Thursday, June 17, 2010

பிரபஞ்சனின் ”மீனும்”, நாஞ்சில்நாடனின் ”எருமைமாடுகளும், சாரைப்பாம்பும்”

மீன் - பிரபஞ்சன்

ஒரு தடவை என்னை பார்த்து என்னுடைய நண்பன் ஒருவன், “நீ எல்லாம் எப்புடி தான் கறிகஞ்சி திங்காம கிடக்கியோ” என்று கேட்டான். அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது. சுற்றம் அனைத்தும் கிடா வெட்டி குழம்பு வைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, நான் மட்டும் ஒரு ஓரமாக ரசமோ, மோர் சாதமோ அப்பளத்தை கடித்து கொண்டு தின்று கொண்டிருப்பேன். சில சமயங்களில் ரசத்தில் ஆட்டுச்சாறு ஊற்றி விட்டால் வெறும் மோர் சாதம் தான். ஐந்து வயதில் இருந்தே பிடிவாதமாக கறி சாப்பிடாமல் இருந்து விட்டேன். ஏன் என்று எனக்கும் புரிந்ததில்லை.

சரி. விசயத்திற்கு வருகிறேன். கல்லூரி விடுமுறைக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்த போது, பொதிகையில் சிறுகதை நேரம் என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பாலு மகேந்திரா கதை நேரத்திற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தான் நினைக்கிறேன். அதில் பிரபஞ்சனின் ‘மீன்’ கதை ஒளிபரப்பானது. குறும்படம் தொடங்குவதற்கு முன் பிரபஞ்சன் அவர்கள் பேசியதில், இந்த கதை அவர் நண்பர் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்று தெரிந்தது.

கதை:  ஒரு கடலோர ஊரில் கதை நடப்பதாக அமைக்கப் பட்டிருக்கிறது. கடலோரத்தில் இருப்பதால் மீன் தான் எல்லாருக்கும் பிடித்த உணவு. ஆனால் நம் கதை நாயகனுக்கு மீன் என்றால் அலர்ஜி. அதற்கு முக்கிய காரணம் மூன்று வேளை சாப்பாட்டிலும் எதாவது ஒரு வகையில் மீன் அவனுடைய இலையில் இடம் பிடித்து விடுகிறது. “என்னமா இப்பவும் மீனா” என்று தன் தாயை சலித்து கொண்டே, மீன் சாப்பிடுவதை விட்டு விடலாமா என்று யோசிக்கிறான். அந்த சமயத்தில் அவனுடைய கல்யாண பேச்சு எழுகிறது. வரப்போகும் பெண்ணை பற்றிய அவனின் ஒரே எதிர்பார்ப்பு, “என்னோட வருங்கால பொண்டாட்டி, மீன் சாப்பிடக் கூடாது, மீன் சமைக்கக் கூடாது” என்பதாகும். சரி என்று ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க, அவன் மனைவியும் அவனுக்கு பிடித்தார் போல் தினமும் சைவ உணவு சமைத்து தருகிறாள். இல்லறம் நல்லறமாக சென்று கொண்டிருக்க, ஒரு நாள் நம் கதை நாயகன் அலுவலகத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக வர, தனக்கு சுத்தமாக ஒவ்வாத வாசம் வருகிறதே என்று யோசிக்கிறான். உள்ளே வந்து பார்த்தால் அவனுடைய மனைவி, மீன் குழம்பு, மீன் வறுவல் கடித்து கொள்ள கருவாடு என்று ஒரு முழு மீன் விருந்து உண்டு கொண்டிருக்கிறாள். இப்படியாக முடிகிறது கதை.

இந்த குறும்படத்தை பார்த்து விட்டு அம்மா, “உனக்கு வரப் போற பொண்டாட்டியும் இப்பிடித் தான் இருக்கப் போறா” என்று நக்கல் அடித்தாள்.  அது என்னவோ உண்மை ஆகிவிடும் போல் இருக்கிறது. மூக்கை பிடித்து கொண்டு வாழ்க்கையை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

”எருமைமாடுகளும், சாரைப்பாம்பும்” - நாஞ்சில் நாடன்

நான் என்ன தான் கறி திங்க மாட்டேன் என அடம் பிடித்தாலும், அம்மா எனக்கு ஐந்து வயது வரை கறியை தினித்து, தினித்து ஊட்டி கொண்டிருந்தாள். கொஞ்சம் விவரம் வந்ததும் நான் வெஜ் ஐட்டங்களை கண்ணில் கண்டால், ஒரு கி.மீ ஓடி விடுவேன். பையன் ரெம்ப ஒல்லியா இருக்கானே என்று அம்மாவுக்கு வேறு கவலை. அதனால் வெஜ் கட்லட் என்ற பெயரில் மட்டனை நன்றாக வேக வைத்து மாவு போல் அரைத்து, வினயமாக கட்லட்டுடன் கலந்து விடுவாள். சில காலம் நானும் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.  எப்போதும் சமையலறை பக்கம் எட்டி பார்க்காத நான், ஒரு முறை அம்மா கட்லட் செய்யும் போது பார்க்க, கையும் களவுமாக மாட்டிக் கொண்டாள் அம்மா. அதன் பிறகு கல்லூரி வந்த பிறகு தான் முட்டை என்ற கவுச்சி சாப்பிட ஆரம்பித்தேன். அது தவிர்த்து ஊர்வன, பறப்பனவற்றைக் கண்டால் இன்றளவும் அலர்ஜி தான்.

