Thursday, May 6, 2010

’அழியாத கோலங்களும்’, அழியாத நினைவுகளும்...

நானும் அப்பாவும் இணைந்து கழித்த பொழுதுகள் ஏராளம். அம்மாவிடம் சொல்லாமல் நானும், அப்பாவும் பைக்கில் ஒரு குட்டி பிக்னிக் போய் விட்டு, பின்னர் இருவரும் அம்மாவிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் அனுபவம் அலாதியானது. எனக்கு ஒன்பது வருடம் கழித்து பிறந்த என் தம்பி, கொஞ்ச காலம் என் இடத்தை பிடித்து கொண்டான். பெரும்பாலும் நானும், அப்பாவும் இணைந்து ஆங்கில படங்களுக்கு செல்வோம். ஆனால், என்னவோ அப்பாவுடன் பார்த்ததில் மிகவும் பிடித்த படம் “மகாநதி”. அப்பா எந்தளவிற்கு என்னை கட்டற்று வளர்க்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஒரு உதாரணம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை சென்னை வந்திருந்தோம். அப்போது கலைவாணர் அரங்கில் “மோக முள்” திரைப்படம் பகல் காட்சியாக ஓடியது. அந்த படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். பிற்காலத்தில் கொஞ்சம் விபரம் அறிந்து அந்த படத்தை பார்த்த போது, அப்பா எப்படி என்னை இத்தனை மெச்சூர் கண்டெண்ட் நிறைந்த படத்திற்கு என்னை அழைத்து சென்றார் என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது.

கேபிள் கனெக்‌ஷன் இல்லாத வீடு எங்களுடையது. யாராவது எங்கள் வீட்டை அடையாளம் காட்ட வேண்டுமெனில், “அதோ தெரியுது பாருங்க ஆண்டனா வைச்ச வீடு. அது தான்” என்பார்கள்.  அப்போதெல்லாம் ஞாயிறு மதிய பொழுதுகளில் தூர்தர்ஷனில் மாநில மொழி திரைப்படம் திரையிடுவார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் (1999) போது ஒரு முறை, பாலு மகேந்திராவின் “அழியாத கோலங்கள்” படத்தை திரையிட்டார்கள். நானும் ஆர்வத்துடன், அப்பா அருகில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். எங்கிருந்தோ வந்த அம்மா, “இந்த படத்தையெல்லாம் எதுக்கு சின்ன பையனை பார்க்க விடுறீங்க” என்று டி.வியை அணைத்தார். எனக்கோ செம கடுப்பு, “ஏம்மா பார்க்கக் கூடாது" என்று  சற்றே கோபமாக கத்தி விட்டேன். அதற்கு அப்பா,”ஏன் பாத்தா என்ன. எப்படினாலும் அவன்  அடலஸண்ட் ஸ்டேஜில் தானே இருக்கான். இதுவும் அந்த ஸ்டேஜில் இருக்கிற பசங்களை பத்தின படம் தானே. பார்த்தா என்ன” என்றார். ”அதெல்லாம் பார்க்க கூடாது” என்று அம்மா அவள்  வேலையை பார்க்க சென்றுவிட்டாள். இதுக்கு மேல டி.வி போட்டா ஒரு வேளை என் முதுகில் புகை வரலாம் என்பதால் நானும் அடக்கி வாசித்தேன்.

பின்னர் கல்லூரி வந்த பின் ஒரு முறை குமுதம் ‘தீராநதி’யில் பாலுமகேந்திராவின் பேட்டியை படித்தேன். அதில் ‘அழியாத கோலங்கள்’ தன்னுடைய பதின்ம பருவத்தின் பிரதபலிப்பு என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த படத்தை பற்றி அவர் கூறியது எனக்கு அந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தை கூட்டியது.  ஆனால், கடந்த மாதம் வரை இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த மாதம் யூடியுபில் மேய்ந்து, ஆய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த படம். “கண்டேன்  பொக்கிஷத்தை” (சேரன் படம் இல்லீங்கோ) என்று குதித்தது மனம்.  ஒரே சிட்டிங்கில் முழு படத்தை பார்த்த போது எனது பதின் பருவ நினைவுகளில் மூழ்கி போனேன்.

