Thursday, February 11, 2010

பாலு மகேந்திராவின் கதை நேரம்
வீட்டில் அப்போது கேபிள் இணைப்பு இல்லை. அதற்க்கு சொல்லப்பட்ட காரணம் , எனது படிப்பின் லட்சணம். எல்லாவற்றுக்கும் சுதந்திரம் கொடுத்த அப்பா ஏனோ இதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்து விட்டார். ஒரு அளவை மீறி கார்ட்டூன் நெட்வொர்க் பார்த்ததால் வந்த விளைவு. வீட்டில் குவிந்து கிடந்த புத்தகங்களால் தொலைக்காட்சியைக் கிட்டத்தட்ட மறந்திருந்த நேரம். அப்போது வந்த வார இதழ் ஒன்றில் பாலு மகேந்திரா தொலைக்காட்சியில் நாடகம் இயக்கப் போகிறார் என்று செய்தி இருந்தது. அய்யோ பாலு மகேந்திராவின் நிலை இப்படியா ஆக வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. அதன் பின்னர் தான் தெரிந்தது தமிழ் எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த சிற்கதைகளை குறும்படங்களாக இயக்கப் போகிறார் என்று.

ஒரு மாலை நேரச் சூழலில் அம்மா போட்டுக் கொடுத்த தேநீருடன் பாலு மகேந்திராவின் படம் பார்க்கும் அனுபவமே அலாதி. ஏனோ அப்பாவிற்கு பாலு மகேந்திராவை சுத்தமாகப் பிடிக்காது. காரணம் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகை ஷோபா. ’மூன்றாம் பிறைபார்த்து விட்டு நான் அழுத அழுகையில் இனிமேல் அந்த படத்தை நான் பார்க்கவே மாட்டேன் என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால்சந்தியா ராகம்’,’வீடு’,’சதிலீலாவதி’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலித்திருக்கவில்லை.

எப்படியாவது இந்த தொடரைப் பார்க்க வேண்டும் என்று அம்மாவிடம் கேபிள் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கொக்கி போட்டு பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை. ஒரு முறை நண்பனின் வீட்டிற்கு சென்ற போது, அசோகமித்திரனின் ஒரு சிறுகதை படமாக்கப் பட்டு ஓடிக் கொண்டிருந்தது. அதன் தலைப்பு கூட நினைவில்லை. ஒரு பிராமணருக்கும், அவர் வீட்டின் எதிரில் தள்ளுவண்டியில் மீன் வறுத்து விற்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும் கதை. அதற்கு பின் ஒரு எபிஸோட் கூட பார்க்கவில்லை.

வெகு நாட்கள் கழித்து நானும் நண்பர் முரளியும் உரையாடிக் கொண்டிருந்த போது இதைப் பற்றி கூறினேன். அதற்கு அவர் சமீபத்தில்
பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற போது கதை நேரம் டி.வி.டியைக் காட்டியதாகவும், அது பவா செல்லத்துரை அவர்களின் வம்சி பப்ளிசர்ஸ் வாயிலாக வெளி வரப் போவதாகவும் கூறினார். ஒரு வேளை இப்போது வந்து இருக்கலாம், எதற்கும் டி.நகர் நியூ புக் லேண்டில் பார்க்கலாம் என்று கூறினார். கி.ராவுடன் ஞாநியின்கேணியில் நடந்த சந்திப்பிற்கு மறுநாள் நானும் அவரும் அங்கு சென்றோம். நாங்கள் நினைத்தது போலவே அங்கு டி.வி.டி இருந்தது.

கதை நேரத்தில் மொத்தமாக 52 குறும்படங்கள். டி.வி.டியின் முதல் பாகமான இதில் ஆறு குறும்படங்கள் இருக்கின்றன. சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்', சுஜாதாவின் 'நிலம்', பிரபஞ்சனின்’ஒரு மனுஷி', திலகவதியின் ‘ஒரு முக்கோண காதல் கதை’, சு.சமுத்திரத்தின் ‘காத்திருப்பு’ மற்றும் ஜெயந்தனின் காயம்’ ஆகிய சிறுகதைகளை இந்த முதல் பாகத்தில் தொகுத்து உள்ளனர்.

சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்'
சு. ராவின் 'பள்ளம்' என்னை மிகவும் பாதித்த கதை. ஆனால் அதை படமாக்குவது முடியாது. என்னைப் பொறுத்த மட்டில் அவரின் படமாக்கக் கூடிய கதைநாடார் சார்’. 1997 ‘தினமணிபொங்கல் மலரில் வெளியானது. நான் எட்டாம் வகுப்பு படித்த போது வெளிவந்த அந்த கதையில் இருந்த சூழலும், என் பள்ளி சூழலும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது. அந்த கதையை நான் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் எனது மனதில் அது ஒரு குறும்படமாகவே ஓடும்.

