Wednesday, October 30, 2013

சோஜூ - சிறுகதை


"நீ சோஜூ குடித்திருக்கிறாயா" என்று கேட்டான் அறை+அலுவலக நண்பன். "இல்லை. என்ன அது?" என்றேன். "அது ஒரு கொரிய சரக்கு. அரிசியிலும், பார்லியிலும் செய்தது" என்றான். "எல்லா சரக்கும் அதில் தானே செய்கிறார்கள்" என்று கேட்டேன். "உண்மை தான். ஆனால் இதன் சுவையில் நிறைய வித்தியாசம் உண்டு. தண்ணீர் கலக்காமல், ஐஸ் போடாமல் அப்படியே குடிக்க வேண்டும். கிட்டத்தட்ட டக்கீலா போல. கொஞ்சம் சாகே(Sake) போல இருக்கும்" என்றான். சோஜூ இப்பொழுது தான் வட அமெரிக்காவில் பிரபலமாகிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

அன்றைய நாளில் அலுவலகத்தில் அத்தனை வேலை இல்லை. ஒரு மீட்டிங் முடிந்த பிற்பாடு, தொக்கி இருந்த நேரத்தில் நானும், அவனும் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒன்றும் மொடா குடிகாரன் அல்ல. எப்போதேனும் நண்பர்கள் குடிக்கும் போது குடித்தால் தான் உண்டு. நண்பனைப் போல் எனக்கு சுவை எல்லாம் பெரிதாக தெரியாது. ஏதோ ஒரு ஆங்கில தொலைக்காட்சி சிரீயலில் வந்த வசனம் -"யாரும் சுவைக்கு குடிப்பதில்லை". அதே போல் தான் நானும். 

நண்பன் அப்படி அல்ல. அவனுக்கு பிரபலமாக இருக்கும் பீர் ஆகாது. க்ராஃப்ட் பீர் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பான்.ஒரு முறை நான் ஒரு டொமஸ்டிக் பீர் ஒன்றை குடித்து கொண்டிருந்த போது, "எப்படித்தான் அதை குடிக்கிறாயோ? குரங்கு மூத்திரம் போல் இருக்குமே" என்றான். 'நீ குரங்கு மூத்திரத்தை குடித்திருக்கிறாயா' என்று நான்  எதிர் கேள்வி கேட்கவில்லை . "ப்ளூ வெல்வெட்" படத்தில் ஒரு பார் சண்டை காட்சி வரும். அதில் டென்னிஸ் ஹாப்பர் "Heineken is for Pussies. Drink Pabst*" என்பார். நண்பன் ஒவ்வொரு முறை க்ராஃப்ட் பீர் வியாக்கியானத்தை ஆரம்பிக்கும் போதும், இந்த வசனம் தான் என் நினைவுக்கு வரும்.

அவன் குடிக்கும் க்ராஃப்ட் பீர், ஒவ்வொரு பாட்டிலும் கிட்டத்தட்ட எட்டிலிருந்து பத்து டாலர் வரை இருக்கும். அவனைப் போல் என்னால் குடிக்கு அத்தனை செலவு செய்ய விருப்பமில்லை. "நம் இந்தியர்களுக்கு மதுவின் சுவை புரிவதில்லை. அதனால் தான் மீனைப் போல் குடித்துவிட்டு, ரோட்டில் கிடக்கிறார்கள்" என்று நண்பன் அரற்றுவான். நண்பன் ஒரு வகையில் மிகப் பெரிய ரசிகன். சமைக்கும் உணவிலிருந்து, அணியும் உடை வரை அவனின் உயர் ரக ரசனை தெரியும். 

