Tuesday, April 6, 2010

கி.ராவுடன் 'கேணி’யில் நடந்த சந்திப்பு

அது ஆச்சு ஆறு மாசம். ஆனாலும் என்னைக் கவர்ந்த, நான் ஆதர்சித்த எழுத்தாளுமையைப் சந்தித்ததை  பதிவாகப் போடவில்லையென்றால் எப்படி என்று உள் மனம் உறுத்திக் கொண்டே இருந்தது. அதனாலேயே எழுதுகிறேன். 'கேணி' பற்றி நான் யு.எஸ்ஸில் இருந்த போது பதிவுலகம் வாயிலாகத் தான் தெரிந்து கொண்டேன்.அங்கு செல்ல முடியவில்லையே என்று கவலைபட்டுக் கொண்டு இருந்தேன். செப்டம்பரில் இந்தியா வர வேண்டிய சூழல் இருந்ததால், என் சொந்த ஊரான தேனிக்கு சென்று விட்டு ஒரு வாரம் நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை வந்தேன்.  கே. கே நகரில் இருக்கும் எனது நண்பரும், தேசிய விருது பெற்ற குறும்படமான 'கர்ண மோட்சத்தை' இயக்கியவருமான முரளி மனோகரை சந்திக்க சென்ற போது அடுத்த 'கேணி' சந்திப்பில் கி.ரா பேசுவதாக தெரிவித்தார். ஒரு நாள் முன்னதாகவே சென்னையில் இருந்த கிளம்ப வேண்டிய திட்டத்தை இதற்காக தள்ளி போட்டேன்.

கூடுவாஞ்சேரியில் இருந்த நண்பன் வீட்டில் இருந்து கிளம்பிய அந்த மாலையில், தனது தாத்தாவை காணச் செல்லும் சிறுவனின் குதூகலத்துடன் இருந்தேன். கே. கே நகரில் இருந்த முரளியின் அறையில் இருந்து நான், அவர் மற்றும் அவரின் நண்பரும் படத்தொகுப்பாளருமான நெடுநாயகத்துடன், முரளியின் வண்டியில் ட்ரிப்லஸ் அடித்தோம். அந்த ரம்மியமான சூழல் அந்த மாலை நேர சந்திப்புக்கு ஏதுவாகவே இருந்தது. ஞாநியுடன் பட்டு வேட்டி, அங்கவஸ்திரம் சரசரக்க, தனது துணைவியார் கணவதியுடன் வந்து இருக்கையில் அமர்ந்தார் கி.ரா என்ற கி. ராஜநாராயணன். கி. ராவைப் பற்றிய சம்பிரதாயமான அறிமுகம் ஒன்றை ஞாநி தந்துவிட்டு, கி. ராவை பேச அழைத்தார். அவர் பேச அழைத்தது நாட்டுப்புற கலைகள் பற்றி என்று தான் நினைக்கிறேன் (செலக்டிவ் அம்னீஷியா... வேற யாருக்கு எனக்குத்தேன்). ஆனால் கி. ரா அதோடு ஓட்டினார் போல் வேறு வேறு தலைப்புகளைப் பற்றியும் பேசினார். அவர் பெரும்பாலும் பேசிய தலைப்புகளையும், கருத்துகளையும், அவருடைய 'கி.ரா கட்டுரைகள்' தொகுப்பில் படித்து விட்டதால் தான் என்னவோ அவர் பேசியது நினைவில் இல்லை. இதுக்கு தான் முதலியே சொன்னேன், (என்னைச் சொன்னேன்) நிறைகுடமாகப் போகாதே என்று. அவர் பேசியனவை பெரும்பாலும் தாயாதிச் சண்டைகள், நாட்டுப்புற கதைகள் உருவாகும் விதம், அவரும் கழனியூரனும் தொகுத்த 'மறைவாய்ச் சொன்ன கதைகள்' மற்றும் முக்கியமாக அவர் 'கதவு' கதைப் பற்றியும் பேசினார்.
  
