Thursday, July 2, 2009

In Bruges (2008) - குற்ற உணர்வும், இருத்தலின் வலியும்


ஃப்ரான்ஸ் காப்காவின் இரு சிறந்த சிறுகதைகளில் ஒன்று, In the Penal Colony. ஒரு கொலை இயந்திரம் பற்றி, மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிகவும் துல்லியமாக விவரிக்கப் பட்ட சிறுகதை. 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த இருத்தலியல் (Existentialism) படைப்பாக இந்த சிறுகதை அறியப் படுகிறது. என்னவோ தெரியவில்லை, இந்த திரைப்படத்தை பார்க்கும் போது, இந்த சிறுகதை என் நினைவுக்கு வரத் தவறவில்லை.

லண்டனில் வசிக்கும் இரு ஐரிஷ் அடியாட்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் தவறு செய்ய நேரிட, அதில் இருந்து தப்பிப்பதற்காக பெல்ஜியத்தில் உள்ள புருஷிற்கு(Bruges) தங்களை வேலைக்கு அமர்த்தியவரால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் ஒருவனுக்கு அங்கு வேலை காத்திருக்கிறது. இவர்கள் இருவரும் எதிர் கொள்ளும் உளவியல் ரீதியான ப்ரச்சனைகளும், அவர்களில் ஒருவன் தான் செய்த தவறினால் ஏற்படும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க இயல்வதும் தான், இந்த திரைப்படத்தின் கதை. டார்க் ஹீயுமர் என்று ஒரு வகை உண்டு. அதை மிகச் சிறப்பாக இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள்.

காலின் ஃபெரல் (Collin Ferrel) Phone Booth, Minority Report, Alexander போன்ற படங்களில் நடித்தவர். ப்ரெண்டன் க்ளீஸன் (Brendon Gleeson) Braveheart, Kingdom Of Heaven, Harry Potter திரைப்படங்களில் நடித்தவர். இவர்கள் இருவருமே அயர்லாந்தை சேர்ந்தவர்கள். அதனால் தான் என்னவோ, ஐரிஷ் அடியாட்களாகவே பொருந்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வேலைக்கு அமர்த்துபவராக ரால்ஃப் பியன்னஸ் (Ralph Fiennes), The English Patient, The Constant Gardner மற்றும் The Reader போன்ற படங்களில் நடித்தவர். மூவரும் இப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, கதாப்பாத்திர அமைப்புகள். தயாரிப்பு மேற்பார்வையாளர் போர்வையில் உலவும் போதை மருந்து விற்பவள், இவளுடன் சேர்ந்து சுற்றுலா பயணிகளை கொள்ளையடிக்கும் அவளின் முன்னாள் காதலன், கர்ப்பமாக இருக்கும் ஹோட்டல் வரவேற்பறை பெண், நிறவெறி பிடித்த குள்ள அமெரிக்க நடிகர் என்று வித்தியாசமான கதாபாத்திர அமைப்புகள். புரூஷ், ஐரோப்பிய நகரங்களிலே மிகவும் பழமையான நகரம், அதை அழகாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் Eigil Bryld.

முழுதாக கதையை சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், இந்த பகுதியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். காரணம், இது தான் இந்த படத்தின் ஆதாரம். படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் எதற்காக புருஷ் வருகின்றனர் என்று சொல்லப் படுகிறது. ஒரு பாதிரியாரை கொல்லுகையில் காலின் ஃபெரல், ஒரு சிறுவனை தவறுதலாக கொலை செய்து விடுகிறார். அதனால் அவர் கொள்ளும் குற்ற உணர்வும், தன் உயிரை மாய்த்து கொள்ள துணிவதும், இந்த உலகில் தான் ஏன் இருக்க வேண்டும் என்று தனக்குள விவாதிப்பதும் ஒரு சிறந்த இலக்கிய படைப்பை வாசிப்பது போன்ற உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்த தவறாது. இதனால் தான் இந்த திரைப்படத்தை ப்ரான்ஸ் காஃப்காவின் படைப்போடு ஒப்பிடுகிறேன்.

