Thursday, February 11, 2010

பாலு மகேந்திராவின் கதை நேரம்




வீட்டில் அப்போது கேபிள் இணைப்பு இல்லை. அதற்க்கு சொல்லப்பட்ட காரணம் , எனது படிப்பின் லட்சணம். எல்லாவற்றுக்கும் சுதந்திரம் கொடுத்த அப்பா ஏனோ இதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்து விட்டார். ஒரு அளவை மீறி கார்ட்டூன் நெட்வொர்க் பார்த்ததால் வந்த விளைவு. வீட்டில் குவிந்து கிடந்த புத்தகங்களால் தொலைக்காட்சியைக் கிட்டத்தட்ட மறந்திருந்த நேரம். அப்போது வந்த வார இதழ் ஒன்றில் பாலு மகேந்திரா தொலைக்காட்சியில் நாடகம் இயக்கப் போகிறார் என்று செய்தி இருந்தது. அய்யோ பாலு மகேந்திராவின் நிலை இப்படியா ஆக வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. அதன் பின்னர் தான் தெரிந்தது தமிழ் எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த சிற்கதைகளை குறும்படங்களாக இயக்கப் போகிறார் என்று.

ஒரு மாலை நேரச் சூழலில் அம்மா போட்டுக் கொடுத்த தேநீருடன் பாலு மகேந்திராவின் படம் பார்க்கும் அனுபவமே அலாதி. ஏனோ அப்பாவிற்கு பாலு மகேந்திராவை சுத்தமாகப் பிடிக்காது. காரணம் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகை ஷோபா. ’மூன்றாம் பிறை’ பார்த்து விட்டு நான் அழுத அழுகையில் இனிமேல் அந்த படத்தை நான் பார்க்கவே மாட்டேன் என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால் ‘சந்தியா ராகம்’,’வீடு’,’சதிலீலாவதி’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலித்திருக்கவில்லை.

எப்படியாவது இந்த தொடரைப் பார்க்க வேண்டும் என்று அம்மாவிடம் கேபிள் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கொக்கி போட்டு பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை. ஒரு முறை நண்பனின் வீட்டிற்கு சென்ற போது, அசோகமித்திரனின் ஒரு சிறுகதை படமாக்கப் பட்டு ஓடிக் கொண்டிருந்தது. அதன் தலைப்பு கூட நினைவில்லை. ஒரு பிராமணருக்கும், அவர் வீட்டின் எதிரில் தள்ளுவண்டியில் மீன் வறுத்து விற்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும் கதை. அதற்கு பின் ஒரு எபிஸோட் கூட பார்க்கவில்லை.

வெகு நாட்கள் கழித்து நானும் நண்பர் முரளியும் உரையாடிக் கொண்டிருந்த போது இதைப் பற்றி கூறினேன். அதற்கு அவர் சமீபத்தில்
பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற போது கதை நேரம் டி.வி.டியைக் காட்டியதாகவும், அது பவா செல்லத்துரை அவர்களின் வம்சி பப்ளிசர்ஸ் வாயிலாக வெளி வரப் போவதாகவும் கூறினார். ஒரு வேளை இப்போது வந்து இருக்கலாம், எதற்கும் டி.நகர் நியூ புக் லேண்டில் பார்க்கலாம் என்று கூறினார். கி.ராவுடன் ஞாநியின் ‘கேணி’யில் நடந்த சந்திப்பிற்கு மறுநாள் நானும் அவரும் அங்கு சென்றோம். நாங்கள் நினைத்தது போலவே அங்கு டி.வி.டி இருந்தது.