ஆனால் முக்கியமான பகுதி கேள்வி, பதில் பகுதி தான். நிறைய அன்பர்கள் கேள்வி கேட்க ஆர்வ மிகுதியால் முந்தினர். இது போன்ற பொது நிகழ்வுகளில் கேள்விகள் கேட்கும் போது குறைந்த பட்சம் ஒரு முன்னேற்பாடுடன் வந்து இருக்கலாம்.  ஒரு பெண் அன்பர், தன்னை சிறு வயதில் சொல்லப்பட்ட பேய் கதைகள் மிகவும் பாதித்து விட்டதாகவும் அதனால் கதை சொல்லுதலில் பேய் கதைகள் இருக்கக் கூடாது எனவும் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக வாதிட்டார். கி. ரா அவர்கள் அது கதை சொல்லலின் ஒரு பகுதி தான் என்றும், 'இல்லையின்னா இந்த பொண்டு பொடுசுகளை எப்பிடித் தான் சமாளிக்கிறது' என்றும் கூறினார். இந்த பதிலால் சமாதானம் ஆகாத பெண் அன்பர், திரும்ப திரும்ப தான் சொல்லியதையேக் கூறி வாதிட்டுக் கொண்டிருந்தார். நானும், முரளியும் காண்டாகி 'யக்கா உக்காருக்கா' என்று சவுண்டு விடவும் அருகில் இருந்த அன்பர்கள் சிரிக்க அந்த பெண் அன்பர் ஒரு முறை திரும்பி முறைத்து விட்டு, 'ஆத்து, ஆத்து' என ஆத்திக் கொண்டு இருந்தார். கடைசியில் ஞாநியும், பாஸ்கர் சக்தியும் அந்த பெண்ணை உட்கார சொல்லி கூறியதும் தான் உட்கார்ந்தார். 

நானும் பலமுறை கேள்வி கேட்க எழுந்தும் எனக்கு முன்னாடி இருந்து யாரேனும் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு ஐந்து முறை கடந்த பின், சரி இனி என்ன கேட்பது என நான் உட்கார்ந்து இருக்க, ஞாநி 'பிரசன்னா (ஆர்குட் பழக்கம்) நீங்க கேளுங்க' என்றார். நான் கேட்ட முதல் கேள்வி, "உங்களின் 'கிடை' நாவலை திரு. அம்ஷன் குமார் 'ஒருத்தி' என்ற திரைப்படமாக எடுத்தார். பல படைப்பாளிகள் தங்களது படைப்பை திரை வடிவமாக பார்க்கும் போது ஏமாற்றங்களையே சந்திக்கின்றனர். நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்". அதற்கு ஒரு முதிர்ந்த படைப்பாளி என்ற முறையில், "அது ஏற்கனவே அச்சுல வந்துருச்சு. அச்சுல எனக்கு திருப்தியா இருந்துச்சு. அதை அவர் எப்பிடி வேணுமினா உபயோகப் படுத்திக்கட்டும். ஏன்னா அந்த படம் அவரோட படைப்பு"  என்று நச்சென்று ஒரு பதிலைத் தந்தார். சந்தர்பத்தைப் பயன் படுத்திக் கொள்ள நினைத்த நான் உடனே மற்றொரு கேள்வியைக் கேட்டேன், "உங்களின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் சம்சாரிகள் தான். இன்றைய நிலையில் விவசாயம் பார்க்க ஆள் இல்லை, காட்டன் டவல் கம்பெனிகளும், ஏலக்காய் எஸ்டேட்களும்  விவசாய கூலி ஆட்களை கொத்திக் கொண்டு போகின்றன (தேனி மாவட்டத்தில் இப்படித் தான்). இப்படி நிலையிருக்க இன்றைய சம்சாரிகளின் நிலையை எப்படி பார்கிறீர்கள்" என்று கேட்டேன்.  அதற்கும் இரத்தின சுருக்கமாக, "இதற்க்கு ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது, ஒரு நாள் முழுவதும் பேச வேண்டிய தலைப்பு" என்று பதில் கூறினார்.

