Friday, April 9, 2010

ஸ்வாமியும், நண்பர்களும் - ஒரு நாடக முயற்சி

ஆர்.கே.லக்‌ஷ்மணின் கைவண்னத்தில் ஆர்.கே.நாராயன்
அக்டோபர் 10, 2009. நண்பனுடன் சங்கம் திரையரங்கில் ‘ஈரம்’ பார்த்துவிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை கிளம்பிய மற்றொரு நண்பனை வழியனுப்ப உட்கார்ந்து இருக்கும் வேளையில் லைட்டாக ஹிந்துவை மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.  அது மெட்ராஸ் ப்ளேயர்ஸ் வழங்கும் "Swami and Friends" நாடகத்தின் விளம்பரம்.  உடனே அவனிடம் கேட்டேன் “இன்னைக்கு சாயங்காலம் என்ன புடுங்கப் போற”. உடனே அவன் “ஒரு ஆணியும் புடுங்கறதா இல்லை” என்றான். “அப்ப சரி. ஒரு நாடகம் பார்க்கப் போகலாம” என்று கேட்டேன். “அதான் டெய்லி டி.வியில போடறாங்களே” என்றான். ”இல்லை மச்சி! இது மேடை நாடகம்டா” என்றேன். “ஆமாம் மச்சி!! நானும் இந்த எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் நாடகம் எல்லாம் பார்க்கனும்” என்றானே பார்க்கலாம். அப்போது தான் கொஞ்சம், லைட்டா மெர்சில் ஆனேன். உள்மனது சொல்லியது, ‘இத அப்பிடியே மைண்டெய்ன் பண்ணு,  ஏன்னா இவனைத்தேன் மொளகாய் அரைக்கனும்’ என்று. “இதுவும் காமெடி நாடகம் தான் மச்சி, ஆனால் இங்கிலீஷ்ல” என்றேன். அவன் முகம் நான் கடைசியாய் சொல்லிய வார்த்தையை, சொல்லி இருக்கக் கூடாது என்று சொல்லாமல் சொன்னது (எப்பா டேய் எத்தனை தடவை சொல்லுவ!!) ஒரு வழியாக அவனை தாக்காட்டி, சரவண பவனில் சாப்பாடு வாங்கி கொடுத்து, மயிலாப்பூர் சிவகாமி பெத்தாட்சி ஆடிட்டோரியத்திற்கு அழைத்து சென்றேன். இந்த பெத்தாட்சி ஆடிட்டோரியத்தை கண்டுபிடிப்பது, வைக்கோலில் கோணி ஊசியை கண்டுபிடிப்பது போல இருந்தது. ஒரு ஆட்டோகாரருக்கும் தெரியவில்லை. ஒரு கார் ட்ரைவரிடம் கேட்டுக் கொண்டு போனேன். ஆடிட்டோரியத்தை அடைந்த பின் தான் தெரிந்தது, ஏன் என்று நாங்கள் மட்டும் தான் அனேகமாக நடந்து வந்திருப்போம் என்று நினைக்கிறேன். மிச்சம் அத்தனையும் கார்கள். பார்க்கிங் நிரம்பி வழிந்தது.

