Saturday, March 6, 2010

ஆலிஸின் அற்புத உலகம் (2010)


ஒருவரை பார்க்கும் போதோ அல்லது ஒரு சம்பவம் நடக்கும் போதோ, அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது அல்லது இது எங்கோ நடந்தது போல இருக்கும் உணர்வை 'Deja Vu" என்று கூறுவர். அதன் பின்னணியை ஆய்ந்தால் அவரை அல்லது அந்த சம்பவத்தை நீங்கள் ஒரு வேலை உங்கள் கனவில் கண்டு இருக்கலாம் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கனவுகளில் நடைபெறும் சம்பவங்கள் இன்று வரை உளவியலாளர்களுக்கு பெரும் சவாலாகவும், புதிரானதகவும் இருக்கின்றது. நம் ஆழ்நிலை மனதில் தோன்றும் காட்சிகள், ஒரு வகையில் பார்த்தால் நம் புற உலகில் தோன்றும் காட்சிகளின் உருவகமே. லூயி கரோல் (Louie Carol) என்னும் சார்லஸ் லுட்விஜ் டாட்க்சன் (Charles Lutwidge Dodgson) எழுதிய ஆலிஸின் அற்புத உலகமும் ஒரு வகையில் புற உலகின் உருவகபடுத்தபட்ட கனவுதான்.

லூயி கரோல் தன் நண்பரின் மகளான ஆலிசுக்கு கற்பனை கலந்து சொன்னது தான் ஆலிஸின் அற்புத உலகம். அதை எழுதித் தருமாறு ஆலிஸ் கேட்க 1865 ஆம் ஆண்டு அதை ஒரு கையெழுத்து பிரதியாக எழுதினார். பின்னர் 1866 இல் அந்த பிரதி புத்தகமாக வெளி வந்தது. மிகச் சிறப்பாக விற்ற அந்த புத்தகத்தின் தொடர்ச்சியாக Through the looking glass என்ற நூலை எழுதினர். இந்த இரு நூல்களும் குழந்தைகள் மட்டுமல்லாது, பெரியவர்களையும் ஈர்த்தது. அதை படித்தவர்கள் தங்களது கனவுகளில் ஆலிஸின் அற்புத உலகத்தை கண்டனர். வெளிவந்து 145 வருடங்களாகியும் இன்றும் பல வாசகர்களை ஈர்த்து கொண்டே இருக்கிறது. ஒரு வகையில் ஹாரி பாட்டர் கூட ஆலிசினால் கவரப்பட்டு தான் எழுதப் பட்டது என்று அதன் படைப்பாளர் ஜே.கே.ராவ்லிங் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆலிசின் அற்புத உலகம் பலரால் பல முறை திரைப்படமாக எடுக்கப் பட்டுள்ளது. அவை அனைத்தும் மூலக்கதையின் சாரத்தை ஒட்டியே படமாக்கப் பட்டவை. இயக்குநர் டிம் பர்டன் (Tim Burton) எட் வுட், ஸ்வீனி டாட், பிக் ஃபிஷ், ஸ்லீப்பி ஹாலோ போன்ற சிறந்த படங்களைத் தந்தவர். அவரின் படங்கள் பெரும்பாலும்
ஃபேண்டஸி மற்றும் இருண்ட கனவுலகம் பற்றிய கதைகளாகத் தான் இருக்கின்றன. ஆலிசின் அற்புத உலகம் திரைப்படமும் அதே போல் தான் அவருடைய இயக்கும் திறமைக்கு சான்றாக இருக்கின்றது. இருப்பினும் இரு மூல நாவல்களின் கதைக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை. இரு நாவல்களின் கதையில் உள்ள கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு புது திரைக்கதையை இந்த படத்திற்காக உருவாக்கி உள்ளனர்.

இந்த இடத்தில் தான் படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் - எல்லோரும் இந்த இரு மூல நாவல்களையும் படித்திருக்க மாட்டர். முக்கியமாக ஒரு ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகள். இந்த திரைப்படம் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தாலும், குறைந்த பட்சம் இரு நாவல்களின் கதையைத் தெரிந்தால் தான் உங்களால் இந்த திரைப்படத்தை முழுமையாக ரசிக்க இயலும். இதனால் தான் இப்படம் விமர்சகர்களிடம் செமத்தியாக அடி வாங்கி கொண்டு இருக்கிறது.