வைன் டேஸ்டிங் ஒன்றுக்கு என்னை ஒரு முறை இழுத்து சென்றான். எழுபது டாலர் நுழைவு கட்டணம். அது வரை நான் வைன் குடித்ததில்லை. எல்லோரும் வைனை குடித்து விட்டு, கொஞ்சம் நேரம் வாயில் கொப்பளித்து விட்டு, ஒரு குவளையில் துப்பிக் கொண்டிருந்தனர். 'காசு கொடுத்து குடிக்கும் வைனை எதுக்கு துப்ப வேண்டும்' என்று நினைத்துக் கொண்டு, ஒரே மடக்கில் பல வைன் கோப்பைகளை ஏற்றி கொண்டிருந்தேன். எனது வாய் வறுத்த கடலையையோ, முந்திரியோ தேடிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு வெறும் சீஸ் தான் சைட் டிஷ்ஷாக வைத்திருந்தனர். அன்றைய தினத்திற்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது, வைன் எனக்கு ஆகாதென்று. ஒரு வகை வாயுத் தொல்லையை அது கிளப்பி விட்டிருந்தது. பத்தாதற்கு எனக்கு 'Lactose Intolerance' வேறு இருக்கிறதென்று டாக்டர் சொன்னார். பால் சம்பந்தப்பட்ட எந்த பொருளும், என் வயிற்றில் பர மண்டல வாயுவை கிளப்பி விடுமாம். "சொல்லப் போனால், உங்கள் வயிறு இருக்கும் நிலைக்கு, நீங்கள் எந்த வகை ஆல்கஹாலையும் அருந்தக் கூடாது" என்று ஒரு மிகப் பெரிய குண்டை போட்டார் அந்த டாக்டர்.

ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு வந்த போது, நண்பன் ஒரு கையில் பீரும், மற்றொரு கையில் சீஸ் துண்டும் வைத்து கொண்டிருந்தான். "இந்த சாக்லெட் ஸ்டவுட்டும், மன்ச்சகோ சீஸூம் என்னவாக இருக்கிறது தெரியுமா" என்று வெறியேற்றினான். அந்த பீர் பாட்டிலை பிடுங்கி அவன் தலையில் அடிக்கத் தோன்றவில்லை. மாறாக ஃப்ரிஜ்ஜில் இருக்கும் அத்தனை பீரையும் டாய்லட்டில் ஊற்றி விடத் தோன்றியது. ஏதொவொரு மன உறுதியில் ஆறு மாசம் என் நாக்கில் எந்த வகை ஆல்கஹாலும் படாமல் ஓட்டி விட்டேன். அப்பொழுது தான் சோஜூவை பற்றிய பேச்சை எடுத்தான் நண்பன்.

நாங்கள் வசிக்கும் பென்ஸில்வேனியாவும், தமிழ்நாடும் ஒன்று. மாநில அரசு கடைகளுக்கு மட்டும் தான் சாராயம் விற்க அனுமதி உண்டு. வித்தியாசம் என்னவென்றால் அட்டாச்டு பார் கிடையாது. புதிய வகை சரக்கு எதுவும் அவ்வளவு சீக்கிரம் கடைக்கு வந்து விடாது. ஏதாவது புதிதாக முயற்சிக்க வேண்டுமென்றால், ஒரு மணி நேரம் பயணம் செய்து பக்கத்து மாகாணமான நியூ ஜெர்சிக்கு போக வேண்டும். அங்கு கணக்கிலடங்காத சாராய பொட்டிக்குகள் (Boutique) உண்டு. ஆம்! பொட்டிக்குகள். நேர்த்தியாக, வகைவாறாக அடுக்கப்பட்ட பாட்டில்கள். கடையின் நான்கு ஓரங்களிலும், பீர், வைன் அல்லது ஏதேனும் ஒரு டேஸ்டிங் நடந்து கொண்டிருக்கும். ட்ரேப்பிஸ்ட் மத குருக்களால் வடிக்கப்படும் ஒரு வகை பெல்ஜிய பீர், இங்குள்ள கடைகளில் மட்டுமே கிடைக்கும். வந்தவுடன் விற்று தீர்ந்து விடும். கொஞ்சம் க்ளீஷேவாக இருந்தாலும், அந்த கடைகளுக்குள் நுழைவது சொர்க்கலோகத்திற்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