நிற்க. நான் ஏன் இந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்று சென்றேன்? ஒரு சுருக்கமான கொசுவர்த்திச் சுருள். ஆறாவது படிக்கையில் எல்லோருடைய வகுப்பில் இருந்தும், பள்ளியில் நடக்கும் கலாச்சார விழாவிற்காக நாடகம் போட வேண்டும் என்று கட்டளை. என் நண்பன் தான் க்ளாஸ் லீடர்.  ஒரு மொக்கை நாடகமாக “மாடர்ன் திருவிளையாடல்” என்று ஒரு ’ஸ்கிரிப்ட்’ (நோட் பண்ணுங்கப்பா) பேசப்பட்டது.  லீடர் நண்பன் தான் டைரக்டர். எனக்கு பூதகணம் வேடம் (நண்பனாடா நீ!! நற நற....). ஒரு வழியாக ரிகர்சல் முடித்து எங்கள் க்ளாஸ் டீச்சரிடம் நடித்துக் காட்ட, அவர் அமைதியாக சிரித்துக் கொண்டே இதையா போடப் போறீங்க என்று கேட்டார். ‘ஏற்கனவே நம்ம க்ளாஸூக்கு இன்ஸ்பெக்‌ஷன்ல கெட்ட பேரு, இதை போட்டு மானத்தை வாங்காதீங்க. எப்பிடியும் நீங்க சொதப்புவீங்கன்னு தெரியும், அதனால நானும் ஒரு நாடகம் ரெடியா வைச்சிருக்கேன்’ என்றார்.

 அது தான் ஆர்.கே நாராயணனின் ‘Swami Wants to be Beaten'. அந்த கதை ஒரு வித ஸ்பின் ஆஃப் தான். மூலப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, ஒரு புதிய சமகாலக் கதை உருவாக்கப்பட்டது. இது எனக்கு ஆர்.கே. நாராயணின் படைப்புகளை பல காலத்திற்கு பிறகு படித்த போது தான் தெரிந்தது. அதிலும் எனக்கு ரெண்டு டயலாக் பேசும் ஸ்வாமியின் க்ளாஸ்மேட் வேடம். ஸ்வாமியாக எனது வகுப்பு தோழி ஒருத்தி நடித்தாள். ரிகர்ஸல் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் நாடகம். அப்போது அவள் சொந்தகாரர் ஒருவருக்கு கல்யாணம், அன்று வர முடியாது என்றதால் வேறு யாராவது ஸ்வாமியாக நடிக்க வேண்டிய நிலை. எல்லாரிடமும், அவள் கேட்க அம்புட்டு பயலும் ஜகா வாங்கி விட்டனர். அவள் அகஸ்மாத்தாக என்னிடம் கேட்க, நானும் சரி என்று விட்டேன். ஏன்னா அந்த பொண்ணு மேல எனக்கு ஒரு கண்னு (பிஞ்சிலயே பழுத்தது). அதற்கு பின் தான் தெரிந்தது, எல்லாரும் ஜகா வாங்கிய காரணம். 20 நிமிட நாடகத்தில் எனக்கு மட்டும் நாலரை பக்க ஆங்கில  டயலாக் (வைசாங்களா ஆப்பு). இதில் முகத்தில் எக்ஸ்பிரஷன் வேறு காட்ட வேண்டும். எனக்கு வந்ததெல்லாம் ‘பே’ என்ற அரண்ட எக்ஸ்பிரஷன் தான். ஒவ்வோரு முறை ரிகர்சல் செய்யும் போதும், நான் எக்ஸ்பிரஸ்ன் காட்ட எனக்கு அம்மாவாக நடித்த வகுப்பு தோழி சிரித்து சிரித்து அவளுக்கு வயிறு புண்ணானது தான் மிச்சம். ஒரு வழியாக எங்கள் ‘மாடர்ன் மால்குடி டேஸ்’ அரங்கேற்றம் ஆனது. உண்மையை சொன்னால் என்னுடைய அரண்ட முகம், ஸ்வாமியின் ஒரிஜினல் எக்ஸ்பிரஷனுடன் ஒத்து போனதாக என்னுடைய வகுப்பாசிரியை தெரிவித்தார். அதை பின்னர் “மால்குடி டேஸ்” மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட போது தெரிந்து கொண்டேன். எங்கள் நாடகத்திற்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் எங்கள் ’நல்ல நேரம்’ , முதல் பரிசு வாங்கிய ’பிரம்மாண்ட’ தயாரிப்பான ‘அசோக சக்ரவர்த்தி’ தமிழ் நாடகத்தில் நிறைய பேர் நடித்ததால், இரண்டாம் பரிசையே தூக்கி விட்டார்கள். சோ, எனக்கு பிடித்த கதை கதை நாடகமாக்க பட்டதால் தான் பார்த்தே ஆக வேண்டும் என்று ஆவல் உண்டானது. இதை ஒரு வரியில சொல்லித் தொலைச்சிருக்கலாமே. அதுக்கு இத்தனை அனாத்தா.