கதை: சுருக்கமாகவே சொல்லிட முடியாத கதை. பதின்ம வயதைத் தாண்டி திருமண வயதை அடைந்த ஆலிசிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தனது நிச்சயதார்த்த தினத்தில் அந்த ஏற்பாடுகள் பிடிக்காமல், ஒரு விசித்திரமான முயலை பின் தொடரும் ஆலிஸ் ஒரு முயல் வளைக்குள் விழுகிறாள். அவள் வந்து விழுவது அற்புத உலகில். அற்புத உலகை சிவப்பு அரசி தன் வசம் எடுத்துக் கொண்டதை அறிகிறாள். அதை எப்படி வெள்ளை அரசிக்கு, பைத்தியக்கார தொப்பிக்காரன் (Mad Hatter) உதவியுடன் மீட்டுத் தருகிறாள் என்பது தான் மூலக் கதை. இதன் நடுவில் மூல புத்தகங்களில் குறிப்பிடப் படும் சம்பவங்களான மேட் டீ பார்ட்டி, ஆலிஸ் சிறியவள் ஆதல் போன்றவை அப்படியே இதன் திரைக்கதையில் உள்வாங்கப் பட்டுள்ளன.

மூலக் கதையில் உள்ள கதாப்பாத்திரங்கள் மாறாமல் அப்படியே எடுத்தாளப் பட்டுள்ளன. மேட் ஹாட்டராக ஜானி டெப் (பர்டனுடன் இவருக்கு 7வது படம்), சிவப்பு அரசியாக ஹெலினா போன்ஆம் கார்டர் (பர்டனுடன் இவருக்கு 6வது படம்) ஆகியோர் மிகச் சிறப்பாக அந்த பாத்திரங்களில் பொருந்தி போகின்றனர். ஆலிசாக
Mia Wasikowska, வெள்ளை அரசியாக Anne Hathway, நீல கூட்டுப்புழுவின் குரலாக Alan Rickman போன்ற பெரிய நடிகர்களின் திறமைகள் படத்தில் உபயோகப் படுத்தபட்டுள்ளன. லூயி கரோலின் கதாப்பாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது செஷாயர் பூனை. அந்த பாத்திரம் இந்த படத்தில் மிகச் சிறப்பாக எடுத்தாளப் பட்டுள்ளது. அதற்கு குரல் கொடுத்திருப்பவர் பிரபல ப்ரிட்டிஷ் நடிகர் Stephen Fry.

விமர்சகர்களின் வாணலியில் இந்த படம் தாளிக்க படுவதற்கு முக்கிய காரணம், அழுத்தமில்லாத ஆழமில்லாத கதாபாத்திர அமைப்புகள், சிறு மற்றும் ஒன்றிரண்டு பெரிய ஓட்டைகளைக் கொண்ட திரைக்கதை. திரைக்கதை ஆசிரியர் லூயி கரோலை கரைத்து குடித்திருக்க வேண்டும். அதனால் தான் என்னவோ படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கரோலின் இரு நாவல்களையும் வாசித்தவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்.

அதை விடுத்து பார்த்தால் இந்த திரைப்படம் ஒரு மிகச் சிறப்பான ஒரு காட்சி விருந்து. ஆலிசின் அற்புத உலகம் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நம் கண் முன் கொண்டு வந்திருந்தனர். ஐமேக்ஸ் 3டியில் இந்த படத்தை பார்த்த போது பல நேரங்களில் என்னையறியாமல் வாயைப் பிளந்து ஆலிசின் அற்புத உலகத்தில் தொலைந்து விட்டிருந்தேன். ’அவதார்’ அளவிற்கு படத்தின் விஷுவல் அத்தனை அழகாக அமைக்கப் பட்டிருந்தது.

அவதார் ஒரு வகையில் மசாலா படம் தான் என்றாலும், காட்சி அமைப்புகளின் துல்லியமும், திரைக்கதையும் தான் அதன் வெற்றிக்கு ஆதாரமாய் இருந்தது. இந்த படத்தில் காட்சி அமைப்புகளின் துல்லியம் இருந்தாலும், திரைக்கதை ஒன்றிரண்டு கணங்களில் அயர்ச்சியைத் தான் ஏற்படுத்துகிறது. ஃபேண்டஸி திரைப்பட ஆர்வலர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள், முக்கியமாக 3டியில்...

