Thursday, March 31, 2011

ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடலை


பளார் என சத்தம் கேட்டது. என்னவென்று முழித்த பார்த்த பின் தான் தெரிந்தது, என் புட்டத்தில் அடி விழுந்திருந்தது. எதிரில் கோபாவேசமாக அப்பா. ”அடிச்சது கூட சொரணை இல்லாம தொரைக்கு அப்பிடி என்ன தூக்கம்.” என்று அப்பா கத்தினார். அப்பா பேசுவதே சமயத்தில் கர்ஜனை போல இருக்கும். இதில் கத்தினால் குலை நடுங்காமல் வேறு என்ன செய்வது. மணி ஐந்தே முக்கால் ஆகியிருந்தது. நான் இன்னும் எழாமல் இருந்தது தான் அப்பாவின் அதிகாலை ருத்ர தாண்டவத்தின் காரணம். அப்பா ரேடியோவில் பைபிள் நேரம் கேட்க ஆரம்பித்த போதே நான் எழுந்திருத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு நிமிடம் தூங்கலாம் என்ற என் சோம்பேறித்தனம் தான் காரணம். மெளனமாக எழுந்து கழிவறைக்கு சென்றேன். எனக்கு முன்னால் எழுந்திருந்த தம்பி என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான். காலக் கொடுமையை நொந்து கொண்டேன்.

அப்பா ஒன்றும் அத்தனை கோபக்காரர் இல்லை. இருப்பினும் அவரது இராணுவ அட்டவணையை நானோ, என் தம்பியோ தவறினால் தான் அவரின் கைகள் பரபரக்கும். எனக்கும், தம்பிக்கும் ஜென்ம சத்ரு உண்டென்றால் அது அப்பாவின் ரேடியோ தான். அது ஒரு பழைய மர்ஃபி ரேடியோ. 1976 மாடல். அந்த காலத்தில் மர்ஃபி ரேடியோவை வைத்திருப்பதே ஒரு கவுரவமாம். அப்பா சொல்வார். தனது முதல் மாத சம்பளத்தில் பாட்டிக்கு நகை எடுத்தது போக மிச்சத்தில் வாங்கியதாம். அதை உபயோகிக்கும் சூட்சமம் அப்பாவிற்கு மட்டுமே தெரியும். அப்பா இல்லாத நேரத்தில் ஒரு சமயம் அதை போட்ட போது பாடவில்லை. அப்பா சாவகாசமாக வந்து அதை இரண்டு தட்டு தட்டினார். பி.சூசிலா பாடினார். ரேடியோவை வைப்பதற்காக தனியாக ஒரு சதுர பலகை செய்து வைத்திருந்தார். அதை சுவற்றில் சாத்தி அதன் மேல் மர்ஃபியை வைத்திருக்கும் போது, ஏதோ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல் சமர்த்தாக இருக்கும். கல்லூரி காலத்தில் அவர் வைத்திருந்த ஃபிலெட்டா ட்ரான்சிஸ்டர் கூட இன்னும் வீட்டில் தான் இருக்கிறது. அது என்னவோ மர்ஃபி மீதான காதல் அவருக்கு ஓய்ந்த பாடில்லை.

அப்பாவின் ஒரு நாள் நிகழ்வுகளை, வானொலி அட்டவணையை வைத்து சொல்லி விடலாம். எத்தனை மணிக்கு எழுந்தாலும் ரேடியோ போட்டு விடுவார். உலகில் இருந்த அத்தனை தமிழ் வானொலி நிலையங்கள் அவருக்கு அத்துப்படி. நான்கு மணிக்கு எழுந்தால் சிங்கப்பூர் வானொலி, அதற்கு மேல் ரேடியோ வாடிகனின் தமிழ்ச் சேவை. ஐந்தே முக்கால் போல் ஆகாசவாணி. அது ஆரம்பிப்பது முன்னால் நானும், தம்பியும் எழுந்திருக்க வேண்டும். தப்பித் தவறி சரோஜ் நாராயன் சுவாமி செய்தி வாசிக்கும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தால் இதே போல் தான் புட்டத்தில் அடி விழுகும். தம்பியை அப்படி அடித்தால் சரி. ஒன்பதாவது படிக்கும் என்னையுமா?

