Monday, August 2, 2010

ஞாநியின் ‘கோலம்’, எந்த நிலையில்?

நான் இளங்கலை முதல் ஆண்டு படிக்கும் போது ஒரு நாள் நானும், நண்பர்களும் கல்லூரி விடுதியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அறைக்கு வந்த ஜமால் முகமது கல்லூரி மாணவர் ஒருவர் 'பச்சை மனிதன்' என்ற படத்தை பற்றி சொல்லி அதற்கான டிக்கெட்களை வாங்கி கொள்ளுமாறு கேட்டார். இது வழக்கமான டொனேஷன் கும்பல் என்று நினைத்தோம். ஆனால், நண்பன் ஒருவன் அன்றைய 'தினமணி'யில் அந்த திரைப்படம் பற்றி எழுதியிருப்பதாக கூறினான். சேரனின் உதவியாளரான சரத் சூர்யா என்பவர் இயக்குவதாகவும், பாரதிராஜா, சேரன், லிங்குசாமி போன்றோர் கவுரவ அறங்காவலர்களாக இருப்பதாகவும் அறிந்தோம். மேலும் 'போத்தீஸ்' போன்ற பெரிய நிறுவனம் ஸ்பான்சர் செய்யும் போது அந்த திரைப்படம் மேலும் நம்பிக்கை வந்தது.

கர்நாடகாவில் நடந்த தமிழர்கள் மீதான தாக்குதல்களை அடிப்படையாக கொண்டு கதையமைக்க பெறும் திரைப்படம் என்பதாலும் நன்பர்களும் ஆர்வமாகி 10 ரூபாய் டிக்கெட்டுகளை வாங்கினர். அது வாங்கியது மட்டுமல்லாது, 'பச்சை மனிதன்' அறக்கட்டளைக்கு எழுதி ஆளுக்கு நூறு டிக்கெட்டுகளை வாங்கி மற்ற நண்பர்களிடம் விற்று, அதை திரும்ப அறக்கட்டளைக்கு அனுப்பினர். அதற்கு பிறகு படப்பிடிப்பு வி.ஐ.டி கல்லூரி வளாகத்தில் துவங்கியதாகவும், மேலும் சில செய்திகளும் அறிந்து கொண்ட போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். திரைப்படம் ஏப்ரல் 14, 2003 இல் வெளியிடப்படும் என்று அந்த டிக்கெட்டுகளில் குறிப்பிட பட்டு இருந்தது. அந்த நாளும் வந்தது. படம் வருவதற்கான எந்த சுவடுகளும் இல்லை. சரி சிறிது நாட்கள் கழித்து வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். ஊஹீம்...

நாங்கள் இளங்கலை முடிக்கும் வரை படம் வந்த பாடில்லை. சென்ற முறை இந்தியா சென்ற போது எனது நண்பரும், இந்திய அரசின் தேசிய விருது பெற்ற குறும்பட இயக்குனருமான, முரளி மனோகரிடம் பேசிக் கொண்டிருந்த போது 'பச்சை மனிதன்' பற்றி கேட்டேன். அந்த படத்துக்கு வாங்கபட்ட கேமரா ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் சும்மா கிடப்பதாகவும், அவருடைய அடுத்த குறும்படத்திற்கு அதை உபயோகபடுத்த யோசிப்பதாகவும் கூறினார். படம் நின்று போனதால் சரத் சூர்யா மனம் உடைந்த நிலையில் இருந்ததாகவும், தற்போது யாரிடமோ அசோசியேட்டாக இருப்பதாகவும் கூறினார். 'பச்சை மனிதனை'ப் பற்றிய நினைப்பு, எழுத்தாளர் ஞாநி 'கோலம்' என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் ரூ.500 வசூல் செய்து திரைப்படங்கள் தயாரிக்க போகிறார் என்று தெரிந்து கொண்ட போது தான் எழுந்தது.

