Sunday, September 26, 2010

மரபணு தீண்டாமை

"இம்ப்ரஸிவ் ஸ்கில் செட்" - என்னுடைய ரெஸ்யுமேயை பார்த்ததும் அந்த ஹயரிங் மானேஜரிடம் இருந்து வந்த வார்த்தைகள் கொஞ்சம் தெம்பளித்தன. "பின்ன ஏன் உங்களுக்கு இன்னும் வேலை இல்லை?" என்று அடுத்து என்னிடமே கேட்டார். என்னுடைய எட்டாவது க்ரோமோசோமில் ரத்த புற்று நோய் வருவதற்கான மரபணுக்கள் உள்ளதையும், அதனால் தான் இளங்கலை முடித்து 8 வருடங்களாக வேலை கிடைக்காததையும் நான் எப்படி சொல்வது? "உங்களுடைய தோல் செல்களின் சாம்பிள் கொடுத்து விட்டு செல்லுங்கள்" என்றார் அவர். ஜீன் ப்ரொபைலிங் எனும் என்னுடைய ஜீனோமை ஆராய்வதற்காக அந்த தோல் செல்களின் சாம்பிள். ஐந்து நிமிடத்தில் என்னுடைய ஜீன் ஜாதகத்தை அக்குவேர், ஆணி வேராக பிரித்து மேய்ந்து இன்ன வயதில் இன்ன வியாதி வரும் என்று ஜீன் ப்ரொபைலர் சொல்லி விடும். நான் அதன் முடிவுகளுக்காக காத்திருக்கவில்லை. கம்பெனியை விட்டு வெளியே வந்ததும் "திரு.குலோத்துங்கன்!! நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர் அல்ல" என்ற குறுந்தகவல் வந்தது.

இப்படித் தான் ஆரம்பித்தது நான் எழுதிய "மரபணு சாதி" எனும் முதல் சிறுகதை. 2002இன் இறுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு சிறுகதை போட்டிக்காக நான் இந்த கதையை எழுதினேன். இந்த கதைக்கான கருவை "கலைக்கதிர்" அறிவியல் இதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து எடுத்து கொண்டேன். 2000ஆம் ஆண்டு மனித ஜீனோம் தரவுகள் வெளியானதில் இருந்து ஏகப்பட்ட ஆச்சர்யங்கள், கேள்விகள். அந்த கேள்விகளில் ஒன்று தான் மரபணு தீண்டாமை. மனித ஜீனோம்களின் தொகுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு, இன்ன மரபணு தான் இன்ன வியாதிக்கு காரணம் என்று துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதில் ஒரு குறிப்பிட்ட வியாதி வரலாம் என்றும், ஒருவரின் மரணம் எப்போது சம்பவிக்கும் என்பதையும் கணக்கிடலாம். இதனால் ஒருவர் மரபணு அளவில் ஆரோக்கியமானவர் அல்லது ஆரோக்கியமற்றவர் என்று பிரிக்க படுவர். மரபணு அளவில் ஆரோக்கியமானவர்கள் மட்டும் சமூகத்தில் உயர்ந்தவர்களாக இருப்பர். திருமணம், வேலை, ரேசன் போன்றவை கூட ஆரோக்கியமான மரபணு உடையவர்களுக்கு (Genetically Competent) தான் சாதகமாக இருக்கும். ஆரோக்கியமற்ற மரபணு உடையவர்கள் (Genetically Incompetent) சமூகத்தில் இருக்க தகுதியற்றவர்களாக கருதப்பட்டு ஒரு புதிய தீண்டாமை உருவாகும்.

என்னுடைய 'நல்ல நேரம்'. நான் எழுதிய அந்த கதை வெளியாகவில்லை. பின்னர் இளங்கலையில் உயிரிதொழில்நுட்ப பொறியியலை விருப்ப பாடமாக எடுத்து பயின்றேன். செமஸ்டர் விடுமுறைக்காக ஒரு முறை  வீட்டிற்கு வந்த போது,  பின்னரவொன்றில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றில் "GATTACA" என்ற திரைப்படம் திரையிட்டார்கள். நான் எனது சிறுகதையில் என்ன எழுதியிருந்தேனோ, அதில் எண்பது சதவிகிதம் அந்த படத்தில் இருந்தது. மரபணு தீண்டாமை தான் அந்த திரைப்படத்தின் மூலக்கரு. நான் மேலே எழுதியிருக்கும் முதல் பத்தி கூட அப்படியே காட்சியாகி இருந்தது. ஆன்ட்ரு நிக்கோல் என்ற நியுசிலாந்து அறிவாளி, 1997லிலேயே மரபணு தீண்டமையை மையப்படுத்தி அந்த அருமையான திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்.

