Saturday, April 3, 2010

தியடோர் பாஸ்கரன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை

ஓவியம் - ஓவியர் வே.ஜீவானந்தம் அவர்கள்
சினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்று நான் நினைத்ததை எல்லாம் தவிடு பொடியாக்கின இவரது நூல்கள். மாறாக சினிமா ஒரு அறிவியல் என்றும் அதை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின அவரது கட்டுரைகள். தியடோர் பாஸ்கரன் - சமகால இலக்கியத்தை வாசிபவர்களுக்கு, உயிர்மை மாத பத்திரிக்கையை படிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு பெயர். முதன் முதலில் திருச்சி கார்முகில் வாடகை புத்தக நிலையத்தில் உறுப்பினராக சேர்ந்த போது ஒரே ஒரு புத்தகத்தை எடுத்து படித்தேன். அது தியடோர் பாஸ்கரன் அவர்களின் "சித்திரம் பேசுதடி". திரைப்பட வரலாறுகளைப் பற்றி படிப்பது அத்தனை சுவையாக இருக்கும் என்பது அந்த புத்தகத்தில் இருந்த கட்டுரைகளைப் படித்த பின் தான் எனக்கு தெரிந்தது. தொடர்ந்தர்ப் போல் அவரின் "எம் தமிழர் செய்த படம்" நூலைப் படித்து முடித்தேன்.


நாடகம் எவ்வாறு சினிமாவாக பரிணமித்தது என்பதை அவரின் மேற்கூறிய புத்தகங்களின் மூலம் தான் நான் அறிந்து கொண்டேன். வெறும் மக்னீசிய விளக்கொளியில் கட்டப்பட்ட சினிமாவில் இருந்து தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் உருவான எலெக்ட்ரிக் தியேட்டர் போன்ற அரிய தகவல்கள் அவரின் புத்தகத்தில் நிறைந்து இருந்தன. நடராஜ முதலியார் எப்படி தமிழின் முதன் முதல் திரைப்படம் ஆன "கீசகவதம்" உட்பட ஏழு திரைப்படங்களை எப்படி தயாரித்தார் என்ற முக்கியமான வரலாற்று பதிவை அந்த கட்டுரைகளின் மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன். வெறும் வெகுஜன ஊடகம் தானே சினிமா, அதை ஆய்வு செய்து என்ன ஆகப் போகிறது என்ற மனப்பான்மை நம்மிடம் உண்டு. ஆனால் சினிமா வரலாறு என்பது அந்த திரைப்படங்கள் வெளியான சூழல், அப்போதிருந்த மக்களின் ரசனை, அப்படைப்புகளின் அழகியல், அந்த காலத்திய திரைப்பட அரசியல் மட்டுமல்லாமல் சமகால வரலாற்றையும் எடுத்து உரைக்கும் என்ற உண்மை அவரின் கட்டுரைகளின் மூலமாகத் தான் எனக்கு புரிந்தது.



"உயிர்மை" மாத இதழைப் படிக்க ஆரம்பித்த பொழுதில் அவரின் கானுயிர், சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளைப் படித்த பொழுதில் தான் தெரிந்தது இவரின் பன்முக ஆளுமை. 1981 இல் வெளியான "The Message Bearers: The nationalist politics and the entertainment media in South India" தான் அவரின் முதல் புத்தகம். தற்போது பெங்களுரூவில் வசிக்கும் பாஸ்கரன் அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகங்களின் பட்டியல்,
  1. The Eye of the Serpent: An introduction to Tamil cinema, Chennai: East West Books (1996), 
  2. The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist, Oxford University Press (1999), 
  3. History through the Lens - Perspectives on South Indian Cinema, Chennai: Orient Longman (2009), 
  4. Sivaji Ganesan: Profile of an Icon, Wisdom Tree (2009) . 
அவர் எழுதிய தமிழ் புத்தகங்கள், 
  1. மழைக்காலமும், குயிலோசையும், காலச்சுவடு (2003)
  2. எம் தமிழர் செய்த படம், உயிர்மை (2004)
  3. தமிழ் சினிமாவின் முகங்கள், கண்மனி வெளியீடு (2004)
  4. சித்திரம் பேசுதடி, உயிர்மை (2004)
  5. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)
  6. தாமரை பூத்த தடாகம், உயிர்மை (2005)
  7. கானுறை வேங்கை, (மொழிபெயர்ப்பு: The way of the Tiger by K. Ullas Karanth), காலச்சுவடு (2006) 
(பட்டியல் விபரம்: நன்றி - விக்கிபீடியா


 அஞ்சல் துறையில் பணியாற்றிய திரு.பாஸ்கரன் அவர்கள், தனது அலுவல்களுக்கும் இடையில் தனது திரைப்படம், காணுயிர் குறித்த ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தமிழக அஞ்சல் துறையின் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக இருந்து ஒய்வு பெற்றார். அவரைப் பற்றிய மேலதிக தகவல்களை அவரின் விக்கிபீடியா பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். தியடோர் பாஸ்கரன் அவர்கள் காலச்சுவடுக்கு அளித்த செவ்வி. ’தில்லுமுல்லு’ திரைப்படத்தில் ரஜினி, “மீசை எவ்வளவு பெரிசா இருக்கோ, அந்த அளவு மனசும் சுத்தமா இருக்கும்” என்று சொல்வார். அது என்னவோ இவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், இவரின் மீசையைப் பற்றி எழுதிய கட்டுரை இங்கே.
 
