Tuesday, March 31, 2009

தக்கையின் மீது நான்கு கண்கள்

இளங்கலை படிக்கையில், பல்கலைகழக நூலகத்தை ஒரு நாள் மேய்ந்து கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்டது 'சுபமங்களா இதழ் தொகுப்பு'. நாடக உலக மேதை 'கோமல் சுவாமிநாதன்' நடத்திய தமிழ் இலக்கிய இதழ்களில் நீங்காது இடம் பிடித்த இதழ். ஒரு மிகப்பெரும் கலை பொக்கிஷம் கிடைத்தது போல் சுற்றுபுறம் மறந்து படிக்கையில் கண்ணில் பட்டது தான் சா. கந்தசாமியின் 'தக்கையின் மீது நான்கு கண்கள்'.

சா. கந்தசாமி. சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர். சிறந்த ஆவணப் பட இயக்குனரும் கூட. 'விசாரணை கமிஷன்' இவரின் மிகச் சிறந்த நாவல். நான் படித்த அவரின் முதல் கதை 'தக்கையின் மீது நான்கு கண்கள்'.

ஒரு தாத்தாவிற்கும், அவருடைய 10 வயது பேரனுக்கும் இடையில் நடக்கும் கவுரவ பிரச்சனை தான் கதை. மீனவரான தாத்தா பேரனை தன்னுடன் மீன் பிடிப்பதற்காக அழைத்து செல்கிறார். தன்னிடம் இருக்கும் தாயத்தினால் தான், தன் தூண்டிலில் மீன்கள் மாட்டுகின்றன என்று பேரனிடம் பெருமை அடித்து கொள்கிறார். பேரன் அந்த தாயத்தை தருமாறு தாத்தாவிடம் கேட்கிறான். மறுக்கும் தாத்தாவிடம் கோவித்து கொண்டு தனது தூண்டிலை எடுத்து மீன் பிடிக்கிறான் பேரன். அன்றைய நாள் தாத்தாவிற்கு ஒரு மீன் கூட சிக்குவது இல்லை. மாறாக பேரன் நிறைய மீன்கள் பிடித்து வருகிறான்.

தன் பேரன் பிடித்து வந்த மீன் மிகவும் ருசியாக இருக்கிறது என்று கூறும் பாட்டியிடம் கோவித்து கொள்ளும் தாத்தா, உணவு உண்ணாமல் படுக்கைக்கு செல்கிறார். வெள்ளத்தின் காரணமாக கடலில் இருந்து வரும் 'விலாங்கு மீன்' தாத்தாவும் பேரனும் எப்போதும் மீன் பிடிக்கும் குளத்தில் நிறைந்து இருக்கின்றன. தாத்தா தன் பேரனிடம் அந்த மீனை உன்னால் பிடிக்க முடியுமா என்று சவால் விடுகிறார்.

சவாலை ஏற்று கொள்ளும் பேரன், தாத்தாவிற்கு முன்னரே மீனை பிடித்து காட்டுகிறான். மறு நாள் காலையில் விழிக்கும் பேரனின் தலைமாட்டில் தாத்தாவின் ராசியான தாயத்து இருக்கிறது.

தலைமுறை இடைவெளி இன்றளவும் நம் குடும்பங்களிலும், சமூகத்திலும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. நம்முடைய ஊடகங்களும் பற்றாக்குறைக்கு அந்த இடைவெளியை திரைப்படங்கள் மூலம் ஊதி பெரிதாக்குகின்றன. அந்த இடைவெளியை மிக நுன்னியமகவும், நாசுக்காகவும் விளக்கியிருக்கிறார் சா. கந்தசாமி.

இந்த கதையை திரைப்பட இயக்குனர் வசந்த் (கேளடி கண்மணி, ஆசை) ஆவணப்படமாக எடுத்துள்ளார். நான் இந்தியா சென்ற போது 'பொதிகை' தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். வீராசாமி அய்யா ('எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்' - முதல் மரியாதையில் வருவாரே, அவர்தான்) தாத்தாவாக நடித்து இருந்தார். ஒரு சிறுகதையையோ, நாவலையோ படமாக்கும் போது, பெரும்பாலும் இயக்குனர் அந்த படைப்பை எவ்வாறு தன் மனதில் காட்சி படுத்தினாரோ, அதைத் தான் பெரும்பாலும் நாம் காட்சிப் படங்களாகப் பார்போம்.

படைப்பை படிக்கும் வாசகர்களின் காட்சி படுத்தலும், இயக்குனரின் காட்சி படுத்தலும் ஒத்துப் போகும் நூழிலையில் தான் நிகழ்கிறது பார்வையாளனின் பரவசம். அத்தகைய உணர்வு தான் வசந்தின் இந்த ஆவணப் படத்தை பார்த்த போது எனக்கு நேர்ந்தது. வசந்தின் பெரும்பாலான திரைப்படங்கள், திரையரங்கில் எனக்கு தூக்கத்தை தான் வரவழைத்துள்ளன. ஆனால் ஒரு சிறந்த இயக்குனர் என்ற மதிப்பை இந்த ஆவணப் படம் எனக்கு ஏற்படுத்தியது.

