Saturday, April 3, 2010

அடையாளம் அற்ற நிலை


நம்மில் பல பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. நம்முடைய சொந்த அடையாளங்கள் வாழ்வில் பல சமயங்களில் திரித்து புரிந்து கொள்ளப் படுகிறது. அதிலும் என்னுடைய அடையாளம் அநியாயத்திற்கு நார் நாராக பல சமயங்களில் கிழி பட்டிருக்கிறது.

 சமீபத்தில் இந்தியா சென்ற போது, பொழுது போகாத (எல்லா நாளும் பொழுது போகலை. வெட்டி பில்டப்பு) ஒரு சண்டேயில் அம்மா சந்தைக்கு போய் வர சொன்னார்கள். வீட்டில் என்னைப் போலவே வெட்டியாக இருக்கும் என் தம்பியையும் அழைத்துக் கொண்டு போனேன். தேனி வாரசந்தையைப் பற்றி இந்த இடத்தில சொல்லியாக வேண்டும். பொள்ளாச்சிக்கு அடுத்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய வாரச் சந்தை இது தான். நானும் தம்பியும் காய்கறிகள் எல்லாம் வாங்கி முடித்து கடைசியாக பழம் வாங்கலாம் என்று நடந்து வந்து கொண்டிருந்தோம். "சார். ஒரு கிலோ சப்போட்டா 15 ரூவா சார்" என்று குரல் கேட்டது. நானும் தம்பியும் கண்டுகொள்ளாமல் நடந்து கொண்டிருந்தோம். "சாப். ஏக் கிலோ சப்போட்டா பந்த்ராஹ் ருப்யா" என்று அதே குரல் ஹிந்தியில் கேட்டது. திரும்பி பார்த்தவுடன் அந்த கடைக்காரன் "ஆவோஜி, இதர் ஆவோ, ஏக் கிலோ சிர்ப் பந்த்ராஹ் ரூபாய் மே" (இங்க வாங்க. ஒரு கிலோ சப்போட்டா வெறும் 15 ரூவா தான்) என்றான். எனக்கு என்றால் செம கடுப்பாகி விட்டது. பத்தாதிற்கு என் தம்பி வேறு சிரிக்க ஆரம்பித்து விட்டான். நான் அவனிடம் போய் "யோவ், எதுக்குயா என்ன பார்த்து ஹிந்தியில சொன்ன. நான் இந்த ஊர்க்காரன் தான்" என்றேன். "ஆளைப் பார்த்தா நம்ம ஊருக்கு புதுசா நகைக்கடை போட வந்த சேட்டுங்க மாதிரி இருந்தீங்களா. அது தான் சார் ஹிந்தியில பேசுனேன்" என்றான். சரியென்று வேறு வழியில்லாது அவனிடம் சப்போட்டா வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். வீடு வரும் வரை என் தம்பி முகத்தில் ஒரு நக்கலான புன்முறுவல் தவழ்ந்து கொண்டே இருந்தது. வீடு வந்ததும் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்லி வெடிச் சிரிப்பு சிரித்தான். எனக்கு அவனை முறைத்து கொண்டே சிரிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 


இப்படித் தான் சொந்த ஊரிலேயே அந்த ஊர்காரனாக  ஏற்று கொள்ளாத கொடுமை நடந்தது. இது மட்டுமல்ல பல அடையாள மறுப்பு சம்பவங்கள் எனக்கு நடந்து உள்ளன. பிளஸ் 2  முடிக்கும் வரை தேனியிலேயே குப்பை கொட்டி விட்டதால் ஒன்றும் அத்தனை பெரிய சம்பவங்கள் நடந்து விடவில்லை. ஆளாளுக்கு 'செவத்த பையன்' என்று அழைத்ததைத் தவிர வேறு ஒன்றும் வித்தியாசங்கள் நடைபெறவில்லை. கல்லூரி சேர்ந்த முதல் வாரத்திலேயே இந்த அடையாள பிரச்சனை ஆரம்பித்து விட்டது. வழக்கமான ரேகிங் விசாரிப்புகளுடன் தொடங்கிய முதல் வாரத்தில் என் சீனியர் ஒருவர் "டேய் இவனைப் பார்க்க ஜப்பான்காரன் மாதிரி இல்லை" என்று சக சீனியரிடம் கூற, 'ஜப்பான்' என்ற பெயர் நிலைத்தது. ஒரு வாரத்திலேயே அந்த பெயர் எல்லா முதல் ஆண்டு மாணவ, மாணவிகளிடம் பரவி விட்டது. ஆங்கில வகுப்புக்கு வந்த பேராசிரியர், அறிமுக வகுப்பின் போது எல்லா மாணவர்களிடம் அறிமுகப் படுத்த சொல்லி கேட்டு கொண்டு இருக்கும் போது என் முறை வர, நான் எழுந்திருக்கும் முன்னமே 'ஜப்பான்' என்ற கோஷம் வகுப்பறை முழுவதும் நிறைந்து இருந்தது. சிரித்துக் கொண்டே என் ஆங்கில பேராசிரியர் " அட ஏம்பா, அவனை 'ஜப்பான்'னு சொல்றீங்க. பையனை பார்த்த மேகலாயா, அஸ்ஸாம்ல இருந்து வந்தவன் மாதிரி இருக்கான்" என்று சொல்ல வகுப்பறை முழுவதும் திரும்ப சிரிப்பில் அதிர்ந்தது.