”அமெரிக்கன் பைய்” படத்தை தழுவி வெந்தும் வேகாமல், “பாய்ஸ்” என்றும், “துள்ளுவதோ இளமை” என்று ரெண்டு படம் எடுத்தார்கள். அந்த படங்களை எல்லாம் ஏன் பார்த்தேன் என்று நினைக்க வைத்து விட்டது இந்த படம். விடலை பருவத்தில் செய்யப்படும் சேட்டைகளும், அந்த பருவத்திற்கு உரிய ஆசைகளும் நாசூக்காக எடுத்து சொல்லப்பட்ட திரைப்படம் இதுவாகத் தான் இருக்கும். மூன்று விடலைப் பருவ நண்பர்கள், அவர்களின் ஆசிரியை, நடுத்தர வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் போஸ்ட் மாஸ்டர், ஊர் பொதுவில் நடனமாடும் கனிகை, போன்ற சுவாரசியமான பாத்திர படைப்புகள்.

ரயில்வே க்ராஸிங்க் கேட்டில் உட்கார்ந்து ரயிலுக்கு டாட்டா சொல்வது, அத்தை மகளிடம் தயங்கி தயங்கி ராத்திரி நேரத்தில் பேசுவது, நடன கனிகையிடம் உடலுறவு கொள்ள ஆணுறையை எடுத்து கொண்டு அவளிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் முழிப்பது, அவளிடம் தண்ணி வாங்கி குடித்து விட்டு ஆணுறையை பலூன் போல் ஊதி எதையோ சாதித்து விட்டது போல் ஆடி வருவது, போஸ்ட் மாஸ்டரும் நடன கனிகையும் உடலுறவு கொள்வதை மறைந்திருந்து பார்ப்பது, தனது வகுப்பாசிரியையை டாவடிப்பது, அவள் காலால் இட்ட பணியை தலையால் செய்வது போன்ற விடலை பருவத்திற்குரிய சேட்டைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகளை தமிழில் எந்தவொரு திரைப்படமும் ஆவணபடுத்தியதாக எனக்கு நினைவில்லை.

சலீல் செளத்ரி
இசை - சலீல் செளத்ரி. இந்தி திரைப்பட உலகின் இசை மேதையாக கருதப்படும் திரு.செளத்ரியை எப்படி இந்த படத்திற்கு இசையமைக்க பாலு மகேந்திரா சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. அவர்களின் நண்பன் இருந்த பொழுதில் பிண்ணனி இசையற்ற அந்த நிசப்தம், சலீல் செளத்ரியின் இசை திறமையை தான் வெளிபடுத்துகிறது. இன்றைய இசையமைப்பாளர்கள் இதை பார்த்து தெரிந்து கொண்டால் பரவாயில்லை. தேவையற்ற நேரங்களில் எலக்ட்ரிக் கிடார் அலறுகிறது (”ஆயிரத்தில் ஒருவன்” - ஜி.வி.ப்ரகாஷ், தி கிங் அரைவ்ஸ், “விண்ணைத் தாண்டி வருவாயா” - ஏ.ஆர்.ரஹ்மான், அநேக தருணங்கள்)

அப்பாவிடம் இந்த படம் பார்த்ததை பற்றி தொலைபேசியில் பேச்சு வாக்கில் சொல்ல, மெதுவாக சிரித்தார். ஒரு அப்பாவின் ஆதங்கத்தோடு “படத்தை பாரு, அதே சமயம் படிச்சு வேலை வாங்குற வழியையும் பாரு” என்றார்.

27 comments:

vijayan said...

தந்தையே நண்பனாக வாய்ப்பது மிகவும் அதிர்ஷ்டம்.

Prasanna Rajan said...

நன்றி விஜயன்...

Gurusamy Thangavel said...

அருமையான படம். போனவாரம்தான் நான் இப்படத்தைப் யு டூப்ல் பார்த்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Prasanna Rajan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கவேல்...

Baski.. said...

nice post

Vetirmagal said...

What a wise and responsible father!
What makes me bond with him I wonder - he is from my generation or I am impressed that a generation ago there were people like me who brought up their children boldly?