கதை நேரத்தில் மொத்தமாக 52 குறும்படங்கள். டி.வி.டியின் முதல் பாகமான இதில் ஆறு குறும்படங்கள் இருக்கின்றன. சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்', சுஜாதாவின் 'நிலம்', பிரபஞ்சனின்’ஒரு மனுஷி', திலகவதியின் ‘ஒரு முக்கோண காதல் கதை’, சு.சமுத்திரத்தின் ‘காத்திருப்பு’ மற்றும் ஜெயந்தனின் ’காயம்’ ஆகிய சிறுகதைகளை இந்த முதல் பாகத்தில் தொகுத்து உள்ளனர்.

சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்'
சு. ராவின் 'பள்ளம்' என்னை மிகவும் பாதித்த கதை. ஆனால் அதை படமாக்குவது முடியாது. என்னைப் பொறுத்த மட்டில் அவரின் படமாக்கக் கூடிய கதை ‘நாடார் சார்’. 1997 ‘தினமணி’ பொங்கல் மலரில் வெளியானது. நான் எட்டாம் வகுப்பு படித்த போது வெளிவந்த அந்த கதையில் இருந்த சூழலும், என் பள்ளி சூழலும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது. அந்த கதையை நான் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் எனது மனதில் அது ஒரு குறும்படமாகவே ஓடும்.

’பிரசாதம்’ கதையை இது வரை வாசித்தில்லை. பாலு மகேந்திராவின் திரை மொழியில் மிகவும் எளிமையான கதையாக காட்சி அமைக்கப் பட்டிருந்தது. ஒரு அதிகாலையில் கோவிலில் பூஜை செய்யும் பூசாரி ஒருவருக்கு, பக்தர் ஒருவர் நூறு ரூபாயை காணிக்கையாக இடுகிறார். அடுத்த காட்சி கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி, தங்களின் குழந்தைக்கு காது குத்துவதற்காக தன் கணவரிடம் ஒரு நூறு ரூபாய கேட்பதாக அமைகிறது. இதற்கு பிறகு நீங்களே கதையை ஊகித்து இருப்பீர்கள்.

மிகவும் சிக்கலான விடயங்களை, ஒரு வித எள்ளல்தன்மையோடு அனுகும் பாலு மகேந்திராவின் பாணி, இந்த குறும்படம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. கான்ஸ்டபிளாக ஜீனியர் பாலையா, அவரின் மனைவியாக மெளனிகா நடித்து உள்ளனர். அந்த பூசாரியாக நடித்தவர் திரைக்கு புதியவர் என்றே நினைக்கிறேன். ஆயினும் அவரின் நடிப்பு ஒரு தேர்ந்த நடிகரின் முதிர்ச்சியை வெளிபடுத்தியது. குறும்படம் முழுவதும் நீங்கள் சிரித்து கொண்டிருந்தாலும், அந்த இறுதி காட்சி எல்லோரின் கண்களில் சிறு நெகிழ்ச்சியையாவது ஏற்படுத்தும்.

சுஜாதாவின் ‘நிலம்’
சுஜாதாவின் பல நாவல்கள், படமாக்க படும் போது அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கபடுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார். அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம். ஆயினும் அவரே ‘தன் நாவல்கள் இவரால் படமாக்க படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின் அது பாலு மகேந்திரா தான்.

அம்பலம் மின்னிதழில் சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”என் நாவல்கள் எதுவும் அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில். எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை.

தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார். இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.”

சுஜாதாவின் சிறுகதைகள் ஆழமற்றவை என்று பல பேர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அது உண்மையல்ல. அவரின் கதைகளில் மிகவும் நுண்ணிய தகவல்கள் புதைந்து கிடக்கும். புதிதாக சமகால இலக்கிய படைப்புகளை வாசிப்பவர்களுக்கும் மிகத் தெளிவாக புரியும். இதனால் தான் புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் என் நண்பர்களுக்கு சுஜாதாவின் புத்தகங்களை பரிந்துரைப்பேன்.

‘நிலம்’ கதையையும் சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொணியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மிக கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு ஒரு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது. அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார். நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்ம ப்ரயத்தங்கள் தான் மீதிக் கதை.