ஒரு சனிக்கிழமையில் நானும், நண்பனும் நியூ ஜெர்சிக்கு பயணம் செய்ய ஆயத்தமானோம். ப்ரிஜ்வாட்டர் கோவிலுக்கு போய் தோசை, பொங்கல் சாப்பிட்டு விட்டு 'பொட்டிக்'குக்கு போவதாக முடிவு. நண்பன் முழு மப்பேற்ற முடிவு செய்திருப்பதால் நான் 'டெஸிக்னேட்டட் டிரைவராக' மாறி போனேன். சரக்கடித்து வண்டி ஓட்டி மாட்டிக் கொண்டால், லைசென்ஸ் சஸ்பெண்ட் மட்டுமல்லாது, ஆறு மாசத்திலிருந்து ஒரு வருஷம் வரை ஜெயிலில் 'சாசேஜ்' சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், விசா கேன்சலானதால் நாடு கடத்தி விடுவார்கள்.

ஒன்றரை மணி நேரம் பயணித்து, கோவிலுக்கு போய் சாமிக்கு வணக்கம் வைத்து விட்டு, வயிற்றை ரொப்பிய பிற்பாடு, ஒரு பொட்டிக்கில் காரை நிறுத்தினோம். நண்பன் நேராக டேஸ்டிங் நடந்த இடத்திற்கு, ஒரு ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக் கொண்டு ஓடினான். ஒரு நாலைந்து பீர்களை சுவைத்து விட்டு, அதில் இரண்டை வாங்கினான். சோஜூ இருந்த வரிசைக்கு போனோம். துடைத்து வைத்தது போல் காலியாகியிருந்தது. என்னவென்று கடை சிப்பந்தியை கேட்டதற்கு, அறிமுக ஆஃபராக சோஜூவை பாதி விலைக்கு கொடுத்ததால், காலையிலேயே விற்று தீர்ந்து விட்டதாய் சொன்னான். "நீங்கள் ஆர்டர் கொடுத்துவிட்டு செல்லுங்கள். இரண்டொரு வாரத்தில் ஸ்டாக் வந்துவிடும்" என்றான். நண்பனுக்கோ நாக்கரித்து கொண்டிருப்பதால், "நாங்கள் வேறொரு கடைக்கு போகிறோம்" என்று சொன்னான். கடை சிப்பந்தி நக்கலாக ஒரு புன்னகை செய்தான். அப்பொழுதே தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்த இரண்டு கடைகளிலும் ஸ்டாக் காலி. நான்காவது கடையில் எங்கள் கண் முன்னால் கடைசி பாட்டிலை, ஒரு ஹிஸ்பானிய பெண் வாங்கிச் சென்றாள். ஐந்தாவது கடைக்கு போன போது, எங்களுக்கு முன்னால் ஒரு கொரிய பெரியவர் காலி ஷெல்ஃப்பை வெறித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் கிம்ச்சி எனப்படும், முட்டைகோஸ் ஊறுகாய் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன. அவை தான் சோஜூவுக்கு சரியான் சைட் டிஷ் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, அவரும் பல கடைகளுக்கு சென்று இங்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம். "இப்போது வரும் சோஜூ ஸ்ட்ராங்காகவே இருப்பதில்லை. என்ன கருமத்துக்கு சர்க்கரை வள்ளி கிழங்கில் இருந்தெல்லாம் வடிக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று புலம்பினார் பெரிசு. அடுத்த இரண்டு கடைகளிலும் இதே நிலை. நான் எரிச்சலடைய ஆரம்பித்திருந்தேன். ஒரு வழியாக ஏழாவது கடையில் இரண்டு பாட்டில்களுக்கு ஆர்டர் கொடுத்தான் நண்பன். ஒரு வாரத்தில் வந்து விடுமாம்.

