நானும் அப்பாவும் இணைந்து கழித்த பொழுதுகள் ஏராளம். அம்மாவிடம் சொல்லாமல் நானும், அப்பாவும் பைக்கில் ஒரு குட்டி பிக்னிக் போய் விட்டு, பின்னர் இருவரும் அம்மாவிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் அனுபவம் அலாதியானது. எனக்கு ஒன்பது வருடம் கழித்து பிறந்த என் தம்பி, கொஞ்ச காலம் என் இடத்தை பிடித்து கொண்டான். பெரும்பாலும் நானும், அப்பாவும் இணைந்து ஆங்கில படங்களுக்கு செல்வோம். ஆனால், என்னவோ அப்பாவுடன் பார்த்ததில் மிகவும் பிடித்த படம் “மகாநதி”. அப்பா எந்தளவிற்கு என்னை கட்டற்று வளர்க்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஒரு உதாரணம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை சென்னை வந்திருந்தோம். அப்போது கலைவாணர் அரங்கில் “மோக முள்” திரைப்படம் பகல் காட்சியாக ஓடியது. அந்த படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். பிற்காலத்தில் கொஞ்சம் விபரம் அறிந்து அந்த படத்தை பார்த்த போது, அப்பா எப்படி என்னை இத்தனை மெச்சூர் கண்டெண்ட் நிறைந்த படத்திற்கு என்னை அழைத்து சென்றார் என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது.

கேபிள் கனெக்ஷன் இல்லாத வீடு எங்களுடையது. யாராவது எங்கள் வீட்டை அடையாளம் காட்ட வேண்டுமெனில், “அதோ தெரியுது பாருங்க ஆண்டனா வைச்ச வீடு. அது தான்” என்பார்கள். அப்போதெல்லாம் ஞாயிறு மதிய பொழுதுகளில் தூர்தர்ஷனில் மாநில மொழி திரைப்படம் திரையிடுவார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் (1999) போது ஒரு முறை, பாலு மகேந்திராவின் “அழியாத கோலங்கள்” படத்தை திரையிட்டார்கள். நானும் ஆர்வத்துடன், அப்பா அருகில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். எங்கிருந்தோ வந்த அம்மா, “இந்த படத்தையெல்லாம் எதுக்கு சின்ன பையனை பார்க்க விடுறீங்க” என்று டி.வியை அணைத்தார். எனக்கோ செம கடுப்பு, “ஏம்மா பார்க்கக் கூடாது" என்று சற்றே கோபமாக கத்தி விட்டேன். அதற்கு அப்பா,”ஏன் பாத்தா என்ன. எப்படினாலும் அவன் அடலஸண்ட் ஸ்டேஜில் தானே இருக்கான். இதுவும் அந்த ஸ்டேஜில் இருக்கிற பசங்களை பத்தின படம் தானே. பார்த்தா என்ன” என்றார். ”அதெல்லாம் பார்க்க கூடாது” என்று அம்மா அவள் வேலையை பார்க்க சென்றுவிட்டாள். இதுக்கு மேல டி.வி போட்டா ஒரு வேளை என் முதுகில் புகை வரலாம் என்பதால் நானும் அடக்கி வாசித்தேன்.
பின்னர் கல்லூரி வந்த பின் ஒரு முறை குமுதம் ‘தீராநதி’யில் பாலுமகேந்திராவின் பேட்டியை படித்தேன். அதில் ‘அழியாத கோலங்கள்’ தன்னுடைய பதின்ம பருவத்தின் பிரதபலிப்பு என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த படத்தை பற்றி அவர் கூறியது எனக்கு அந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தை கூட்டியது. ஆனால், கடந்த மாதம் வரை இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த மாதம் யூடியுபில் மேய்ந்து, ஆய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த படம். “கண்டேன் பொக்கிஷத்தை” (சேரன் படம் இல்லீங்கோ) என்று குதித்தது மனம். ஒரே சிட்டிங்கில் முழு படத்தை பார்த்த போது எனது பதின் பருவ நினைவுகளில் மூழ்கி போனேன்.
”அமெரிக்கன் பைய்” படத்தை தழுவி வெந்தும் வேகாமல், “பாய்ஸ்” என்றும், “துள்ளுவதோ இளமை” என்று ரெண்டு படம் எடுத்தார்கள். அந்த படங்களை எல்லாம் ஏன் பார்த்தேன் என்று நினைக்க வைத்து விட்டது இந்த படம். விடலை பருவத்தில் செய்யப்படும் சேட்டைகளும், அந்த பருவத்திற்கு உரிய ஆசைகளும் நாசூக்காக எடுத்து சொல்லப்பட்ட திரைப்படம் இதுவாகத் தான் இருக்கும். மூன்று விடலைப் பருவ நண்பர்கள், அவர்களின் ஆசிரியை, நடுத்தர வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் போஸ்ட் மாஸ்டர், ஊர் பொதுவில் நடனமாடும் கனிகை, போன்ற சுவாரசியமான பாத்திர படைப்புகள்.
ரயில்வே க்ராஸிங்க் கேட்டில் உட்கார்ந்து ரயிலுக்கு டாட்டா சொல்வது, அத்தை மகளிடம் தயங்கி தயங்கி ராத்திரி நேரத்தில் பேசுவது, நடன கனிகையிடம் உடலுறவு கொள்ள ஆணுறையை எடுத்து கொண்டு அவளிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் முழிப்பது, அவளிடம் தண்ணி வாங்கி குடித்து விட்டு ஆணுறையை பலூன் போல் ஊதி எதையோ சாதித்து விட்டது போல் ஆடி வருவது, போஸ்ட் மாஸ்டரும் நடன கனிகையும் உடலுறவு கொள்வதை மறைந்திருந்து பார்ப்பது, தனது வகுப்பாசிரியையை டாவடிப்பது, அவள் காலால் இட்ட பணியை தலையால் செய்வது போன்ற விடலை பருவத்திற்குரிய சேட்டைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகளை தமிழில் எந்தவொரு திரைப்படமும் ஆவணபடுத்தியதாக எனக்கு நினைவில்லை.
 |
| சலீல் செளத்ரி |
இசை - சலீல் செளத்ரி. இந்தி திரைப்பட உலகின் இசை மேதையாக கருதப்படும் திரு.செளத்ரியை எப்படி இந்த படத்திற்கு இசையமைக்க பாலு மகேந்திரா சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. அவர்களின் நண்பன் இருந்த பொழுதில் பிண்ணனி இசையற்ற அந்த நிசப்தம், சலீல் செளத்ரியின் இசை திறமையை தான் வெளிபடுத்துகிறது. இன்றைய இசையமைப்பாளர்கள் இதை பார்த்து தெரிந்து கொண்டால் பரவாயில்லை. தேவையற்ற நேரங்களில் எலக்ட்ரிக் கிடார் அலறுகிறது (”ஆயிரத்தில் ஒருவன்” - ஜி.வி.ப்ரகாஷ், தி கிங் அரைவ்ஸ், “விண்ணைத் தாண்டி வருவாயா” - ஏ.ஆர்.ரஹ்மான், அநேக தருணங்கள்)
அப்பாவிடம் இந்த படம் பார்த்ததை பற்றி தொலைபேசியில் பேச்சு வாக்கில் சொல்ல, மெதுவாக சிரித்தார். ஒரு அப்பாவின் ஆதங்கத்தோடு “படத்தை பாரு, அதே சமயம் படிச்சு வேலை வாங்குற வழியையும் பாரு” என்றார்.