Thursday, December 23, 2010

தி ஃபைட்டர் (2010)

Gladitorial Games எனப்படும் வீர விளையாட்டுகளுக்கு மவுசு, மனிதன் வேட்டையாடும் காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அந்த விளையாட்டுகளுக்கான மனிதனின் வேட்கை தான் ஜல்லிகட்டு தொடங்கி பாக்ஸிங் வரை பல விளையாட்டுகளாக பரிணமத்துள்ளது. பொதுவாக விளையாட்டுகள் தொடர்பான ட்ராமா வகை திரைப்படங்கள் அளவுக்கதிமாக ரொமான்டிஸைஸ் செய்யப்படும். மிகச் சிறந்த உதாரணம் ஸ்டலோனின் 'ராக்கி. முதல் பாகத்தில் உணர்வுகள் நிரம்பிய படைப்பாக இருந்து, அடுத்தடுத்த பாகங்களில் மொத்தமாக நீர்த்து போனது. இருப்பினும் இறுதி பாகமான 'ராக்கி பல்போவா' முதல் பாகத்திற்கு ஈடாக இருந்ததில் சந்தேகமில்லை. 'ரிமம்பர் தி டைட்டன்ஸ்', 'எனி கிவன் சண்டே', 'தி கராத்தே கிட்' (பழசு, புதுசு இரண்டும்), 'தி ப்ளைன்ட் ஸைட்', 'சின்ட்ரெல்லா மேன்' போன்ற படங்கள் சர்க்கரை தடவப்பட்ட ஃபீல் குட் வகை திரைப்படங்கள். அதே சமயம், 'தி ரேஜிங் புல்', 'மில்லியன் டாலர் பேபி', 'தி ரெஸ்ட்லர்' போன்ற படங்கள் அதே விளையாட்டுகளின் உண்மை நிலையை, சுத்திகரிக்காமல் அப்படியே கச்சாவாக காட்டின. இந்த இரண்டு வகை திரைப்படங்களையும் ஒன்று கலந்து பார்வையாளனுக்கு திகட்டாது வழங்கபட்ட படைப்பு தான் 'The Fighter'.

கிறிஸ்டியன் பேல், மார்க் வால்பெர்க் இரண்டு பேரும் பாக்ஸர் அண்ணன் தம்பிகளாக போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மார்க் வால்பெர்க் நடித்திருக்கிறார் என்ற காரணத்திற்காக 'தி ஹாப்பனிங்', 'மேக்ஸ் பெய்ன்' போன்ற மேக்ஸிமம் பெய்ன் தந்த மொக்கை திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். காரணம் - வால்பெர்க்கின் அற்புதமான திரை ஆளுமை. ராப் பாடகராக இருந்து திரைப்பட நடிகர் ஆனவர் வால்பெர்க். கிறிஸ்டியன் பேல் - சொல்லவே வேண்டாம். 13 வயதில் ஸ்பீல்பெர்க்கின் 'தி எம்பயர்  ஆஃப் தி சன்' இல் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து, 'அமெரிக்கன் சைக்கோ', 'தி மெசினிஸ்ட்', 'ரெஸ்க்யூ டான்', 'தி ப்ரஸ்டீஜ்' மற்றும் '3:10 டூ யூமா' வரை எனக்கு மிகவும் பிடித்த அத்தனை படங்களின் நாயகன். ஆஸ்கார் என்ற கனவு கிறிஸ்டியன் பேலுக்கு இந்த முறை கண்டிப்பாக நனவாகிப் போகும் போலிருக்கிறது. 

டிக்கி எக்லன்ட் (கிறிஸ்டியன் பேல்) தனது பாக்ஸிங் திறனால், மசாச்சூஸட் மாநிலத்தின் லோவல் நகரின் பெருமிதமாக திகழ்ந்து கொண்டிருந்தான். முக்கியமான ஆட்டம் ஒன்றில் டிக்கி தோற்க, அதன் பின் போதை மருந்துக்கு அடிமையாகிறான். டிக்கியின் தம்பியான மிக்கி வார்ட் (மார்க் வால்பெர்க்) தனது அண்ணனை போல் தானும் பாக்ஸர் ஆக வேண்டும் என நினைக்க, தன் அண்ணனையே ட்ரெய்னராக கொண்டு தனது பாக்ஸிங் கரியரை தொடங்க, டிக்கியோ அவனது போதை மருந்து பழக்கத்தால் மிக்கிக்கு வில்லனாகிறான். டிக்கி பயிற்சிக்கு நேரத்துக்கு வராததாலும், மானேஜரான அவர்களின் தாய் எடுக்கும் தவறான முடிவுகளாலும், மிக்கியின் பாக்ஸிங் வாழ்க்கையே சுக்குநூறாகிறது.  பார் ஒன்றில் வேலை பார்க்கும் சார்லீனை (ஏமி ஆடம்ஸ்) சந்திக்கும் மிக்கியின் வாழ்வு கொஞ்சம் பிரகாசம் அடைகிறது. அவளின் அறிவுரைப்படி டிக்கியிடமும், அவனது தாயிடம் இருந்தும் மிக்கி விலகி இருக்க அவனது பாக்ஸிங் வாழ்க்கை கொஞ்சம் புத்துணர்வு பெறுகிறது.