வீட்டிற்கு திரும்ப வரும் போது கடும் மழை. ஒரு பாரில் வண்டியை நிறுத்தினோம். ஆனியன் ரிங் எனும் வெங்காய பஜ்ஜியுடன், ஒரு சோடா ஆர்டர் கொடுத்தேன். நண்பன் "ட்ராஃப்ட்டில் என்ன பீர் இருக்கிறது" என்று பார் டெண்டரிடம் கேட்டான். "பட்வைஸர், மில்லர், மில்லர் லைட், கூர்ஸ், கூர்ஸ் லைட்" என்று வரிசையாக டொமஸ்டிக் பீர்களின் பெயர்களை அடுக்கினான் பார் டெண்டர். "மைக்ரோ ப்ரூ, க்ராஃப்ட் எதுவுமில்லையா?" என்று கேட்டான் நண்பன். பார் டெண்டரோ 'இது தான் இருக்கிறது. குடித்தால் குடி' என்று மெளனமாக நண்பனை பார்த்தான். "சரி! ஒரு மில்லர் லைட் கொடுங்கள்" என்றான். பீர் வந்தது. வெகு நேரமாக க்ளாஸை வெறித்து கொண்டிருந்தான் நண்பன். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, மெதுவாக க்ளாஸை வாயருகே கொண்டு சென்றான். முதல் மடக்கை வாய் கொப்பளிப்பது போல் உள்ளிறுத்தினான். அவனுடைய வாய், கண், மூக்கு அத்தனையும் அஷ்ட கோணலானது. ஆலகால விஷத்தை விழுங்குவது போல் அந்த முதல் மிடறை விழுங்கினான். அன்றைய நாளின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு, என் கண் முன்னே நடக்க ஆரம்பித்திருந்தது. 

Friday, October 4, 2013

Gravity (2013)


சுஜாதாவின் 'வானத்தில் ஒரு மெளனத் தாரகை' கதையில் ஒரு இந்திய விண்வெளி வீரர், தனது விண்வெளி நடையின் போது - எந்திரக் கோளாறு காரணமாக விண்கலத்திலிருந்து தொடர்பறுந்து அலைக்கழிக்கப்படுவார். பல்வேறு அரசியல் காரணங்களால் அவரை காப்பாற்ற மற்றொரு விண்கலம் அனுப்ப முடியாது என்று அவரது கன்ட்ரோல் அறை தெரிவிக்கிறது. தனது குடும்பத்தை நினைத்து கொண்டு விண்வெளியில் அலையும் தருணத்தில், அந்த விண்வெளியில் இருந்து பூமியை ரசித்த வண்ணம், மெதுவாக பிராண வாயுவை இழக்கிறார் விண்வெளி வீரர். பிராண வாயு ஒரு சதவீதம் மிச்சம் இருக்கும் போது கதை முடியும்.

'2001: A Space Odyssey' நாவலில் இதே போல் ஒரு விண்வெளி வீரர், விண்கலத்திலிருந்து தொடர்பறுந்து விண்வெளியில் எறியப்படுவார். அது ஒரு சிறு பகுதியே. அதிலிருந்து தழுவியது தான் மேலிருக்கும் சுஜாதாவின் கதை. ஸ்டான்லி க்யூப்ரிக் அந்த நாவலுக்கு எந்த வித பங்கமும் இன்றி, திரைப்படத்தை எடுத்திருப்பார். இதுவரை வந்த விண்வெளி படங்களில் '2001' தான் எனக்கு மிகவும் பிடித்த படம். 1968இல் கிடைத்த தரவுகளை கொண்டு, இன்றளவும் துல்லியமாக இருக்கும் ஸ்பெஷல் எஃபக்டுகளை க்யூப்ரிக் உருவாக்கி இருப்பார். தத்துவார்த்த ரீதியிலான வாதங்கள் மட்டுமன்றி மிகவும் சிக்கலான, அந்த சர்ச்சைக்குரிய முடிவு தான் இன்றளவும் '2001' பேசப்படுவதற்கு காரணம்.

'Gravity' பார்த்து கொண்டிருக்கும் போது, 'வானத்தில் ஒரு மெளனத் தாரகை' கண் முன்னால் வந்து சென்றது. இந்த திரைப்படத்தை ஒரு Realistic Space Apocalypse வகையில் சேர்க்கலாம். உயிரிமருத்துவ பொறியாளரான ரயான் ஸ்டோனும் (Sandra Bullock), முதிர்ந்த விண்வெளி வீரரான மேட் கோவால்ஸ்கியும் (George Clooney), Hubble தொலைநோக்கியில் உள்ள பேனல்களை சரி செய்து கொண்டிருக்க - வெடித்து சிதறும் ஒரு ரஷிய செயற்கைகோளின் துண்டங்கள், அவர்கள் வந்த விண்கலத்தை தாக்குகிறது. அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதே கதை.