Good post, and a gentle style.

பப்பு said...

nice post

Prakash said...

எழுதினதுலயே செம ஃபாஸ்டா போரே அடிக்காம படிக்க முடிந்த பதிவு. டாப் டக்கர். இப்படியே எழுதுங்க பாஸ்.

Adroits said...
This comment has been removed by the author.
Adroits said...

Good one bro...

Prasanna Rajan said...

@ Baski

நன்றி

@ Vetrimagal

தங்களின் பாராட்டுக்கு நன்றி...

@ Pappudreams

நன்றி...

Prasanna Rajan said...

@ ப்ரகாஷ்

அப்ப இதுக்கு முன்னாடி எழுதனதெல்லாம் மொக்கையா? என்ன மச்சி இப்பிடி பொசுக்குன்னு சொல்லி போட்ட...

Prasanna Rajan said...

@ Adroits

Thanks for your comment Machi...

பாலா said...

ரொம்ப சின்ன பையனா நீங்க?? :))

ஏன்னா.. ஒரு பத்து வருசம் முன்னாடி இதை ஒரு 10 வாட்டியாவது நம்ம டிடி-யில் போட்டிருப்பாங்க. அப்புறம் ராஜ்/விஜய் டிவில வந்துகிட்டு இருந்துச்சின்னு நினைக்கிறேன்.

Prasanna Rajan said...

ஹி ஹி... பாலா நாங்க எல்லாம் இன்னும் டீன் ஏஜையே தாண்டல. ராஜ், விஜய்ல போட்டப்ப எல்லாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கலைங்க தல...

Raju said...

இன்னா படம்ண்ணே அது!

அப்பறம், அமெரிக்கம் பை எல்லா பார்ட்ஸும் ஹிஹிஹி..!
:-)

Prasanna Rajan said...

@ ராஜீ

அப்பு நீங்க இந்த படம் பார்க்கலையா. நான் தான் சின்ன பையன், இப்ப தான் பாக்கேன். நீங்க எவ்ளோ மூத்தவரு, ‘அழியாத கோலங்கள்’ இன்னும் பாக்கலையா.

ஜீவா ஓவியக்கூடம் said...

அருமையான பதிவு!!!
'Summer of 42'என்ற படத்தின் தழுவல்தான் 'அழியாத கோலங்கள்'..!

சலீல் சவுத்ரி இந்தி இசைமைப்பாளராக இருந்தாலும் கேரளா படஉலகில் பிரபலமாக இருந்தார்.. பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்த 'நெல்லு ' போன்ற படங்களுக்கு இவர்தான் இசை அமைப்பாளர். அந்த பழக்கத்தின் பேரில் இதற்கும் அவர் இசை அமைத்திருக்கலாம்!

Prasanna Rajan said...

@ ஜீவா சார்

தகவலுக்கு மிகவும் நன்றி சார். இதுக்குத் தான், இதுக்குத் தான் உங்களை கருத்து சொல்ல கூப்பிட்டேன்...

Raju said...

மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்.

பாஸ், ஒரு ஃபீல்ல சொல்வாங்களே..!
”இன்னா படம்ண்ணே அது!”ன்னு அப்பிடி சொன்னேன் நான்.
:-)

அப்பறம், நான் உங்களவிட ரொம்ப சின்னப்பையனாக்கும்.

Prasanna Rajan said...

@ ராஜீ

யாரு நீங்க சின்ன பயலா? உண்மைத்தமிழன் மாதிரி யூத்னு சொல்லிட்டு திரியிற ஆளு தானே நீங்க...

Prasanna Rajan said...

நன்றி ராஜநடராஜன்

CS. Mohan Kumar said...

Very fine film. Good post.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

உங்கள் பதிவு மீண்டும் படத்தைப் பார்க்க தூண்டுகிறது. அருமையான பதிவு நண்பரே.

Prasanna Rajan said...

நன்றி மோகன்குமார் மற்றும் கனவுகளின் காதலரே...

selva kumar said...

very well explained and presented here..

Prasanna Rajan said...

Thank you Selvakumar...

Share