Sunday, June 13, 2010

பாலு மகேந்திராவின் கதை நேரம் - 2


கீழ்க்காணும் பதிவு இந்த பதிவின் தொடர்ச்சி...

’ஒரு முக்கோண காதல் கதை’ - திலகவதி

அலுவலகத்தில் ஏற்படும் காதல்களை பற்றி ஒரு பெரிய நாவலே எழுதலாம். அதிலும் பக்கத்து சீட்டில் இருக்கும் நண்பன், நாம சும்மா இருந்தாலும், விடலை பருவத்துக்காரன் போல், “மச்சி!! அவ உன்னையே பாக்குறா பாத்தியா” என்று ஏற்றி விடுவான். மனதும் கொஞ்சம் சிறகடிக்கும், அவள் கல்யாண பத்திரிக்கை தரும் வரை. மறுநாள் ‘கல்யாணி’ அல்லது ‘ஓல்ட் மங்க்” ஏற்படுத்திய சிவந்த கண்களுடன் “இவ போனா இன்னொரு பொண்ணு, வாழ்க்கை ஒரு வட்டம் மச்சி!!” என்று தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் அடுத்த காதலில் இறங்குவார்கள். 

திலகவதியின் இந்த கதையிலும் தன் அலுவலகத்தில் தன்னுடன் சாதாரணமாக பழகும் பெண் ஊழியை, தன்னிடம் காதல் கொண்டதாக எண்ணுகிறான் கதையின் ஒரு நாயகன். ஆனால், அந்த பெண்ணோ யதார்த்தமாக வாழ்க்கையை நடத்தும், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியரை காதலிக்கிறாள். அவரும் அந்த பெண்ணிடம், தன் காதலை நாசூக்காக தெரிவித்து அவள் அன்பை பெறுகிறார். முன்னவரும் ஒரு தனியான தருணத்தில் அவளிடம் காதலை தெரிவிக்க, அவள் ஏன் அவரை காதலிக்க முடியாது எனக் கூறும் விளக்கம் தான் கதையின் இறுதி. 20 நிமிடத்தில் வழக்கம் போல் தன்னுடைய அருமையான கதை சொல்லல் பாணியில் இந்த குறும்படத்தை காட்சி படுத்தியிருக்கிறார் பாலு மகேந்திரா.

பொதுவாக அலுவலகங்களில் இது போன்று எதிர்பாலிடம் ஏற்படும் இனக்கவர்ச்சி (காதல் இல்லை), பல சமயங்களில் இது போன்ற மன அழுத்தங்களில் தான் கொண்டு சேர்க்கும். அதுவும் பெரும்பாலான இந்திய ஆண்கள், வீட்டில் பார்த்து கல்யாணம் செய்து வைக்கும் வரை ஒரு வித நீண்ட விடலை பருவத்தை (Extended Adolescence) தான் அனுபவிக்கிறார்கள். அவர்களின் உளவியல் சிக்கல்களை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த கதை. காதலில் நிராகரிக்கபட்டவராக நடிகர் பாலா, பெண் ஊழியையாக மெளனிகா மற்றும் யதார்த்த ஊழியராக வேணு அர்விந்த் வெகு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருந்தனர். மிகச் சாதாரணமான கதையாய் தோன்றினாலும் எனக்கு மிகவும் பிடித்த கதை.

”காத்திருப்பு” - சு.சமுத்திரம்

சு.சமுத்திரத்தின் கதைகள், பெரும்பாலும் வாழ்வியலை ஓட்டியவை. நான் படித்த அவரின் ஒன்றிரண்டு சிறுகதைகளை நினைவிடுக்கில் தேடி கொண்டிருக்கிறேன். அலுவலகங்களில், முக்கியமாக அரசு அலுவலகங்களில் படிநிலையினால் (Hierarchy) நிகழ்த்தபடும் ஏமாற்று வேலைகள் அளவில் அடங்கா. மேல் மட்டத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களை ஏமாற்றியே பல காரியங்களை சாதித்து கொள்வார்கள்.

அப்படிபட்ட ஒரு ஏமாற்றை பற்றிய கதை தான் இந்த சிறுகதையும். அலுவலகத்தில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியனான ப்யூனை, அந்த அலுவலகத்தின் மேலதிகாரி தன் சொந்த காரியங்களுக்கு, குறிப்பாக தன் வீட்டு வேலைகளை செய்வதற்கு உபயோகபடுத்துகிறார். அந்த ப்யூனும், தன் மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக விடுப்பு வேண்டி, தன் மேலதிகாரி காலால் இட்ட வேலையை தலையால் செய்கிறான்.  ஆனாலும், மேலதிகாரிக்கோ அந்த ப்யூனுக்கு விடுப்பு கொடுக்க மனசில்லை. தன் மகளின் திருமணத்தை நடத்துவதற்கு எடுபிடி வேலை செய்ய உபயோகப்படுவான் என்று கணக்கு போடுகிறார். அங்கு ஊரில், ப்யூனுடைய மனைவி காசநோயினால் இறக்கும் தருவாயில் இருக்கிறாள். இறுதியில், அவன் மனைவி ஊரில் இறந்தது கூட தெரியாமல் தன் மேலதிகாரியின் வீட்டில் அந்த பியூன் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்பதாக முடிகிறது கதை.