பிரபஞ்சனின் ‘ஒரு மனுஷி’

’எழுத்து ஒரு பிழைப்பு ஆகாது’ என்று விரக்தியின் உச்சியில் குமுதம் ‘ஜங்ஷன்’ இதழுக்கு பிரபஞ்சன் அளித்த பேட்டி தான், அவரைப் பற்றி நான் முதலில் அறிந்தது. அதன் பின்னர் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த அவருடைய ’வானம் வசப்படும்’ நாவலை வாசித்தேன். பாண்டிச்சேரியை ‘ட்யூப்ளக்ஸ்’ ஆண்ட போது அவரின் திவானாக இருந்த ‘அனந்தரங்கரின்’ டைரி குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட சுவாரஸ்யமான நாவல். ‘அனந்தரங்கரின் டைரி குறிப்பை’ திருடி எழுதிவிட்டார் என்ற அபாண்டமான விமர்சனம் இந்த நாவலால் தான் எழுந்தது.

பிரபஞ்சனின் சில சிறுகதைகள் மட்டுமே படித்து உள்ளேன். அவை பெரும்பாலும், 2005, 2006 - ல் ‘தீராநதி’,’உயிர்மை’ இதழ்களில் வெளி வந்தவை. அவரின் ‘மீன்’ சிறுகதையை பொதிகை தொலைக்காட்சியில் குறும்படமாக அம்மா பார்த்த போது, உனக்கும் இதே போல் தான் பொண்டாட்டி வரப்போகிறாள் என்று அம்மா என்னை நக்கலடித்தாள். (இந்த சிறுகதையைப் பற்றி அப்புறம் சொல்றேன்)

சினிமாவில் பணிபுரியும் துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோரின் உலகம் வெளிபூச்சுகளற்றது. அவர்களின் வாழ்வில் நிலவும் வெறுமையையும், வறுமையையும் அசோகமித்திரன், சுஜாதா, திலகவதி ஆகியோர் தத்தம் கதைகளில் வெளிபடுத்தி உள்ளனர். அதே வரிசையில் தான் இந்த கதையும் இடம் பெறுகிறது. வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், பிலிம் ரோல் வாங்க காசு இல்லாமல் இருக்கும் ஒரு உதவி புகைப்பட கலைஞன், தனக்கு தெரிந்த துணை நடிகை ஒருத்தியை புகைப்படம் எடுக்க செல்வது தான் இந்த கதையின் சாரம். துணை நடிகையாக மெளனிகா, புகைப்பட கலைஞராக சஷி நடித்து உள்ளனர். இந்த கதையின் பிண்ணனியில் இந்த தொடர் வெளிவந்த போது நடந்த ஃபெப்ஸி, படைப்பாளிகள் மோதலையும் ஒரு பாத்திரமாக உலவ விட்டிருந்தார் பாலு மகேந்திரா. அகிரா குரோசாவாவின் படங்களின் இறுதி காட்சிகள் உங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். அதே போல் தான் இந்த குறும்படங்களின் இறுதி காட்சிகளும்.

இந்த டி.வி.டி இப்போது என் கையில் இல்லை. நினைவிடுக்குகளில் இருப்பதை மட்டுமே உங்களுடன் பகிர்கிறேன். மீதம் உள்ள மற்ற மூன்று குறும்படங்களைப் பற்றி அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

