Monday, June 1, 2009

கிளிண்ட் ஈஸ்ட்வுட் - இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


நேத்தே இந்த பதிவைப் போட்டு இருக்கனும். ஏன்னா நேத்து (31/5/2009) தான் இவருக்கு பிறந்தநாள். நம்ம தமிழ் மக்களுக்கு தெரிந்த மட்டில் இவரு தான் ’குவிக் கன் முருகன்’. 79 வயசு முடிஞ்சும் இன்னும் படம் இயக்குறதை இவரு விடலை. ஒரு சாதாரண டி.வி நடிகரா வாழ்க்கையைத் தொடங்குன கிளிண்ட் ஈஸ்ட்வுட், ஒவர் நைட்ல பிரபலம் ஆனது அவரோட ‘ஃபிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ்’ படத்துனால. அதுக்கப்புறம் ‘For a Few Dollars More', மிக முக்கியமான படமான ‘ The Good, The Bad and The Ugly', எல்லாம் ஹாலிவுட்டோட புது சூப்பர் ஸ்டாரா மாத்திருச்சு. இந்த மூணு படமுமே செர்ஜியோ லியோனி இயக்கத்துல வெளி வந்தவை.


இந்த படங்களுக்கு அப்புறம் தொடர்ந்து அவர் நடித்த ‘Hang 'em High', 'Paint Your Wagon', 'Two Mules For Sister Sara', 'Joe Kidd' ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ஒரு கவ்பாய் ஆகவே முன்னிலைப் படுத்தின. இந்த இமேஜில் இருந்து வெளி வர வேண்டும் என்று ஈஸ்ட்வுட் தானே இயக்கி நடித்த படம் ‘Play Misty for Me'. ஒரு டிஸ்க் ஜாக்கியாக இந்த படத்தில் தோன்றுவார். இதை தொடர்ந்து ‘சான் பிரான்ஸிஸ்கோ’ நகர காவல் துறை அதிகாரியாக அவர் தோன்றிய ‘Dirty Harry', ரசிகர்களிடம் மட்டுமல்லாது, விமர்சகர்களிடமும் பாரட்டுப் பெற்றது. இந்த படத்தில் அவர் தோன்றிய இன்ஸ்பெக்டர் 'Harry Callahan' கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து, ‘Magnum Force', 'The Enforcer', 'Sudden Impact', The Dead Pool' போன்ற படங்கள் வெளி வந்தன. இருப்பினும், முதல் படம் அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பு இருந்தாலும் விமர்சகர்களிடம் பாராட்டு பெறவில்லை. 

திரை உலகில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு தொய்வு காலம் வரும் அல்லவா. அது கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கும் வந்தது.80களின் இறுதியில் வெளியான 'Pink Cadillac', 'The Rookie' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததோடு, விமர்சகளின் பாராட்டையும் பெறவில்லை. ஒரு படைப்பாளி வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் போது தான், ஒரு அருமையான படைப்பு அவனிடம் இருந்து வெளிவரும் என்று கூறுவார்கள். அதே போல் எல்லோருக்கும் பதில் சொல்வது அவர் இயக்கி, நடித்து வெளிவந்த படம் தான் ‘Unforgiven'. செர்ஜியோ லியோனியின் வெஸ்டர்ன்களுக்கு அடுத்து எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் நீங்காது இடம் பிடித்த படம் இந்த படம். மேலும் இந்த படம் இவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று தந்தது.

இதற்கு பிறகு திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்திய ஈஸ்ட்வுட், 'A Perfect World', 'True Crime', 'Blood Work', 'Space Cowboys' ஆகிய படங்களை 90களின் இறுதியில் இயக்கினார். 'Mystic River', 'Million Dollar Baby' மூலம் திரும்பவும் ஆஸ்கர் பயணத்தைத் தொடர்ந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட், ‘The Flags of our Fathers', 'Letters from Iwo Jima' போன்ற சிறப்பான திரைப்படங்களையும் இயக்கினார். 2008ஆம் ஆண்டும் இவருக்கு சிறப்பான ஆண்டாகவும் அமைந்தது. ‘Changeling', 'Gran Torino' ஆகிய இரு அழகான திரைக்காவியங்கள் இவர் இயக்கத்தில் வெளி வந்தன. 

இதில் இவர் நடித்த ‘Gran Torino'வை தமிழ் சினிமாவின் ஒவ்வொரு இயக்குனரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த படத்தைப் பற்றியே ஒரு நீண்ட பதிவு போடலாம். ஏன் கிளிண்ட் ஈஸ்ட்வுடின் ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றியும் தனித்தனியாக பதிவு போடலாம். இந்த வயதிலும் படம் இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'The Bourne Ultimatum' புகழ் மேட் டேமனைக் கொண்டு ‘The Human Factor' என்ற திரைப்படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். மார்க்கண்டேயனாகத் திகழும் கிளிண்ட் ஈஸ்ட்வுடிற்கு, இந்த வருடமும் சிறப்பாக அமையுமாறு வாழ்த்துவோம்.