ஏற்கனவே பிரமிட் சாய்மீராவுடன் இணைந்து ஆரம்பிக்கபட்ட 'ஒரு ரீல்' இயக்கம் ஊத்தி மூடிக்கொண்டது. அது பிரமிட் சாய்மீராவின் சொதப்பலால் தான் உடைந்தது என்றும் அறிந்து கொண்டேன். 'கோலம்' இயக்கத்திற்கு என்று இருந்த இணையதளத்தில் செப் 15, 2009க்கு முன் வரும் தொகை கொண்டு திரைப்படம் தயாரிக்கப்படும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால் இது வரை அதற்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லை. ஒரு திரைப்பட டிவிடியை நான் வாங்குகிறேன் என்றால், குறைந்த பட்சம் அதன் மூலக்கதை சரடு சுவாரசியமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நான் வாங்குவேன். ஆனால், ஞாநி நாவல்கள், சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் தயாரிக்க போவதாக கூறினாலும், எந்த அல்லது யாருடைய இலக்கிய படைப்பை படமாக்க போகிறார் என்பதை குறிப்பாக சொல்லவில்லை.

என்னிடம் ஒரு 500 ரூபாய் வசூல் செய்து படம் எடுக்க படுகிறது என்றால், நானும் அந்த படத்தின் ஒரு முதலீட்டாளராகத் தான் கருதுகிறேன். அப்படியிருக்க படத்தை பற்றி ஒரு தகவலும் கூறாது, பூடகமாக பணம் மட்டும் வசூல் செய்தால், யார் அவரை நம்பி ரூ.500ஐ முதலீடு செயவர்? கேரளத்தில் இயக்குனர் ஜான் ஆபிரகாம் 'மக்கள் சினிமா' என்று புரொஜ்க்டரை  தூக்கி கொண்டு கிராமம், கிராமமாக செல்வாராம். அவர் தயாரித்த படத்தை மக்களுக்கு காட்டி, பின்னர் அவர்களால் முடிந்ததை பின்னர் பெற்று கொள்வாராம். ஆனாலும், அது ஒரு தோல்வியடைந்த அமைப்பு என்று பலராலும் விமர்சிக்கபட்டது. கமல்ஹாசன் கூட ஒருமுறை எம்.எல்.எம் அமைப்புகள் மூலமாக நிதி திரட்டி, 'மருதநாயகம்' எடுக்கலாமா என யோசித்தாராம்.

நாம் எல்லோரும் முரண் நிறைந்தவர்கள் தாம். ஆனால், ஞாநியின் முரண்பாடுகளை பார்க்கும் போது தலை சுற்றுகிறது. ஒரு முறை 'குமுதத்தில்'  வந்த 'ஓ பக்கங்களில்', "எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் அரசியல் வாரிசுக்கு, 20 கோடி செலவில் எப்படி படம் எடுக்க முடிகிறது" என்று உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி இருந்தார். இன்று அவரது மகன் மனுஷ்நந்தன் 'ரெட் ஜயன்ட்' தயாரிக்கும் 'மன்மதன் அம்பு' படத்தின் ஒளிப்பதிவாளர். அதற்கு அவரின் விளக்கம் என்ன? தன்னுடைய மகன் விடயத்தில் அவர் தலையிடுவதில்லை என்று கூட கொள்ளலாம். வித்தியாசமான நோக்குகளுடன் எழுதுகிறார் என்று அவர் எழுத்துக்களால் கவரப்பட்ட நான், அவர் எழுத்துக்களை கட்டுடைத்து பார்க்கையில் அத்தனையும் ஒரு வித நெகட்டிவ் பார்வை நிரம்பியதாக இருப்பதை உணர்ந்தேன். இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி? எத்தனை பேர் 'கோலம்' இயக்கத்தில் ரூ.500 கொடுத்து இணைந்து இருக்கிறீர்கள்? குறைந்த பட்சம் உங்களுக்கு எந்த படம் எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கபட்டதா?

Share