Tuesday, November 25, 2008
காஞ்சிவரம்
ஒன்று மட்டும் புரியவில்லை. சரித்திர கால படங்கள் என்றால் ஏன் செபியா டோனிலும், கருப்பு வெள்ளையிலும் மட்டும் தான் இருக்க வேண்டுமா? ஒரு வேளை கலை இயக்குனரின் தவறுகளை மூடி மறைத்து விடும் அனுகூலமாகவும் இருக்கலாம். எப்பிடி இருந்தாலும் 'திரு'. கலக்கி வீட்டிர்கள்.
'சிறைச்சாலை'க்கு பிறகு மற்றொரு இறகு, பிரியதர்ஷனின் மகுடத்திற்கு. டைட்டில் கார்டில் 'காஞ்சிவரம்' - A communist confession என போட்டது படம் நெடுகிலும் ஏனோ ஒரு நெருடலை ஏற்படுத்த தவறவில்லை. 1930களில் முதலாளிகளின் பிடியில் சிக்கி தவித்த காஞ்சிபுரம் நெசவாளர்களின் பிண்ணனியில் பயனிக்கிறது கதை. 'கண் சிவந்தால் மண் சிவக்கும், தண்ணீர் தண்ணீர்' படங்களை போன்று இந்த படத்தை எதிர்பார்த்தீர்கள் ஆனால் ஏமாந்து தான் போவீர்கள். கம்யூனிச புரட்சியை ஒரு பின் நவீனத்துவ பாணியில் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
உறுதியாகத் தெரிகிறது, பிரகாஷ்ராஜை மனதில் வைத்து தான் 'வேங்கடம்' கதாபத்திரம் உருவாக்கப் பட்டிருக்கிறது. 'இருவருக்கு' பிறகு அடுத்த தேசிய விருது உறுதி. தன் மகளுக்கு புடவை நெய்வதற்காக நூலை திருடும் போது வெளி படுத்தும் முகபாவமும் சரி, போராட்டத்தை நிறுத்துவதற்காக தன் தோழர்களிடம் பேசும் போதும் சரி, மனிதர் புகுந்து விளையாடி இருக்கிறார். இறுதி காட்சியில் திரையில் உறையும் அவரது சிரிப்பு வெகு நாட்கள் நம் மனதை விட்டு அகலாது.
ஆகாயக் கோட்டை கட்டும் தன் கணவனை கண்டிக்க இயலாத மனைவியாய், படத்தின் பாதி வரை மட்டுமே வந்தாலும் தன் பாத்திரத்தைத் தெளிவாக செய்து இருக்கிறார் ஷ்ரேயா ரெட்டி. வேங்கடத்தின் நண்பர் பார்த்தசாரதியாக வரும் ஜெயக்குமார், மைத்துனராக வரும் சம்பத்குமார், போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் 'கூத்துப்பட்டறை' ஜார்ஜ், தம் பணியை திறம்பட செய்து உள்ளனர்.
'சிறைச்சாலை'யில் செல்லுலார் ஜெயிலையே செட்டாக வடித்த சாபு சிரிலுக்கு இந்த படம் ஜீஜூபி என்று தான் சொல்ல வேண்டும். சைக்கிளுக்கு பொருத்தப் படும் 1930ம் வருடத்திய விளக்கு, அப்போது உபயோகப் படுத்தப் பட்ட தறிகள் என்று நிறையவே மெனக் கெட்டிருக்கிறார்.
வணிகப் படங்கள், திரைப்பட விழாவிற்கு என எடுக்கப்படும் திரைப்படங்கள் என்ற இடைவெளி எப்போது மாறும் என்று தெரியவில்லை. இந்த சாபக்கேட்டிற்கு 'காஞ்சிவரமும்' விதிவிலக்கல்ல. எப்படியாயினும் 'காஞ்சிவரம்' தமிழ் சினிமாவின் வரமே!!!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Good review da !!
Post a Comment