![]() |
© மாமல்லன் கார்த்தி |
உங்கள் கவனத்திற்கு (அ) எச்சரிக்கை: இந்த கட்டுரையில் பல முரண்கள் உங்களுக்குத் தோன்றலாம்.
பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது தான் ‘அலைபாயுதே’ வந்தது. எங்க ஊர்ல மணிரத்னம் படத்திற்கு அத்தனை பெரிய ஓபனிங் இல்லாததால ‘அப்பு’னு ஒரு மகா,மெகா காவியம் பொட்டிய கட்டுனதுக்கப்புறம் செகண்ட் ரீலிசா வந்தது. இதற்கு காரணம் இதற்கு முன் வெளியான ‘இருவர்’ மற்றும் ‘உயிரே’. எங்கள் ஊரில் முதல் நாள் முதல் ஷோவிற்கு மொத்தம் 10 பேர் தான் இருந்தார்களாம். அதனால ரிஸ்க் எடுக்க விரும்பாத தியேட்டர்காரர்கள் அதற்கப்புறம் மணிரத்னம் படம் என்றால் செகண்ட் ரிலீஸ் தான் செய்தார்கள். ‘ஆய்த எழுத்து’ வரை அது தொடர்ந்தது. ’குரு’ தப்பிதமாய் முதல் ரிலீஸ் செய்யபட்டு சுமாராக ஓடியது. உண்மையை சொல்லப் போனால் ’அலைபாயுதே’ அப்போது எனக்கு மிகவும் பிடித்த படமாகிப் போனது. படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து நண்பன் ஒருவன் ஒரிஜினல் வி.சி.டி கொடுக்க, அது தேயும் அளவு திரும்ப திரும்ப பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில்லை.
இப்படி இருக்க மணிரத்னத்தின் அனைத்து படங்களையும் கல்லூரி வந்த பின் பார்க்க ஆரம்பித்தேன். அவருடைய படைப்புகளில் கூறப்படுவனவை உண்மையை போல் தோற்றம் அளித்தாலும், ஒரு வித குறுகிய மனப்போங்குடன் படைக்க பட்ட படைப்புகளாகவே தோன்றியது. முக்கியமாய் அவருடைய படங்கள் நெடுகிலும் ஒரு வெறுமை தோன்றியது. அந்த வெறுமை ஓட்டைகள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பிண்ணனி இசை ஆகியவற்றால் பூசி மொழுகப் படுவதும் தெளிவுறக் கண்டேன். இதனால் தான் மணிரத்னம் தன் படங்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்துகிறார் என்பதையும் புரிந்து கொண்டேன்.
இன்ஸ்பிரேஷன் - இந்த ஒரு வார்த்தையை வைத்து நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பிதாமகர் மணிரத்னம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 1996 இந்தியா டுடே இலக்கிய மலரில், கமலிடம் ‘நாயகனில்’ உள்ள ‘பாதிப்புகள்’ பற்றி வாசந்தி அவர்கள் கேட்ட போது “அது Mario Puzo வை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சி” என்றார். பின்னர் ஏன் மார்லன் பிராண்டோவின் உடல்மொழி அப்படியே பயன்படுத்தபட்டது?
இன்ஸ்பிரேஷனுக்கும், ப்ளேகரிசத்திற்கும் (Plagiarism - அப்பட்டமாய் காப்பி அடிப்பது) இடையே ஒரு சிறிய, மிகச் சிறிய இடைவெளி உள்ளது. மணிரத்னம் இன்ஸ்பிரேஷன் என்ற இடைவெளியை தாண்டி, ப்ளேகரிச வெளிக்குள் நுழைந்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. இதை நான் வெளிப்படையாக கூறினால் என்னை சுற்றும் விமர்சன கணைகள் கூராக பாய்கிறது. ‘நாயகன்’ காட்ஃபாதரின் வெளிப்படையான பாதிப்பு என்று சாதாரணமாக ஆங்கில படம் பார்ப்பவர் கூட சொல்லி விடுவர். அதில் இடம்பெறும் ‘Once upon a time in America' காட்சிகள் பட்டியலில் வராது. இருப்பினும், இந்த படம் ‘டைம்’ இதழின் சென்ற நூற்றாண்டின் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பிடித்ததால் விதிவிலக்கு. மேலும் ‘காட்ஃபாதரால்’ பாதிக்கபட்டு எடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் கணக்கில் அடங்கா. ஏன் ‘சர்க்கார்’ கூட காட்ஃபாதரின் தழுவல் தானே? ஆனால் அதை தழுவல் என்று வெளிப்படையாக டைட்டில் கார்டில் போடுமளவிற்கு ராம் கோபால் வர்மாவிற்கு தைரியம் இருந்தது. மணிரத்னத்திற்கு?? காட்ஃபாதர் ஹேங் ஓவர் ‘அக்னி நட்சத்திரத்திலும்’ தொடர்ந்தது.