’பிரசாதம்’ கதையை இது வரை வாசித்தில்லை. பாலு மகேந்திராவின் திரை மொழியில் மிகவும் எளிமையான கதையாக காட்சி அமைக்கப் பட்டிருந்தது. ஒரு அதிகாலையில் கோவிலில் பூஜை செய்யும் பூசாரி ஒருவருக்கு, பக்தர் ஒருவர் நூறு ரூபாயை காணிக்கையாக இடுகிறார். அடுத்த காட்சி கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி, தங்களின் குழந்தைக்கு காது குத்துவதற்காக தன் கணவரிடம் ஒரு நூறு ரூபாய கேட்பதாக அமைகிறது. இதற்கு பிறகு நீங்களே கதையை ஊகித்து இருப்பீர்கள்.

மிகவும் சிக்கலான விடயங்களை, ஒரு வித எள்ளல்தன்மையோடு அனுகும் பாலு மகேந்திராவின் பாணி, இந்த குறும்படம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. கான்ஸ்டபிளாக ஜீனியர் பாலையா, அவரின் மனைவியாக மெளனிகா நடித்து உள்ளனர். அந்த பூசாரியாக நடித்தவர் திரைக்கு புதியவர் என்றே நினைக்கிறேன். ஆயினும் அவரின் நடிப்பு ஒரு தேர்ந்த நடிகரின் முதிர்ச்சியை வெளிபடுத்தியது. குறும்படம் முழுவதும் நீங்கள் சிரித்து கொண்டிருந்தாலும், அந்த இறுதி காட்சி எல்லோரின் கண்களில் சிறு நெகிழ்ச்சியையாவது ஏற்படுத்தும்.

சுஜாதாவின் ‘நிலம்’
சுஜாதாவின் பல நாவல்கள், படமாக்க படும் போது அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கபடுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார். அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம். ஆயினும் அவரே ‘தன் நாவல்கள் இவரால் படமாக்க படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின் அது பாலு மகேந்திரா தான்.

அம்பலம் மின்னிதழில் சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”என் நாவல்கள் எதுவும் அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில். எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை.

தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார். இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.”

சுஜாதாவின் சிறுகதைகள் ஆழமற்றவை என்று பல பேர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அது உண்மையல்ல. அவரின் கதைகளில் மிகவும் நுண்ணிய தகவல்கள் புதைந்து கிடக்கும். புதிதாக சமகால இலக்கிய படைப்புகளை வாசிப்பவர்களுக்கும் மிகத் தெளிவாக புரியும். இதனால் தான் புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் என் நண்பர்களுக்கு சுஜாதாவின் புத்தகங்களை பரிந்துரைப்பேன்.

‘நிலம்’ கதையையும் சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொணியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மிக கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு ஒரு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது. அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார். நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்ம ப்ரயத்தங்கள் தான் மீதிக் கதை.

பிரபஞ்சனின் ‘ஒரு மனுஷி’

’எழுத்து ஒரு பிழைப்பு ஆகாது’ என்று விரக்தியின் உச்சியில் குமுதம் ‘ஜங்ஷன்’ இதழுக்கு பிரபஞ்சன் அளித்த பேட்டி தான், அவரைப் பற்றி நான் முதலில் அறிந்தது. அதன் பின்னர் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த அவருடைய ’வானம் வசப்படும்’ நாவலை வாசித்தேன். பாண்டிச்சேரியை ‘ட்யூப்ளக்ஸ்’ ஆண்ட போது அவரின் திவானாக இருந்த ‘அனந்தரங்கரின்’ டைரி குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட சுவாரஸ்யமான நாவல். ‘அனந்தரங்கரின் டைரி குறிப்பை’ திருடி எழுதிவிட்டார் என்ற அபாண்டமான விமர்சனம் இந்த நாவலால் தான் எழுந்தது.

பிரபஞ்சனின் சில சிறுகதைகள் மட்டுமே படித்து உள்ளேன். அவை பெரும்பாலும், 2005, 2006 - ல் ‘தீராநதி’,’உயிர்மை’ இதழ்களில் வெளி வந்தவை. அவரின் ‘மீன்’ சிறுகதையை பொதிகை தொலைக்காட்சியில் குறும்படமாக அம்மா பார்த்த போது, உனக்கும் இதே போல் தான் பொண்டாட்டி வரப்போகிறாள் என்று அம்மா என்னை நக்கலடித்தாள். (இந்த சிறுகதையைப் பற்றி அப்புறம் சொல்றேன்)

சினிமாவில் பணிபுரியும் துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோரின் உலகம் வெளிபூச்சுகளற்றது. அவர்களின் வாழ்வில் நிலவும் வெறுமையையும், வறுமையையும் அசோகமித்திரன், சுஜாதா, திலகவதி ஆகியோர் தத்தம் கதைகளில் வெளிபடுத்தி உள்ளனர். அதே வரிசையில் தான் இந்த கதையும் இடம் பெறுகிறது. வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், பிலிம் ரோல் வாங்க காசு இல்லாமல் இருக்கும் ஒரு உதவி புகைப்பட கலைஞன், தனக்கு தெரிந்த துணை நடிகை ஒருத்தியை புகைப்படம் எடுக்க செல்வது தான் இந்த கதையின் சாரம். துணை நடிகையாக மெளனிகா, புகைப்பட கலைஞராக சஷி நடித்து உள்ளனர். இந்த கதையின் பிண்ணனியில் இந்த தொடர் வெளிவந்த போது நடந்த ஃபெப்ஸி, படைப்பாளிகள் மோதலையும் ஒரு பாத்திரமாக உலவ விட்டிருந்தார் பாலு மகேந்திரா. அகிரா குரோசாவாவின் படங்களின் இறுதி காட்சிகள் உங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். அதே போல் தான் இந்த குறும்படங்களின் இறுதி காட்சிகளும்.

