Monday, August 2, 2010

ஞாநியின் ‘கோலம்’, எந்த நிலையில்?

நான் இளங்கலை முதல் ஆண்டு படிக்கும் போது ஒரு நாள் நானும், நண்பர்களும் கல்லூரி விடுதியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அறைக்கு வந்த ஜமால் முகமது கல்லூரி மாணவர் ஒருவர் 'பச்சை மனிதன்' என்ற படத்தை பற்றி சொல்லி அதற்கான டிக்கெட்களை வாங்கி கொள்ளுமாறு கேட்டார். இது வழக்கமான டொனேஷன் கும்பல் என்று நினைத்தோம். ஆனால், நண்பன் ஒருவன் அன்றைய 'தினமணி'யில் அந்த திரைப்படம் பற்றி எழுதியிருப்பதாக கூறினான். சேரனின் உதவியாளரான சரத் சூர்யா என்பவர் இயக்குவதாகவும், பாரதிராஜா, சேரன், லிங்குசாமி போன்றோர் கவுரவ அறங்காவலர்களாக இருப்பதாகவும் அறிந்தோம். மேலும் 'போத்தீஸ்' போன்ற பெரிய நிறுவனம் ஸ்பான்சர் செய்யும் போது அந்த திரைப்படம் மேலும் நம்பிக்கை வந்தது.

கர்நாடகாவில் நடந்த தமிழர்கள் மீதான தாக்குதல்களை அடிப்படையாக கொண்டு கதையமைக்க பெறும் திரைப்படம் என்பதாலும் நன்பர்களும் ஆர்வமாகி 10 ரூபாய் டிக்கெட்டுகளை வாங்கினர். அது வாங்கியது மட்டுமல்லாது, 'பச்சை மனிதன்' அறக்கட்டளைக்கு எழுதி ஆளுக்கு நூறு டிக்கெட்டுகளை வாங்கி மற்ற நண்பர்களிடம் விற்று, அதை திரும்ப அறக்கட்டளைக்கு அனுப்பினர். அதற்கு பிறகு படப்பிடிப்பு வி.ஐ.டி கல்லூரி வளாகத்தில் துவங்கியதாகவும், மேலும் சில செய்திகளும் அறிந்து கொண்ட போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். திரைப்படம் ஏப்ரல் 14, 2003 இல் வெளியிடப்படும் என்று அந்த டிக்கெட்டுகளில் குறிப்பிட பட்டு இருந்தது. அந்த நாளும் வந்தது. படம் வருவதற்கான எந்த சுவடுகளும் இல்லை. சரி சிறிது நாட்கள் கழித்து வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். ஊஹீம்...

நாங்கள் இளங்கலை முடிக்கும் வரை படம் வந்த பாடில்லை. சென்ற முறை இந்தியா சென்ற போது எனது நண்பரும், இந்திய அரசின் தேசிய விருது பெற்ற குறும்பட இயக்குனருமான, முரளி மனோகரிடம் பேசிக் கொண்டிருந்த போது 'பச்சை மனிதன்' பற்றி கேட்டேன். அந்த படத்துக்கு வாங்கபட்ட கேமரா ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் சும்மா கிடப்பதாகவும், அவருடைய அடுத்த குறும்படத்திற்கு அதை உபயோகபடுத்த யோசிப்பதாகவும் கூறினார். படம் நின்று போனதால் சரத் சூர்யா மனம் உடைந்த நிலையில் இருந்ததாகவும், தற்போது யாரிடமோ அசோசியேட்டாக இருப்பதாகவும் கூறினார். 'பச்சை மனிதனை'ப் பற்றிய நினைப்பு, எழுத்தாளர் ஞாநி 'கோலம்' என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் ரூ.500 வசூல் செய்து திரைப்படங்கள் தயாரிக்க போகிறார் என்று தெரிந்து கொண்ட போது தான் எழுந்தது.

