Thursday, October 14, 2010

சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்!!

என் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்தாலும் அவ்வப்போது எதாவது ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தேன். அப்பாவின் பழைய கணையாழி இதழ்களை தூசி தட்டி எடுத்து படித்து கொண்டிருந்த போது தான் கிடைத்தது 'ஜே.ஜே சில குறிப்புகள்'. ஆதிமூலம் அவர்களின் ஸ்ப்ரே பெயின்டிங் வகை ஓவிய அட்டை படத்துடன், க்ரியா வெளியீடாக வந்த முதல் பதிப்பு அது. இந்தியா டுடே இலக்கிய மலரை வருடம் தவறாது என் தந்தை வாங்கி கொண்டிருந்தார். அதில் வந்த ஒரு உரையாடல் ஒன்றில் தமிழில் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்று 'ஜே.ஜே சில குறிப்புகள்' என்று குறிப்பிடபட்டு இருந்தது, கொஞ்சம் ஆவலை கிளப்பி விட்டது.

ஒரு மாலை நேரத்தில் 'ஜே.ஜே'வை வாசிக்க ஆரம்பித்தேன். அது படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தான் என் தந்தையின் நான்கு வருட கல்லூரி டைரிகளை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். கட்டமைப்பு படி பார்த்தால் ஜே.ஜே சில குறிப்புகளும், என் தந்தையின் டைரி குறிப்புகளும் ஒன்றாக இருந்தது (என் தந்தையின் டைரி குறிப்புகள் மிக சுவாரசியமாக இருந்தது இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டது). எதையும் படித்து செரிக்கும் மனநிலையில் இருந்ததால் ஜே.ஜே சில குறிப்புகள் அத்தனை கடினமாயில்லை. கல்லூரி வந்த பின் சில இலக்கிய சிற்றிதழ்களில் ஜே.ஜே பற்றிய விவாதங்களை படிக்க நேர்ந்தது. அதிலும் முக்கியமாக 'வனம்' சிற்றிதழில் ஜீ.முருகனின் ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய கட்டுரை. முதல் பதிப்பு வெளியான போது அதை அவர் வாங்கி படித்ததையும், அந்த நாவல் தன் இலக்கிய வாசிப்பை எவ்வாறு மாற்றி அமைத்தது என்பதை குறிப்பிட்டு இருந்தார். அந்த கட்டுரை என்னை 'ஜே.ஜே'வின் மறு வாசிப்பிற்கு அழைத்து சென்றது. பல விடயங்கள் பிடிபட்டன. 

ஆர்வமாகி வாடகை புத்தக நிலையத்திலிருந்து 'ஒரு புளியமரத்தின் கதை'யை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். திருச்சியிலிருந்து, தேனிக்கு போகும் பேருந்து பயணத்தில் படித்து முடிக்கக் கூடிய எளிய நடையில் இருந்தது. ஜே.ஜே சில குறிப்புகளை காட்டிலும் மிக சுவாரசியமான நடையில் இருந்தாலும், பல கிசுகிசுக்களின் தொகுப்பாக இருந்ததைப் போன்ற ஒரு உணர்வு. அதை முடித்ததும் எங்கள் பல்கலையில் எம்.ஏ தமிழ் மாணவர்கள் கூட தீண்டாமல் புத்தம் பொலிவுடன் இருந்தது 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'. உண்மையிலேயே சிறந்த நாவல். என் பொறியியல் புத்தகங்கள் கூட கொடுக்காத ஒரு உன்னத தூக்கத்தை 'குழந்தைகள், பெண்கள், ஆண்களின்' இரு பக்கங்கள் தந்தன. (இன்னொரு ஸ்லீப்பிங் டோஸ்: விஷ்ணுபுரம் - அது பற்றி அப்புறம்)

இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்தவர் சு.ரா என்ற சிறுகதை எழுத்தாளர் தான். (சத்தியமாக பகடி இல்லை) 1997 தினமணி பொங்கல் மலரில் வந்த 'நாடார் சார்' கதை தான் எனக்கு மிகவும் பிடித்த அவரின் கதை. அப்போதைய எனது பள்ளி சூழலும், எங்கள் பள்ளியில் இருந்து விலகிச் சென்ற ஒரு பி.டி மாஸ்டரையும் அந்த கதை எனக்கு நினைவூட்டியது. இன்னொரு பிடித்த கதை 'மேல்பார்வை'. முன்ன கதை கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டதென்றால், பின்ன கதை பெண்கள் ஆடும் கூடைபந்தாட்டத்தை பற்றியது. தனி கதைகளாக வாசித்த பின் மொத்த தொகுப்பாக அவரின் கதைகளை வாசித்த போது ஒரே பேட்டர்னுக்குள் தன் கதைகளை அடைக்கிறாரோ என்று தோன்றியது.

