Saturday, March 6, 2010

ஆலிஸின் அற்புத உலகம் (2010)


ஒருவரை பார்க்கும் போதோ அல்லது ஒரு சம்பவம் நடக்கும் போதோ, அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது அல்லது இது எங்கோ நடந்தது போல இருக்கும் உணர்வை 'Deja Vu" என்று கூறுவர். அதன் பின்னணியை ஆய்ந்தால் அவரை அல்லது அந்த சம்பவத்தை நீங்கள் ஒரு வேலை உங்கள் கனவில் கண்டு இருக்கலாம் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கனவுகளில் நடைபெறும் சம்பவங்கள் இன்று வரை உளவியலாளர்களுக்கு பெரும் சவாலாகவும், புதிரானதகவும் இருக்கின்றது. நம் ஆழ்நிலை மனதில் தோன்றும் காட்சிகள், ஒரு வகையில் பார்த்தால் நம் புற உலகில் தோன்றும் காட்சிகளின் உருவகமே. லூயி கரோல் (Louie Carol) என்னும் சார்லஸ் லுட்விஜ் டாட்க்சன் (Charles Lutwidge Dodgson) எழுதிய ஆலிஸின் அற்புத உலகமும் ஒரு வகையில் புற உலகின் உருவகபடுத்தபட்ட கனவுதான்.

லூயி கரோல் தன் நண்பரின் மகளான ஆலிசுக்கு கற்பனை கலந்து சொன்னது தான் ஆலிஸின் அற்புத உலகம். அதை எழுதித் தருமாறு ஆலிஸ் கேட்க 1865 ஆம் ஆண்டு அதை ஒரு கையெழுத்து பிரதியாக எழுதினார். பின்னர் 1866 இல் அந்த பிரதி புத்தகமாக வெளி வந்தது. மிகச் சிறப்பாக விற்ற அந்த புத்தகத்தின் தொடர்ச்சியாக Through the looking glass என்ற நூலை எழுதினர். இந்த இரு நூல்களும் குழந்தைகள் மட்டுமல்லாது, பெரியவர்களையும் ஈர்த்தது. அதை படித்தவர்கள் தங்களது கனவுகளில் ஆலிஸின் அற்புத உலகத்தை கண்டனர். வெளிவந்து 145 வருடங்களாகியும் இன்றும் பல வாசகர்களை ஈர்த்து கொண்டே இருக்கிறது. ஒரு வகையில் ஹாரி பாட்டர் கூட ஆலிசினால் கவரப்பட்டு தான் எழுதப் பட்டது என்று அதன் படைப்பாளர் ஜே.கே.ராவ்லிங் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆலிசின் அற்புத உலகம் பலரால் பல முறை திரைப்படமாக எடுக்கப் பட்டுள்ளது. அவை அனைத்தும் மூலக்கதையின் சாரத்தை ஒட்டியே படமாக்கப் பட்டவை. இயக்குநர் டிம் பர்டன் (Tim Burton) எட் வுட், ஸ்வீனி டாட், பிக் ஃபிஷ், ஸ்லீப்பி ஹாலோ போன்ற சிறந்த படங்களைத் தந்தவர். அவரின் படங்கள் பெரும்பாலும்
ஃபேண்டஸி மற்றும் இருண்ட கனவுலகம் பற்றிய கதைகளாகத் தான் இருக்கின்றன. ஆலிசின் அற்புத உலகம் திரைப்படமும் அதே போல் தான் அவருடைய இயக்கும் திறமைக்கு சான்றாக இருக்கின்றது. இருப்பினும் இரு மூல நாவல்களின் கதைக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை. இரு நாவல்களின் கதையில் உள்ள கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு புது திரைக்கதையை இந்த படத்திற்காக உருவாக்கி உள்ளனர்.

இந்த இடத்தில் தான் படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் - எல்லோரும் இந்த இரு மூல நாவல்களையும் படித்திருக்க மாட்டர். முக்கியமாக ஒரு ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகள். இந்த திரைப்படம் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தாலும், குறைந்த பட்சம் இரு நாவல்களின் கதையைத் தெரிந்தால் தான் உங்களால் இந்த திரைப்படத்தை முழுமையாக ரசிக்க இயலும். இதனால் தான் இப்படம் விமர்சகர்களிடம் செமத்தியாக அடி வாங்கி கொண்டு இருக்கிறது.

கதை: சுருக்கமாகவே சொல்லிட முடியாத கதை. பதின்ம வயதைத் தாண்டி திருமண வயதை அடைந்த ஆலிசிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தனது நிச்சயதார்த்த தினத்தில் அந்த ஏற்பாடுகள் பிடிக்காமல், ஒரு விசித்திரமான முயலை பின் தொடரும் ஆலிஸ் ஒரு முயல் வளைக்குள் விழுகிறாள். அவள் வந்து விழுவது அற்புத உலகில். அற்புத உலகை சிவப்பு அரசி தன் வசம் எடுத்துக் கொண்டதை அறிகிறாள். அதை எப்படி வெள்ளை அரசிக்கு, பைத்தியக்கார தொப்பிக்காரன் (Mad Hatter) உதவியுடன் மீட்டுத் தருகிறாள் என்பது தான் மூலக் கதை. இதன் நடுவில் மூல புத்தகங்களில் குறிப்பிடப் படும் சம்பவங்களான மேட் டீ பார்ட்டி, ஆலிஸ் சிறியவள் ஆதல் போன்றவை அப்படியே இதன் திரைக்கதையில் உள்வாங்கப் பட்டுள்ளன.