அப்பாவின் காலை உடற்பயிற்சியில் பாதி, ரேடியோ கேட்பதில் மீதி எனக் கழியும். ஆறே முக்கால் செய்தி கேட்டது பத்தாது என்று ஏழாகால் செய்தியையும் கேட்பார். கொஞ்ச நேரம் பாட்டு கேட்பதற்காக இலங்கை வானொலி பக்கம் ரேடியோ நாபை திருப்பினால், சில சமயங்களில் என் முதுகில் அப்பாவின் கை பதிந்து புகை பறக்கும். பாட்டு கேட்கக் கூடாது என்பது அல்ல அப்பாவின் விருப்பம். அவர் செய்தி கேட்கும் போது வேறு எதுவும் குறிக்கிடக் கூடாது. மதுரை, திருச்சி, தூத்துகுடி வானொலி அலைவரிசைகளில் காலை ஏழரை மணிக்கு பாட்டு போடுவார்கள். சில சமயங்களில் அதற்கும் வேட்டு வைப்பது போல், சீன வானொலியின் தமிழ்ச் சேவையைக் கேட்கப் போய் விடுவார். சீன வானொலிக் காரர்கள் மதுரை பல்கலைக்கழகத்திற்கும், தஞ்சை பல்கலைக்கழகத்திற்கும் வந்து தமிழ் படித்து விட்டு போனார்களாம். அப்பா சொல்லி இருக்கிறார்

எட்டேகாலுக்கு தூத்துக்குடி வானொலியில் பழைய பாட்டு போடுவார்கள். அந்த சமயத்தில் காலைச் சாப்பாடு முடிந்து அனேகமாக நான் ஸ்கூலுக்கு போவதற்காக ஷீ அணிந்து கொண்டிருப்பேன். அப்பா அப்போது தான் உடற்பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருப்பார். விவரம் தெரிந்த பின் ஒரு நாள் நான் விடுப்பு போட்டிருந்த போது தான் தெரிந்தது, அப்பா உடற்பயிற்சி முடித்தவுடன் ரேடியோவை அணைத்து விடுவதில்லை என்று. எட்டரை மணிக்கு பழைய பாடல்கள் முடிந்த பின் கடுப்பேற்றும் மகளிர் நேரம், நேற்றைய நிகழ்ச்சி என்று எதையாவது கேட்டு கொண்டிருந்தார். குளிக்கப் போகும் நேரத்திலும் கூட குளியலறைக்கு வெளியே, கதவருகில் ரேடியோவை வைத்து கேட்டு கொண்டிருந்தார். நல்ல வேளை. குளியலறையின் உள்ளே மின்சார ப்ளக் இல்லை

பத்து மணிக்கு பெரும்பாலான வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி ஓயும் போது, அப்பா அலுவலகத்திற்கு செல்வதற்காக ஷீ மாட்டிக் கொண்டு இருப்பார். அப்பாவிற்கு கிரிக்கெட் பிடிக்காது. இல்லையென்றால் கிரிக்கெட் நடக்கும் சமயத்தில் அப்பாவோடு ரேடியோவும் அலுவலகத்திற்கு பயனப்பட்டு இருக்கும். திரும்ப ஒன்றரை மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வரும் அப்பா, வீட்டிற்குள் நுழைந்ததும் ரேடியோவை போட்டு விட்டு தான் முகம் கழுவுவார். வழக்கம் போல செய்தி ஓடும். அறக்கப் பறக்க அவர் சாப்பிட்டு முடிப்பதற்கும், செய்தி முடிவதற்கும் சரியாக இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும்.

ஆறு அல்லது ஆறரைக்கு வீட்டிற்கு வரும் அப்பா, திரும்ப ரேடியோ போட்டு விடுவார். கல்வி ஒளிபரப்புக் கூட அவர் காதிலிருந்து தப்பிக்காது. எனக்கும் தம்பிக்கும், தொந்தரவு இல்லாமல் தான் கேட்பார். ஏழரை மணிக்கு அம்மா சாப்பிட கூப்பிடும் போது பிலிப்பைன்ஸின் ரேடியோ வேரிடாஸ் தமிழ்ச் சேவை ஓடிக் கொண்டிருக்கும். அதில் சமயத்தில் ஏதாவது தமிழ் பாடல் ஒளிபரப்புவார்கள். ரேடியோ ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஏதேனும் அலுவலக வேலைகளை பார்த்து கொண்டிருப்பார். நானும் தம்பியும் படித்து முடித்த பின் ஒன்பதே கால் மணிக்கு படுக்கையை விரிக்கும் போது, பி.பி.சி தமிழோசையின் மங்கள நாதஸ்வர இசை கேட்கும். மெல்லிய ஓசையில் அவற்றை கேட்டுக் கொண்டே படுத்திருக்கையில், ஒன்பதே முக்காலுக்கு தமிழோசை முடியும் சமயத்தில் தூங்கி விட்டிருப்பேன்.