ஞாநி நான் கேட்ட கேள்வியை முன் வைத்து மேலும் ஒரு கேள்வியை கேட்டார். அந்த சந்திப்பில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், கி.ரா சொல்லிய கதை தான். நம்மிடையே எத்தனையோ கதைகள் இருக்க, ஹாரி பாட்டரை நம் குழந்தைகள் படித்து கொண்டு இருக்கின்றனவே என்ற கேள்விக்கு அவர் கூறிய கதை தான், பெருவிரல் குள்ளன் கதை. பெருவிரல் குள்ளன்  என்ற ஒருவன் இருந்தானாம். ஒரு முறை காட்டிற்கு புல்லறுக்க சென்ற ஒரு பாட்டியிடம், "ஏய் பாட்டி, என்னை வீட்டுக்கு கூட்டி போயேன்" என்றானாம். யாரடா கூப்பிடுகிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்த பாட்டியிடம், "இந்தா கீழ இருக்கேன் பாரு" என்றானாம். "பாட்டி எனக்கு பசிக்குது, வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் கொஞ்சம் சாப்பாடு போடேன்" என்றானாம்.  பெருவிரல் தண்டி தானே இருக்கான் இவன் என்ன சாப்பிட போறான் என்று நினைத்தாளாம் பாட்டி. பார்த்தால் அவன் சாப்பிடுகிறானாம் பத்து படி அரிசியை . சரின்னு பார்த்த பாட்டி இவனுக்கு சாப்பாடு போட வயல் வேலைக்கு போச்சாம். ஒரு நாள் மேலுக்கு முடியாத பாட்டியால வேலைக்கு போக முடியல. பார்த்த குள்ளன் "நான் வேலைக்கு போறேன் பாட்டி"ன்னு அத்தசோடு கதிர் அருவாளை தூக்கிட்டு போனானாம்.

அன்னைக்கு வயல்ல அறுப்பு. அங்க இருந்த பண்ணையார் இந்த பெருவிரல் தண்டி குள்ளன் என்னடா வேலை பாக்க போறாருன்னு நெனைச்சாராம். ஆனா அவன் பாக்கானாம் பத்து ஆளு வேலையை. வேலை முடிஞ்சவுடனே உனக்கு என்ன கூலி வேனுமிண்டு குள்ளன் கிட்ட கேட்டாராம் பண்ணையார். எனக்கு என்னோட ரெண்டு மூக்கு துவாரம் அளவுக்கு நெல் குடுத்தா போதும்னானாம். சரின்னு ஒரு ரெண்டு நெல்லை தூக்கி அந்த துவாரத்தில வச்சாராம் பண்ணையார். ஆனா அது குபுக்குன்னு உள்ள போயிருச்சாம். கொஞ்சம் கொஞ்சமா நெல்லை தூக்கி போட்டு பார்க்குறாரு. வேலைக்கு ஆகலை. அம்பாரி அம்பாரியா நெல்லை கொட்டுறாரு, ஒரு மூக்கு தான் நெறைஞ்சு இருக்கு. வாக்கு தவறாத நம்ம பண்ணையார் "அடுத்த மூக்குக்கு உள்ள நெல்லை அடுத்த போகத்துல தரேன்னு சொன்னாராம்". ஆனா மனசாட்சியுள்ள நம்ம குள்ளன் பண்ணையாருக்கு கொஞ்ச நெல்லை மூக்கை சீந்தி கொடுத்து, மிச்ச நெல்லை வூட்டுக்கு எடுத்துகிட்டு போனானாம். பாட்டியும், குள்ளனும் கொஞ்ச காலத்துக்கு நெல்லுச் சோறு பொங்கி சாப்பிட்டாங்க. 

