
இன்னாடா இது? தலைப்புலியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குதேனு, கொஞ்சம் உஷாராகத் தான் தியேட்டருக்கு போனேன். படம் போட்ட பிறகு தான் தெரிந்தது, அதற்கான காரணம். வரலாறு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைத்தது இந்த படம். முக்கியமாக ஒன்னு. நீங்கள் ஒரு Pulp Fiction அல்லது Reservoir Dogs - ஐ இந்த படத்தில் எதிர் பார்க்க முடியாது. அதனால் தான் என்னவோ, பெரும்பாலான விமர்சகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. இந்த படத்திற்கும், இரண்டாம் உலகப் போர் வரலாற்றுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லை. ஒரு வரலாற்று திரைப்படத்தை எதிர்பார்த்து சென்றீர்கள் ஆனால், தயவு செய்து இந்த படம் போட்ட த்யேட்டர் பக்கம் கூட போக வேண்டாம்.
சரி கதை என்ன?
கதை ரெம்ப, ரெம்ப சின்ன கதைங்கோ. மெயின் திரைக்கதை சரடு என்னான்னா, இப்படி வரலாற்றில் நடந்தால் எப்படி இருக்கும் என்பது தான். ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டு இருக்கும் ப்ரான்ஸில், யூத அமெரிக்க இராணுவ வீரர்கள் அடங்கிய ஒரு குழு, நாஜிக்களை கொன்று குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றனர். அதுவும் சாதாரணமாக கொல்வதல்ல அவர்களின் குறிக்கோள். ஒவ்வொரு நாஜியையும், அவர்களது மேல்தலையை(முடியோடு சேர்ந்த மேல் தலை. புரியாவிடின் கில்பில் வால்யூம் 1ஐப் பார்க்கவும்) கொய்து எடுக்க வேண்டும். அவர்களின் தலைவன் லெஃப்டினண்ட் ஆல்டோ ரைன் (Brad Pitt). அவனுக்கு துணையாக ‘The Bear Jew' என்றழைக்கப்டும் சார்ஜண்ட் டான்னி (Eli Roth) மற்றும் ஒரு எட்டு வீரர்கள். இவர்களுக்கு இடையில் இரத்த வெறி அடங்காது, ப்ரான்ஸிலும் யூதர்களை கொன்று குவிக்கும் கலோனல். ஹான்ஸ் லாண்டா (Christoph Waltz). திரைப்படத்தின் ஆரம்பத்தில், லாண்டாவால் தனது குடும்பமே கொலை செய்யப்பட்டு, அவனை பழி வாங்கத் துடிக்கும் ஷோசன்னா (Melanie Laurent). ஜெர்மனிய நடிகையாகவும், அமெரிக்க உளவாளியாகவும் செயல்படும் ப்ரிட்ஜெட் (Diane Kruger - செம பிகரு மாமே). இப்படி ஒரு சிக்கலான கதாப்பாத்திர அமைப்புகளுக்கிடையே பயணிக்கிறது திரைக்கதை.
படத்தின் டைட்டில் காட்சிகள் 70களில் வெளியான பல இரண்டாம் தர, வெஸ்டர்ன் மற்றும் ஆக்ஸன் திரைப்படங்களை நினைவூட்டுகிறது. அதற்கு வலு சேர்ப்பது போல, படத்தின் ஆரம்ப காட்சி ஒரு ஸ்பாகெட்டி வெஸ்டர்னின் ஆரம்பத்தையே நினைவூட்டுகிறது. முக்கியமாக படத்தின் துவக்க ப்ரேம், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘Unforgiven'ஐ நினைவு படுத்த தவறவில்லை. ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் கதை (இயக்குனர் முத்திரை :D), இரண்டரை மணி நேரமாக நீண்டு இருந்தாலும் போனதே தெரியவில்லை. அப்படி ஒரு வேகம். இத்தனைக்கும், படத்தின் நடுவில் சட்டென்று ஒரு ட்ராமா வகைத் திரைப்படத்தைப் பார்க்கிறோமோ என்று தோன்றினாலும், சட்டென்று ஆக்ஷன் ட்ராக்கில் மாறி பயணிக்கிறது. 'Valkyrie' என்ற ஒரு Tom Cruise படம் ஒன்றைப் பார்த்தேன். இதுவும் ஹிட்லரை கொல்லும் முயற்சி பற்றிய படம் தான். ஆனாலும் படம் ஒரு அரை மணி நேரம் கூட பார்க்க முடியவில்லை. அதுக்கெல்லாம் இந்த படம் ஆயிரம் மடங்கு தேவலாம்.
என்ன புதுசு?
