Saturday, April 11, 2009

இரா. முருகனும் 'உன்னைப்போல் ஒருவனும்'

ஹிந்தியில் வெளியாகி பரபரப்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்ற 'எ வெநஸ்டே' திரைப்படத்தை தமிழில் கமல் மறு ஆக்கம் செய்வதாக கேள்விப்பட்டபோது மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால், இது போன்ற ஒரு திரைப்படத்திற்கு ஒரு நல்ல திரை எழுத்தாளர் தேவை. இல்லையென்றால் சொதப்பல் தான் என்று எண்ணி கொண்டு இருந்த போது தான், இரா. முருகன் இந்த படத்திற்கு எழுத்தாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது.

சுஜாதாவுக்கு அடுத்து தமிழில் சயின்ஸ் பிக்சன் எழுத யாரும் இல்லையா என்று கேட்டால் தயங்காமல் இரா.முருகனை சுட்டிக் காட்டுவேன். அவரின் 'சில்லு' கதையை படித்த பின் யாருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு உதறல் எடுக்காமல் இருக்காது. 1996 இந்தியா டுடே 'இலக்கிய மலரில்' வெளியான அவரின் 'சிலிகான்' (சிறுகதையின் தலைப்பு சரியா என்று தெரியவில்லை) என்னுடைய கணிப்பொறி வல்லுநர் ஆக வேண்டும் என்று ஆசையை மறு யோசனை செய்ய வைத்தது. இன்றைய மென்பொருள் நண்பர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலைப் பற்றி அன்றே இந்த சிறுகதையில் எழுதி விட்டார் இரா.முருகன் .

எனக்கு மிகவும் பிடித்த கதை அவரின், 'இரண்டாம் ஆட்டம்' சிறுகதை தொகுப்பில் வெளி வந்த 'சேது'. இராமேஸ்வரத்தில் வாளிகளை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு தீர்த்தங்களாக சுற்றி காட்டுவதற்கு நிறைய கைடுகள் இருப்பார்கள். அப்படி ஒரு கைடிடம் வரும் பெரியவர் ஒருவர், தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக அனைத்து தீர்த்தங்களுக்கும் அழைத்து செல்ல சொல்லுவர். அப்படி சுற்றி காடும் கைடிடம் தன் வாழ்க்கையில் செய்த ஒரு மிகப் பெரும் பாவத்தைப் பற்றி விவரமாக சொல்லுவர் அந்த பெரியவர். முடிவில் தான் செய்த அந்த பாவத்திற்கு பரிகாரம் தற்கொலை தான் என்று கடலில் குதித்து விடுவார். அதை அந்த கைடும் தடுக்க மாட்டார். கதையின் முடிவில் வரும் இறுதி வரி அந்த கைடு, ஏன் அந்த தற்கொலையைத் தடுக்க வில்லை என்ற புதிர் முடிச்சை அவிழ்க்கும். ஆனால் அந்த முடிச்சு எனக்கு பொட்டில் அடித்து போல ஒரு அதிர்ச்சியை உருவாக்கியது. புத்தகத்தை மூடி வைத்து ஒரு அரை மணி நேரம் எதுவும் பேசாது சலனமற்று உக்கார்ந்து இருந்தேன்.

இன்னொரு மிகவும் பிடித்த கதை 1997 தினமணி பொங்கல் மலரில் வெளி வந்த 'பூச்சி'. நம் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம். பல சமயங்களில் அந்த அடையாளங்கள் அவர்களுக்கு பட்ட பெயராக வாய்க்கும். சிலருக்கு நல்லதாக வாய்க்கும், பலருக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும் விதம் வாய்க்கும். அப்படி ஒருவன் தான் 'பூச்சி'. 'ஆழ்வார்', 'சைக்கிள் முனி' போன்றவை அவரின் ஆகச் சிறந்த சிறுகதைகள்.


'அரசூர் வம்சமும்' ,'நெ.40 இரட்டை தெருவும்' படிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுஜாதாவை என் அப்பா கேட்க நினைத்த கேள்வி தான், இரா. முருகனுக்கும், "எப்பிடி சார், உங்க வேலைப் பளுவுக்கும் நடுவுலயும் எழுதுறீங்க?".

இவரைப் பத்தி மேல தெரிஞ்சுக்கனும்னா இங்க போங்க:
http://www.eramurukan.in/tamil/home

10 comments:

கே.என்.சிவராமன் said...

நண்பா,

'என்னைப் போல் ஒருவன்' அல்ல. 'உன்னைப் போல் ஒருவன்'. தவிர இரா. முருகன் நீண்ட நாட்களாகவே கமல் படங்களின் டிஸ்கஷனில் பங்கு பெற்று வருகிறார். ம.வே. சிவகுமார் 'தேவர் மகன்' படத்துக்கு பெயர் தெரியாமல் உழைத்தது போல், பல கமல் படங்களுக்கு பின்னால் இரா.மு. இருந்திருக்கிறார். ஆனால், இப்போதுதான் கமல் அவரை வெளிச்சத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Prasanna Rajan said...

நன்றி நண்பரே. தலைப்பை மாற்றி விட்டேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பகிர்வு நண்பா.. சமீப காலமாகத்தான் நான் இரா. முருகனின் பேரைக் கேள்விபடுகிறேன்.. அவருடைய புத்தகங்களை வாசிக்க வண்டும் என்று தோன்றுகிறது.. அவருடைய புத்தகங்கள் பற்றி முடிந்தால் ஒரு பதிவு போடுங்களேன்..

Giri said...

குறிப்பாக அவரின் 'சைக்கிள் முனி' படிக்கவேண்டிய கட்டுரைத் தொடுப்பு.'ராயர் காபி கிளப்'அவரின் ஆக்கம் தான்.

அரசூர் வம்சத்தை பற்றி என் பதிவுகளில் பார்க்கலாம்.

Giri said...

மன்னிக்கவும்.அரசூர் வம்சத்தை பற்றி என் பதிவுகளில் பார்க்கலாம்.

http://beyondwords.typepad.com

ரா.கிரிதரன்.

Unknown said...

இரா.முருகனின் அனைத்து சிறுகதைகளையும் ஒரு தொகுப்பாக கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அரசூர் வம்சம் படிங்க, அசத்தலா இருக்கும். மூன்று விரல் நாவல் படிச்சிருக்கிங்களா? கணினிப் பொறியாளனின் வாழ்க்கையை கலக்கலா எழுதி இருப்பார்.

Prasanna Rajan said...

@ Giri
என்னது 'சைக்கிள் முனி' அவரோட கட்டுரை தொகுப்பா!!?? சார், அது அவரோட சிறுகதை தொகுப்பு. 'ராயர் காபி கிளப்' தான் அவருடைய கட்டுரை தொகுப்பு. அதே பெயருடைய யாஹூ குழுமத்தில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

வில்லங்கம் விக்னேஷ் said...

நிச்சயமா. வாய்மொழி எழுத்து மூலம் தமிழ் இலக்கியங்கள் வாழ்கிற மக்களுக்கு அவசியம். சுஜாதா பின்னாடி முருகன் ஸார்தான் எமக்கு பூணும் நூல்களைத் தருகிறார். நன்றி ஸார்

துளசி கோபால் said...

எனக்கும் இ.ராமு. எழுத்து ரொம்பப் பிடிக்கும்.

அவர் என் தம்பிதான்.

திண்ணையில் அரசூர் வம்சம் இருக்கு பாருங்க.

வால்பொண்ணு said...

நானும் கடவுள்ன்னு சொன்னா நம்பவா போறீங்க !!!

Share