Friday, October 4, 2013

Gravity (2013)


சுஜாதாவின் 'வானத்தில் ஒரு மெளனத் தாரகை' கதையில் ஒரு இந்திய விண்வெளி வீரர், தனது விண்வெளி நடையின் போது - எந்திரக் கோளாறு காரணமாக விண்கலத்திலிருந்து தொடர்பறுந்து அலைக்கழிக்கப்படுவார். பல்வேறு அரசியல் காரணங்களால் அவரை காப்பாற்ற மற்றொரு விண்கலம் அனுப்ப முடியாது என்று அவரது கன்ட்ரோல் அறை தெரிவிக்கிறது. தனது குடும்பத்தை நினைத்து கொண்டு விண்வெளியில் அலையும் தருணத்தில், அந்த விண்வெளியில் இருந்து பூமியை ரசித்த வண்ணம், மெதுவாக பிராண வாயுவை இழக்கிறார் விண்வெளி வீரர். பிராண வாயு ஒரு சதவீதம் மிச்சம் இருக்கும் போது கதை முடியும்.

'2001: A Space Odyssey' நாவலில் இதே போல் ஒரு விண்வெளி வீரர், விண்கலத்திலிருந்து தொடர்பறுந்து விண்வெளியில் எறியப்படுவார். அது ஒரு சிறு பகுதியே. அதிலிருந்து தழுவியது தான் மேலிருக்கும் சுஜாதாவின் கதை. ஸ்டான்லி க்யூப்ரிக் அந்த நாவலுக்கு எந்த வித பங்கமும் இன்றி, திரைப்படத்தை எடுத்திருப்பார். இதுவரை வந்த விண்வெளி படங்களில் '2001' தான் எனக்கு மிகவும் பிடித்த படம். 1968இல் கிடைத்த தரவுகளை கொண்டு, இன்றளவும் துல்லியமாக இருக்கும் ஸ்பெஷல் எஃபக்டுகளை க்யூப்ரிக் உருவாக்கி இருப்பார். தத்துவார்த்த ரீதியிலான வாதங்கள் மட்டுமன்றி மிகவும் சிக்கலான, அந்த சர்ச்சைக்குரிய முடிவு தான் இன்றளவும் '2001' பேசப்படுவதற்கு காரணம்.

'Gravity' பார்த்து கொண்டிருக்கும் போது, 'வானத்தில் ஒரு மெளனத் தாரகை' கண் முன்னால் வந்து சென்றது. இந்த திரைப்படத்தை ஒரு Realistic Space Apocalypse வகையில் சேர்க்கலாம். உயிரிமருத்துவ பொறியாளரான ரயான் ஸ்டோனும் (Sandra Bullock), முதிர்ந்த விண்வெளி வீரரான மேட் கோவால்ஸ்கியும் (George Clooney), Hubble தொலைநோக்கியில் உள்ள பேனல்களை சரி செய்து கொண்டிருக்க - வெடித்து சிதறும் ஒரு ரஷிய செயற்கைகோளின் துண்டங்கள், அவர்கள் வந்த விண்கலத்தை தாக்குகிறது. அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதே கதை.

சில மாதங்களுக்கு முன் வாஷிங்கடனில் உள்ள ஸ்மித்சோனியன் ஐமேக்ஸ் திரையரங்கில் 'Hubble 3D' டாகுமென்ட்ரியை நானும், என் நண்பர்களும் பார்த்தோம். Hubble தொலைநோக்கியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அட்லாண்டிஸ் விண்கலம் செலுத்தப்பட்டது. அதில் உள்ள 7 அஸ்ட்ரோநாட்கள் ஐமேக்ஸ் 3டி கேமராக்களை கொண்டு, தொலைநோக்கியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை ஆவணப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாது Hubble எவ்வாறு 'Deep Space Exploration' க்கு உதவி செய்கிறது என்பதையும் விளக்கியிருந்தனர்.

