Monday, August 17, 2009

பி.பி.சி தமிழோசையும், நானும்


அது என்னமோ தெரியவில்லை. சிறு வயதில் அப்பா ரேடியோ கேக்கும் போது எனக்கு அத்தனை கோபம் வரும். காலையில் ஆரம்பிக்கும் நாராசம் பள்ளி கிளம்பும் வரை தொடர்ந்து, பின்னர் மாலை தொடங்கி இரவு 9:45க்கு முடியும். அம்மா கூட சில சமயங்களில் கடுப்பாவது உண்டு. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் வானொலி கேட்பது என்பது அனிச்சை செயலாகிப் போனது. வானொலி இல்லாத நாளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. முக்கியமாக பி.பி.சி தமிழோசை. இந்திய நேரப்படி இரவு 9:15 தொடங்கி, 9:45க்கு முடியும். ஒரு அரை மணி நேரத்தில் அவர்கள் கொடுக்கும் தொகுப்பை, இன்றைய 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் தர முடியாது.

மே 3 1941-இல் தொடங்கிய தமிழோசை, முதலில் வாரம் ஒரு முறை நிகழ்ச்சியாகத் தான் தொடங்க பட்டது. பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என்றாகி, எண்பதுகளின் இறுதியில் தினசரி நிகழ்ச்சியாக உருப்பெற்றது (நன்றி: பி.பி.சி தமிழ் இணையதளம்) நினைவு தெரிந்த நாளிலிருந்து, பி.பி.சி தமிழோசை கேட்டு கொண்டிருந்தேன் (கல்லூரி செல்லும் வரை). எத்தனை உபயோகமான சங்கதிகள். பொதுவாக மூன்றாக பிரித்து விடுவார்கள். செய்தி அறிக்கை, செய்தி அரங்கம், மற்றும் சிறப்பு செய்திகள். இவற்றுக்குள் உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழகச் செய்திகள், இலங்கைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் அத்தனையும் அடக்கி விடுவார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், முடிவிலும் வரும் அழகான மங்கள இசை. அனேகமாக காருகுறிச்சி அருணாச்சலம் அவர்களுடையதாக இருக்கலாம்.

என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி ‘அறிவியல் ஆயிரம்’. அப்போது நான் 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். மரங்களின் வயதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று அவர்கள் விவரித்தது இன்றளவும் பசு மரத்தாணி போல் மனதில் உள்ளது. அது மட்டுமல்லாது இரும்பு பாத்திரங்கள் அதிகம் உபயோகித்தால் உணவில் இரும்பு சத்து கூடும் என்று அவர்கள் சொல்லித் தான் தெரிந்தது. இணையம் என்றால் என்ன என்று தெரியாத, ஆங்கிலத்தில் ஒரு பத்தியை ஒன்பது மணி நேரம் படிக்கும், ஒரு சாதாரண தமிழக கிராமச் சிறுவனுக்கு இதை விட, என்ன ஒரு தகவல் களஞ்சியம் இருக்க முடியும்.

மேலும் ’தகவல் அரங்கம்’ என்று ஒரு நிகழ்ச்சி இருந்ததாகக் கூட நினைவு. இன்று வரை என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி ‘பாட்டொன்று கேட்டேன்’. 75 பாகங்கள் வந்த இந்த நிகழ்ச்சியை தற்செயலாக கேட்க ஆரம்பிக்க, ஒவ்வொரு வாரமும் கேட்க ஆரம்பித்தேன். பத்திரிக்கையாளர் ‘சம்பத்குமார்’ தனது கனீர் குரலில் அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சொல்லப் போனால் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் 10 நிமிடத்திற்காக ஒரு வாரம் முழுவதும் தவம் கிடந்தேன். திரைப்பட வரலாறுகள் மிகவும் சுவாரசியமானவை. திரைப்படங்கள் மூலமாக அன்றைய சமூக நோக்குகள், ரசிக பார்வைகள் அவற்றை அறிந்து கொள்வதில் எனக்கு அலாதிப் பிரியம். அதையும் பாடல்கள் வழியாகத் தெரிந்து கொள்வது, நாயர் கடை டீயில், டபுள் மலாய் போட்டு குடிப்பது போல.