 அவரின் பன்முக ஆளுமைக்கு சான்றாக, சமீபத்தில் “அவள் பெயர் தமிழரசி” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.1940ல் பிறந்த தியடோர் பாஸ்கரன் சமீபத்தில் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பதிவு ஒரு வகையில் அவருக்கு என் சார்பான பிறந்தநாள் வாழ்த்து. அவரின் படைப்புகளை வாசித்த பின் தான் திரைப்பட ஆராய்ச்சி என்ற ஒரு  புதிய பாதை எனக்கு தென்பட்டது. என்ன தான் உயிரி மருத்துவ பொறியியல் படித்தாலும், பாதி நேரம் இலக்கியம், சினிமா என்று தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சினிமாவைப் பற்றி நண்பர்களிடம் விவாதிக்கும் போது, என் கருத்துக்களை உரக்கவும், ஆணித்தரமாகவும் கூறும் போது, “நீ ஏன் சினிமா பற்றி படிக்கக் கூடாது” என்றார்கள். உண்மை தான். ஆனால் என் குடும்ப சூழல் மற்றும் இன்ன பிற சிக்கல்களை தீர்த்த பிற்பாடு, நிச்சயம் Film Studies பிரிவில் முனைவர்  பட்ட ஆராய்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன். முயற்சி திருவினையாக்கும் என்றே நம்புகிறேன். என்னுள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தியடோர் பாஸ்கரன், என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை ஆனதில் எந்தவோரு ஆச்சரியமுமில்லை....

11 comments:

Vipasana said...

தியோடர் அவர்களின் சூழலியல் குறித்த எழுத்துக்கள் பரவலாக கவனம் பெறுவது அவசர தேவையாகும் ...

திரை பணிகளில் தனது நேரத்தை வீணடிக்காமல் சூழலியத்தில் தன்னை முழுவதுமாக தியோடர் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா; நீங்களும் தான் நண்பரே ...

நன்றி

Vipasana said...

பிரசன்னா..

உங்கள் தமிழ் மண பட்டையில் ஓட்டு பதிய இயலவில்லை ... என்ன விடயம் என்று கொஞ்சம் கவனியுங்கள் ...

Prasanna Rajan said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து ப்ரகாஷ். திரைப்படங்களைப் பற்றி படிப்பது என்பதை எனது பகுதி நேரமாக மட்டுமே வைத்துள்ளேன் நண்பரே. எனக்கான கடமைகளை முடிக்கும் வரை எனது உடோப்பியன் கனவை தள்ளி வைத்துள்ளேன்.

ஓட்டுபட்டையை என்ன செய்வது என்று எனக்கும் புரியவில்லை. யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்...

ஜீவா ஓவியக்கூடம் said...

தியோடர் அவர்களின் ஏகலைவன் நான். அம்பு விட கற்றுக்கொண்டிருக்கிறேன். அருமையான பதிவு!!

Prasanna Rajan said...

நீங்களே ஒரு துரோணர் தான் ஜீவா சார். உங்களுக்கு இருந்தாலும் இத்தனை தன்னடக்கமா?

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சிறப்பான பதிவு.

Prasanna Rajan said...

நன்றி கனவுகளின் காதலரே...

selventhiran said...

நல்ல பதிவு!

தமிழில் சூழலியல் சார்ந்த கட்டுரைகள் பிரச்சார நெடியோடு ‘ஏ பாவிகளே...’ என்ற த்வனியில் வந்துகொண்டிருந்தபோது தன் சுவாரஸ்ய மற்றும் உழைப்பு மிளிரும் எழுத்து நடையால் பலருக்கும் சூழல் குறித்த பிரக்ஞையை உருவாக்கியவர் தியோடர். அவரது சினிமா குறித்த கட்டுரைகளை அதிகம் படித்ததில்லை. காணுயிர்களைப் பற்றி தமிழில் எழுதுபவர்களில் தியோடர் முக்கியமானவர். முதன்மையானவர்!

Prasanna Rajan said...

உண்மை தான் செல்வேந்திரன். மற்ற சூழலியல் எழுத்தாளர்களுக்கு கிறிஸ்தவ போதகர்கள் எவ்வளவோ தேவலாம். வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றி...

manjoorraja said...

தியோடர் அய்யாவைப் பற்றிய அருமையான பதிவிற்கு நன்றி நண்பரே. அவரைப் போலவே நீங்களும் சூழலியல் பற்றி ஆராய்ந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன். சினிமாவை பற்றி எழுத நிறைய ஆட்கள் இருக்கின்றனர்.

Prasanna Rajan said...

நன்றி மஞ்சூர் ராசா. கண்டிப்பாக எழுதுகிறேன்...

Share