நம்ம குள்ளனுக்கு ரொம்பவே சலிப்பு வந்திருச்சு, அதே சமயம் கல்யாண ஆசையும் வந்துரிச்சு. பாட்டிகிட்ட சொன்னானாம், "பாட்டி, நான் ராசாவோட பொண்ணை கட்டிக்கலாம்னு இருக்கேன்"னானாம். கொஞ்சம் மிரண்ட பாட்டி, "உன் இஷ்டப்படி செய் ராசா"ன்னு சொல்லி கட்டு சொத்தை கொடுத்து அனுப்புனாளாம். குள்ளன் போற வழியில ஒரு ஏரி இருந்துச்சாம். அம்பாரி நெல்லை உறிஞ்ச அதே மூக்குல ஏரியை மூக்குல உறிஞ்சுகிட்டனாம். போற வழியில, குள்ளன் ராசகுமாரிய கட்டிக்கப் போறத தெரிஞ்ச நரி கூட்டம் "நாங்களும் வரோம்"ன்னு சொல்ல குள்ளன் அதுங்கள அவன் எடது காதுல ஏத்திகிட்டானாம். அதே மாதிரி வரோம்னு சொன்ன எறும்பு கூட்டத்தை வலது காதுல ஏத்திகிட்டானாம். 

அரண்மனைக்கு வந்த குள்ளன் ராசாகிட்ட தான் வந்த விஷயத்தை சொல்ல ராசா கடுப்பாகிட்டாராம். "யாருடா அங்க. இந்த குள்ளனை சேவலை விட்டு கொத்த விடுங்கன்னராம்" ராசா. உடனே குள்ளன் எடது காதுல இருந்த நரி கூட்டத்தை எறக்கி விட்டானாம். அதுங்க இருந்த சேவலை எல்லாம் தொம்சம் பண்ணி சாப்பிட்டுருச்சு. கோவம் தலைக்கு ஏறுன ராசா "யானையை விட்டு இவனை மிதிக்க விடுங்கடே"ன்னாராம். குள்ளன் எறும்புங்க எல்லாத்தையும் எறக்கி விட, அதுங்க யானைங்களோட காதுல ஏறவும், யானைங்களுக்கு மதம் பிடிக்க அதுங்க அரண்மனையை தொம்சம் பண்ணிருச்சுங்க. "ஈட்டியை வைச்சு இவன கூறு போடுங்கடே"ன்னாராம் ராசா. உடனே குள்ளன் மூக்கை சீந்த, அவன் மூக்குல இருந்த ஏறி அரண்மனையை நெரப்பிடுச்சாம். யாருடா இவன் பெரிய ஜகதலப்ரதாபனா இருப்பான் போல இருக்கேன்னு பயந்த ராசா, தான் மகளை குள்ளனுக்கு கட்டி கொடுக்க சரின்னாராம். உடனே குள்ளன் ஒரு அழகான ராசகுமரானா மாறி, ராசகுமாரியை கல்யாணங் கட்டிகிட்டு, தனக்கு சோறு போட்ட பாட்டியையும், அரண்மனையில கூட்டி வைச்சு ராச்சியத்தை ஆண்டானாம்.

இப்படி தான் முடித்தார் எனதருமை 'கதைசொல்லி'. லஞ்சத்தை பற்றியும் ஒரு கதை சொன்னார். அதெல்லாம் எழுதுனா பதிவு எழவத்திரெண்டு மொழத்துக்கு போயிரும். இது போன்ற நிகழ்வுகள் நடப்பது தான் படைப்பாளிகளை வாசகனுக்கு அருகில் கொண்டு வரச் செய்கிறது. அதே சமயம், இந்த நிகழ்வை நடத்தும் ஞாநிக்கும், பாஸ்கர் சக்திக்கும் ஒரு வேண்டுகோள். இந்த நிகழ்வுகள் சரியான முறையில் ஆவணப் படுத்த வேண்டும். வீடியோ அல்லது ஆடியோ பதிவுகள் ஆக்கப் பெற வேண்டும். அதற்கு முயற்சி எடுப்பார்கள் என்று நம்புகிறேன். 