சரி. பேக் டு த ஒரிஜினல் ஸ்டோரி. அந்த கூட்டத்தில் சத்தியமாக நானும், என் நண்பனும் தனித்து தெரிந்தோம். அத்தனையும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் கூட்டம். நண்பன் காதருகில் வந்து, “நீ எல்லாம் அமெரிக்க ரிட்டர்ன்னு வெளிய சொல்லிக்காத” என்றான். அதற்கு காரணம் என் ஆடை, ஒரு அழுக்கு ஜீன்ஸ், கப்படிக்கும் இரண்டு பாக்கெட் வைத்த காட்டன் சட்டை. கப்புக்கு காரணம் சத்தியமாக அக்டோபரில் அடித்த சென்னை வெயில். டியோ ஸ்ப்ரேயையும் தாண்டி அடித்தது. என்னால் சகித்து கொள்ள முடியாதது எதுவென்றால், ஒன்னுக்கும் ஆகாத ‘ஸப்வே’ வெஜிடபள் சாண்ட்விச்சை 120 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கே கொஞ்சம் குளறுபடி ஆகிக் கொண்டிருந்தது அங்கு. நாங்களோ ஆன் த ஸ்பாட்டில் வாங்கலாம் என்று வந்திருந்தோம். கிடைக்காது என்றே தோன்றியது. என் நண்பன் வெயிட்டாக ஒரு பிட்டை போட்டான், “சார்!! நாங்க எல்லாம் ஸ்டுடெண்ட்ஸ். காட்டாங்குளத்தூர்ல இருந்து இந்த ட்ராமாவை பாக்குறதுக்காக வந்தோம். இல்லைன்னா எப்படி சார்”. ஒரு முறை அந்த டிக்கெட் கொடுப்பவர் என்னையும், என் நண்பனையும் உற்று பார்த்தார். அவர் தான் அமைப்பாளர்களில் ஒருவர் போலும். “இருங்க தம்பி!! உங்களுக்கு கண்டிப்பாக தர்றேன்” என்றார். ஞாநி ஒருமுறை பேசிய போது ”இங்கிலீஷ் ட்ராமானா 500 ரூவா கொடுக்கக் கூட ரெடியா இருக்காங்க. அதே ஆளுங்க தமிழ் ட்ராமானா 50 ரூவா கூட தர மாட்டேன்றாங்க” என்றார். அது உண்மை தான் 1000 ரூபாய் டிக்கெட்கள் மிகச் சாதாரணமாக விற்று தீர்ந்திருந்தன. 100 ரூபாய்க்கு பின்னால் சீட்டில் தான் இடம் கிடைக்கும்.