நாஞ்சில் நாடன் அவர்களின் இந்த கதை, ஒரு சைவ சாப்பாட்டுகாரனின் அல்லல்களை பற்றியது. ஒரு வகையில் இந்த கதை என்னுடைய வாழ்வியலுடன் ஒத்து போகின்றது. இந்தியா டுடே இலக்கிய மலரில் வெளி வந்தது. சிறுவயதில் படித்ததால் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. 

கதைப்போங்கை விட, நாஞ்சில்நாடன் அவர்களின் வர்ணனை மூலம் உருவாக்கும் காட்சிபிம்பம் தரும் இன்பம் அலாதியானது. கதை இதுதான். திருநெல்வேலி சைவப் பிள்ளை ஒருவர், வாய்க்கு வஞ்சனை தராத ஒரு நல்ல சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். அவரை சுற்றி இருக்கும் பல பேர், அசைவ பட்சிணிகளாக இருந்தாலும் அவர் சைவத்தை உடும்பு பிடி போல் பிடித்து கொண்டிருக்கிறார். கடைக்கு வரும் பலர், “ரெண்டு முட்டையை வாங்கி ஆம்லெட்டாவது போடுவே” என்கின்றனர். நம்மாளுக்கு ஏறிய பாடில்லை. ஊரில் இருக்கும் பெரிய மனிதர் ஒருவர் சாராயம் குடிப்பதற்கு சைட் டிஷ்சாக, சாரைப்பாம்பை வாட்டி தின்பதை பார்த்து விட்டு, “எப்பிடித்தான் அதை திங்காங்களோ” என்று புலம்புகிறார். 

மகளை பார்ப்பதற்காக மதுரை வரும் நம் நாயகர், தன்னுடைய மருமான் சைவக்குடியில் பிறந்து இருந்தாலும் மட்டன் சாப்பிடுவதை காண்கிறார். என்ன செய்யவென்று புலம்பிக் கொண்டு இருக்கையில், “அது பேருதான் மட்டன், ஆனா அது மாட்டுக்கறிப்பா” என்று மகள் எதார்த்தமாக சொல்ல, சாப்பிட்ட கட்டி பருப்பு சாத்தை நம் நாயகரின் வயிற்றில் இருந்து வாய் வழியாக வெளியேறி விடுகிறது. இப்படித்தான் கதை முடிந்தது என்று நினைக்கிறேன். நான் முன்னே கூறியதைப் போல் நாஞ்சில்நாடனின் வர்ணனைகள் மிகவும் சிறப்பானவை. நாயகரின் கிளப்பு கடை மெனுவைப் பற்றி அவர் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. 

இந்த கதை பலவகையில் எனக்கு ஒத்து போவதுண்டு. சிறுவயதில் மட்டனோ சிக்கனோ, வாசத்தை முகர்ந்தாலே குடல் சுத்தமாகி விடும் சூழல் இருந்தது. இப்போது பரவாயில்லை. அம்மாவும், அப்பாவும் மனவளக்கலை பயிற்சிகள் எடுத்த பிறகு அவர்களும் சைவப் பட்சிணிகளாக மாறிவிட்டனர். எப்போதாவது அசைவம் சாப்பிடும் தம்பியும் இப்போது சாப்பிடுவதில்லை. ஒரு காலத்தில் கோழிச்சாறு இல்லாமல் ஞாயிற்றுகிழமையை நகர்த்தாத அப்பாவிடம் எப்படி விட்டு விட்டீர்கள் என்று கேட்ட போது, “அது அப்படித்தான்” என்று பூடகமாக சிரித்துக் கொண்டு பதில் அளித்தார்.

8 comments:

Raju said...

\\கதைப்போங்கை விட\\

ஒரே ஒரு எழுத்து.அர்த்தமே மாறுதில்லண்ணே.
:-)

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மிகவும் அருமையான பதிவு. பாட்டியிடம் கதை கேட்பது போல் ஒரு உணர்வு :)

geethappriyan said...

பிரசன்னா எனக்கும் நாஞ்சில் நாடனின் உவமைகள்,எழுத்தாடல் பிடிக்கும்.நானும் திடீர்னு எதோ தோனி
சைவமாயிட்டெனுங்கோ!ஏன்னே தெரியல,
அதும் இந்த ஊர்ல இது அதிசயம்
ஆனால் ஆர்டர் பண்னுவது சைவம்
ஆர்டர் பண்னுவது அசைவஹோட்டல்.
வாசனையெல்லாம் பார்க்க மாட்டேன்,முகம் சுளிக்க மாட்டேன்.:)

Prasanna Rajan said...

@ ராஜீ

நீங்க எதைச் சொல்றீங்க?

@ கார்த்திகேயன்

:-)

@ கனவுகளின் காதலர்

இருந்தாலும் ஓவர் நக்கல்யா உமக்கு.

Prasanna Rajan said...

@ கார்த்திகேயன்

எனது மின்னஞ்சல் முகவரி கிடைத்ததா?

"உழவன்" "Uzhavan" said...

நல்ல ஒப்பீடுடன் கூடிய பகிர்வு

Prakash said...

பதிவுல் எனக்கு மட்டும் தெரிஞ்ச சில அதிமுக்கிய நுன்னர்சியல் இருக்கு. சரி இப்போதைக்கு சொல்ல வோனாம்னு விட்டுடரேன்.ஹி ஹி

rfcworld said...

உங்களின் அனுவவம் அருமை.
நானும் இந்த பாழாய் போன அசைவத்தை விட்டு விடலாம் என்று பார்க்கிறேன், ஆனால் முடியவில்லை தோழா. ஒரு வருடம் பிடிவாதமாக இருந்தால்,அடுத்த வருடம் டப்பா டான்ஸ் ஆடுகிறது.
ஆனால் உங்களின் மனவலிமை என்னை யோசிக்கசெய்கிறது. பார்ப்போம்.

Share