நிகழ்வு முடிந்ததும் அங்கு விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த தன்னுடைய புத்தகங்களில் கையெழுத்து இட்டு தந்தார் கரிசல் தாத்தா. நான் "கோபல்ல கிராமம்","கோபல்லபுரத்து மக்கள்" இரண்டு புத்தகங்களையும் வாங்கினேன். ஒன்றில் வெறும் கி. ரா என்று கையெழுத்து இட்டு கொடுக்க, "உங்கள் முழு பெயரையும் எழுதுங்களேன்" என்று கேட்டேன். முழு பேரா இதோ என்று அவர் எழுதிய அவரின் முழு பெயர் "ராயங்கல ஸ்ரீ கிருஷன ராஜ நாராயண பெருமாள் ராமனுஜம்". என்னுடன் இப்போதும் இருக்கும் பொக்கிஷம் அந்த கையெழுத்து... 

32 comments:

Unknown said...

ஆஹா நாந்தான் பஸ்ட்டா.
கி.ரா.எனக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர்
அன்புடன்
சந்துரு

ஸ்ரீமதன் said...

தேனி க்காரரா?வாங்க வாங்க .நமக்கும் தேனிதான்

//காட்டன் டவல் கம்பெனிகளும், ஏலக்காய் எஸ்டேட்களும் விவசாய கூலி ஆட்களை கொத்திக் கொண்டு போகின்றன (தேனி மாவட்டத்தில் இப்படித் தான்). இப்படி நிலையிருக்க இன்றைய சம்சாரிகளின் நிலையை எப்படி பார்கிறீர்கள்" //

நீங்க வேற விவசாய ஆட்கள் கிடைக்காம ஏலக்காய் விவசாயம் ரொம்பவே கஷ்டமா இருக்கு.இக்கரைக்கு அக்கரை பச்சை போல.

கனவுகளின் காதலன் said...

நல்ல பகிர்வு நண்பரே, குள்ளன் கதையை ரசித்துப் படித்தேன்.

geethappriyan said...

நண்பா
மிக அருமையான சந்திப்பு அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

துபாய் ராஜா said...

கரிசல் காட்டு கதைசொல்லி பற்றி அருமையான பகிர்வு.

நம்பி.பா. said...

எந்த வயசாயிருந்தா என்ன, நல்ல கதைன்னா நிச்சயமா நம்மை இழுத்து நிறுத்துது, குள்ளன் கதையும் நீங்க அதை எழுதினதும் நல்லா இருந்தது.

Prasanna Rajan said...

வருக தாமோதர் சந்துரு. நன்றி...

@ மதன்.

எதற்குமே ஆள் கிடைக்காததற்கு முக்கிய காரணம் கலைஞரின் கனவுத் திட்டமான “நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்”

@ கனவுகளின் காதலன்

நன்றி நண்பரே...

@ கார்த்திகேயன்

நன்றி கார்த்திகேயன்

@ துபாய்ராஜா

நன்றி நண்பரே...

@ நம்பி.பா

உண்மை தான் நம்பி. மிக்க நன்றி...

Mugilan said...

கி ரா எனக்கு மிக மிக பிடித்த எழுத்தாளர். தனது கோபல்ல கிராமத்து மக்கள் நாவலில், நமக்கு சுதந்திரம் கிடைத்த உண்மையான காரணத்தை அவர் விவரித்த விதம் மிக நுட்பமானது! அவர் சொல்லிய கதையை எழுதியதிற்கு மிக நன்றி! ரசித்து படித்தேன்!

Prasanna Rajan said...

வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றி முகிலன்...

சுரேகா.. said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

சுரேகா.. said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

Prasanna Rajan said...

நன்றி சுரேகா...

சென்ஷி said...

அருமையான பகிர்வு தலைவரே.. கிராவின் அந்த லஞ்சம் பற்றிய கதையையும் பிறிதொரு பதிவில் நட்சத்திர வாரத்திலேயே பகிரவும். அன்புக்கட்டளை! :)

மற்றபடி நீங்கள் கூறிய கேணி கூட்டம் எதிர்காலத்திற்காக ஆவணப்படுத்தல் குறித்த கருத்திற்கு நானும் உடன்படுகிறேன்.

ஹரிணி அம்மா said...

