Friday, February 26, 2010

சுஜாதா - என்னை உருவாக்கிய பேராளுமை


ஒரு எட்டு வயது இருக்கும் போது தான் முதன் முதலில் சுஜாதாவின் சிறுகதையை படித்தாக நினைவு. விகடன் வெளியீடாக ‘ட்விங்கிள்,ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்ற சிறுகதை தொகுப்பில் இருந்த ‘பிள்ளையார் பேசுகிறார்’ (கதையின் தலைப்பு சரியா என்று நினைவில்லை) என்ற கதையை தான் முதன் முதலில் படித்தேன். பிள்ளையாரே அந்த கதை சொல்வதாக அமைந்து இருக்கும். அந்த சிறுகதை பின்னர் ‘செல்லமே’ படத்தில் விஷால், கிரீஷ் கார்னட் வீட்டிற்கு ரெய்டு செல்வது போல் அமைக்கப் பட்டிருக்கும். தங்கத்திற்கு பாதரசம் பூசினால் வெள்ளி போல் தோற்றமளிக்கும் என்ற இரசாயண பாடத்தை அந்த கதை மூலம் தான் கற்றுக் கொண்டேன். முதலில் அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்தேன். பின்னர் அப்பா ‘கணையாழியின் கடைசி பக்கங்களில்’ வந்த அவருடைய புகைப்படம் ஒன்றை காட்டினார்.

இப்படித் தான் ஆரம்பித்தது எனது சுஜாதா வாசிப்புப் படலம். அவ்வப்போது குமுதம், விகடனில் வந்த கட்டுரைகள் மூலம் எனது வாசிப்பு பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. 10 ஆம் வகுப்பு விடுமுறையில் திரும்ப தீவிரமான வாசிப்பை தொடர்ந்தேன். 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் மனித மரபணுக்களின் தொகுப்பான ‘ஹியூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்’ தொடங்கப் பட்டது. இது ஒரு வகையில் எனக்கு பயோடெக்னாலஜியின் மீதான ஆர்வத்தை அதிகப் படுத்தியது. ஆயினும் அது என்ன, ஏதென்று அவ்வப்போது ஹிந்துவில் வெளிவந்த சில கட்டுரைகள் மற்றும் மனோரமா இயர்புக் போன்றவை விளக்கினாலும் அது பற்றிய எளிமையான விளக்கம் இல்லாத்தால் அவ்வளவாக எனக்கு புரியவில்லை.

அப்போது தான் சுஜாதா ‘ஜீனோம்’ என்ற தொடரை குமுதத்தில் எழுத, பின்னர் விசா பப்ளிஷர்ஸ் வெளியீடாக புத்தகமாக வந்தது. அது வாங்கி வாசித்த பின்னர் தான் ஜீனோம் என்றால் என்ன, அதனால் என்ன பயன், அது உருவாக்கும் ஆராய்ச்சி வாய்ப்புகள் என்ன என்பது தெளிந்த நீரோடை போல் புரிந்தது. அந்த புத்தகம் தான் என்னை இளங்கலை பொறியியல் படிப்பில் பயோடெக்னாலஜி எனும் உயிரி தொழில்நுட்பத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்ய வைத்தது.

ஒரு வகையில் என் வாழ்வை மாற்றிய ஆளுமை என்றே சுஜாதாவை சொல்லாம். அதனால் தான் இந்த தலைப்பை தந்து உள்ளேன். இளங்கலை படிப்பில் சேர்ந்த பின் என்னுடைய பல்கலை நூலகத்தில் உள்ள சுஜாதாவின் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்தேன். அவரின் மிச்ச், சொச்ச புத்தகங்கள் அனைத்தையும் திருச்சி கார்முகில் வாடகை நூலகத்தில் வாசித்து முடித்தேன். ஒரு கட்டத்தில் அவரின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிக்க ஆரம்பித்தால், இரண்டு பக்கம் போன பின் தான் தெரியும் அதை ஏற்கனவே படித்து விட்டேன் என்பது.

2006ஆம் ஆண்டில், இளங்கலை நான்காம் ஆண்டு படித்து கொண்டு இருந்த போது ‘பேசும் பொம்மைகள்’ நாவலை ஒரு பேருந்து பயணத்தில் வாசித்து கொண்டு இருந்தேன். 1991இல் வெளிவந்த அந்த நாவலில் ‘சைக்ளோஸ்போரின்’ (Cyclosporin) என்ற மருந்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்த மருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது உபயோகப் படுத்தப் படும். ஆனால் அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும். அதைப் பற்றி இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் என்னுடைய இறுதி ஆண்டு ப்ராஜெக்ட், உயிரி தகவலியில் (Bio Informatics) முறைகள் படி சைக்ளோஸ்போரினுக்கு மாற்று மருந்து கண்டு பிடிப்பது. ஒரு நிமிடம் புத்தகத்தை மூடி வைத்து விட்டு ‘இந்த ஆள் எழுதாதது என்று எதுவுமே இல்லையா’ என்று ஆச்சரியப் பட்டு கொண்டேன்.

