Friday, September 24, 2010

ZZ Top - நீள்தாடி ராக் தேவர்கள்

முன் குறிப்பு: ராக் இசை என்றால் காட்டு கத்தல் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த கட்டுரை (அ) கட்டுரை  தொடர் (??!!) உங்களுக்கானது அல்ல. இன்னொரு விஷயம் - ராக் இசை பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.


வட அமெரிக்காவில் வந்து இறங்கிய முதல் நாளில், டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து எங்கள் பல்கலை செல்வதற்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது விமான நிலைய லாபியில், இன்னும் சிறிது நாட்களில் நடக்கப் போகும் ஒரு ராக் கான்செர்டிற்கான போஸ்டர்கள் நிரம்பி இருந்தன. இரண்டு தாடி வைத்த ஆட்கள், கட்டையாய் செம்பட்டை மீசை வைத்த மற்றொருவர் - இவர்கள் தான் குழு அங்கத்தினர்கள். பெயரும் வித்தியாசமாய் இருந்தது - ZZ (Zee Zee) Top.

அதன் பின்னர் படிப்பு, ஆராய்ச்சி என்று ஒரு வருடம் போனது தெரியவில்லை. இங்கே பல்கலைக்கழகங்களில் கோடையிலும் ஒரு செமஸ்டர் உண்டு. ஆனால் அந்த கோடை செமஸ்டரில், சர்வதேச மாணவர்கள் வகுப்புகளில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அதனால் ஒரு வாரத்திற்கு 40 மணி நேரங்கள் வேலை  பார்த்து கொண்டிருந்தேன். வேலை இல்லாத நேரத்தில் சிறிது நேரம் நண்பர்களுடன் ப்ளே ஸ்டேஷன் வீடியோ கேம் ஆடிக் கொண்டிருக்கையில் அறிமுகம் ஆனது 'கிடார் ஹீரோ'. சாதாரண கிடாரை காட்டிலும் சற்றே அளவில் சிறிய ப்லாஸ்டிக் கிடார். அதைக் கொண்டு திரையில் வரும் குறிப்புகளுக்கு ஏற்ப, கிடாரில் சரியான விசைகளை சரியான நேரத்தில் வாசிக்க வேண்டும்.

சில அருமையான ராக் பேண்டுகளின் அறிமுகம் கிடைத்தாலும், ஏற்கனவே கேள்விப்பட்ட ஒரு ராக் பேண்டும் இருந்தது. அது தான் ZZ Top. அந்த கேம் தொகுப்பில் இருந்த அவர்களின் பாடல் கேட்ட மாத்திரத்தில் பிடித்து போனது. லா க்ரான்ஜே (La Grange) என்ற அந்த பாடல்,அதே பெயரில் டெக்ஸாஸில் இருக்கும் ஒரு  ஊரைப் பற்றியது. அங்கு ஒரு காலத்தில் இருந்த வேசையர் விடுதிகளை  நக்கல் தொனியில் சித்தரித்தது அந்த பாடல்.  குறைவான, அதே சமயம் எளிமையான பாடல் வரிகள். அந்த பாடலின் சிறப்பம்சம் - மிக நீண்ட கிடார் ரிஃப் (Riff). எலக்ட்ரிக் ரிதம் கிடாரும், பேஸ் கிடாரும் இணைந்து நிகழ்த்தும் மாயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.