படத்தின் இயக்குநர் மார்டின் மெக்டோனா (Martin McDonagh) இந்த படத்திற்காக, சிறந்த திரைக்கதை பிரிவில், ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ‘மில்க்’ தட்டிக் கொண்டு போய் விட்டது. ஆனால், காலின் ஃபெரல் இந்த படத்திற்காக கோல்டன் க்ளோப் விருதை வென்றார். இந்த படத்தைப் பார்த்த பின் உங்களுக்கு ஒரு முறையாவது புருஷிற்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாகத் தோன்றும். இந்த படத்தின் டயலாக்குகள் சோகமான தருணங்களிலும் உங்களை சிரிக்க வைக்கத் தவறாது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

Overweight Man: Been to the top of the tower?
Ray:(Collin Ferrel) Yeah... yeah, it's rubbish.
Overweight Man: It is? The guide book says it's a must see.
Ray: Well you lot ain't going up there.
Overweight Man: Pardon me? Why?
Ray: I mean, it's all winding stairs. I'm not being funny.
Overweight Man: What exactly are you trying to say?
Ray: What exactly am I trying to say? You's a bunch of fuckin' elephants.
[overweight man attempts to chase Ray around but quickly grows tired]
Ray: Come on, leave it fatty!
[the overweight women calm down the overweight man]
Overweight Woman #2: [to Ray] You know you're just the rudest man. The rudest man!
Ken:(Brendon Gleeson) [coming back from the tower] What's all that about?
[Ray shrugs]
Ken: They're not going up there.
[to overweight family]
Ken: Hey, guys. I wouldn't go up there. It's really narrow.
Overweight Woman #2: Screw you, motherfucker!
Ken: [to Ray] What was that about?


இண்டிபெண்டண்ட் வகைத் திரைப்படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் In Bruges. Guy Ritchie'ன் Lock, Stock and Two Smoking Barrels படத்தை ரசித்தீர்களானால் இந்த படம் உங்களுக்கு ஒரு திரைக் காவியமாகத் தோன்றும்.
இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக:


நண்பர்களே, நண்பிகளே. பதிவைப் படிச்சுட்டு அப்படியே போயிராதீங்க.
தமிழிஷ், தமிழ்மணம், தமிழ் 10ன்னு உங்களுக்கு எது இலகுவா இருக்கோ,
அதுல ஓட்டு போடுங்க. மறக்காம பின்னூட்டம் போடுங்க. அடுத்த பதிவு எழுத
என்ன மாதிரி புதிய பதிவர்களுக்கு உபயோகப்படும். நன்றி.

Wednesday, July 1, 2009

திரு.நம்மாழ்வார் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள்


அது 2001ஆம் ஆண்டு.உயிரி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வக் கோளாறில் அலைந்து கொண்டிருந்த +1 மாணவன் நான். இணையம் எல்லாம் என் ஊரில் அந்த அளவுக்கு வரலை. பேரு தான் மாவட்டத் தலைநகரம் (தேனி). என்னோட ஆ.கோவிற்கு தீனிப் போட்டது மாவட்டத் தலைமை நூலகம். அதுக்கு கூட, நான் இருந்த பழனிசெட்டிபட்டியிலிருந்து 4 கீ.மி சைக்கிள் மிதிச்சு போகனும். கலைக்கதிர், நேஷனல் ஜியாக்ரபிக், ந்யூ சயிண்டிஸ்ட் எல்லாம் என்னோட பயோடெக்னாலஜி ஆர்வ அரிப்புக்கு தீனி போட்டன. அப்போது தான் குமுதம் இதழில் ஒரு தொடர் வந்தது. யாரோ நம்மாழ்வார் என்பவர் எழுதியிருந்தார். நம் நாட்டில் இனிமேல் ஏன் பருவ மழை பெய்யாது, என்பதை அவர் விவரித்து எழுதியிருந்த போது, எனக்கு ஏதோ திகில் கதை படித்த உணர்வு. பத்தாதிற்கு மரபணு மாற்றியமைக்கப்பட்ட தாவரங்களால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விலாவாரியாக புட்டு புட்டு வைத்து இருந்தார்.