Saturday, February 27, 2010

பாஸ்கர் சக்தியின் ‘சாதனமும்’, க.சீ.சிவக்குமாரின் ‘காற்றாடையும்’



என்னுடைய எட்டாவது வயதில், பொழுதே போகாத கோடை விடுமுறை மாலை ஒன்றில், என் தாத்தா ‘இந்தா இதைப் படி’ என்று என் கையில் ஒரு புத்தகத்தை திணித்தார். அது கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’. ஏதோ ஒரு வேகத்தில் அந்த புத்தகத்தை படித்து முடிக்க தொடர்ந்து ’பட்டினத்தார் கதை’,’வள்ளலார் வரலாறு’ என்று அனைத்தையும் ஒரு வாரத்தில் படித்து முடித்தேன்.  தாத்தா போடிநாயக்கனூர் போன போது அங்கு இருந்த புத்தகக் கடை ஒன்றில் விகடன் வெளியீடான ‘ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ சிறுகதை தொகுப்பை வாங்கி வந்தார். அதில் எக்காலத்திலும் என்னால் மறக்க முடியாத கதைகளாக, ‘ராமய்யர் ஹோட்டல்’, ‘டிசம்பரும் மார்கழியும்’, ‘சந்தனக் கூடு’ ஆகியன இருந்தன. இதை எழுதிய எழுத்தாளர் பெயர்கள் நினைவில் இல்லை. அந்த புத்தகத்தையும் காணவில்லை.


மேலும் சுஜாதாவின் ‘பிள்ளையார் பேசுகிறார்’ (இதுவும் சரியான தலைப்பா என்று நினைவில் இல்லை) என்ற கதையையும் அதில் தான் படித்தேன் என்று நினைவு. அந்த கதை ‘செல்லமே’ திரைப்படத்தில் விஷால், கிரீஷ் கார்னட் வீட்டிற்கு ரெய்டு செல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும். ஆக, இப்படித் தான் ஆரம்பித்தது என் சிறுகதை வாசிப்பு. 

அப்பா அவ்வப்போது ‘கணையாழி’ புத்தகம் வாங்கி வருவார். அதில் வரும் கதைகள் புரிந்ததோ இல்லையோ வாசித்தேன். 1995 ஆம் ஆண்டு அதாவது நான் ஆறாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எங்கள் வீட்டிற்கு ’இந்தியா டுடே’ செய்தித்தாள்களோடு சேர்ந்து வரும். அப்போது எழுத்தாளர் வாசந்தி அவர்கள் தான் அதன் எடிட்டராக இருந்தார் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

அப்போது பளபளப்பான அட்டை படத்துடன் ஒரு புத்தகம் ஒரு நாள் வந்திருந்தது. விலை அப்போதே 100 ரூபாய். ஆனால் அந்த அட்டையில் போடப்பட்டிருந்த டிஸைனுக்கே 100 ரூபாய் தரலாம். அழகாக எம்பாஸ் செய்யப்பட்ட நவீன ஓவியத்துடன் இருந்த அட்டைப்படம் (கடைசியாக 2008ல் இந்தியா சென்ற போது அந்த அட்டையைக் காணவில்லை). அந்த புத்தகத்தை எடுத்து பார்த்த போது நிறைய சிறுகதைகள், கவிதை, குறுநாவல்கள் (சி.சு.செல்லப்பாவின் ’வாடிவாசல்’ மறுவெளியீடு செய்யப்பட்டது) ஆகியன இருந்தன. அதன் வகை, தொகைகள் அப்போது தெரிந்திருக்கவில்லை. வழக்கமாக ஏதோ கதை புத்தகத்தை படிப்பது போல் படித்து முடித்தேன்.

அதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ‘சாதனம்’ என்னும் கதை. சாதாரணமாக ஒரு மில் வேலைக்கு கிராமத்தில் இருந்து செல்லும் ஒருவன் வேலைக்கு செல்லும் பேருந்தை தவற விட, அங்கே திரியும் இளவட்டங்களுடன் இணைந்து பஞ்சாயத்து தொலைக்காட்சியில் அன்று நடக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்சை பார்க்கிறான். மிகச் சாதாரணமான கதையாக இருந்தாலும், மிகவும் அழகான வர்ணனையுடன் ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் புரியும் வகையில் எழுதியிருந்தார். பஞ்சாயத்து டி.வியின் கதவு பற்றி அவர் அளித்த வர்ணனையும் அதனைத் தொடரும் நிகழ்வுகளும் எனது அப்போதைய கிரிக்கெட் நிகழ்வுகளை பிரதிபலித்தன. இருந்த அத்தனை கதைகளில் அது தான் அப்போது பிடித்த கதையாக இருந்தது.