பில்லி கிப்பன்ஸ் (பாடகர், லீட் கிடார்), டஸ்டி ஹில் (பாடகர், பேஸ் கிடார் மற்றும் கீ போர்ட்) மற்றும் ப்ரான்க் பியர்ட் (ட்ரம்ஸ் மற்றும் பெர்குஷன் வாத்தியங்கள்) மூவரும் இணைந்தது தான் ZZ Top. லா க்ரான்ஜே பாடலில், நீண்ட கிடார் ரிஃப் தவிர்த்து மற்றொரு சிறப்பம்சம், பில்லி கிப்பன்ஸின் குரல். அடித்தொண்டையில் அதிக கூச்சலில்லாமல் அதிரும் அவரின் குரல் ZZ Top இன் வெற்றிக்கு முக்கிய காரணம். தலைப்பில் கூறியது போல் பில்லி கிப்பன்ஸ் மற்றும் டஸ்டி ஹில் இருவரின் நீண்ட தாடி, இந்த குழுவின் ஒரு சிக்னேச்சராக மாறிப் போனது. மாறாக ப்ரான்க் பியர்ட் தன் பெயரில் இருந்து மாறுபட்டு மழுங்க ஷேவ் செய்து தடிமனான மீசையுடன் இருப்பார். ஒரு முறை, கில்லட் நிறுவனம் தங்களின் விளம்பரம் ஒன்றிற்காக கிப்பன்ஸையும், ஹில்லையும் அனுகியது. அவர்கள் விடுத்த வேண்டுகோள் - இருவரும் அவர்கள் தாடியையை எடுக்க வேண்டும் என்பது தான். ஆனால், அதற்கு கில்லட் நிறுவனம் கொடுக்க சம்மதித்த தொகை - ஒரு மில்லியன் டாலர்கள். 'தங்களின் நீண்ட தாடி தான் தங்களுக்கு அடையாளம். அதை எடுத்துவிட்டால் அத்தனை செக்ஸியாக இருக்க மாட்டோம்' என்று கிப்பன்ஸீம், ஹில்லும் தங்கள் பாணியில் அதற்கு மறுத்து விட்டனர்.

ப்ரான்க் பியர்ட், பில்லி கிப்பன்ஸ் மற்றும் டஸ்ட்டி ஹில்

1969 ஆம் ஆண்டு டெக்ஸாஸில் உள்ள ஹ்யூஸ்டன் நகரில் பில்லி கிப்பன்ஸ் தான் வசித்து கொண்டு இருந்த 'மூவிங் சைட்வாக்ஸ்' என்ற இசைக்குழு கலைக்கபட்டதால் என்ன செய்யவென்று யோசித்து கொண்டிருக்க, அப்போது அவர்களின் போட்டி குழுவான 'அமெரிக்கன் ப்ளூஸூ'ம் கலைக்கபட்டது. அமெரிக்கன் ப்ளூஸ் குழுவில் இருந்த டஸ்டி ஹில்லும், ப்ரான்க் பியர்டும், கிப்பன்ஸூடன் இணைய உருவானது ZZ Top. அப்போது பிரபலமாக இருந்த சிகரெட் ரோலிங் பேப்பர் ப்ராண்ட்களான Zip-Zap மற்றும் Top ஆகியவற்றிலிருந்து தங்களின் குழுவின் பெயரை வரித்து கொண்டதாக முதலில் கூறினாலும், பில்லி கிப்பன்ஸ் தன்னுடைய சுயசரிதையான 'ராக் + ரோல் கியர்ஹெட்'டில் - ப்ளூஸ் கிடார் மேதையான பி.பி. கிங்கின் பெயரில் இருந்த தங்கள் பேண்ட் பெயரை நிர்ணயித்து கொண்டதாக எழுதியுள்ளார்.

'லண்டன் ரெக்கார்ட்ஸ்' என்ற ரெக்கார்ட் லேபிளின் கீழ் தங்கள் முதல் ஐந்து ஆல்பங்களை வெளியிட்டனர். 'La Grange' பாடல் தான் முதன் முதலில் தேசிய அளவில் ZZ Top என்ற பேண்ட் இருக்கிறார்கள் என்பதை அடையாளபடுத்தியது. இவர்களின் முதல் ஹிட் பாடலும் அது தான். அதன் பின்னர் இவர்களின் 'Jesus just left to Chicago', 'Waitin for the bus' மற்றும் 'Just got paid'  போன்ற பாடல்கள், அமெரிக்க ராக் ரேடியோக்களுக்கு தீனி இட்டன. 70களின் இறுதியில் ஒரு மிகப் பெரிய சுற்றுபயணத்தை மேற்கொண்ட இவர்கள், 79ஆம் ஆண்டு எந்தவொரு ஆல்பமும் வெளியிடவில்லை. 1980ல் 'லண்டன் ரெக்கார்ட்ஸி'ல் இருந்து 'வார்னர் ப்ரதர்ஸ்' ரெக்கார்டஸை தங்கள் லேபிளாக எடுத்து கொண்ட ZZ Top ஒரு புதுவித சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

