Wednesday, July 1, 2009

திரு.நம்மாழ்வார் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள்


அது 2001ஆம் ஆண்டு.உயிரி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வக் கோளாறில் அலைந்து கொண்டிருந்த +1 மாணவன் நான். இணையம் எல்லாம் என் ஊரில் அந்த அளவுக்கு வரலை. பேரு தான் மாவட்டத் தலைநகரம் (தேனி). என்னோட ஆ.கோவிற்கு தீனிப் போட்டது மாவட்டத் தலைமை நூலகம். அதுக்கு கூட, நான் இருந்த பழனிசெட்டிபட்டியிலிருந்து 4 கீ.மி சைக்கிள் மிதிச்சு போகனும். கலைக்கதிர், நேஷனல் ஜியாக்ரபிக், ந்யூ சயிண்டிஸ்ட் எல்லாம் என்னோட பயோடெக்னாலஜி ஆர்வ அரிப்புக்கு தீனி போட்டன. அப்போது தான் குமுதம் இதழில் ஒரு தொடர் வந்தது. யாரோ நம்மாழ்வார் என்பவர் எழுதியிருந்தார். நம் நாட்டில் இனிமேல் ஏன் பருவ மழை பெய்யாது, என்பதை அவர் விவரித்து எழுதியிருந்த போது, எனக்கு ஏதோ திகில் கதை படித்த உணர்வு. பத்தாதிற்கு மரபணு மாற்றியமைக்கப்பட்ட தாவரங்களால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விலாவாரியாக புட்டு புட்டு வைத்து இருந்தார்.

என்னடா இது தேனிக்காரனுக்கு வந்த சோதனை, என்று அவர் தொடர் முழுமையும் படிக்க ஆரம்பித்தேன். ஏன் நமது நாட்டில் இன்னொரு பசுமை புரட்சி வரவில்லை என்பது உள்ளிட்ட பலவற்றை விவரித்து இருந்தார். மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது, அவர் ஒரு வேளாண் பட்டதாரி என்பதும், பசுமைப் புரட்சி கொண்டு வந்த உரக்கலப்பு விவசாயத்தில் நம்பிக்கை இழந்து, இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபாடு கொண்டதையும் வேளாண் பட்டதாரியான என் தந்தையிடம் இருந்து அறிந்து கொண்டேன். அதற்காக தான் பணிபுரிந்து வந்த அரசாங்க வேலையை உதறி விட்டு, இயற்கை வழி விவசாயத்திற்கு என தனியொரு அமைப்பான ‘களக்காட்டி’ல் இணைந்தார்.

இது வரை பல என்.ஜீ.ஓ அமைப்புகளை நிறுவியுள்ளார். மேலும் சமீபத்தில் சுவாமி ‘ஜக்கி வாசுதேவுடன்’ இணைந்து ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதிலும் துணை புரிந்து இருக்கிறார். ’பஞ்சகவ்யம்’ - பசுவின் படைப்புகளான பால், தயிர், மோர், சானம், கோமியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அருமையான உரம். பஞ்சகவ்யத்தின் உபயோகத்தை தான் செல்லும் விவசாயக் கூட்டங்களில் எல்லாம் வலியுறுத்தி வருகிறார் திரு.நம்மாழ்வார். இவர் கூறிய படி பஞ்சகவ்யத்தை எனது மாமா இன்று வரை தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயரிட்டு மிகச் சிறப்பாக செயல் பட்டு வருகிறார். இதில் மேலும் ஒரு அழகு என்னவென்றால், பஞ்சகவ்யத்தை தொடர்ந்து பயன் படுத்தியதால் அவரின் நிலத்திற்கு இரசாயண கலப்பு உரம் உபயோகிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது.

மத்தியில் உள்ள வேளாண் அமைச்சர்கள், பூச்சி மருந்து நிறுவனங்களின் நைச்சிய பேச்சிலும், பணத்திலும் நம்பி, இன்னொரு பசுமைப் புரட்சி வேண்டும் என்று பிதற்றி வருகின்றனர். இன்னொரு பசுமைப் புரட்சி வந்தால் விவசாயியின் விளைச்சல் பணம் பூச்சி மருந்து வாங்கவே பத்தாது. விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டு வீட்டு மனைகள் உருவெடுக்கும் இந்த நிலையில், அரசு இவரைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளை பயன் படுத்தி குறைந்த பட்சம் இயற்கை உரங்களின் மகத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கலாம். ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் கால் பதிந்து இருக்க, சிறு விவசாயியின் நிலைமையை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. நம்மாழ்வரைப் போன்றவர்கள் தான் அவர்களுக்கு சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.

இயற்கையைப் பற்றியும், நாம் இப்போது இயற்கையை எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளார்:

இந்த வீடியோவைப் பதிவேற்றிய நண்பர் தீனதயாளன் சிவத்திற்கும், புகைப்படம் தந்து உதவிய நண்பர் கடற்கரய் அவர்களுக்கும் மிக்க நன்றி. கடற்கரய் அவர்கள் நம்மாழ்வரிடம் ஒரு வருடம் முன்பு ’தீராநதி’க்காக எடுத்த பேட்டிக்கு இங்கே செல்லவும்.

நான் நான்கு வருடம் திருச்சியில் படித்தாலும், இவர் திருவானைக்காவலில் தான் இருக்கிறார் என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இன்றளவும் நான் சந்தித்து
உரையாட விரும்பும் மிகச் சிறந்த தமிழ் ஆளுமைகளில் ஒருவர் திரு.நம்மாழ்வார்.

2 comments:

butterfly Surya said...

அருமையான பகிர்விற்கு நன்றி.

குலவுசனப்பிரியன் said...

நல்ல இடுகை. நீங்கள் இதுபோல மேலும் பல துறை சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.

Share