என்னடா இது தேனிக்காரனுக்கு வந்த சோதனை, என்று அவர் தொடர் முழுமையும் படிக்க ஆரம்பித்தேன். ஏன் நமது நாட்டில் இன்னொரு பசுமை புரட்சி வரவில்லை என்பது உள்ளிட்ட பலவற்றை விவரித்து இருந்தார். மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது, அவர் ஒரு வேளாண் பட்டதாரி என்பதும், பசுமைப் புரட்சி கொண்டு வந்த உரக்கலப்பு விவசாயத்தில் நம்பிக்கை இழந்து, இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபாடு கொண்டதையும் வேளாண் பட்டதாரியான என் தந்தையிடம் இருந்து அறிந்து கொண்டேன். அதற்காக தான் பணிபுரிந்து வந்த அரசாங்க வேலையை உதறி விட்டு, இயற்கை வழி விவசாயத்திற்கு என தனியொரு அமைப்பான ‘களக்காட்டி’ல் இணைந்தார்.

இது வரை பல என்.ஜீ.ஓ அமைப்புகளை நிறுவியுள்ளார். மேலும் சமீபத்தில் சுவாமி ‘ஜக்கி வாசுதேவுடன்’ இணைந்து ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதிலும் துணை புரிந்து இருக்கிறார். ’பஞ்சகவ்யம்’ - பசுவின் படைப்புகளான பால், தயிர், மோர், சானம், கோமியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அருமையான உரம். பஞ்சகவ்யத்தின் உபயோகத்தை தான் செல்லும் விவசாயக் கூட்டங்களில் எல்லாம் வலியுறுத்தி வருகிறார் திரு.நம்மாழ்வார். இவர் கூறிய படி பஞ்சகவ்யத்தை எனது மாமா இன்று வரை தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயரிட்டு மிகச் சிறப்பாக செயல் பட்டு வருகிறார். இதில் மேலும் ஒரு அழகு என்னவென்றால், பஞ்சகவ்யத்தை தொடர்ந்து பயன் படுத்தியதால் அவரின் நிலத்திற்கு இரசாயண கலப்பு உரம் உபயோகிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது.

மத்தியில் உள்ள வேளாண் அமைச்சர்கள், பூச்சி மருந்து நிறுவனங்களின் நைச்சிய பேச்சிலும், பணத்திலும் நம்பி, இன்னொரு பசுமைப் புரட்சி வேண்டும் என்று பிதற்றி வருகின்றனர். இன்னொரு பசுமைப் புரட்சி வந்தால் விவசாயியின் விளைச்சல் பணம் பூச்சி மருந்து வாங்கவே பத்தாது. விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டு வீட்டு மனைகள் உருவெடுக்கும் இந்த நிலையில், அரசு இவரைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளை பயன் படுத்தி குறைந்த பட்சம் இயற்கை உரங்களின் மகத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கலாம். ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் கால் பதிந்து இருக்க, சிறு விவசாயியின் நிலைமையை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. நம்மாழ்வரைப் போன்றவர்கள் தான் அவர்களுக்கு சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.

இயற்கையைப் பற்றியும், நாம் இப்போது இயற்கையை எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளார்:

இந்த வீடியோவைப் பதிவேற்றிய நண்பர் தீனதயாளன் சிவத்திற்கும், புகைப்படம் தந்து உதவிய நண்பர் கடற்கரய் அவர்களுக்கும் மிக்க நன்றி. கடற்கரய் அவர்கள் நம்மாழ்வரிடம் ஒரு வருடம் முன்பு ’தீராநதி’க்காக எடுத்த பேட்டிக்கு இங்கே செல்லவும்.

நான் நான்கு வருடம் திருச்சியில் படித்தாலும், இவர் திருவானைக்காவலில் தான் இருக்கிறார் என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இன்றளவும் நான் சந்தித்து
உரையாட விரும்பும் மிகச் சிறந்த தமிழ் ஆளுமைகளில் ஒருவர் திரு.நம்மாழ்வார்.

Thursday, June 25, 2009

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 2 - டிபிகல் தெலுங்கு படம் வாத்யாரே!!



தங்கத் தலைவி மேகன் ஃபாக்ஸ் வாழ்க. இவண் - ஆர்லிங்கபுரம்(Arlington) ரசிகர் மன்றம்.


