Sunday, May 9, 2010

இரா.முருகனின் ‘சேது’, என்.ஸ்ரீராமின் ‘முனி’

இளங்கலை பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம். புத்தகம் படிக்க பேய் போல் சுற்றி கொண்டிருந்தேன்.புத்தகம் படிக்கவில்லையென்றால் தூக்கம் வராது. எனக்கு சரியாக தீனி போட்டது என் பல்கலை நூலகம். முதுகலை தமிழ் மாணவர்களுக்கு என்று வாங்கபட்ட புத்தகங்கள் தூங்கி கொண்டிருக்கும் அங்கே.  ஜெயகாந்தன், கி.ரா, புதுமைபித்தன், தி,ஜா, கு.பா.ரா, லா.சா.ரா, மெளனி, ப்ரமிள், சு.ரா, எஸ்.ரா, சாரு, ஜெ.மோ உள்ளிட்ட அனைவரும் எனக்கு அங்கு தான் அறிமுகமானார்கள். அப்போது தான் இரா.முருகன் அவர்களின் “இரண்டாம் ஆட்டம்” சிறுகதை தொகுப்பை அங்கு கண்டேன். ஏற்கனவே ‘ராயர் காப்பி கிளப்’ யாஹீ குழுமம் மூலம் அவரை பற்றி தெரிந்தாலும், அவரின் படைப்புகள் ஒன்றை கூட படித்ததில்லை. அதில் இருந்த ‘பூச்சி’ கதையை ஏற்கனவே ’தினமணி’ 1997 பொங்கல் மலரில் படித்த நினைவு. 

அந்த தொகுப்பில் ‘சேது’ எத்தனையாவது கதை என்று தெரியவில்லை. அந்த கதையை படித்த பிற்பாடு, அதற்கு மேல் எனக்கு வேறு ஒன்றும் படிக்க தோன்றவில்லை. இரண்டு நாட்கள் வேறு எந்த புத்தகத்தையும் படிக்க தோன்றவேயில்லை. மந்திரித்து விட்ட கோழி போன்று சுற்றி கொண்டிருந்தேன். பலவற்றை மறுவாசிப்பு செய்யும் பழக்கம் இருந்தாலும், அந்த கதையை நான் அதற்கு பிறகு வாசிக்கவே இல்லை. ஒரு வேளை என்னுடைய வயது (அப்போது எனக்கு 19 வயது) அந்த சிறுகதை தந்த சிறு அதிர்ச்சியை, ஊதி பெரிதாக்கி விட்டதா என்று புரியவில்லை. சில விஷயங்கள் புரியாமல், அதனால் கிடைக்கும் இன்பம் அலாதியானது. 

கதை என்னவென்றே நான் சொல்லவில்லையே. ராமேஸ்வரத்தில் இருக்கும் நாழிக் கிணறுகளை வாளியோடு தீர்த்த யாத்திரை அழைத்து செல்லும் கைடு ஒருவனுடன், அங்கு தீர்த்த யாத்திரை வரும் பயணி ஒருவன் புலம்பும் புலம்பல் தான் கதை. கதையின் இறுதியில் ஒரு அதிர்ச்சிகரமான முடிவு. அது தான் என்னை மிகவும் பாதித்தது. 

ஹாஸ்டலில் கிடைக்கும் ஓ.சி ஆனந்த விகடனுக்கு நாயாய் அலைந்தது ஒரு காலம். எஸ்.ராவின் ‘துணையெழுத்து’ வேறு அப்போது அதில் வந்து கொண்டிருந்தது. ஆனந்த விகடனை காசு போட்டு வாங்க வக்கத்து திரிந்து கொண்டிருந்தேன். அப்போது நண்பன் தென்னரசு தான் பெரும்பாலும் ஆனந்த விகடன் வாங்குவான். சில முதுகலை மாணவர்களும் வாங்குவர். ஓ.சி வாங்கி படித்த ஒரு இதழில் அந்த கதை வந்து இருந்தது. அது என்.ஸ்ரீராமின் ‘முனி’. வெறும் வார்த்தைகள் மூலம் வாசிப்பவர்களின் மனத்தில் பெரும் ரசவாத மாற்றம் நிகழ்த்தலாம் என்பதை அந்த கதை மூலம் புரிந்து கொண்டேன். 

கதை: முனி கோயில் பூசாரி சாமியாடிய படி இரவில் நகர் முழுவதும் சுற்றி வருவார். முனி வேடம் கலைத்து காலையில் தன் மகனை கொஞ்ச வரும் பூசாரியை பார்த்து “யெம்மா முனி!!” என்று பயந்து அம்மாவின் பின்னால் ஒளிவான் மகன். அந்த சிறுவன் தன் தாயின் பின்னால் ஒளிந்து கொள்வதை ஒரு முறை காட்சி படுத்தி பார்த்த போது அதிர்ச்சியுற்றது என் மனம்.

