.

சுஜாதாவின் ‘நிலம்’
சுஜாதாவின் பல நாவல்கள், படமாக்க படும் போது அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கபடுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார். அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம். ஆயினும் அவரே ‘தன் நாவல்கள் இவரால் படமாக்க படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின் அது பாலு மகேந்திரா தான்.

அம்பலம் மின்னிதழில் சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”என் நாவல்கள் எதுவும் அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில். எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை.

தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார். இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.”

சுஜாதாவின் சிறுகதைகள் ஆழமற்றவை என்று பல பேர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அது உண்மையல்ல. அவரின் கதைகளில் மிகவும் நுண்ணிய தகவல்கள் புதைந்து கிடக்கும். புதிதாக சமகால இலக்கிய படைப்புகளை வாசிப்பவர்களுக்கும் மிகத் தெளிவாக புரியும். இதனால் தான் புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் என் நண்பர்களுக்கு சுஜாதாவின் புத்தகங்களை பரிந்துரைப்பேன்.

‘நிலம்’ கதையையும் சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொணியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மிக கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு ஒரு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது. அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார். நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்ம ப்ரயத்தங்கள் தான் மீதிக் கதை.

பிரபஞ்சனின் ‘ஒரு மனுஷி’

’எழுத்து ஒரு பிழைப்பு ஆகாது’ என்று விரக்தியின் உச்சியில் குமுதம் ‘ஜங்ஷன்’ இதழுக்கு பிரபஞ்சன் அளித்த பேட்டி தான், அவரைப் பற்றி நான் முதலில் அறிந்தது. அதன் பின்னர் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த அவருடைய ’வானம் வசப்படும்’ நாவலை வாசித்தேன். பாண்டிச்சேரியை ‘ட்யூப்ளக்ஸ்’ ஆண்ட போது அவரின் திவானாக இருந்த ‘அனந்தரங்கரின்’ டைரி குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட சுவாரஸ்யமான நாவல். ‘அனந்தரங்கரின் டைரி குறிப்பை’ திருடி எழுதிவிட்டார் என்ற அபாண்டமான விமர்சனம் இந்த நாவலால் தான் எழுந்தது.

பிரபஞ்சனின் சில சிறுகதைகள் மட்டுமே படித்து உள்ளேன். அவை பெரும்பாலும், 2005, 2006 - ல் ‘தீராநதி’,’உயிர்மை’ இதழ்களில் வெளி வந்தவை. அவரின் ‘மீன்’ சிறுகதையை பொதிகை தொலைக்காட்சியில் குறும்படமாக அம்மா பார்த்த போது, உனக்கும் இதே போல் தான் பொண்டாட்டி வரப்போகிறாள் என்று அம்மா என்னை நக்கலடித்தாள். (இந்த சிறுகதையைப் பற்றி அப்புறம் சொல்றேன்)

சினிமாவில் பணிபுரியும் துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோரின் உலகம் வெளிபூச்சுகளற்றது. அவர்களின் வாழ்வில் நிலவும் வெறுமையையும், வறுமையையும் அசோகமித்திரன், சுஜாதா, திலகவதி ஆகியோர் தத்தம் கதைகளில் வெளிபடுத்தி உள்ளனர். அதே வரிசையில் தான் இந்த கதையும் இடம் பெறுகிறது. வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், பிலிம் ரோல் வாங்க காசு இல்லாமல் இருக்கும் ஒரு உதவி புகைப்பட கலைஞன், தனக்கு தெரிந்த துணை நடிகை ஒருத்தியை புகைப்படம் எடுக்க செல்வது தான் இந்த கதையின் சாரம். துணை நடிகையாக மெளனிகா, புகைப்பட கலைஞராக சஷி நடித்து உள்ளனர். இந்த கதையின் பிண்ணனியில் இந்த தொடர் வெளிவந்த போது நடந்த ஃபெப்ஸி, படைப்பாளிகள் மோதலையும் ஒரு பாத்திரமாக உலவ விட்டிருந்தார் பாலு மகேந்திரா. அகிரா குரோசாவாவின் படங்களின் இறுதி காட்சிகள் உங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். அதே போல் தான் இந்த குறும்படங்களின் இறுதி காட்சிகளும்.

இந்த டி.வி.டி இப்போது என் கையில் இல்லை. நினைவிடுக்குகளில் இருப்பதை மட்டுமே உங்களுடன் பகிர்கிறேன். மீதம் உள்ள மற்ற மூன்று குறும்படங்களைப் பற்றி அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

Monday, February 8, 2010

தமிழருவி மணியன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள் பாகம் 2அரசியலில் நல்லவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தமிழகத்தில் யாரிடமாவது கேட்டால், சமகாலத்தில் உள்ளவர்களின் பெயரை அவர்களின் பதிலில் எதிர்பார்க்க முடியாது. இரண்டு வருடம் கட்சியில் இருந்தால் போதும் ராக்கெட் வட்டியில் கடன் வாங்கி, காசு கொடுத்து எம்.பி சீட் வாங்கி விடலாம் என்று இருப்பவர்கள் மத்தியில், அங்காங்கு அரசியல் அப்பாவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் தமிழருவி மணியன்.