ஏற்கனவே பிரமிட் சாய்மீராவுடன் இணைந்து ஆரம்பிக்கபட்ட 'ஒரு ரீல்' இயக்கம் ஊத்தி மூடிக்கொண்டது. அது பிரமிட் சாய்மீராவின் சொதப்பலால் தான் உடைந்தது என்றும் அறிந்து கொண்டேன். 'கோலம்' இயக்கத்திற்கு என்று இருந்த இணையதளத்தில் செப் 15, 2009க்கு முன் வரும் தொகை கொண்டு திரைப்படம் தயாரிக்கப்படும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால் இது வரை அதற்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லை. ஒரு திரைப்பட டிவிடியை நான் வாங்குகிறேன் என்றால், குறைந்த பட்சம் அதன் மூலக்கதை சரடு சுவாரசியமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நான் வாங்குவேன். ஆனால், ஞாநி நாவல்கள், சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் தயாரிக்க போவதாக கூறினாலும், எந்த அல்லது யாருடைய இலக்கிய படைப்பை படமாக்க போகிறார் என்பதை குறிப்பாக சொல்லவில்லை.

என்னிடம் ஒரு 500 ரூபாய் வசூல் செய்து படம் எடுக்க படுகிறது என்றால், நானும் அந்த படத்தின் ஒரு முதலீட்டாளராகத் தான் கருதுகிறேன். அப்படியிருக்க படத்தை பற்றி ஒரு தகவலும் கூறாது, பூடகமாக பணம் மட்டும் வசூல் செய்தால், யார் அவரை நம்பி ரூ.500ஐ முதலீடு செயவர்? கேரளத்தில் இயக்குனர் ஜான் ஆபிரகாம் 'மக்கள் சினிமா' என்று புரொஜ்க்டரை  தூக்கி கொண்டு கிராமம், கிராமமாக செல்வாராம். அவர் தயாரித்த படத்தை மக்களுக்கு காட்டி, பின்னர் அவர்களால் முடிந்ததை பின்னர் பெற்று கொள்வாராம். ஆனாலும், அது ஒரு தோல்வியடைந்த அமைப்பு என்று பலராலும் விமர்சிக்கபட்டது. கமல்ஹாசன் கூட ஒருமுறை எம்.எல்.எம் அமைப்புகள் மூலமாக நிதி திரட்டி, 'மருதநாயகம்' எடுக்கலாமா என யோசித்தாராம்.

நாம் எல்லோரும் முரண் நிறைந்தவர்கள் தாம். ஆனால், ஞாநியின் முரண்பாடுகளை பார்க்கும் போது தலை சுற்றுகிறது. ஒரு முறை 'குமுதத்தில்'  வந்த 'ஓ பக்கங்களில்', "எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் அரசியல் வாரிசுக்கு, 20 கோடி செலவில் எப்படி படம் எடுக்க முடிகிறது" என்று உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி இருந்தார். இன்று அவரது மகன் மனுஷ்நந்தன் 'ரெட் ஜயன்ட்' தயாரிக்கும் 'மன்மதன் அம்பு' படத்தின் ஒளிப்பதிவாளர். அதற்கு அவரின் விளக்கம் என்ன? தன்னுடைய மகன் விடயத்தில் அவர் தலையிடுவதில்லை என்று கூட கொள்ளலாம். வித்தியாசமான நோக்குகளுடன் எழுதுகிறார் என்று அவர் எழுத்துக்களால் கவரப்பட்ட நான், அவர் எழுத்துக்களை கட்டுடைத்து பார்க்கையில் அத்தனையும் ஒரு வித நெகட்டிவ் பார்வை நிரம்பியதாக இருப்பதை உணர்ந்தேன். இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி? எத்தனை பேர் 'கோலம்' இயக்கத்தில் ரூ.500 கொடுத்து இணைந்து இருக்கிறீர்கள்? குறைந்த பட்சம் உங்களுக்கு எந்த படம் எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கபட்டதா?

5 comments:

Prakash said...

இது மாதிரி கட்டுரைகள் உங்களிடமிருந்து வருவதை வெறுக்கிறேன்.