ஆனால் ஏனோ ஒரு கட்டத்திற்கு மேல் என்னாலும் சரி, அப்பாவாலும் சரி, அவ்வளவாக கேட்க முடியவில்லை. முக்கியமாக நான் கல்லூரி செல்ல ஆரம்பித்த பின். மற்றுமொரு காரணம் - இலங்கைச் செய்திகள். (இலங்கை நண்பர்கள் பொறுத்தருள வேண்டும். இது தமிழோசையைப் பற்றிய எனது பொதுப் பார்வை மட்டுமே). காரணம் செய்தி அறிக்கை, செய்தி அரங்கம் மட்டுமல்லாது தனியாக இலங்கை கண்ணோட்டம் என்றும் ஒரு பகுதி ஆரம்பித்தார்கள். வெளிநாட்டில் வாழும் இலங்கை நண்பர் ஒருவர், தங்களுக்கு இது எத்தனை உபயோகமாக இருந்தது என்று அவர் கூறக் கேட்டிருக்கிறேன். இருப்பினும், ஏனோ தமிழோசை அதன் பழைய ஒளி(லி)யை இழந்ததாகவே எனக்குத் தோன்றியது. அப்பாவும் அதேயே தான் தெரிவித்தார்.

தமிழோசை தற்போது இணையத்திலும் இருக்கிறது. இணையம் வந்த பின் சிறப்பு நிகழ்ச்சிகளான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற நிகழ்ச்சிகளையும் கேட்கத் தொடங்கினேன். ஆம். பி.பி.சி இணையத்திலும் இருக்கிறது. தினமும் தமிழோசையைக் கேட்க இங்கு சொடுக்குங்கள். அது மட்டுமல்லாது, ’பாட்டொன்று கேட்டேன்’ நிகழ்ச்சியின் 75 பாகங்களும் உள்ளன. தினமும் இந்திய நேரப்படி நிகழ்ச்சி தொடங்கும் முன், முந்தைய நாள் நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம். ‘நினைவில் நின்றவை’ என்னும் பகுதியில் அவர்கள் தொகுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளன. அவற்றில் என்னைக் கவர்ந்ததும், நீண்ட சோகத்தில் ஆழ்த்தியதுமான, சுஜாதா அவர்களின் இறப்புக்கு பின்னர் அவர்கள் தொகுத்த செய்தி. இது பி.பி.சி இணைய தளத்தில் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் யூடியுபில் கிடைத்தது. இதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பி.பி.சி வானொலியில், சிற்றலையில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பண்பலை(எப்.எம்) வானொலி யுகத்தில் வெகு சிலரே சிற்றலை கேட்கிறார்கள். சிற்றலையிலும் சிறந்த வானொலிகள் உள்ளன. ஒரு மாறுதலுக்கு கேட்டு பாருங்களேன். மேலும் இலங்கை பதிவர்கள், பி.பி.சி தமிழோசைப் பற்றிய உங்களின் கருத்துகளை பின்னூட்டம் இடுங்களேன். தமிழிஸிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு போட்டு உங்களின் நண்பர்களுக்கும் தமிழோசைப் பற்றி தெரியப் படுத்துங்களேன்.


17 comments:

Prakash said...

நாஸ்டால்ஜியா ! சின்ன வயதில் வானொலி ஒன்றே கதி என்று இருந்தேன்.நிறைய புதுப்பட பாடல்கள் கேட்பேன் , செய்திகளும் இதில் அடக்கம். இப்பொழுது வானொலி கேட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டன.

பி.கு : எப்படியா நீ மட்டும் புதுசு புதுசா யோசிச்சு பதிவு போடுதீக? வித்தைய கத்து கொடுத்தா நான் பிரபல பதிவர் ஆகிடுவேன்னு உமக்கு பொறாமை :D

Prasanna Rajan said...

நன்றி ப்ரகாஷ்.

//
எப்படியா நீ மட்டும் புதுசு புதுசா யோசிச்சு பதிவு போடுதீக? வித்தைய கத்து கொடுத்தா நான் பிரபல பதிவர் ஆகிடுவேன்னு உமக்கு பொறாமை
//

இதெல்லாம் ரெம்ப ஓவர். ஏய்யா நானாய்யா சிறுகதை போட்டி எல்லாம் ஜெயிச்சது. என்ன ஒரு தன்னடக்கம்...

முரளிகண்ணன் said...

சுவராசியமான தகவல்களை ரசிக்கும் நடையில் எழுதியிருக்கிறீர்கள்.

தொடர்ந்து கலக்குங்கள்

Prasanna Rajan said...

மிக்க நன்றி முரளிக்கண்ணன்...

Raju said...

நல்லதொரு பகிர்வு.
நல்ல நடையும் இருக்கு பாஸ் உங்ககிட்ட.

Unknown said...

நல்லா இருக்கு பதிவு.நான் இலங்கை வானொலி கேட்டு ரசித்தது ஒரு காலம்.

Prasanna Rajan said...

மிக்க நன்றி டக்ளஸ். உங்களைப் போன்று மற்ற பதிவர்களும் அங்கீகரித்தால் மேலும் தொடர்ந்து எழுத உதவியாக இருக்கும்...