முதன் முதலில் தமிழருவி மணியன் பேசக் கேட்டது, 2007ஆம் ஆண்டு. அப்போது சென்னை சங்கமம் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ஜீவா, புதுமைபித்தன், என்.எஸ்.கே நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடந்தது. புதுமைப்பித்தனைப் பற்றி எஸ்.ராவும், ஜீவா பற்றி தமிழருவியும் பேசினர். ஜீவாவைப் பற்றி அன்று அவர் பேசிய பேச்சு உண்மையில் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. இது க்ளிஷே ஆகத் தோன்றினாலும் அது தான் உண்மை. ஜீவாவைப் பற்றி படித்தும், கேட்டும் தெரிந்த எனக்கு, தமிழருவியின் உணர்வு பூர்வமான பேச்சு ஜீவா என்ற மனிதரை என் கண் முன்னே நிறுத்தியது. ஆனந்த விகடனில் அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளையும், இளைஞர்களை ஊக்குவிக்கும் கட்டுரைகளும் படித்த எனக்கு அவரின் பேச்சு எனக்கு அவர் மீது இருந்த மதிப்பை உயர்த்தியது.

1948 இல் பிறந்த மணியன் அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த போது அரசியலில் ஈர்க்கப் பட்டார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர், காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காமராஜர் விருதுநகரில் தேர்தலில் நின்ற போது, அவரின் இலக்கியம் சார்ந்த அரசியல் பேச்சைக் கேட்ட காமராஜர் தமிழருவி என்ற பட்டத்தைக் கொடுத்தார். காமராஜரின் மறைவுக்கு பிறகு ஸ்தாபன காங்கிரஸில் ஈடுபாடு கொண்டு அதில் இணைந்தார். ஸ்தாபன காங்கிரஸ் பின்னர் ஜனதாவாக உருவெடுத்தது. அங்கு அவர் புறக்கணிக்கப் பட இராமகிருஷ்ண ஹெக்டேவின் ‘லோக் சக்தி’யில் இணைந்தார்.

‘லோக் சக்தி’ பாரதிய ஜனதா அமைச்சரவையில் இடம்பெற அதை எதிர்த்து அதிலிருந்து விலகினார். மூப்பனாரின் மறைவுக்கு பின்னர் த.மா.க காங்கிரசில் இணைந்த பிற்பாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு திட்டக் குழுவின் உறுப்பினாரகவும் இருந்தார். 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடை கண்டித்து, திட்டக் குழு உறுப்பினர் பதவியையும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் உதறினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்திய அரசியல் இயக்கம் என்ற ஒரு அமைப்பை நிறுவினார். இயக்கத்தின் பெயரில் எனக்கு ஒரு அசுயை இருந்தாலும், அதன் கொள்கைகள் தான் என்னை மிகவும் கவர்ந்தன. இந்த இயக்கத்தில் இணைபவர்கள் எந்த காலத்திலும் சட்டமன்ற, பாராளுமன்ற ஏன் சாதாரண பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்கக் கூடாது. இதன் உப அமைப்பாக 'பஞ்சாயத்துக்கு பத்து பேர்' என்ற அமைப்பும் இயங்குகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்தில் ஒரு பத்து பேரைக் கொண்டு நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என்பதே இந்த உப அமைப்பின் குறிக்கோள்.

ஒரு நடுநிலை அரசியல் விமர்சனாக செயல் படுவது, தமிழகத்தில் அதுவும் தற்போது உள்ள நிலையில் கத்தி முனையில் நடப்பதற்கு சமம். அப்படி இருக்கையில் அவர் அரசியல் கட்சிகளை மிகவும் வெளிப்படையாக விமர்சிப்பது, உண்மையில் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. அரசியல் மட்டுமல்லாது ஆன்மிகத்திலும் ஈடுபாடுடன் செயல் படுகிறார். ஆன்மிகம் என்றால் பக்தி மார்க்கம் சார்ந்து அல்ல. அகம் சார்ந்த பகுத்தறிவு மிக்க ஆன்மிகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து இயங்குகிறார். வேதாத்திரி மகரிஷி, புத்தர், வள்ளலார் போன்றவர்களைப் பற்றி அவர் ஆற்றிய உரைகள் அவரின் ஆன்மிக நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கின்றன.

அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். அவர் 2009 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு பொதுக் கூடத்தில் ஆற்றிய உரையை இங்கே அளித்துள்ளேன்:


அரசியலில் அதிலும் தமிழக அரசியலில் அப்பாவியாக இருக்கும் தமிழருவி மணியன், என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகளில் மிகவும் பிடித்தவராக ஆனதில் ஆச்சரியம் இல்லை.

