ஒவ்வொரு முறை ரேடியோவில் இந்த பாட்டை கேட்கும் போதும் அப்பா இந்த சம்பவத்தை பற்றி சொல்வார். இருப்பினும் அப்பாவின் பல கதைகள் சலிப்பதில்லை. 1977இல் அப்பா கல்லூரி முடித்து விட்டு, ஒரு உரக் கம்பெனிக்கு விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து கொண்டிருந்தாராம். தமிழ்நாடு முழுவதும் சுற்றி கொண்டிருக்கையில் ஒரு நாள் திருநெல்வேலியில் தங்கினாராம். அவர் தங்கிய லாட்ஜீக்கு அருகில் கங்கை அமரன் கச்சேரி நடத்தி கொண்டிருந்தார். அப்பாவிற்கு 'அன்னக்கிளி' வரும் முன்பே, கம்யூனிச கச்சேரிகள் மூலம் பாவலர் பிரதர்ஸிடம் பரிச்சயம் உண்டு.
அப்போது பிரபலமான பாடல்களையெல்லாம் பாடக் கேட்டு கொண்டிருக்க ஒருவர் மேடையேறினாராம். கங்கை அமரன் மேடையேறியவரிடம் காட்டமாக "அது எப்புடிலே, ஆட்டுக்குட்டி முட்டை போடும்" என்று கேட்டார். அவரும், "எனக்கென்ன தெரியும். எழுதுனவருகிட்ட போய் கேளுய்யா" என்று கங்கை அமரனை திரும்ப வாரினார். "ஆட்டுக்குட்டி முட்டை போடுறது மட்டுமில்ல, இன்னும் இல்லாத அக்கப்போரெல்லாம் பத்தி இந்த ஆள் சொல்றார்" என்று கங்கை அமரன் சொல்ல, மலேசியா வாசுதேவன் அப்போது வெளிவராத படமாக இருந்த "16 வயதினிலே"விலிருந்து 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடலை பாடினாராம்.
நான் சிறுவனாக இருந்த போது, இந்த பாடலை ஒரு வித கேலித் தொணியுடன் பாடி, என்னை சிரிக்க வைப்பார் அப்பா. இன்று மலேசியா வாசுதேவன் நம்முடன் விட்டு சென்றிருப்பது அவரின் பாடல்கள் என்னும் நினைவுகள் மட்டுமே.
3 comments:
மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவு தமிழ் திரை இசைக்கு ,நடிப்புலகிற்கு மிகவும் பெரிய இழப்பு நண்பா,அஞ்சலிகளை உங்கள் நினைவோடைகளில் பகிர்ந்தமைக்கு நன்றி
அவர் குரல் காலத்தால் அழியாதது இல்லையா...
RIP my most fav singer in Tamil :-(
Post a Comment