Thursday, July 23, 2009

ஏன் தமிழ் சினிமா இன்னும் உலக இரசிகர்களை சென்று அடையவில்லை?


ஒரு அமெரிக்க நண்பருடன் உரையாடிக் கொண்டு இருந்த போது, சினிமாவைப் பற்றி பேச்சு திரும்பியது. அவர் தான் சமீபத்தில் பார்த்த ஒரு ஹிந்தி திரைப்படத்தைப் பற்றி கூறினார். அது இர்ஃபான் கான் நடித்து 2001ல் வெளியான The Warrior என்னும் திரைப்படம். அதை விட இன்னொரு ஆச்சர்யம், அவர் ‘ஹே ராம்’ படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசியது. எப்படி இந்த படங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தது என்று கேட்டேன். அவர் சாதாரணமாக IMDB இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.

IMDB(Internet Movie Data Base) பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். அமேஸான்(Amazon) குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்த தளம். என்ன இருக்கிறது இங்கு? முதல் மெளனப்படம் ஆரம்பித்து சென்ற வாரம் வெளியான ஆங்கிலப் படங்கள், உலகப் படங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு நான் நேற்று பார்த்த ‘Public Enemies' படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் நான் அறிய விரும்பினால், இந்த தளத்தில் தேடினால் உங்களுக்கு தகவல் மழை பொழியும். அதன் இயக்குனர் மைக்கேல் மேனில் ஆரம்பித்து படத்தின் புரொடக்‌ஷன் பாய் வரை அனைவரைப் பற்றிய தகவல்களும் இருக்கும். நிற்க. சரி யார் இந்த தகவல்களை சேர்க்கின்றனர். மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், ஃபாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவு தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.

மற்ற சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்த படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் இணைய தள முகவரி தரலாம், அல்லது படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியான இணைய இதழ்களின் லிங்குகளைத் தரலாம். பல ஹிந்தி படங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளடங்கியுள்ளன. பிரபல ஹிந்தி பட நிறுவனங்களான ஈரோஸ், யு.டி.வி, யாஷ்ராஜ் பிக்சர்ஸ், இந்த இணையதளத்தின் முக்கியத்துவம் அறிந்து தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்கின்றன.

சரி. இதற்கும் தமிழ் சினிமா உலக ரசிகர்களை சென்றடைவதற்கும் என்ன சம்பந்தம்? இந்நேரம் அதை ஊகித்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி தான்( ஹிஹி). சர்வதேச சந்தைப் படுத்துதலை இந்த தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் டி.வி.டி விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது. டி.வி.டி வாங்க முடியவில்லையா? பரவாயில்லை. டி.வி.டி வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன. குறைந்த பட்சம், டாரண்டுகளின் மூலம் டி.வி.டி ரிப்புகளாவது தரவிறக்கப் படுவதற்கு படத்தின் ரேட்டிங்குகள் உபயோகப் படுகின்றன.

கடந்த ஆண்டின் மிகச் சிறந்த படமான ’சுப்ரமணியாபுரம்’ பற்றிய தகவல்களை இந்த தளத்தில் தேடினால் காணவில்லை. இந்த படத்தைப் பற்றிய தகவல்களை தரவேற்ற முடிந்த மட்டும் ரசிகர்களாகிய நாம் தாம் முயல வேண்டும். தமிழின் மிகப் பெரிய திரைப்பட நிறுவனங்கள், தங்கள் படங்களை இந்த தளம் மூலம் சந்தைப் படுத்தலாம். ’டாக்ஸி ட்ரைவர்’, ‘ரேஜிங் புல்’ போன்ற படங்களை இயக்கிய மார்ட்டின் ஸ்கார்ஸிஸ், ’இண்டெர்னல் அஃபயர்ஸ்’ என்ற ஹாங்காங் திரைப்ப்டத்தை ரீமேக் செய்து தான் ‘ தி டிபார்டட்’ படத்தை இயக்கினார். இவர்களுக்கு இந்த படத்தைப் பற்றி தெரிய வந்தது IMDB மற்றும் ஆசிய தயாரிப்பார்களின் சந்தைப் படுத்தும் முறைகள்.