Friday, February 5, 2010

கர்ண மோட்சம் குறும்படத்திற்கு தேசிய விருது


நானும் முரளியும் எந்த புள்ளியில் நண்பர்கள் ஆனோம் என்று சத்தியமாக நினைவில்லை. ஆனால், நாங்கள் இணைவதற்கு காரணமாக இருந்தவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். என் நண்பன் தென்னரசு ஓர்குட்டில் எஸ்.ராவிற்காக ஒரு குழுமத்தை தொடங்கிய பொது தான் நானும் முரளியும் நண்பர்கள் ஆனோம். 2006 அக்டோபர் மாதத்தின் ஒரு மதிய வேளையின் போது தான் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் அன்று பார்த்த திரைப்படம் 'சென்ட்ரல் ஸ்டேஷன்'. அவருடைய முதல் குறும்படமான 'அக்காலம்' படத்தை அன்று தான் பார்த்தேன். 15 நிமிடம் ஓடும் அந்த குறும்படத்திலேயே மனிதர் பல சங்கதிகளை சொல்லி இருந்தார். அப்போது தான் 'கர்ண மோட்சம்' போஸ்டரை அவர் அறையில் பார்த்தேன். கதை, வசனம் - எஸ். ராமகிருஷ்ணன். திரைக்கதை, இயக்கம் - ச.முரளி மனோகர் என்று போட்டிருக்க, எனது ஆவல் கூடியது. வெகு விரைவில் டி.வி.டி வந்து விடும், காட்டுகிறேன் என்றார்.


அதே போன்ற ஒரு மதிய நாளில் தான் 'கர்ண மோட்சம்' குறும்படத்தை பார்த்தேன். எஸ்.ராவின் 'உபபாண்டவம்' என்னுள் மகாபாரதத்தின் மீதான காதலை அதிக படுத்தி இருந்தது. அவருடைய அந்த நாவலின் சமகாலப் பிரதியாகத்தான் இந்த குறும்படம் எனக்கு தோன்றியது. ஒரு 13 நிமிட குறும்படம் இவ்வளவு வலிமையான செய்தியை சொல்ல முடியுமா என்று, அது வரை எனக்கு தோன்றி இருக்கவில்லை. இந்த குறும்படத்தை வழக்கமான விமர்சனம் போல் எழுத முடியவில்லை. அதனால் இந்த படத்தை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.


இது வரை 60க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று இருக்கும் 'கர்ண மோட்சம்', 2008 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த குறும்படம் மற்றும் சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருதை வென்றுள்ளது. இது மட்டுமல்லாது கேரளா சர்வதேச திரைப்பட விழா, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா, கனடிய சர்வதேச தமிழ் திரைப்பட விழா ஆகியவற்றில் சிறந்த குறும்படம் மற்றும் இயக்குனருக்கான விருதை வென்று உள்ளது.

இதற்க்கெல்லாம் மகுடமாக இந்திய அரசின் தேசிய திரைப்பட விருது 'கர்ண மோட்சத்திற்கு' கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெரும் முதல் தமிழ் குறும்படம் 'கர்ண மோட்சம்' என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தமிழ் மீடியாக்கள், பாலா சிறந்த இயக்குனர் விருது பெற்றதை பற்றி மட்டும் எழுதி இருந்தன. வெகு நாட்கள் கழித்து, ஒரு வழியாக இந்த வார ஆனந்த விகடனில், முரளியினுடைய பேட்டி வெளியாகி உள்ளது. அவருடைய அனுமதியின் பேரில் உங்கள் அனைவரின் பார்வைக்காக, இந்த குறும்படத்தை இங்கு பதிவிடுகிறேன்.

கர்ண மோட்சத்திற்கு விருது கிடைத்ததற்கான ஆதார பட்டியல் இங்கே


முதல் பாகம்:


இரண்டாம் பாகம்:


இது வரை எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இந்த குறும்படத்தின் ஆதார செய்தி மட்டும் நினைவில் வந்து போகிறது: 'கதிரவன் ஈன்ற மைந்தன் அதிக பலமுடையோன்"

போகிற போக்கில் ஏதேனும் பின்னூட்டங்களும், அதோடு தமிழ்மணத்திலும் தமிழிசிலும் ஓட்டு போடுங்கள்...

பின் குறிப்பு: இந்த வீடியோவை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் உபயோகிக்க நினைத்தால் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டம் இட்டு செல்லுங்கள். காரணம்: யூடியுப் இணையதளத்தால் காப்பி ரைட் செய்யப்பட வீடியோவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது...