இந்த படத்தோட முதல் பாகத்துல ஆத்தா ‘மேகன் ஃபாக்ஸ்’ ஒரு காட்சியில காரோட பானட்டைத் தூக்கி ரிப்பேர் பாக்குறப்ப, அப்படி ஒரு ஒயிலா சாய்ஞ்சு போஸ் குடுக்குறதைப் பார்த்து, தியேட்டரே பெருமூச்சு விட்டதுன்னு நம்ம நண்பர் ஒருத்தர் சொன்னாரு. அதே மாதிரி, இந்த படத்துலயும் தலைவி அறிமுகம் ஆகுறப்போ, அதே பெருமூச்சு. சும்மாவா, தலைவி தானே இப்போதைக்கு உலகின் செக்ஸியான பெண். சரி, மேகன் ஃபாக்ஸை தூக்கிட்டு மிச்ச படத்தை பார்த்தோம்னா, படம் செம மொக்கை சார்.

ஆக்‌ஷன் படம் பார்க்கலாம்னு போனா, கெட்ட மசாலா வாசனையோட தியேட்டரை விட்டு வெளிய வந்தோம். காம(நெ)டி, ஆக்‌ஷன் (அம்புட்டும் சி.ஜி), மதர் செண்டிமெண்ட், ஃபாதர் செண்டிமெண்ட், லவ்வர் செண்டிமெண்ட், பத்தாதுக்கு ரோபோ செண்டிமெண்ட் வேற. இப்பிடி ஒரு தெலுங்கு (தெலுங்கு அன்பர்கள் மன்னிக்க) படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் அண்ணன் ‘மைக்கேல் பே’ வாணலியில கிண்ட, அது மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாத கோந்து அல்வா மாதிரி வந்துருக்கு.

படத்தோட முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு

ஆட்டோபாட் (Autobot), டிஸப்டிகான் (Decepticons) என்று இரு ரோபோ குழுக்கள். ஆட்டோபாட்ஸ் நல்ல ரோபோக்களின் குழு, டிஸப்டிகான்கள் எதிர் பதம்.ஆட்டோபாட்கள் சைபர்ட்ரான் (Cybertron) என்ற கிரகத்தில் இருந்து வந்தவை. ஆட்டோபாட்களின் தலைமை ரோபோ ஆப்டிமஸ் ப்ரைம் (Optimus Prime), அதே போல் டிஸப்டிகானின் தலை மெகாட்ரான் (Megatron). 'All Spark' என்ற சக்தி தரும் ஒரு கருவியை ஆட்டோபாட்களிடம் இருந்து பெறும் யுத்தத்தில் டிஸப்டிகான்கள் சைபர்ட்ரானை அழித்து விடுகின்றன. All Spark - உடன் பூமிக்கு வரும் ஆட்டோபாட்களை துரத்தும் மெகாட்ரான், பசிஃபிக் கடலில் உறைந்து விடுகிறது. அது உறைவதற்கு முன் ஆல் ஸ்பார்க் இருக்கும் இடத்தை ஒரு கப்பல் மாலுமியின் கண்ணாடியில் பதிந்து, அதற்கான சிக்னல்களை மற்ற டிஸப்டிகான்களுக்கு அனுப்பி விடுகிறது.

2007 - க்கு திரும்பும் கதையில், அந்த கப்பல் மாலுமியின் பேரனான சாம் (ஷியா லெபோஃப் - Shia LaBeouf) தனது தாத்தாவின் கண்ணாடியை e-bayல் ஏலம் விடுகிறான். இதை அறியும் ஆட்டோபாட்களில் ஒன்றான் பம்பில் பி (Bumble Bee) 1974 செவர்லே கமேரோ காராக உருவெடுத்து அவன் இல்லத்திற்கு வருகிறது. இதை அடுத்து நடக்கும் களேபரங்களும், ஆப்டிமஸ் ப்ரைமுக்கும், உயிர்த்தெழும் மெகாட்ரானுக்கும் இடையில் நடக்கும் யுத்தமும் தான் படம். ஒரு வரியில் சொல்லி விட முடியாத கதை இது. காராணம் - பல கதாப்பாத்திரங்கள். ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் கார்ட்டூன்களை சிறு வயதில் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் முதல் பாகம் எனக்கு பிடித்திருந்தது. இருப்பினும் இது ஒன்றும் மிகச் சிறந்த படம் அல்ல.

