Monday, August 10, 2009

Kundun [1997] - மார்டின் ஸ்கார்ஸிசின் மட்டுப்படுத்தப் பட்ட படைப்பு


இந்த திரைப்படத்தைப் பற்றி மிகச் சமீபத்தில் தான் கேள்விப் பட்டேன். பான் நளின் என்பவரின் ‘சம்சாரா’ என்ற திரைப்படத்தைப் பற்றி தகவல் தேடிய போது தான் இந்த படத்தைப் பற்றி தகவல் தெரிந்தது. இயக்குனர் யார் என்று பார்த்தால் மார்டின் ஸ்கார்ஸிஸ். அவரின் சுமாரான படைப்பான ‘நியூயார்க், நியூயார்க்’ கூட டி.வி.டியில் தேட கிடைத்தது. இந்த திரைப்படம் கிடைக்கவில்லை. அப்புறம் இந்த படத்தைப் பற்றி ஆராயும் போது தான், இந்தப் படம் திட்டமிட்டே முடக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்தது. அதை இறுதியில் சொல்கிறேன்.


படத்தைப் பற்றி:

ஒரு வரியில் சொல்லி விடக் கூடிய மிக அழகான திரைக்கதை. தலாய்லாமாவின் சிறு பிராயம் தொடங்கி, அவர் இந்தியா தப்பித்து வரும் வரை தொடரும் திரைக்கதை. அதை மிகத் தெளிவாக படமாக்கியிருக்கிறார் ஸ்கார்ஸிஸ். பொதுவாக வரலாற்றுப் படங்களில் அவ்வளவாக சுவாரசியமான திரைக்கதையை எதிர்ப் பார்க்க முடியாது. ஆனால் இந்த படத்தில் பக்கா ஸ்பீடில் போகிறது திரைக்கதை. படத்தின் திரைக்கதை எழுதிய மெலிஸா மேத்திஸன், தலாய்லாமாவிடம் நேரடியாக பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக சீனா, எப்படி திபெத்தை ஆக்குவித்தது. மாவோவின் அரசியல் கொள்கை எப்படி திபெத்தில் இருந்து அமைதியாக மத அடையாளங்களையும், திபெத்தின் கலாசார அடையாளங்களையும் அழிக்க ஆரம்பித்தது என்பதை மிகத் தெளிவாக காட்டி இருந்தனர்.

இந்த படத்தைப் பார்ப்பதற்காக உங்களுக்கு திபெத்தின் வரலாறு தெரிய தேவை இல்லை. மாறாக ஒரு சிறு திபெத்திய வரலாற்றை, தலாய்லாமாவின் கதையின் பிண்ணனியில் படைத்து இருந்தனர். இருப்பினும் பல வரலாற்று நெருடல்கள். உதாரணத்திற்கு திபெத்தின் இந்தியாவுடனான உறவு ஆரம்பத்தில் அத்தனை சீராக இல்லை. வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாய் தலாய்லாமா இந்தியா வந்த பின், இந்தியா சீனாவுடனான உறவு அதல பாதாளத்திற்கு போனது. ஆனால் திரைப்படம் தலாய்லாமா இந்தியா வருவதுடன் நிறைவடைவதால் இதைப் பற்றி சொல்லவும் வாய்ப்புகள் இல்லை.

மிகச் சிறப்பான வசனங்கள்:

தலாய்லாமாவிடம் பேச வரும் சீன இராணுவ அதிகாரி: “நாங்கள் உங்கள் நாட்டை விடுதலை செய்யவே ஆக்ரமித்து உள்ளோம்”, அதற்கு தலாய்லாமா “நீங்கள் என்னை விடுவிக்க தேவை இல்லை, நாங்களே எங்களை விடுவித்து கொள்வோம்” என்று கூறும் இடத்தில் தலாய்லாமாவின் மெளனப் புரட்சியை சாமர்த்தியமாக வெளிப் படுத்துவார் இயக்குனர். மாவோவை சந்திக்க சீனா வரும் தலாய்லாமாவிடம், மாவோ “மதம் ஒரு விஷம் போன்றது” என்று நாசூக்காக தெரிவிக்கும் காட்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறையும் தலாய்லாமா, இனி சீனா திபெத்தை விட்டு விலகாது என்று உணர்கிறார்.