அவர் ஏன் எழுதவில்லையென காரணத்தை அவரது வலையில் வெளியிட்டாகிவிட்டது.ஞானிக்கு சொம்பெல்லாம் தூக்கவில்லை , அவரின் மீது எனக்கும் விமர்சனம் இருக்கிறது.

//வித்தியாசமான நோக்குகளுடன் எழுதுகிறார் என்று அவர் எழுத்துக்களால் கவரப்பட்ட நான், அவர் எழுத்துக்களை கட்டுடைத்து பார்க்கையில் அத்தனையும் ஒரு வித நெகட்டிவ் பார்வை நிரம்பியதாக இருப்பதை உணர்ந்தேன்.//

இதெல்லாம் எங்க போய் முடியுமோ! விவாதப்போக்கில் எடுத்துக்காட்டு கூட இல்லாமல் மிகப்பொதுவாக பொதுமைபடுத்தி குற்றசாட்டு வைத்துள்ளீர்கள்.இதில் உண்மை எவ்வளவு என்பது ஒருபக்கம் இருக்கட்டும் இப்படி தடாலடி எழுத்து உங்களிடம் வந்துவிட்ட கவலை தான் அதிகமாக இருக்கிறது.மிகுந்த உரிமையுடன் தான் இந்த பின்னூட்டம்!

பிரகாஷ்.

Prasanna Rajan said...

//

அவர் ஏன் எழுதவில்லையென காரணத்தை அவரது வலையில் வெளியிட்டாகிவிட்டது.ஞானிக்கு சொம்பெல்லாம் தூக்கவில்லை , அவரின் மீது எனக்கும் விமர்சனம் இருக்கிறது.

//

இது எனக்கு தெரியாது ப்ரகாஷ். மற்றபடி அவருடைய எழுத்துக்களை பற்றிய பொதுவான பார்வை தான் என்பதை ஒத்துகொள்கிறேன். அடுத்த முறை எழுதும் போது மேற்கோள்களுடன் எழுத முயற்சிக்கிறேன்.

//

இப்படி தடாலடி எழுத்து உங்களிடம் வந்துவிட்ட கவலை தான் அதிகமாக இருக்கிறது.

//

ஹ்ம்ம். நான் சும்மா இந்த வலைப்பதிவில் நடை பழகிக் கொண்டு இருக்கிறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பா,
எனக்கும் அந்த கோலங்கள் கமெண்ட் என் பிளாக்குக்கு வந்தது,நான் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை,நமூரில் எளிய சினிமா ஒரு கேள்விக்குறியே,!!நான்,நீங்கள் கொடுத்தாலும் சட்டியும் நிறைய போவதில்லை,வசூலிப்பதறகுள் அவர்களுக்கும் தாவு தீர்ர்ந்துவிடும்.மார்கெட்டிங் என்பது மிகக்கடினமான பணி,
===
மற்றபடி அவர் மகன் சன்குழுமத்திற்கு பணியாற்றுவது மகிழ்ச்சியே,காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவேண்டும்.அவனுக்கு தான் வேலை செய்வேன்,கொள்கை என்று பேசிக்கொண்டிருப்பது காலத்துக்கு ஒவ்வாது.நீங்கள் போகாவிட்டால் அப்பணிக்கு யாராவது போவார்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

பிரசன்னா... ஞாநியைப் பற்றி எனக்கு நிறைய விமரிசனங்கள் உள்ளன. அவரது எழுத்துகள் நெகட்டிவ் பார்வைகள் நிரம்பியதாக உள்ளன என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். மட்டுமல்லாது, ஞாநியின் எழுத்துகளைப் படித்தாலே தெரியும், அவர் ஒரு கலாச்சாரத் தாலிபான் என்பது. இதற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், அவர், தனக்கு அளிக்கப்பட்ட பூச்செண்டுகளை கோபத்துடன் மறுத்து, அதற்குப் பதிலாக ஒரு பெரிய லெக்சர் அடித்ததை நினைவு கூர முடியும். அதுமட்டுமல்ல.. அந்தப் பூச்செண்டை, பக்கலில் இருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து, ‘இது உங்களுக்குப் பயன்படும்; வைத்துக்கொள்ளுங்கள்’ என்றுவேறு அங்கேயே ஒரு தமாஷ் நிகழ்த்தினார்(ஆஃப்டரால் ஒரு பொக்கே.. அத வாங்கிகிட்டா என்ன.. உலகம் அழிஞ்சிருமா - இன்னொன்று.. பூ என்றால் அது பெண்ணுக்குத்தான் என்ற தாலிபானிஸம் இதில் உண்டு)..அதாவது, தனக்குப் பூ பிடிக்கவில்லை. ஸோ, அது யாருக்கும் பிடிக்கக்கூடாது. இதுதான் அவர் கோட்பாடு.