'க்ராவிட்டி'யில் காட்டப்படும் 'எக்ஸ்ப்ளோரர்' விண்கலத்திற்கும், 'அட்லாண்டிஸ்' விண்கலத்திற்கும் எனக்கு திரையில் வித்தியாசம் தெரியவில்லை. 'எக்ஸ்ப்ளோரர்' விண்கலமோ முழுக்க, முழுக்க CGI'யில் உருவாக்கப்பட்டது. ஒரு சில ப்ராப்கள் (Props) தவிர, மற்றவை அனைத்தும் சி.ஜியில் உருவாக்கப்பட்டவை தான். பெரும்பாலான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில், விஷூவல் எஃபக்ட்டுகளுக்கு கொடுக்கப்படும் கவனம் திரைக்கதைக்கோ, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளுக்கோ கொடுக்கப்படுவதில்லை. இதற்கொரு மிகச் சிறந்த உதாரணம், இந்த வருடம் வந்த 'Oblivion'.

'க்ராவிட்டி'யில் விஷூவல் எஃபெக்ட்டுகளுக்கு கொடுத்த கவனம் மட்டுமல்லாது, கதாப்பாத்திரங்களின் மனவோட்டங்களை திரையில் நுழைத்தது தான், இந்த படம் மற்ற ஸயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. 2டியில் எடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷனில் 3டியாக மாற்றப்பட்டிருந்தாலும், 3டி இந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே உலா வருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கதாப்பாத்திரங்களின் Breathing Pattern மாறுபடும். இந்த Breathing Pattern கூட Choreograph செய்யப்பட்டதாம்.

இந்த வருடம் நான் பார்த்த திரைப்படங்களில், ஆரம்பம் முதல் இறுதி வரை அலுக்காத சென்ற படங்கள் இரண்டு - ஒன்று 'Pacific Rim', மற்றொன்று 'Gravity'. படத்தில் இன்னொரு கதாப்பாத்திரம் ஹ்யூஸ்டனில் இருக்கும் 'மிஷன் கண்ட்ரோல்'. அதற்கு குரல் கொடுத்திருப்பவர் Ed Harris. ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். 'Apollo 13' திரைப்படத்தில் மிஷன் கண்ட்ரோல் தலைவர் Gene Kranz-ஆக வருவார். இந்த படத்திலும் அவரது குரல் உபயோகப்படுத்தப்பட்டது 'Apollo 13'க்கு கொடுக்கப்பட்ட ட்ரிப்யூட்டாகத் தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

மிகவும் சிரீயசாக செல்லும் திரைக்கதையில், க்யூரன் நடுவே கொஞ்ச்ம் ட்ரை ஹ்யூமரை நுழைத்துள்ளார். இது வரை படத்தை இரண்டு முறை திரையரங்கில் பார்த்த பின்பும், அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. கண்டிப்பாக ஐமேக்ஸில் மட்டுமே பாருங்கள்.

Wednesday, March 13, 2013

'மஹானி'ன் 'உயிரில்' கலந்த 'சில்லு'

முன் குறிப்பு: சுஜாதா இந்த தலைப்பை படித்திருந்தால், "எதற்கு இத்தனை நாடகத்தனமான, நீளமான தலைப்பு" என்று நினைத்திருப்பார்.

முதுகலை படித்து கொண்டிருந்த காலத்தில், மே முதல் ஆகஸ்ட் வரையான கோடை காலத்தில் பொதுவாக, என்னைப் போன்ற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு பதிவு செய்வதில்லை. காரணம் - பட்டப்படிப்பு முடிப்பதற்கான முக்கியமான வகுப்புகள் கோடை காலத்தில் நடக்காது. இந்த நேரத்தில் தான் இந்தியாவிற்கு போகவோ, அல்லது ஏதாவது கிடைத்த பகுதி நேர வேலையை பார்த்து கொண்டிருப்போம். நான் எனது புத்தகக் கடை வேலையையும், ஆய்வுக்கூட வேலை இரண்டையும் பார்த்து கொண்டு - கிடைத்த புத்தகங்களையும், கணக்கிலடங்கா திரைப்படங்களையும் பார்த்து கொண்டிருந்தேன். தூங்குவது என்னமோ, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே. 

கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன், நடத்தப்படும் வகுப்புகளுக்கான அட்டவணை ஒட்டப்படும். அதில் எனக்கு மிகவும் பிடித்ததொரு வகுப்பு இருந்தது. அது - "Science Fiction and Philosophy". ஒரு குறிப்பிட்ட வகுப்பு, உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது - ஆனால் அதற்கான முழுத் தொகையும் கட்ட வேண்டாமென்றால், அந்த வகுப்பை ஆடிட் செய்யலாம். அதாவது வகுப்பில் போய் உட்கார்ந்து பாடங்களை கவனிக்கலாம். ஆனால் பரீட்சை எழுதவோ, விவாதங்களிலோ பங்கெடுக்க முடியாது. அதே சமயம், ஆடிட் செய்யப்பட்ட வகுப்புகள், பட்டபடிப்பு முழுமைக்கு உதவாது. ஒவ்வொரு வகுப்பு பதியும் முன், முதுகலை ஆலோசகரை கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆலோசகர் பட்டபடிப்பு முழுமைக்கு நம்மை தயார் செய்யும் வகுப்புகளையே பரிந்துரைப்பார். மேலே சொன்ன வகுப்புக்கும், உயிரிமருத்துவ பொறியியலுக்கும் (BiomEdical Engineering), தர்க்க ரீதியில் தொடர்பு இருந்தாலும் - அந்த வகுப்பை எடுக்கிறேன் என்றால், என் ஆலோசகர் 'வெண்ணெய் வெட்டுற சிப்பாய்க்கு என்னத்துக்கு பத்து கத்தி' என்பது போல் என்னை பார்ப்பார்.

அதனால் அந்த வகுப்பை ஆடிட் செய்தேன். ஒரு வாரத்திற்கு ஒரு முறை மூன்று மணி நேரம் தொடர்ச்சியான வகுப்பு. முதல் வகுப்பில் ஹெச்.ஜி.வெல்ஸில் ஆரம்பித்து, ஸ்டெஃபனி மேயர் வரைக்கும், இருக்கிற Sci-Fi எழுத்தாளர்கள் அனைவரையும் பற்றி ஒரு சிறிய முன்னுரையை பேராசிரியர் கொடுத்தார். தன்னைக் கவர்ந்த திரைப்படங்களான 1984 மற்றும் THX 1138 பற்றியும் சிலாகித்து பேசினார். கேள்வி நேரத்தின் போது கேட்க்கப்பட்ட முதல் கேள்வி, "ஏன் இருக்கும் அத்தனை அறிவியல் புனைவு படைப்புகளும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையே பேசுகின்றன?". 

அதற்கு பேராசிரியர் - "எந்ததொரு படைப்பின் வெற்றியும் - அந்த படைப்பு வாசகர்கள் அல்லது பார்வையாளர்களை எப்படி பிரதிபலிக்கிறது என்பதில் இருக்கிறது. என்ன தான் மனிதன் நேர்மறையான எண்ணங்களோடு இன்றைய நாளை தொடர்ந்தாலும், நாளையை பற்றிய எதிர்பார்ப்புகளும், எதிர்மறை பயமும் அவனிடம் இல்லாமல் இல்லை. அறிவியல் புனைவுகள் நாளை பற்றிய மனிதனின் பயங்களை அட்சர பிசகில்லாமல் பிரதிபலித்தன. அதனால் அவை நன்றாக விற்றன. அதைப் பற்றிய தர்க்க ரீதியான விவாதங்களுக்கு தானே நீங்கள் இந்த வகுப்பிற்கு வந்துள்ளீர்கள்" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அந்த தர்க்க ரீதியான விவாதங்களை இங்கு எழுதினால், TLTR (Too Long to Read) என்று எழுந்தோடி விடுவீர்கள்.

அந்த வகுப்பு பல கேள்விகளையும், சில தெளிவுகளையும் எனக்கு தந்தது. அப்போது தமிழில் என் துறை, அதாவது உயிரிதொழில்நுட்பத்தை (Biotechnology) மையமாகக் கொண்ட சிறுகதைகள், எத்தனை இருக்கின்றன என யோசித்த போது, மூன்று நினைவிற்கு வந்தன. சுஜாதாவின் 'உயிர்', இரா.முருகனின் 'சில்லு' மற்றும் ஹரன் பிரசன்னாவின் 'மஹான்'.