இதற்கிடையில் போலீஸ்காரர்களை அடித்ததால் சிறைக்கு சென்ற மிக்கி, வெளியாகி வர தனது தம்பிக்கு திரும்பவும் பயிற்சி கொடுக்க நினைக்கிறான். தோற்க இருந்த போட்டி ஒன்றில், டிக்கியின் டெக்னிக் ஒன்றை உபயோகித்ததால் மிக்கி ஜெயிக்கிறான். தனது குடும்பம், தனது காதலி இருவரும் தனது பாக்ஸிங் வாழ்க்கை சிறக்க தேவை என இருதலைக்கொல்லி எறும்பாக தவிக்கும் மிக்கி, இறுதியில் உலக பாக்ஸிங் டைட்டில் ஒன்றை வென்றானா என்பது தான் மீதிக் கதை. இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த போது 'இன்னொரு பாக்ஸிங் திரைப்படமா' என்று தான் தோன்றியது. இருப்பினும் திரைக்கதயிலும், பாத்திர படைப்பிலும் அசத்தி விட்டார்கள். மிக்கி, டிக்கி, அவர்களுடைய தாய், இரு தந்தைகள், எட்டு சகோதர சகோதரிகள், மிக்கியின் முன்னாள் மனைவி, மிக்கியின் மகள் என்று பல கதாப்பாத்திரங்களை ஸ்க்ரிப்டுக்குள் கொண்டு வந்ததற்காகவே திரைக்கதாசிரியரை பாராட்ட வேண்டும்.

திரைப்படத்தின் இறுதியில் நிஜ வாழ்க்கை டிக்கி எக்லன்டையும், மிக்கியையும் காட்டுவார்கள். நிஜ வாழ்வு டிக்கியின் உடல் மொழியை அப்படியே மாறாமல் கொண்டு வந்ததை பார்த்த போது ஆச்சர்யபட்டேன். மெத்தட் ஆக்டிங் என்ற முறையை எழுபதுகளில் உயிரூட்டிய பெருமை ராபர் டி நிரோ, அல் பேசினோ, டஸ்டின் ஹாஃப்மென்னை சாரும். பேசாமல் இவர்களின் வாரிசாக கிறிஸ்டின் பேலை அறிவித்து விடலாம். மார்க் வால்பெர்க்கை காட்டிலும் வயதில் இளையவர் கிறிஸ்டின் பேல். ஆனால்,  வால்பெர்க்கை  காட்டிலும் வயது கூடியவராக  காட்டியிருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்காக 20 கிலோ எடையை இழந்திருக்கிறார் கிறிஸ்டின் பேல். இனி பேட்மேன் வரிசையின் அடுத்த படமான, 'தி டார்க் நைட் ரிட்டன்ஸீ'க்கு திரும்ப எடை ஏற்ற வேண்டும். மனிதர் எப்படித் தான் சமாளிக்கிறாரோ.

இந்த முறை ஆஸ்காருக்கு கடுமையான போட்டி. பெரும்பாலும் கோல்டன் க்ளோப்பை முன் வைத்தே ஆஸ்கார் நாமினேஷன்கள் முடிவு செய்யப்படும். இந்த படம் 6 கோல்டன் க்ளோப் நாமினேஷன்களை பெற்றிருக்கிறது. எது எப்படியோ, கிறிஸ்டியன் பேலுக்கு சிறந்து துணை நடிகருக்கான ஆஸ்கார் உறுதி. பாக்ஸிங் அதிகமில்லாமல், எல்லோருக்கும் அறிந்த டெம்ப்ளேட்டில், ஒரு பாக்ஸிங் திரைப்படத்தை தந்த திரைக்கதாசிரியர்கள் Scott Silver, Paul Tamasy, Eric Johnsonக்கும், இயக்குநர்  David O' Russelக்கும் ஒரு சபாஷ்...