தங்களை ஒரு ப்ளூஸ் ராக் குழுவாக அடையாள படுத்தி கொண்ட ZZ Top, மற்ற ராக் குழுக்களைப் போல் தங்கள் இசை வகையை காலப்போக்கில் மாற்றி கொள்ளவில்லை. அதனால் பரிசோதனை முயற்சிகளில் இறங்காத ராக் குழு என்று இசை விமர்சகர்கள் இவர்களை குறை கூறுவது உண்டு. 70களில் தோன்றிய எல்லா ராக் குழுக்களைப் போல் எல்விஸை தங்கள் முன்னோடியாக கொண்ட ZZ Top - எல்விஸின் 'ஜெயில்ஹவுஸ் ராக்' பாடலை தங்கள் பாணியில் இசையமைத்து, எல்விஸிற்கு மரியாதை செலுத்தினர். 80களில் ZZ Top எதிர்கொண்ட பெரும் சவால் எம்.டி.வி மூலமாக வந்தது. ம்யூசிக் வீடியோக்கள் பிரபலமாகத் தொடங்கின. ம்யூசிக் வீடியோக்கள் வெளியிடவில்லையெனில் பேண்டுகளின் நிலையே கேள்விக்குறியாகிவிடும் நிலைமை. ZZ Top தாங்களும் சளைத்தவர்கள் இல்லையென்று, தங்களின் 'எலிமினேட்டர்' ஆல்பத்துடன் மூன்று ம்யூசிக் வீடியோக்களை வெளியிட்டனர். மேலும் 'எலிமினேட்டர்' ZZ Top பிற்கு முதல் ப்ளாட்டினம் ஆல்பம் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.


மற்றொரு விடயத்திற்கும் ZZ Top ராக் ரசிகர்களிடையே பிரபலம் - அவர்களின் டிசைனர் கார்கள் மற்றும் கிடார்கள். 'எலிமினேட்டர்' ஆல்பத்தின் மூன்று வீடியோக்களிலும் 1933ஆம் ஆண்டு 'ஹாட் ராட்' ரெட் ஃபோர்ட் கார் ஒன்று உபயோகிக்கபட்டிருக்கும். அதற்கு 'எலிமினேட்டர்' என்று பெயரிட்ட இவர்கள், அதையே தங்கள் ஆல்பத்தின் பெயராகவும் சூட்டினர். கான்செர்ட்டுகளின் போது 'White Fuzzie' என்றைழக்கபடும் மிருகத் தோல் போன்ற கவரினால் செய்யப்பட கிடார்களை உபயோகித்தனர். இவர்களின் மற்றொரு சிறப்பம்சம், 'Fliipin' the guitar' - அவர்களின் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் கிடாரை அனாயசமாக சுழற்றுவார்கள். இது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். தங்களின் 'White Fuzzie' கிடாரை டல்லாஸில் இருக்கும் ஹார்ட் ராக் கஃபேக்கு சமீபத்தில் அன்பளிப்பாக ZZ Top தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குழுவில் உள்ள மூவரும் 60 வயதைக் கடந்து இருந்தாலும், தளராமல் இன்றளவிலும் கான்செர்ட்டுகளை  நிகழ்த்தி கொண்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு அவர்களின் மற்றொரு புதிய ஆல்பத்தை வெளியிட எத்தனித்து உள்ளனர். பொதுவாக ராக் குழுக்களின் உறுப்பினர்களிடையே ஈகோ இருக்கும். இதனால் எப்போதும் எதாவது பிரச்சனை புகைந்து கொண்டு இருக்கும். ஆனால், 40 வருடத்திற்கும் மேலாக இன்றளவிலும் ஒற்றுமையாக தங்கள் ஆல்பங்களை வெளியிட்டு கொண்டு இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு புகழ் பெற்ற 'ராக் அன்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம்'மில் ZZ Top கவுரவிக்கபட்டனர்.  மேலும் இவர்களை கவுரவிக்கும் பொருட்டு, மே 15 - 1997ஐ ZZ Top தினமாக அப்போதைய டெக்ஸாஸ் கவர்னர் புஷ் அறிவித்தார். 

ஒரு நீண்ட சாலை பயணத்தின் போது, இவர்களின் பாடலை கேட்டு பாருங்கள். போரடிக்கும் பயணமும் சுவாரசியமாக மாறக்கூடும்.

மொத்தத்தில் ZZ Top - டெக்ஸாஸ் ராக் தேவர்கள்...

