Thursday, July 15, 2010

டாய் ஸ்டோரி 3


1996 ஆம் வருடம். வீட்டில் கேபிள் டிவி கிடையாது. காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளில் எப்போதேனும் அப்பா என் நச்சரிப்பு தாங்காமல் வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து வருவார். பெரும்பாலும் தியேட்டரில் பார்க்காமல் விட்ட படங்கள் அதில் திரையேறும். அப்படி ஒரு காலாண்டு விடுமுறையின் போது, நானும் அப்பாவும் வீடியோ டெக் வாடகைக்கு எடுக்க சென்றோம். அந்த வீடியோ கடையில் அப்போது இருந்த படங்கள் பெரும்பாலும் பார்த்து விட்டிருந்தோம்.  அப்போது அங்கு கடையில் இருந்தவர் “என்ன தம்பி ‘டாய் ஸ்டோரி’ பார்த்துட்டீயா” என்று கேட்டார்.  நான் இல்லையென்று தலையாட்டியதற்கு ”எடுத்துட்டு போய் பாருங்க. நல்ல படம்” என்றார். கொஞ்சம் நம்பிக்கையில்லாமல் தான் எடுத்து வந்தோம். ஆனால் வாடகைக்கு எடுத்து வந்த இரண்டு நாளில் அந்த படத்தை மூன்று முறை பார்த்து விட்டிருந்தேன்.

சிறு ப்ராயத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் “இணைந்த கைகள்”. அதற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்து நிறைய முறை பார்த்த படம் என்றால் அது டாய் ஸ்டோரி தான். வுட்டியும், பஸ் லைட் இயரும் ராக்கெட்டில் பயணிக்கும் அந்த இறுதி கட்ட காட்சி எனக்கு மிகவும் பிடித்த ஆக்‌ஷன் காட்சிகளில் ஒன்று. டாய் ஸ்டோரியை நினைக்க, நினைக்க பல இனிமையான குழந்தை பருவ நினைவுகள் தான் எழுகின்றன. அனிமேஷன் படங்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமே என்று இருந்ததை மாற்றிய பெருமை டாய் ஸ்டோரியையே சாரும். 1999 இல் டாய் ஸ்டோரி இரண்டாம் பாகம் வந்து இருந்தாலும், 2003 இல் கல்லூரி வந்த போது தான் அதை பார்த்தேன். பொதுவாக sequel திரைப்படங்கள், முதல் பாகத்தை விட கொஞ்சம் காரம் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் டாய் ஸ்டோரியும், ஜேசன் போர்ன் திரைப்படங்களும் விதிவிலக்கு.

பொதுவாக இங்கு சம்மருக்கு வெளியாகும் படங்கள் கொஞ்சமாவது உருப்படியான படங்களாக இருக்கும். ஆனால் இந்த கோடையில் நம்மூரு மாதிரியே வரிசையாக சொதப்பல் படங்கள் தான் வந்து  இருந்தன. ஒரு வழியாக டாய் ஸ்டோரி 3 அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. கொடுத்த காசுக்கு உருப்படியான படம்.  முதல் பாகத்தில் சிறுவன் ஆண்டியின் பொம்மைகளான வுட்டியும், பஸ் லைட் இயரும் சண்டை  போட்டு பின்னர் ராசியாகினர். பின்னர் இரண்டாம் பாகத்தில் ஒரு பொம்மை சேகரிப்பாளனிடம் சிக்கிய வுட்டியை -  பஸ் லைட்டும், ஆண்டியின் மற்ற பொம்மைகளும் காப்பாற்றினர். முதல் பாகம் முடிந்து சரியாக 11 வருடம் கழித்து ஆரம்பிக்கிறது மூன்றாம் பாகத்தின் கதை.
 17 வயதான Andy கல்லூரிக்கு செல்ல தயாராகும் வேளையில், அவன் அம்மா அவன் அறையில் தேவை இல்லாத பொருள்களை எல்லாம் அப்புறபடுத்த சொல்கிறாள்.அவன் கல்லூரிக்கு செல்கையில் தனக்கு மிகவும் பிடித்த பொம்மையான வுட்டியை மட்டும் எடுத்துச் செல்ல நினைக்கிறான். மீதம் இருக்கும் பொம்மைகள் அனைத்தையும் பரணில் போட்டு வைக்க நினைக்கையில், தவறுதலாக அவை குப்பைக்கு போகின்றன. குப்பைக்கு போவதில் இருந்து தப்பிக்கும் பொம்மைகள், ஒரு 'Day Care Center'க்கு செல்லும் பெட்டியில் தஞ்சம் அடைகின்றன. ஆண்டி தங்களை குப்பையில் தள்ளியதாக நினைக்கின்றன பொம்மைகள். ஆனால் அவர்களை காப்பாற்ற வரும் வுட்டி, Andy அவர்களை தூக்கி போட நினைக்கவில்லையென விளக்கம் கூறியும் பிடிவாதமாக டே கேர் செல்லும் காரில் பயணிக்கின்றன மற்ற பொம்மைகள்.