10 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

க்ரிஸ்டியன் பேல், ஆஸ்கர் வெல்லட்டும். மிகத் திறமைவாய்ந்த ஒரு நடிகர். அமெரிக்கன் ஸைக்கோ மற்றும் 3:10 டு யூமா எனக்கும் மிகப் பிடித்த படங்கள்..

ஆனால், மார்க் வால்பெர்க்கை எனக்கு அந்த அளவு பிடிப்பதில்லை. ஒரு காலத்தில், இவருக்கும் மேட் டேமனுக்கும் வித்தியாசமே தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன் :-) ..

Prasanna Rajan said...

@ கருந்தேள்

'தி டிபார்ட்டட்', 'வீ ஓன் தி நைட்'டில் வால்பெர்க்கின் பெர்ஃபார்மன்ஸ் பாராட்டுக்குரியதாக இருக்கும். சரியான படங்கள் அவருக்கு அமையவில்லையே என்று கவலைப்பட்டு கொண்டிருந்தேன்.

இந்த வருடம் வந்த 'The Other Guys'இலும் வால்பெர்க்கின் நடிப்பு கவனிக்கதக்கதாக இருந்தது. மேட் டேமனுக்கும், வால்பெர்க்குக்குமான குழப்பம் உங்களுக்கு மட்டுகில்லை, எனக்கும் கொஞ்ச காலத்துக்கு இருந்தது...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

Boogie Nights தான் எனக்கு நெருக்கமான மார்க் வேல்பர்க் படம். டிபார்டட் கடைசித்தருணத்தில் அனாயசமாக மாட் டாமோனை போட்டுத்தள்ளுவார் :)) ஆஸ்கார் அழுவாச்சி மூவிஸ் எல்லாம் இங்கு பிப்ரவரியில்தான் வெளியாகும் பார்த்துவிடுவேன்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே, தி அதர் ஹைய்ஸ் இல் கொஞ்சம் அசட்டுத்தனமான வேடத்தில் வேல்பெர்க்கின் நகைச்சுவை நன்றாகவே இருந்தது ஆனால் வில் ஃபேராலை எப்படி தாங்கிக் கொண்டீர்கள் :))

MSK / Saravana said...

நல்லா எழுதி இருக்கீங்க.. இந்த படம் பார்க்கணும்..

Chris Bale rocks.. :)

//ஒரு காலத்தில், இவருக்கும் மேட் டேமனுக்கும் வித்தியாசமே தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன் :-) .//
எனக்கும் எனக்கும். திடீர்ன்னு குழம்பிடுவேன். :)

Prasanna Rajan said...

@ கனவுகளின் காதலன்

நன்றி பாஸ். Boogie Nights'ஐ மறந்துவிட்டேன். அதுவும் வால்பெர்க்கின் சிறந்த படம் தான். இது ஒன்னும் அழுவாச்சி திரைப்படம் அல்ல. சொல்லப் போனால் சில சீரியஸ் காட்சிகள் கூட நகைச்சுவை கலந்து எடுக்கப் பட்டிருந்தது.

வில் ஃபெரலை வேறு வழியில்லாமல் பொறுத்து கொள்ள வேண்டியது தான். என்ன செய்வது...

Prasanna Rajan said...

@ MSK

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்...

Philosophy Prabhakaran said...

நல்லதொரு விமர்சனம்.... பொதுவாக நான் இதுபோன்ற படங்களை பார்க்க விரும்புவது இல்லை... ஒரு முறை எதேச்சையாக ராக்கி படத்தின் முதல் பாகத்தை விஜய் டிவியில் பார்த்தேன்... அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது... பின்னர் ராக்கி படத்தின் பிற பாகங்களையும் தேடித் தேடி பார்த்தேன்... ஆனால் மற்ற பாகங்கள் மனம் கவரவில்லை... இப்பொழுது இந்த படத்தை பார்க்க முயல்கிறேன்...

அப்பாதுரை said...

கேள்விப்பட்டதில்லை... பார்க்கத் தூண்டும் விமரிசனம். வால்பேர்க் நல்ல நடிகர்.

மயிலாடுதுறை சிவா said...

இந்த படத்தை பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல விமர்சனம் மற்றும் நல்ல பதிவு.

நன்றிகள் பல...

மயிலாடுதுறை சிவா...

Share