இந்த கதையையும் அதற்கு பிற்பாடு நான் வாசிக்கவில்லை. என்,ஸ்ரீராமின் “வெளி வாங்கும் காலம்” சிறுகதை தொகுப்பை அதற்கு பிற்பாடு தான் வாசித்தேன். இருந்தும் இந்த கதையை திரும்ப வாசிக்க தோன்றவேயில்லை. முதல் வாசிப்பின் போது ஏற்பட்ட அந்த அதிர்வு அப்படியே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

இந்த இரு சிறுகதைகளும் ஒரே வகையான சட்டகத்தின் கீழ் வடிவமைக்கபட்டவை. அதாவது கதையின் இறுதியில் வாசகனுக்கு அதிர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதே இந்த கதைகளின் ஆதாரம். அந்த முயற்சியில் இரு எழுத்தாளர்களும் வென்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பல சமயங்களில் இந்த இரு கதைகளும் எனக்கு ஒன்று போல் தோற்றமளித்தன. இந்த கதைகளை பற்றிய என்னுடைய பார்வையும், ஓப்பீடும் உங்களுக்கு மிகையாகத் தோன்றினாலும், இவற்றை வாசித்த போது நான் கண்டறிந்த உண்மைகள் தான் மேற் கூறியவை.

இந்த பதிவிற்கே சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி உங்களிடம்: நீங்கள் கடைசியாக எப்போது உங்கள் பெற்றோருக்கு, நண்பர்களுக்கு (அ) காதலி/காதலனுக்கு கடிதம் எழுதி அஞ்சல் (மின்னஞ்சல் அல்ல) செய்தீர்கள்?

13 comments:

ஜெய் said...

நல்ல பதிவு.. கதைகளின் லிங்க் எதுவும் உள்ளதா நண்பரே?

Unknown said...

Nalla arimugam.. Idhu varai nan kaditham eludhiyadhe illai..:-(

Prasanna Rajan said...

@ ஜெய்

இல்லை நண்பரே. ஆனால் ‘சேது’ கதையை இரா.முருகனின் சிறுகதை தொகுப்பில் படிக்கலாம். அது கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

‘முனி’ கதையை என்.ஸ்ரீராம் அவர்களின் ‘வெளி வாங்கும் காலம்’ சிறுகதை தொகுப்பில் படிக்கலாம்

Prasanna Rajan said...

@ பேனா மூடி

நன்றி நண்பரே...

butterfly Surya said...

அருமையான பகிர்விற்கு நன்றி.

Prasanna Rajan said...

@ சூர்யா

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி தல..

இரண்டு கதைகளையும் வாசித்திருக்கிறேன். முனி கதையை நானும் விகடனில் வாசித்தது நினைவிற்கு வருகிறது. எழுத்தாளரின் பெயரையும் கதைத்தொகுப்பையும் அறிமுகஞ் செய்தமைக்கு நன்றி..

இரா.முருகனின் இரண்டாம் ஆட்டம் சிறுகதைத் தொகுப்பும் எனக்கு பிடித்தமான ஒன்று. சிறுகதைத் தொகுப்பில், சைக்கிள் முனி மற்றும் இரண்டாம் ஆட்டம் கதை நினைவில் இருக்கிறது. சேது - மீண்டும் வாசிக்க வேண்டும்.


************

ஒரே ஒரு நண்பருக்கு மாத்திரம் இன்னமும் மின்மடல் மூலம் தொடர்பு விடுபடாது வைத்துள்ளேன். மற்றையோர்களுடன் தொலைபேசி உரையாடல் சாத்தியப்பட்டுவிட்டதால் கடிதப்போக்குவரத்துக்கான கண்ணி அறுந்துவிட்டது. இருப்பினும் அவ்வப்பொழுது ஒரு சில கடிதம் எழுதத்தோன்றி அவை கடித வடிவம் பெறாமை அல்லது நான் நினைக்கும் எண்ணம் கொள்ளாமையில் அழிக்கப்பட்டு விடுகிறது..

கடிதம் எழுதுவது நிச்சயம் தனிக்கலை. சுந்தர ராமசாமியின் சிறுகதையான “ரத்னாபாயின் ஆங்கிலம்” சிறுகதையில் எழுதப்படும் கடிதமும்.. சுஜாதாவின் மூன்று கடிதங்கள் கதையும் கடித வகை கதைகளுக்கு சட்டென நினைவுக்கு வருகின்றது.

கோபி கிருஷ்ணன் தனது மேலதிகாரி எழுதிய கடிதத்தில் கண்டுபிடிக்கும் தவறுகளும் நினைவில் நிற்கிறது.

கடிதம் பற்றிய கதைகள் வேறு ஏதும் யாரேனும் இருந்தால் பகிருங்களேன்.

deesuresh said...

நல்லொதொரு பதிவு பிரசன்னராஜன்..!!

முனி கதையை நானும் படித்திருக்கிறேன்..!!

Prasanna Rajan said...

@ சென்ஷி

எவ்ளோ பெரிய பின்னூட்டம் வாத்யாரே. உங்கள் பகிற்விற்கு மிக, மிக நன்றி

@ சுரேஷ்

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

உங்களைக் கவர்ந்த சிறுகதைகளைப் பகிர்ந்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி. நேற்று முத்துலிங்கம் அவர்களின் சுவருக்குள் மறையும் கட்டில் எனும் சிறுகதையை மீளப்படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதனை நான் ஏற்கனவே ஆவியில் படித்திருந்தேன். ஆனால் நேற்றைய வாசிப்பில் நான் கண்ட உணர்வுகள் வித்தியாசமாக இருந்தன.

கடிதம் எழுதி வருடங்கள் ஆகி விட்டது நண்பரே. இனி கடிதத்திற்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சிறப்பான பதிவு.

Prasanna Rajan said...

மிக்க நன்றி கனவுகளின் காதலரே...

Prasanna said...

பகிர்விற்கு நன்றி :)

Prasanna Rajan said...

@ பிரசன்னா

நன்றி...

Share