இப்போ இரண்டாம் பாகம்

கி.பி.17,000 ஆம் ஆண்டில் தொடங்கும் கதை, அண்டம் முழுவதும் உள்ள ப்ரைம்கள் (ஆப்டிமஸ் ப்ரைமின் முன்னோர்கள்) நட்சத்திரங்களின் சக்தியைக் கொண்டு தங்களின் வாழ்வாதரமான ஆல் ஸ்பார்க்கை, சன் ஹார்வஸ்டர் (Sun Harvester) என்ற இயந்திரம் மூலம் உருவாக்குகின்றன. அவற்றில் ஒரு கோட்டிக்கார ப்ரைம், மற்ற ப்ரைம்களின் ஒப்பந்தத்தை மீறி பூமியில் ஒரு சன் ஹார்வஸ்டரை நிறுவுகிறது. இதை அறிந்த மற்ற ப்ரைம்கள், அந்த துரோகி ப்ரைமுடன் பூமியில் போர் புரிகின்றன. துரோகி ப்ரைமை எதிர் கொள்ள முடியாத நல்ல ப்ரைம்கள், சன் ஹார்வஸ்ட்ரை இயக்கும் மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஸிப்பை (Matrix of Leadership) தங்கள் உயிரை தியாகம் செய்து, தங்கள்து உடல்களுக்கு மத்தியில் புதைத்து கொள்கின்றன. அந்த துரோகி ப்ரைமின் பெயர் தான் ‘ஃபாலன்’ (Fallen). அது பூமியின் மேல் பழி வாங்க துடிக்கும் கதை தான் Transformers 2: Revenge of the Fallen என்னும் இந்த படத்தின் ஆதாரம்.

இனி முதல் பாகம் முடிந்து சரியாக இரண்டு வருடம் கழித்து ஆரம்பிக்கும் கதை. உலகில் மிச்ச சொச்சம் இருக்கும் டிஸப்டிகான்களை அழிப்பதற்காக, ஆட்டோபாட்கள் உலக இராணுவங்களுடன் கை கோர்த்து நெஸ்ட் (NEST) என்ற அணியை உருவாக்குகின்றன. டெமோலிஷர் என்ற டிஸப்டிகான் சாகும் தருவாயில் ‘ஃபாலன்’ நிச்சயமாக பூமியை பழிவாங்கும் என்று எச்சரித்து விட்டு இறக்கிறது. தற்போது பள்ளிக் கல்வி முடிந்து தனது காதலி (ஆத்தா மேகன் ஃபாக்ஸ்) மற்றும் பம்பில் பியை விட்டு கல்லூரி செல்லும் சாம், ஆல் ஸ்பார்கின் ஒரு பகுதியை பார்க்க நேரிடுகிறான். இதனால் ஆல் ஸ்பார்க்கின் அத்தனை தகவல்களும், சன் ஹார்வஸ்டரின் இருப்பிடமும் சாமின் மூளையில் பதிவிறக்கம் ஆகின்றன.

இதை அறிந்து கொள்ளும் ஃபாலன், ஆழ் கடலில் கடும் பாதுகாப்பில் வைக்கப் பட்டுள்ள மெகாட்ரானை திரும்ப உயிர்ப்பித்து, சாமின் மூளையில் இருக்கும் சன் ஹார்வஸ்டரின் இருப்பிடம் பற்றிய தகவல்களை கொண்டு வருமாறு உத்தரவிடுகிறது. சாமைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர் விடுகிறது ஆப்டிமஸ் ப்ரைம் (ரோபோ செண்டிமெண்ட் பாஸ்). தன்னை துரத்தும் டிஸப்டிகான்களிடம் இருந்து சாம் தப்பினானா? சன் ஹார்வஸ்டர் எங்கே உள்ளது? மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஸிப்பை சாம் கண்டுபிடித்தானா? ஃபாலன் மற்றும் மற்ற டிஸப்டிகான்களுக்கு என்ன ஆச்சுன்றதெல்லாம் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்கப்பு. ஹாஹாஹா (நம்பியார் ஸ்டைல்) யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.