தற்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ‘ஒல்டு பாய்’ என்ற கொரிய திரைப்படத்தை வில் ஸ்மித்தை வைத்து ரீமேக் செய்யப் போகிறார். இந்த படங்களைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தது எவ்வாறு? இந்த தளங்கள் மற்றும் உலகத் திரைப்பட விழாக்கள் மூலமாக தான். நம்மிடையே எத்தனை தரமான படங்கள் உள்ளன. ஆனால், அவை வெளியில் தெரிய வேண்டாமா? உதாரணத்திற்கு ‘இராம்’ ஒரு மிகச் சிறந்த த்ரில்லர். இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப் பட்டால் எவ்வாறு இருக்கும். இது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் சமன்பாட்டைக் கலைத்த ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்றவை உலக இரசிகர்களை சென்றடைவது எப்போது?

இன்றளவும் ஒரு வெள்ளைக்காரரிடம் இந்திய சினிமாவைப் பற்றி கேட்டீர்களனால், ”உங்கள் திரைப்படங்கள் மிக அழகாக உள்ளன. பாடல்கள், இசை அற்புதம். அப்புறம் ஏன் உங்களது கதாநாயகர்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா, பறந்து பறந்து சண்டை போடுகிறார்கள்? அப்புறம் ஏன் உங்கள் படங்கள் ஏன் மிக நீளமாக உள்ளன” என்று கேட்கிறார். அவர்கள் கொண்ட பொதுப் புத்தியின் வெளிப்பாடு தான் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் அமெரிக்காவில் குவித்த வசூல் மழை.

மணிரத்னம் எப்போதோ உலகத் தரத்தை எட்டி விட்டார். என்ன தான் நாம் ‘காட்ஃபாதரை’ காப்பியடித்து விட்டார் என்று புலம்பினாலும் ‘டைம்’ நாளிதழ் கடந்த நூற்றாண்டின் சிறந்த படமாக ‘நாயகனை’ பட்டியலிட்டு விட்டது. இதே போல் மற்ற தமிழ் படங்கள் பட்டியலிடப் படுவது எப்போது? நான் இறுதியாக சொல்ல வருவது ஒன்று தான். 75 ஆண்டுகள் நிறைவடைந்த நம் தமிழ் படவுலகின் பெருமையை, உலக இரசிகர்களுக்கு சென்றடைய நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம். IMDB போன்ற இணைய தளங்களில் நமது தமிழ் திரைப்படங்களைப் பற்றி பதிவு செய்வோம்.

பி.கு: இங்கு பதிவுலகில் நிறைய இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள் இருக்கிறீர்கள். குறைந்த பட்சம் இந்த தகவல்களை தமிழ்த் தயாரிப்பாளர்கள் வசம் எடுத்துச் சொல்வீர்களனால் அதுவே இந்த பதிவின் வெற்றியாகக் கருதுவேன்.

17 comments:

சரவணகுமரன் said...

நல்ல பதிவு

Cable சங்கர் said...

நல்ல பதிவு நண்பரே..

Prasanna Rajan said...

மிக்க நன்றி சரவணகுமரன்...

Prasanna Rajan said...

மிக்க நன்றி கேபிள் சங்கர். பதிவுலக ஜாம்பவான்கள் எல்லாம் என் பதிவைப் படிக்கிறார்களா? ஒகே ஒகே...

ஜீவா ஓவியக்கூடம் said...

இங்கு படத்தின் டைட்டிலில் கூட உதவியாளர்கள் பெயர் வருவது பெரும் போராட்டமாக இருக்கிறது. இப்போது படித்த இளைஞர்களின் காலம். IMDB சரியாக உபயோக படுத்தப்படும் என்று நம்புவோம்.

Prasanna Rajan said...

நன்கு சொன்னீர்கள் ஜீவா சார். இருப்பினும் IMDBயிலும் சில குறைகள் உண்டு. காரணம் அதனை நடத்துவது அமேசான்.

geethappriyan said...

well said prasanna.
i use to visit imdb often.
for my evry download of english cinemas
and to the goofs of the movies.
trivia,
and diolouges.
actor details.
and year,other credits.
we can get anyting in imdb anything.i love imdb.
i try to upload some tamil movies,
i did for some movies.
drawback we have to provide factual reports of the movie.
good show.
my tamil writer not functioned ,sorry for writing in english.