என்ன?? இது வரைக்கும் க்வண்டின் டொரண்டினோ படம் பார்த்தில்லையா நீங்க. அனேகமாக பார்க்காம இருந்திருக்க மாட்டீங்க. படத்துல எல்லாமே பழசு தான். ஆனாலும் புதுசு. (இன்னா சொல்ல வர்ற? ஆட்டோ அனுப்பனுமா?). அப்புறம் ஸ்டைல் மாமே. சும்மா சூப்பர் ஸ்டார் மாதிரி நட்சித்திரங்கள், போரடிக்காம குத்து வசனம் (பஞ்ச் டயலாக்) பேசுறாங்க. உங்களால் வன்முறைக் காட்சிகளை சகிக்க முடியவில்லை எனில் இந்த படத்தைப் பார்க்க வேண்டாம். கில் பில் அளவிற்கு இதில் வன்முறை இல்லை எனினும், ஒரு சில காட்சிகள் உவ்வே ரகம் தான். ஒரு காட்சியில் குண்டடி பட்டு கிடக்கும் டயான் க்ருகரை விசாரிப்பதற்காக ப்ராட் பிட், அந்த குண்டடி பட்ட இடத்திலேயே, விரலை வைத்து நோண்டுவார். பத்தாதற்கு இதில் க்ளோசப் வேறு. இந்த காட்சியின் போது த்யேட்டரை விட்டு ஒரு நாலு பேரு எழுந்து போனாங்கோ.
”The Dirty Dozen" என்ற படத்தை பெரும்பாலும் தழுவியே இந்த படத்தை எடுத்து இருக்கிறார் குவெண்டின். பல இரண்டாம் உலகப் போர் திரைப்படங்களையும் நினைவு படுத்த தவறவில்லை. ப்ராட் பிட் நன்றாகவே காமெடியிலும் கலக்கியிருக்கிறார். டென்னஸி ஆக்ஸண்டில் அவர் இத்தாலியன் பேசும் போது அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. ஆனாலும், படத்தில் ப்ராட் பிட்டை நடிப்பில் தூக்கி சாப்பிடுவது படத்தின் வில்லன் கிறிஸ்டோப் வால்ட்ஸ் தான். மனிதர் ஆரம்பத்தில் பார்க்க காமெடியன் போல் இருந்தாலும், படத்தின் ஆரம்ப அத்தியாயத்தில், ப்ரெஞ்சு விவசாயியை விசாரிக்கும் காட்சியில் மெதுவாக முதுகை சில்லிட வைக்கிறார். படத்தின் பிண்ணனி இசை பெரும்பாலும் Ennio Morricone இசையமைத்த வெஸ்டர்ன் படங்களில் இருந்தே எடுக்கப் பட்டுள்ளது. அதனால் தான் என்னவோ படம் முழுக்க ஒரு வெஸ்டர்ன் திரைப்படத்தைப் பார்ப்பது போல தோன்றியது.
படத்தில் சில நீளமான காட்சிகள். முக்கியமாக ஒரு பாரில் நடக்கும் உரையாடல் 20 நிமிடத்திற்கு மேல் நீள்கிறது. ஆனால் அதையும் சுவாரசியமாக எடுத்து சொல்ல குவெண்டினால் மட்டுமே முடியும். சீரியசான காட்சிகளில் எல்லாம் சிரிப்பு வருது. முக்கியமாக, Eli Roth ஜெர்மன் இராணுவ அதிகாரியை தனது பேஸ்பால் மட்டையால் அடித்து மூளையைப் பிளக்கும் போது, அரங்கம் ஒரு திகிலோடு சிரித்து கொண்டு தான் இருந்தது. அப்புறம் படத்தில் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரத்தை பற்றி சொல்ல மறந்து விட்டேன். அது செர்ஜண்ட் ஹ்யூகோ(Til Schweiger). நம்ம ஆளு இண்ட்ரொடக்ஷன் போட்டப்போ, த்யேட்டரில் சிரிக்காதவர்கள் யாருமே இல்லை.
பாஸ்டர்ட்கள் உயிரோடு விடும் ஒவ்வொரு நாஜிக்களின் நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னத்தை இடுவார்கள். அதே போல் படத்தின் இறுதியில் (அய்யய்யோ க்ளைமாக்ஸை சொல்லாத!!) ப்ராட் பிட், கிறிஸ்டோப் வால்ட்ஸ் நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னத்தை கத்தியால் கிழித்த பின் (கீறல் இல்லை, கிளித்தல். இதிலும் க்ளோசப்) ஆடியன்ஸிடம் “Thhis ees gonna bee my masterpiece" என்று சொல்வதோடு படம் முடியும். இது குவெண்டினின் மாஸ்டர் பீஸ் இல்லாவிடினும் ஒரு திருப்தியான, அலுக்காத மசாலாப் படம் பார்த்த பின் என்ன திருப்தி ஏற்படுமோ, இந்த படத்தைப் பார்த்த பின்னும் உங்களுக்கு தோன்றும். மேலே சொன்னதைப் போல் Inglourious Bastards, இரத்தமும் சதையும் கலந்து செய்த காமிக்ஸ் புத்தகம். இன்னொரு தபா எப்ப பார்க்க போறேன்னு தெரியலை...