’மெளன ராகமும்’ அதற்கு முந்தைய மணிரத்னம் திரைப்படங்களும் ஒரு வித அழகியல் தன்மையோடு தோன்றின. ஆனால் ‘இதயகோயில்’ எண்பதுகளின் மத்தியில் வந்த ட்ராஜெடி ‘காவியங்கள்’ வரிசையில் இருப்பதால் எனக்கு பிடிக்காமல் போனது. முக்கியமாய் அவரின் முதல் படமான ‘பல்லவி அனு பல்லவி’யை பார்த்த போது சற்று பிரமிப்பாகத் தான் இருந்தது. ஒரு வேளை அதற்கு காரணம் பாலுமகேந்திராவின் ஓளிப்பதிவா? பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் இது வரை தன்னை கதை சொல்லி அசத்தியவர்களில் ஒருவர் மணிரத்னம், மற்றொருவர் ‘கற்றது தமிழ்’ ராம் என்று தெரிவித்து உள்ளார். அத்தகையதொரு படைப்பாளி ‘தேசிய கவனம்’ பெறுவதற்காக சோடை போனாரோ என்றும் தோன்றுகிறது.
மணிரத்னம் ’தளபதி’யில் புராண கதை ஃபார்முலா எடுபட்டவுடன், தேசிய அளவில் எடுத்துச் செல்ல சத்யவான், சாவித்ரி கதையை ‘ரோஜா’ என்று படைத்தார். இந்த படத்தின் அரசியலை, தமிழ் இலக்கிய விமர்சகர்கள் ஏற்கனவே கிழித்து தொங்க விட்டு விட்டதால் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. 'பம்பாய்’ ஒரு வித மொன்னையான படைப்பு என்றே கூற வேண்டும். காரணம் அந்த படம் என்ன சொல்ல வந்ததோ அது மிக வெளிப்படையாக சொல்லப்படவில்லை. அன்றைய அரசியல் சுழலும் காரணமாக இருந்திருக்கலாம். அந்த மொன்னைத்தனம் ’இருவரி’லும் தொடர்ந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான பங்கு வகிக்கும் இருவரை நேரடியாக திரைபாத்திரங்களாக படைத்தால் ட்ரவுசர் கிழிந்து விடுமே. அது தான் நடந்தது. பொதுவாக மணிரத்னம் திரைப்படங்கள் ‘ஏ’ செண்டர் ஆடியன்ஸ் எனும் பெருநகர மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று ஒரு வித மொக்கையான மேம்போக்கு நிலவி வருகிறது. அது ‘இருவரி’ல் பொய்த்தது என்றே கூற வேண்டும். என் சினீயர் ஒருவர் தெரிவித்த வரையில் இந்த படம் ஓடுவதற்கு ‘ஹிந்து’வில் மாய்ந்து, மாய்ந்து இந்த படத்தை பற்றி தலையங்கம் எழுதினார்களாம். அப்படியும் படம் சென்னையிலேயே, ஊஹீம்...
ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டிய சூழலில் வெளியான ’அலைபாயுதே’, ஆர்.செல்வராஜின் கதையிலும், சுஜாதாவின் வசனத்திலும் தப்பி பிழைத்தது என்றே சொல்ல வேண்டும். ‘மெளன ராகம்’ மணி திரும்பி விட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் ’அரசியல் சினிமா’ ஆசை அவரை விடவில்லை போலும். ஈழப்பிரச்சனையை வைத்து ‘கன்னத்தில் முத்தமிட்டாலை’ எடுத்தார். நாடகத்தனமான ஈழத்தமிழில் பேசிய கதாபாத்திரங்கள் ஒன்று கூட ஈழத்து மனிதர்களாக தோன்றவில்லை. இதை பல ஈழ எழுத்தாளர்களும், நண்பர்களும் எழுதி தள்ளி விட்டனர்.