இது அதோடு முடியவில்லை. பல சீனியர்களும் என் நண்பர்களும் நான் வட இந்தியன் என்றே நினைத்தனர். என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் அசைவம் வெட்டிக் கொண்டு இருக்க, சிறு வயதில் இருந்தே சைவ பட்சினி ஆகி விட்டதால் 'ஐயரே' என்றும் ஸ்நானப் ப்ராப்தி பெற்றேன். நான்காம் ஆண்டு வரை என் பெயரை சொன்னால் பல பேருக்குத் தெரியாது. 'ஜப்பான்' என்றால் தான் என் சக ஆண்டு மாணவர்களுக்கு தெரியும். கல்லூரி முடிந்ததும் 'அப்பாடி, இந்த பிரச்சனை இனிமேல் கிடையாது' என்று நினைத்து கொண்டேன். சென்னையில் அடுத்த ஒரு வருடம் நல்லாத் தான் போச்சு. எம்.எஸ் செய்ய ஆசைப்பட்டு அதற்காக மெனக்கெட்டு பல பிரம்ம பிரயத்தனங்கள் செய்து ஒரு வழியாக விசா இன்டர்வியு வரை வந்து க்யூவில் நின்று கொண்டு இருந்தேன். (கீழே கூறப்படும் சம்பவத்திற்கும் ஆய்த எழுத்து திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்ள கடமைபட்டுள்ளேன்) எனக்கு பின்னல் நின்று இருந்த ஒரு பிகர் "Are you from Andhra?" என்று கேட்க, நான் அசடு வழிந்து கொண்டே "No I am from Tamilnadu" என்று கூறினேன். அதுக்குப்புறம் அவ என்கூட பேசவே இல்லை :( . அந்த பிகருக்கு பதில் சொல்லி விட்ட திரும்பியவுடன் "நீம் எவூருப்பா" என்று சுந்தர தெலுகில் முன்னாடி நின்றிருந்த நடுத்தர வயது அம்மாள் கேட்க, எனக்கு தெலுகு தெரியாது என்று புரிய வைப்பதிற்குள் போதும், போதும் என்று ஆகிவிட்டது.

ஒரு வழியாக ஸ்டுடென்ட் விசா கிடைத்த பிற்பாடு யு. எஸ்சில் நெவார்க் விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கு என்னுடைய ஆவணங்களை பரிசோதித்த குடிமை பணியேற்ற அதிகாரி, " Dude!! you look like you are from Middle East" என்று கூற, நானோ 'ஙே' என்று முழிக்க, சிரித்துக் கொண்டே " I was just kidding man" என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஆரம்பமே அசத்தலாக இருக்கிறதே என்று நான் நினைத்துக் கொண்டே இருக்கையில், பிற்பாடு எனக்கு ஒரு மிகப் பெறும் அடையாள பிரச்சனை இருப்பது அப்போது எனக்கு தெரியவில்லை. யு. எஸ் வந்ததும் பகுதி நேர வேலையாக என்னுடைய பல்கலைகழக புத்தகக் கடையில் வேலை கிடைக்க, வண்டி எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. பொதுவாக சனிக் கிழமைகளில் எனது புத்தகக் கடையில் கூட்டம் இருக்காது. நான் வெட்டியாக புத்தகக் கடையில் உலாத்திக் கொண்டு இருந்த போது ஒரு குடும்பம் சும்மா புத்தகக் கடையை சுத்திப் பார்க்க வந்தது. அதில் இருந்த ஒரு தாத்தா என்னிடம் உரிமையோடு வந்து ஏதோ ஒரு புரியாத பாஷையில் கேட்க, நானோ "Say What" என்று புரியாமல் திரும்ப திரும்ப கேட்க அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனார். என்னுடன் ஷிப்டில் இருந்த பெண் நல்ல வேலையாக அவரிடம் அதே பாஷையில் பேசி சமாளித்தாள். அதற்கு பின் தான் அவர்கள் பேசியது ஸ்பானிஷ் என்று தெரிந்தது. அவரிடம் பேசி முடித்து வந்த அந்த தோழி "உன்னைப் பார்க்க மெக்சிகன் பையன் போல் இருக்கிறதால் தான் உன்னிடம் ஸ்பானிஷ் பேசினாராம்" என்று சொன்னாள். ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...