சில மாதங்களுக்கு முன் வாஷிங்கடனில் உள்ள ஸ்மித்சோனியன் ஐமேக்ஸ் திரையரங்கில் 'Hubble 3D' டாகுமென்ட்ரியை நானும், என் நண்பர்களும் பார்த்தோம். Hubble தொலைநோக்கியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அட்லாண்டிஸ் விண்கலம் செலுத்தப்பட்டது. அதில் உள்ள 7 அஸ்ட்ரோநாட்கள் ஐமேக்ஸ் 3டி கேமராக்களை கொண்டு, தொலைநோக்கியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை ஆவணப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாது Hubble எவ்வாறு 'Deep Space Exploration' க்கு உதவி செய்கிறது என்பதையும் விளக்கியிருந்தனர்.

'க்ராவிட்டி'யில் காட்டப்படும் 'எக்ஸ்ப்ளோரர்' விண்கலத்திற்கும், 'அட்லாண்டிஸ்' விண்கலத்திற்கும் எனக்கு திரையில் வித்தியாசம் தெரியவில்லை. 'எக்ஸ்ப்ளோரர்' விண்கலமோ முழுக்க, முழுக்க CGI'யில் உருவாக்கப்பட்டது. ஒரு சில ப்ராப்கள் (Props) தவிர, மற்றவை அனைத்தும் சி.ஜியில் உருவாக்கப்பட்டவை தான். பெரும்பாலான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில், விஷூவல் எஃபக்ட்டுகளுக்கு கொடுக்கப்படும் கவனம் திரைக்கதைக்கோ, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளுக்கோ கொடுக்கப்படுவதில்லை. இதற்கொரு மிகச் சிறந்த உதாரணம், இந்த வருடம் வந்த 'Oblivion'.

'க்ராவிட்டி'யில் விஷூவல் எஃபெக்ட்டுகளுக்கு கொடுத்த கவனம் மட்டுமல்லாது, கதாப்பாத்திரங்களின் மனவோட்டங்களை திரையில் நுழைத்தது தான், இந்த படம் மற்ற ஸயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. 2டியில் எடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷனில் 3டியாக மாற்றப்பட்டிருந்தாலும், 3டி இந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே உலா வருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கதாப்பாத்திரங்களின் Breathing Pattern மாறுபடும். இந்த Breathing Pattern கூட Choreograph செய்யப்பட்டதாம்.

இந்த வருடம் நான் பார்த்த திரைப்படங்களில், ஆரம்பம் முதல் இறுதி வரை அலுக்காத சென்ற படங்கள் இரண்டு - ஒன்று 'Pacific Rim', மற்றொன்று 'Gravity'. படத்தில் இன்னொரு கதாப்பாத்திரம் ஹ்யூஸ்டனில் இருக்கும் 'மிஷன் கண்ட்ரோல்'. அதற்கு குரல் கொடுத்திருப்பவர் Ed Harris. ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். 'Apollo 13' திரைப்படத்தில் மிஷன் கண்ட்ரோல் தலைவர் Gene Kranz-ஆக வருவார். இந்த படத்திலும் அவரது குரல் உபயோகப்படுத்தப்பட்டது 'Apollo 13'க்கு கொடுக்கப்பட்ட ட்ரிப்யூட்டாகத் தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

மிகவும் சிரீயசாக செல்லும் திரைக்கதையில், க்யூரன் நடுவே கொஞ்ச்ம் ட்ரை ஹ்யூமரை நுழைத்துள்ளார். இது வரை படத்தை இரண்டு முறை திரையரங்கில் பார்த்த பின்பும், அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. கண்டிப்பாக ஐமேக்ஸில் மட்டுமே பாருங்கள்.

Share