அவரின் சிறந்த கதைகளாக கருதப்படும் 'ரத்னாபாயின் ஆங்கிலம்', 'பல்லக்கு தூக்கிகள்', 'ஆத்மராம், சோயித்ராம்' மற்றும் 'பள்ளம்' ஆகிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது பின்னமிரண்டு கதைகள். 'பல்லக்கு தூக்கிகள்' கதையின் கதைசொல்லி தான் இருக்கும் இடத்தை ஒரு அசூயையுடன் விவரிப்பதாக இருந்தது. அதே போல் எரிச்சலூட்டிய மற்றொரு கதை 'மீறல்'. பேருந்தில் அட்ஜஸ்ட் செய்ய தெரியாத ஒரு மேல்தட்டு பெரியவராகத் தான் கதைசொல்லியை உருவகப்படுத்த முடிந்தது. 'பிரசாதம்' கதையை படித்த போது ஏற்பட்ட ஒரு பரவசத்தை காட்டிலும், பாலு மகேந்திராவின் 'கதை நேரத்தில்' அது படமாக்க பட்ட போது அந்த கதைக்கு மேலும் மெருகூட்டியது போல இருந்தது.

பசவய்யா  என்ற அவர் கவிமுகத்தை நான் காணவில்லை. நண்பன் ஒருவன் படிக்கக் கொடுத்த அவரின் கவிதைகளை ஒரு வருடம் கழித்து அப்படியே பாதுகாப்பாக கொடுத்தேன். கவிதைகளின் மேல் ஆர்வமில்லாத காரணத்தை தான் சாட்சி கூண்டில் ஏற்ற வேண்டும். நான் அவரின் சிறுகதை தொகுப்பை வாசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் அவரின் 'பிள்ளை கெடுத்தான் விளை' கதை வெளியானது. அதன் விளைவாக எழுந்த விவாதங்கள் இன்றும் என் மண்டையை காய வைக்கும். அதிலும் சாரு 'தீராநதி'யில் அந்த கதையை அக்குவேர், ஆணிவேராக பிரித்து எழுதியதை படித்த போது இன்னும் அதிகமாக மண்டை காய்ந்தது. ஆனாலும், அந்த விவாதங்களை அப்படியே தொகுத்து புத்தகமாக வெளியிட்டது காலச்சுவடு. தமிழில் முதன் முதலாக ஒரு இலக்கிய சர்ச்சையையை புத்தகமாக வெளியிட்டு மார்க்கெட்டிங் செய்த பெருமை காலச்சுவட்டையே சாரும்.

சரியாக ஒரு வருடம் கழித்து சு.ரா பூவலகம் நீத்தார். என்ன தான் அவரை பற்றிய விவாதங்கள் எழுந்தாலும் தமிழ் இலக்கிய சூழலில் மறுக்க முடியாத ஆளுமை  சு.ரா. அவரின் மறைவுக்கு பின் ஜெ.மோ உயிர்மையில் எழுதிய 'சு.ரா' பற்றிய ஒரு நீண்ட குறுநாவலை  படிக்க நேர்ந்த போது தான், சு.ராவின் ஆளுமை புலப்பட்டது. இருப்பினும் அதில் உள்ள உண்மைகள் விவாதத்திற்கு உட்பட்டவை. காரணம் - ஜெ.மோ எழுதி இருந்த அந்த கட்டுரைஐஐஐ  சு.ராவிற்கு பின்னான அவரின் இலக்கிய இடத்தை ஸ்தாபிப்பதாகவே இருந்தது. வஞ்ச புகழ்ச்சி அணியை ஒரு கட்டுரை முழுவதும் உருவகப் படுத்திய பெருமை ஜெ.மோவையே சாரும்.

நிற்க. சு.ராவை பற்றிய பல அவதூறுகள் வந்தாலும், மனிதர் தன்னை ஒரு நிறுவனமாக ஸ்தாபித்து கொண்டதை போன்று தமிழில் வேறு எந்த எழுத்தாளரும் செய்ததாக தெரியவில்லை. அந்த வகையில் அவரை பாராட்டியே ஆகவேண்டும்.  அவரின் நினைவு நாளான இன்று, அவரை பற்றி ஒரு நேர்மையான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற நினைப்பில் தான் எழுந்தன மேலிருக்கும் என்னுடைய குறிப்புகள்...1 comment:

VELU.G said...

சு.ரா ஒரு சிறந்த எழுத்தாளர்

நீங்கள் சொல்வதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன்

Share