மேற்கூறிய சிறுகதை அறிமுக எழுத்தாளருக்கான இரண்டாம் பரிசு பெற்ற கதையாக இருந்தது. முதல் பரிசு பெற்ற கதை என்னவென்று பார்த்தால் ‘காற்றாடை’ என்ற கதை இருந்தது. நண்பனுடன் திரைப்படத்திற்கு செல்லும் ஒருவன், வழியில் ஆடையில்லாமல் நிர்வானமாய் அலையும் ஒரு புத்தி சுவாதீனமற்ற ஒருவனை பார்க்கிறான். அந்த நிர்வாண மனிதனுக்கு கதை நாயகன் வேட்டி வாங்கி கொடுக்க அதை ஒரு வித ஏளனப் புன்னகையுடன் அவன் பெற்று கொள்கிறான். மறுநாள் நம் நாயகர் பார்க்க திரும்பவும் அதே நிர்வானத்துடன் அலைகிறான். முதலில் படித்த போது இந்த கதை பிடித்திருக்கவில்லை.

நான்கு வருடங்கள் கழித்து பத்தாம் வகுப்பு விடுமுறையில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திரும்பவும் அந்த புத்தகம் கண்ணில் பட்டது. அப்போது வாசித்த போது தான் முந்தைய கதையை எழுதியது ‘பாஸ்கர் சக்தி’ என்றும், பின்னவர் ‘க.சீ.சிவக்குமார்’ என்று தெரிந்தது. மற்ற கதைகளை எல்லாம் படித்த பார்த்த பின் தான் தெரிந்தது, எழுத்துலக ஜாம்பவான்கள் அனைவரும் அதில் எழுதியிருக்கின்றனர் என்று.

இதை ஏன் இப்போது எழுதுகிறேன் என்றால், ஒரு முறை பாஸ்கர் சக்தி அவர்களை சந்தித்த போது அவருடைய ‘சாதனம்’ சிறுகதையைப் பற்றி கூறினேன். அப்போதும் கதையின் தலைப்பு எனக்கு மறந்து விட்டிருந்தது. வீட்டிற்கு வந்த போது அதை மறு வாசிப்பு செய்தேன். ஏனோ தெரியவில்லை அதைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதி விட்டேன். பாஸ்கர் சக்தி சார்!! இந்தியா டுடே உங்களுடைய கதையின் கட்டமைப்பில் ஒரு சொதப்பல் செய்து இருந்தனர். அதையும் இப்போது தான் பார்த்தேன். அது என்னவென்று தெரிந்ததா?

Friday, February 26, 2010

சுஜாதா - என்னை உருவாக்கிய பேராளுமை


ஒரு எட்டு வயது இருக்கும் போது தான் முதன் முதலில் சுஜாதாவின் சிறுகதையை படித்தாக நினைவு. விகடன் வெளியீடாக ‘ட்விங்கிள்,ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்ற சிறுகதை தொகுப்பில் இருந்த ‘பிள்ளையார் பேசுகிறார்’ (கதையின் தலைப்பு சரியா என்று நினைவில்லை) என்ற கதையை தான் முதன் முதலில் படித்தேன். பிள்ளையாரே அந்த கதை சொல்வதாக அமைந்து இருக்கும். அந்த சிறுகதை பின்னர் ‘செல்லமே’ படத்தில் விஷால், கிரீஷ் கார்னட் வீட்டிற்கு ரெய்டு செல்வது போல் அமைக்கப் பட்டிருக்கும். தங்கத்திற்கு பாதரசம் பூசினால் வெள்ளி போல் தோற்றமளிக்கும் என்ற இரசாயண பாடத்தை அந்த கதை மூலம் தான் கற்றுக் கொண்டேன். முதலில் அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்தேன். பின்னர் அப்பா ‘கணையாழியின் கடைசி பக்கங்களில்’ வந்த அவருடைய புகைப்படம் ஒன்றை காட்டினார்.

இப்படித் தான் ஆரம்பித்தது எனது சுஜாதா வாசிப்புப் படலம். அவ்வப்போது குமுதம், விகடனில் வந்த கட்டுரைகள் மூலம் எனது வாசிப்பு பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. 10 ஆம் வகுப்பு விடுமுறையில் திரும்ப தீவிரமான வாசிப்பை தொடர்ந்தேன். 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் மனித மரபணுக்களின் தொகுப்பான ‘ஹியூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்’ தொடங்கப் பட்டது. இது ஒரு வகையில் எனக்கு பயோடெக்னாலஜியின் மீதான ஆர்வத்தை அதிகப் படுத்தியது. ஆயினும் அது என்ன, ஏதென்று அவ்வப்போது ஹிந்துவில் வெளிவந்த சில கட்டுரைகள் மற்றும் மனோரமா இயர்புக் போன்றவை விளக்கினாலும் அது பற்றிய எளிமையான விளக்கம் இல்லாத்தால் அவ்வளவாக எனக்கு புரியவில்லை.