எனக்கு பிடித்த இவர்களின் பாடல்களின் பட்டியல் இங்கே:

 1. La Grange
 2. Tush
 3. Legs
 4. Sharp Dressed Man
 5. Velcro Fly
 6. Gimme all your Lovin'
 7. I'm Bad and I am Nationwide
 8. Viva Las Vegas
 9. Got me under pressure
 10. Sleeping Bag
 11. Cheap Sunglasses
 12. Jesus just left to chicago
 13. Doubleback
 14. Just Got Paid
 15. Chevrolet

  கொசுறாக எனக்கு மிகவும் பிடித்த 'லா க்ரான்ஜே' பாடல் இதோ:

6 comments:

எஸ்.கே said...

சார் இந்த பாப், ராக், ராப் இதுக்கெல்லாம் என்ன வித்தியாசம்?

Prasanna Rajan said...

பாப் என்பது பாப்புலர் ம்யூசிக்கை குறிக்கும். இதற்கு இன்ன இசைக் கருவிகள் தான் உபயோகிக்க வேண்டும் என்பது இல்லை.

மாறாக ராக் இசை மூன்று அங்கங்களால் உருவாவது. எலக்ட்ரிக் ரிதம் கிடார், பேஸ் கிடார் மற்றும் ட்ரம்ஸ் இவைகளே ராக் இசை கூறுகள். ராக் இசையின் அடிநாதம் மெலடி தான் என்றாலும், இம்மூன்று வாத்தியங்களின் தன் இஷ்டத்திற்கு உபயோகிப்பதில் தான் ராக் இசையின் சூட்சுமம் அடங்கியுள்ளது.

ராப் இசை - இசையுடன் கலந்த உரையாடல்...

கொழந்த said...

TAMILANN
பாஸ்..நம்புறீங்களோ இல்லையோ...எனக்குப் பிடித்த ராக் கிளாசிக்கிஸ்ன்னு Led Zepplein, AC/DC, GnRன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து பாடல்கள் வரை அடுத்து ஒரு பதிவா போடலாம்னு நெனச்சிருந்தேன்.

// ராக் இசை என்றால் காட்டு கத்தல் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த கட்டுரை (அ) கட்டுரை தொடர் (??!!) உங்களுக்கானது அல்ல. இன்னொரு விஷயம் - ராக் இசை பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்//

More or less இதே வரிகளைத்தான் மு.கு போடலாம்னு நெனச்சிருந்தேன். இப்ப வேறு வார்த்தைகளை தேடனும்.

ZZ Top பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இதுவரை கேட்டதில்லை. சீக்கிரமே கேட்கத் தூண்டுது உங்கள் பதிவு. Thanks for the intro...அடிக்கடி இந்த மாதிரி மியூசிக்கல் பதிவுகள தட்டி விடுங்க

கொழந்த said...

//மாறாக ராக் இசை மூன்று அங்கங்களால் உருவாவது. எலக்ட்ரிக் ரிதம் கிடார், பேஸ் கிடார் மற்றும் ட்ரம்ஸ் இவைகளே ராக் இசை கூறுகள்//

boss...எலக்ட்ரிக் ரிதம் கிடார் 60'sல இருந்துதான பெருமளவில் உபயோகப்படுத்தபட்டது..ஆரம்ப கால(Chuck Berry, Elvis) ராக் இசை Rock-n-Roll+Blues இந்த இசைகளின் நீட்சியாகத்தானே இருந்தது..ஒரு clarificationனாகத்தான் கேட்கிறேன்.

Prasanna Rajan said...

@ கொழந்த

ஜாஸில் இருந்து ப்ளூஸ், ப்ளூஸில் இருந்து ராக், ராக்கிலிருந்து மெட்டல் மற்றும் இன்ன பிற இத்யாதிகள் - இப்படித் தான் படிநிலை பரிணாமம்.

நான் குறிப்பிட்டது எலக்ட்ரிக் ரிதம் கிடார் அறிமுகம் ஆன பின்ன ராக் இசை பற்றி...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

ZZ Top,குறித்த பகிர்வு சிறப்பாக இருக்கிறது. எனக்கு வயது ஆகிவிட்டது என்பதை ஒத்துக் கொள்ள சிரமமாகவிருக்கிறது :))

Share