நல்ல பகிர்வு!!

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு பிரசன்னா.

வல்லிசிம்ஹன் said...

நாங்களும் வந்திருந்தோம். உங்களைத்தான் பார்க்கவில்லை.

Balakumar Vijayaraman said...

அழகான பகிர்வு.

Prasanna Rajan said...

நன்றி சென்ஷி... செம தூக்க கலக்கத்தில் எழுதிய பதிவு இது. அதனால் தான் அந்த லஞ்சம் பற்றிய கதையை எழுதவில்லை. கண்டிப்பாக எழுதுகிறேன்...

Prasanna Rajan said...

@ ஹரிணி அம்மா, செ.சரவணகுமார்

நன்றி

Prasanna Rajan said...

@ வல்லிசிம்ஹன்

அப்டிங்களா... நானே முதல் முறை அன்று தான் வந்தேன். வாழ்த்துக்களுக்கு நன்றி...

Prasanna Rajan said...

@ பாலகுமார்

நன்றி...

பழமைபேசி said...

வாழ்த்துகள் பிரசன்னா!

CS. Mohan Kumar said...

எனக்கும் அந்த குள்ளன் கதை தான் பிடித்திருந்தது. பகிர்வுக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

நல்ல பகிர்வு.. கேணிக்கு இந்த வாரம் எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் வருகிறார்.

Prasanna Rajan said...

நன்றி பழமைபேசி...

@ மோகன்குமார்

அப்ப என் பதிவு பிடிக்கலையா? கஷ்டபட்டு கண்ணு முழிச்சி டைப் பண்ணி பதிவு போட்டிருக்கேனே.அவ்வ்வ்...

நன்றி உழவன்...

Muruganandan M.K. said...

உங்கள் கி.ரா சந்திப்பு மிகவும் சுவார்ஸமாக இருந்தது. நானும் அவரது பல படைப்புகளை ரசித்துப் படித்திருக்கிறேன்.

era.murukan said...

கி.ராவை நீங்கள் சந்தித்தது பற்றி மகிழ்ச்சி. அவருக்குள்ளே இருக்கப்பட்ட கரிசல்காட்டு சமுசாரி எப்பவும் அவருடைய மனதை, எழுத்தை நிறைத்துக் கொண்டிருப்பார் - 50 வருடமாக வற்றாத கேணி. நான் உட்பட இப்போது எழுதுகிற எல்லோரும் ஏதோ விதத்தில் கி.ராவுக்குக் க்டன் பட்டிருக்கிறோம். எழுத்து மொழியை நெகிழ்ச்சியாக்கி இறுக்கம் தளர்த்தியதில் அவர் முன்னோடி.

www.eramurukan.in

Prasanna Rajan said...

நன்றி டாக்டர். முருகானந்தம்

@ இரா.முருகன்

உங்கள் எழுத்துக்களின் ரசிகன் நான். நீங்கள் வந்து என் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டது உண்மையிலேயே எனக்கு மிகப் பெருமை. நன்றி...

ஜீவி said...

கி.ரா. தமது அருமை நண்பர் கு.அழகிரிசாமி குறித்து குறிப்பிட
வாய்ப்பு ஏதும் அமைந்ததா?

Prasanna Rajan said...

கு.அழகிரிசாமியைப் பற்றி சொல்லாமல் விடுவாரா கி.ரா. ஆனால், போகிற போக்கில் அவரைப் பற்றி சொன்னார். அவர்கள் இருவருக்குமான நட்பு தான், அவர்கள் எழுதிய கடித இலக்கியத்தில் பிரசுரிக்க பட்டுள்ளதே...

Unknown said...

கிராவைப் பற்றி தேடிக்கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய பதிவிற்கு வர நேர்ந்தது பிரசன்னா. நீண்ட நாட்களுக்கு முன்பு நானும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறேன். அனைத்தையும் ஞாபகப் படுத்தும்படியாக உங்களுடைய பதிவு இருக்கிறது.

Prasanna Rajan said...

நன்றி கிருஷ்ண பிரபு...

Share