ஒரு வழியாக அந்த நல்ல மனிதர், 200 ரூபாய்க்கு 2 டிக்கெட் கொடுக்க, இருப்பதிலேயே கடைசி இருக்கையில் அமர்ந்தோம்.  எங்கள் பக்கத்தில் ஒரு காதல் ஜோடி. பெண் புறா என் அருகில் அமர்ந்திருந்தது. சரி அது மேட்டர் அல்ல. கதைக்கு வருவோம். ஆர்.கே.நாராயணன் தான் உருவாக்கிய கற்பனை நகரான “மால்குடி”யின் முதல் படைப்பாக வெளிவந்த புத்தகம் தான் "Swami and Friends" (ஸ்வாமியும் நண்பர்களும்). 10 வயது ஸ்வாமியும், அவன் நண்பர்கள் எப்போதும் டீக்காக ஆடை உடுத்தும் ராஜம், மற்றும் கையில் கதை போன்ற ஒரு கம்பை வைத்து கொண்டு சுற்றும் மணி, ஆகியோரை வைத்து கற்பனையான சரயு நதியின் பிண்ணனியில் பிண்ணப்பட்ட கதை. ஸ்வாமி படிக்கும் ஆல்பர்ட் மிஷன் ஹை ஸ்கூல், மால்குடி ரயில் நிலையம், ஆனந்த பவன் ஹோட்டல் போன்ற விடயம் நிறைந்த கதை பிண்ணனிகள், ஸ்வாமியின் தந்தை, பாட்டி, ஸ்வாமியின் பள்ளி ஆசிரியர்கள் போன்ற சுவாரசியம் நிறைந்த கதை மாந்தர்கள், இவையெல்லாம் இணைந்து எழுத்தில் நிகழ்த்தபட்ட ரசவாதம் தான் “ஸ்வாமியும், நண்பர்களும்”. ஏற்கனவே தூர்தர்ஷனில் ஆர்.கே.லக்‌ஷ்மனின் அழகான மால்குடி கார்ட்டூன்களைத் தாங்கி வரும் டைட்டில்களுடன் ஒளிபரப்பான “மால்குடி டேஸ்”, அந்த ரசவாதத்தை என்னுள்ளும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நாடகம் எப்படி இருக்கிறது என்று அறிய ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். உண்மையைச் சொன்னால் எதிர்பார்த்தை விட மிக அருமையான நாடகமாக இருந்தது.

தூர்தரஷனில் ஒரு 15 எபிசோட்கள் வந்த “ஸ்வாமியும், நண்பர்களும்” நாடகத்தை வெறும் 90 நிமிடங்களில் நிகழ்த்தி காட்டி அசத்தி விட்டனர். மானஸி சுப்ரமணியம் எழுதிய நாடகமாக்கத்தை, அருணா கணேஷ் ராம் இயக்கி இருந்தார். ஸ்வாமியாக உஜ்வல் நாயர்,  ராஜமாக அஜய்குமார் ராமச்சந்திரன், மணியாக நடித்தவர் ஸ்யாம் சுந்தர். ஸ்யாம் சுந்தரின் உடல் மொழி அபாரம். எனக்கு பிடித்த ஆசிரியர் ஸாமுவேல் கதாபாத்திரத்தில் ஷங்கர் சுந்தரம் (’ஆய்த எழுத்தில்’ சித்தார்த்தின் தந்தையாக வருவாரே. அவர் தான்), பி.சி.ராமகிருஷ்ணா, முகமது யூசுப் போன்றவர்கள் மற்ற ஆசிரியர்களாக நடித்து இருந்தனர். நன்றாக போய்க் கொண்டிருந்த நாடகத்தின் ஒரு காட்சியில், மால்குடி வழியாக நடக்கும் சுதந்திர போராட்ட ஊர்வலக் காட்சியில், தேவையில்லாமல் பாரதியின் ‘வந்தேமாதரம்’ கவியை உள்நுழைத்து இருந்தனர். பாரதியின் கவிதையைப் பற்றி அல்ல பிரச்சனை. ஆனால் அது உபயோகப் படுத்தப்பட்ட இடம் நெருடலாகவே இருந்தது. அந்த கவிதையை அவர்கள் பாடிய போது தான் என்னருகில் இருந்து மெதுவாக குறட்டை சத்தம் வந்தது. நண்பன் நன்றாக தூங்கி விட்டிருந்தான்.