அப்பாவின் வானொலி கேட்கும் நேரம் சனி, ஞாயிறுகளில் கூடும். அதுவும் மாலை நேரங்களில் மொட்டை மாடி பால்கனியில் அமர்ந்து கொண்டு வானொலியில் பழைய பாடல்களைக் கேட்கும் போது, அப்பாவின் முகம் ஏதோ சொர்க்கத்தின் வாயிலை எட்டியது போன்ற மகிழ்ச்சியில் ஒளிரும். அந்த நேரத்தில் அவருக்கு இன்னும் இன்பமான ஒன்று அவர் வாயில் அறை படும். தேங்காயும், வறுகடலையும் அவர் வாயில் சட்னி ஆகிக் கொண்டிருக்கும். ஒரு சில் தேங்காய், அரைக் கைப்பிடி வறுகடலை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கைக்கும், வாய்க்கும் பயணப் படும்.

அப்பாவின் வானொலி நண்பர்களின் பட்டியல் போடுவது கொஞ்சம் கஷ்டமான காரியம். பத்தமடை கந்தசாமியிலிருந்து, தாராபுரம் கோவிந்தராஜன் வரை அவருக்கு அத்தனை நண்பர்கள். வாரம் ஒரு இருபது கடிதங்களாவது வானொலிகளுக்கும், வானொலி நண்பர்களுக்கும் எழுதுவார். ஒரு முறை கடிதம் எழுதிய நண்பருக்கும் மறு முறை கடிதம் எழுத குறைந்தது எட்டு மாதங்கள் ஆகும். தொலைபேசி கட்டணம் இமயத்தை தொட்டு கொண்டிருந்த காலத்தில், வானொலி நண்பர்களுடன் பேசுவதற்காக ஹாம் ரேடியோ லைசென்ஸ் வாங்க துடித்துக் கொண்டிருந்தார். அதற்கு தனியாக ஏதோவொரு பரீட்சை எழுத வேண்டி இருந்ததால், அலுவல்களை காரணம் காட்டி தள்ளி போட்டுக் கொண்டு இருந்தார்.

சில சமயங்களில் வானொலி அவருக்கு மருத்துவராகக் கூட ஆகியிருக்கிறது. அப்பா கல்லூரியில் படித்து கொண்டிருந்த சமயத்தில் சுற்றுலா போயிருந்த போது, அப்பாவின் ப்ரொபஸர் எல்லோரையும் அமைதியாக இருக்கும் படி கொஞ்சம் உச்சஸ்தாயில் கத்தினாராம். அப்போது அப்பாவின் நண்பர்உங்கள் நடை என்ன, அறிவென்ன, குணமென்ன, மனமென்ன, கோபம் வரலாமாஎன்ற பாட்டை பாடினாராம். ப்ரொபஸ்ர் உட்பட அனைவரும் கொல்லென சிரித்தனராம். என்னிடம், தம்பியிடமும் இதை சொல்லி அப்பா கல்லூரி நினைவுகளை அசை போட்டு கொண்ட்டிருந்த போது, இதை வானொலிக்கு எழுதி அனுப்புங்களேன் என்று கூறினேன். ஒரு நாள் அப்பாவிற்கு பயங்கரமான காய்ச்சல். அப்போது இலங்கை வானொலியில் அப்பா கூறிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்பாவின் பெயரைச் சொல்லி இதோ உங்களுக்காக அதே பாடலை காற்றலையில் தவழ விடுகிறோம் என்று அறிவிப்பாளர் சொன்ன போது அப்பாவின் நூற்றி மூன்று டிகிரி காய்ச்சலும் பறந்து போனது.