மேலதிகாரிகள் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி நம் தமிழ் சினிமாக்கள் சொல்லி, சொல்லி மாய்ந்து விட்டன. இருப்பினும், அதிலிருந்து சற்றே வேறுபட்ட கதை இது.

”காயம்” - ஜெயந்தன்

இந்த குறும்பட தொகுப்பிலேயே என்னை மிகவும் பிடித்த, பாதித்த கதை என்றால் இதுவாகத் தான் இருக்கும். அந்த கதை ஏற்படுத்திய தாக்கமா, அல்லது பாலுமகேந்திராவின் திரை மொழி ஏற்படுத்திய தாக்கமா என்று புரியவில்லை. இந்த குறும்படத்தை அம்மா, அப்பா மற்றும் தம்பியுடன் அமர்ந்து தான் பார்த்தேன். பார்த்து முடித்ததும் கொஞ்ச நேரம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. நான் தான் அந்த மெளனத்தை கலைக்க வேண்டி இருந்தது.

குற்ற உணர்வை மையப்படுத்தும் கதைகளை எஸ்.ரா நிறைய எழுதி இருந்தாலும், இத்தனை தாக்கத்தை ஏற்படுத்திய கதையை நான் பார்த்தில்லை.  ஒரே காம்பவுண்டில் வசிக்கும் இரு குடும்பங்களை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மட்டும். இன்னொன்றில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயது மகள். அந்த சிறுமியால் ஒரு சிறு சங்கடம் நேருகிறது. அதன் பின் என்னவாகிறது என்பதே கதை.

இந்த குறும்படத்தை பார்த்த பின் தான் ஜெயந்தன் மறைந்துவிட்டார் எனும் செய்தி தெரிந்தது. அவரை பற்றி படித்த போது, வெகுஜன இதழ்களில் பணியாற்றிய தீவிர இலக்கியவாதி என்றும் அறிந்தேன். தமிழ் இலக்கிய உலகில், பல படைப்பாளிகள் இல்லாத போது தான், அவர்களின் வெற்றிடம் தெரிகிறது. இந்த பொது விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

8 comments:

சென்ஷி said...

//”காயம்” - ஜெயந்தன்
//

தொகுப்பில் எனக்கும் மிகப்பிடித்த வெகு நேரம் பாதிப்பை ஏற்படுத்தி கதை இது..

குற்ற உணர்வு -ம்ம்ம்.... ஜெயந்தனின் நடையில் கதையை வாசித்தலில் அந்த குழந்தையை எந்த நிமிடத்திலும் சபித்துவிடக்கூடாதே என்ற அச்சம்தான் அதிகப்படுத்தியிருந்தது..

பகிர்விற்கு நன்றி பிரசன்னா..

Prasanna Rajan said...

மிக்க நன்றி சென்ஷி...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அலட்டிக் கொள்ளதா உங்கள் எழுத்து நடையில், சுருக்கமாக கதைகளை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். உங்கள் உணர்வுகளையும்தான். சிறப்பாக இருக்கிறது.

Prakash said...

மற்றுமொரு நல்ல பதிவு.இதே போல் நிறைய எழுதுங்க பிரசன்னா.

geethappriyan said...

நான் மிகவும் பொறாமைப்படும் ஆள் நீங்க,கண்டதையும் தேடி படித்து வைத்திருக்கிறீர்கள்,ஆகட்டும்,ஜெயந்தனையும் தேடி படிக்கிறேன்.
http://azhiyasudargal.blogspot.com/
இது முன்னமே பார்த்திருக்கிறீர்களா?

http://saravanakumarpages.blogspot.com/
இவரை முன்னமே தெரியுமா?

PRINCENRSAMA said...

நன்றி!

Prasanna Rajan said...

நன்றி காதலரே

நன்றி பிரகாஷ்

கார்த்திகேயன் இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது என்று புரியவில்லை. உண்மையை சொல்லப் போனால் எல்லாராலும், எல்லாவற்றையும் படித்திருக்க முடியாது. நீங்கள் படித்ததை
நான் படித்திருக்க மாட்டேன். உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாது. சொல்லப் போனால் இப்போது, முதுகலை இறுதியில் இருப்பதால் சுத்தமாக நான் வாசிப்பதே கிடையாது. அழியாச் சுடர்களையும் படித்து இருக்கிறேன், அவ்வபோது படிக்கிறேன். சரவனகுமாரையும் தெரியும். அவர் வாஞ்சிநாதனைப் பற்றிய காலச்சுவடு கட்டுரை குறித்து ஆற்றிய எதிர்வினை மூலமாக தெரியும்.

நன்றி பிரின்சு

geethappriyan said...

பிரசன்னா,
உங்க மெயில் ஐடி அனுப்பவும்,ஒரு உலகசினிமா விட்ஜெட் இருக்கு அனுப்பறேன்.

Share