இதை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இந்த ஆவணப் படம் எங்கேனும் கிடைக்கும் எனில் டி.வி.டி கிடைக்கும் முகவரியை எனக்கு தெரிவிக்கவும். அல்லது youtube லிங்குகள் இருப்பின் இங்கு பதியவும்.

Sunday, February 15, 2009

கி.இரா என்னும் கதைசொல்லி


எனக்கும் கி.இராவின் எழுத்துகளுக்குமான அறிமுகம் பதின் பருவத்தில் தான் ஆரம்பித்தது. பள்ளியில் படிக்கும் போது, வருட ஆரம்பத்திலே, தமிழ் புத்தகங்களில் வரும் கதைகள் அனைத்தையும் படித்து விடுவது வழக்கம். அப்படி தான் மேல்நிலை இரண்டாம் ஆண்டு புத்தகத்தில் படித்த கதை தான் 'கதவு'. கி.இரா எனப்படும் கி. இராஜநாரயனின் முதல் கதை மாதிரி அது தெரியவில்லை. அது தான் புத்தகத்தில் இருந்த முதல் கதை. அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. இப்படி தான் ஆரம்பித்தது எனக்கும் அவர் எழுத்களுக்குமான தொடர்பு.

அதன் பிறகு அவ்வப்போது குமுதத்திலும், ஆனந்த விகடனிலும், அப்பா எப்பொழுதோ வாங்கின இந்தியா டுடே இலக்கிய மலர், தினமணி பொங்கல் மலர், போன்றவற்றில் வந்த அவர் கட்டுரைகளையும் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் இணைந்த பிறகு ஒரு நாள் தற்செயலாக எனது பல்கலைக்கழக நூலகத்தில் தூழாவிய போது கிடைத்தன பொக்கிஷங்கள். ஆம். கி.இராவின் அனைத்து புத்தகங்களும் ஒரு சேர கிடைத்தன. முக்கியமானவை அவரின் முழு சிறுகதை தொகுப்பும், கட்டுரை தொகுப்புகளும் தான்.

இடைச்செவலில் ஒரு சம்சாரி குடும்பத்தில் பிறந்த கி.இரா தான் எழுத ஆரம்பித்தது ஒரு விபத்து என்றே கூறுகிறார். 'கரிசல் தாத்தா' என்று அன்போடு அழைக்க படும் அவர் பிறந்த அதே ஊரில் தான் கு.அழகிரிசாமியும் பிறந்து உள்ளார். இருவரும் பால்ய நண்பர்கள். தமிழ் கடித இலக்கியங்களில் இன்றளவும் ஒரு சிறந்த படைப்பாக கருதப்படுவது கி.இராவும், அழகிரிசாமியும் எழுதி கொண்ட கடிதங்கள்.

சிறு வயது முதல் நோயாளியாகவே இருந்த அவர் காச நோயில் இருந்து மீண்ட பிறகு தன் இலக்கிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். இன்றளவும் கரிசல் இலக்கியங்களில் முன்னடியோக கருதப் படுவது கி.இராவின் படைப்புகளே. அதன் காரணம் அவர் தன் படிப்புகளில் பதிய வைத்திருக்கும் சம்சாரியின் (விவசாயியின்) வாழ்க்கை.

எனக்கு மிகவும் பிடித்த அவரின் சிறுகதை 'மின்னல்'. ஒரு நகர பேருந்தில் தன் தாயுடன் ஏறும் ஒரு சிறு கைக் குழந்தை, அங்கு சோம்பி போயிருக்கும் சூழலை மாற்றி அந்தப் பேருந்தில் உள்ளவர்களை எப்படி மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறதே கதை. வெறும் இரு பக்கங்கள் மட்டுமே நீழும் கதை. இது போன்று தமிழ் சிறுகதையில் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் சிறுகதையை நான் இது வரை படித்து இல்லை.

கி.இராவின் கட்டுரைகள் பெரும்பாலும் சம்சாரியின் வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் மகிழ்ச்சியும், பிரச்சனைகளையும் நமக்கு காட்சி படுத்தும். சிறிது நையாண்டியோடு சம்சாரியின் வாழ்க்கையை அணுகி இருப்பார். அவரும் இரசிகமணி தி.க.சி'யும் பால்ய நண்பர்கள். தி.க.சியை பற்றிய கட்டுரைகள் அவர்கள் இருவரின் நட்பை பற்றி மட்டும் அல்லாது, அப்போதைய தமிழகத்தின் சமகால அரசியலைப் பற்றியும் நமக்கு தெரிவிக்கிறது.