Prasanna Rajan said...

மிக்க நன்றி ரவிஷங்கர்... இலங்கை வானொலியைப் பற்றி மட்டும் ஒரு தனி பதிவு போடலாம்... ஐடியாவிற்கு நன்றி... :D

Unknown said...

உங்களது பதிவுகள் மிகவும் நன்றாக இருகிறது பிரசன்னா. ஞாயிற்று கிழமைகளிள் விவிதபாரதியில் வந்த வெற்றிப் பாதை நிகழ்ச்சி நன்றாக இருக்கும். அதுவும் திரு. அப்துல்கமீது அவர்களின் குரலில் அந்நிகழ்ச்சி மேலும் சிறப்பாக இருந்தது. அந்த பழய ஞாபகங்களை கிளப்பி விட்டீர்களே. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இனி அந்த காலம் எப்ப வரும்.

Prasanna Rajan said...

மிக்க நன்றி Sincere. இலங்கை சர்வதேச ஒளிபரப்பு நின்று போனது என்னவோ சோகம் தான். அந்த வெற்றிப் பாதை நிகழ்ச்சியைக் கேட்டு உள்ளேன். பாடல்களின் ஊடாக நேயர்களின் படைப்பையும் ஒளிபரப்புவார்கள். அது என்னவோ அது திரும்பி வருவது கஷ்டம் தான்... :(

geethappriyan said...

நல்ல பதிவுங்க நண்பர் பிரசன்னா.
நான் சென்னையில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும்போது சென்னை வானொலியில் நல்ல பாடல்களை கேட்டதுண்டு. அது மிகவும் டைமிங்காகவும் இருக்கும்.
இங்கு அலுவலகத்தில் பி பி சி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அதை காது கொடுத்து கேட்பேன்.
இங்கு துபாயில் வானொலி இருக்கிறது.சக்தி எப் எம்.
அதை அவ்வளவாக கேட்பதில்லை.

நம் சக வலைப்பதிவர் கானா பிரபாவை இந்த பதிவிற்கு அழையுங்கள்.
சென்ஷியையும் கோபிநாத்தையும் ilakkiyam ,இளையராஜா சம்மந்தப்பட்ட பதிவிற்கு அழையுங்கள்.
நல்ல ஊக்கம் கொடுப்பார்கள்.
நான் ஏற்கனவே உங்கள் பதிவு பற்றி நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன்.
ஒட்டு போட்டாச்சு.

geethappriyan said...

நல்ல பதிவுங்க நண்பர் பிரசன்னா.
நான் சென்னையில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும்போது சென்னை வானொலியில் நல்ல பாடல்களை கேட்டதுண்டு. அது மிகவும் டைமிங்காகவும் இருக்கும்.
இங்கு அலுவலகத்தில் பி பி சி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அதை காது கொடுத்து கேட்பேன்.
இங்கு துபாயில் வானொலி இருக்கிறது.சக்தி எப் எம்.
அதை அவ்வளவாக கேட்பதில்லை.

நம் சக வலைப்பதிவர் கானா பிரபாவை இந்த பதிவிற்கு அழையுங்கள்.
சென்ஷியையும் கோபிநாத்தையும் ilakkiyam ,இளையராஜா சம்மந்தப்பட்ட பதிவிற்கு அழையுங்கள்.
நல்ல ஊக்கம் கொடுப்பார்கள்.
நான் ஏற்கனவே உங்கள் பதிவு பற்றி நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன்.
ஒட்டு போட்டாச்சு.

☀நான் ஆதவன்☀ said...

பழைய நினைவலைகளை எழுப்பி விட்டீர்கள். டிவி எல்லாம் இல்லாத காலங்களில் ஆறு வீடு உள்ள குடியிறுப்பில் வானொலி தான் முக்கிய பொழுதுபோக்கு.

கார்த்திகேயன் சொல்லி தான் இங்கு வந்தேன் பிரசன்னா. பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி :)

Prasanna Rajan said...

மிக்க நன்றி கார்த்திகேயன். வானொலிகளைப் பற்றியே ஒரு மிகப் பெரிய புத்தகம் போடலாம், அத்தனை தகவல்கள் இருக்கின்றன. ஆனால், அதை ப்ளாக்கில் எழுதி வீணடிக்க விரும்பவில்லை. அதற்கான ஒரு சரியான களத்தை தேடி கொண்டு இருக்கிறேன்...

Prasanna Rajan said...

மிக்க நன்றி ஆதவன், உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...

kalapria said...

வாழ்த்துக்கள்

Prasanna Rajan said...

@ கலாப்ரியா சார்.
சார்!! நீங்கள் பிளாக்கரில் இருக்கிறீர்களா? தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

Share