மரபணுவியல் கணிப்பு (Genetic Prediction) படி தகுதியற்றவனாக கருதப்படும்  கதையின் நாயகன் ஜெரோம் மாரோ (எ) வின்சென்ட் தன்னுடைய கனவான விண்வெளி பயணத்தை எவ்வாறு மேற்கொள்கிறான் என்பதே  அந்த திரைப்படத்தின் கதை. அதற்காக ஆரோக்கியமான மரபணு உடைய ஒருவனின் தோல், ரத்தம், சிறுநீர் சாம்பிள்கள் கொண்டு எவ்வாறு ஆள் மாறாட்டம் செய்கிறான் என்பதையும் தெளிவுபட விளக்கப்பட்டிருந்தது அந்த திரைப்படத்தில். ஒருவனின்  தலைவிதி மரபணுப்படி நிர்ணயிக்கப்படும் அத்தகையதொரு சமூகத்தில், தந்தையின் விந்தணுவும், தாயின் கருவும் சோதனைச் சாலையில் இணைக்கப்பட்டு, பின்னர் மரபணு பொறியியல் (Genetic Engineering) முறைகள் படி தேவையான குணங்கள் மாற்றியமைக்கபட்டும், செப்பனிடப்பட்டும் குழந்தைகள் உருவாக்கப் படுகின்றன. 

பொதுவாக சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் எதிர்காலத்தை பற்றிய ஒரு பயம் இழையோடும். தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தால், இது போன்ற கதைகளுக்கு ஊற்றுகண்ணே அந்த பயம் தான். GATTACA வெளிப்படுத்தும் உலகமும் அந்த பயத்தால் தான் இயங்குகிறது. தொழில்நுட்பவியல் மாற்றங்கள் என்ன தான் நிகழ்ந்தாலும், எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனிதனின் ஆழ் மனதில் புதைந்து போய் தான் இருக்கிறது. இதனால் தான் கண்மூடித்தனமான ஆராய்ச்சிகள் (Rogue Research) செய்வதற்கு தயங்குகிறது மனித மனம். ஆனால், அதே சமயம் 'என்ன நடக்கிறது என்று பார்ப்போமே' என்ற குறுகுறுப்பு அந்த தயக்கத்தை பல சமயங்களில் வென்று விடுகிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சனி கோளின் சந்திரன்களில் ஒன்றான டைட்டனுக்கு பயணம் மேற்கொள்ள போவதாக காட்டப்பட்டது. சனி கோளிற்கு ஒரு விண்வெளி ஓடம் அனுப்ப ஏற்கனவே நாஸா (NASA) ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. சனி கிரகத்திலோ அல்லது அதன் துணைக்கோளான டைட்டனிலோ வாழ்வியலுக்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவென்றாலும், மற்றுமொரு 100 ஆண்டுகளில் எதுவும் சாத்தியமாகக் கூடும். ஆனால், மரபணுவியல் கணிப்பு நம் வாழ்நாளிலேயே சாத்தியப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம். முடுக்கிவிடப் படும் ஆராய்ச்சிகள் அதைத் தான் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பார்க்கும் போது, GATTACA முன்னிறுத்தும் மரபணுவியல் பாகுபாடு கொண்ட சமூகம் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு தான்.

