என்னுடைய எட்டாவது வயதில், பொழுதே போகாத கோடை விடுமுறை மாலை ஒன்றில், என் தாத்தா ‘இந்தா இதைப் படி’ என்று என் கையில் ஒரு புத்தகத்தை திணித்தார். அது கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’. ஏதோ ஒரு வேகத்தில் அந்த புத்தகத்தை படித்து முடிக்க தொடர்ந்து ’பட்டினத்தார் கதை’,’வள்ளலார் வரலாறு’ என்று அனைத்தையும் ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். தாத்தா போடிநாயக்கனூர் போன போது அங்கு இருந்த புத்தகக் கடை ஒன்றில் விகடன் வெளியீடான ‘ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ சிறுகதை தொகுப்பை வாங்கி வந்தார். அதில் எக்காலத்திலும் என்னால் மறக்க முடியாத கதைகளாக, ‘ராமய்யர் ஹோட்டல்’, ‘டிசம்பரும் மார்கழியும்’, ‘சந்தனக் கூடு’ ஆகியன இருந்தன. இதை எழுதிய எழுத்தாளர் பெயர்கள் நினைவில் இல்லை. அந்த புத்தகத்தையும் காணவில்லை.
மேலும் சுஜாதாவின் ‘பிள்ளையார் பேசுகிறார்’ (இதுவும் சரியான தலைப்பா என்று நினைவில் இல்லை) என்ற கதையையும் அதில் தான் படித்தேன் என்று நினைவு. அந்த கதை ‘செல்லமே’ திரைப்படத்தில் விஷால், கிரீஷ் கார்னட் வீட்டிற்கு ரெய்டு செல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும். ஆக, இப்படித் தான் ஆரம்பித்தது என் சிறுகதை வாசிப்பு.
அப்பா அவ்வப்போது ‘கணையாழி’ புத்தகம் வாங்கி வருவார். அதில் வரும் கதைகள் புரிந்ததோ இல்லையோ வாசித்தேன். 1995 ஆம் ஆண்டு அதாவது நான் ஆறாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எங்கள் வீட்டிற்கு ’இந்தியா டுடே’ செய்தித்தாள்களோடு சேர்ந்து வரும். அப்போது எழுத்தாளர் வாசந்தி அவர்கள் தான் அதன் எடிட்டராக இருந்தார் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.
அப்போது பளபளப்பான அட்டை படத்துடன் ஒரு புத்தகம் ஒரு நாள் வந்திருந்தது. விலை அப்போதே 100 ரூபாய். ஆனால் அந்த அட்டையில் போடப்பட்டிருந்த டிஸைனுக்கே 100 ரூபாய் தரலாம். அழகாக எம்பாஸ் செய்யப்பட்ட நவீன ஓவியத்துடன் இருந்த அட்டைப்படம் (கடைசியாக 2008ல் இந்தியா சென்ற போது அந்த அட்டையைக் காணவில்லை). அந்த புத்தகத்தை எடுத்து பார்த்த போது நிறைய சிறுகதைகள், கவிதை, குறுநாவல்கள் (சி.சு.செல்லப்பாவின் ’வாடிவாசல்’ மறுவெளியீடு செய்யப்பட்டது) ஆகியன இருந்தன. அதன் வகை, தொகைகள் அப்போது தெரிந்திருக்கவில்லை. வழக்கமாக ஏதோ கதை புத்தகத்தை படிப்பது போல் படித்து முடித்தேன்.
அதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ‘சாதனம்’ என்னும் கதை. சாதாரணமாக ஒரு மில் வேலைக்கு கிராமத்தில் இருந்து செல்லும் ஒருவன் வேலைக்கு செல்லும் பேருந்தை தவற விட, அங்கே திரியும் இளவட்டங்களுடன் இணைந்து பஞ்சாயத்து தொலைக்காட்சியில் அன்று நடக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்சை பார்க்கிறான். மிகச் சாதாரணமான கதையாக இருந்தாலும், மிகவும் அழகான வர்ணனையுடன் ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் புரியும் வகையில் எழுதியிருந்தார். பஞ்சாயத்து டி.வியின் கதவு பற்றி அவர் அளித்த வர்ணனையும் அதனைத் தொடரும் நிகழ்வுகளும் எனது அப்போதைய கிரிக்கெட் நிகழ்வுகளை பிரதிபலித்தன. இருந்த அத்தனை கதைகளில் அது தான் அப்போது பிடித்த கதையாக இருந்தது.