‘ஆய்த எழுத்து’ மணிரத்னத்தின் அரசியல் சினிமாக்களின் உச்சம் என்று கூறலாம். இந்த படம் திருச்சியில் போட்ட போது முதல் காட்சிக்கு 50 பேர் கூட தேறலை. (நானும் முதல் ஷோவிற்கு போயிருந்தேங்க... :D) உலகெங்கிலும் உள்ள திரைப்பட கல்லூரிகளில் ‘ரோஷாமான் ஸ்கிரீன்ப்ளே எஃபக்ட்’ என்று பாடமாகவே வைக்கபட்டுள்ளது. அந்த எஃபக்ட் மணிரத்னத்தை பாதித்தது. இருப்பினும் அது கூட ஏற்று கொள்ளக்கூடிய ஒன்று. அதோடு நிறுத்தியிருக்கலாம். ‘Amorres Perros' படத்தில் இடம்பெறும் காட்சிகள் அப்படியே காமிரா கோணம் மாறாது கையாளப் பட்டன. படத்தின் காட்சிகள் துண்டு, துண்டாக இருக்கும் போது ரசிக்கக் கூடியதாய் இருந்தாலும், மொத்தமாக காணும் போது பார்வையாளன் குழப்ப நிலைக்கு ஆளானது தான் படத்தின் தோல்விக்கு காரணம்.
‘குரு’ - ’ஏவியேட்டரின்’ சர்க்கரை தடவி எடுக்கப்பட்ட (அ) ‘ஏவியேட்டரின்’ ரீமேக் ரைட்ஸ் வாங்கப்படாத இந்திய படைப்பு. இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. சரி, விஷயத்திற்கு வருவோம். இப்புடியே இன்ஸ்பையர் ஆகிட்டே போனீங்கன்னா உங்களோட ஒரிஜினல் படைப்பு எப்ப வரும்ங்க. இன்னொரு கருத்தும் இருக்குது: இன்ஸ்பையர் ஆகுறது தப்பு இல்லை, அப்பிடி இன்ஸ்பையர் ஆனாலும் அந்த இறுதி படைப்பு படைப்பாளியோட பாணியில் இருந்தால் தப்பில்லையாம். நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதும் போது, அதன் மூலத்தை குறிப்பிடாமல் எழுதினால் என் மென்னியை திருகிவிடுவார்கள் அறிவியலாளர்கள். ‘பூ’ திரைப்பட டைட்டில் கார்டில் ‘நன்றி: ஷாங்க் ஈமு’ என்று வரும். காரணம்: ‘பூ’ படத்தின் பெரும்பாலான கூறுகள் ஷாங்க் ஈமுவின் ‘தி ரோட் ஹோம்’ கதையை தழுவியது. இது போன்ற குறைந்தபட்ச நேர்மையாவது மணிரத்னத்திடம் உள்ளதா?
இந்த இடத்தில் தான் மணிரத்னம் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு மோசமான முன் உதாரணமாகிறார். ஃபிலிம் இன்ஸ்டியூட்டிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் ஒரு ஒலகப்பட டி.வி.டியை சுட்டு ஒரு திரைக்கதை தயாரித்து ஒரு படமும் எடுத்து விடுவான். யாரேனும் ‘இது அந்த படத்தின் காப்பி தானே’ என்று கேட்டால் ‘மணிரத்னம் அடிக்கிறாரு, நான் அடிச்சா மட்டும் தப்பா’ என்று எதிர் கேள்வி தொடுப்பான். நம்முடைய பெரும்பாலான வெகுஜன அறிவுஜீவி விமர்சகர்கள், மணிரத்னத்தின் திரைப்படம் தழுவல் எனத் தெரிந்தாலும் ‘ஆஹா, ஒஹோவென’ புகழ்வார்கள். அதே வேறொருவர் காப்பி அடித்தால் போட்டு தாளித்தெடுப்பார்கள்.
நல்ல வேளை. மணிரத்ன தலைமுறை அவரோடு நின்றுவிட்டது. அவரின் மாணவர்கள் அழகம்பெருமாள், சுசி.கணேசன், ப்ரியா.வி ஏதோ ரெண்டு படங்கள் செய்து இருந்தாலும் ஒன்றும் பெரிசாக பெயர் சொல்லிக் கொள்ளும் படியாக சாதிக்கவில்லை. இருந்தாலும் இந்த கவுதம் மேனன், செல்வராகவன் வகையறாக்கள் மணிரத்ன வாரிசு என்ற பட்டத்திற்கு அடியை போடுவது தான் மேலும் கடுப்பேற்றுகிறது.