வீட்டின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வானொலி ஆக்ரமித்து இருந்தது. இதனால் தான் என்னவோ எங்கள் வீட்டில் தொலைக்காட்சிக்கு தேவை இல்லாமல் போய் விட்டிருந்தது. சாட்டிலைட் சேனல்களில், மெகா சீரியல்கள் ஆட்சி அமைக்க தொடங்கி இருந்த காலத்திலும் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்கிய பாடில்லை. எங்கள் காலனியிலே, ஏன் எங்கள் ஊரிலேயே அப்போது டி.வி இல்லாத வீடு எங்கள் வீடாகத் தான் இருக்கும். அம்மா டி.வி வாங்க நச்சரிக்க ஆரம்பித்த சமயத்தில் எனக்கு பொதுத் தேர்வுகள் வந்து விட்டிருந்தன. அதை காரணம் காட்டி அப்பா டி,வி வாங்குவதை தள்ளி போட்டார்.

கல்லூரி வந்த பிற்பாடு ஒரு வழியாக வீட்டில் டி.வி வாங்கி ஆயிற்று. ஆனாலும், அப்பாவின் ரேடியோ மோகம் குறையவில்லை. அப்பாவின் ப்ரோமோஷன்கள், அவர் ரேடியோ கேட்கும் நேரத்தை சுருக்கியிருந்தன. கொலஸ்ட்ரால் சராசரிக்கு மேல் சிறிது ஏற ஆரம்பித்தால் சனி, ஞாயிறு மாலைகளில் அறைபடும் தேங்காயும் காணாமல் போயிருந்தது. மர்ஃபி மக்கர் செய்யும் சில நேரங்களில் அப்பா பழைய ஃபிலெட்டாவை தட்டிக் கொண்டிருந்தார். நிறைய மாற்றங்கள் வந்தாலும் அப்பாவும், ரேடியோவும் பிரியாத இணைகளாகத் தான் இருந்தார்கள்.

எனது ரசனைகளும் மாற ஆரம்பித்தன. பழைய பாடல்கள் கசந்த நாட்கள் போக, இரவு வேளையில் அவை இல்லாமல் தூங்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. வேலை விடயமாக வெளிநாடு சென்றிருந்த போது அப்பாவிற்காக வாங்கிய -பாட் கடைசியில் தம்பி கைக்குத் தான் போனது. அப்பாவிற்கு என்று தேடி பிடித்து ஒரு வஸ்துவை வாங்கினேன். அது இணைய வானொலி. அகண்ட அலைவரிசை இணைப்பில் சொருகினால் போதும், அப்பாவின் விருப்பமான அத்தனை வானொலிகளும் கேட்கலாம்.

திரும்பவும் வெளிநாடு செல்ல வேண்டிய சூழல். அம்மாவுடன் தொலைபேசி தான் துணை ஆகியிருந்தது. ஒரு சமயம் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், எனது பால்ய காலம் முழுவதும் நான் பழகியிருந்த ஓசை கேட்டது, அது மர்ஃபியின் கொர, கொர சத்தம். மனதிற்குள் மெதுவாகச் சிரித்துக் கொண்டேன்.

8 comments:

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

மிக அருமையான சிறுகதை
இதை விகடனுக்கு அனுப்புங்க நண்பா
மேலும் இது போல அர்த்தமுள்ள சிறுகதைகளை எழுதுங்கள்

Prasanna Rajan said...

நன்றி கார்த்திகேயன். அனுப்ப முயல்கிறேன்...

siva said...

kathai nalla iruku prassana.

thenikari said...

aempa,namoorkarana neeye.nalla irruya.oorkara paya imbuttu arivaliya ? santhosampa.

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும்போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html

செ.சரவணக்குமார் said...

நண்பா, நல்ல ஃப்ளோ. நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. ரொம்ப நாளா ஒண்ணுமே எழுதல போலயே.

# நம்மகூட சேர்ந்த ஆளுங்க எல்லாம் நம்மள மாதிரியே தான் இருக்காங்க. :)

Cleetus said...

வணக்கம்...
தெளிவான நடையில் தங்கள் தந்தையின் வானொலி ரசனையை (காதலை) எழுதியுள்ளீர்கள்...
தங்களின் தந்தையில் பெயரை நான் அறியலாமா?
(You can email me)

இராஜராஜேஸ்வரி said...

மர்ஃபியின் கொர, கொர சத்தம். மனதிற்குள் மெதுவாகச் சிரித்துக் கொண்டேன்.

முத்தாய்ப்பான வரிகள் தங்கத்தருணங்களை மீட்டெடுத்தன.

Share