Monday, November 29, 2010

’தி செவன்த் சீல்’ - மரணத்துடன் ஆடும் சதுரங்கம்

புதுமைபித்தனின் ஒரு கதை உண்டு - ‘காலனும் கிழவியும்’. தன் பேரனுடன் வசிக்கும் கிழவி ஒருத்தியின் காலம் முடிய, காலன் அவள் உயிரை எடுக்க வருகிறான். வந்தவன் தன் பேரன் என நினைத்து, காலனை வேலை வாங்குவாள் கிழவி. ஒரு கட்டத்தில் வந்தவன் காலன் தான் என கிழவிக்கு புரிய, “நான் ஒன்கூட வரணுமாக்கும்! என்னெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்குத் தெறமை யிருக்கா? ஒனக்குப் பாதி வேலேகூட சரியாச் செய்யத் தெரியாதே. என்னெக் கட்டோ டெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்கு முடியுமா?" என்று காலனை பகடி செய்வாள் கிழவி. 

மேலும், “உன்னாலெ என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும்? இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா? யோசிச்சுப் பாரு. ஒண்ணெ வேறயா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா! அடியோட இல்லாமே ஆக்க முடியாதே! அப்புறமில்ல உனக்கு? பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரேன்னா நெனச்சே?" என்று காலனை மேலும் வெறுப்பேற்றுவாள் கிழவி. வெறுப்பின் உச்சிக்கு செல்லும் காலன், கிழவியிடம் வாதம் செய்ய முடியாமல் அவள் உயிரை எடுக்காமல் சென்று விடுவான். காலன் வந்த கதையை கிழவி பேரனிடம் சொல்ல, கிழவிக்கு மறை கழண்டு விட்டது என்று தன் வேலையை பார்க்க சென்று விடுவான் பேரன்.

மரணத்தை நினைத்து யாருக்குத் தான் பயம் இல்லாமலில்லை. மரணம் தன்னை நோக்கி வருவதைக் கண்டாலே எப்பேர்பட்ட தீய செயல் செய்தவனும் நல்லவனாக மாறி விடுகிறான், அல்லது குறைந்த பட்சம் முயல்கிறான். பல வகை தத்துவவியல் வாதங்கள் மரணத்தை பற்றிய பயத்தை போக்க முயன்றாலும், மனிதன் உடும்பு பிடி போல் மனத்தின் அடி ஆழத்தில் அந்த பயத்தை புதைத்து கொண்டு தான் இருக்கிறான். இங்மார் பெர்க்மென் இயக்கிய ‘தி செவன்த் சீல்’ திரைப்படம் மனிதனின் மரணத்தைப் பற்றிய பயத்தையே பேசுகிறது. 

சிலுவைப் போரை முடித்து கொண்டு, தன் உதவியாளனுடன் வீடு திரும்புகிறான் வீரன் ஒருவன். அப்போது கருப்பு உடை அணிந்த மரணம் அவன் காலம் முடிந்ததாக தெரிவிக்கிறது. அப்போது சதுரங்கம் ஆடி கொண்டிருக்கும் வீரன், மரணத்தை தன்னுடன் சதுரங்கம் ஆட அழைக்கிறான். அவன் அழைப்பை ஏற்று கொள்ளும் மரணம், தன்னால் தொடர்ச்சியாக சதுரங்கம் ஆட இயலாது என்று தெரிவிக்கிறது.


வீரனும், ‘அதுவும் சரிதான். அது வரை என் உயிர் இருக்கும் அல்லவா’ என்று புன்னகையுடன் தெரிவிக்கிறான். தன் வீட்டிற்கு பயணிக்கும் வீரனை பின் தொடர்ந்து கொள்ளை நோய் எனும் ப்ளேக்கு பரவி கொண்டிருக்கிறது. அதனால் மரணம்  தன் வேலையில் தீவிரமாக இருக்கிறது.  இடையிடையே  வீரனுடன் தன் சதுரங்கத்தையும் தொடர்கிறது. இறுதியில் மரணம் வென்றதா, அல்லது வீரன் வென்றானா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.


மிகச் சாதாரணமாக தோன்றும் கதை என்றாலும், அதை 90 நிமிடங்களில் ஆகச் சிறந்த திரைப்படமாக்கியிருக்கும் பெருமை பெர்க்மேனையே சாரும். அதே சமயம் ப்ளாக் ஹ்யூமர் என்ற வகையறாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் பெர்க்மேன். உதாரணத்திற்கு, ஒரு கழை கூத்தாடியுடன், வீரனின் உதவியாளன் பெண்களை பற்றி நிகழ்த்தும் உரையாடல். காதலியுடனோ, மனைவியுடனோ அமர்ந்து இந்த காட்சியை பார்க்கும் போது, சத்தம் போட்டு சிரித்து விடாதீர்கள. உதை விழலாம்.

குரசேவா, ஹிட்சாக் போன்ற திரைமேதைகள் தங்கள் திரைப்படத்தின் இறுதி காட்சியின் இறுதி ஃப்ரேமில், அந்த திரைப்படத்தின் சாராம்சத்தை உங்கள் கண் முன் நிறுத்துவார்கள். அதை உள்வாங்கும் போது, அந்த திரைப்படத்தின் பிரம்மாண்டம் நம் கண்முன் விரியும். அந்த ரசவாதம், பெர்க்மேன்னின் இப்படத்திலும் நிகழ்கிறது. இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது, முதலில் நினைவுக்கு வந்தது புதுமைபித்தனின் ‘காலனும், கிழவியும்’ கதை தான். அதனால் தான் அக்கதையின் சாராம்சத்தை முதலில் எழுதியிருந்தேன்.

’தி செவன்த் சீல்’ - சினிமா காதலர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கருப்பு வெள்ளை கவிதை.

5 comments:

geethappriyan said...

நண்பா,
மிக நல்ல பகிர்வுக்கு நன்றி
விரைவில் பர்க்கிறேன்.
வாழ்க்கை எப்படி இருக்கிறது?

Prasanna Rajan said...

எல்லாம் நல்லபடியா போய்கிட்டு இருக்கு கார்த்திகேயன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

Unknown said...

இந்தப் படத்தைப் பற்றி நண்பர்கள் பலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஆனால் பார்க்கவில்லை. பார்த்துவிடுகிறேன்....

உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது :-)

Unknown said...

அப்புறம், கிகுஜிரோ.. ச்சீ... நந்தலாலா பார்த்தாச்சா? :-)

Prasanna Rajan said...

@ கருந்தேள்

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. டெம்ப்ளேட் பின்னூட்டங்களை வைத்து கலாய்ப்பதே உங்கள் வேலையாக போய் விட்டதா.

இருக்கிற தலைவலிகள் போதும் என்பதால், கிகிஜீரோவையும், நந்தலாலாவையும் ஒரு வருடம் கழித்து பார்க்கலாம் என முடிவு செய்துவிட்டேன்...

Share