Saturday, May 30, 2009

Joaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்!!?? - பாகம் 1


’ஃபோர்பஸ்’ வார இதழ், 2009ஆம் ஆண்டின் 1000 கோடிஸ்வரர்கள் வரிசையில் ஒரு புதிய வரவு. இவர்(ன்!!?? - சரி. இவர்னே போடுவோம், எதுக்கு வம்பு) தலைக்கு அமெரிக்க அரசு நிர்னயித்துள்ள தொகை, 5 மில்லியன் டாலர்கள். பத்தாதுக்கு ‘டைம்’ வார இதழ் 2009இன் ஆண்டின் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் 6-வது இடம் கொடுத்துள்ள்து. ’எல் சேப்போ’ என்று அழைக்கப்படும் 52 வயதாகும் ’ஜோகுவின் கஸ்மேன்’, பாப்லோ எஸ்கோபாரைக் காட்டிலும் அமெரிக்காவிற்கு பெரிய திருகுவலி. காரணம் இவனால் கடந்த ஆண்டு மெக்ஸிகோ, அமெரிக்க எல்லையில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. இறந்தவர்கள் அத்தனை பேரும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள். 100, 200 கிலோ என்று இவன் கடத்துவதில்லை. 1993ஆம் ஆண்டு அரிசோனாவில் இவனால் கடத்தப் பட்ட போது பிடிபட்ட கொகைனின் அளவு 7.3 டன்.


1957 - ஆம் ஆண்டு பிறந்த கஸ்மேன், தொழில் பழகியது ’மிகுவெல் ஏஞ்சல் ஃபெலிக்ஸ் கெலார்டோ’விடம். ’தி காட்ஃபாதர்’ என்று அழைக்கப்பட்ட கெலார்டோ 80களில் மெக்ஸிகோ போதை மருந்து சந்தையின் ஜாம்பவனாகத் திகழ்ந்தான். 1989ஆம் ஆண்டு பிடிபட்ட கெலார்டோ, சிறையில் இருந்த போதும், தன் போதை மருந்து சாம்ராஜ்யத்தை நடத்தி இருக்கிறான். கெலார்டோ காலால் இட்ட பணியை தலையால் செய்து கொண்டு இருந்தான் கஸ்மேன். (ஒரு உவமைக்கு சொல்றேன். கண்டுக்காதீங்க). 90களின் ஆரம்பத்தில் கெலார்டோ அதிக பாதுகாப்பு உள்ள சிறைக்கு மாற்றப் பட்டவுடன் தன் ராஜாங்கத்தை நடத்த ஆரம்பித்தான். அதன் பெயர் தான் ‘சினலோவா கார்டல்’ (Sinaloa Cartel).

கஸ்மேன் சரக்கைக் கடத்தும் விதமே வித்தியாசமானது. மெக்ஸிகோ -அமெரிக்க எல்லையில் அமைந்து இருக்கும் மலைக் குகைகளைக் குடைந்து அந்த டன்னல்கள் வழியாக கடத்துவான். இந்த ஆண்டு வெளி வந்த ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படம் பார்த்தீர்களா. இவனுடைய இந்த உத்தியை தான் உபயோகித்து இருந்தனர். 

1993ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த கஸ்மேனை, அவனுடைய எதிர் கும்பலான ’டிஜூவானா கார்டல்’ சுட்டு தள்ள ஆரம்பித்தனர். ஆனால் அப்போது கஸ்மேனுக்கு பதில் உயிர் இழந்தது, மெக்ஸிகோ மக்களால் நேசிக்கப்பட்ட கார்டினல் ‘ஜான் ஜெஸுஸ் போஸ்டாஸ் - ஒகாம்போ’. 

1993 மே மாதம் அவனுடைய 7.3 டன் கொகைன் கடத்தல் முறியடிக்கப்பட்ட மறு மாதம், மெக்ஸிகோவில் கைது செய்யப் பட்டான். அவனுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப் பட்டது. 2001ஆம் ஆண்டு அவன் மேல் அமெரிக்காவில் உள்ள வழக்குகள் பற்றி விசாரிப்பதற்காக அதிக பாதுகாப்பு உள்ள மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ சிறையில் இருந்து மாற்றப்படும் போது தப்பினான். அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்...

Sunday, May 24, 2009

'சர்வம்' - பட்டையைக் கிளப்பும் இளையராஜாவின் பிண்ணனி இசை

பழச தூசி தட்டி உபயோகிப்பதில் தான் கோலிவுட்காரர்களுக்கு என்ன ஒரு ஆனந்தம். முதலில் ரீமிக்ஸ் என்று ஆரம்பித்தார்கள். அப்புறம் பழைய பாட்டை அப்பிடியே உபயோகிக்க ஆரம்பித்தார்கள். 'சுப்ரமணியபுரம்' படத்தில் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் வரும் 'சிறு பொன்மணி அசையும்' பாடலை கவித்துவமாக காட்சிகளுக்கு நடுவே புகுத்தியிருந்தார் சசிகுமார். அதே போல் சமீபத்தில் வெளியான 'பசங்க' திரைப்படத்தில் கூட ரிங்டோனாக வரும் 'மேஸ்ட்ரோ'வின் பாடல்.


இப்போது 'சர்வம்'. ஆனா சும்மா சொல்ல கூடாது. அப்பவே இன்னாமா கம்போஸ் பண்ணியிருக்காருப்பா ராஜா. ஆர்யா, த்ரிஷாவை பார்குரப்ப எல்லாம் வயலின் ஹை பிட்சில அதிருது. அது இன்னா பாட்டுன்னு ரெம்ப நேரம் மண்டையை பிச்சப்புறம் தான் தெரிஞ்சது. 'வாழ்க்கை' படத்துல நம்ம அக்கா 'சில்க்' ஆடுன 'மெல்ல மெல்ல என்னை தொட்டு' பாட்டு. அது என்னமோ படத்தோட முதல் பாதி முழுசும் இந்த பாட்டோட பி.ஜி.எம் தான் ஒடுது.

அந்த பாட்டை இங்க பாருங்க:


என்னது படத்துக்கு மீசிக் 'யுவன் ஷங்கர் ராஜாவா'!! சொல்லவே இல்லை...

Share