எல்லோருக்கும் போல், எனக்கும் சுஜாதா வாத்தியார் தான். குமுதத்தில் அவர் எழுதிய 'ஜீனோம்' தொடர், கல்லூரியில் பயோடெக்னாலஜியை விருப்ப பாடமாக எடுக்க பெரிய உந்துகோலாக அமைந்தது. 'உயிர்' கதையின் நிகழ்களம், 'என் இனிய இயந்திரா' போல் ஒரு எதிர்கால சர்வாதிகார அமைப்பின் கீழ் இயங்க்கும் நாடு. மரபணுக்களை வெட்டி ஒட்டும் தொழில்நுட்பமான ரீகாம்பினண்ட் டி.என்.ஏ டெக்னாலஜி மூலம் ஒரு உயிரை, விஞ்ஞானி ஒருவர் உருவாக்குகிறார். அந்த உயிரை அந்த அமைப்பின் பிடியில் இருந்து தப்புவிக்க என்ன செய்கிறார் என்பதே கதை. வழக்கமான தொழில்நுட்ப  சம்பாஷனைகள் இல்லாமல், இந்த கதையில் விஞ்ஞானி, அவர் தஞ்சம் புகும் வீட்டில் இருப்போர், அவர்களின் பாத்திர படைப்பும், உரையாடலுமே கதையை நகர்த்துகிறது. இறுதியில் அந்த விஞ்ஞானியும், அவர் படைத்த உயிரும் என்னவாகிறது என்பதே கதை.

சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்' தொகுப்பின் முதல் கதை இது. இப்போது படித்தால் மிகச் சாதாரண கதையாக தோன்றினாலும், பிரமிப்பை ஏற்படுத்துவது, கதை வெளியான காலம். 90களின் ஆரம்பத்தில், ரீகாம்பினண்ட் டி.என்.ஏ தொழில்நுட்பம் என்றால் என்னவென்று தெரியாத கட்டத்தில் - தமிழ் கூறும் நல்லுலகிற்கு இது போன்ற கதைகளின் மூலமாக பாடம் எடுத்திருக்கிறார் சுஜாதா.

'சில்லு' - இரா.முருகனின் 'சைக்கிள் முனி' சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ​இந்த கதையை நண்பன் ஒருவனுக்கு படிக்க கொடுக்க, அவன் படித்த பிற்பாடு 'எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் பயமாயிருக்கிறது' என்றான். 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடப்பதாக கதை இருக்கிறது. ஒவ்வொரு பிறக்கும் குழந்தைக்கும், அவர்களின் உடலில் ஒரு சிலிக்கான் சில்லு பதிக்கப்படுகிறது. கதையின் நாயகன் ஆணாக இருப்பினும், அவனை பெண் என்று சில்லு கூறுகிறது. அந்த சில்லை வடிவமைத்த விஞ்ஞானிகள், அதில் ஒரு தகிடுதத்தம் செய்து விடுகின்றனர். அதனால் கதாநாயகன் என்ன பாதிப்படைகிறான் என்பதே கதை.

மரபணு மாற்றியமைக்கப்பட்டு சாப்பிட லாயக்கில்லாத முட்டைகோஸ், கட்டாயமாக்கப்படும் ஒரு பால் திருமணங்கள் போன்ற  இடைச்சொருகல்கள்,  சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் கட்டமைக்கும் Dystopian vision'ஐ கொண்டிருந்தாலும், மிகவும் சுவாரசியமாக கதையை நடத்தி செல்லுகின்றன.

இளங்கலை படித்து கொண்டிருந்த போது, அவ்வப்போது திண்ணை.காமை மேய்ந்து கொண்டிருப்பேன். அப்போது கண்ணில் சிக்கியது தான், ஹரன் பிரசன்னாவின் "மஹான்" சிறுகதை. சேமித்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மரபணுவை கொண்டு, பலபடியாக்கம் (Cloning) மூலம் மற்றொரு காந்தியை உருவாக்குகின்றனர். அவர் மேற்கொள்ளும் சவால்கள் தான் கதை. கதையில் சிற்சில கால வேறுபாடு குறைகள் இருந்தாலும், பாத்திர படைப்பில் செலுத்தப்பட்ட கவனம் தான் இச் சிறுகதை இன்றளவும் என் நினைவில் இருக்கிறது.