கி.இராவின் 'கிடை' குறுநாவலை அம்ஷன் குமார், 'ஒருத்தி' எனும் பெயரில் குறும் படமாக எடுத்தார். நாவலை ஒட்டி அமைந்து இருந்தது அவரின் திரைக்கதை. கி.இராவின் முக்கியமான படைப்புகள் 'பிஞ்சுகள்', 'கோபல்லபுரம்', 'கோபல்லபுரத்து மக்கள்'. துரதிஷ்டவசமாக இவை மூன்றையும் இது வரை நான் படிக்கவில்லை. சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்ற போது இவை மூன்றையும் வாங்க நினைத்த போது, கையில் பணம் இல்லாமல் கனத்த மனதோடு அறை திரும்பினேன். புத்தகங்களுக்கும், பசப்போடு சுண்டி இழுக்கும் விபச்சாரிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று அப்போது தான் உணர்ந்தேன்.

கி.இராவை படிக்கும் போது எழும் கரிசல் நெடி இன்று அவர் வாழ்ந்த பூமியில் இல்லை. அதனால் தன் என்னவோ, பாண்டிச்சேரியில் குடியமர்ந்து விட்டார். இன்று பாண்டிச்சேரி பல்கலைக்கழக கவுரவ பேராசிரியராக இருக்கிறார். அவரின் சில அரசியல் தொடர்புகள் சஞ்சலம் ஏற்படுத்தினாலும் தமிழ் இலக்கிய உலகின் விண்மீன் கி.இரா என்பது மறுக்க இயலாத உண்மை.

Wednesday, January 7, 2009

சத்யம் நிறுவனம் - பன் வித் டிக் அண்ட் ஜேன்



அதிர்ச்சி மேல் அதிரிச்சி என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. இந்திய மென்பொருள் நிறுவனங்களில் நான்காவது இடம் வகிக்கும் சத்யம் நிறுவனத்தின் 'திரு'. இராமலிங்க ராஜு ரூ.5000 கோடி ஊழல் செய்தாரா என்று புலனாய்வு பத்திரிகைகள் சில மாதங்களாகவே தலையங்கம் வெளியிட்டு கொண்டு இருந்தன. நேற்று அது வெட்ட வெளிச்சம் ஆகியது. 2001 ஆம் ஆண்டு வரை உலகின் தலை சிறந்த உயர்சக்தி நிறுவனமாக விளங்கிய Enron, மிகச் சாதுரியமாக பொய் கணக்கு காண்பித்து, ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி டாலர்கள் லாபம் காண்பித்தது. இப்போது சத்யம் இந்தியாவின் Enron ஆகியிருக்கிறது. வெறும் முன்று சதவிகித லாபம் இருபத்து நான்கு சதவிகிதமாக காட்டப் பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க தனது குடும்ப நிறுவனமான மேதாஸ் இன்பிராவில் பொய் கணக்கு காட்டிய ரூ. 5040 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டார் இராமலிங்க ராஜு. முதலீட்டாளர்களின் தலையீடால் அது தடுக்கப்பட்டது.


இந்த நிலையில் நேற்று நடந்த நிறுவன இயக்குனர்களின் கூட்டத்தில் உண்மையை போட்டு உடைத்தார் ராஜு. வராக் கடன், செலவினங்கள், வட்டி அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட ஏழாயிரத்து நூற்று அறுபது கோடி ரூபாய் துண்டு முதலீட்டாளர்களின் தலை மேல் வீழ்ந்துள்ளது. இந்திய பங்கு வர்த்தகங்களை நிர்வகிக்கும் நிறுவனமான செபி சத்யம் நிறுவனத்தின் பெயரை பங்கு சந்தையில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளது.


இந்த நிலையில் திரு. இராம் மைனம்படியை சி.இ.ஓவாக நிர்வகிப்பதாக சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார் ராஜு. இராம்ஐ பார்க்கும் பொது எனக்கு பன் வித் டிக் அண்ட் ஜேன் திரைப்படத்தில் வரும் ஜிம் கேரி தான் நினைவுக்கு வருகிறார். அந்த திரைப்படத்தில் தனது கம்பெனி திவாலாகும் நேரத்தில், ஜிம் கேரியை கம்பெனியின் முதன்மை அலுவலராக நியமிப்பார் வில்லன். ஜிம் கேரி செய்வது அறியாது 'பெப்பரப்பே' என்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பார். அது போல் தன் இருக்கிறது திரு.மைனம்படியின் நிலைமையும்.


அதே போல் அந்த திரைப்படத்தில் கம்பெனி திவால் ஆனதும் அங்கு வேலை செய்வோர் ஆளுக்கு ஒன்றாக நிறுவனத்தின் சொத்துகளை சூறையாடி செல்வர். யார் கண்டது? அது போல் சத்யமில் நடந்தால் தேசிய தொலைக்காட்சிகள் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டு கையை கட்டி கொண்டு நிற்கும்.

Share