Wednesday, April 22, 2009

ஸ்பகெட்டி வெஸ்டர்ன்களும், மீட்பால் தழுவல்களும்


புழுதியோடு சேர்ந்து பறக்கும் காற்று, வெறிச்சோடிய வீதிகள், காற்று எழுப்பும் வினோதமான ஓசை, முன்னங்கால் தெறிக்க ஓடும் குதிரைகள், தொழில் புரட்சியின் குழந்தைகளான ரிவால்வர்கள், நீராவிப் புகையை எழுப்பி வரும் இரயில் வண்டிகள், எப்போதும் சண்டைகள் நிரம்பி வழியும் மதுக் கடைகள், நீண்ட தோல் அங்கிகளுடன் வலம் வரும் கெளபாய்கள், இவைகள் இல்லாத ஒரு வெஸ்டர்ன் சாத்தியப்படுமா??!!
அது என்னமோ தெரியவில்லை. கெளபாய் என்றாலே என் நினைவுக்கு வருவதுகிளிண்ட் ஈஸ்ட்வுட்தான். அவருக்கு முன்னாலே ஹென்றி போன்டா, ஜான் வெய்ன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும், கெளபாய் என்ற பதம் தமிழ்நாட்டில் அறிமுகமானது ’கிளிண்ட் ஈஸ்ட்வுடி’னால் தான். யார் இந்த கெளபாய்கள் என்று தெரிந்து கொள்ள சிறு வயதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது உண்டு. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள டி.என்.டி, ஸ்டார் மூவிஸில் போடப்பட்ட அனைத்து படங்களையும் பார்க்க ஆரம்பித்தேன் (அப்போது டி.வி.டி எல்லாம் கிடையாது. இருந்தாலும் தேனி மாநகரத்தில் ரெம்ப கஷ்டமுங்கோ).

என்னை மிகவும் பாதித்த படம் ‘Unforgiven'. ஆனால் இப்போதைய தலைப்பு இந்த படத்தைப் பற்றி அல்ல. ’செர்ஜியோ லியொனி’ என்ற ஆங்கிலமே தெரியாத இத்தாலிய மேதை எடுத்த ‘ஸ்பகெட்டி வெஸ்டர்ன்’ (Sphagetti Western) படங்களைப் பற்றி. இந்த வெஸ்டர்ன் திரைப்படங்கள் பெரும்பாலும் இத்தாலியில் எடுக்கப்பட்டதால், அமெரிக்கர்கள் இத்தாலிய உணவான ஸ்பகெட்டியோடு இணைத்து அழைக்க ஆரம்பித்தனர். 

கிளிண்ட் ஈஸ்ட்வுட், செர்ஜியோ லியொனி இணையில் வந்த முதல் படம் ‘Fistful of Dollars'. மிக நீளமான காட்சியமைப்புகள், டெக்னிகலர் மற்றும் சினிமாஸ்கோப் உதவியுடன் அமைக்கப்பட்ட மிகவும் அருகில் எடுக்கப்பட்ட க்ளோஸ் - அப் காட்சிகள், வெஸ்டர்ன் திரைப்படங்களை மறு வாசிப்பு செய்ய வைத்தன. குற்றங்கள் அதிகம் நிகழும் ஒரு நகரத்திற்கு வரும் பெயர் தெரியாத கெளபாய் ஒருவன், அங்கு இருக்கும் இரு வன்முறை கும்பல்களை உருத்தெரியாமல் ஆக்கி அந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதி தருவதே கதை. மிகச் சாதாரண கதையாக இருப்பினும் கதை சொல்லப்பட்ட விதம், காட்சியமைப்புகள், இசை (என்னியோ மேரிகோனி) போன்றவை படத்தை மட்டுமல்லாது வெஸ்டர்ன் திரைப்படங்களின் தரத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றன. 

கிளிண்ட் ஈஸ்ட்வுட், செர்ஜியோ இணையில் அடுத்தடுத்து, 'For a Few Dollars More', மற்றும் ஆகச் சிறந்த படமான ‘The good, The bad and The Ugly' போன்ற படங்கள் அதே பெயர் தெரியாத கெளபாயை முன்னிலைப் படுத்தி வெளி வந்தன. எனக்கு  மிகவும் பிடித்த வெஸ்டர்ன் படங்களாக இவை இருந்தன, ‘யோஜிம்போ’வைப் பார்க்கும் வரை. 

அகிரா குரோசேவா, தொஷிரோ மிஃபுனே இணையில் வெளிவந்த படம் தான் ‘யோஜிம்போ’. 'ரோஷோமான்’, ‘செவன் சமுராய்’ படங்களால் உலக பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்த இருவரும் அளித்த உலகின் மிகச் சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம் தான் ‘யோஜிம்போ’. படத்தின் கதை??!! அப்படியே ‘Fistful of Dollars'. என்ன இங்கே ‘சமுராய்’ என்றால் அங்கே ‘கெளபாய்’. ‘யோஜிம்போ’வை தழுவி எடுத்த  செர்ஜியோ லியோனி, அகிரா குரோசேவா’வுக்கு நன்றி செலுத்தும் வகையில் படத்தின் டைட்டிலில் கூட அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஸ்பகட்டியோடு இணைந்த மீட்பால் (Meat Ball) போல அப்பட்டமாகத் தழுவி எடுத்து விட்டார் செர்ஜியோ. பல வருடங்களுக்குப் பின் செர்ஜியோ ஒரு பேட்டியில், அகிரா குரோசேவாவிடம் மன்னிப்புக் கேட்டதாக தகவல். 

இருப்பினும், செர்ஜியோ லியோனியின் ‘Once Upon a Time in West' திரைப்படத்தை மறக்க முடியுமா. அதிலும் அந்த படத்தின் பொறுமையை சோதிக்கும் அந்த நீளமான ஆரம்ப காட்சியை பல தடவை பார்த்து டி.வி.டியில் கீறல் விழுந்து விட்டது. சிறு நெருடல்கள் இருப்பினும், வெஸ்டர்ன் திரையுலகின் இறவாத மேதை செர்ஜியோ லியோனி என்பதில் ஐயமில்லை.

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்கள் குறிப்பிடும் படங்களை நான் பார்த்தது இல்லை நண்பா.. ஆனால் சிறு வயது முதலே காமிக்ஸ் புத்தகங்களின் காரணமாக கொவ்பாய் கதைகளின் மேல் காதல் உண்டு.. பார்க்க முயற்சிக்கிறேன்

Prasanna Rajan said...

’யோஜிம்போ’ கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். நான் இது வரை இது போன்றதொரு ஆக்‌ஷன் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்ததில்லை. கண்டிப்பாக பாருங்கள்.

Share