இரா.மு ஒரு முறை ஃபேஸ்புக்கில் இட்ட பதிவு இது. "தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகள் வெளிவராமல் இருக்க அல்லது குறைய ஒரு காரணம், யாருக்கும் அடிப்படை அறிவியல் கூறுகளை அறிய ஆர்வமின்மை" என்றார். பல வகையில் உண்மையே.

Thursday, March 31, 2011

ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடலை


பளார் என சத்தம் கேட்டது. என்னவென்று முழித்த பார்த்த பின் தான் தெரிந்தது, என் புட்டத்தில் அடி விழுந்திருந்தது. எதிரில் கோபாவேசமாக அப்பா. ”அடிச்சது கூட சொரணை இல்லாம தொரைக்கு அப்பிடி என்ன தூக்கம்.” என்று அப்பா கத்தினார். அப்பா பேசுவதே சமயத்தில் கர்ஜனை போல இருக்கும். இதில் கத்தினால் குலை நடுங்காமல் வேறு என்ன செய்வது. மணி ஐந்தே முக்கால் ஆகியிருந்தது. நான் இன்னும் எழாமல் இருந்தது தான் அப்பாவின் அதிகாலை ருத்ர தாண்டவத்தின் காரணம். அப்பா ரேடியோவில் பைபிள் நேரம் கேட்க ஆரம்பித்த போதே நான் எழுந்திருத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு நிமிடம் தூங்கலாம் என்ற என் சோம்பேறித்தனம் தான் காரணம். மெளனமாக எழுந்து கழிவறைக்கு சென்றேன். எனக்கு முன்னால் எழுந்திருந்த தம்பி என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான். காலக் கொடுமையை நொந்து கொண்டேன்.

அப்பா ஒன்றும் அத்தனை கோபக்காரர் இல்லை. இருப்பினும் அவரது இராணுவ அட்டவணையை நானோ, என் தம்பியோ தவறினால் தான் அவரின் கைகள் பரபரக்கும். எனக்கும், தம்பிக்கும் ஜென்ம சத்ரு உண்டென்றால் அது அப்பாவின் ரேடியோ தான். அது ஒரு பழைய மர்ஃபி ரேடியோ. 1976 மாடல். அந்த காலத்தில் மர்ஃபி ரேடியோவை வைத்திருப்பதே ஒரு கவுரவமாம். அப்பா சொல்வார். தனது முதல் மாத சம்பளத்தில் பாட்டிக்கு நகை எடுத்தது போக மிச்சத்தில் வாங்கியதாம். அதை உபயோகிக்கும் சூட்சமம் அப்பாவிற்கு மட்டுமே தெரியும். அப்பா இல்லாத நேரத்தில் ஒரு சமயம் அதை போட்ட போது பாடவில்லை. அப்பா சாவகாசமாக வந்து அதை இரண்டு தட்டு தட்டினார். பி.சூசிலா பாடினார். ரேடியோவை வைப்பதற்காக தனியாக ஒரு சதுர பலகை செய்து வைத்திருந்தார். அதை சுவற்றில் சாத்தி அதன் மேல் மர்ஃபியை வைத்திருக்கும் போது, ஏதோ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல் சமர்த்தாக இருக்கும். கல்லூரி காலத்தில் அவர் வைத்திருந்த ஃபிலெட்டா ட்ரான்சிஸ்டர் கூட இன்னும் வீட்டில் தான் இருக்கிறது. அது என்னவோ மர்ஃபி மீதான காதல் அவருக்கு ஓய்ந்த பாடில்லை.

