2000த்தின் முற்பகுதியில்
டி.டி.எஸ் இல்லையென்றால் திரையரங்கிற்கு ஆட்கள் வருவதில்லை என்று புரிந்து கொண்ட திரையரங்கு
அதிபர்கள், சில பல இலட்சங்களை செலவு செய்து தங்களது ஆடியோ சிஸ்டங்களை புதுப்பித்தனர்.
இதனால் இரண்டாவது எடிட்டரான திரையரங்கு ஆப்பரேட்டர்களுக்கு கொஞ்சம் வேலை குறைந்தது
என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை ஏதேனும் பிண்ணனி இசை வரும் போது, இரண்டு பக்கம்
இருக்கும் ஸ்பீக்கர்களை இரைய விட வேண்டிய அவசியமில்லை. ஃபிலிம் சுருளோடு இருந்த டி.டி.எஸ்
கோடிங், அதற்கு சரியான ஸ்பீக்கர்களை தானாக இயங்கும் வசதியை கொண்டு வந்து விட்டது.
டி.டி.எஸ் வந்த
புதிதில் ‘டி.டி.எஸ் டிஜிட்டலில் திரையிடப்படுகிறது’ என்று ஒரு துண்டு வாசகம் போஸ்ட்டரோடு
ஒட்டப்படும். அந்த வாசகத்தினால் சில மொக்கை படங்களுக்கும் கூட்டம் அள்ளியது. ஒரு மதிய
வேளையில் மாடியில் உலாத்தி கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு கட்டிட வேலை செய்து கொண்டிருந்த
இருவர் பேச கேட்டது: “அந்த ஸ்க்ரீன் எந்திருக்கும் போது ஒரு பாட்டு போட்டான் பாரு,
தம் தம்னு ஸவுண்டு அடிக்க, அதுலயே காது போச்சுப்பா.”
அந்த இசை என்னவென்று
நன்றாக நினைவு இருக்கிறது. ஸ்வீடிஷ் குழுவான ‘Safri Duo’வின் ’Played-A-Live’. அந்த
பாங்கோவும், எலக்ட்ரானிக் இசை கலந்த பாடல், ஒவ்வொரு முறை தேனி நேஷனல் திரையரங்கில்
திரைச்சீலை எழும் போது ஒலிக்கும். அது மட்டுமல்லாமல், ’Europe’இன் ‘The Final
Countdown’ பாடல் வெகு பிரபலம். அப்பாடலின் ‘Synth Guitar’ தொடக்கம், பல திரையரங்குகளில்
உபயோகிக்க பட்டதோடு அல்லாமல் திருவிழா காலங்களில் நடக்கும் ‘Musical Chair’க்கும் உபயோகப்பட்டது.
இவை மட்டுமல்லாமல்,
‘Lipss Inc’இன் ‘Funky Town’, ‘Venga Boys’இன் ‘We Like to Party’, ‘Aqua’வின்
‘Lollipop’, ‘Doctor Jones’, 'Boney M'இன் 'Sunny', 'Queen'இன் ‘We Will Rock you' போன்ற பாடல்கள் திரைச்சீலை
எழும் போது ஒலித்தன. இன்று வெகு சில திரையரங்குகளிலே அந்த திரைச்சீலைகள் இருக்கின்றன. அழுக்கு படிந்த அந்த வெல்வெட் சீலைகளை துவைக்கும் வசதியில்லை என்பதோடு மட்டுமல்லாமல், திரைச்சீலைகளை எழுப்ப உதவும் மோட்டார்கள் பழுதடைந்து விடுவதால் - இதற்கு எதற்கு மேலும், மேலும் காசை கொட்ட வேண்டும் என்று மொத்தமாக எடுத்து விட்டனர். டிஜிட்டல் திரையிடலுக்காக ஸ்க்ரீன்கள் ரெட்ரோஃபிட் செய்யப்படுவதும், இந்த திரைச்சீலைகள் காணாமல் போவதற்கு காரணம்.
இது போன்ற ‘Showmanship' காணாமல் போவது தான், திருட்டு வீடியோ பெருகுவதற்கு காரணமோ?
2 comments:
உண்மைதான் தொழில்நுட்பம் விசித்திரம் தான்!!
இப்படியும் இருக்கலாம்...
Post a Comment