டே கேரில் ஆரம்பத்தில் தாங்கள் நன்றாக விளையாடப் படுவோம் என நினைக்கும் ஆண்டியின் பொம்மைகளுக்கு, பின்னர் தான் அங்கு நடக்கும் சதி புலப்படுகிறது. ஒரு கரடி பொம்மையின் தலைமையில் இயங்கும் ஒரு மாபியா குழு(??!!) இவர்களை ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகள் விளையாடும் பகுதியில் தள்ளி விடுகின்றன. ஆண்டியின் அருமையை பின்னர் அறியும் பொம்மைகள் எவ்வாறு அந்த டே கேரில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே மீதிக் கதை.

வுட்டியாக டாம் ஹேங்க்ஸ், பஸ்ஸாக டிம் அல்லன் என்று வழக்கமான குரல்களுடன் ,கென்னாக பேட்மேன் புகழ் மைகேல் கீடன்  குரல் கொடுத்து உள்ளார். கதையை கேட்கும் போது கொஞ்சம் குழந்தைத்தனமாக தோன்றினாலும், அது திரைக்கதை ஆக்கப் பெற்ற விதமே டாய் ஸ்டோரி திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம். சில காட்சிகளில் உங்களை அறியாமல் கண்ணில் ஓரம் நீர் கோர்த்தால் அதற்காக வெட்கப் பட வேண்டாம். அதே சமயம் பிக்ஸார் படைப்பாளிகளுக்கே உள்ள டார்க் ஹியுமர் வகையறாக்களும் படத்தில் நிரம்பி உள்ளன. முக்கியமாக பஸ்  லைட் இயர் பழுதாகி, அதை திரும்ப சரி செய்த பின் "¡Buzz Lightyear al rescate!" என்று ஸ்பானிஷில் பேசுவது, கென் பொம்மைக்கும் பார்பிக்கும் நடக்கும் காதல் ஊடல்கள் போன்று ஏராளமான காட்சிகள். டெக்னிகலாக பார்க்கும் போது முப்பரிமான காட்சிகள் ஒன்றும் படத்தில் அவ்வளவாக இல்லை. அதனால் 3 டிக்கு செலவு செய்ய வேண்டிய எக்ஸ்ட்ரா காசு கொஞ்சம் மிச்சம்.

படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வரும் போது, இந்த கதாபாத்திரங்களை திரும்ப பார்க்க மாட்டோம் என்று நினைப்பு தான் வருத்தம் தந்தது. ஹாலிவூட் ஆச்சே, எப்படியும் ஸ்பின் ஆப், ஒரு கதப்பதிரத்தை மட்டும் இன்னொரு முழு நீளப் படம் இப்புடி எதாவது ஒன்னு எடுக்காமலா போவாங்க...


Toy Story 3 - It gets better and better

5 comments:

பாலா said...

//படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வரும் போது, இந்த கதாபாத்திரங்களை திரும்ப பார்க்க மாட்டோம் என்று நினைப்பு தான் வருத்தம் தந்தது.//

யாருங்க சொன்னது 4-ஆவது பார்ட் வராதுன்னு?? மே பி Andy கேரக்டர் வராம போகலாமே தவிர, இப்ப புது ஓனர் கிடைச்சாச்சில்ல??

ஆனா.. வருசம் ஒரு படம்னு தரும் பிக்ஸார், இப்படி பார்ட் 1-2-3 -ன்னு எடுக்கும்போது, ஒரிஜினல் கதைகள் கம்மியாகுது.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

வழமை போலவே சிறப்பான பதிவு. இங்கு நேற்றுத்தான் வெளியாகியுள்ளது. வார இறுதியில் பார்த்து விடுவேன் என்றே எண்ணுகிறேன். அன்பு செய்தவர்கள் புறக்கணித்தால் உணரப்படும் வேதனை பொம்மைகளிற்கு மட்டுமானதா என்ன.

ஜெய் said...

// அது திரைக்கதை ஆக்கப் பெற்ற விதமே டாய் ஸ்டோரி திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம். //

அதேதாங்க... அதுதான் பிக்ஸார் ஸ்பெஷலே...

Mohamed Faaique said...

ஆனா.. வருசம் ஒரு படம்னு தரும் பிக்ஸார், இப்படி பார்ட் 1-2-3 -ன்னு எடுக்கும்போது, ஒரிஜினல் கதைகள் கம்மியாகுது

DR said...

அருமையான ஒரு பாசிட்டிவ் திரை விமர்சனம்...

Share