அப்பாவின் ஒரு நாள் நிகழ்வுகளை, வானொலி அட்டவணையை வைத்து சொல்லி விடலாம். எத்தனை மணிக்கு எழுந்தாலும் ரேடியோ போட்டு விடுவார். உலகில் இருந்த அத்தனை தமிழ் வானொலி நிலையங்கள் அவருக்கு அத்துப்படி. நான்கு மணிக்கு எழுந்தால் சிங்கப்பூர் வானொலி, அதற்கு மேல் ரேடியோ வாடிகனின் தமிழ்ச் சேவை. ஐந்தே முக்கால் போல் ஆகாசவாணி. அது ஆரம்பிப்பது முன்னால் நானும், தம்பியும் எழுந்திருக்க வேண்டும். தப்பித் தவறி சரோஜ் நாராயன் சுவாமி செய்தி வாசிக்கும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தால் இதே போல் தான் புட்டத்தில் அடி விழுகும். தம்பியை அப்படி அடித்தால் சரி. ஒன்பதாவது படிக்கும் என்னையுமா?

அப்பாவின் காலை உடற்பயிற்சியில் பாதி, ரேடியோ கேட்பதில் மீதி எனக் கழியும். ஆறே முக்கால் செய்தி கேட்டது பத்தாது என்று ஏழாகால் செய்தியையும் கேட்பார். கொஞ்ச நேரம் பாட்டு கேட்பதற்காக இலங்கை வானொலி பக்கம் ரேடியோ நாபை திருப்பினால், சில சமயங்களில் என் முதுகில் அப்பாவின் கை பதிந்து புகை பறக்கும். பாட்டு கேட்கக் கூடாது என்பது அல்ல அப்பாவின் விருப்பம். அவர் செய்தி கேட்கும் போது வேறு எதுவும் குறிக்கிடக் கூடாது. மதுரை, திருச்சி, தூத்துகுடி வானொலி அலைவரிசைகளில் காலை ஏழரை மணிக்கு பாட்டு போடுவார்கள். சில சமயங்களில் அதற்கும் வேட்டு வைப்பது போல், சீன வானொலியின் தமிழ்ச் சேவையைக் கேட்கப் போய் விடுவார். சீன வானொலிக் காரர்கள் மதுரை பல்கலைக்கழகத்திற்கும், தஞ்சை பல்கலைக்கழகத்திற்கும் வந்து தமிழ் படித்து விட்டு போனார்களாம். அப்பா சொல்லி இருக்கிறார்

எட்டேகாலுக்கு தூத்துக்குடி வானொலியில் பழைய பாட்டு போடுவார்கள். அந்த சமயத்தில் காலைச் சாப்பாடு முடிந்து அனேகமாக நான் ஸ்கூலுக்கு போவதற்காக ஷீ அணிந்து கொண்டிருப்பேன். அப்பா அப்போது தான் உடற்பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருப்பார். விவரம் தெரிந்த பின் ஒரு நாள் நான் விடுப்பு போட்டிருந்த போது தான் தெரிந்தது, அப்பா உடற்பயிற்சி முடித்தவுடன் ரேடியோவை அணைத்து விடுவதில்லை என்று. எட்டரை மணிக்கு பழைய பாடல்கள் முடிந்த பின் கடுப்பேற்றும் மகளிர் நேரம், நேற்றைய நிகழ்ச்சி என்று எதையாவது கேட்டு கொண்டிருந்தார். குளிக்கப் போகும் நேரத்திலும் கூட குளியலறைக்கு வெளியே, கதவருகில் ரேடியோவை வைத்து கேட்டு கொண்டிருந்தார். நல்ல வேளை. குளியலறையின் உள்ளே மின்சார ப்ளக் இல்லை

பத்து மணிக்கு பெரும்பாலான வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி ஓயும் போது, அப்பா அலுவலகத்திற்கு செல்வதற்காக ஷீ மாட்டிக் கொண்டு இருப்பார். அப்பாவிற்கு கிரிக்கெட் பிடிக்காது. இல்லையென்றால் கிரிக்கெட் நடக்கும் சமயத்தில் அப்பாவோடு ரேடியோவும் அலுவலகத்திற்கு பயனப்பட்டு இருக்கும். திரும்ப ஒன்றரை மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வரும் அப்பா, வீட்டிற்குள் நுழைந்ததும் ரேடியோவை போட்டு விட்டு தான் முகம் கழுவுவார். வழக்கம் போல செய்தி ஓடும். அறக்கப் பறக்க அவர் சாப்பிட்டு முடிப்பதற்கும், செய்தி முடிவதற்கும் சரியாக இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும்.