இதெல்லாம பரவாயில்லைங்க... என்னைப் பார்த்து, அதுவும் என் ஊரில “ஏக் கிலோ சப்போட்டா, சிர்ப் பந்த்ரஹ் ருப்யா”னு சொன்னவனை என்ன பண்ணலாம் சொல்லுங்க...

14 comments:

geethappriyan said...

நண்பரே,
மிகவும் அருமையான ஹாஸ்யமாயிருந்தது,
உங்க போட்டோவையும் போட்டிருக்கலாமே?நாங்க எந்த ஊர் காரர் மாதிரி இருக்கீங்கன்னு சொல்லியிருப்போமே!!!
இதே போல தான் என்னை கன்னடிகா என நினைக்கின்றனர்.சிலர் சேட்டு என்கின்றனர்.ஒருவர் ஒருபடி மேலே போய்,you are looking like a jew,என்கின்றனர்.யோவ் நான தமிழன்யா,எனக்கு கன்னடம்,ஹிந்தி,ஹீப்ரூ என எதுவும் விளங்காது,தெரியாது என சொல்லி மாளவில்லை.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

நல்ல பகிர்வு, நண்பர் கார்திகேயன் கூறியிருப்பதைப் போல் ஒரு போட்டோவைப் போட்டிருந்தால் நானும் உங்களைக் கலாய்த்திருக்கலாம் :)

Prasanna Rajan said...

கார்த்திகேயன், என்னுடைய போட்டோ தமிழ்மண நட்சத்திர அறிமுகத்திற்காக கொடுத்து இருக்கிறேன். அதில் பாருங்கள்.

ஆஹா, கனவுகளின் காதலரே!! நீங்களுமா??

Robin said...

Interesting!

Prasanna Rajan said...

Thanks Robin...

Anbu said...

அப்பா நம்மள மாதிரி ஒருத்தரா!
என்னோட அடையாளங்களா சிலர் சொன்னது, தெலுங்கா?, சேட்டா, முஸ்லிமா!ஐயரா!

என்ன கொடுமை சரவணன்(கார்த்திகேயன் எல்லாம் ஒண்ணுதான்) இது!

இப்ப சகஜமா போச்சு. அன்னியன் இல்ல வன்னியன்னு பட்டுன்னு சொல்லிடறது!

நம்பமாட்றாங்க!

தருமி said...

ஜப்பான் .. சாரி.. சாரி... இராசன்,
போட்ருக்க படம் பத்தாது. நல்ல சைஸா இன்னொரு படம் போடுங்க .. இல்ல .. வேறு பேரு வச்சிருவோம்.

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திர வாழ்த்துகள்.இனியதொரு வாரத்துக்கள் நல் வாழ்த்துகள்.

Prasanna Rajan said...

@ அன்பு

உண்மை தான். எல்லோருக்கும் நடக்கக் கூடியது தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ தருமி

இப்படி கூட ப்ளாக்மெயில் பண்ணுவீங்களா நீங்க. ரைட்டு...

@ வல்லிசிம்ஹன்

நன்றி...

இளங்கோ said...

கருப்பா இருந்தாதான் பிரச்சனைன்னு பார்த்தால், சிவப்பிலுமா :)

Anonymous said...

வருங்கால எழுத்தாளருக்கு என் நல்வாழ்த்துகள்.

பித்தனின் வாக்கு said...

எல்லா இடத்திலையும் இந்த பிரச்சனை, என்னையும் ஆந்திராக்காரன் லிஸ்டுலதான் சேர்க்கின்றார்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

//அதிலும் என்னுடைய அடையாளம் அநியாயத்திற்கு நார் நாராக பல சமயங்களில் கிழி பட்டிருக்கிறது//
டார் டாரா கிழிஞ்ச கதை எனக்கும் உண்டு....:]]

MANO நாஞ்சில் மனோ said...

//கருப்பா இருந்தாதான் பிரச்சனைன்னு பார்த்தால், சிவப்பிலுமா :)//
இவரு சிவப்பு'ன்னு யார் சொன்னு..?
கருப்பா பயங்கரமா..
பயங்கரமா கருப்பா இருப்பார்.....:]]

Share