எப்பொழுது பார்த்தாலும் திமுக அரசையும் கருணாநிதியையும் திட்டிக்கொண்டே இருந்த ஒரு தோல்வியுற்ற எழுத்தாளர் அவர். இப்பொழுது, குமுதம், அவர் அப்படித் திட்டுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியதால், ’அறச்சீற்றமடைந்து’ குமுறியிருக்கிறார்.

// தன்னுடைய மகன் விடயத்தில் அவர் தலையிடுவதில்லை என்று கூட கொள்ளலாம்//

மகனுடைய விடயத்திலேயே தலையிடாத ஒருவர், ஏன் எப்போது பார்த்தாலும் எல்லாரையும் திட்டிக்கொண்டே இருக்கவேண்டும்? அதனால் அவருடைய பிபி ஏறியதுதான் மிச்சம்.

அவரது திட்டுக்களை கவனித்து வந்தால், அது லாஜிக்கலாக ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பது நன்றாகத் தெரியும் (பீச்சில் கிரிக்கெட் விளையாடுவது பற்றி அவர் உதிர்த்திருந்த முத்துக்கள் ஒரு எளிய உதாரணம்)..

மட்டுமல்லாது, லுங்கியோடு சினிமாத்துறையினரைக் கமலா தியேட்டரின் முன் அழைத்துச்சென்று போராட்டம் நடத்துவேன், லுங்கி முஸ்லிம்களின் தேசிய உடை.. ஹா ஹூ... என்றெல்லாம் நிறைய அறிக்கைகள் விட்டார்.. பாவம்..

மதுகோடாவைப் பற்றி ஒரு முறை, அவன், இவன், என்று கண்டபடி திட்டி எழுதினார். அது ஓகே என்றால், அவரைப்போன்ற லோக்கல் ஊழல் அரசியல்வாதிகளையும் அப்படித்தானே எழுதவேண்டும்? ஆனால், அப்படி உள்ளூர் அரசியல்வாதிகளை எழுத மாட்டேன்.. ஏனெனில், அது தனக்கு ஆபத்தில் முடியும் என்று உடனேயே எழுதினார். இது என்னய்யா நியாயம்?

அதேபோல், கேகே நகர் என்பதை, கலைஞர் கருணாநிதி நகர் என்றுதான் சொல்லவேண்டும். பெயரைச் சுருக்கக்கூடாது என்று வேறு ஒரு மீட்டிங்கில் உளறினார். அந்த லாஜிக்கின்படி பார்த்தால், வெளியில் செல்கிறோம். பஸ்ஸில். கண்டக்டரிடம், ‘அய்யா.. கலைஞர் கருணாநிதி நகருக்கு ஒரு பயணச்சீட்டு கொடுங்கள்’ என்று கேட்டால், எப்படி இருக்கும்?

முரண்பாடுகளின் மூட்டை அவர் என்பது உலகத்துக்கே தெரிந்த ஒரு விடயம். எனவே, இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஃப்ரீயாக விடுங்கள் பிரசன்னா ;-)

சு.மோகன் said...

திரு.பிரசன்னா,

இது போன்ற முயற்சிகள் அவ்வளவு எளிதில் சாத்தியம் இல்லை. எதையும் செயல்படுத்தும்போதுதான் அதிலுள்ள சிரமங்கள் தெரிகின்றன.

Anyway, தங்களை அறிமுகப்படுதிய கீதப்பிரியனுக்கு நன்றி.

Share