ஆறு அல்லது ஆறரைக்கு வீட்டிற்கு வரும் அப்பா, திரும்ப ரேடியோ போட்டு விடுவார். கல்வி ஒளிபரப்புக் கூட அவர் காதிலிருந்து தப்பிக்காது. எனக்கும் தம்பிக்கும், தொந்தரவு இல்லாமல் தான் கேட்பார். ஏழரை மணிக்கு அம்மா சாப்பிட கூப்பிடும் போது பிலிப்பைன்ஸின் ரேடியோ வேரிடாஸ் தமிழ்ச் சேவை ஓடிக் கொண்டிருக்கும். அதில் சமயத்தில் ஏதாவது தமிழ் பாடல் ஒளிபரப்புவார்கள். ரேடியோ ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஏதேனும் அலுவலக வேலைகளை பார்த்து கொண்டிருப்பார். நானும் தம்பியும் படித்து முடித்த பின் ஒன்பதே கால் மணிக்கு படுக்கையை விரிக்கும் போது, பி.பி.சி தமிழோசையின் மங்கள நாதஸ்வர இசை கேட்கும். மெல்லிய ஓசையில் அவற்றை கேட்டுக் கொண்டே படுத்திருக்கையில், ஒன்பதே முக்காலுக்கு தமிழோசை முடியும் சமயத்தில் தூங்கி விட்டிருப்பேன்.

அப்பாவின் வானொலி கேட்கும் நேரம் சனி, ஞாயிறுகளில் கூடும். அதுவும் மாலை நேரங்களில் மொட்டை மாடி பால்கனியில் அமர்ந்து கொண்டு வானொலியில் பழைய பாடல்களைக் கேட்கும் போது, அப்பாவின் முகம் ஏதோ சொர்க்கத்தின் வாயிலை எட்டியது போன்ற மகிழ்ச்சியில் ஒளிரும். அந்த நேரத்தில் அவருக்கு இன்னும் இன்பமான ஒன்று அவர் வாயில் அறை படும். தேங்காயும், வறுகடலையும் அவர் வாயில் சட்னி ஆகிக் கொண்டிருக்கும். ஒரு சில் தேங்காய், அரைக் கைப்பிடி வறுகடலை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கைக்கும், வாய்க்கும் பயணப் படும்.

அப்பாவின் வானொலி நண்பர்களின் பட்டியல் போடுவது கொஞ்சம் கஷ்டமான காரியம். பத்தமடை கந்தசாமியிலிருந்து, தாராபுரம் கோவிந்தராஜன் வரை அவருக்கு அத்தனை நண்பர்கள். வாரம் ஒரு இருபது கடிதங்களாவது வானொலிகளுக்கும், வானொலி நண்பர்களுக்கும் எழுதுவார். ஒரு முறை கடிதம் எழுதிய நண்பருக்கும் மறு முறை கடிதம் எழுத குறைந்தது எட்டு மாதங்கள் ஆகும். தொலைபேசி கட்டணம் இமயத்தை தொட்டு கொண்டிருந்த காலத்தில், வானொலி நண்பர்களுடன் பேசுவதற்காக ஹாம் ரேடியோ லைசென்ஸ் வாங்க துடித்துக் கொண்டிருந்தார். அதற்கு தனியாக ஏதோவொரு பரீட்சை எழுத வேண்டி இருந்ததால், அலுவல்களை காரணம் காட்டி தள்ளி போட்டுக் கொண்டு இருந்தார்.