நான் எழுதி வெளியாகாமல் போன 'மரபணு சாதி' கதைக்கு வருகிறேன். குலோத்துங்கன் தன்னை ஒதுக்கும் சமூகத்தை உருவாக்கிய விஞ்ஞானி பைரவை எவ்வாறு பழி வாங்க  முயல்கிறான் என்பது தான் மீதிக் கதை. கணிணி அறிவியிலாளான தன் நண்பன் வர்மனுடன் (அவனும் ஒதுக்கப்பட்டவன் தான்) இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த முனைகிறான். வர்மன் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம், விர்ச்சுவல் உலகத்தில்  உலாவும் மற்றொருவருடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதை கண்டறிகிறான். நிகழ் உலகில் சஞ்சரிப்பதை போல் விர்ச்சுவல் உலகில் பல செயல்பாடுகளை செயல்படுத்த முடியும் என்பதையும் அறிகிறான். எப்போதும் விர்ச்சுவல் உலகில் செயல்பட்டு கொண்டிருக்கும் பைரவை அதன் மூலம் கொல்ல முடிவெடுக்கின்றனர் இருவரும். விர்ச்சுவல் ரியாலிட்டியில் இணையும் போது மனித நரம்புகள் ஒரு கணிணியின் பிராசசரில் உள்ள சர்க்கியூட்களை  போல் செயல்படும். நம் நரம்பு மண்டலமே சூடாகும். பைரவை விர்ச்சுவல் ரியாலிட்டியில் கொல்ல எத்தனிப்பதால், சூடாகும் நரம்பு மண்டலம் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களைக் கூட வெடிக்க செய்யும் என எச்சரிக்கிறான் வர்மன். பைரவை கொல்வதால் எந்த பலனும் இல்லை, மாறாக அனைவரின் மரபணு தரவுகள் தொகுக்கப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரை தகர்க்கலாம் என ஆலோசனை வழங்குகிறான் வர்மன்.

குலோத்துங்கன் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அந்த சூப்பர் கம்ப்யூட்டரை தகர்க்க எத்தனிக்கையில், பைரவ் அதே கம்ப்யூட்டரில் இணைவு பெற்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். குலோத்துங்கனுக்கும், பைரவிற்கும் ஒரு விர்ச்சுவல் போர் மூள்கிறது. வெற்றிகரமாக குலோத்துங்கன் அந்த கணிணியில் உள்ள மரபணு தரவுகளை அழித்தாலும், இருவருக்கும் ஏற்படும் விர்ச்சுவல் சண்டையால் குலோத்துங்கனும், பைரவும் மூளை நரம்புகள் வெடித்து நிகழ் உலகில் இறக்கின்றனர். என்ன தான் குலோத்துங்கன் தரவுகளை அழித்தாலும், பைரவ் வேறொரு அரசாங்க காப்பக கணிணியில் அந்த தகவல்களை பேக்கப் எடுத்து வைத்திருக்கிறான். அதை தரவேற்றி செயல்படுத்த மற்றொரு சூப்பர் கணிணி மட்டுமே தேவை. மரபணு தீண்டாமையால் பாதிக்கபட்ட சமூகத்தினர் ஒரு தற்காலிக சுதந்திரத்தை அனுபவிக்க, வர்மன் கைது செய்யப்படுகிறான்.

இந்த கதையை திரும்ப எழுதி ஏதேனும் ஒரு பத்திரிக்கைக்கு அனுப்ப நினைத்தாலும், ஒரு மோசமான காப்பியடிக்கப்பட்ட கதையாக கருதப்பட்டு விடுமோ என்று எனக்குள் ஒரு தயக்கம். மேலும் அந்த விர்ச்சுவல் ரியாலிட்டி செயல்பாடு ஏற்கனவே மேட்ரிக்ஸிலும், தி ரியல் அட்வென்சர்ஸ் ஆப் ஜானி க்வெஸ்ட்டிலும் விவாதிக்கப்பட்டு விட்டது. இப்போது திரும்ப எழுதினால் அதன் தழுவல் என்று கூறப்பட்டு விடுமோ என்ற பயமும் காரணம். நான் எழுதிய கதையும், GATTACAவின் கதையும் ஒன்றாக இருந்தது தற்செயலாக கருத முடியவில்லை. ஏனெனில் நான் அந்த அறிவியல் இதழில் படித்த அந்த கட்டுரையின் ஆசிரியர் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பார்த்திருக்கக் கூடும். 