மூலக் கதையில் உள்ள கதாப்பாத்திரங்கள் மாறாமல் அப்படியே எடுத்தாளப் பட்டுள்ளன. மேட் ஹாட்டராக ஜானி டெப் (பர்டனுடன் இவருக்கு 7வது படம்), சிவப்பு அரசியாக ஹெலினா போன்ஆம் கார்டர் (பர்டனுடன் இவருக்கு 6வது படம்) ஆகியோர் மிகச் சிறப்பாக அந்த பாத்திரங்களில் பொருந்தி போகின்றனர். ஆலிசாக
Mia Wasikowska, வெள்ளை அரசியாக Anne Hathway, நீல கூட்டுப்புழுவின் குரலாக Alan Rickman போன்ற பெரிய நடிகர்களின் திறமைகள் படத்தில் உபயோகப் படுத்தபட்டுள்ளன. லூயி கரோலின் கதாப்பாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது செஷாயர் பூனை. அந்த பாத்திரம் இந்த படத்தில் மிகச் சிறப்பாக எடுத்தாளப் பட்டுள்ளது. அதற்கு குரல் கொடுத்திருப்பவர் பிரபல ப்ரிட்டிஷ் நடிகர் Stephen Fry.

விமர்சகர்களின் வாணலியில் இந்த படம் தாளிக்க படுவதற்கு முக்கிய காரணம், அழுத்தமில்லாத ஆழமில்லாத கதாபாத்திர அமைப்புகள், சிறு மற்றும் ஒன்றிரண்டு பெரிய ஓட்டைகளைக் கொண்ட திரைக்கதை. திரைக்கதை ஆசிரியர் லூயி கரோலை கரைத்து குடித்திருக்க வேண்டும். அதனால் தான் என்னவோ படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கரோலின் இரு நாவல்களையும் வாசித்தவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்.

அதை விடுத்து பார்த்தால் இந்த திரைப்படம் ஒரு மிகச் சிறப்பான ஒரு காட்சி விருந்து. ஆலிசின் அற்புத உலகம் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நம் கண் முன் கொண்டு வந்திருந்தனர். ஐமேக்ஸ் 3டியில் இந்த படத்தை பார்த்த போது பல நேரங்களில் என்னையறியாமல் வாயைப் பிளந்து ஆலிசின் அற்புத உலகத்தில் தொலைந்து விட்டிருந்தேன். ’அவதார்’ அளவிற்கு படத்தின் விஷுவல் அத்தனை அழகாக அமைக்கப் பட்டிருந்தது.

அவதார் ஒரு வகையில் மசாலா படம் தான் என்றாலும், காட்சி அமைப்புகளின் துல்லியமும், திரைக்கதையும் தான் அதன் வெற்றிக்கு ஆதாரமாய் இருந்தது. இந்த படத்தில் காட்சி அமைப்புகளின் துல்லியம் இருந்தாலும், திரைக்கதை ஒன்றிரண்டு கணங்களில் அயர்ச்சியைத் தான் ஏற்படுத்துகிறது. ஃபேண்டஸி திரைப்பட ஆர்வலர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள், முக்கியமாக 3டியில்...

11 comments:

Unknown said...

I dont like fantasies! Well written though

Prasanna Rajan said...

நன்றி ப்ரகாஷ்...

பாலா said...

யப்பா.. பத்து தடவை க்ளிக் பண்ணினாதான் தமிழிஷ் ஓட்டு விழுது.

பாலா said...

ரெண்டு வாரம் முன்னாடியே டிக்கட் புக் பண்ணி வச்சும் போக முடியலைங்க பிரசன்னா.

காய்ச்சல்ன்னா கூட.. போய்ட்டு வந்துடலாம். இருமிகிட்டே இருக்கறனால.. தியேட்டரில் டிஸ்டர்பா இருக்கும். அடுத்த வாரம் போகணும்!!

க்ரிட்டிக்ஸ் படத்தை வறுத்திருந்தாலும், வ்யூவர்ஸ் நல்ல ரேட்டிங் கொடுத்திருக்காங்களே!!

பார்த்துடுவோம்!!! :)

Prasanna Rajan said...

முதல்ல உடம்பு சரியாகட்டும் பாலா.. மத்ததெல்லாம் அப்புறம் தான்...

ஒரு வேலை தமிளிஷ்ல இருந்து உங்களை தள்ளி வச்சுடாங்கலோ

geethappriyan said...

ஓட்டு போட்டாச்சு
நல்ல விமர்சனம்
இதையும் டவுன்லோடு போடுறேன்

Balaji K said...
This comment has been removed by the author.
கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சிறப்பான விமர்சனம். கனவுகளை அப்படியே திரையில் கொணர்வது என்பது சுலபமானதல்ல. பர்ட்டன் என்ன செய்திருக்கிறார் என்பதை வரும் வாரம் இங்கு திரையரங்குகளில் அறிந்து கொள்ளலாம்.

ராஜரத்தினம் said...

விமர்சனங்கள் படிச்சுட்டு கொஞ்சம் யோசனையா இருந்துச்சு.. (டிம் பர்டன் திரும்ப திரும்ப ஒரே மாதிரி கற்பனைகளையே படைக்க்கிறாரன்னு ஒரு சலிப்பும் உண்டு) உன் விமர்சனம் படிச்சுட்டு போக ஆசை. போய்ட்டா போச்சு .. :-)
தமிழ்மணம் நட்சத்திர பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் கூட :-)

Prasanna Rajan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கனவுகளின் காதலரே.

@ ராஜா

நன்றி பாஸ்...

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

Share