விஞ்ஞான கட்டுரைகளை ஒரு பள்ளி மாணவனும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு எழுதிய பேராளுமை அவர். விஜய் டி.வியில் மூன்று வருடங்களுக்கு முன் ஓளிபரப்பான ‘சிகரம் தொட்ட மனிதர்கள்’ நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டி ஒன்றை சமீபத்தில் தான் பார்த்தேன். அதிலும் மனிதர் அறிவியல் கட்டுரைகளையும் அதன் அவசியத்தையும் கூறிக் கொண்டு, போகிற போக்கில் ‘நானோடெக்னாலஜி’ பற்றி கூறினார். இப்போது முதுகலை படிப்பில் நானோடெக்னாலஜி முறைப்படி ப்ராஸ்டேட் கான்சருக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இதையும் இவர் விட்டு வைக்கவில்லையா என்று மனதிற்குள் சிரித்து கொண்டேன்.

நினைத்து பார்க்கும் போது என் வாழ்வின் முக்கியமான தருணத்தை தீர்மானிப்பதில் சுஜாதா பெரும் பங்கு வகித்திருக்கிறார். அவரைப் பற்றி இதற்கு மேல் என்ன எழுதுவது என்று யோசிக்கும் போது இவர் இல்லாத வெறுமை ஒன்று தான் என்னை சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் சுஜாதாவை பற்றி நினைக்கும் போது எல்லாம் நண்பர்களுடன் பேசி சிரித்த ‘மெக்ஸிகோ சலவைக்காரி’ ஜோக் நினைவுக்கு வந்து என் முகத்தில் புன்முறுவல் ஏற்படுத்த தவறுவதில்லை...

15 comments:

பத்மநாபன் said...

எதார்த்தமாக சொல்லியுள்ளீர்கள் பிரசன்னா .. உண்மைதான் இளமையில் படிப்பவருக்கு , அவருடைய ஆளுமை கண்டிப்பாக வரும் . குறிப்பாக எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வரும் .. வாழ்த்துக்கள்.

Prasanna Rajan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மநாபன் அவர்களே...

தர்ஷன் said...

நல்லப் பகிர்வு

Prasanna Rajan said...

நன்றி தர்ஷன்...

Raju said...

எனக்கு, மெக்ஸிகோவைப் பற்றி, எந்த தகவல் கேள்விப்பட்டாலும் அந்தா ஜோக் உடனே நினைவுக்கு வந்து விடும்..!

Prasanna Rajan said...

ஹா... ஹா வாஸ்தவம் தான் ராஜீ...

ஜீவன்சிவம் said...

இன்ற சூழ்நிலையில் சுஜாதாவின் இடம் வெறுமையாகத்தான் இருக்கிறது. அது நிரப்பட முடியாத தனி மகுடம்

virutcham said...

நிறைய பெண் வாசகர்கள் அவரது மதுமிதாவை தங்கள் பெண் குழந்தைக்கு பெயராகச் சூட்டியிருக்கிறார்கள்

http://www.virutcham.com

Cable சங்கர் said...

அருமையாய் பாசாங்குஇல்லாமல் எழுதப்பட்டது. நானும் ஒன்று எழுதி வைத்திருந்தேன்.சரி ப்ன்னாளில் போடலாம் என்று வைத்திருக்கிறேன்.

Prasanna Rajan said...

@ ஜீவன் சிவம்

உண்மை தான். ஆனால் அவர் இல்லாத வெறுமையை அவர் எழுத்துக்கள் நிரப்புகின்றன...

Prasanna Rajan said...

@ Tech Shankar & Virutcham

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Prasanna Rajan said...

@ கேபிள்ஜி

நீங்களும் எழுதி பதிவு போடுங்கள். படிக்க ஆவலாய் இருக்கிறோம்...

ஸ்ரீராம். said...

விஞ்ஞானம் முதல் மருத்துவம் வரை அவரது வீச்சு அபாரமானது.. சினிமா சமையல், பயணக் கட்டுரை..சிறுகதை, நாடகம், நாவல், ஐம்பத்தைந்து வரிக் கதை, இரு வரிக் கதை, பொதுக் கட்டுரைகள்...எதை விட்டு வைத்தார்...?

Madan said...

பெண் வாசகர்கள் மட்டுமல்ல, ஆண் வாசகர்களும் தான்... என் ஆறு வயது மகளின் பெயர் மதுமிதா!!!! "வாத்தியார்" பாதிப்பு சாதாரணமானதா என்ன?

Kishore said...

அறிவு மட்டும் தனது வாழ்க்கையின் குறிகோளாக வைத்து வாழ்ந்த மனிதர் சுஜாதா. பிரசன்னா இராசன் முலம் தான் என்னக்கு சுஜாதாவின் எழுத்துக்கு என்னக்கு அறிமுகம் கிடைத்தது. நன்றி பிரசன்னா உன்னால் தான்... நான் இன்று புத்தகத்தில் நடுவில் இருக்கிறேன் :)

Share