எது எப்படியோ, மரபணுவியல் கணிப்பு செயல்படுத்தப் படுவதற்கு இன்னும் பல ஆண்டுகள்  ஆகலாம். அப்படியே செயல்படுத்த பட்டாலும் சுஜாதா எழுதியது போல், 'சாகிற நாள் தெரிஞ்சு போச்சுன்னா, வாழ்ற நாள் நரகமாயிடும். சந்தோஷம் தாங்க முக்கியம்.' GATTACA திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம். 'There is no gene for fate' (விதி மரபணுக்களில் எழுதப்படவில்லை). ஆனால் என்னை பொறுத்த மட்டில், மனிதனின் தன்னம்பிக்கை மரபணுக்களில் எழுதப்படவில்லை. 

12 comments:

கொழந்த said...

பாஸ்...எனக்கு கதை மிகப் பிடித்தது. கொஞ்சம் சுஜாதா டச் அதிகமாகவே தெரியுதே...

நீங்கள் கூறியுள்ளதைப் போல் கேன்சரை முன்னமே கண்டுபிடிக்க முடிந்தால் எவ்வளோ நன்றாக இருக்கும்..எங்கள் வீட்டில் இப்பொழுது இருக்கும் கஷ்டம அனைத்தும் தீருமே...

Human Genome Projectல் இது போன்ற விஷயங்களுக்கு விடை கிடைக்குமா..அல்லது அது ஒரு தேவையில்லாத ஒரு ஆய்வா...

Raju said...

சுவாரசியமான கட்டுரை.
சூப்பர் பிரசன்னா!

Prasanna Rajan said...

@ கொழந்த

சுஜாதா டச் இல்லாமல் யாரும் தமிழில் எழுத முடியுமா என்ன?

உங்களின் ஆதங்கம் புரிகிறது. கேன்சரை முன் கூட்டியே கண்டுபிடிக்க கூடிய தொழில்நுட்பம் வளர இன்னும் ஒரு நூற்றாண்டு கூட ஆகலாம். காரணம், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கேன்சர் வகைகள் உள்ளன. இதனால், இன்ன வயதில் ஒருவருக்கு இன்ன கேன்சர் வரும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஆனால், கேன்சருக்கு வலியில்லாத, அதிகம் செலவில்லாத மருந்துகள் இன்னும் 25 ஆண்டுகளில் சாத்தியப்படும்.

இன்று கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகளில் 75 சதவிகிதம் ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்டால் சாத்தியபட்டுள்ளது. அது ஒரு கருவி தான். இதனால் ஆராய்ச்சியாளர்களுக்கு, ஆராய்ச்சி சாலையில் இருந்து நோயாளிக்கு மருந்தை சேர்க்கும் காலம் வெகுவாக குறைந்திருக்கிறது...

Prasanna Rajan said...

@ ராஜீ

மிக்க நன்றி...

geethappriyan said...

நல்லா இருக்குங்க பிரசன்னா,இது இன்னும் பார்க்கவில்லை,வேலை கிடைத்ததா?தெரியப்படுத்துங்கள்.

Prasanna Rajan said...

@ கீதப்பிரியன்

நன்றிங்க. இன்னும் வேலை கிடைச்ச பாடில்லை. கெடைச்சா கண்டிப்பா சொல்றேன்...

சந்தனமுல்லை said...

interesting....

Tech Shankar said...

Thank you so much for your comment. I made changes.

வார்த்தை said...

Gattaca

இத விட வேற பெயர் இந்த படத்துக்கு இவ்வளவு பொருந்தி வருமான்னு தெரியல...

suneel krishnan said...

உங்கள் கதை நன்றாக உள்ளது :)
பல சமயம் இது மாறி நிகழ்வது உண்டு ,நாம் நம் கற்பனை என்று என்னிகொண்டிருக்கும் விஷயம் ஏற்கனவே எங்கோ ஓரிடத்தில் வெளி வந்திருக்கும் .
மரபணு தீண்டாமை நிச்சயமாக வரும் காலத்தில் வரலாம் .அதுவும் ராணுவம் ,உளவு போன்ற பிரிவுக்கு genetically engineered ஆட்களை உருவாக்கலாம் ,universal soldiers போல .அறிவியல் இரு முனை கொண்ட கத்தி தான் ,பார்க்கலாம்

Unknown said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

Prasanna Rajan said...

நன்றி நண்பரே...

Share