திரைப்பட அரசியல்:

இந்த படம் வெளி வருவதற்கு முன்பே, இதற்கு தடை விதித்தது சீன அரசு. மேலும் திரைப்படத்தின் இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸிஸ், எழுத்தாளர் மெலிசா மேத்திஸன், அவரின் கணவர் ஹாரிசன் ஃபோர்டு ஆகிய 25 பேரை சீனாவுக்குள் நுழைய தடை விதித்து உள்ளது. அந்த தடை இன்னும் நீக்கப் படவில்லை. படத்தை தயாரித்த ‘டச்ஸ்டோன் பிக்சர்ஸி’ன் தாய் நிறுவனமான டிஸ்னி பிக்சர்ஸின் வர்த்தகத்தை சீனாவில் முடக்கி விடுவோம் என்று பகிரங்கமாக அறிவித்தது சீன அரசு. இதனாலேயே அமெரிக்க வெளீயிட்டில் கூட மிகக் குறைந்த தியேட்டர்களிலே படம் வெளியிடப் பட்டது. ஆஸ்கர் விருதுகளில் கூட எங்கே சீனா நம்மை புறக்கணித்து விடுமோ என்று, ஒரு விருது கூட தரப் படவில்லை. குறைந்த பட்சம் ஒளிப்பதிவிற்காக தந்திருக்கலாம்.

படத்தின் இறுதியில் இந்தியா வரும் தலாய்லாமா, “நான் ஒரு நல்ல பயணத்தை என் மனக் கண்ணில் காணுகிறேன். அதே போல் நல்ல ஒரு திரும்புதல் (திபெத்திற்கு) பயணத்தையும் காணுகிறேன்” என்பார். ஆனால், அந்த திரும்புதல் பயணம் உண்மையாகுமா என்பதிற்கு காலம் தான் பதில் சொல்லும்.

4 comments:

Prakash said...

பிரசன்னா , எழுதிய பதிவுகளிலேயே இது மிக மிக முக்கியமான பதிவு. மாவோ வருவதற்கு முன்பு திபெத் ஒன்றும் அவ்வளவு சுபிக்ஷமாக இருந்ததாக நினைவில்லை. மழை வர வானம் பார்க்காமல் , பால் பொங்க வேண்டும் என்றால் கூட லாமாவை கும்பிடும் மக்கள். உலகமே தொழிற்புரட்சி செய்த பொழுது அரத பழைய சம்பிரதாயங்களுடன் இருந்த ஒரு தேசம். மாவோ மீட்டெடுத்தாரா அல்லது அடக்குமுறைக்கு ஆட்படுத்தினாரா என்பது விவாதத்திற்கு உரியது தான்.

உலகிலேயே யாரும் சாதிக்க முடியாத ரயில் பாதையான பீஜிங்-திபெத் சீனா கட்டிய பொழுது உலகமே வாயை பிளந்தது. அத்தனை குற்றசாற்றுகளையும் ( உதாரணம் , விலங்கின வாழ்கை பாதிக்கப்படும் இயற்க்கை வளங்களுக்கு குந்தகம்) சரியான முறையில் பதில் அளித்தார்கள் .

லாமா மட்டும் அதை வேறு பார்வையில் நோக்கினார். " சுத்தம் , இனி சீனர்கள் நினைத்த நேரத்தில் ராணுவத்தை அனுப்பி விடுவார்கள்"

Prasanna Rajan said...

உண்மை தான் ப்ரகாஷ். மாவோ வருவதற்கு முன் திபெத்தில் ஒன்றும் அத்தனை சுபிட்சம் இல்லை. ஆனால், அவர்கள் ஆக்கிரமித்த விதமும், அதற்கு பின் அவர்கள் நடத்திய கொடுங்கோல் செயல்களும் தான் விஷயமே. எனக்கு தெரிந்த தோழி ஒருவர் திபெத்திய அகதி. அவரே சொல்ல பல விடயங்களை கேள்வி பட்டு இருக்கிறேன்.

geethappriyan said...

ரொம்ப நல்ல பதிவு
ஆனால் ஒட்டு இல்லை.
கருத்தும் இல்லை.
என்ன கொடுமை?

முதலில் வந்து கருத்து போடுபவர் கூட
ஒட்டு போட வில்லையெ?

ப்ரசன்னா. இதற்கு ஒரே வழி.
இனி நீங்கள் யாருக்கு ஒட்டு பொட்டாலும்
ஒட்டு போட்டாச்சு என்று சொல்லுஙகள்
தப்பு இல்லை.
ஒட்டு போட்டாச்சு
(என் பதிவுக்கு நீஙகள் போட்டுவிடுஙகள்)
எல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் தான்.
படத்தின் டவுன்லொடு சுட்டி இருந்தால்
தெரிவியுஙகள்..

Prasanna Rajan said...

என்ன பண்றது கார்த்திகேயன். இப்போ தான் பதிவுலகம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடுது. இனிமே சொன்னா மாதிரி செஞ்சுரலாம்... நான் இந்த படத்தை டி.வி.டியில் பார்த்தேன்.

Share