நாடகத்தில் இருந்து ஒரு காட்சி. நன்றி: தி ஹிந்து
மற்றபடி மூலப் பிரதியான புத்தகத்தில் இருந்து காட்சிகள் திறமையாக எடுத்தாளப் பட்டு, சரியான முறையில் சுருக்கப்பட்டு தந்து இருந்தனர். வெறும் கஞ்சிரா இசை தான் பிண்ணனி. இசை அமைத்தவர் சுந்தர் குமார். நாடகம் முடிந்த பின் அமைப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா சொல்லிய போது தான் தெரிந்தது, அன்று ஆர்.கே.நாராயணனின் 104வது பிறந்த தினம் என்று. உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாக கழிந்த மாலைப்பொழுதில் நண்பன் சோர்வைடந்து தூங்கி விட்டானே என்று தான் வருத்தம். நாடகம் முடிந்து வெளியில் வந்து கொண்டிருந்த போது, என் பக்கத்தில் இருந்த பெண் புறா, ஆண் புறாவிடம் என்னைப்  பற்றி “That guy stinks like fish" என்று என் காதுபடக் கூறினாள். அதற்கு அவன், "Ya actually he did me a favor. Or else you would have never leaned on me so close" என்றான். அவள் அவனை செல்லமாக குத்தினாள். ஏதோ என்னால முடிஞ்சது என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டு நண்பனுடன் நகர்ந்தேன்...

12 comments:

கனவுகளின் காதலன் said...

ஜாலியான நடையில் உங்கள் அனுபவங்களை வரிகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள். சிறப்பான பகிர்வு நண்பரே.

Raju said...

அட..!
முதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள் பாஸ்.

கே.ஆர்.ஆர் பத்தி படிச்சுருக்கேன். அவரை பேட்டி எடுத்த அனுபவத்தைப் பத்திகற்றதும் பெற்றதும்ல சுஜாதா எழுதிருப்பார்.

இந்த பதிவு நடையும் நல்லாருக்கு. மெர்சில்,தாக்கட்டின்னு..!

Baski.. said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..

nice post

குலவுசனப்பிரியன் said...

நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறீர்கள். மன்மதராசா போன்ற பாடலுக்கு நடனம் ஆடச்சொல்லும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

விக்னேஷ்வரி said...

நல்ல சுவாரசிய நடை. எனக்கும் மால்குடி டேஸ் ரொம்பப் பிடிக்கும். சி.டி. தொகுப்பிலிருந்து அடிக்கடி பார்த்து மகிழ்வதுண்டு. ஆனால் நேரில் நாடகம் பார்க்கும் பாக்கியம் இன்னும் அமையவில்லை.

Prasanna Rajan said...

நன்றி கனவுகளின் காதலரே...

@ ராஜூ

நன்றி பாஸ்...

@ பாஸ்கி

நன்றி

@ குலவுசனப்பிரியன்

நான் படித்த பள்ளியில் நாங்கள் இருந்த வரை நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. பிற்பாடு பள்ளி முதல்வர் மாறிய பின் ‘அப்படி போடு’ பாட்டிற்கெல்லாம் டான்ஸ் ஆட வைக்கப் பட்டனர். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

@ விக்னேஷ்வரி

நன்றி...

பாலா said...

வாழ்த்துகள் பிரசன்னா...!! :) :)

Prasanna Rajan said...

நன்றி பாலா. ஒரு வழியா இந்த பக்கம் வந்தீங்களே!! என்ன எக்கசக்க வேலையா? எதுனாச்சும் போஸ்ட் போடுங்க பாஸ்...

துளசி கோபால் said...

அட! நேத்துதான் மால்குடி போனப்போது ஸ்வாமியையும் நண்பர்களையும் நினைத்தேன்.

பாரதி பரணி said...

Congrats for "The star of the week"

ரசிக்கத்தக்க தொகுப்பை கொடுத்துள்ளீர்கள் பிரசன்னா.....நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டதிற்கு அர்த்தம் சேர்க்கிறீர்கள்...என் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்...

Prasanna Rajan said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி உடுக்கை...

nakkeeran said...

Edumadereyana drama kasu koduthu parka nenaithalum mudeyathu ungal poniyathial nadagam partha thirupthy nadpudan nakkeeran

Share