பி.கு: இந்த பதிவு எல்லோருக்கும் சென்று சேர தமிழிசிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு போடுங்கள்.

Friday, February 5, 2010

கர்ண மோட்சம் குறும்படத்திற்கு தேசிய விருது


நானும் முரளியும் எந்த புள்ளியில் நண்பர்கள் ஆனோம் என்று சத்தியமாக நினைவில்லை. ஆனால், நாங்கள் இணைவதற்கு காரணமாக இருந்தவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். என் நண்பன் தென்னரசு ஓர்குட்டில் எஸ்.ராவிற்காக ஒரு குழுமத்தை தொடங்கிய பொது தான் நானும் முரளியும் நண்பர்கள் ஆனோம். 2006 அக்டோபர் மாதத்தின் ஒரு மதிய வேளையின் போது தான் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் அன்று பார்த்த திரைப்படம் 'சென்ட்ரல் ஸ்டேஷன்'. அவருடைய முதல் குறும்படமான 'அக்காலம்' படத்தை அன்று தான் பார்த்தேன். 15 நிமிடம் ஓடும் அந்த குறும்படத்திலேயே மனிதர் பல சங்கதிகளை சொல்லி இருந்தார். அப்போது தான் 'கர்ண மோட்சம்' போஸ்டரை அவர் அறையில் பார்த்தேன். கதை, வசனம் - எஸ். ராமகிருஷ்ணன். திரைக்கதை, இயக்கம் - ச.முரளி மனோகர் என்று போட்டிருக்க, எனது ஆவல் கூடியது. வெகு விரைவில் டி.வி.டி வந்து விடும், காட்டுகிறேன் என்றார்.


அதே போன்ற ஒரு மதிய நாளில் தான் 'கர்ண மோட்சம்' குறும்படத்தை பார்த்தேன். எஸ்.ராவின் 'உபபாண்டவம்' என்னுள் மகாபாரதத்தின் மீதான காதலை அதிக படுத்தி இருந்தது. அவருடைய அந்த நாவலின் சமகாலப் பிரதியாகத்தான் இந்த குறும்படம் எனக்கு தோன்றியது. ஒரு 13 நிமிட குறும்படம் இவ்வளவு வலிமையான செய்தியை சொல்ல முடியுமா என்று, அது வரை எனக்கு தோன்றி இருக்கவில்லை. இந்த குறும்படத்தை வழக்கமான விமர்சனம் போல் எழுத முடியவில்லை. அதனால் இந்த படத்தை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.


இது வரை 60க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று இருக்கும் 'கர்ண மோட்சம்', 2008 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த குறும்படம் மற்றும் சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருதை வென்றுள்ளது. இது மட்டுமல்லாது கேரளா சர்வதேச திரைப்பட விழா, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா, கனடிய சர்வதேச தமிழ் திரைப்பட விழா ஆகியவற்றில் சிறந்த குறும்படம் மற்றும் இயக்குனருக்கான விருதை வென்று உள்ளது.

இதற்க்கெல்லாம் மகுடமாக இந்திய அரசின் தேசிய திரைப்பட விருது 'கர்ண மோட்சத்திற்கு' கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெரும் முதல் தமிழ் குறும்படம் 'கர்ண மோட்சம்' என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தமிழ் மீடியாக்கள், பாலா சிறந்த இயக்குனர் விருது பெற்றதை பற்றி மட்டும் எழுதி இருந்தன. வெகு நாட்கள் கழித்து, ஒரு வழியாக இந்த வார ஆனந்த விகடனில், முரளியினுடைய பேட்டி வெளியாகி உள்ளது. அவருடைய அனுமதியின் பேரில் உங்கள் அனைவரின் பார்வைக்காக, இந்த குறும்படத்தை இங்கு பதிவிடுகிறேன்.

கர்ண மோட்சத்திற்கு விருது கிடைத்ததற்கான ஆதார பட்டியல் இங்கே


முதல் பாகம்:


இரண்டாம் பாகம்:


இது வரை எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இந்த குறும்படத்தின் ஆதார செய்தி மட்டும் நினைவில் வந்து போகிறது: 'கதிரவன் ஈன்ற மைந்தன் அதிக பலமுடையோன்"

போகிற போக்கில் ஏதேனும் பின்னூட்டங்களும், அதோடு தமிழ்மணத்திலும் தமிழிசிலும் ஓட்டு போடுங்கள்...

பின் குறிப்பு: இந்த வீடியோவை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் உபயோகிக்க நினைத்தால் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டம் இட்டு செல்லுங்கள். காரணம்: யூடியுப் இணையதளத்தால் காப்பி ரைட் செய்யப்பட வீடியோவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது...

Share