மேற்கூறிய சிறுகதை அறிமுக எழுத்தாளருக்கான இரண்டாம் பரிசு பெற்ற கதையாக இருந்தது. முதல் பரிசு பெற்ற கதை என்னவென்று பார்த்தால் ‘காற்றாடை’ என்ற கதை இருந்தது. நண்பனுடன் திரைப்படத்திற்கு செல்லும் ஒருவன், வழியில் ஆடையில்லாமல் நிர்வானமாய் அலையும் ஒரு புத்தி சுவாதீனமற்ற ஒருவனை பார்க்கிறான். அந்த நிர்வாண மனிதனுக்கு கதை நாயகன் வேட்டி வாங்கி கொடுக்க அதை ஒரு வித ஏளனப் புன்னகையுடன் அவன் பெற்று கொள்கிறான். மறுநாள் நம் நாயகர் பார்க்க திரும்பவும் அதே நிர்வானத்துடன் அலைகிறான். முதலில் படித்த போது இந்த கதை பிடித்திருக்கவில்லை.
நான்கு வருடங்கள் கழித்து பத்தாம் வகுப்பு விடுமுறையில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திரும்பவும் அந்த புத்தகம் கண்ணில் பட்டது. அப்போது வாசித்த போது தான் முந்தைய கதையை எழுதியது ‘பாஸ்கர் சக்தி’ என்றும், பின்னவர் ‘க.சீ.சிவக்குமார்’ என்று தெரிந்தது. மற்ற கதைகளை எல்லாம் படித்த பார்த்த பின் தான் தெரிந்தது, எழுத்துலக ஜாம்பவான்கள் அனைவரும் அதில் எழுதியிருக்கின்றனர் என்று.
இதை ஏன் இப்போது எழுதுகிறேன் என்றால், ஒரு முறை பாஸ்கர் சக்தி அவர்களை சந்தித்த போது அவருடைய ‘சாதனம்’ சிறுகதையைப் பற்றி கூறினேன். அப்போதும் கதையின் தலைப்பு எனக்கு மறந்து விட்டிருந்தது. வீட்டிற்கு வந்த போது அதை மறு வாசிப்பு செய்தேன். ஏனோ தெரியவில்லை அதைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதி விட்டேன். பாஸ்கர் சக்தி சார்!! இந்தியா டுடே உங்களுடைய கதையின் கட்டமைப்பில் ஒரு சொதப்பல் செய்து இருந்தனர். அதையும் இப்போது தான் பார்த்தேன். அது என்னவென்று தெரிந்ததா?
7 comments:
இந்தப் புத்தகத்தில் கலவையாக நிறைய சிறுகதைகள் இருந்தன என்று நினைவு,இவற்றை அப்போது விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அத்தனை பேருமே சேர்ந்து எழுதினார்கள் என்று அதன் முன்னுரையில் கண்டதாக ஞாபகம், தொகுப்பில் "ராமய்யர் ஹோட்டல்" சிறுகதை மட்டுமே தெரிகிறது மற்றதெல்லாம் நினைவில்லை.பாஸ்கர் சக்தி மற்றும் க.சீ எங்கள் மண்ணின் மைந்தர்கள்.பாஸ்கர் சக்தியின் முழு சிறுகதைகள் "கனகதுர்கா"என்ற பெயரில் தொகுக்கப் பட்டு வம்சி வெளியீடாக வந்துள்ளது.இயல்பு கெடாத பகடி இவர்களுடைய படைப்புகள் .
வருகைக்கு நன்றி கார்த்திகா. அந்த புத்தகத்தை விகடன் மறு பதிப்பு செய்ததாக நினைவில்லை. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தேனி தான். பாஸ்கர் சக்தி எங்க ஊர் காரருங்கோவ்...
me too from theni :)
unga blog romba nalla iruku
High Definition Youtube Video Download Free
visit 10 to 15 Website and EARN 5$
CineMa Tickets Booking Online
பாசக்காரப் புள்ளைங்க ரெண்டு பேருக்கும் என் வணக்கம்.பிரசன்னா குறிப்பிட்ட அந்த தொகுப்பு விகடனில் வெளிவந்த புதிய ஆத்திசூடிக்கதைகளின் தொகுப்பு.பரசுராம் பிஸ்வாஸ் எனும் பொதுவான புனைப்பெயரில் வெளியான அத்தொகுப்பில் விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த படைப்பாளிகளின் நல்ல கதைகள் இடம் பெற்றிருந்தன. மதிப்புக்குரிய எழுத்தாளர் பிரபஞ்சனும் அவர்களில் ஒருவர் என நினைக்கிறேன்.மிக்க நன்றி பிரசன்னா, கார்த்திகா..நான் பாஸ்கர்சக்தி...மெயிலில் சற்று விரிவாக எழுதுகிறேன் பிரசன்னா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹென்றி...
கருத்துக்கு நன்றி பாஸ்கர் சக்தி சார். உங்க பதிலை எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்...
Post a Comment