அப்போது தான் சுஜாதா ‘ஜீனோம்’ என்ற தொடரை குமுதத்தில் எழுத, பின்னர் விசா பப்ளிஷர்ஸ் வெளியீடாக புத்தகமாக வந்தது. அது வாங்கி வாசித்த பின்னர் தான் ஜீனோம் என்றால் என்ன, அதனால் என்ன பயன், அது உருவாக்கும் ஆராய்ச்சி வாய்ப்புகள் என்ன என்பது தெளிந்த நீரோடை போல் புரிந்தது. அந்த புத்தகம் தான் என்னை இளங்கலை பொறியியல் படிப்பில் பயோடெக்னாலஜி எனும் உயிரி தொழில்நுட்பத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்ய வைத்தது.

ஒரு வகையில் என் வாழ்வை மாற்றிய ஆளுமை என்றே சுஜாதாவை சொல்லாம். அதனால் தான் இந்த தலைப்பை தந்து உள்ளேன். இளங்கலை படிப்பில் சேர்ந்த பின் என்னுடைய பல்கலை நூலகத்தில் உள்ள சுஜாதாவின் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்தேன். அவரின் மிச்ச், சொச்ச புத்தகங்கள் அனைத்தையும் திருச்சி கார்முகில் வாடகை நூலகத்தில் வாசித்து முடித்தேன். ஒரு கட்டத்தில் அவரின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிக்க ஆரம்பித்தால், இரண்டு பக்கம் போன பின் தான் தெரியும் அதை ஏற்கனவே படித்து விட்டேன் என்பது.

2006ஆம் ஆண்டில், இளங்கலை நான்காம் ஆண்டு படித்து கொண்டு இருந்த போது ‘பேசும் பொம்மைகள்’ நாவலை ஒரு பேருந்து பயணத்தில் வாசித்து கொண்டு இருந்தேன். 1991இல் வெளிவந்த அந்த நாவலில் ‘சைக்ளோஸ்போரின்’ (Cyclosporin) என்ற மருந்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்த மருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது உபயோகப் படுத்தப் படும். ஆனால் அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும். அதைப் பற்றி இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் என்னுடைய இறுதி ஆண்டு ப்ராஜெக்ட், உயிரி தகவலியில் (Bio Informatics) முறைகள் படி சைக்ளோஸ்போரினுக்கு மாற்று மருந்து கண்டு பிடிப்பது. ஒரு நிமிடம் புத்தகத்தை மூடி வைத்து விட்டு ‘இந்த ஆள் எழுதாதது என்று எதுவுமே இல்லையா’ என்று ஆச்சரியப் பட்டு கொண்டேன்.

விஞ்ஞான கட்டுரைகளை ஒரு பள்ளி மாணவனும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு எழுதிய பேராளுமை அவர். விஜய் டி.வியில் மூன்று வருடங்களுக்கு முன் ஓளிபரப்பான ‘சிகரம் தொட்ட மனிதர்கள்’ நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டி ஒன்றை சமீபத்தில் தான் பார்த்தேன். அதிலும் மனிதர் அறிவியல் கட்டுரைகளையும் அதன் அவசியத்தையும் கூறிக் கொண்டு, போகிற போக்கில் ‘நானோடெக்னாலஜி’ பற்றி கூறினார். இப்போது முதுகலை படிப்பில் நானோடெக்னாலஜி முறைப்படி ப்ராஸ்டேட் கான்சருக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இதையும் இவர் விட்டு வைக்கவில்லையா என்று மனதிற்குள் சிரித்து கொண்டேன்.

நினைத்து பார்க்கும் போது என் வாழ்வின் முக்கியமான தருணத்தை தீர்மானிப்பதில் சுஜாதா பெரும் பங்கு வகித்திருக்கிறார். அவரைப் பற்றி இதற்கு மேல் என்ன எழுதுவது என்று யோசிக்கும் போது இவர் இல்லாத வெறுமை ஒன்று தான் என்னை சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் சுஜாதாவை பற்றி நினைக்கும் போது எல்லாம் நண்பர்களுடன் பேசி சிரித்த ‘மெக்ஸிகோ சலவைக்காரி’ ஜோக் நினைவுக்கு வந்து என் முகத்தில் புன்முறுவல் ஏற்படுத்த தவறுவதில்லை...

Share