Saturday, November 28, 2009

பழசிராஜா


முதுகலை படிப்பு முடியும் வரை பதிவுலகம் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது என்ற சங்கல்பத்துடன் தான் இருந்தேன். ஆனால், என்னை எழுதுமாறு தூண்டியது பழசிராஜா படத்திற்கு எழுதப்பட்ட பல நெகட்டிவான விமர்சனங்கள். என்னுடைய சொந்த ஊரான தேனியில் படம் வெளியான முதல் நாளில் திரையரங்களில் இருந்தது என்னவோ மொத்தம் 25 பேர் தான். நான் ’வெயில்’ படம் பார்த்த போது திரையரங்கில் மொத்தம் 5 பேர் தான் இருந்தனர். அதற்கு எவ்வளவோ இது பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன்.

கதை மிகச் சாதாரணமான கதை தான். பழசிராஜா தன் சமஸ்தானத்தை கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனியாருடன் போரிட்டு மடிகிறார். பொதுவாக குறுநில மன்னர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடத்திய போராட்டம், சுதந்திர போராட்டத்தில் சேர்க்க இயலாது. அவர்கள் தங்கள் சமஸ்தானத்தை அல்லது ராச்சியத்தை பாதுகாத்து கொள்ளவே அவர்கள் போரிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் என ஆரம்பித்து அத்தனை குறுநில மன்னர்களும் இந்த வகையறாக்களே. பிற்கால சாதி சார்ந்த அரசியலும், ஊடகங்களின் பூதக்கண்ணாடியும் தான் அவர்களை சுதந்திர போராட்ட தியாகிகளாக உருமாற்றின.

அந்த வகையில் பழசிராஜா ஒரு நேர்மையான படைப்பு என்றே கருதத் தோன்றுகிறது. காரணம், சந்தைப் படுத்தலுக்காக தேசிய அடையாளம் கொடுக்கப் படாமல் என்ன நடந்ததோ, அது அப்படியே கச்சாவாக கொடுக்கப் பட்டுள்ளது. படத்தில் நெருடலான விஷயங்கள் எடிட்டிங்கும், திரைக்கதையும் மட்டுமே. அதை தவிர்த்து டெக்னிக்கலாக, நிறைவான படம். யாரோ சொல்லி இருந்தார்கள், படத்தில் ஆர்ட் டைரக்‌ஷனுக்கு செலவே இல்லை என்று. ஏனென்று பார்த்தால் வெறும் வேட்டி, துண்டிற்கு எவ்வளவு செலவு ஆகி விடப் போகிறது என்று விளக்கம் வேறு.

படத்தில் மிகச் சாதாரணமாய் ஜெகதி வரும் பிரம்பு பல்லக்கை வடிவமைக்கவே கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆனதாம். பொத்தாம் பொதுவாக நாம் நோகாமல் குறை கூறுவதன் பின், பல பேரின் உழைப்பு உள்ளது. ஹாலிவுட் தரத்தில் படங்கள் எடுக்க வேண்டும் எனில் நிறைய நேரமும், காலமும் ஆகும். இதே படத்தை கமல்ஹாசன் எடுத்திருந்தால் ஆனால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். முத்துராஜிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்.

சூரியன், நாட்டாமை போன்ற திரைப்படங்களுக்கு பின் சரத்குமாரை எனக்கு மிகவும் பிடித்தது இந்த படத்தில் தான். அவரின் திரைப்பட வாழ்க்கையிலேயே மிகச் சிறப்பான கதாப்பாத்திரம்.

படத்திற்கு சுத்தமாக விளம்பரமே இல்லை. ஒரு வேளை மலையாளத்திலே போட்ட காசை எடுத்து விட்டதால் இங்கே மெனக்கெட் தேவையில்லை என நினைத்திருப்பார்களே என்னவோ??!!

Share