சில சமயங்களில் வானொலி அவருக்கு மருத்துவராகக் கூட ஆகியிருக்கிறது. அப்பா கல்லூரியில் படித்து கொண்டிருந்த சமயத்தில் சுற்றுலா போயிருந்த போது, அப்பாவின் ப்ரொபஸர் எல்லோரையும் அமைதியாக இருக்கும் படி கொஞ்சம் உச்சஸ்தாயில் கத்தினாராம். அப்போது அப்பாவின் நண்பர்உங்கள் நடை என்ன, அறிவென்ன, குணமென்ன, மனமென்ன, கோபம் வரலாமாஎன்ற பாட்டை பாடினாராம். ப்ரொபஸ்ர் உட்பட அனைவரும் கொல்லென சிரித்தனராம். என்னிடம், தம்பியிடமும் இதை சொல்லி அப்பா கல்லூரி நினைவுகளை அசை போட்டு கொண்ட்டிருந்த போது, இதை வானொலிக்கு எழுதி அனுப்புங்களேன் என்று கூறினேன். ஒரு நாள் அப்பாவிற்கு பயங்கரமான காய்ச்சல். அப்போது இலங்கை வானொலியில் அப்பா கூறிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்பாவின் பெயரைச் சொல்லி இதோ உங்களுக்காக அதே பாடலை காற்றலையில் தவழ விடுகிறோம் என்று அறிவிப்பாளர் சொன்ன போது அப்பாவின் நூற்றி மூன்று டிகிரி காய்ச்சலும் பறந்து போனது.

வீட்டின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வானொலி ஆக்ரமித்து இருந்தது. இதனால் தான் என்னவோ எங்கள் வீட்டில் தொலைக்காட்சிக்கு தேவை இல்லாமல் போய் விட்டிருந்தது. சாட்டிலைட் சேனல்களில், மெகா சீரியல்கள் ஆட்சி அமைக்க தொடங்கி இருந்த காலத்திலும் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்கிய பாடில்லை. எங்கள் காலனியிலே, ஏன் எங்கள் ஊரிலேயே அப்போது டி.வி இல்லாத வீடு எங்கள் வீடாகத் தான் இருக்கும். அம்மா டி.வி வாங்க நச்சரிக்க ஆரம்பித்த சமயத்தில் எனக்கு பொதுத் தேர்வுகள் வந்து விட்டிருந்தன. அதை காரணம் காட்டி அப்பா டி,வி வாங்குவதை தள்ளி போட்டார்.

கல்லூரி வந்த பிற்பாடு ஒரு வழியாக வீட்டில் டி.வி வாங்கி ஆயிற்று. ஆனாலும், அப்பாவின் ரேடியோ மோகம் குறையவில்லை. அப்பாவின் ப்ரோமோஷன்கள், அவர் ரேடியோ கேட்கும் நேரத்தை சுருக்கியிருந்தன. கொலஸ்ட்ரால் சராசரிக்கு மேல் சிறிது ஏற ஆரம்பித்தால் சனி, ஞாயிறு மாலைகளில் அறைபடும் தேங்காயும் காணாமல் போயிருந்தது. மர்ஃபி மக்கர் செய்யும் சில நேரங்களில் அப்பா பழைய ஃபிலெட்டாவை தட்டிக் கொண்டிருந்தார். நிறைய மாற்றங்கள் வந்தாலும் அப்பாவும், ரேடியோவும் பிரியாத இணைகளாகத் தான் இருந்தார்கள்.

எனது ரசனைகளும் மாற ஆரம்பித்தன. பழைய பாடல்கள் கசந்த நாட்கள் போக, இரவு வேளையில் அவை இல்லாமல் தூங்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. வேலை விடயமாக வெளிநாடு சென்றிருந்த போது அப்பாவிற்காக வாங்கிய -பாட் கடைசியில் தம்பி கைக்குத் தான் போனது. அப்பாவிற்கு என்று தேடி பிடித்து ஒரு வஸ்துவை வாங்கினேன். அது இணைய வானொலி. அகண்ட அலைவரிசை இணைப்பில் சொருகினால் போதும், அப்பாவின் விருப்பமான அத்தனை வானொலிகளும் கேட்கலாம்.

திரும்பவும் வெளிநாடு செல்ல வேண்டிய சூழல். அம்மாவுடன் தொலைபேசி தான் துணை ஆகியிருந்தது. ஒரு சமயம் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், எனது பால்ய காலம் முழுவதும் நான் பழகியிருந்த ஓசை கேட்டது, அது மர்ஃபியின் கொர, கொர சத்தம். மனதிற்குள் மெதுவாகச் சிரித்துக் கொண்டேன்.

Share