இந்த டி.வி.டி இப்போது என் கையில் இல்லை. நினைவிடுக்குகளில் இருப்பதை மட்டுமே உங்களுடன் பகிர்கிறேன். மீதம் உள்ள மற்ற மூன்று குறும்படங்களைப் பற்றி அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

14 comments:

Dr.எம்.கே.முருகானந்தன் said...

என்னால் "பாலு மகேந்திராவின் கதை நேரம்" சில மட்டுமே பார்க்க முடிந்தது. அவற்றை மீளநினைத்து மகிழ உங்கள் பதிவு உதவியது. நன்றி

பிரசன்னா இராசன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர் ஸார்...

ஹாலிவுட் பாலா said...

தமிழ்மணத்தில்.. ரெண்டாவது ஓட்டு என்னுதாங்க பிரசன்னா. தமிழிஷ் அப்ப லோட் ஆகலை. அதான் விட்டுட்டேன்.

இப்ப போட்டாச்சி!!!!!

ஹாலிவுட் பாலா said...

இந்தக் கதைநேரத்தில்.. 1-2 பார்த்திருக்கேன். அதில் சுஜாதாவின் கதைகளை பார்த்திருக்கேனான்னு தெரியலை.

இருந்தாலும்.. சுஜாதாவின் கதைகள் ஆழமில்லாதவைன்னு சொல்லுறவங்களை லூசுன்னு லூசுல விட்டுட்டு போக வேண்டியதுதான்! :) :)

பிரசன்னா இராசன் said...

உங்க கடமை உணர்ச்சியை நினைச்சா புல்லரிக்குது பாலா... ரெம்ப நன்றி...

சென்ஷி said...

அன்பின் பிரசன்னா,

வம்சி பதிப்பகத்தில் வெளியிட்ட பாலுமகேந்திரா கதை நேரம் டிவிடி மற்றும் புத்தகத்தை வாங்கியிருந்தேன். எழுத்தாளர்களின் கதையை வாசித்து விட்டு அதற்கான திரைக்கதையையும் சின்னத்திரை இயக்கத்தையும் காணுவது சிறப்பான அனுபவமாக இருந்தது. உங்களுடைய அனுபவப்பகிர்வும் நிறைவு..

அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.

பிரசன்னா இராசன் said...

அன்பின் சென்ஷி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஒரு டவுட் எனக்கு. நான் சென்ற போது டி.வி.டி மட்டுமே ஸ்டாக்கில் இருந்ததால் அது மட்டும் வாங்கினேன். 150 ரூபாய் சொன்னார்கள். என் நண்பர் கூறினார் டி.வி.டியும், புத்தகமும் இணைந்தே 150 ரூபாய் என்றார்கள். உண்மையா? இரண்டாம் பாகம் சென்ற மாதம் வந்துவிட்டது. அதையும் வாங்கி விட்டீர்களா?

சென்ஷி said...

இரண்டாம் பாகம் வாங்கவில்லை. சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல் பாகம் மாத்திரம்தான் கிடைத்தது. விலைப்பட்டியல் சரியாக நினைவில் இல்லை. மதியம் சரிபார்த்துக் கூறுகிறேன். ஆனால் டிவிடிக்கு தனியாகவும் , புத்தகத்திற்கு தனியாகவும் விலைப்பட்டியலிட்டதாகத்தான் ஞாபகம்.

பிரசன்னா இராசன் said...

தகவலுக்கு நன்றி சென்ஷி...

மோகன் குமார் said...

நல்ல இடுகை. நான் இந்த கதைகளை முதலில் வந்த போதும் பின் சென்ற ஆண்டு மக்கள் தொலை காட்சியிலும் பார்த்தேன். மிக அற்புதமாக காட்சி படுத்தியிருந்தார்

பிரசன்னா இராசன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன் குமார் அவர்களே...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மிக அருமையான மொழி நடை சகிதம் நீங்கள் விபரித்திருக்கும் உங்கள் உணர்வுகளின் மீட்டல்கள் சிறப்பாக இருக்கின்றன.

நேர்ந்தெடுத்த வாசிப்பை பின்புலமாக கொண்டுள்ளீர்கள் என்பதே மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

பிரசன்னா இராசன் said...

மிக்க நன்றி கனவுகளின் காதலரே

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Share