Anonymous said...

இதையெல்லாம் விட சரக்கு இல்லை என்பதே உண்மை. சமீபத்தில் வந்த படங்களில், உண்மையாக உலக தரத்தில் இருக்கும் படங்கள் என்று எத்தனை படங்களை நம்மால் சொல்லமுடியும்?

--anvarsha

Prasanna Rajan said...

மிக்க நன்றி கார்த்திகேயன். அட தமிழ் ரைட்டர் வேலை செய்யலைனா என்னாங்க. கமெண்ட் போடுறதே பெரிய விஷயம். படத்திற்கான தகவல்களை தருவதற்குள் தான் மண்டை காய்ந்து விடுகிறது. அதை தவிர்த்து நீங்கள் சுலபமாக படங்களின் மற்ற தகவல்களை உள்ளீடு செய்வது தான் அதில் உள்ள வசதி.

Prasanna Rajan said...

@ அன்வர் ஷா

உண்மை தான். நம் சினிமாவில் வெளியாகும் மொக்கைப் படங்களில் தரம் சுத்தமாக இல்லை தான். அதுவும் இந்த ஆண்டு ஆரம்பித்து எண்ணி நான்கு, ஐந்து படங்கள் மட்டுமே ஹிட் ஆகியிருக்கின்றன.ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் தரம் இல்லையென்று புலம்பிக் கொண்டு இருக்கப் போகிறோம். ஏன் முடிந்தால் நீங்களே ஒரு நல்ல படைப்பைத் தாருங்களேன்.

நம்மிடையே மிகச் சிறப்பான, உலகத் தரமுள்ள படைப்புகள் உள்ளன. அவற்றை வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தான் சொல்கிறேன். அதற்கான ஒரு சிறு முயற்சி தான் இந்த கட்டுரை.

butterfly Surya said...

நல்ல பதிவு பிரசன்னா.

தமிழ் சினிமாக்கள் இன்னு செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. பாழாய் போன குத்து பாட்டும் ஒரு பாடலுக்காக ஸ்விஸ் போவது முதலில் நின்று தொலைக்கட்டும்.

அதற்கு ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தாலும் மீண்டும் அதிலேயே குதிக்க தான் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள்.


பதிவிற்கு வாழ்த்துகள்.

தொடரவும்.

Prakash said...

பதிவுலக ஜாம்பவான் பிரசன்னாவிற்கு வாழ்த்துகள் ( ஐயோ நங்களும் ரௌடியா பார்ம் ஆயிட்டேங்களா )

Prasanna Rajan said...

மிக்க நன்றி வண்ணத்துப் பூச்சியாரே. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

Prasanna Rajan said...

அய்யா பிரகாஷீ!! எதுனா ப்ரச்சனை இருந்தா முன்ன பின்ன பேசி தீர்த்துப்போம். இப்பிடி எல்லாம் பப்ளிக்ல வாராதீங்கப்பு...

Anonymous said...

நான் ஒரு பார்வையாளன். அவ்வளவே. சினிமா எடுக்கும் அறிவோ, ஆர்வமோ இல்லாதவன்.
ஆனால், தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்ற ஆதங்கம் உள்ளவன். சினிமா உண்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி எத்தனை சினிமா வருகிறது? சமீபத்தில் வந்த பசங்க, வெண்ணிலா கபடி குழு, சுப்ரமணியபுரம் தவிர்த்து எதுவும் நினைவிற்கு வரவில்லை. தவறு எங்கே உள்ளது?

--anvarsha

Azhagan said...

First, Tamil films must be made with "good" stories, come out of the "LOVE" subjects, our directors should concentrate on other aspects of life apart from the bed room. For the past 60 odd years, the directors are adamant in staying in the bedroom!. WIll they ever make a film to induce the thinking process in our youth? DOUBTFUL. Will they really concentrate on stories instead of trying to showing the heroines "almost" naked? VERYMUCH DOUBTFUL.
Sorry to say, Tamil industry has a looooooong way to go before we can consider them at world class.

ம.தி.சுதா said...

அருமையான ஒரு சினி பார்வை யாரும் தொடாத ஒரு ஸ்பரிசம் வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Share