என்ன புதுசு

புதுசா? ஒன்னும் இல்லை. ஒன்னுமே இல்லை.ஆக்‌ஷன் ஒவர்டோஸ்!!! மைக்கேல் பே நம்ம ஊரு ஷங்கர் மாதிரி. ஒரு டேங்கர் லாரியைக் கூட வெடிக்க வைக்காம இந்த ஆளால படமே எடுக்க முடியாது. பேட் பாய்ஸ், ஆர்மகெட்டான், பியர்ல் ஹார்பர் என்று பிரம்மாண்டமா படம் எடுத்து தொலைச்சுட்டதனால நம்ம ஸ்பீல்பெர்க் இந்த ஆளை டைரக்டரா போட்டு ட்ரான்ஸ்ஃபார்மர் முதல் பாகத்தை தயாரிச்சாரு. செம வசூல். நிறைய காசு பார்க்குற நெனைப்புல இந்த படத்தையும் எடுத்து இருக்காங்க. நம்பிக்கை வீண் போகலை. முதல் நாள் மட்டும் இந்த படம் 60 மில்லியன் டாலர் வசூல் செஞ்சிருக்கு. மேலும் படம் ரீலிஸ் ஆகி இந்த 5 நாள்ல உலகம் முழுசும் கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலருக்கு மேல வசூல் ஆகியிருக்கு. பைசா வசூல்.

கண்ணு வலிக்கிற அளவுக்கு க்ராஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க. (த்யேட்டருக்கு போறப்ப கொஞ்சம் ஐ ட்ராப்ஸ் எடுத்துட்டு போங்க). அதனாலேயே இந்த படம் எனக்கு பிடிக்காம போச்சு. அப்புறம் படத்தோட நீளம்ம்ம்ம். 2 1/2 மணி நேரம். முடியலை. சுத்தமா விறுவிறுப்பே இல்லாத திரைக்கதை. ஒரு சில இடங்கள்ல சிரிப்பு வந்தாலும், சி.ஜி. ஆக்‌ஷன் காட்சிகள் வர்றப்ப கொட்டாவி விடுறதை கண்ட்ரோல் பண்ண முடியலை. எனக்கு தெரிஞ்சு ஒரு திரைப்படத்தின் நடுவில் நான் தூங்கியது, இந்த படத்தை பார்க்கும் போது தான். ஒளிப்பதிவு எல்லாம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கு எவ்வளவு தேவையோ அதை கணக்கா பண்ணியிருக்காங்கோ. அய்யா எடிட்டரு, எல்லாம் க்ராஃபிக்ஸ்ல பார்த்துப்பாய்ங்கன்னு எடிட்டிங் டேபிள்ல தூங்கிப் புட்டீகளோ.

படத்திற்கு பிண்ணனி இசை ‘லிங்கின் பார்க்’ (Linkin Park) . ஆமாங்க. இந்தியாவில நம்ம ஸ்பென்சர், சிட்டி செண்டரில் சுத்தும் இளசுகளின் ஃபேவரைட் ராக் பேண்ட் ‘லிங்கின் பார்க்கே’ தான். பேசாம அவங்க பாட்டுக்கு ஆல்பம் போடுறதோடு விட்டு இருக்கலாம். இந்த படம் இந்தியாவில வந்தா தயவு செய்து தமிழ்ல பார்க்காதீங்க. ஏன்னா, பாதி படத்தை டப்பிங் எடிட்டரும், செகண்ட் எடிட்டரும் (வேற யாரு.. த்யேட்டர் ஆப்பரேட்டர் தான்) வெட்டி தள்ளிருவாங்க. முதல் பாகத்துக்கு அப்படி தான் ஆச்சு. மொத்ததுல, ஒரு மைண்ட்லெஸ் ஆக்‌ஷன் படத்தை எதிர் பார்த்து போனாக் கூட டெம்பராத் தானுங்க வெளிய வருவீங்க. இருந்தாலும் தலைவிக்காக ஒருக்கப் பார்க்கலாம்.

Share